Friday, May 22, 2009

சமயங்களும் தத்துவங்களும் - 1

இன்றைக்கு இந்து மதம் என்றும் சநாதன தருமம் என்றும் சொல்லப்படும் இந்திய சமயங்களின் தத்துவங்களின் தொகுப்பினில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி பலருக்கும் பலவிதமான தவறான புரிதல்கள் இருப்பதை சமயப்பதிவர்கள், ஆன்மிகப்பதிவர்கள் என்று அழைக்கப்படும்/புரிந்து கொள்ளப்படும் அன்பர்கள் எழுதும் பதிவுகளிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் ஒத்த தன்மைகளைப் பற்றியும் அவற்றிற்கு இடையில் உள்ள வேற்றுமைகளைப் பற்றியும் எனக்குப் புரிந்தவரையில் எழுதலாம் என்று நினைக்கிறேன். வேற்றுமைகளைப் புரிந்து கொள்வது அவ்வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி சண்டை போட்டுக் கொள்வதற்காக இல்லை; அவ்வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு இந்தியத் தத்துவங்களும் சமயங்களும் அந்த வேற்றுமைகளுடன் ஒத்திசைந்து இந்திய அறிவுத்தளத்தில் எப்படி இயங்குகின்றன என்ற தெளிவைப் பெறுவதற்காக.

சமயங்கள் என்பவை 'முழுமுதற்கடவுள்' என்று ஏதேனும் ஒரு கடவுளை முதன்மைப்படுத்துபவை. அவை திருமாலவனைப் போற்றும் மாலியம் (வைணவம், விண்ணவம்), சிவபெருமானைப் போற்றும் சிவனியம் (சைவம்), சூரியனைப் போற்றும் சௌரம், சக்தியைப் போற்றும் சாக்தம், கணபதியைப் போற்றும் காணபத்யம், குமரனைப் போற்றும் கௌமாரம் என்று பலவகையாகச் சொல்லலாம்.

தத்துவங்கள் என்பவை உண்மைப்பொருட்கள் யாவை என்பதைப் பற்றி பேசுபவை. இறை, உலகம், உயிர் மற்றும் உள்ள உண்மைப் பொருட்கள் எவை எவை என்று பட்டியலிட்டு அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைப் பேசுபவை. அல்லிருமை (அத்வைதம்), இருமை (த்வைதம்), விதப்பொருமை (விசிஷ்டாத்வைதம்), எண்ணவியலா வேற்றுமையுள் ஒற்றுமை (அசிந்த்ய பேதாபேதம்) போன்றவை.

இந்திய சமய தத்துவ நிலத்தில் இந்தச் சமயங்களும் தத்துவங்களும் பலவிதமாகக் கலந்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வடிவத்துடன் இறைவழிபாட்டுச் சமயங்கள் விளங்குகின்றன.

தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் அல்லிருமைத் தத்துவமும் (அத்வைதம்) சிவனிய மாலிய சாக்த சமயங்களும் கலந்த சமயத் தத்துவங்களும், சைவசித்தாந்தமும் சிவனிய கௌமாரங்களும் இயைந்த சமயத்தத்துவங்களும், விதப்பொருமைத் தத்துவமும் (விசிஷ்டாத்வைதம்) திருமாலிய சமயம் இணைந்த சமயத் தத்துவமும் விளங்குகின்றன. இவை போக இருமைத் தத்துவத்துடன் (த்வைதம்) இணைந்த திருமாலியமும் சிறுபான்மையாகத் தமிழகத்தில் உண்டு.

இன்னொருவகையில் இப்படி சொல்லலாம்.

சிவனியத்தில் அல்லிருமையும் சைவசித்தாந்தமும் உண்டு.
மாலியத்தில் அல்லிருமையும் விதப்பொருமையும் இருமையும் உண்டு.
சாக்தத்தில் அல்லிருமை உண்டு.
கௌமாரத்தில் சைவசித்தாந்தம் உண்டு.

மற்றும் ஒரு வகையில் சொல்வதென்றால்

அல்லிருமையில் சிவனியம், மாலியம், சாக்தம் உண்டு.
விதப்பொருமையில் மாலியம் உண்டு.
சைவசித்தாந்தத்தில் சிவனியமும் கௌமாரமும் உண்டு.
இருமையில் மாலியம் உண்டு.

இவை தமிழகத்தில் இந்த வகையில் இருக்கும் போது மற்ற மாநிலங்களில் வேறு வகைகளில் சமயங்களும் தத்துவங்களும் கலந்து விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாகச் சிலவற்றைச் சொல்கிறேன். அசிந்த்ய பேதாபேத தத்துவத்துடன் விண்ணவம் கலந்த சமயம் வங்காளத்தில் கௌட வைணவம் என்ற பெயரில் விளங்குகிறது; அதே வங்காளத்தில் அதே அசிந்த்ய பேதாபேத தத்துவத்துடன் சாக்தம் கலந்த சமயமும் விளங்குகிறது. சைவ சித்தாந்தத்தை ஒத்த தத்துவங்களுடன் காஷ்மீரச் சைவமும் கருநாடக சைவமும் விளங்குகின்றன. அத்வைதத்துடன் கலந்த காணபத்யம் மராட்டியத்தில் விளங்குகின்றது. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்ல வரும் கருத்து என்னவென்றால் இவற்றுள் எந்த சமயமும் எந்த தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளங்கலாம்; எந்த தத்துவமும் எந்த சமய வடிவிலும் இயங்கலாம் என்பதையே. தத்துவங்களுக்கும் சமயங்களும் இடையே இருக்கும் வேறுபாட்டினைப் புரிந்து கொண்டால் அவை எப்படி எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இதனுடைய தொடர்ச்சியாக இன்னும் சில கருத்துகள் சொல்ல வேண்டும். அவற்றை இனி வரும் இடுகைகளில் சொல்கிறேன்.

தத்துவங்களுக்கும் சமயங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருந்தாலும் அண்மைக்காலம் வரையில் அவற்றிற்கு உரிய வரையறைகளைத் தெளிவாக மனத்தில் கொண்டதில்லை. அந்த வரையறைகளை மனத்தில் தெளிவு பெறுமாறு செய்த நண்பர் இரவிசங்கருக்கு நன்றி.

29 comments:

தருமி said...

முதல் கேள்வியாக ஒரு சின்ன கேள்வி: சநாதன தருமம் என்பதன் நேரடிப் பொருள் என்ன?

சனாதனம் = ancient; பழமை என்பது சரியா? இல்லை .. ஆதியிலிருந்து வந்தது என்பது பொருளா?

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா. வடமொழி அகரமுதலியைப் பார்த்தால் சனாதன என்பதற்கு சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள்: forever, permanent, unending, everlasting, eternal, ancient.

இந்திய சமய தத்துவங்களின் தொகுப்பிற்கு 'சனாதன தருமம்' என்ற பெயர் என்றிலிருந்து வழங்கப்படுகின்றது என்று தெரியவில்லை. பழைய வடமொழி, தமிழ் நூற்களில் இந்தப் பெயர் இருப்பதாகத் தெரியவில்லை (நான் அறியாமல் இருக்கலாம்). ஆனால் இந்தப் பெயரின் நேரடிப் பொருள் என்றால் 'என்றும் நிலையான, பழமையான வாழ்க்கைமுறை' என்று சொல்லலாம்.

Raghav said...

குமரன், என்னைப் போன்ற சிறுவருக்கும் புரியும்படி எளிமையா சொல்லணும்னு கேட்டுக்குறேன்.

குமரன் (Kumaran) said...

இன்னும் ஓரிரு முறை படித்து ஒவ்வொரு சொல்லாக புரிந்து கொள்ள பாருங்க இராகவ். சுருக்கமா சொல்லிப் போவதால் எளிமையாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் சொன்னதைப் படித்துப் பார்த்து நமக்கு ஏற்கனவே தெரிந்ததை இதனுடன் இணைத்துச் சிந்தித்தால் புரிந்துவிடும். :-)

எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் இரவிசங்கர் தான் வரவேண்டும். ஆனால் அவராலும் இப்பகுதியை எளிமையாகச் சொல்ல இயலுமா என்று தெரியவில்லை; ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் இப்பகுதியில் சொன்னவற்றை அவர் ஏற்கனவே சில இடங்களில் சொல்லியிருக்கிறார் - ஆனால் பலருக்கும் (நான் உட்பட) அவை அப்போது புரியவில்லை. ஒருவேளை ரொம்ப எளிமையாக கலோக்கியலாகச் சொல்வதால் தான் எனக்கும் மற்றவர்களுக்கும் புரியவில்லையோ என்று எண்ணித் தான் சுருக்கமாக ரொம்ப விரிக்காமல் புள்ளிவிவரம் போல் சொல்லிச் செல்ல முயல்கிறேன். பார்ப்போம் இது எத்தனை பேருக்கு புரிகிறதென்று. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

One small request for my sake Kumaran...
Can u make this statement in the post bolder & bigger?

//வேற்றுமைகளைப் புரிந்து கொள்வது அவ்வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி சண்டை போட்டுக் கொள்வதற்காக இல்லை; அவ்வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு இந்தியத் தத்துவங்களும் சமயங்களும் அந்த வேற்றுமைகளுடன் ஒத்திசைந்து இந்திய அறிவுத்தளத்தில் எப்படி இயங்குகின்றன என்ற தெளிவைப் பெறுவதற்காக//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவ்வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு இந்தியத் தத்துவங்களும் சமயங்களும் அந்த வேற்றுமைகளுடன் ஒத்திசைந்து இந்திய அறிவுத்தளத்தில் எப்படி இயங்குகின்றன என்ற தெளிவைப் பெறுவதற்காக//

இந்த வாசகம் மட்டும் "மனதில் இறங்கி விட்டால்"
ஆன்மீகப் பதிவுகளில் தவறான புரிதல்களோ, மனக்கசப்புகளோ எழவே எழாது! அழகான குணானுபவம் மட்டுமே மிஞ்சும்!

அதனால் அடியேன் என்ன செய்யப் போகிறேன் என்றால்...
எம்பெருமானை வணங்கி, இந்த வாசகத்தைப் பதிவில் சேமித்து வைத்துக் கொள்ளப் போகிறேன்!

இனி பதிவிடும் முன்பும், முக்கியமான பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும் முன்பும் இந்த வாசகத்தை ஒரு முறை வாசித்து விட்டுப் பின்னரே தொடருவேன்!

இது ஒரு எளிய யோசனை தான்!
ஆனால் பிறர்க்கான யோசனையாகச் சொல்லாமல் எனக்கே நான் சொன்ன யோசனையாகத் துவங்குகிறேன்! அவரவரும் இவ்வண்ணமே செய்ய இறைவன் அருளட்டும்!

வேற்றுமைகளைப் பற்றிப் புரிந்து கொள்ளப் பேசுவது பாவமே அல்ல!

ஒன்று இல்லாத இடத்தில், ஒன்று இருப்பதைக் கொண்டு போய் சேர்ப்பதற்கே என்று புரிந்து கொள்ளும் பொருட்டே என்று புரிந்து விட்டால்................இனி எல்லாம் சுகமே! :))

ஹரி ஓம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அந்த வரையறைகளை மனத்தில் தெளிவு பெறுமாறு செய்த நண்பர் இரவிசங்கருக்கு நன்றி//

இது ஆன்மீக சூப்பர் ஸ்டாரான உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா? :)
நீங்களாச்சும் "அடியேன் சிறிய ஞானத்தன்"!
நான் "அடியேன் ஒரு ஊனத்தன்!"
இதுல உங்களுக்கே நான் தெளிவு பெறுமாறு என்பதெல்லாம்...நோ நோ!

இந்த முதல் பாகத்தை விறுவிறு-ன்னு மூனு முறை வாசித்து விட்டேன்! எனக்கே புரிஞ்சு போச்சு-ன்ன்னா பாத்துக்குங்க!

மிக அருமையான பதிவு! அடியேன் விரும்பிய பதிவு! இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தருமி said...
முதல் கேள்வியாக ஒரு சின்ன கேள்வி: சநாதன தருமம் என்பதன் நேரடிப் பொருள் என்ன//

குமரன் அனுமதியுடன்...

தருமி ஐயா
சனாதன = என்றும் நிலையான/அழிவற்ற
...என்பது தான் நேரடிப் பொருள்!

சனா+தன என்று பிரிக்கும் போது தான் வேணும்னா "பழமையான பொருள்" என்று வரும்! ஆனால் சனாதன என்பதன் நேரடிப் பொருள்..."நிலைபெற்ற"

ஆத்மா நிலைபெற்று இருக்கும்! = Atomic! = சனாதன!

நுண்ணிய கூறாக வெட்ட முடியாது! உருவாக்க முடியாது! அழிக்க முடியாது! ஒன்றில் இருந்து இன்னொன்றாய் தான் மாறும் என்று சொல்லும் போது இந்த சனாதன = நிலைபெற்ற = Atomic என்று சொல்லுவார்கள்!

கீதையில் தன்னைச் சனாதனம் என்று குறிக்கிறான் கண்ணன்!
பீஜம் மாம் சர்வ பூதானாம்
வித்தி, பார்த்த! "சனாதனம்"!
புத்திர் புத்திமதம் ஆஸ்மி
தேஜஸ் தேஜஸ்வினம் அகம்!

பார்த்தா
அனைத்து உயிர்களுக்கும் நானே உயிர் (பீஜம்)! வித்து!
நான் சனாதனம்!
பல விதமான புத்திகளில் என்னைப் பலர் பேசினாலும், நான் அந்தப் புத்தியாய் இல்லாமல், அதன் ஒளியாய் இருக்கிறேன்! (எனர்ஜியாய் இருக்கிறேன்)

நான் சனாதனம்! Atomic! Eternal!

குமரன் (Kumaran) said...

சொல்லிக்குடுத்தவருக்குப் புரியாமப் போகுமா? சரியாத் தான் சொல்லியிருக்கேனா இல்லாட்டி எங்காச்சும் திசை மாறியிருக்கேனான்னு சரி பார்க்கத் தானே மூனு முறை படிச்சீங்க இரவி? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எங்காச்சும் திசை மாறியிருக்கேனான்னு சரி பார்க்கத் தானே மூனு முறை படிச்சீங்க இரவி? :)//

முருகாஆஆஆ! eki!

//தேஜஸ் தேஜஸ்வினம் அகம்!//

இது குமரனுக்குப் புடிச்ச கீதை சுலோகம் ஆச்சே! :)

தருமி said...

குமரன்,
ரவி,

இருவருக்கும் மிக்க நன்றி.

//தேஜஸ் தேஜஸ்வினம் அகம்!//
என்னை மாதிரியான ஆளுகளுக்குப் புரியாத இன்னொரு விஷயம்... அப்படியும் நாலு இருக்கணும்ல ..

கோவி.கண்ணன் said...

படிக்க சுவையார்வமாக இருக்கு !

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் கோட்பாடுகள் குறியீடு அளவில் அதாவது முழுமுதற்கடவுள் யார் என்கிற பெயர் குறித்த வேறுபாடுகளிலும் ( வேறுபாட்டிற்கும் முரண்பாட்டிற்கும் உள்ள முரண்பாட்டில் எனக்கு தெரிந்து வேறுபாட்டில் நிராகரிப்பு இருக்காது) சடங்குகளிலும் மட்டுமே வேறுபாடுகள் உள்ளது என்பதாக எனக்கு புரிகிறது. சரியா ?

கோவி.கண்ணன் said...

//சனாதன என்பதற்கு சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள்: forever, permanent, unending, everlasting, eternal, ancient. //

சனாதனம் என்பதில் எனக்கும் ஸ்வாமி ஓம்காருக்கும் இடையே ஒப்புமை (ஒப்புக் கொள்ளுதல்), ஏற்றுக் கொள்ளுதல் உள்ளது. ஆனால் அதனை முன்னிருத்துவர்களின் நோக்கம் தான் சனாதனத்தைப் பிறரும் வழியுறுத்தத் தடையாகவும் உள்ளது.

முன்னிருத்துபவர்கள் என்று சொல்வதில் உங்களைப் போன்ற ஆன்மிகவாதிகளையும் சேர்த்து நான் சொல்லவில்லை.

குமரன் (Kumaran) said...

தேஜஸ் என்றால் ஒளி, தெளிவு, வீரம், துணிவு என்று பல பொருட்கள் உண்டு தருமி ஐயா. கீதையில் கண்ணன் சொன்னது 'பார்த்த! சர்வ பூதானாம் சனாதனம் பீஜம் மாம் வித்தி. அருச்சுனா. எல்லா உயிர்களிலும் நிலைத்த விதையாக என்னை அறிவாய். புத்திர் புத்திமதாம் அஹம் அஸ்மி. அறிவாக அறிவாளிகளிடத்தில் இருக்கிறேன். தேஜஸ் தேஜஸ்வினாம் அஹம் அஸ்மி. துணிவாக துணிவுள்ளவர்களிடம் இருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

வேறுபாடுகள் என்பதை முரண்பாடுகள் என்ற பொருளில் இங்கே பயன்படுத்தவில்லை கோவி.கண்ணன்; ஆனால் அதனால் சில சமயத் தத்துவங்களுக்கிடையில் முரண்பாடுகள் இல்லை என்று பொருளில்லை. வேறுபாடுகளும் உண்டு. முரண்பாடுகளும் உண்டு. அவற்றைப் புரிந்து கொள்வதும் நல்லதே.

குறியீடுகள், பெயர்கள், சடங்குகள் - இவற்றில் வேற்றுமைகளும் உண்டு. ஒற்றுமைகளும் உண்டு. வேறுபாடுகள் பல நிலைகளில் உண்டு. அதனால் அவற்றை குறியீடுகள், பெயர்கள், சடங்குகள் இவற்றிற்கிடையேயான வேறுபாடுகள் மட்டுமே என்று எளிமைப்படுத்தவும் பொதுமைப்படுத்தவும் இயலாது.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//தேஜஸ் என்றால் ஒளி, தெளிவு, வீரம், துணிவு என்று பல பொருட்கள் உண்டு தருமி ஐயா//

தருமி ஐயா
இந்தப் பொருளெல்லாம் அப்புறம். முதலில் குமரனின் திருமகள் பேரு வரும் பாடல் அது! //தேஜஸ் தேஜஸ்வினம் அகம்!// :))))

தருமி said...

KRS,
ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ?!

R.DEVARAJAN said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

விதப்பொருமை சைவத்திலும் இருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ரீகண்டரின் ஸூத்ர விரிவுரை
இதற்கான ஆதாரம்.ஆனால் பிற மரபுகளைப்போல் இது மேலும் வளர்ச்சி
பெற்றதாகத் தெரியவில்லை.

தேவ்

R.DEVARAJAN said...

நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

விதப்பொருமை சைவத்திலும் இருப்பதாகத் தெரிகிறது.
ஸ்ரீகண்டரின் ஸூத்ர விரிவுரை
இதற்கான ஆதாரம்.ஆனால் பிற மரபுகளைப்போல் இது மேலும் வளர்ச்சி
பெற்றதாகத் தெரியவில்லை.

தேவ்

குமரன் (Kumaran) said...

உண்மை தேவ் ஐயா. ஸ்ரீகண்டரின் சிவாத்வைதம்/சிவ-விசிஷ்டாத்வைதத்தைப் பற்றி கொஞ்சமே கொஞ்சம் தான் அறிந்திருக்கிறேன். அப்பைய தீட்சிதரைப் பற்றி தமிழ் விக்கிபீடியாவில் படித்த போது அவரை அத்வைதியாக அத்வைதிகளும் சிவாத்வைதியாக சிவாத்வைதிகளும் கண்டிருக்கிறார்கள் என்று படித்தேன். அங்கே ஸ்ரீகண்டரைப் பற்றிய குறிப்பையும் படித்தேன். மற்ற படி சிவாத்வைதத்தைப் பற்றி இனி மேல் தான் தேடிப் படிக்க வேண்டும்.

மெளலி (மதுரையம்பதி) said...

வணக்கம் குமரன்...நல்ல ஆரம்பம்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி. ரொம்ப நாளாச்சே ஆளைக்காணலையேன்னு நினைச்சேன். வேலை ரொம்ப கூடுதல்ன்னு நினைக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

ஆமாம் குமரன், கொஞ்சம் வேலை அதிகம்(காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே :-)). காஸ்ட் கண்ட்ரோல் மெஷரின் ஒரு பகுதியாக வலையில் மேய்வதையும் கொஞ்சம் குறைத்திருக்கிறேன். :))

குமரன் (Kumaran) said...

புரியுது மௌலி. Take Care.

கிருஷ்ண மூர்த்தி S said...

வேற்றுமையிலும் ஒற்றுமையைக் காண முடியும் என்பது சனாதன தர்மம் நமக்களித்திருக்கிற பெரும் கொடை என்பது உண்மைதான். ஆனால் மனிதனின் தன்மை எடுத்த எடுப்பிலேயே முழு உண்மையையும் அறிந்து கொள்கிற வகையில் இல்லை என்கிறார் ஸ்ரீ அரவிந்தர்.
"The mind's door of entry to the conception of him [the Divine] must necessarily vary according to the past evolution and the present nature. .. "
SRI AUROBINDO,
‘The Synthesis of Yoga ‘
ஸ்ரீ அரவிந்த அன்னை இன்னமும் விளக்கமாகச் சொல்கிறார்:
Each individual is a special manifestation in the universe, therefore his true path must be an absolutely unique path. There are similarities, there are resemblances, there are categories, families, churches, ideals also, that is, a certain collective way of approaching the Divine, which creates a kind of church, not materialised but in a more subtle world -there are all these things -but for the details of the path, the details of yoga, it will be different according to each individual, necessarily, and conditioned physically by his present bodily structure, and vitally, mentally and psychically, of course, by former lives.”
வேற்றுமைகளைப் புரிந்து கொள்வதும், அதைப் பெரிதுபடுத்திச் சண்டை போட்டுக் கொள்வதற்காக இல்லை என்கிற உங்கள் புரிதலையும் மிகவும் ரசித்தேன்!

கிருஷ்ண மூர்த்தி S said...

இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. சமயம், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், நெறிமுறைகள் என்பது வேறு, ஆன்மீக அனுபவம் என்பது வேறு.

உங்களுடைய இந்தப் பதிவின் ஆரம்ப வரிகள், ஆன்மீகப் பதிவர்கள் எண்டு அழைக்கப்படும் அன்பர்களின் பதிவுகளில், பின்னூட்டங்களில் இருந்து நீங்கள் புரிந்து கொண்ட விதத்தையே குறிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதை வைத்து, அவர்களும் அப்படித்தான் புரிந்து கொண்டதாக எப்படி முடிவுக்கு வருகிறீர்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை:-(

குமரன் (Kumaran) said...

அன்னை, அரவிந்தர் இருவரி பொன்மொழிகளையும் தந்ததற்கு மிக்க நன்றி கிருஷ்ணமூர்த்தி ஐயா. உண்மை. அவரவர் தமதமது அறிவறி வகை வகை என்று நம்மாழ்வாரும் சொல்கிறார்.

உண்மை ஐயா. ஒருவருடைய எழுத்துகளைக் கொண்டு அவர் உண்மையிலேயே என்ன நினைக்கிறார் / புரிந்து கொண்டிருக்கிறார் என்று இன்னொருவரால் உறுதியாகச் சொல்ல இயலாது. ஆனால் எழுத்துகள் சண்டைகளுக்கு இட்டுச் செல்வதைப் பார்க்கும் போது அவர்களது புரிதல்கள் கொஞ்சம் புரிகின்றன. :-)

கிருஷ்ண மூர்த்தி S said...

/ஆனால் எழுத்துகள் சண்டைகளுக்கு இட்டுச் செல்வதைப் பார்க்கும் போது அவர்களது புரிதல்கள் கொஞ்சம் புரிகின்றன/

எனக்கு நீங்கள் சொல்ல வருவது அல்லது எதை மனதில் வைத்துக் கொண்டு இதைச் சொல்கிறீர்கள் என்பது இன்னமும் புரியவில்லை. போகட்டும்!

சண்டையோ, சமாதானமோ, அதில் நாம் கற்றுக்கொண்டதென்ன என்பதில் தான் உண்மையான புரிதல் இருக்கிறதென்றே எனக்குப் படுகிறது.

அதுவும் தவிர, ஒருபக்கச் சார்பான நிலை நாம் எடுக்கும் போது, நம்முடைய நண்பருக்காக வக்காலத்து, சால்ஜாப்பு, சூடான பதில் இப்படி நாமே நிலை குலைந்து போய் விடும் போது என்ன புரிதல் நிகழ்ந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?

குமரன் (Kumaran) said...

//அதுவும் தவிர, ஒருபக்கச் சார்பான நிலை நாம் எடுக்கும் போது, நம்முடைய நண்பருக்காக வக்காலத்து, சால்ஜாப்பு, சூடான பதில் இப்படி நாமே நிலை குலைந்து போய் விடும் போது என்ன புரிதல் நிகழ்ந்து விடும் என்று நினைக்கிறீர்கள்?//

உண்மை தான் ஐயா.