Friday, September 26, 2008

உருள்பூந் தண் தார் புரளும் மார்பினன்

திருமுருகாற்றுப்படையின் முதல் பகுதியாகிய திருப்பரங்குன்றத்துப் பகுதியைப் பார்த்து வருகிறோம். இது வரை வந்த இடுகைகளில் முதல் ஆறு அடிகளைப் பார்த்தோம். இன்று அடுத்த ஐந்து அடிகளைப் பார்ப்போம்.

ஞாயிறு போல் தோன்றினான் என்று முதலில் அவன் திருஒளியைக் கூறிவிட்டு பின்னர் அவனது திருவடிப் பெருமையைக் கூறினார் நக்கீரர். பின்னர் திருக்கரங்களின் பெருமையைக் கூறிவிட்டு அவனது அடையாளத்தைக் கூறுவதைப் போல் அவன் மனைவியைக் கூறி அவள் கணவன் என்றார். இந்த ஐந்து அடிகளில் அவனது அழகிய மாலையைப் பற்றி கூறுகிறார்.

கடம்ப மாலை திருமுருகனுக்கே சிறப்பாக உரியது என்பது மரபு. அவன் அன்னையும் அப்பனும் அம்மலரை அணிபவரானாலும் அவனைப் பற்றிக் கூறும் போது சிறப்பாக கடம்ப மலரைக் கூறுவது மரபாகவே அமைந்திருக்கிறது. அந்த மரபு திருமுருகாற்றுப்படையில் தொடங்கியது போலும். இந்த அடிகளில் 'உருள் பூ' என்று கடம்பமலரைச் சொல்கிறார்.

இந்த உருள் பூவினால் செய்யப்பட்ட தாரை அணிந்த மார்பன் என்று மட்டும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம். ஆனால் அந்த உருள்பூந்தார் மிகவும் குளிர்ச்சி வாய்ந்தது என்று சொல்கிறார். அந்த குளிர்ச்சி எங்கிருந்து வந்ததென்றால் அந்தப் பூ பூத்த கடம்ப மரத்திலிருந்து வந்தது. அந்த மரம் ஏன் குளிர்ச்சியாய் இருந்தது? அடர்ந்து வளர்ந்த கடம்ப வனத்துள் அந்த மரம் இருந்தது. அடர்ந்து வளர்ந்திருந்தால் தான் என்ன? அடர்ந்து வளர்ந்திருந்ததனால் பகலவனின் ஒளிக்கதிர்கள் ஊடுருவ முடியாமல் எந்த நேரமும் இதமான குளிர் அங்கே நிறைந்திருந்தது. பகலவன் கதிர்கள் மட்டும் நுழைய முடியாவிட்டால் குளிர்ச்சி அமைந்துவிடுமா? இல்லை தான். கடலில் இருந்து நீரை முகந்து கொண்டு வந்த சூல் கொண்ட மேகங்கள் முதன் முதலில் இந்த கடம்பங்காட்டில் தான் மழை பொழிந்தன. அதில் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டது. ஓகோ. அப்படி என்றால் இந்த மலர் மார்பனின் திருமார்பில் வீற்றிருப்பது கடலின் குளிர்ச்சியா? சரி தான்.

இப்படித் தான் கடம்பந்தாரைப் பற்றி பாடியிருக்கிறார் நக்கீரர்.

கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி
தலைப்பெயல் தலைஇய தண் நறும் கானத்து
இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து
உருள் பூந் தண் தார் புரளும் மார்பினன்


மேகங்கள் நீரை முகந்து கொள்வதால் கடலுக்கு கார் கோள் என்ற பெயர் வந்தது. அந்தக் கார்கோளிலிருந்து நீரினை முகந்து எடுத்துக் கொண்ட மிகப்பெரும் சூலை/கருவைக் கொண்ட பெரும் மேகமானது, பகலவனும் மதியவனும் ஒளி வீசும் வானத்தில் நின்று சிறு சிறு துளிகளாகச் சிதறி, முதல் மழையைப் பொழிந்ததால் தழைத்து வளர்ந்த குளிர்ந்த மணம் வீசும் காட்டில் இருள்படும் படி நெருங்கி வளர்ந்த காட்டு மரத்தின் உருள் பூவினால் ஆன குளிர்ச்சியான மாலை புரளும் மார்பினன் திருமுருகன்.

கற்பின் வாணுதல் என்று முன்பு தெய்வயானையம்மையைக் குறிப்பாகக் கூறினார். உருள்பூ என்று இங்கே கடம்பத்தைக் குறிப்பாகக் கூறினார். கடவுளருக்குரிய வேறெந்த பூவும் உருண்டு இருப்பதில்லை; கடம்பம் மட்டுமே அவ்வுருவம் கொண்டது என்பதை கடம்ப மலரினைப் பார்த்தவர் அறிவர். அதனால் உருள்பூ என்றே குறிப்பாகக் கூறுவது போதுமானதாக இருந்தது. அக்காலத்தில் கற்பின் வாணுதல் என்ற உடன் தெய்வயானையம்மை என்ற புரிதல் இருந்தது போல் உருள் பூ என்றவுடன் கடம்பம்பூ என்ற புரிதலும் இருந்தது போலும்.

வாணுதல் என்று முன்னர் சொன்னதை 'வாள் + நுதல்' என்று பிரித்து ஒளி பொருந்திய நெற்றியினைப் பெற்ற பெண் என்று பொருள் சொல்வார்கள். அப்படியே நானும் சொல்லியிருந்தேன். ஆனால் நண்பர் ஒருவர் வாள் நுதல் என்பதற்கு வாளினைப் போல் கூர்மையான நெற்றி என்று முன்பொரு முறை பொருள் சொல்லியிருந்தார். இங்கே மீண்டும் 'வாள் போழ் விசும்பு' என்று வருகிறது. இதற்கு எல்லா உரையாசிரியர்களும் ஒளி வீசும் வானம் என்றே பொருள் சொல்லியிருக்கிறார்கள். அதனையே நானும் கொண்டேன்.

கடும்கோடையில் முதல் மழை பெய்தால் எவ்விதமான அனுபவம் கிடைக்குமோ அதே அனுபவம் இந்தக் கடம்பங்காட்டில் கிடைக்கும் போலிருக்கிறது. அந்த முதல் மழையையே இங்கே தலைப்பெயல் என்றார்.

உருள் பூவினால் செய்ததால் தான் போலும் இவன் திருமார்பில் அந்த பூந்தார் ஓரிடத்தில் நிற்காமல் புரண்டு கொண்டே இருக்கின்றது. :-)

4 comments:

மதுரையம்பதி said...

நன்றி குமரன். புது வார்த்தைகள் தெரிந்துகொண்டேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி மௌலி.

கவிநயா said...

இதுதான் கடம்ப மலரா? இந்த பாடலெல்லாம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு புரிஞ்சுக்கிறது. நல்லா விளக்கியிருக்கீங்க. நன்றி.

குமரன் (Kumaran) said...

ஒருவேளை வழக்கம் போல ஒவ்வொரு சொல்லாகப் பொருள் சொன்னால் இன்னும் நன்றாகப் புரியுமோ? அப்படி என்றால் அடுத்த இடுகையிலிருந்து அப்படி செய்ய முயல்கிறேன் கவிநயா அக்கா.