இந்த இடுகையோடு இது வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எல்லாம் விடை சொல்லிவிட்டேன். இனி மேல் 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' என்று ஒரு இடுகை இட்டுத் தான் கேள்விகளை வாங்க வேண்டும். :-)
முதலில் வடகரை வேலன் கேட்ட கேள்வியைப் பார்ப்போம்.
தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை வேறு ஒருவராக இடம் மாறி வாழ வாய்ப்பு கிடைத்தால் யாராக மாற ஆசைப்படுகிறீர்கள்?
இதென்ன கேள்விங்க? ரொம்ப பொதுவா கேட்டுபுட்டீங்க? சரி. பதில் சொல்ல முயல்கிறேன்.
தற்போது வாழும் வாழ்க்கையை அப்படியே வாழத்தான் ஆசை. நீங்களும் அது மாறணும்ன்னு சொல்லலை போல. அது மாறாம ஆளு மட்டும் மாறணும்ன்னா உடல் மட்டும் மாறுதுன்னு சொல்லுங்க. அது எனக்குப் பொருத்தம் தான். ரொம்ப குண்டா இருக்கேன்னு தெரியுது. ஆனா நாக்கைக் கட்டுப்படுத்தி சாப்பாட்டைக் குறைக்க முடியலை; உடற்பயிற்சியும் செய்யுறதில்லை. அதனால இன்னொருவருடைய உடல் எனக்குக் கிடைக்கணும்ன்னு நான் நினைக்கிறது உண்டு. அந்த உடல் 'இதுவரைக்கும் நன்கு உழைத்து இனிமேல் எந்த உயற்பயிற்சியும் செய்ய வேண்டாம் என்ற வகையில் உடல் இருகிப் போயிருக்கும் யாரோ ஒருவருடைய உடல்'. அம்புட்டுத் தான். :-)
***
இப்ப தேவராஜன் ஐயா கேட்ட கேள்வி:
அன்பரே, சங்க நூல்களில் காணப்படும் தெய்வ வழிபாடு, புராணச் செய்திகள் குறித்த பதிவெல்லாம் எங்கிருந்து பெறலாம்?
நிறைய புத்தகங்கள் இருக்கின்றன என்று நினைக்கிறேன் ஐயா. குறிப்பாக முனைவர் திரு. பி.எஸ். சோமசுந்தரன் அவர்கள் எழுதிய 'முக்கண்ணனும் முகில்வண்ணனும்' என்ற நூலில் முதலத்தியாயங்களில் சங்க இலக்கியத்தில் இருக்கும் இரு பெரும் தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். இந்த நூல் சென்னை தி.நகரில் இருக்கும் பல பதிப்பகங்களிலும் கிடைக்கின்றது. வேறு நூற்களும் பதிவுகளும் இருக்கின்றதா என்று தெரியவில்லை. ஹரியண்ணாவின் (திரு. ஹரிகிருஷ்ணன்) சில நூற்களை கிழக்கு பதிப்பகம் சில நூற்களை வெளியிட்டிருக்கலாம். இணையத்தில் அப்படி தொகுக்கப்பட்டவை இருக்கின்றதா தெரியவில்லை.
அடியேன் அந்த முயற்சியில் இருக்கிறேன். இந்தப் பதிவின் வலப்பக்கத்தில் இருக்கும் வகைகளில் 'இலக்கியத்தில் இறை' என்ற வகையைப் பிடித்துச் சென்றால் இதுவரை இந்த முயற்சியில் வந்த இடுகைகளைப் படிக்கலாம். இந்த முயற்சி தொடர்கின்றது.
***
இனி சங்குமுகம் கேட்ட கேள்வி:
இந்து மதத்தில் உள்ள எல்லாத் தெய்வங்களைப் பற்றியும் பக்தி சிரத்தையாக எழுதுகிறீர்கள். படிக்கும் எனக்கு இவருக்கு சாமியே கிடையாதா என்பதுவே.
இப்படி எல்லாசாமிக்கும் அரோகரா போட்டால், எந்த சாமிதான் உங்களை நம்புவார்?
Hinduism does have polytheism at lower levels. It says as man grows up in his spirituality, he reaches a level of having one Ultimate Reality, the Supreme Being, nameless and formless.
If you continue with polytheism, does it not indicate that you are still at the lowest level of polytheism!
You could clarify.
உங்கள் கேள்விகளுக்குப் பல நிலைகளில் பதில் சொல்லவேண்டும். ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.
என் பெயர் குமரன். என் பெற்றோர் 'மகனே' என்று அழைக்கிறார்கள்; என் மக்கள் 'அப்பா' என்று அழைக்கிறார்கள். என் மாமனார் 'மாப்பிள்ளை' என்று அழைக்கிறார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். நான் குமரனா மகனா அப்பாவா மாப்பிள்ளையா? எல்லாமும் தானே. இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பதால் நான் வெவ்வேறு ஆளாகிவிடுவேனா?
இந்து மதம் என்று இன்று அறியப்படும் மதத்தில் பலவிதமான நம்பிக்கைகளும் சமயங்களும் இருக்கின்றன. அவை சொல்லும் கடவுளர்கள் மட்டுமின்றி வேறு மதங்கள் என்று அறியப்படும் கிறிஸ்தவம், இஸ்லாம், சமணம், பௌத்தம், பார்சி என்று பல மதங்களும் சொல்லும் கடவுளர்களும் எனக்கு வணங்கத் தக்கவர்களே. அவர்களைப் பற்றியும் எழுதுவேன். அப்படி பலவித உருவங்களும் பெயர்களும் ஒருவருக்கே என்பதில் எந்த வித ஐயமும் எனக்கு இல்லை என்பதால்.
எல்லா உருவங்களும் பெயர்களும் ஒருவருடையதே என்னும் போது எந்தப் பெயரில் அழைத்தால் என்ன எந்த உருவத்தை வணங்கினால் என்ன அந்த ஒருவர் தானே குறிப்பிடப்படுகிறார். அப்படி இருக்கும் போது 'எல்லா சாமிகளுக்கும் அரோகரா போட்டால் எந்த சாமி தான் உங்களை நம்புவார்' என்ற கேள்வி பொருளற்றது. :-)
(எல்லா சாமிகளுக்கும் அரோகரா போடுகிறேனே. நீங்கள் இடம் மாற்றி வந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். முருகனுக்கும் அண்ணாமலையாருக்கும் அரோகரா போட்டிருப்பேன். வேறு இறைப்பெயர்களுக்கும் 'அரோகரா' போடுவது எங்கள் இரவிசங்கர் கண்ணபிரான் மட்டுமே. :-) அவர் தான் 'ஏடுகொண்டலவாடா வேங்கடரமணா அரோகரா' என்று சொல்லுவார். இன்னொரு நண்பரும் சொல்லுவார் - ஆனால் அவர் அதனைச் சொல்லும் போது அதற்கு வேறு பொருள். :-) )
இந்து மதம் என்பது பல விதமான நம்பிக்கைகளை உடையது என்று சொன்னேன். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். 'பல கடவுளர்களை வணங்குவது கீழ்நிலை; ஒரே இறைவனை வணங்குவது மேல்நிலை' என்று சில இந்து மதப் பிரதிநிதிகளாக எண்ணப்படும் சில பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் என்பதை அறிவேன். அதனைத் தான் நீங்கள் இங்கே சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அந்தப் பெரியவர்கள் கருத்துப்படி நான் கீழ் நிலையில் இருப்பவனாக இருக்கலாம்; அன்றி எல்லா பெயர்களும் உருவங்களும் ஒரே இறையுடையதே என்ற புரிதல் இருப்பதால் மேல் நிலையில் இருப்பவனாக இருக்கலாம். தற்போதைக்கு எந்த நிலையில் இருக்கிறேன் என்று அறிவதில் ஆர்வம் இல்லை; கவலையும் இல்லை. 'பல கடவுளர்களை வணங்குவது கீழ் நிலை; ஒரே கடவுளை வணங்குவது மேல் நிலை' என்ற கருத்தில் முழு ஒப்புதலும் இல்லை. :-)
கீழ் நிலை என்று சொல்லப்படுவதில் இருக்கும் பெயர், உருவம், குணம் இவற்றை அனுபவித்திலேயே என் மனம் இப்போது ஈடுபட்டிருக்கிறது. பெயரில்லா உருவமில்லா குணமில்லா இறை சுவைக்கவில்லை. என்னுடைய 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதையைப் படித்துப் பாருங்கள். வலப்பக்கத்தில் 'வகைகள்' என்ற தலைப்பின் கீழ் சுட்டி இருக்கின்றது. அந்தக் கதையில் கதைப்போக்கில் என் கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன்.
***
என்ன நண்பர்களே. அடுத்த இடுகையாக 'கேள்விகள் வரவேற்கப்படுகின்றன - 2' போட்டுவிடவா? கேள்விகளைக் கேட்பீர்களா? :-)
32 comments:
வடகரை வேலன் மட்டுமே தன் படத்தை ப்ரொபைலில் வைத்திருந்தார். மற்ற இருவருக்கும் அவரவர் பெயரைப் படித்தவுடன் எனக்கு என்ன நினைவிற்கு வருகிறதோ அந்தப் படங்களை இட்டிருக்கிறேன். :-)
//மற்ற இருவருக்கும் அவரவர் பெயரைப் படித்தவுடன் எனக்கு என்ன நினைவிற்கு வருகிறதோ அந்தப் படங்களை இட்டிருக்கிறேன். :-)
//
ஹா ஹா ஹா!
இப்படி இட்டதால் அவர்கள் உண்மையான படங்களும், களையான முகமும் நீங்கள் போட்ட படத்திற்கு ஏற்றாற் போல் மாறி விடுமா என்ன? :)
தேவராஜன் ஐயா பேரைக் கேட்டால் உங்களுக்கு யானை மேல் தேவேந்திரன் நினைவுக்கு வராரு! எனக்கு யானை மலை (அத்தி கிரி, காஞ்சிபுரம் தேவராஜப் பெருமாள் நினைவுக்கு வராரு!
அதுக்காக தேவராஜன் ஐயா, அவர் காரை வித்துப்போட்டு, யானை மேல் வர முடியுமா என்ன? :)
அதே போல் எல்லாச் சாமிக்கும் விதம் விதமான அரோகரா போட்டாலும், நம் மனத்துக்குத் தான் அந்த அரோகரா!
எங்க அம்மாவை, அவங்க மாமியார் ஏம்புள்ள என்று அழைப்பார்கள்! அப்பா என்னம்மா என்பார்! பக்கத்து வீட்டுக்காரம்மா பேர் சொல்லிக் கூப்புடுவாங்க! எதிர் வீட்டு அக்கா, சங்கரம்மா-ம்பாங்க! அந்த அக்காவின் சகோதரர்கள் எல்லாம் டீச்சரக்கா-ம்பாங்க!
இத்தனை பேரையும் நானும் தங்கையும் சொல்லிச் சொல்லி அம்மாவை ஓட்டுவோம்! "லொள்ளு" பண்ணுவோம்! அவிங்களும் சிரிப்பாங்க!
ஆனாத் தான் யாரு-ன்னு குழம்பாமத் தெளீவாத் தான் இருப்பாங்க! "ம்மா"-ன்னு கூப்பிட்டா, எங்கிருந்தாலும் ஓடியாருவாங்க! கூப்பிடாமலே இருந்தாலும், என்ன கோபமோ என்னவோ-ன்னும் ஓடியாருவாங்க! :)
தாயாகித் தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம்!
தன்னை நிகர் இல்லாத தனித் தலைமைத் தெய்வம்!
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்!
(என்) சித்-சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்!
இறைவனை எத்தனை உருவங்களாக, அல்லது உருவமில்லாதவனாக வழி பட்டாலும், அவன் ஒருவனே என்பதை மனதில் உணர்ந்திருந்தால் போதுமானது - என்பது என் கருத்து.
படமெல்லாம் கற்பனை வளத்தோட போட்டிருக்கீங்க :)
//பெயரில்லா உருவமில்லா குணமில்லா இறை சுவைக்கவில்லை. //
:-) நான் கொஞ்சம் சேர்க்கவா குமரன்?
//It says as man grows up in his spirituality, he reaches a level of having one Ultimate Reality, the Supreme Being, nameless and formless.//
இங்கே, அவரவர் வளர்வது, என்பது மத, சமய சடங்குகளில் மட்டுமே. ஒன்றே இறைவன் என்பது படிப்பறிவால் அறிந்திருப்பது மட்டுமே, பிரம்ம ஞானத்தினை அடைந்திட அது உதவாது என நினைக்கிறேன். அதற்கு அவரவர் இதயத்தில் இறை அன்பு ஊறிடல் வேண்டும். அவரவர் உள்ளம் குழைந்து உருகிட வேண்டும். அதற்கு உருவம் பெரிதும் உதவுகிறதென்பேன். அந்த உருவத்தைக் கொண்டே, அந்த இறையயே பரம்பொருளாக அடைந்திடவும் இயலும் என நினைக்கிறேன்.
Here, growing up is only in the sense of the acquiring knowledge of religion, spiritual rituals and so on. But these are simply NOT enough to reach the level of The one Ultimate Reality. For that, a heart full of Love for God needs to be developed. And that can be developed by acquiring a personal god. And that personal God can transcend to the Ultimate Reality.
//Hinduism does have polytheism at lower levels. //
There is NO polytheism in India says Swami Vivekananda:
http://www.youtube.com/watch?v=UPCGixTpa6E
அடியேன் ஒரு வரியில் சொன்னதை மிக அருமையாக விரித்துச் சொன்னதற்கு மிக மிக நன்றி ஜீவா.
//பிரம்ம ஞானத்தினை அடைந்திட அது உதவாது என நினைக்கிறேன்.//
அப்படி என்றால் என்ன ? - படைப்பின் ரகசியமா ?
//பிரம்ம ஞானத்தினை அடைந்திட அது உதவாது என நினைக்கிறேன்.//
அப்படி என்றால் என்ன ? - படைப்பின் ரகசியமா ?
ரொம்ப தெளிவான பதில்கள் குமரன். :)
நன்றாக கூறி இருக்கிறீர்கள் கடவுள் பற்றி
For that, a heart full of Love for God needs to be developed. And that can be developed by acquiring a personal god. And that personal God can transcend to the Ultimate Reality.
வழிமொழிகின்றேன், அருமை!!!
கட்டாயம் அவர்கள் முகங்கள் மாறாது தான் இரவிசங்கர். :-)
எனக்கும் அத்திகிரியான் நினைவிற்கு வந்தான் இரவி. ஆனால் அவனைப் பாடும் போது 'கஞ்சி வரதப்பா'ன்னு பாடுறதே நல்லா இருக்கு. தேவராஜன் என்றால் தேவேந்திரன் இங்கே இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. :-)
நன்றி கவிநயா அக்கா. :-)
ஒரு தடவை கேட்டா நான் பதில் சொல்ல மாட்டேன்னு நினைச்சு ரெண்டு தடவையா கேட்டீங்களா கோவி.கண்ணன்? :-)
எதை அறிந்துவிட்டால் எல்லாம் அறிந்ததாகுமோ எதை அறிந்துவிட்டால் வேறு எதுவும் அறியத் தேவையில்லையோ எதை அடைந்துவிட்டால் எல்லாம் அடைந்ததாகுமோ எதை அடைந்துவிட்டால் வேறு எதுவும் அடையத் தேவையில்லையோ அது பிரம்ம ஞானம் என்று சொல்லலாம் கண்ணன். அப்படி ஒன்று இருக்கிறதா என்றும் அதனை வரையறுத்துச் சொல்லுங்கள் அடுத்த கேள்விகள் கேட்டால் என்னிடம் சொல்ல விடையில்லை. :-)
அதன் பெயர் படைப்பின் மறைபொருள் என்று சொன்னாலும் சரியே. சொற்பொருள் விளக்கத்தின் படி 'பிரம்மம்' என்றால் பெரியது; 'ஞானம்' என்றால் அறிவு. 'மிகப்பெரும் அறிவு = பிரம்ம ஞானம்'; 'மிகப்பெரியதைப் பற்றிய அறிவு = பிரம்ம ஞானம்'; 'மிகப்பெரியதின் அறிவு = பிரம்ம ஞானம்'. இறைவன் மிகப்பெரியவன் என்று சொல்லுவதை வெவ்வேறு மொழியில் சொல்லும் போது அது 'பிரம்மமே இறைவன்' என்று ஒரு மொழியிலும் 'அல்லாஹு அக்பர்' என்று இன்னொரு மொழியிலும் 'God is Great' என்று இன்னொரு மொழியும் சொல்வதாகச் சொல்லலாம்.
நன்றி மௌலி. :-)
நன்றி கிரி.
வாங்க கம்பிம்மா. நான் சொன்னது எதுவும் சகிக்கவில்லைங்கறதால தானே ஜீவா சொன்னதை மட்டும் வழிமொழியுறீங்க. சரி சரி புரியுது புரியுது. எப்படியோ வந்துட்டுப் போனதைச் சொன்னதுக்கு நன்றி. :-)
ஏன் எல்லாரும் உங்க கிட்ட ஆன்மீகம் சாமின்னே கேள்வி கேட்கறாங்க? கலாட்டா பண்ணும் குமரனை இவர்களுக்குத் தெரியலை. தொடர்ந்து ரெண்டு கிண்டல் போஸ்ட் போடுங்க.
//எதை அறிந்துவிட்டால் எல்லாம் அறிந்ததாகுமோ எதை அறிந்துவிட்டால் வேறு எதுவும் அறியத் தேவையில்லையோ எதை அடைந்துவிட்டால் எல்லாம் அடைந்ததாகுமோ எதை அடைந்துவிட்டால் வேறு எதுவும் அடையத் தேவையில்லையோ அது பிரம்ம ஞானம் என்று சொல்லலாம் கண்ணன்.//
ஐயையோ...ஐயையோ ... இவ்வளவு சிக்கலானாதா ?
கடந்த 4 - 5 நூற்றாண்டுகளில் அதை அடைந்தவர்கள் யார் ? அவர்களில் யாரும் குறிப்பு எழுதி தாங்கள் அடைந்ததாக சொல்லி இருக்கிறார்களா ?
கண்டவர் விண்டிலர் னு சொல்லுவாங்களே அதுவா ?
பிரம்மமே இறைவன் என்கிறீர்கள்.
பிரம்மம் - அதாவது எங்கும் இருப்பது...இறைவன் தனித்து (அப்படி இருப்பதால் அதற்கு தனிப்பெயர்) இருப்பது இரண்டும் எப்படி ஒன்றாகும் ?
எல்லாமே அது ன்னு சொல்வது கிட்டதட்ட இறைமறுப்பு மாதிரிதான். மேலான சக்தி எதுவும் இல்லை, எல்லாம் அதுவே என்பது போல். இறைவன் என்றால் மேலான சக்தி என்பார்கள், நீங்களும் நானும் ஒண்ணு நாம சேர்ந்தது பிரம்மம் என்றால் நமக்கு மேலான சக்தி எதுவும் இல்லை. பிரம்மம் பற்றி பேசுவது கிட்டதட்ட கடவுள் மறுப்பு மாதிரித்தான் தெரிகிறது, 'கடவுள் இல்லை' என்கிற சொல்லுக்கு ஆன்மிகச் சொல் 'பிரம்மம்' ! சரியா ?
கலாட்டா பண்ணும் குமரனா? வேற யாரையோ பத்தி பேசுறீங்க போலிருக்கு கொத்ஸ். :-)
நீங்க கேளுங்க கொத்ஸ். கிண்டல் இடுகை போட்டா தான் நீங்க கேள்வி கேப்பீங்களா? :-)
கோவி.கண்ணன்.
எல்லாவற்றையும் சொல்லில் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் எந்த வகையில் உணர்கிறீர்கள் என்பதை முழுவதும் சொல்லில் சொல்லிவிட முயன்று தோற்றதுண்டா? அந்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். உங்களுக்கும் கட்டாயம் இருக்கும்.
அப்படி இருக்க இறை என்ற ஒன்றைப் பற்றி சொல்லிப் புரிய வைக்க முயல்வதும் அதனை இன்னொருவர் சொல்லிப் புரிந்து கொள்ள விழைவதும் குழந்தை விளையாட்டு தான் போலும்.
பிரம்ம ஞானம் என்றால் என்ன என்று கேட்டீர்கள். படித்ததைச் சொன்னேன். அது அவ்வளவு சிக்கலானதா என்கிறீர்கள். என்ன சொல்வேன் அதற்கு?
நீங்களும் நானும் பல விதயங்களைப் படிக்கிறோம். பலவிதங்களில் புரிந்து கொள்கிறோம். பல அனுபவங்களைப் பெறுகிறோம். அவற்றின் மூலமெல்லாம் என்ன புரிகிறதோ அதுவே புரியட்டும். ஒத்த படிப்பும் எதைப் படிக்க வேண்டும் என்பதில் ஒத்த ஆர்வமும் ஒத்த புரிதலும் ஒத்த அனுபவமும் இருக்கும் போது பேசுவது எளிது. ஒவ்வொருவர் ஒவ்வொரு தளத்தில் நின்று பேசும் போதும் கேட்கும் போதும் அது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. சில அன்பர்கள் பொறுமையின் சிகரங்களாக இருக்கிறார்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் பேசுகிறார்கள். எனக்கு அந்த பொறுமை இல்லை. அதனால் பல முறை விலகி விடுகிறேன்.
பிரம்மம் எங்கும் இருப்பது; இறைவன் தனித்து இருப்பது என்பதோர் வரையறை செய்கிறீர்கள். அது எந்த வகையிலான வரையறை என்று எனக்குப் புரியவில்லை. பிரம்மமும் இறையும் ஒன்றே என்ற புரிதலில் தான் நான் இருக்கிறேன். தனித்து இருப்பது என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. எங்கும் இருக்கும் பிரம்மமான இறையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதைத் தான் தனித்து இருப்பது என்கிறீர்களா? அப்படி என்றால் எங்கும் இருக்கும் பிரம்மமும் தனித்து இருக்கும் இறையும் ஒன்றே ஆக இருப்பதில் என்ன தடை என்று புரியவில்லை.
எல்லாமே இறை தான் என்பதில் எப்படி இறை மறுப்பு வருகிறது என்றும் புரியவில்லை. எல்லாம் அதுவே என்பது எப்படி மேலான சக்தி இல்லை என்று சொல்வதாகும் என்றும் புரியவில்லை. நான், நீங்கள், இவ்வுலகம், அண்டம் எல்லாமுமே இறை என்றால் அது எப்படி மேலான சக்தி இல்லை என்று சொல்வதாகும் என்றும் புரியவில்லை.
இப்படி ஒருவருக்கொருவர் பேசுவது புரியாமல் போகும் போது பேசுவதைத் தொடரத் தான் வேண்டுமா? நான் உங்களைத் தவிர்க்கவும் விரும்பவில்லை; அலட்சியப்படுத்தவும் விரும்பவில்லை. ஆனால் ஒருவருக்கொருவர் பேசுவது புரியாமல் போகும் போது தொடராமல் இருப்பதே இருவர் நேரத்துக்கும் நல்லது என்று நினைக்கிறேன். அவ்வளவு தான்.
இனி மேலும் தொடர்ந்து கேளுங்கள். நீங்கள் கேட்பது என்னவென்று புரிந்தால் பதில் சொல்கிறேன் - என் அரைகுறைப் புரிதலை மட்டும் வைத்துக் கொண்டு. அதில் ஏதேனும் புரிந்தால் தொடர்ந்து கேளுங்கள். நானும் முடிந்தவரை சொல்கிறேன். முடியவில்லை என்றால் அதனையும் சொல்கிறேன். வருந்தவேண்டாம்.
ஊனில் மேய ஆவி நீ உறக்கமோடு உணர்ச்சி நீ
ஆனில் மேய ஐந்தும் நீ அவற்றுள் நின்ற தூய்மை நீ
வானினோடு மண்ணும் நீ வளங்கடற் பயனும் நீ
யானும் நீ அதன்றி எம் பிரானும் நீ இராமனே
- திருமழிசையாழ்வார்.
உடலில் இருக்கும் உயிரும் நீ. உறக்கத்தோடு விழிப்பும் நீ. புலன்களாக நிற்கும் ஐம்பொருள்களும் நீ. அவற்றுள் இருக்கும் தூய்மை நீ. வானும் நீ. மண்ணும் நீ. கடலும் நீ. அதன் வளங்களும் பயன்களும் நீ. யானும் நீ. அதோடு மட்டும் இன்றி என் தலைவனும் நீ இராமனே.
Thank u Sir!!
Da name 'Devaraja' befits both Indra & Vishnu.
'Deva' denotes "nithya suri" also.
Dev
நன்றி குமரன்.
தற்போது வாழும் வாழ்க்கையை அப்படியே வாழத்தான் ஆசை
நான் எதிர் பார்த்த பதில் இதுதான்.
நம்மைப் பத்தி நமக்கே உயர்வான எண்ணம் இல்லைன்னா மத்தவங்க எப்படி மதிப்பாங்க.
என்னடா யாருக்கு எழுதினோமோ அவர்களை இன்னும் காணவில்லையே என்று எண்ணிக் கொண்டிருந்தேன். வந்ததற்கு நன்றி தேவராஜன் ஐயா & வடகரை வேலன்.
உண்மை தான் தேவராஜன் ஐயா. திவ்யபிரபந்த உரைகளில் எல்லாம் வானோர் என்று வரும் போதெல்லாம் திவ்ய சூரிகள் என்று தான் பொருள் உரைத்திருக்கிறார்கள்.
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது தேசமோ திருவேங்கடத்தானுக்கு
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் என் கண் பாசம் வைத்த பரஞ்சுடர்சோதிக்கே
நித்யர்களான திவ்ய சூரிகளுக்கு அவன் தலைவன் என்பேன். அதுவா பெருமை திருவேங்கடத்தானுக்கு? இல்லவே இல்லை. நீசனும் நற்குணங்கள் ஒன்றும் இல்லாதவனும் ஆன என் மேலும் பாசம் வைத்தானே அந்த பரஞ்சுடர்சோதி அந்த நீர்மை தானே அவனுக்கு பெருமை.
நீங்கள் கேட்ட கேள்விக்கு எனக்குத் தெரிந்தவரை பதில் சொல்லியிருக்கிறேன். சங்க இலக்கியங்களில் இறை என்ற தொடரைத் தொடர்ந்து படித்துத் தங்கள் கருத்துகளைச் சொல்ல வேண்டுகிறேன். நன்றி ஐயா.
நீங்கள் எதிர்பார்த்த பதிலைச் சொன்னதில் மகிழ்ச்சி வேலன். யாரும் நம்மை விட உயர்ந்தவர் இல்லை; யாரும் நம்மை விட தாழ்ந்தவர் இல்லை என்று நினைக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இயற்கையாகவே எனக்கு தற்பெருமை அதிகம் - அதனால் நீங்கள் எவ்வளவு வற்புறுத்தி கேட்டிருந்தாலும் இதே பதில் தான் சொல்லியிருப்பேன். :-)
குமரன், இதோ என்னுடைய கேள்விகள்.. முன்னரே கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனாலும் தயக்கம் இருந்ததால் கேக்கவில்லை. கேள்விகளில் வார்த்தைகள் தவறாக இருப்பின் சரி செய்து விடையளிக்கவும்.
1. அன்னை பார்வதி, திருமாலின் தங்கை என்பது எந்த வகையில். எனக்கு தெரிந்து எந்த வைஷ்ணவரும் இதை ஒத்துக் கொண்டதாக தெரியவில்லை. நாராயணண், நான்முகனை படைத்தான், நான்முகன் சங்கரனை படைத்தான் என்ற பாசுர அளவில் மட்டும் எனக்கு தெரியும்.
2. பிராம்மணன் என்பவர் யார்? சற்று விரிவாக விளக்க வேண்டுகிறேன்.
3. என் தாய்மொழி தமிழாக இருந்தும், 23 வயது வரை பள்ளியில், நண்பர்கள் அனைவருடனும் செளராஷ்ட்ர மொழி பேசியே வளர்ந்ததால் தமிழ் சில நேரங்களில் தடுமாறும். நீங்க இப்புடி தமிழ்ல கலக்குறீங்களே எப்புடி (கொஞ்சம் காமெடியா சொல்லலாமே)
4. பலவிதமான பேச்சுத்தமிழ் புழக்கத்தில் உள்ளது போலவே, செளராஷ்ட்ரமும் உள்ளதே ஏன்?? உதாரணத்திற்கு எமனேஸ்வரம் செளராஷ்ட்ர பேச்சை மதுரை மக்கள் கேலி செய்வர். செந்தமிழ் என்பது போல் செம்மையான செளராஷ்ட்ரா மொழி உள்ளதா ?
//பிரம்மம் எங்கும் இருப்பது; இறைவன் தனித்து இருப்பது என்பதோர் வரையறை செய்கிறீர்கள். அது எந்த வகையிலான வரையறை என்று எனக்குப் புரியவில்லை. பிரம்மமும் இறையும் ஒன்றே என்ற புரிதலில் தான் நான் இருக்கிறேன். தனித்து இருப்பது என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. எங்கும் இருக்கும் பிரம்மமான இறையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதைத் தான் தனித்து இருப்பது என்கிறீர்களா? அப்படி என்றால் எங்கும் இருக்கும் பிரம்மமும் தனித்து இருக்கும் இறையும் ஒன்றே ஆக இருப்பதில் என்ன தடை என்று புரியவில்லை.
//
உங்களின் பொறுமையை சோதிக்கவில்லை. எல்லாமாக இருப்பதும், எங்கும் இருப்பதும் சரி, இவை இயற்கைதானே, இதைத்தான் சமணர்களும் சொன்னார்கள். இயற்கை இயற்கைத் தவிர எதுவும் இல்லை என்று. ஆனால் பல்வேறு சமய நம்பிக்கைகள் அவ்வாறு அல்ல, எல்லாம் அதுவே என்று நினைக்கும் உங்களால் எல்லோரும் ஒன்று என்று மன அளவில் நினைக்க முடியும், நம் செயல்பாடுகள், சிந்தனைகள் அதனை ஒப்புக் கொள்ளுமா ? எல்லாம் ஒன்று என்று சொல்லிவிட்டால் 'இறை' என்கிற கான்சபட் மற்றும் இறை என்கிற சக்தி ஒன்றை மாற்றி அமைக்கும் என்ற நம்பிக்கை அதற்கு முரணாகவே இருக்கும்.
முந்தய பதிவில் கூட கேட்டு இருந்தேன், துவைதம், அத்வைதம், விஷிடாத் வைதம் இவைகளெல்லாம் கொள்கை என்ற அளவில் சரி, இவை உண்மை என்று சொல்ல முடியாது என்று. நீங்களும் பதில் சொல்லி இருந்தீர்கள். இந்த முக்கொள்கைகளுமே ஒன்றுக்கு ஒன்று முரணானது, மூன்றுமே உண்மையாக இருக்க முடியாது. ஒன்று சரியாக இருந்தாலும் மற்றது பிழை அல்லது கற்பனை என்றே சொல்ல முடியும். ஒன்றுக்கு பல உண்மைகள் இருப்பதற்கு வாய்பே இல்லை. ஒரு காலத்தில் சூரியனை பூமி சுற்றி வந்ததாகச் சொன்னார்கள், இன்று அறிவியலின் துணையால் அது தவறு என்று காட்டப்பட்டுவிட்டது. மேலே சொல்லிய கொள்கைகளை (அதற்கு வாய்பில்லை என்றாலும்) அறிவியல் படி தவறு என்று சொல்லாதவரை அவை 'உண்மை'யாக இருக்கும். பிரம்மம் பற்றிய கூற்றும் இவ்வாறு தான் இருக்க முடியும், அறியாத ஒன்றை, நம்பிக்கைப்படி உண்மையாக இருக்கும் என்று நம்புகிறோம், விரும்புகிறோம்.
//எல்லாமே இறை தான் என்பதில் எப்படி இறை மறுப்பு வருகிறது என்றும் புரியவில்லை.// எல்லாமே இறைதான் என்று சொல்லிவிட்டால், இறைவன் என்று சொல்லுக்கு என்ன மதிப்பு இருக்கிறது ? நல்ல குணங்களும், கெட்ட குணங்களெல்லாம் உணர்வுகள் என்று சொல்லிவிட முடியும், ஒன்றாகாவே பாருங்கள் என்று சொல்ல முடியுமா ? அன்புக்கும் வெறுப்புக்கும் பெரிய வேறுபாடே உண்டு. இயற்கையும் (பிரம்மம்), இறைவனும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு இருக்கும் வரை ஆன்மிகத்தினால் இறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியாது என்றே நினைக்கிறேன். இயற்கையும் அதன் நிகழ்வுகளும் காலம் சார்ந்தது, அதை நிறுத்தவே முடியாது, இறைசக்தியும் (இருந்து, உணரப்பட்டால்) கூட காலத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்றே நினைக்கிறேன். ஒரு விநாடியில் உலகை மாற்றும் சக்தி ஒன்று இருப்பதாக நம்புகிறீர்களா ?
எரிசல் அடைந்தால் மறுமொழி இட வேண்டாம்.
//என்பதில் ஒத்த ஆர்வமும் ஒத்த புரிதலும் ஒத்த அனுபவமும் இருக்கும் போது பேசுவது எளிது. ஒவ்வொருவர் ஒவ்வொரு தளத்தில் நின்று பேசும் போதும் கேட்கும் போதும் அது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. சில அன்பர்கள் பொறுமையின் சிகரங்களாக இருக்கிறார்கள். எவ்வளவு கடினமாக இருந்தாலும் பேசுகிறார்கள். எனக்கு அந்த பொறுமை இல்லை. அதனால் பல முறை விலகி விடுகிறேன்.
//
சமதளத்தில் நிற்பவர்கள் பேசிக் கொள்வதே இல்லை, அங்கு யார் உயர்ந்தவர் என்ற போட்டியே இருக்கும். :) விவாதம் என்றாலே மாற்றுக் கருத்து தானே, அதில் சமதளம் இருப்பது போல் தெரியவில்லை. நான் எதிர்வாதமோ, விதண்டாவாதமோ இங்கே செய்யவில்லை என்பதை உறுதிபடக் கூறுகிறேன். அன்பு கூர்ந்து நோண்டுவதாக பொருள் கொள்ள வேண்டாம். உங்கள் மூன்றாவது கண் பற்றிய புரிதல் உண்டு.
//பிரம்மம் எங்கும் இருப்பது; இறைவன் தனித்து இருப்பது என்பதோர் வரையறை செய்கிறீர்கள். அது எந்த வகையிலான வரையறை என்று எனக்குப் புரியவில்லை. பிரம்மமும் இறையும் ஒன்றே என்ற புரிதலில் தான் நான் இருக்கிறேன். தனித்து இருப்பது என்றால் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை. எங்கும் இருக்கும் பிரம்மமான இறையைத் தவிர்த்து வேறு எதுவும் இல்லை என்பதைத் தான் தனித்து இருப்பது என்கிறீர்களா? அப்படி என்றால் எங்கும் இருக்கும் பிரம்மமும் தனித்து இருக்கும் இறையும் ஒன்றே ஆக இருப்பதில் என்ன தடை என்று புரியவில்லை.
//
எல்லாம் ஒன்று என்பதன் வரையறை கூட தொன்று தொட்டே வந்தது இல்லை, முன்பே நாம் பேசி இருக்கிறோம், பெளத்த சூனிய வாதத்தின் வைதீக பெயர் (பரப்)பிரம்மம் என்று சொல்லி இருக்கிறேன் என்றே நினைக்கிறேன். இந்து சமயங்களில் ஆதிசங்கரருக்கு முன்பு வேறெங்கும் பிரம்மம் (அத்வைதம்) பற்றி பேசப்பட்டதாகத் தெரியவில்லை. எங்கும் இருப்பது அது என்பது ஒரு கான்சபட், அதை 'எல்லாம் ஒரே இறை' என்பது போல் சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன். அது ஒரு கருத்தாகமாகத்தான் நான் நினைக்கிறேன். எங்கும் இருப்பது என்று சொல்வது அத்வைத மதச் சித்தாந்தம், நீங்கள் அத்வைதியா ? அதை துவைதிகள் ( பக்தியாளர்கள்) ஏற்றுக் கொள்ளமாட்டார்கள், பரம்பொருளும் பாமரனும் ஒன்று என்று சொல்லத்தான் முடியும், இரண்டின் தன்மைகள் வேறு வேறு என்பதால் அவற்றை ஒன்று என்று வலியுறுத்துவது கடினம்.
எல்லாம் ஒன்றே என்றால் கொல்லப்படுபவன், கொலை செய்பவனும் ஒன்றே என்று ஆகிவிடும், அந்த கருத்தில் உடன் படுகிறீர்களா ? உடன்பட்டால் எவரது செயலுக்கும் நமக்கு வருத்தமே ஏற்படாது, (முதன்)முதல் பிறப்புக்கான காரணம் தற்செயல் எனும் போது, முக்தி அடைந்த பிறகும் பிறக்க காரணம் தற்செயலாகவே அமையாது ? பிறவி சங்கிலியே அறுந்துவிடும் என்று சொல்லமுடியாது என்றே நினைக்கிறேன். பிறகு எங்கே பிரம்மம் அதை அடைந்ததல் பிறப்பற்ற நிலை என்றெல்லாம் சொல்ல முடியும். பாவ, புண்ணியம், கர்மா எக்ஸ்ட்ரா இவற்றையெல்லாம் மறுப்பது தான் 'எல்லாம் ஒன்றே' அல்லது பிரம்மம் என்பது. அப்படி இல்லை என்றால் ஏன் என்று சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.
கோவி கண்ணன்,
இயற்கையில் திடப்பொருட்களாக இருப்பதும் பிரம்மத்தின் வெளிப்பாடுதான். இவை unmanifested ஆக இருக்கும் பிரம்மத்தின் அடையாளங்கள். உயிருள்ள பொருட்கள் யாவும், manifested form ஆக இருக்கும் பிரம்மத்தின் வெளிப்பாடுகள். இவை இரண்டுக்குமே சுழற்ச்சி உண்டு. பிறத்தல் - வாழ்தல் - இறத்தல் என.
உருவத்தில் இறைவன் எனச் சொல்லுவதும் manifestation தான். நமக்கும், நம்மைப்போலவே இருக்கும் இறைவனுக்கும் என்ன வேறுபாடென்றால், நம் அறியாமைதான். அந்த அறியாமை அகலும்போது manifest செய்ததின் பொருள் புரிந்து, எல்லாமே ஒன்றுதான் எனப் புரிந்திடும். அதுவரை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான், கூட்டுக்கு உதவாது.
எப்படி மேலே சொன்னதை - வெறுமனே - அறிவால் அறிந்தால் மட்டுமே அது உதவாதோ - அதுபோல - இதை அறிவியலாலும் விளக்க முடியாது. இதை அறிய உயர் ஞானமோ, அல்லது பூரண சரணாகதியோ வேண்டும். கர்ம வினைகளும் களையப்பட வேண்டும். இவை நடந்தால், இந்தப்புதிர்களுக்கெல்லாம் விடை கிட்டும். அதுவரை இவற்றுக்கு கேள்விகளைக் கேட்டு மட்டும் பெறும் பதில்களெல்லாம், ஏட்டுச் சுரைக்காய்தான்.
//ஜீவா (Jeeva Venkataraman) said...
கோவி கண்ணன்,
இயற்கையில் திடப்பொருட்களாக இருப்பதும் பிரம்மத்தின் வெளிப்பாடுதான். இவை unmanifested ஆக இருக்கும் பிரம்மத்தின் அடையாளங்கள். உயிருள்ள பொருட்கள் யாவும், manifested form ஆக இருக்கும் பிரம்மத்தின் வெளிப்பாடுகள். இவை இரண்டுக்குமே சுழற்ச்சி உண்டு. பிறத்தல் - வாழ்தல் - இறத்தல் என.
உருவத்தில் இறைவன் எனச் சொல்லுவதும் manifestation தான். நமக்கும், நம்மைப்போலவே இருக்கும் இறைவனுக்கும் என்ன வேறுபாடென்றால், நம் அறியாமைதான். அந்த அறியாமை அகலும்போது manifest செய்ததின் பொருள் புரிந்து, எல்லாமே ஒன்றுதான் எனப் புரிந்திடும். அதுவரை எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தான், கூட்டுக்கு உதவாது.
எப்படி மேலே சொன்னதை - வெறுமனே - அறிவால் அறிந்தால் மட்டுமே அது உதவாதோ - அதுபோல - இதை அறிவியலாலும் விளக்க முடியாது. இதை அறிய உயர் ஞானமோ, அல்லது பூரண சரணாகதியோ வேண்டும். கர்ம வினைகளும் களையப்பட வேண்டும். இவை நடந்தால், இந்தப்புதிர்களுக்கெல்லாம் விடை கிட்டும். அதுவரை இவற்றுக்கு கேள்விகளைக் கேட்டு மட்டும் பெறும் பதில்களெல்லாம், ஏட்டுச் சுரைக்காய்தான்//
நீங்கள் சொல்வதன் படி பிரம்மத்தைப் பற்றிய புரிந்துணர்வு அல்லது அடைபவர்களின் அனுபவம் அவருக்கு மட்டுமே உரிய ஒன்று. அதுவே சரி என்று பொதுப்படுத்த முடியாது. பிரம்மம், சூனியவாதமெல்லாம் ஒரு சமயப்பிரிவின் நம்பிக்கை. அவர்களைப் பொருத்து இறை என்பது எங்கும் தனித்து இல்லை. இவை முற்றிலும் சைவ சித்தாந்தத்திற்கு எதிரான ஒன்று, சைவ சித்தாந்தம் பசு-பதி-பாசம் என்று பேசும். அவர்களும் பதியும், பசுவும் ஒன்று என்றே சொல்ல மாட்டார்கள். பல்வேறு சித்தாந்தங்கள் யாவும் ஒன்றுக் கொன்று தொடர்புடையது என்று எண்ணுவதாலேயே ( அடிப்படையில் கூட அவை ஒன்றுபடுவது இல்லை) எல்லாம் ஒன்றாகாவே அவற்றைத் தொடர்ப்பு படுத்துகிறீர்கள். மேலேயே கேட்டு இருக்கிறேன், கொல்பவனும், கொல்லப்படுவனும் ஒன்று இல்லை, பிறகு எப்படி அனைத்தும் ஒன்றே என்று சொல்ல முடியும். 'இவருக்கு சொல்வது புரியவில்லை' என்று வேண்டுமானால் நீங்கள் அலுத்துக் கொள்ளலாம். புரியவில்லை என்பதைவிட அதில் புரியும் படி ஒன்றும் இல்லை என்பதாகவே நினைக்கிறேன். பிரம்மத்தை நம்புவர்கள் அனைத்தும் ஒன்றே என்று கருதினாலும் முக்திக்கான முயற்சி எடுத்தால் அதன் பயன் அவருக்கு மட்டும் தானே கிட்டும், பிறகு எப்படி நானும் நீங்களும் ஒன்று என்றோ, நாம் இருவரும் ஏனையவைகளும் சேர்ந்து பிரம்மம் என்று கூற முடியும் ?
வெற்றிடமாகவோ, பருப்பொருளில் 'தன்னை' மூழ்க வைத்துக் கொண்டு, அதிலிருந்து மீளாத் தன்மையை பிரம்மம் அடைவதாகக் கருத்திக் கொள்ளலாம், அவை கூட வெறும் மன அளவில், பயிற்சியினால், நம்பிக்கையால் ஏற்படும் தனி மனித அனுபவம் மட்டுமே. பிரம்மம் என்று சொல்லிவிட்டால் அங்கு இறைவன் பற்றிப் பேசத் தேவையே இல்லை. தனியாக இருப்பதற்குத்தான் இறை என்கிற அடையாளமே, அனைத்துமாக இருப்பதற்கு தனி அடையாளத்திற்கான தேவையே கிடையாது.
இன்னொன்று பிறப்பு இருப்பதால் தான் பிறப்புக்கு அப்பால் என்கிற ஞானத்தைத் தேடுவதற்கே அது வாய்ப்பாக அமைகிறது, அது இல்லை என்றால் தேடுதலோ, அறிவோ கூட தேவைப்படாது. பிறவி அறுத்தல் என்ற கருத்தில் நான் உடன்படுவதே இல்லை. பிரம்மம், இறைவன் இன்னும் ஏனைய அறிவு நிலைகளைப் பற்றி தேடுவதற்கான தாகத்தைக் கொடுப்பது பிறப்புதான். அதை அறுப்பதன் முலம் என்ன பலன் கிடைக்கும் ? ப்ரீசரில் வைத்த பொருள்களைப் போல் ஆடாது அசையாது உறைத்தன்மை என்றீர்கள் என்றால் அதில் பயன் இருப்பது போல் தெரியவில்லை. போதை வஸ்துவை நாடி தற்காலிகமாக அந்த நிலையை அடைபவர்களும் இருக்கிறார்கள். எனவே பிரம்மத்தை அடைவது மிக உயரிய குறிக்கோள் என்றோ, அது பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் லட்சியம் என்று சொல்வதையெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாவில்லை. முட்டை ஆடாது அசையாது முட்டையாகவே இருந்தால் என்ன பலன் ? இயக்கத்தில் ஒன்றாக இருப்பதை விட இயக்கமற்று இருப்பதால் என்ன பலன் ? அப்படி இருந்து பார்த்தால் அதன் பேரானந்தம் புரியும் என்று கற்பனையாகச் சொல்லாமேயன்றி, பிரம்மத்தை அடைந்தவர்களாக நம்பபட்டவர்கள் ( புத்தர், இராமகிருஷ்ணர்) மீண்டும் பிறந்திருக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
கோவி.கண்ணன்.
இந்த விவாதத்தைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே இப்போது பதில் சொல்லவில்லை. சில கருத்துகளை மட்டும் சொல்லலாம் என்று. அவற்றைப் பற்றியும் விவரிக்கப் போவதில்லை. நீங்கள் இந்த கருத்துகளை உங்கள் பதிவில் இடத்தொடங்கிவிட்டதைக் கண்டேன். அங்கேயே தொடருங்கள்.
***
அத்வைத, விசிஷ்டாத்வைத, த்வைத தத்துவங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணானதாகத் தோன்றினாலும் அவை எப்படி ஒன்றையே வெவ்வேறு பார்வையில் சொல்கின்றன என்று அவற்றின் மேலோட்டமான முரண்களை நீக்கிக் காட்டியிருக்கிறார்கள் சில பெரியோர்கள். நீங்கள் படித்திருப்பீர்கள். இல்லையெனில் இனிமேல் படிப்பீர்கள்.
சங்கரருக்கு முன்னர் அத்வைதமோ ப்ரம்மமோ பேசப்படவில்லை என்பது தவறான புரிதல் என்றே நினைக்கிறேன்.
நீங்கள் சொன்ன மற்ற கருத்துகளுக்கும் பதில் கருத்துகள் உண்டு. ஆனால் அவற்றை இன்னொரு முறை பார்க்கலாம். :-)
//கோவி.கண்ணன்.
இந்த விவாதத்தைத் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே இப்போது பதில் சொல்லவில்லை. சில கருத்துகளை மட்டும் சொல்லலாம் என்று. அவற்றைப் பற்றியும் விவரிக்கப் போவதில்லை. நீங்கள் இந்த கருத்துகளை உங்கள் பதிவில் இடத்தொடங்கிவிட்டதைக் கண்டேன். அங்கேயே தொடருங்கள். //
குமரன்,
இங்கே இது தொடர்ந்தது எதிர்பாராத நிகழ்வு. என் பதிவிலும் அதைத் தொடரப் போவதில்லை. இஸ்லாமியர் தவிர்த்து யாரும் கருத்துக் கூறவில்லை. கிட்டத்தட்ட இஸ்லாம் தொடர்பில் விவாதமாகச் சென்று கொண்டிருந்தது, அதனால் அந்த பதிவுக்கு புள்ளி வச்சாச்சு.
பொருமையுடன் மறுமொழி இட்டதற்கு நன்றி !
Post a Comment