Sunday, May 10, 2009

தாமரையாள் இனி தாமதியாள்!

இனிய மாலைப்பொழுது!
என்னவள் என்னருகில்!

அழகிய முகம்! சந்திரனை நிகர்த்தது!
ஆம்! சந்திரனுக்கும் உண்டல்லவோ முகப்பருக்கள்!

ரோசாப்பூ கன்னம்!
ரோசா மேல் பனித்துளிகள்
பளபளக்கும் முகப்பருக்கள்!

மாதுளம் விதைகளை
அள்ளித் தெளித்தாற் போல்
அழகிய கன்னங்களில்
சிவந்த முகப்பருக்கள்!

(10 ஜூன் 1998)

***

தாமரை முகம்!
தாமரைக் கண்கள்!
தாமரைக் கன்னம்!
தாமரை இதழ்கள்!
தாமரை மொட்டெனும் நாசி!
தாமரைக் கைகள்!
தாமரைப் பாதங்கள்!
தாமரை இலை வயிறு!
அதற்கு மேலே
ஆதவன் எனைக் கண்டு
மலரத் துடிக்கும்
தாமரை மொட்டுகள்!
ஆகா!
அழகிய தாமரைக் காடன்றோ என் காதலி?!

அவள் அருகிருக்க
வசந்தமும் வேண்டுமோ?
வான் தென்றலும் வேண்டுமோ?
தேமாஞ்சோலை வேண்டுமோ?
திகட்டாத சந்திரனும் வேண்டுமோ?

திருவெனும் பெயருடையாள்!
தாமரையாளும் அவளே!
ஸ்ரீ அவளை இதயத்தில் தரிப்பதால்
ஸ்ரீதரன் ஆகின்றேன் நான்!

(10 ஜூன் 1998)

***

தங்கத்தில் ஓர் குறை தோன்றிய போதினும்
தாரணியோர் அதைத் தாங்கியே வாங்குவர்!
மங்கையவள் சொக்கத் தங்கம் என்பேன் எனது
அங்கையில் வந்தினி ஆட்சி செய்வாள் அவள்!

குங்குமம் போல் அந்தக் கோல மயில் மேனி!
அங்கங்கள் யாவுமே அழகியத் தாமரை!
தாமரையாள் இனி தாமதியாள்! அன்புத்
தா மரை போல் எனைத் தாவணைவாள்!

(04 ஜூன் 1998)

10 comments:

S.Muruganandam said...

//தாமரை முகம்!
தாமரைக் கண்கள்!
தாமரைக் கன்னம்!
தாமரை இதழ்கள்!
தாமரை மொட்டெனும் நாசி!
தாமரைக் கைகள்!
தாமரைப் பாதங்கள்!
தாமரை இலை வயிறு!//

பத்மினி பதம் ஹஸ்தே பத்ம தலாய தாக்ஷி உன் பாதமே சரணம் அம்மா.

Unknown said...

can you please write more about the alwars. i want to know. Adiyean dasan.

முனைவர் இரா.குணசீலன் said...

நன்றாகவுள்ளது

குமரன் (Kumaran) said...

நன்றி முனைவரே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//திருவெனும் பெயருடையாள்!
தாமரையாளும் அவளே!
ஸ்ரீ அவளை இதயத்தில் தரிப்பதால்
ஸ்ரீதரன் ஆகின்றேன் நான்!//

வணக்கம் ஸ்ரீதர குமரா! :)
இந்தக் கவிதைக்கு அண்ணி என்ன சொன்னாங்க? :))

குமரன் (Kumaran) said...

அவங்க என்ன சொல்லப் போறாங்க? திருமணத்துக்கு முன்னாடி இப்படி எல்லாம் எழுதுனீங்க; திருமணத்துக்கு அப்புறம் எதுவும் எழுதுறதில்லை; அதனால அப்ப எழுதுனதும் நீங்க எழுதுனது தானா? இல்லாட்டி மண்டபத்துல யாரோ எழுதி வச்சதை எடுத்துக்கிட்டு வந்து காட்டுனீங்களான்னு கேக்குறாங்க. :-)

குமரன் (Kumaran) said...

கைலாஷி ஐயா.

உங்களுக்கு இந்த இடுகையைப் படித்தவுடன் திருமகளின் நினைவு வந்து அவளைச் சரணடைந்திருக்கிறீர்கள். தாமரையாள் என்றாலே அவள் தானே. மிகவும் பொருத்தம் தான்.

அப்போது எழுதும் போது எழுதிவிட்டேன். ஆனால் பிற்காலத்தில் திருவாய்மொழிப் பாசுரங்கள் படிக்கும் போது ஒரு வேளை ஆழ்வார் திருவாய்மொழியிலிருந்து தான் அந்த எழுத்துகள் பிறந்தனவோ என்று தோன்றும்.

இதோ ஆழ்வார் சொன்னவை:

செந்தாமரைத் தடங்கண் செங்கனிவாய் செங்கமலம்
செந்தாமரையடிக்கள் செம்பொன் திருவுடம்பே

திருவுடம்பு வான் சுடர் செந்தாமரை கண் கை கமலம்

அப்பொழுதைத் தாமரைப்பூ கண் பாதம் கை கமலம்

விட்டிலங்கு செஞ்சோதித் தாமரை பாதம் கைகள் கண்கள்

அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ

குமரன் (Kumaran) said...

விவேக்.

அப்பாவும் பெண்ணுமான ஆழ்வார்கள் இருவரின் திருக்கதைகளை அடியேனின் 'கோதைத் தமிழ்', 'விஷ்ணு சித்தன்' வலைப்பதிவுகளில் படிக்கலாம். சிறுவனும் கிழவருமான இரு ஆழ்வார்களின் திருக்கதையை 'பொருநைத் துறைவன்' என்ற இடுகையில் படிக்கலாம். அந்த இடுகையின் சுட்டி: http://koodal1.blogspot.com/2006/01/129_25.html

இரவிசங்கர் (கேஆரெஸ்) பதிவுகளையும் நீங்கள் படித்துக் கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அங்கும் ஆழ்வார் ஆசாரியர்களின் திருக்கதைகள் நிறைய படிக்கலாம். மிகச் சுவையாகவும் இருக்கும்.

Kavinaya said...

//நீங்க எழுதுனது தானா? இல்லாட்டி மண்டபத்துல யாரோ எழுதி வச்சதை எடுத்துக்கிட்டு வந்து காட்டுனீங்களான்னு கேக்குறாங்க. :-)//

நீங்களேதான் மண்டபத்துல உக்காந்து எழுதினீங்கன்னு சொல்லலையா? :)

குமரன் (Kumaran) said...

மண்டபத்துல உக்காந்து எழுதலை அக்கா. மத்ய கைலாஷ்ல உக்காந்து எழுதுனேன். :-)