Sunday, November 16, 2008

சங்க இலக்கியத்தில் இதிகாசச் செய்திகள் (இராமாயணமும் மகாபாரதமும்)

வால்மீகி இராமாயணமும் வியாச பாரதமும் இந்தியாவின் சிறப்பு மிக்க இதிகாசங்கள். இவ்விரண்டு இதிகாசங்களின் செல்வாக்கைப் பாரதத்தின் எல்லா மொழிகளிலும் காணலாம். புகழ்பூத்த மகாகவிகளால் காவியங்களாகப் பாடப் படுவதற்கு முன்னரே, காலத்தால் பழைமைமிக்க சங்கப் பாடல்களில், இவ்விதிகாசச் செய்திகள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலும் உவமைகளாகவே இதிகாச நிகழ்ச்சிகளைப் பதிவு செய்துள்ளனர் புலவர்கள்.


அகநானூறு
புறநானூறு
கலித்தொகை
ஆகிய சங்க நூல்களில் இராமாயணச் செய்திகள் காணப்படுகின்றன.

அகநானூற்றில் எழுபதாவது பாடல் மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது; நெய்தல் திணையைச் சார்ந்தது. இப்பாடலில் இராமாயணச் செய்தி இடம் பெற்றுள்ளது. இராமன் இலங்கைக்குச் செல்லத் தமிழகத்தின் தென்திசைக்கு வந்து தனுஷ்கோடியில் ஆலமரம் ஒன்றின் கீழ் இருந்து, போர் தொடர்பாக வானர வீரர்களோடு ஆராயும்போது, அவ் ஆலமரத்தின்கண் இருந்த பறவைகள் சப்தமிட, அச்சப்தத்தைத் தன் கைகவித்து அடக்கினான் என்று புலவர் பாடியுள்ளார்.


"வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்குஇரும் பெளவம் இரங்கு முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் ஆலம் போல,"

என்பன புலவரின் பாடல் வரிகள்.

தனுஷ்கோடி பாண்டிய மன்னர்களின் பழைய துறையாகும். புறநானூற்றில் 378வது பாடலைப் பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார் ஆவார். அவர், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி என்பவனைப் பாடிப் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தம் குடும்பத்திடம் தந்தார். அணிகலன்களைக் குடும்பத்தார் அணிந்து மகிழ்ந்ததைப் பாடும் போது இராமாயணக் கதையைக் குறிப்பிட்டுள்ளார் புலவர்.

விரலில் அணிவதைச் செவியிலும், செவியில் அணிவதை விரலிலும்;
அரையில் அணிவதைக் கழுத்திலும், கழுத்தில் அணிவதை இடையிலுமாக மாற்றி மாற்றி அணிந்தனர்
என்று நகைச்சுவையோடு பாட வந்தவர்.

"கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்
செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு."
என்று இராமாயண நிகழ்ச்சியை உவமையாக்கிப் பாடியுள்ளார்.


இராவணன் கவர்ந்து சென்றபோது சீதை, தன் அணிகலன்களை ஒரு முடிப்பாகக் கட்டிக் கீழே போட்டுச் சென்றாள் என்றும், அம்முடிப்பு சுக்ரீவனிடம் இருந்தது என்றும் இராமாயணம் கூறும். இதனை நினைவிற் கொண்ட புறநானூற்றுப் புலவர், சீதை விட்டுச் சென்ற அணிகலன்களைக் குரங்குகள் முறைமாறி அணிந்து பார்த்ததைப் போலத் தம் சுற்றத்தார் அணிந்து பார்த்தனர் என்று நகைச்சுவையோடு பாடியுள்ளார்.

கலித்தொகையில் பாரதக் கதை நிகழ்ச்சிகள் உவமைகளாகக் காணப்படுகின்றன. கலித்தொகை ஐவர் பாடிய பாடல்களில் தொகுப்பாகும்.

பாலைக்கலியைப் பாடியவர் பெருங்கடுங்கோ என்பவர். இவர் "பாலைபாடிய பெருங்கடுங்கோ" என்று அழைக்கப்படுபவர். பாலை நிலத்தின் கொடுமையை வருணிக்கும்போது பாரதக் கதை நிகழ்ச்சியை உவமையாகக் கூறியுள்ளார்.

மதங்கொண்ட களிறுகள் மலையில் எரியும் தீயில் அகப்பட்டு கொள்ள, மூங்கில்களைக் கொண்ட அத்தீயை, தன் கால்களால் மிதித்து, வழி ஏற்படுத்திக் கொண்டு, தீக்குள் மாட்டிக் கொண்ட யானைகளைக் காத்து, அவற்றோடு வேழம் ஒன்று வெளியேறியது. இது எப்படி உள்ளதாம்?

"வயக்குறு மண்டலம் வடமொழிப் பெயர்பெற்
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்
ஐவர்என்று உலகேத்தும் அரசர்கள் அகத்தராக்
கைபுனை அரக்குஇல்லைக் கதழ்எரி சூழ்ந்தாங்குக்
களிதிகழ் காடஅத்த கடுங்களிறு, அகத்தவா,

முளிகழை உயர்மலை முற்றிய முழங்கு அழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை, வளிமகன் உடைத்துத் தன்
உள்ளத்துக் கிளைகளோடு உயப்போகு வான்போல,
எழு உறழ் தடக்கையின் இனம்காக்கும் எழில்வேழம்
அழுவம்சூழ் புகைஅழல் அதர்பட மிதித்துத் தம்
குழுவொடு புணர்ந்துபோம் குன்றுஅழல் வெஞ்சுரம்." (பாலைக்கலி - 24)

என்று பாடுகிறார் கவிஞர்.

துரியோதனன் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்ட அரக்கு மாளிகையில் தீப்பிடிக்க, அவ்வரக்கு மாளிகையை அழித்து, பீமன், தன் உடன்பிறந்தாரோடு பிழைத்து வெளியேறியது போல உள்ளதாம்.
பாரதக் கதையின் முக்கியமான நிகழ்ச்சி திரெளபதியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சினைப் பீமன் பிளந்தததாகும்.

இதனை ஓர் உவமையாக்கியுள்ளார் முல்லைக்கலியைப் பாடிய சோழன் நல்லுருத்திரனார். காளைகளை அடக்கும் வீரர்களின் வீரத்தைப் பேசுவது முல்லைக்கலி.

தன்னை அடக்க வந்த ஆயர்குலத்து இளைஞனைக் குத்திக் கொம்பில் கோத்துக் கொண்டு ஆடும் காளை. பாஞ்சாலியின் கூந்தலைத் தீண்டிய துச்சாதனன் நெஞ்சத்தைப் பிளந்து, கொன்று, வஞ்சத்தை முடித்துக் கொண்ட பீமன் போலக் காட்சியளிக்கின்றதாம். இதனை


"நோக்கு அஞ்சான், பாய்ந்த பொதுவனைச் சாக்குத்திக்
கோட்டிடைக்கொண்டு குலைப்பதன் தோற்றம்காண்
அம்சீர் அசைஇயல் கூந்தல் கைநீட்டியான்
நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன்
வஞ்சினம் வாய்த்தானும் போன்ம்." (முல்லைக்கலி - 1)

என்று பாடியுள்ளார் புலவர்.

பீமன் துரியோதனன் துடையை முறித்ததைக் குறிஞ்சிக்கலியில் (பா.16) கபிலர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு பாரத நாட்டின் புகழ்மிக்க இதிகாச நிகழ்ச்சிகள் 1800 ஆண்டுகட்கு முந்தைய, நம் சங்க இலக்கியப் பாடல்களில் காணப்படுவதை, அவ்விதிகாசங்களின் செல்வாக்காகவும், அவற்றின் மீது தமிழர்கட்கு இருந்த ஈடுபாடாகவும் நோக்க வேண்டும்.

முனைவர். ந.முருகேசன்

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: மின் தமிழ் குழுமத்தில் இட்ட திரு. கண்ணன் நடராஜன் ஐயா.

14 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

அறியத் தந்தமைக்கு நன்றி குமரன். இன்னும் ஒரு முறை படிக்கவேண்டும்.

ஜீவி said...

தகவல்களுக்கு மிக்க நன்றி, குமரன்!
நீங்கள் எடுத்து எழுதவில்லையென்றால், இவையெல்லாம் படிக்காமலேயே போயிருக்கக்கூடும்.
மீண்டும் நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இங்கேயும் சொல்லி வைத்தது நன்றே குமரன்!

நப்பின்னை, வாலியோன் பற்றிக் கொஞ்சம் தேடிப் படியுங்களேன் நேரம் கிடைக்கும் போது! மார்கழி வரும் வேளையில் நப்பின்னை படிப்பது நல்லது தானே குமரன்? புரிகிறதா? :))

குமரன் (Kumaran) said...

படிச்சுப் பாருங்க மௌலி. நன்றி.

குமரன் (Kumaran) said...

ஜீவி ஐயா. அன்பான சொற்களுக்கு நன்றி. இந்தப் பாராட்டிற்குத் தகுதி உடையவனாக மாற்றிக் கொள்ள முயல்கிறேன். நன்றி.

குமரன் (Kumaran) said...

வாலியோன் பற்றி படித்த குறிப்புகள் இருக்கின்றன இரவிசங்கர். ஒவ்வொன்றாக நேரம் கிடைக்கும் போது இடுகிறேன். நப்பின்னை பற்றிய குறிப்புகளை இனி மேல் தான் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

மார்கழிக்கும் பதிவுகளுக்கும் எந்த தொடர்பும் இருக்காது என்பதை இப்போதே சொல்லி வைக்கிறேன் இரவி. அந்த மாதிரி பார்த்து எழுதுவதாய் இருந்தால் கோதைதமிழ் பதிவில் என்றைக்கோ எழுதி முடித்திருப்பேன். :-)

Kavinaya said...

ஜீவி ஐயா சொன்னதை ஆமோதிக்கிறேன். நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

நன்றிக்கா. அவருக்கு சொன்ன பதில் தான் உங்களுக்கும். :-)

தருமி said...

இந்தப் பதிவைப் பார்க்கச் சொன்னீங்க. வந்தேன். பார்த்து விட்டேன்.

வர்ட்டா.........

குமரன் (Kumaran) said...

மரியாதை தெரிஞ்சவங்க நீங்கன்னு உறுதி பண்ணிட்டீங்க தருமி ஐயா. ஒழுங்கு மரியாதையான்னு சொன்னதுனால ஒழுங்கா மரியாதையா வந்ததுக்கு நன்றி ஐயா. :)

சிவபாலன் said...

Kumaran,

Interesting! Well Written.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவபாலன்.

எங்கே உங்களை வெகு நாட்களாகக் காணவில்லை?

கபீரன்பன் said...

ஜீவி மற்றும் கவிநயா அவர்கள் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்.

ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய விவரங்கள்.

நன்றி

குமரன் (Kumaran) said...

நன்றி கபீரன்பரே.