Thursday, September 11, 2008

விவேகானந்தரின் சிகாகோ பேச்சின் ஆண்டு விழா!


1893ம் வருடம் இதே நாளில் தான் (செப்டம்பர் 11) சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் அனைத்துலக சமய மாநாட்டில் தன்னுடைய அருமையான உரையை நிகழ்த்தினாராம். இன்று தான் அதனை அறிந்தேன். மின் தமிழ் குழுமத்தில் 'கண்ணன் நடராஜன்' ஐயா அனுப்பியிருந்த மின்னஞ்சலின் மூலம். அவர் தினமணியிலிருந்து எடுத்து இட்டிருந்த கட்டுரை இன்றைக்குப் பொருத்தமான கட்டுரையாகத் தோன்றியது. அதனை இங்கே இடுகிறேன். நன்றிகள்.

***

சகோதர, சகோதரிகளே, (1893)

இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அங்கிருந்த பல்வேறு நாடுகளையும், பல்வேறு மதங்களையும் சேர்ந்த 6 ஆயிரம் பேர் அசைவற்று நின்றனர். அதுவரை அப்படியொரு வார்த்தையை அவர்கள் மேடைப்பேச்சில் கேட்டதே இல்லை.
சீமான்களே, சீமாட்டிகளே வார்த்தைகளுக்கு பழகிப் போன அவர்களது காதுகளுக்கு, அந்த வார்த்தை சற்றே அதிர்ச்சியையும், ஒருவித சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. முதல் வார்த்தையிலேயே அங்கு கூடியிருந்தவர்களை அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த நரேந்திரன் என்ற சுவாமி விவேகானந்தர், அடுத்து பேசிய வார்த்தைகளால் அனைவரையும் கட்டிப்போட்டார்.

காவி உடை தரித்து மேடையில் நிமிர்ந்த நெஞ்சுடன், நேர்கொண்ட பார்வையுடன் நின்றுகொண்டிருந்த இளைஞன் அன்று அனைவரையும் வசீகரித்தான். அந்த இளைஞன் பேச தொடங்கியதும், அங்கிருந்தவர்கள் அவரது குரல் வளத்துக்கும், வார்த்தைகளின் கருத்துச் செறிவுக்கும் தங்ளையே இழந்துவிட்டதாக அடுத்த நாள் அமெரிக்காவில் வெளியான பத்திரிக்கைகள் குறிப்பிட்டன.

1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம், இதே நாளில் சிகாகோவில் நடைபெற்ற உலக சர்வமத மாநாட்டில், கடைசியாக பேச சுவாமி விவேகானந்தர் அழைக்கப்பட்டபோது அவர் உரையை யாரும் கேட்பதற்குத் தயார் இல்லை என்ற தோரணையில் ஆங்காங்கு கூட்டமாக நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். ஆனால், அவர் சகோதர, சகோதரிகளே என்று பேச்சைத் தொடங்கியதும், நிசப்தம் ஏற்பட்டது. அனைவரது பார்வையும், எண்ணங்களும் விவேகானந்தரை நோக்கி செல்லத் தொடங்கியது.

அவர் பேசத் தொடங்கும் வரை, இந்தியா அறிவு இல்லாத மக்கள் வசிக்கும் நாடு, பொருளாதாரத்தில் மட்டுமன்றி அறிவிலும் ஏழைகளே அங்கு வசிப்பர், இந்து மதம் துறவறத்தை மட்டும் வலியுறுத்தும் என பலவாறு தாங்கள் நினைத்ததைப் பேசி வந்த மேலைநாட்டு மேதைகள் விவேகானந்தரின் உரையைக் கேட்ட பின்னர், தங்களது எண்ணத்தை மாற்றிக் கொண்டனர்.

பல நூற்றாண்டுகளாக இந்தியா மீதும், இந்து மதத்தின் மீதும் பிற நாட்டினர் வைத்திருந்த சில தவறான எண்ணங்களுக்கு, அவர் சில நிமிஷங்களிலே முடிவு கட்டினார்.

மற்ற மதங்களின் மதத் தலைவர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தை பற்றி உயர்வாகவும், அவர்கள் வணங்கும் இறைவனை பற்றி புகழ்ந்தும், தங்களது கலாசாரமே உயர்ந்தது என்றும் பேசிவிட்டுச் சென்றனர். ஆனால், விவேகானந்தர் இந்து மதத்தின் சகிப்புத்தன்மை, பகுத்தறிவு பற்றி பேசிவிட்டு, இறுதியாக இம்மாநாட்டில் ஒலிக்கும் மணி ஒலி, மத வெறிக்குச் சாவு மணியாக இருக்கட்டும் என்று கூறியபோது அனைத்து மதத் தலைவர்களையும் உணர்ச்சிவசப்படச் செய்து, ஒன்றுபடச் செய்தது.

அதன்பின்னர் நடைபெற்ற மாநாட்டுக் கூட்டங்களில், விவேகானந்தர் பேச்சைக் கேட்பதற்காகவே மக்கள் அதிகமாகக் கூடினர். விவேகானந்தர் பேச்சே 10 நாள் மாநாட்டின் பிரதானமாக இருந்தது.

மாநாட்டின் முன்புவரை இந்தியர்களுக்கு அறிமுகமாயிருந்த விவேகானந்தர், மாநாட்டிற்குப் பின்னர் உலகின் அனைத்து நாட்டினருக்கும் அறிமுகமானார். இந்தப் புகழை அவர் சாதாரணமாகவோ, எந்த கஷ்டமும் இல்லாமலோ பெற்றுவிட்டதாகக் கூறிவிட முடியாது.

சென்னையைச் சேர்ந்த அறிஞர்கள் சிலர் மற்றும் நண்பர்களின் வற்புறுத்தலாலும், முயற்சியாலும், சிகாகோவுக்கு அந்த ஆண்டு மே மாதம் கப்பலில் புறப்பட்ட விவேகானந்தருக்கு ஜூலை மாதம் சர்வமத மாநாடு என்று கூறப்பட்டு இருந்தது. சிகாகோவில் இறங்கிய விவேகானந்தருக்கு இடியேன ஒரு செய்தி கிடைத்தது. ஜூலை மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, செப்டம்பர் மாதம் தள்ளிப் போடப்பட்டிருந்தது.

குறைவான பணத்துடனே சென்றிருந்த விவேகானந்தருக்கு அந்த குளிர் பிரதேசத்தில் இரண்டு மாதங்கள் எங்கு தங்குவது, எங்கு சாப்பிடுவது என்ற பல பிரச்னைகள் எழத் தொடங்கின. ஒருவாறு, திடீரென அறிமுகமாகிய சில நண்பர்கள் வீட்டில் தங்கி, நாள்களை ஓட்டினார் விவேகானந்தர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பதிவுசெய்ய வேண்டிய தேதி முடிந்துபோன நிலையில், பின்னர் பதிவு செய்தவதற்காக அவர் ஒரு போராட்டமே நடத்த வேண்டியிருந்தது.

பலவாறு கஷ்டப்பட்டு மாநாட்டுக்குச் சென்ற விவேகானந்தர், ஒட்டுமொத்த பாரதத்துக்காகவே பேசினார். விவேகானந்தர் பேச்சுக்கு அடிமையாகிப் போன அமெரிக்கர்கள், மாநாட்டுக்குப் பின்னர் அவரை உடனே நாடு திரும்ப விடவில்லை. அமெரிக்கர்களின் அழைப்பை ஏற்று, அவர்கள் எங்கெல்லாம் பேச அழைத்தார்களோ, அங்கெல்லாம் பேசினார். தனது ஒவ்வொரு மேடைப் பேச்சுக்கும் அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பிரசங்கம் செய்துவிட்டு, பின்னர் இங்கிலாந்து உள்பட பல ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு 1897ம் ஆண்டு பாரதம் திரும்பினார். தாயகம் திரும்பிய விவேகானந்தர், முதல் வேளையாக பேலூரில் தனது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் பெயரில் ஒரு மடத்தை உருவாக்கினார். அந்த மடத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்ய, தனது சீடர்களை பணித்தார்.

இன்றுவரை அந்த மடத்தின் மூலம் அவரது சீடர்கள் பல்வேறு சமுதாயப் பணிகளைச் செய்து வருகின்றனர். அதோடுமட்டுமின்றி தற்போது நாடு முழுவதும் ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் கீழ் பல ஆயிரம் பள்ளிகளும், கல்லூரிகளும் இயங்கி வருகின்றன.


115 ஆண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர் இந்தியாவுக்கு ஏற்படுத்திய புதிய முகாந்திரம்தான் இன்றளவும் நமக்கு வெளிநாடுகளில் உள்ளது. இந்தவேளையில், விவேகானந்தரையும், அவரது கருத்துகளையும் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

கே. வாசுதேவன்

நன்றி: தினமணி

21 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்க நீ எம்மான் இந்த
வையத்து நாட்டில் எல்லாம்
தாழ்வுற்ற நின்ற தாமோர்
பாரத தர்மம் தன்னை
வாழ்விக்க வந்த சுவாமி
விவேகா நீ வாழ்க வாழ்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

விவேகானந்தரின் சிகாகோ பொழிவு - Youtube Video
http://madhavipanthal.blogspot.com/2008/01/youtube-video.html

குடுகுடுப்பை said...

செப்டம்பர் 11, விவேகானந்தர் சிகாகோவில் பேசிய தினமாக வருங்காலத்தில் உலக மக்கள் மத்தியில்
நிலைக்க இறைவனை வேண்டுவோம்

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றி இரவிசங்கர் & குடுகுடுப்பை.

குடுகுடுப்பைக்காரரே. நல்ல சேதிக்கு நன்றி.

கோவி.கண்ணன் said...

விவேகாநந்தரை எனக்கும் பிடிக்கும், சமூகத்திற்காக பாடுபட்ட பெரும் தலைவர்களையெல்லாம் சாதி சங்கங்கள் வரவேற்பரையில் மாட்டி வைத்திருப்பதைப் போல், இந்துத்துவ கூடாரத்தில் விவேகாநந்தர் படம் பார்க்கும் போது வருத்தம் ஏற்படுவது உண்டு. இவர்களின் குறியீடாக மாறிப்போனதால் வரும் காலத்தில் விவேகந்தரின் போதனைகள் வெளியே செல்லாமால், விவேகநந்தர் ஒரு இந்துவெறியன் என்று இந்துக்கள் நினைக்காவிட்டாலும் பிற மதத்தினர் நினைக்கும் படி ஆகிவிடும். விவேகநந்தரை மதவெறியர்களிடமிருந்து மீட்டு எடுக்க வேண்டியது, விவேகநந்தரை நேசிக்கும் ஒவ்வொருவரது கடமை என்றே நான் கருதுகிறேன்.

Kavinaya said...

விவேகானந்தரைப் பற்றிப் படிக்கையில் ஓடும் சிலிர்ப்பும் பெருமிதமும் - சொல்ல வார்த்தைகள் இல்லை. பகிர்தலுக்கு நன்றி குமரா.

கண்ணா, நீங்க கவிதை எழுதிட்டதால நான் எழுதல :)

RATHNESH said...

சரியான நேரத்தில் விவேகாநந்தரை நினைவு கூர்ந்ததற்குப் பாராட்டுக்கள்.

வெளிஉலகில் நம் தர்மம் குறித்து நல் அபிப்ராயத்தை ஏற்படுத்திய அந்த நிஜத் துறவி உள்வீட்டிலும் ஏகப்பட்ட ஒட்டடை இருப்பதைச் சுட்டிக் காட்டி அவற்றை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியவர்.

என்ன காரணத்தினாலோ நாம் அவருடைய "sisters and brothers of united states of america"வுக்குக் கிடைத்த கைதட்ட்லிலேயே செவிடாகிப் போய் விட்டோம்

சிவமுருகன் said...

Sisters and Brothers of America என்றவுடன் எனவானது?
கைதட்டல் ஓய 5 நிமிடமானது!

பிறகே ஆரம்பித்தார் சுவாமிஜி. ஜூலை மாதம் சென்றார் என்பது எனக்கு புதிய செய்தி.

இப்பிரசங்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டம் கடந்த 1993 ல் நடந்தது அப்போது எனது (எட்டாம்) வகுப்பிலிருந்து 5 பேர் இச்சொற்பொழிவை பேசினர்! அத்தோடு பாரதியின் பகைவனுகருள்வாய் பாடலும் பாடினர்! நல்ல நாள் நல்ல பதிவு,

நன்றி.

VSK said...

//பெரும் தலைவர்களையெல்லாம் சாதி சங்கங்கள் வரவேற்பரையில் மாட்டி வைத்திருப்பதைப் போல், இந்துத்துவ கூடாரத்தில் விவேகாநந்தர் படம் பார்க்கும் போது வருத்தம் ஏற்படுவது உண்டு//

அப்படி இவர் படத்தை மற்றவர்கள் மாட்டததற்குத்தான் வருந்தணும்.

அது சரி! அது புரிஞ்சா ஏன் இப்படியெல்லாம் பேசப் போறாங்க!

இலவசக்கொத்தனார் said...

இங்க அந்த பேச்சோட ஒலிப்பதிவு இருக்காம். பாருங்க.

rapidshare.com/files/107524625/Swami_Vivekananda_-_0001.mp3
rapidshare.com/files/107524626/Swami_Vivekananda_-_0002.mp3

Geetha Sambasivam said...

Attendance only! :))))))

குமரன் (Kumaran) said...

நீங்கள் சொல்வது போல் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது கோவி.கண்ணன். பெரியார் சொன்னதையும் செய்ததையும் படிக்காமல் அவர் வழியில் நடக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவர் படத்தை மாட்டிக் கொள்ளுபவர்கள் செய்வதை வைத்து அவரை வெறுப்பவர்கள் இருக்கிறார்களே. அது போல் என்று சொல்கிறீர்கள். சரியா?

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

குமரன் (Kumaran) said...

//வெளிஉலகில் நம் தர்மம் குறித்து நல் அபிப்ராயத்தை ஏற்படுத்திய அந்த நிஜத் துறவி உள்வீட்டிலும் ஏகப்பட்ட ஒட்டடை இருப்பதைச் சுட்டிக் காட்டி அவற்றை சுத்தம் செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியவர்.//

இந்தச் சொற்கள் உங்கள் உண்மையான உணர்வைக் காட்டுகின்றன என்று நினைக்கிறேன் இரத்னேஷ். சரி தானே?

இந்த எண்ணம் கொண்டவர் நீங்கள் என்பதால் தான் உங்கள் கிண்டல் பதிவுகளைப் படித்து மனம் வருந்தாமல் அதில் உள்ள செய்திகளை மட்டுமே பலர் எடுத்துக் கொள்கிறார்கள் போல - நான் உட்பட பலர் அந்தக் கூட்டத்தில் உண்டு.

//என்ன காரணத்தினாலோ நாம் அவருடைய "sisters and brothers of united states of america"வுக்குக் கிடைத்த கைதட்ட்லிலேயே செவிடாகிப் போய் விட்டோம்//

இப்படி சொல்லத் தொடங்கினால் நிறைய சொல்லலாம். ஆனால் அது தான் இயல்பான உண்மையாக இருக்கிறது. நல்லவற்றைச் சொன்னவர்களைப் புகழ்ந்துவிட்டு அவர்கள் சொன்னதை மறந்துவிடுகிறோம். :-)

குமரன் (Kumaran) said...

ஜுலை இல்லை சிவமுருகன். செப்டம்பர் 11.

நீங்களும் அந்த ஐவரில் ஒருவரோ?

குமரன் (Kumaran) said...

பலரும் பின்பற்ற வேண்டியவர் தான் விவேகானந்தர். தங்கள் கருத்திற்கு நன்றி எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

பேச்சின் சுட்டிகளுக்கு நன்றி கொத்ஸ்.

குமரன் (Kumaran) said...

வருகைக்கு மிகப்பெரிய நன்றி கீதாம்மா. :-)))))

கோவி.கண்ணன் said...

//பெரியார் சொன்னதையும் செய்ததையும் படிக்காமல் அவர் வழியில் நடக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு அவர் படத்தை மாட்டிக் கொள்ளுபவர்கள் செய்வதை வைத்து அவரை வெறுப்பவர்கள் இருக்கிறார்களே. அது போல் என்று சொல்கிறீர்கள். சரியா?//

பெரியாரின் கொள்கைகளின் தற்கால தேவை குறைவுதான். பெண்களெல்லாம் விழிப்புணர்வு அடைந்துவிட்டார்கள், இனி யாரையும் ஜாதி சொல்லித் திட்ட முடியாது. பெரியாரைப் பயன்படுத்துபவர்கள் அரசியலுக்குத் தான் என்று அனைவருக்குமே தெரியும். நான் கூட பெரியார் ஒரு 'நாத்திகன்' என்று சொல்லியே வளர்க்கப்பட்டேன். தெரியவேண்டியவர்களுக்கு தெரிந்தால் போதும் என்று நீங்களும் விவேகந்தர் பற்றி நினைத்தால் உங்கள் கருத்து சரியே.

Anonymous said...

//இங்க அந்த பேச்சோட ஒலிப்பதிவு இருக்காம். பாருங்க. //

ஐயா அந்த குரல் விவேகானந்தருடையது அன்று. சிகாகோ உரை பதிவு செய்யப் படவில்லை என ராமகிருஷ்ன மடத்தின் பிரசுரத்தில் படித்துள்ளேன்.

இன்டர் நெட்டில் தேடியதில்...

That voice does not belong to Swamiji.
Yes, in all possibility, that is of Prof. N. Viswanathan, famous professor in english of St. Xaviers College, Kolkata (Calcutta), India.We have been listening this very appropriate and enchanting voice of this professor, since last 35 years, at least.

The same fact was confirmed, few years back, by, the then editer of Udbodhan Patrika, Bengali Magazine started by Swami Vivekananda himself,109 years ago, and still in circulation, without any break (http://www.udbodhan.org). The voice belong to Prof. Narayanswami Viswanathan only.

நன்றி: Kalhan Sanyal

KRS சொன்ன Youtube Video விலும் இதே குரல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

குமரன் (Kumaran) said...

தகவலுக்கு நன்றி தெனாலி.