Friday, November 21, 2008

'ஐ'யும் 'அய்'யும்..... - திரு. நாக. இளங்கோவன்

"அய்" என்ற பயன்பாடு தவிர்க்கப் படவேண்டும்!

"அய்" யில் இருந்து "ஐ"க்கு! (ஐ -> அய் -> ஐ)

"ஐ" என்ற எழுத்தை "அய்" என்று எழுதும்
அணிமைக்காலப் பழக்கம் எப்படி வந்தது
என்ற ஆய்வுக்குள் நான் நுழையவில்லை.
ஆனால் அது மெல்லப் பரவியது இணையத்திலும்.

"ஐ" என்றே எழுதிவந்த நானும் "அய்" என்ற பழகினேன்.
சில ஆண்டுகள் அப்படியே எழுதினேன்.

"அய்" என்று புழங்கியபோது சில உரையாட்டுகளும்
வாதுகளும் கூட வந்தன. "அய்" என்று எழுதுவது
தவறில்லை என்பதே அறிஞர்களின்
கருத்தாக இருக்கிறது. ஆயினும் அவர்கள்
"அய்" என்றே எழுதவேண்டும்
என்று வலியுறுத்துவதில்லை.

ஆனால், "அய்" என்ற புழக்கத்தை எதிர்த்தவர்களிடம்
இருந்து சரியான ஏரணம் அப்போது முன்வைக்கப்
படவில்லை. வழக்கம்போல தி.க, தி.மு.க என்று
போய்விட்ட அந்த எதிர்வாதுகளை நான் சட்டை
செய்யவில்லை.

ஆயினும் இந்த "அய்" விதயத்தில் என்னிடம்
காலப்போக்கில் மாற்றம் ஏற்பட்டு மீண்டும்
"ஐ" எனவே புழங்குகிறேன். ஐ என்று
எழுதவேண்டும் என்று சில பெரியவர்களும்
எனக்கு சொன்னபோது இதனை நுணுகிப் பார்க்கத்
தோன்றியது. "அய்" என்று நிறைய
புழங்கியவன் என்ற முறையில் என் கருத்துக்களை
நான் விளக்க வேண்டும்.

1) "ஐ" என்பது ஒரு சொல்; அஃது எழுத்து மட்டுமல்ல.
ஆகவே "ஐ" யை இழந்தால் ஒரு முக்கியமான
சொல்லை இழக்கிறோம். எழுத்தை மாற்றுகிறோம்
என்று சொற்களை இழக்கக் கூடாது.

ஐ என்பதற்கு உள்ள பொருள்களில் மிக முக்கியமானவை
நுண்மை, மெல்ல, வியப்பு மற்றும் ஐந்தின் குறுக்கம்.

ஐந்தின் குறுக்கமாக "ஐ" பயன்படுவதைக் காண்க:

"ஆடகப் பெரு நிறை ஐ-ஐந்து இரட்டி,
தோடு ஆர் போந்தை வேலோன், 'தன் நிறை"
................சிலப்பதிகாரம்:27:174-175

வியப்பு:

"பெய் வளைக் கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே,
'ஐ!' என்றாள், ஆயர் மகள்,"
..................சிலப்பதிகாரம்:ஆய்ச்சியர் குரவை

மெல்ல/பைய:

பகலிலும் அகலா தாகி யாமம்
தவல் இல் நீத்தமொடு "ஐ"யெனக் கழிய......
...................அகநானூறு:305


இந்த மூன்று பொருள்களில் இவ்வெழுத்து இலக்கியங்களில்
விரவிக் கிடக்கிறது. இதை மாற்றினால் அதன் தன்மை
எப்படி யிருக்கும் என்று பார்த்தால் ஐயம் வருகிறது.

மேற்சொன்னக் காட்டுகளில், "ஐ" வரும் இடங்களில் "அய்" என்று
போட்டால் ஒன்றும் பிழை நேர்ந்து விடவில்லை. ஆனால்
ஒவ்வொரு "அய்" யும் ஒரு மாத்திரையை விழுங்கி விடுவதைக்
காணமுடிகிறது.

இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும். சொல்லின் முதல், இடை, கடையில்
சேர்ந்து வரும்போது குறுகி ஒரு மாத்திரை
பெறும் (ஐகாரக் குறுக்கம்).

ஆக, ஐ என்று எழுத்து சொல்லாகத் தனித்து நிற்கையில்
அதன் இரண்டு மாத்திரை ஒலிப்பை "அய்" என்று எழுதிக்
கெடுத்து விடுகிறோம் என்று என்னால் உணரமுடிந்தது.

குறிப்பாக மேற்சொன்ன அகப்பாடலை முழுதுமாகப்
படித்துப் பார்த்தால்தால் அந்த "ஐ" யின் வலிமையை
உணரமுடியும்.

அந்த அகப்பாட்டு எடுத்து வீசுகின்ற துயருக்கும் சூழலுக்கும்
இந்த ஐ என்ற ஒரு சொல் பெரும்பங்கு வகிப்பதை அதை
ஆழ்ந்து படிக்கும்போது உணரமுடியும்.

ஆதலின் "ஐ" யின் இழப்பு, ஒரு எழுத்து, ஒரு சொல்,
அதன் அகமான ஒலிப்பு என்ற மூன்றையும் இழக்க வைக்கிறது.

ஆகவே, "அய்" என்று எழுதக் கூடாது.
உரையிலும் சரி கவிதையிலும் சரி.

2) தமிழில் பிறமொழிகளை விட ஓரெழுத்து, ஈரெழுத்து மற்றும்
மூவெழுத்துச் சொற்கள் அதிகம் என்று அறிஞர் கூறுவர்.
ஆ, ஈ, ஓ, மா, மீ, கூ, கோ,சீ, தீ, தா, தூ, நீ,
ஐ, நை, மை, கை, வை, தை
போன்று பல ஓரெழுத்துச் சொற்கள் தனித்தோ, சொல்
விகாரமடைந்தோ பொருள் கொடுப்பவை இருக்கின்றன.
அதோடு பிற எழுத்துக்களோடு இவை புணர்ந்து
கொடுக்கும் சொற்கள் ஏராளம். அதில் "ஐ" மிக
முக்கியமானது. இதைச் சார்ந்து இருக்கும்
சொற்கள் மிக அதிகம். ஆகவே தமிழில்
இருக்கும் ஓரெழுத்துச் சொற்களை

இழக்கக் கூடாது. இது ஒளகாரத்திற்கும் பொருந்தும்.

3) இது வெறும் வரி வடிவம்தானே இதனை
மாற்றினால் என்ன என்று கருத இடம் இருக்கிறது
(சொல், ஒலிப்பு என்ற நிலையைத் தாண்டி)

ஆனால், இதை மாற்றுவதால் என்ன பயன்? என்று பார்த்தால்
ஒன்றுமேயில்லை. எனது சிற்றறிவினால் நிச்சயமாக எந்தப்
பயனையும் காணமுடியவில்லை.

"ஐ" என்று விரல்களால் எழுதும்போது வளவு நெளிவுகள் நிறைய
இருக்கிறது என்று சிலர் சொல்லக்கூடும். இதனை நீக்கி "அய்"
என்று எழுதினால் இதை விட அதிக சுழிப்புகளைத்தான்
போடவேண்டி உள்ளது.

4) ஐ என்று எழுதாமல் அய் என்று எழுதினால்
இரண்டு எழுத்துக்களின் இடத்தை எடுத்துக் கொள்கிறது.
இலக்கணக் கட்டில் மெய்யெழுத்துக்கள்
கணக்கிடப் படுவதில்லை. ஆனால் எழுதினால் அது ஒரு இடத்தை
அடைத்துக் கொள்ளவே செய்கிறது. காகிதத்தில் எழுதினாலும்,
கணியில் எழுதினாலும் தேவையில்லாமல் அதிக எழுத்துக்களை
நாம் பெருக்குகிறோம்.

ஐஐந்து (4 எழுத்துக்கள்) = அய்அய்ந்து = அய்யய்ந்து (6 எழுத்துக்கள்)

5) "ஐ" என்பது ஒரு சொல் என்று அறிவோம். அந்தச் சொல்
எப்படி வந்தது என்று பார்க்குங்கால் மனிதனின்
இயல்பான ஒலிப்பில் இருந்தே வந்திருக்கின்றது.

"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்.
(மாடுகளுக்கு முகமன் கூறும் சொல்லே இந்த "ஐ" தான் :-).
நாமெல்லாம் ஆங்கிலத்தில் hi (ஐ) சொல்வது போலே :-) )

இந்த இயல்பான ஒலிப்பை உள்ளடக்கிய ஐ நிலைக்க வேண்டும்.

6) கீழ்க்கண்ட தேவாரத்தைப் படிக்க:

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்
....அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்
எத்தனையும் அரியைநீ எளியை யானாய்
.....எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்
.....பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே
இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ
.....எம்பெருமான் திருக்கருணை யிருந்த வாறே.
.............. ஆறாம் திருமுறை: பாடல் 95: அப்பர் பெருமான்

இங்கே ஐய, ஐயோ என்ற இடங்களில் இருக்கும் ஐகளை
அய் என்று மாற்றிப் படிக்க மனம் ஒப்புதில்லை. தேவார திருவாசக
நூல்களில் ஐ என்ற எழுத்தும் ஓ என்ற எழுத்தும் பயன் படுத்தப்
படும் இடங்கள் மிக நுண்ணியமானவை. அவற்றை இழந்தால்
அந்த இடத்தின் இதம் கெடுகிறது போன்றொரு உணர்வு இருக்கிறது.
இதை வேறு ஆதரவில் என்னால் நிறுவ முடியாது. எனினும் இதை
விட்டு விட முடியவே முடியாது.

7) "புவனி புகழ் ஐயடிகள் திருமூலர் காரி" என்பது
பெரியபுராணத்தில் வருகின்ற அடி.

இதில் ஐயடிகள் என்ற சொல்லினைக் காண்க.
"ஐ அடிகள்" என்பதில் ஐ என்பது சொல். அது வியக்கத்தக்க,
போற்றத்தக்க, அல்லது நுண்திறன் வாய்ந்த அடிகள் என்ற
பொருளைக் கொடுக்கிறது. இந்த ஐ என்ற சொல்லைத்
தூக்கினால் இம்மாதிரியானப்
பயன்பாடுகள் பழுதடைய வாய்ப்பிருக்கிறது.
(ஐந்து அடிகள் என்று பொருள் கொண்டாலும்
ஐ யின் தனிச்சிறப்பு இருக்க வேண்டிய
அவசியத்தை நோக்குக.)

8) செய்யுளில் அளபெடுக்கும் இடங்களில் குழப்பமேற்படுத்தும்.

"யாரை நீ, என் பின் வருவோய்? என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ?' என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன், அணி-இழாஅய்!...."
............................சிலப்பதிகாரம்:கட்டுரைகாதை:19-21

அணி-இழாஅய் என்ற சீர் இன்னிசை அளபெடையாக வருகிறது.
இது அணியிழையாள் என்ற சொல் விகாரம் பெற்று அணி-இழாய்
ஆகி, மேலும் அளபு எடுத்து வந்ததாகத் தெரிகிறது.

ஒரு பேச்சுக்கு, ஒரு செய்யுள்/கவிதை வரி இப்படி
அமைகிறது என்று வைத்துக் கொள்வோம்.
"அணி-இலாஅய் அடிகள் காண்குவம்... " என்று வருமானால்

இது அளபெடையா, அல்லது ஐயடிகளைச் சொல்கிறதா என்ற குழப்பம்
வரும். இந்தக் கருத்தின் இலக்கணச் சுத்தியை நான் நன்கு
ஆய்ந்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது. எடுத்துக்காட்டுக்காக
ழகரத்தை லகரமாக மாற்றி எழுதியிருக்கிறேன்; பிழையிருப்பின் அறிஞர் பொறுக்க.

9) ஐ, ஐய, ஐயன், ஐயள், ஐயை, ஐயர், ஐயா, ஐயோ போன்ற
சொற்கள் மிகத் தனித்தன்மை வாய்ந்தன. அதை அப்படியே
போற்ற வேண்டும். (சொல்லோடு ஐ சேர்ந்து வரும்போது
இலக்கணப் படி சரியேயாயினும்).

10) இந்த "அய்" போக்கு சொல்லில் முன்னால் வருவதால்,
நடுவிலும் பின்னாலும் இப்படிச் செய்கிறார்கள். மலை
என்பதை மலய் என்று எழுதுகிறார்கள். சிலை = சிலய்,
கலை = கலய் என்று பயில்கிறார்கள்.
பழமலை என்பவர் பழமலய் என்றே எழுதுகிறார் இதழ்களில்.
இது ஆபத்தான போக்கு என்றே படுகிறது. இதை நுணுகி ஆராய்ந்தால்
இதன் சரவல்கள் வெளிவரக்கூடும். இது மிக சிக்கலான சிக்கல்
தரும் விதயமாகவே படுகிறது. எழுத்து, சொல், யாப்பு இலக்கனங்களை
நுணுகிப் பார்க்கவேண்டும். குறிப்பாக இப்பயன்பாடு மலய் என்று பழகி,
அது செய்யுளில் மருவி அல்லது விகாரமடைந்து பயன்படுத்தினால்
எப்படி இருக்கும் என்று எண்ணினால் ஐயமாக இருக்கிறது.

இக்காரணங்களால், நான் "அய்" என்ற பயன்பாட்டை அறவே தவிர்த்து
விட்டேன். சொல்லோடு சேர்ந்து வரும்போது அது பிழையில்லை
என்பதால் அறிஞர்கள் அதனை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த
ஏற்பு, தனித்த ஐ என்ற சொல்லையும் பலரின் பயன்பாட்டால்
பாதிக்கிறது. ஆகவே "அய்" என்ற பயன்பாட்டைத் தவிர்க்கவேண்டும்
என்பது எனது தாழ்மையான கருத்து.

(தொடர்புடைய திரு.குமரனின் கருத்துக்கள்:
http://koodal1.blogspot.com/2008/05/blog-post.html )

அன்புடன்
நாக.இளங்கோவன்

***

இங்கும் சேமித்து வைக்க அனுமதி தந்த திரு. இளங்கோவன் ஐயாவிற்கு மிக்க நன்றி.

13 comments:

கவிநயா said...

ஐ! எனக்கு இதெல்லாம் தெரியாட்டாலும் 'ஐ', 'ஔ', 'ழ', இதைப் போல தமிழுக்கே உரிய, அழகான எழுத்துகளை / சொற்களை பயன்படுத்த ரொம்பப் பிடிக்கும் :) பகிர்தலுக்கு நன்றி குமரா.

குமரன் (Kumaran) said...

நன்றி அக்கா. :-)

மதுரையம்பதி said...

நிறைய தெரிந்துகொண்டேன் குமரன்.

ஆமாம், "சரவல்கள்" அப்படின்னா என்ன?.

குமரன் (Kumaran) said...

சரவல் அப்படின்னா கஷ்டம், கடினம் போன்ற பொருள் வரும் மௌலி. விளக்கிச் சொல்ல கடினம் என்றால் விளக்கிச் சொல்வது சரவலானது என்று புழங்குவதைக் கண்டிருக்கிறேன். தடை என்றும் ஒரு பொருள் இருக்கிறது. தடையில்லாமல் எழுதி வா என்பதை 'சரவல் இல்லாமல் எழுதி வா' என்று படித்திருக்கிறேன்.

இங்கே பழமலை என்பதை பழமலய் என்று எழுதுவதால் வரக்கூடிய சிக்கல்கள், தொடர்ச்சியாக எழுதும் போது ஏற்படக்கூடிய தடைகள், புரிந்து கொள்வதில் வரக்குடிய சிக்கல்கள் போன்றவற்றைக் குறிக்க 'சரவல்கள்' என்று இளங்கோவன் ஐயா சொல்லியிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.

மதுரையம்பதி said...

//தடையில்லாமல் எழுதி வா என்பதை 'சரவல் இல்லாமல் எழுதி வா' என்று படித்திருக்கிறேன்//

அப்படின்னா "சரளம்" என்பதற்கு எதிர்பதம் "சரவல்" என்பது சரியா?..சரளம் தமிழ் வார்த்தை தானே?

குமரன் (Kumaran) said...

தெரியவில்லை மௌலி. இரண்டு மொழி அகராதியிலும் சரளம் என்ற சொல் இருக்கிறது. பொருளும் அதே பொருள்.

திகழ்மிளிர் said...

/"ஐ" என்பது நாம் இயல்பாக ஒன்றைப் பார்த்து வியக்கும் போது
சொல்வது. "ஐ அழகா யிருக்கே!" என்று சொல்வது இயல்பு.
இந்த "ஐ" யை உச்சரிப்பதற்கும் சொல்வதற்கும் அதாவது வியத்தற்கு
எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என்ற தேவையேயில்லை.
ஏனெனில் இது இயல்பான மாந்த ஒலி! அப்படிப்பட்ட வியப்பைக்
குறிக்கும் சொல்லை விட்டுத்தர என் மனம் ஒப்பவில்லை.

"ஐ" என்பது இன்னொரு வகையில் நாம் இயல்பாகப் பயன்படுத்துவோம்.
இதனை மாடு கன்றுகளோடு பழக்கப் பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
மாடுகளை / கால்நடைகளை முடுக்குதற்கும் தடுக்குதற்கும் இந்தச்
சொல்/ஒலி பயனில் வரும்.

மாடுகளை அமைதிப்படுத்தற்கு "ஐ...ஐ......" என்று சொல்வார்கள்.
அமைதிப்படுத்தும்போது மெலிந்து ஒலிப்பர். அது அழகான மெல்லிய
ஓசையாக வரும். முடுக்குதற்கும் "ஐ ஐ" என்று வலிந்து ஒலிப்பார்கள்./

உண்மை தான்

/சரவல் அப்படின்னா கஷ்டம், கடினம் போன்ற பொருள் வரும் மௌலி. விளக்கிச் சொல்ல கடினம் என்றால் விளக்கிச் சொல்வது சரவலானது என்று புழங்குவதைக் கண்டிருக்கிறேன். தடை என்றும் ஒரு பொருள் இருக்கிறது. தடையில்லாமல் எழுதி வா என்பதை 'சரவல் இல்லாமல் எழுதி வா' என்று படித்திருக்கிறேன்.

இங்கே பழமலை என்பதை பழமலய் என்று எழுதுவதால் வரக்கூடிய சிக்கல்கள், தொடர்ச்சியாக எழுதும் போது ஏற்படக்கூடிய தடைகள், புரிந்து கொள்வதில் வரக்குடிய சிக்கல்கள் போன்றவற்றைக் குறிக்க 'சரவல்கள்' என்று இளங்கோவன் ஐயா சொல்லியிருக்கிறார் என்று எண்ணுகிறேன்./

ஒரு புதிய சொல்லையும்
பொருளையும் தங்களின்
பதிவின் வாயிலாக தெரிந்துக் கொண்டேன்


மிக்க மகிழ்ச்சி

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்மிளிர்

இலவசக்கொத்தனார் said...

ஐ வேண்டாம் எனச் சொல்வீர்களோன்னு பயந்துக்கிட்டே வந்தேன்!! நல்ல வேளை ஐ வேணுமுன்னு அடிச்சுச் சொல்லிட்டீங்க. இனிமே யாராவது அய்ன்னா இந்த சுட்டிதான் பேசும்! :)

குமரன் (Kumaran) said...

பேசட்டும் கொத்ஸ். மிக நல்ல எடுத்துக்காட்டுகளை நாக. இளங்கோவன் ஐயா இங்கே தந்திருக்கிறார்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

//இலக்கணப்படி, ஐ என்பது நெடில். அது தனித்து ஒலிக்கையில்
இரண்டு மாத்திரை பெறும்.//
குறித்துக் கொண்டேன்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜீவா. ஒளவும் இரு மாத்திரை கொண்ட நெடிலே. உயிரெழுத்துகளில் ஏழு நெடில் ஐந்து குறில்.

Ki.Ilampirai said...

"ஐ" அப்பாடா! இந்த ஓர் எழுத்து என்னபாடு படுகிறது. ஐ எனில் தலைவன் எனப் பொருள் உண்டு. அய் எனில் என்ன பொருள்? ஏதுமில்லையே! எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே எனும்போது ஐ எனும் ஓரெழுத்து ஒரு சொல்லாகப் பொருள் தருகிறது. தமிழின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று. அதைப்போல் 'அவ்' எனச் சிலர் ஒள என்பதை எழுதுகின்றனர். ஒளவை எனில் அது அம்மையைக் குறிக்கும் மேன்மையானதொரு சொல். இதுவே தெலுங்கில் அவ்வா என முதுமையான பெண்ணைக் குறிக்கும் பாட்டியாகக் கொள்ளப்படுகிறது. ஆக ஒளவைப்பாட்டி எனும் போது அம்மையாக இருந்தவள் முதுமைநிலையில் அதாவது அறிவின் முதிர்ச்சி நிலையில் பெருமையாகப் போற்றப் படுகிறாள் என்பதே தமிழ்ச்சொல்லின் சிறப்பும் உயர்வும் பெருமையும் ஆகும். இதை சீர்திருத்துகிறோம் என எண்ணி அவ்வைப்பாட்டி என எழுதினால் மிகக் கேவலமான நிலையினைச் சுட்டும் சொல்லாகக் காண முடிகிறது. ஆகவே எழுத்துகள் வடிவத்தில் சீர்திருத்தம் எனச் சொல்லிச் சிதைத்து விடாதிருக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். மேலும் உயிர் எழுத்து எனும்போது 'அ' முதல் 'ஒள' வரை 12 என இலக்கணம் உள்ளது. அய், அவ் எனும்போது இலக்கணத்தில் பிழை வருமே! சிந்திக்க!