Thursday, May 14, 2009

இறைவனை விட இராமானுசர் ஏற்றம் (எம்பெருமானிலும் எம்பெருமானார் ஏற்றம்)




'எம்பெருமானாருடைய திவ்விய சரிதம்' என்ற 1950ஆம் ஆண்டு நூலை இப்போது ஒருங்குறியில் தட்டச்சி 'உடையவர்' பதிவில் எழுதி வருகிறேன். அந்த நூலில் 'எம்பெருமானிலும் எம்பெருமானார் ஏற்றம்' என்ற தலைப்பில் 5 வகையான வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை அந்த நூலில் உள்ளபடியே 'உடையவர்' பதிவில் இட்டிருக்கிறேன். கொஞ்சம் எளிய தமிழில் இங்கே அந்த தலைப்பில் உள்ள கருத்துகளை எடுத்து எழுதுகிறேன்.

***

1. உலகமக்களைத் திருத்திப் பணிகொள்ளும் ஆற்றல்:

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண்பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படியிதுவே


இப்பாடலின் பொருள்: வெற்றியைத் தரும் வீரத்தை குணமாகக் கொண்ட சக்கரத்தை உடையவனும் எல்லா உயிர்களுக்கும் தலைவனுமான இறைவன், குருசேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பு வேதங்கள் என்னும் கடலின் சாரமான முதன்மைப் பொருளை 'பகவத் கீதை' என்ற பெயரில் தந்தான். அதன் பின்னரும் உலகத்தவர் துன்பத்தில் வீழ்ந்தார்கள். இராமானுசரோ அதே ஒண்பொருளாக கீதையைக் கொண்டே உலக மக்களை எல்லாம் இறைவனின் திருவடிகளில் சேர்த்தார். இதுவே அவரின் பெருமை.

விளக்கம்: இறைவனான எம்பெருமான் கண்ணனாய் பிறந்தருளிய போது வேத வேதாந்த உபநிடதங்களின் சாற்றான தெளிந்த உண்மைப் பொருளைக் கீதையாகத் தானே முன் நின்று உபதேசித்தான். அந்த உபதேசம் அருச்சுனனை முன்னிட்டுச் செய்யப்பட்டது. போர்க்களத்தில் செய்யப்பட்டதால் அவனுக்கு மட்டுமே பயன்படும்படி ஆனது. போருக்குப் பின்னர் அருச்சுனனுடைய செயல்களை எல்லாம் பார்த்தால் அவனுக்குக் கூட அந்த உபதேசம் பயன்பட்டதோ இல்லையோ என்று ஐயம் கொள்ளலாம்படி இருக்கிறது. ஆனால் எம்பெருமானாராகிய இராமானுசரோ இறைவனான எம்பெருமான் உபதேசித்தும் பயன் தராத அதே கீதையைக் கொண்டே உலகத்தோரைத் திருத்தி திருமகள் கேள்வனான இறைவனுக்கு அடியார்கள் ஆக்கினார். அதுவே அவர் பெருமை.

2. எம்பெருமானின் அவதாரங்களை விட எம்பெருமானாரின் அவதாரம் சிறந்தது:

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே

இப்பாட்டின் பொருள்: இந்த மண்ணுலகத்தினில் மீன், ஆமை, பன்றி, சிங்கம், மனிதர் என்று பலவிதமான பிறவிகளிலும் பிறந்து எங்களது திருமகள் நாயகனே நேரில் வந்து நின்றாலும் உலகத்தவர்கள் அவனது உண்மை இயல்பைக் காண இயலாது மயங்கி போகின்றனர். ஆனால் எங்கள் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே கிடைப்பதற்கு அரிய ஞானத்தைப் பெற்று நாராயணனுக்கு அடியவர்களாக அதே உலக மக்கள் ஆனார்களே.

விளக்கம்: இந்த நிலவுலகில் பற்பல பிறப்புகளை எம்பெருமான் எடுத்தாலும் அவனது தெய்வீக உண்மை உருவை அறிந்து மக்கள் திருந்தவில்லை. நான் வெறும் மானிடன் என்று நினைத்து என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள் (அவஜானந்தி மாம் மூடா மானுசீம் தனும் ஆச்ரிதம்) என்று கீதையிலே அவன் வருந்தி நிற்கும் படி ஆயிற்று. ஆனால் எம்பெருமானாருடைய பிறப்போ சிறந்தது. ஏனெனில் எம்பெருமானார் பிறந்த பின்னர் உலக வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்தவர்கள் எவ்வகையான அறிவு கொண்டிருந்தார்களோ அந்த அந்த அறிவுக்குத் தகுந்த படி ஞானத்தைப் புகட்டி எல்லோரையும் ஞானிகளாக்கி இறைவனுக்கு அடியார்கள் ஆக்கினார்.

3. உலகமக்களுக்கு எளிதில் வைகுந்தம் புகவைத்தல்:

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினார்க்கு அத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே.

இப்பாடலின் பொருள்: ஞானத்தினால் யார் யார் இறைவன் மேல் பக்தி, பரபக்தி, பரமபக்தி என்ற நிலைகளை அடைந்து நாள்தோறும் அவனை அடையத் துடித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கே வெகு முயற்சியும் துன்பமும் அடைந்த பிறகே திருமகள் நாயகன் வைகுந்தம் என்னும் முக்தி நிலையைத் தருகிறான். வலிய வினைகள் செய்த அடியவனின் மனத்தில் இருக்கும் தீமைகளை நீக்கிய இராமானுசரோ தன்னை அடைந்தவர்களுக்கு அதே வைகுந்தம் என்னும் மோட்ச நிலையைத் தருவது தன்னுடைய கருணை என்னும் அடைக்கலத்தை மட்டுமே கொண்டு.

விளக்கம்: ஞானம் அடைந்து பக்தியில் சிறந்து இவ்வுலகவாழ்க்கையில் இருப்பு கொள்ளாமல் இறைவனை அடைய யார் யார் துடிக்கிறார்களோ அவர்களை எல்லாம் மிகவும் சோதித்து தடைகளைத் தந்து அவர்களைச் சிரமப்படுத்தியே இறைவன் அவர்களுக்கு விடுதலை என்னும் மோட்சத்தை அளிக்கிறான். ஆனால் எம்பெருமானாரோ தன்னுடைய கருணை என்னும் ஒன்றின் மூலமே மற்றவர்களிடம் அன்பினைப் பொழிபவர் ஆதலால் எந்த வித தகுதியும் இல்லாத அடியார்களையும் அவர்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் படி தன் திருவருளினால் திருத்தி அவர்களும் விடுதலை அடையும் படி செய்கிறார்.


4. மீண்டும் மீண்டும் பிறப்பில் தள்ளுதலும் கருணையால் உடனே உய்வித்தலும்:

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு அவை என்றனுக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே

இப்பாடலின் பொருள்: அறிவும் ஐம்புலன்களும் எல்லாம் நீங்கி பிரளய காலத்தில் இருட்டில் ஆழ்ந்து என்னைப் போன்ற உயிர்கள் கிடந்தது கண்டு தனது அருளால் பிரளயத்தை நீக்கி எனக்கு அறிவும் ஐம்புலன்களும் தந்த திருவரங்கனும் தன்னுடைய திருவடிகள் என்னும் அடைக்கலத்தைத் தரவில்லை. ஆனால் என் தந்தையான இராமானுசரோ இறைவனின் திருவடிகள் என்னும் அடைக்கலத்தை எனக்குத் தந்து தாழ்ந்து கிடந்த என்னை வந்து மேலே எடுத்துக் கொண்டார்.

விளக்கம்: பிரளய காலத்தில் எல்லா உயிர்களும் அறிவும் ஐம்புலன்களும் நீங்கப் பெற்று சூக்கும உருவில் மூலப் பிரகிருதி என்னும் இயற்கைச் சக்தியில் ஆழ்ந்து கிடந்தார்கள். அவ்வாறு ஆழ்ந்து கிடந்ததைக் கண்டு அவ்வுயிர்கள் மேல் கருணை கொண்டு அவற்றிற்கு ஐம்புலன்களையும் அறிவினையும் அருளினான் திருவரங்கன். ஆனால் அப்போதும் அவர்களுக்குத் தன் திருவடிகள் என்னும் அடைக்கலத்தைத் தந்து விடுதலை தரவில்லை. தன்னுடைய அலகிலா விளையாட்டு ஆடும் சுயநலத்திற்காக இவ்வுயிர்கள் உலகத்தில் பிறந்து இறந்து அல்லல்படும் படி விட்டான். ஆனால் எம்பெருமானாரோ தாய் போல் அன்பு செய்து தந்தை போல் நலத்தை உரைத்து இறைவனுடைய திருவடிகளை அடையும் வழி காட்டி நம்மை உய்வித்தார்.

5: எதிரிகளை அழிப்பதும் வெல்லுவதும்:

தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.

இப்பாடலின் பொருள்: வேதங்களின் கட்டளைப்படி நடக்காத தீயவர்களை மாயவனான இறைவன் தன்னுடைய கூர்ந்த போர்ப்படையான சக்கரத்தால் கொன்று குறைக்கிறான். ஆனால் மேகத்தைப் போல் அள்ளித் தரும் வள்ளலான, உயர்ந்த குணத்தை உடைய எம்பெருமானாரோ அந்த அழகிய மறையில் சேராமல் வெளியே நிற்பவர்களையும் அந்த மறைகளுக்குத் தவறான பொருள் உரைப்பவர்களையும் அவ்வப்போது தன் திருவுள்ளத்தில் உதிக்கின்ற நல்ல கருத்துகளால் திருத்திக் கொள்வார்.

விளக்கம்: இறைவனின் ஆணைகள் மறைகளாகவும் மறை நூல்களாகவும் இருக்கின்றன. அம்மறைகள் சொல்லும் வழியில் நடக்காத தீயவர்களை கூரிய சக்கரப்படை கொண்டு கொன்று வீழ்த்துகிறார் இறைவன். அவ்வாறு இன்றி, வேதங்களின் வழி நடப்பவர்கள் மட்டும் இன்றி, வேதங்களை மறுக்கும் சமயத்தவர்களும் வேதங்களுக்குத் தவறான பொருள் உரைக்கும் சமயத்தவரும் மனம் மாறித் திருந்தி நல்வழிக்கு வரும் வகையில் வாதங்களில் நல்ல கருத்துகளைக் கூறி அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறார் எம்பெருமானார்.

10 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதுக்கு என்ன பின்னூட்டம் இடறதுன்னு தெரியாமல் இன்னும் முழிச்சிக்கிட்டு இருக்கேன்! :)

எம்பெருமானே! பெருமாளே! கொஞ்சம் நகர்ந்துக்கறீயளா?

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இந்தப் பாடல்கள் எல்லாம் யார் எழுதியது குமரன்? எந்த நூல் இவை எல்லாம்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

உடையவரை இறைவனை விட அதிகமாகப் புகழ்வது என்பது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? இது தனி மனித துதிக்கு இட்டுச் சென்று விடுமே?...என்று அடியேனும் தங்கள் விடைச்சுவையில் நனைய இந்தக் கேள்வியைக் கேட்டு வைக்கிறேன்! :)

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

sury siva said...

गुरु गॊविन्द् दोऊ ख डे, काके लागो पाय्
बलिहारि गुरु आप्ने गोविन्द् दियो बताय्

என்னும் கபீரின் தோஹா நினைவுக்கு வருகிறது.

பக்தன் தன் முன்னால் ஆசாரியனும் கோவிந்தனும் ஒரே கணத்தில் வந்தால் யாரை முதலில்
சேவிப்பேன் ! என ஐயுறும்போது கபீர் சொல்வார்.

"குருவே ! உன்னைத்தான் முதலில் வணங்குவேன். ஏனெனின் நீதானே எனக்கு
கோவிந்தனை உணர்த்தினாய்."

சுப்பு ரத்தினம்.

குமரன் (Kumaran) said...

நாலாயிரப் பனுவல்களின் இறுதிப்பகுதியான திருவரங்கத்து அமுதனார் எழுதிய இராமானுச நூற்றந்தாதி பாடல்கள் தான் இவை என்று நினைக்கிறேன் இரவி. சரி தானா?

குமரன் (Kumaran) said...

குருர் சாக்ஷாத் பரப்ரஹ்ம: என்றும் ஆசார்ய தேவோ பவ என்றும் மூத்தோர்கள் சொல்லியிருக்கிறார்களே இரவி. அப்படியிருக்க தனி மனிதரான குருவை இறைவனாகவும் இறைவனுக்கு மேலாகவும் நினைக்கலாம் தானே.

அது மட்டுமில்லை அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பனை நாம் சுவாமிநாதன் என்று போற்றுகிறோமில்லையா? அதே போல் தான் திருக்குறுங்குடி நம்பிக்கு குருவாக ஆகி எம்பெருமானுக்கு பஞ்ச சம்ஸ்காரம் எனப்படும் சமாஸ்ரயணம் செய்து வைஷ்ணவ நம்பியாக்கிய எம்பெருமானாரும் சுவாமிநாதன் தான். அதனால் எம்பெருமானை விட எம்பெருமானாருக்கு ஏற்றம் சொல்வதில் தவறில்லை.

சரி தானா இரவி? எதையாவது சொல்லாமல் விட்டுவிட்டேனா? :-)

குமரன் (Kumaran) said...

மிகப் பொருத்தமான தோஹாவைச் சொன்னீர்கள் சுப்புரத்தினம் ஐயா. இந்தத் தோஹாவைப் படிக்கும் போது தெருவில் திருவுலா வந்த அழகிய மணவாளனைச் சேவிக்காமல் 'உங்கள் பெருமாளை நீங்கள் சேவிக்கச் செல்லுங்கள். என் பெருமாளுக்கு நான் பால் காய்ச்சிக் கொண்டிருக்கிறேன்' என்று எம்பெருமானாரிடம் சொன்ன எம்பெருமானரது சீடரின் நினைவு வருகிறது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
திருவரங்கத்து அமுதனார் எழுதிய இராமானுச நூற்றந்தாதி பாடல்கள் தான் இவை என்று நினைக்கிறேன் இரவி. சரி தானா?//

குமரனே சரி தானா என்று கேட்கும் போது, சரியே! :)

//சரி தானா இரவி? எதையாவது சொல்லாமல் விட்டுவிட்டேனா? :-)//

ஹிஹி! விட்டுவிட்டேனா-வா?
பிரைவேட் மின்னஞ்சலை பப்ளிக்கா போட்டுக் கொடுக்கறீங்களா? :))
இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டி இருக்கு குமரன்!

குருவை இறைவனுக்கும் மேலாக நினைப்பது தான் பண்பாட்டு வழக்கம்! ஆனால் அவரவர்க்கு அவரவர் குரு! அதனால் ஒரு குறிப்பிட்ட குருவை "அனைவருமே" இறைவனுக்கும் மேலாக வழக்கத்தில் நினைப்பதில்லை!

அதனால் தான் எம்பெருமானார் பற்றிய அந்தக் கேள்வியைக் கேட்டேன்!

மற்ற பல ஆச்சார்யர்களுக்கு எல்லாம் இல்லாத ஒரு பெருமை/நற்பேறு உடையவருக்கு வாய்த்தது!
எவருமே இறைவனுக்கே குருவாய் உட்கார்ந்து உபதேசித்ததில்லை! இராமானுசர் ஒருவரே இவ்வாறு செய்யப் போந்தார். இன்றும் திருக்குறுங்குடி கருவறையில் எம்பெருமானார் ஆசனம் உயரமாகவும், நம்பியின் ஆசனம் சற்று தாழ்ந்து சிஷ்ய பாவமாகவும் இருக்கும்! ஈசன்-முருகப் பெருமான் உபதேசம் போல!

முருகப் பெருமானை சுவாமிக்கே நாதன் என்று சொல்லும் போது எப்படி யார் மனமும் உறுத்துவதில்லையோ, அதே போல இராமானுசரை எம்பெருமானுக்கும் மேலே என்னும் போது அதே மகிழ்வே ஏற்படும், நமக்கும், இறைவனுக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்னும்...
இராமானுசர் ஆதி சேஷ அவதாரம்!
இலக்குவனாய் தொண்டு புரிந்த கைம்மாறைத் தீர்க்க முடியாமல் தான், எம்பெருமானே அவரைப் பலராமனாக்கி அவருக்கு கண்ணனாய் அடங்கி இருந்தான்!
இப்படி இறைவனே எம்பெருமானாரை தன்னையும் விட உயர்த்தி வைத்தே அழகு பார்த்தான்!

எம்பெருமான் செய்ததை மட்டும் வைத்துக் கொண்டு ஏற்க முடியாது என்றால்...தாயாரும் இவ்வாறே உடையவருக்கு மதிப்பளித்து நிற்கிறாள்! முன்பு இளைய பெருமாளிடத்தே பாகவதாபசாரம் பட்டமைக்கு, பலராமன் அண்ணாவிடத்தில் ருக்மணி அடி பணிந்தே தொண்டு செய்கிறாள்! இறைவன் பேச்சைக் கேட்காமல் செல்லமாய்க் கோபித்துக் கொண்டாலும் கொள்வாள்! ஆனால் மாறன் பேச்சையோ, உடையவர் பேச்சையோ அவள் மீறுவதேயில்லை! மட்டையடி உற்சவத்திலும் இதைக் காணலாம்!

முத்தாய்ப்பாக...
மாதா பிதா குரு தெய்வம் என்னுமிடத்தில்...

தாய்க்கு என்றென்றும் எல்லா மத மொழிகளிலும் ஏற்றம் மிகுதி! இங்கு வைணவத்தில் இவர் தாய்!
முதல் தாய் மாறன்!
இதத் தாய் இராமானுசன்!
தாயே பிறவிக்கு மூலம் என்பதால் தான் "எம்பெருமானார் தரிசனம்" என்றே இதை நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்தார்!

அப்பனுக்கே சங்காழி அளித்த பெருமை உடையவருக்கு! தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல்! இப்படி திருவேங்கடமுடையானுக்கே தந்தையாகவும் விளங்குகிறார்!

குறுங்குடி நம்பிக்கு குருவாய் விளங்கியதை நீங்களே சொல்லி விட்டீர்கள்!

இப்படி தாய், தந்தை, குருவாக இவர் ஒருவரே விளங்கியதால்...
மாதா பிதா குரு தெய்வம் என்று ஆகிறார்!

எம்பெருமானார் திருவடிகளே சரணம்!

குமரன் (Kumaran) said...

நல்ல விளக்கங்கள். மிக்க நன்றி இரவி.