Thursday, November 20, 2008

புன்கவிஞர் பலவகை (இலக்கிய மரபு) - பசவய்யா

நாம் எல்லாம்
டமில் எழுத்தாளர்
நமக்கோ
பிளேஜியரிஸம்
பசுவய்யா

"பிளேஜியரிஸம்' என்பதைத் தமிழில் இலக்கியத் திருட்டு என்று சொல்வர். பிறர் ஒருவரின் கருத்தையோ சிந்தனையையோ அவர் பெயரைக் குறிப்பிடாமல் எடுத்தாள்வது, பிறருடைய சிந்தனைகளைத் தன்னுடையதேபோலக் கையாள்வது முதலிய நடவடிக்கைகள் "பிளேஜியரிஸம்' ஆகும் என்பது ஆங்கில நூல் வரையறை.2

தமிழ் இலக்கிய வரலாற்றறிஞர் மு. அருணாசலம், "பிளேஜியரிசம்' பற்றிக் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார்.

""ஒருவர் உழைத்துச் செய்த காரியத்தை மற்றொருவர் அப்படியே பயன்படுத்திக் கொண்டால், அதைக் கருத்துலகில் திருட்டு என்று சொல்வோம். இலக்கியத் துறையில் ஒருவர் கூறியதை மற்றொருவர் இடம் குறிப்பிடாமலும் நன்றி தெரிவிக்காமலும் அப்படியே எடுத்து ஒரு பக்கமோ ஒரு பத்தியோ வைத்துக்கொண்டாலும்கூட ஆங்கிலத்தில் அதைப் "பிளேஜியரிசம்'(இலக்கியத் திருட்டு) என்று சொல்வார்கள்.''3

இந்தப் பிளேஜியரிசம் எனப்படும் "இலக்கியத் திருட்டு' தமிழில் இருக்கிறதா? தமிழில் எல்லாம் இருக்கிறது; தமிழில் இல்லாததே இல்லை என்னும் கருத்தில் தீவிரப் பற்றுடையோர் தமிழர். அப்படியெனில் இலக்கியத் திருட்டு சமாச்சாரம் மட்டும் தமிழில் இல்லாமல் போகுமா?

"முன்னோர் மொழிபொருளேயன்றி அவர் மொழியும் பொன்னேபோல் போற்றி' வருவது தமிழர்தம் மரபாகும். மரபிலே தமிழருக்கு உள்ள ஈடுபாடு அளவிடற்கரியது. தமிழ் மரபுகளுக்கு உரிய தனித் தன்மைகளைப் பேணிக் காக்கிறோமோ இல்லையோ சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் அவற்றை எடுத்து மொழிந்து பெருமை பேசிக்கொள்வது நமக்குக் கைவந்த கலையாகும். இலக்கியத்தை அகம், புறம் என்று பகுத்துக் காணும் மரபு தமிழைத் தவிர உலக மொழிகள் எவற்றிலும் கிடையாது. அகப் பொருள் மரபு, புறப்பொருள் மரபு ஆகியவை சார்ந்த விசயங்கள் தனித்தனி நூல்களாக எழுதப்பட்டுத் தொடர்ந்துவருகின்றன. நவீன விமர்சகர்கள் பலரும் இக்கோட்பாட்டை விரிவாகப் பயன்படுத்த முயல்கின்றனர் என்பனவெல்லாம் நாம் பேசும் பெருமைகள்.

பலராலும் விதந்தோதிக் குறிப்பிடப்படும் அகம், புறம் என்னும் மரபுகள் மட்டுமல்ல, இன்னும் பெருமை மிகு மரபுகள் பலவும் நம்மிடம் உள்ளன. அவற்றுள் சில:

க. மிகவும் பிரபலமான இலக்கியம் ஒன்றின் இடையிடையே பொருத்தமான இடங்களில் அந்த இலக்கிய நடையிலேயே சில பாடல்களை எழுதிச் சேர்த்துவிடும் மரபு. இதனை இடைச் செருகல் என்பர். ஓரிலக்கியத்தைப் பயின்றுவரும் போது உணர்ச்சிவசப்பட்டு இந்தக் காரியத்தைச் செய்திருக்கலாம். கவிஞன் இந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் விரித்துப் பாடியிருக்கலாம் என்னும் கருத்துத் தோன்றியதால் தன் சரக்கை உள்ளே நுழைத்திருக்கலாம். தன் பயிற்சிக்காகக்கூட இத்தகைய வேலையைச் செய்திருக்கலாம்.

நீண்ட கதையாகப் போகும் காப்பிய இலக்கியத்தில் இதற்கான வாய்ப்புகள் அதிகம். தசரதன் இறந்த செய்தி கேட்டதும் இராமன் புலம்புகிறான். அப்புலம்பலைப் பத்துப் பாடல்களில் கம்பர் பாடுவதாகக் கொள்வோம். படிக்கும் புலவர், " அடடா இராமனை இன்னும் கொஞ்சம் புலம்ப விட்டிருக்கலாமே' என்று நினைக்கிறார். உடனே தன் விருப்பத்தைத் தானே செயல்படுத்தி விடுகிறார். இப்படி ஏராளமான இடைச்செருகல் வேலை தமிழில் நடந்திருக்கிறது.

வெள்ளியம்பலத் தம்பிரான் என்னும் புலவர், பல பாடல்களை எழுதிப் பெரியபுராணத்தில் செருகியிருக்கிறார். அப்பாடல்களை இனம் கண்டு பிரித்து "வெள்ளி பாடல்கள்' என்று தனிப்படுத்திக் காட்டு வதுண்டு. அதேபோல, சீவக சிந்தாமணி காப்பியத்துள் கந்தியார் என்னும் புலவர் எழுதிச் சேர்த்த பல பாடல்கள் இருப்பதாகக் கூறுவர்.

உ. புலவர் ஒருவர் தான் எழுதிய நூல் ஒன்றைத் தன் பெயரில் வெளியிடாமல், ஏற்கெனவே பெரும் புகழ் பெற்று நிலைகொண்டுவிட்ட புலவர் ஒருவரின் பெயரில் வெளியிடும் மரபு. தான் எழுதியதிலேயே தன் பெயரைப் போட்டுக்கொள்ளாத இச்செயல் "தியாகம்' என்று தோன்றும். உண்மை அதுவல்ல. தன் பெயரைப் போட்டுக்கொண்டால் "போணி'யாகாது என்பதால் இந்த வேலை. தான் எழுதிய நூலின் தரத்தில் நம்பிக்கையில்லாத புலவர் அந்த நூலை ஏதாவதொரு விதத்தில் அடையாளப்படுத்த விரும்பியதின் விளைவு இது.

"ஞான வெட்டியான்' என்னும் நூல் திருவள்ளுவர் பெயரில் இருக்கிறது. காலத்தால் மிகவும் பிற்பட்ட இந்த நூலை எழுதியவர் யாரோ தெரியவில்லை. புகழேந்திப் புலவர் பெயரில் உள்ள நூல்கள் பல. குறிப்பாக நாட்டுப்புறக் கதைப் பாடல் வடிவில் எழுதப்பட்ட அல்லியரசாணி மாலை, புலந்திரன் களவு போன்ற புராணக் கதைகள் பல அவருடைய பெயரில் உலவுகின்றன.

ங. பழங்காலத்தில் வழங்கியதாகத் தகவல் மட்டும் தெரியும் நூலின் பெயரில் புதிய நூல் எழுதிப் பரப்பிவிடும் போலிநூல் மரபு. பொருளீட்டுவதற்காக அல்லது பழைய நூலைக் கண்டு பதிப்பித்தவர் என்னும் புகழைப் பெறுவதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டிருக்கலாம். தனிமனிதர் மட்டுமல்ல; சிலபேர் சேர்ந்து குழுவாகக்கூட இத்தகைய வேலைகளைச் செய்திருக்கின்றனர்.

இந்த நூற்றாண்டின் தொடக்கப் பகுதியில் செங்கோன் தரைச்செலவு, மூவடி முப்பது ஆகிய பழைய நூல்களைக் கண்டுபிடித்துவிட்டதாகப் புலவர் ஒருவர் அச்சிட்டுள்ளார். " ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்' என்று தொல்காப்பியப் பாயிரத்தில் வரும் தொடர் பற்றிக் கருத்து வேறுபாடுகள் உண்டு. "ஐந்திரம்' என்பது வடமொழி இலக்கண நூல் என்பர் சிலர். அது தமிழ் இலக்கண நூல்தான் என்பவரும் உண்டு. ஐந்திரம் என்பது நூலே அல்ல; அது ஒரு சிந்தனைக் குழு என்ற கருத்துக் கொண்டோரும் உள்ளனர். உலகத்தமிழ் மாநாடு ஒன்றின்போது "ஐந்திரம்' என்னும் பெயரில் தமிழ் இலக்கண நூல் ஒன்று வெளியிடப்பட்டது. பின்பு அது போலிநூல் என்று புறக்கணிக்கப்பட்டது. இத்தகைய "வளமான' மரபுகளைக் கொண்ட நம்மிடம் இலக்கியத் திருட்டு மரபு மட்டும் எப்படி இல்லாமல் போகும்? அதற்கு நேர் சான்றுகள் இப்போது நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால் எதிர்மறையான சான்று ஒன்றுண்டு. பிரபலமான திருவிளையாடல் கதையில் தருமி என்னும் புலவரின் செயலை நாம் அறிவோம். பிறிதொருவரின் பாடலைத் தன் பாடல் என்று சொல்லிப் பரிசில் பெறச் செல்கிறார் அவர். பாடியவரே கொடுத்தார் என்பது இங்கு விசயமல்ல. பிறர் பாடலைத் தன் பாடல் என்று சொல்வது இலக்கியத் திருட்டு அல்லாமல் வேறென்ன?

இலக்கியத் திருட்டு பற்றிய கருத்துகள் நம் மரபில் உள்ளன. "வச்சணந்தி மாலை' என்னும் இலக்கண நூல் புன்கவிஞர் நான்கு வகை என்று கூறுகிறது.

ஆரொருவன் பாக் களை ஆங்கொருவனுக்களிப்போன்
சோரகவி, சார்த் தொலியிற் சொல்லு மவன் - சீரிலாப்
பிள்ளைக் கவி சிறந்த பின்மொழிக் காம், புன்மொழிக் காம்
வெள்ளைக் கவிய தனின் வேறு.4
இதில் கூறப்படும் கவிஞர் வகையும் விளக்கமும் வருமாறு:

அ. சோரகவி: ஒருவன் பாடிய பாக்களை வேறொருவனுக்குக் கொடுப்போன் கள்ளக்கவி ஆவான். யாரோ ஒருவன் பாடிய பாடல்களைத் தன் பாடல்கள் எனக் கூறி (புரவலன்) ஒருவனிடம் வழங்குவோன் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

ஆ. சார்த்துகவி: ஏற்கெனவே ஒருவன் பாடியுள்ள பாடலின் சந்தத்தில் வேறொரு பாடல் புனைவோன் சார்த்துகவியாவான். இது "இடைச் செருகல்' புலவர்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இ. பிள்ளைக்கவி: சொந்தச் சிந்தனை ஏதுமின்றி முன்னோரை அப்படியே பின்பற்றுபவன் பிள்ளைக்கவி ஆவான்.

ஈ. வெள்ளைக்கவி: பொருத்தமற்ற சொற்களைக் கொண்டு கவி புனைவோன் வெள்ளைக்கவி ஆவான்.

சார்த்துகவி, பிள்ளைக்கவி, வெள்ளைக்கவி ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்கள் இங்கு வேண்டாம். சோரகவி எனப்படும் கள்ளக்கவி மரபை மட்டும் எடுத்துக்கொள்வோம். கள்ளக்கவி, சோரகவி ஆகிய சொற்களுக்குப் பிறர் பாடிய பாடல்களைத் தனதென்று கூறுபவன், ஒருவனுக்குப் பாடியுள்ளதை வேறொருவனுக்குக் கொடுப்போன், திருட்டுப் பாடல் என அகராதிகள் பொருள் தருகின்றன.5

பிறிதொருவன் பாடிய பாடலைத் தனதென்று கூறுபவனுக்குத் தருமி உதாரணம் என்றால், தான் பாடிய பாடலைப் பிறிதொருவன் பெயரில் வழங்க அனுமதித்ததற்கு இறையனார் (சிவபெருமான்) உதாரணமாகிறார். தமிழ் மரபிலக்கண வரையறைப்படி தருமி, சிவன் ஆகிய இருவருமே கள்ளக்கவிகள் தான். தமிழ் நெடுமரபில் வேறு சான்றுகள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பத்தொன்பதாம் நூற்றாண்டுச் சம்பவங்கள் சிலவற்றை இம்மரபில் பொருத்திப் பார்க்கலாம்.

உ. வே. சாமிநாதையர் எழுதிய "என் சரித்திரம்', "ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்' ஆகிய நூல்களைப் படித்தவர்களுக்கு அவற்றில் வரும் சில சம்பவங்கள் நினைவிருக்கலாம். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பாடல்கள் எழுதிப் பிறருக்குக் கொடுத்துவிடும் தாராள மனம் கொண்டவர். திருவாவடுதுறை மடத்துத் தலைவர் சுப்ரமணிய தேசிகரிடம் பரிசில் பெறவேண்டி வருவோர் பலர், மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம்தான் முதலில் வருவர். அவர் சுப்ரமணிய தேசிகரைப் புகழ்ந்து பாடல் இயற்றித் தருவார். வருவோர் அப்பாடலைத் தம் பாடலாகக்கொண்டுசென்று தேசிகர்முன் பாடிப் பரிசில் பெற்றுச் செல்வர்.

அவருடைய மாணவனாக இருந்தபோது சாமிநாதையருக்கே நெருக்கடியான நேரங்களில் இவ்விதமாக அவர் உதவிய சம்பவங்களும் உண்டு. இவை மட்டுமல்ல, தாம் இயற்றிய "குசேலோபாக்கியானம்' என்னும் நயம் மிகுந்த நூல் ஒன்றையே தம் மாணவரும் செல்வருமான "தேவராசப் பிள்ளை' பெயரில் போட்டுக்கொள்ளக் கொடுத்துள்ளார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை.

அதைப் பற்றி அவர் கூறும்போது, "தமிழ் சமஸ் கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளில் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலேயே வெளியிடுவது பழைய வழக்கந்தான்' என்கிறார்.6 இன்றும் "குசேலோபாக்கியானம்' தேவராசப் பிள்ளை பெயரில்தான் வழங்கி வருகிறது.

மாதை திருவேங்கடநாதர் என்னும் பார்ப்பன அமைச்சர் ஒருவர் பெயரில் "பிரபோத சந்திரோதயம்' என்றொரு நூல் உள்ளது. இந்நூல், திருவாரூர் வைத்தியநாத தேசிகர் ("இலக் கண விளக்கம்' இயற்றிய ஆசிரியர்) இயற்றிக் கொடுத்தது என்றொரு செய்தியும் கூறப்படுவதுண்டு.

எழுதியவர் சம்மதத்தோடு பிறருக்குக் கொடுக்கப்பட்டாலும்கூட இவையும் கள்ளக்கவி என்றுதான் தமிழ் மரபு கூறுகிறது. இவையே திருட்டு என்றால், எழுதியவருக்கே தெரியாமல் அவருடைய உழைப்பை, சிந்தனையைத் தம்முடையதாக்கிக் கொள்ளுவதை என்னவென்று கூறுவது? "திருட்டு' என்பதற்கும் மேலான சொல் ஒன்றைத்தான் தேடவேண்டும். இவ்வழக்கத்திற்குப் பழைய சான்றுகள் எதுவுமில்லை. எனினும் இம்மரபின் தொடர்ச்சி என்று கருதத்தக்க வகையில் இருபதாம் நூற்றாண்டுச் சான்றுகள் ஏராளமாய் உள்ளன.

குறிப்புகள்:
1. பசுவய்யா, 107 கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 1996, ப. 28.

2. ஏஹய்க்க்ஷர்ர்ந் ஊர்ழ் ரழ்ண்ற்ங்ழ்ள் ர்ச் தங்ள்ங்ஹழ்ஸ்ரீட் டஹல்ங்ழ்ள்ம் ஙகஅ, 1998, ட. 21

3. மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 11ஆம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1971, ப. 401.

4. மேற்கோள்: மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், 1970, ப. 217.

5. காண்க:
அ. எஸ். வையாபுரிப் பிள்ளை(ப.ஆ), தமிழ் லெக்சிகன், தொகுதி ஐஐ, சென்னைப் பல்கலைக்கழகம், மறுபதிப்பு, 1982, ப.806 மற்றும் தொகுதி ஐஐஐ, ப. 1674.

ஆ. மு.சண்முகப் பிள்ளை (தொ. ஆ), தமிழ் - தமிழ், அகரமுதலி, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை, 1985, ப. 292 மற்றும் ப. 521.

6. உ. வே. சாமிநாதையர், திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு, 1986, ப. 129.
***

மின் தமிழ் குழுமத்தில் இந்தக் கட்டுரையை அனுப்பிய அன்பருக்கு நன்றி.

4 comments:

Kavinaya said...

தமிழ்ல இல்லாத விஷயமே இல்லை என்பது உண்மைதான் போல :)

குமரன் (Kumaran) said...

ஆமாம் அக்கா. :-)

jeevagv said...

இச்செய்திகளை அறியத் தந்தமைக்கு நன்றிகள் குமரன்!
குறிப்புகளின் இரண்டாவது நூல் - ஒன்றுமே புரியவில்லையே?

குமரன் (Kumaran) said...

நன்றி ஜீவா.

ஓ. அது ஆங்கிலத்தில் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருங்குறியில் (யூனிகோடில்) மாற்றும் போது இப்படி வந்துவிட்டது.