Thursday, December 20, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 8

அஸ்தினாபுரத்துவாசிகள் அனைவரும் மிக்க ஆவலுடன் இருக்கிறார்கள். பாண்டவர்களுக்காகப் பரிந்து பேசி பாண்டவர், கௌரவர் இருவருக்கும் உறவான கிருஷ்ணன் வந்திருக்கிறானாம்.

பாண்டவர்கள் வனவாசமும் முடித்துவிட்டு மறைந்து வாழும் ஒரு வருட அஞ்ஞாதவாசத்தையும் முடித்துவிட்டார்கள். பெரியவர்கள் எல்லோரும் சேர்ந்து செய்து வைத்த ஒப்பந்தப்படி பாண்டவர்களின் நாட்டை அவர்களுக்கே திருப்பித் தந்துவிட வேண்டும். ஆனால் துரியோதனனோ மறுக்கிறான். தோற்றது தோற்றது தான்; தோற்ற பின்னர் பெரியவர்கள் செய்து வைத்த ஒப்பந்தத்தை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று துரியோதனன் உறுதியாக இருக்கிறான். ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்த போது மாமனும் நண்பனும் தம்பியும் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்கள். மூத்தவர்களின் வற்புறுத்தலால் ஒத்துக் கொண்டான். பின்னர் மாமனிடமும் நண்பனிடமும் தம்பியுடனும் பேசிய பின்னர் தானே தான் ஒத்துக் கொண்டது முட்டாள்தனம் என்று தெரியவந்தது. 'சூதாட்டத்தில் தோற்றவர்கள், அடிமைகள் ஆனவர்கள், தோற்ற பின்னர் தங்கள் மனைவியையும் வைத்துத் தோற்றுப் போனவர்கள், சிற்றப்பன் மக்கள் என்ற காரணத்தாலும் குரு வம்சத்தவர்கள் என்ற காரணத்தாலும் நாட்டை ஆண்டவனின் மக்கள் என்ற காரணத்தாலும் இப்படி நியாயத்திற்குப் புறம்பாகப் பேசி பெரியவர்கள் எல்லாம் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட்டார்கள். அந்த ஒப்பந்தப்படி அவர்கள் வனவாசத்தையும் அஞ்ஞாத வாசத்தையும் முடித்துவிட்டு வந்தால் தான் என்ன? நான் சூதாட்டத்தில் வென்ற நாட்டைத் திருப்பிக் கொடுக்க மாட்டேன்' என்று உறுதியாகக் கூறிவிட்டான். அந்த செய்தியை திருதராஷ்ட்ரன் தன் தேர்ப்பாகனான சஞ்சயன் மூலமாக பாண்டவர்களுக்கும் சொல்லி அனுப்பி விட்டான்.


சிந்தித்துப் பார்த்த தருமன் இந்த நேரத்தில் தூது சென்று கௌரவர்களிடம் பேசி வரத் தகுந்த ஆள் கண்ணன் தான் என்று முடிவு செய்து கண்ணனிடமும் அதனை வேண்டிக் கொண்டான். அதன் படி இன்று கண்ணன் தன் பக்தர்களும் தோழர்களும் உறவினர்களும் ஆன பாண்டவர்களுக்காகத் தூதுவனாக வந்திருக்கிறான். அவன் வந்த நோக்கம் நிறைவேறுமா? நிறைவேறாத ஒன்றிற்காக அவன் வருவானா? யாருக்குத் தெரியும் அவன் எந்த நோக்கத்திற்காக அஸ்தினாபுரம் வந்திருக்கிறான் என்று?

சகாதேவனுக்குக் கண்ணனின் தூது பயனளிக்காது என்று நன்கு தெரியும். கிரக நிலைகளை வைத்துக் கணித்துப் பார்த்ததில் இந்தப் பெரும்போரை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் மாதவன் என்ன நினைக்கிறான் என்று யாருக்குத் தெரியும். அவனே தூது செல்லக் கிளம்பிவிட்டானே; யார் போய் அதைத் தடுக்க முடியும்?

ஒரு சாராருக்குத் தூதுவனாக வந்த தான் மறு சாரார் தரும் உபசாரங்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறிவிட்டு துரியோதனன் அரண்மனைக்கு வராமல் தன் பக்தனான விதுரரின் சிறுமாளிகைக்குச் சென்று விட்டான் கண்ணன். அது தனக்கு நேர்ந்த அவமானம் என்று கருதுகிறான் துரியன். தன்னை அவமானப்படுத்திய இடையனைத் தானும் அவமதிக்க வேண்டும் என்று துடிக்கிறான். மறுநாள் அவைக்கு தூது செய்தியுடன் கண்ணன் வரும் போது அவனுக்குரிய மரியாதையாக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை இட்டுவிட்டான். 'எல்லோருடைய மதிப்பையும் பெற்ற கண்ணனைப் போன்றவர்கள் சபைக்கு வரும் போது அரசனைத் தவிர்த்து மற்ற அனைவரும் எழுந்து நின்று வரவேற்பது தான் மரபு. இங்கிருக்கும் கிழவர்கள் கண்ணன் ஒரு அவதாரம் என்று வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் அவன் வரும் போது யாரும் எழுந்து வரவேற்காமல் இருந்தாலே அது ஒரு பெரிய அவமானமாக இருக்கும்' என்று கருதிவிட்டான் கௌரவ இளவரசன். தன் கட்டளையை மீறி யாராவது எழுந்து நின்று விடுவார்களோ என்ற அச்சத்தில் அப்படி யாராவது எழுந்து நின்றால் அவர்களுக்கு 12 பொன் அபராதம் என்று சொல்லிவிட்டான். அபராதம் கட்டும் அவமானத்திற்குப் பயந்தாவது எழுந்து நிற்காமல் இருப்பார்கள் அல்லவா?

இரவு வெகு நேரம் தன் பக்தனின் இல்லத்தில் அவன் தந்த உபசாரங்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு கண்ணன் மகிழ்ந்திருந்தான். கண்ணன் தன் முன் இருக்கிறான் என்ற அன்பின் மயக்கத்தில் இருந்த விதுரனோ உணவிற்குப் பின்னர் வாழைப்பழத்தைத் தரும் போது பழத்தை உரித்து வீசி விட்டு தோலைத் தந்தான். கண்ணனும் அவன் பக்தியின் பொருட்டு எதையும் ஏற்றுக் கொள்வான் என்பதால் தோலையும் தின்றான். இராமனாக இருக்கும் போது அவன் அடியார்கள் பழத்தோடு தோலைத் தின்றார்கள். அவர்கள் நினைவாக இன்று இவன் தோலைத் தின்றான் போலும்.

அதிகாலை துயில் நீங்கும் முன்னர் மதுரமான இன்னிசையின் மூலம் கண்ணனைத் தொழுது அவனது துயிலுணர்த்தினான் விதுரன். 'கண்ணனை அழைத்துச் செல்ல அரசவையிலிருந்து மரியாதைகளுடன் மந்திரி பிரதானிகள் இரண்டு நாழிகைக்குள் வந்துவிடுவார்கள். முக்கிய அமைச்சனான தான் அரசவை கூடும் நேரத்தில் அங்கிருக்க வேண்டும்' என்று எண்ணி விரைவிலேயே கிளம்பி விட்டான் விதுரன்.

விதுரன் சென்ற சிறிது நேரத்திற்குப் பின் கண்ணனும் கிளம்பிவிட்டான். தன்னை அழைத்துச் செல்ல யாரும் அரசவையிலிருந்து வரமாட்டார்கள் என்று அறிந்தவனைப் போல் தானே துவாரகையிலிருந்து வந்த தேரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

அரச மாளிகைக்கு வந்து சேர்ந்த பின்னரும் யாரும் வரவேற்க முன் வாசலுக்கு வரவில்லை. மாயவன் சிரித்துக் கொண்டே தனியாகப் படிகளில் ஏறி வருகிறான். மாளிகைக்காவலர்கள் யாரும் அவனைத் தடுத்து நிறுத்தவில்லை.

மாளிகை வாசலிலிருந்து அரசவைக்குச் செல்லும் நீண்ட தாழ்வாரத்தில் மோகனப் புன்னகையுடன் நடந்து செல்கிறான் கேசவன். அரசவை வாயிலுக்கு வந்துவிட்டான். அவன் அரசவைக்குள் நுழைய வலக்காலை எடுத்து வைத்தான். ஐயோ கண்ணன் தடுமாறுகிறானே? ஏன் ஏன்? என்ன ஆயிற்று கண்ணனுக்கு?

***

ஆகா. நான் எங்கிருக்கிறேன்? இது ஏதோ ஒரு பெரிய மாளிகையில் இருக்கும் பெரிய அறை போல் இருக்கிறதே. இதோ உருண்டு உருண்டு இந்தப் பெரியவரின் காலடியில் வந்து சேர்ந்துவிட்டேன். இதுவரை நான் எங்கிருந்தேன்? தெரியவில்லையே? இப்போது திடீரென்று எல்லாமும் தெரிகிறது; எல்லாமும் புரிகிறது. உருண்டையாக இருப்பதால் வாசலில் இருந்து இந்தப் பெரியவரின் ஆசனம் வரை எளிதாக உருண்டு வந்து விட்டேன். யார் என்னை உதைத்தது? அங்கே பெரும் சோதி உருவமாக நிற்பவர் தான் என்னை உதைத்தாரா? ஆகா அவர் காலடி பட்டதால் தான் உணர்வின்றி இருந்த நான் இன்று உணர்வு பெற்றேனா? பரம்பொருளே அடியேனின் வணக்கம்.

என் வணக்கத்தை ஏற்றுக் கொள்வது போல் இந்தப் பக்கம் ஒரு பார்வை பார்க்கிறாரே அவர். கண்ணா. உன் எண்ணப்படியே இங்கு நடப்பதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உன் கருணைப் பார்வை பட்டதால் நான் உய்ந்தேன். உன் கமலப் பாதங்களுக்கு என்னால் எந்த நோவும் ஏற்படவில்லையே?! கடியன் என்னை மன்னித்து அருள்வாய்.


இதென்ன யாருமே எழுந்து நிற்கவில்லையே. ஓ அங்கே கடூரமாக விழித்துப் பார்க்கும் அந்த மாவீரனுக்குப் பயந்து தானோ? புன்னகையுடன் கண்ணன் அரசவைக்குள்ளே நுழைகிறான். அரசர் பக்கத்தில் அமர்ந்திருக்கும் தொண்டுக் கிழவர் எழுந்து நின்று காயாவண்ணனை நோக்கிக் கை கூப்புகிறார். ஸ்வாகதம் கிருஷ்ணா என்று சொல்கிறார். அட இதென்ன அவர் எழுந்து நின்றதும் ஒவ்வொருவராக எழுந்து நிற்கின்றனரே. கை கூப்புகின்றனரே. நால்வர் மட்டும் எழுந்து நிற்கவில்லை. இல்லை இல்லை. மூவர் மட்டுமே. கவச குண்டலங்களுடன் இருக்கும் அந்த மாவீரன் எழுந்து நின்றுவிட்டான். கை கூப்ப இன்னும் மனம் வரவில்லை போலும். கரிய ஆடை அணிந்த அந்த பெரியவர் இன்னும் ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எல்லோரையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அவர்களின் வணக்கத்தை ஏற்றுக் கொண்டு இதோ மாயவன் அரசரிருக்கையின் அருகில் வந்துவிட்டான். கடூரமாக விழித்த மாவீரன் ஏன் துள்ளிக் குதிக்கிறான்? என்ன இது ஏன் அவனது மகுடம் தலையிலிருந்து தாவி விழுந்து உருண்டு செல்கிறது? ஆகா. அது சென்று சேர்ந்த இடம் அருமையான இடம். கண்ணனின் மலர்க்காலடியில் அல்லவா சென்று சேர்ந்தது? கண்ணா. உனக்குரிய மரியாதையை வலிய பெற்றுக் கொண்டாயா? மாயனய்யா நீர்.

இதோ இங்கு நடக்கும் எல்லா நிகழ்வுகளையும் இனி மேல் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறேன். உங்களுக்கு வேறு வேலை இருக்கும். அதனால் அப்புறம் பேசலாம். இப்போது சென்று வாருங்கள்.

***

வாருங்கள். பார்த்து எவ்வளவு நாளாயிற்று. கண்ணன் தூது வந்த அன்று பார்த்தது. அப்புறம் பெரும் போர் நடந்து அரசாட்சி மாறி இதோ பரிக்ஷித்து காலம் வந்தாயிற்று. கண்ணன் தூது வந்து சென்ற பின் அரசவையை சுத்தம் செய்தவருக்கு என்ன தோன்றியதோ என்னைத் தூக்கி எறியாமல் இங்கிருக்கும் மாடத்தில் வைத்துவிட்டார். அதனால் அந்த நாள் முதல் இந்த நாள் வரை நடந்த எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேற்றிலிருந்து எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள். மன்னன் பரிக்ஷித்துவிற்கு ஏதோ சாபமாம். இன்னும் ஏழே நாட்களில் அரவு தீண்டி இறந்துவிடுவாராம். அதனால் எல்லோரும் சோகமாக இருக்கிறார்கள்.

திடீரென்று ஒரு பரபரப்பு ஏற்படுகிறதே?! ஏன்? அங்கே வருவது யார்? பெரும் ஒளியுடனும் எல்லோர் மனத்தையும் கவர்ந்து இழுக்கும் இளமையும் அழகும் அருமையான அமைதியும் கொண்டு வரும் இவர் யார்? சுகப்ரம்மம் சுகப்ரம்மம் என்கிறார்கள் எல்லோரும். சுவாமி. அடியேனுக்கு கை இல்லை; அதனால் கை கூப்பி வணங்க முடியாது. என் வணக்கங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவர் இங்கே நோக்குகிறாரே. ஆகா. என் அருகில் வந்து அல்லவா அமர்ந்து கொள்கிறார்?! கண்ணனின் கதையை மன்னனுக்குச் சொல்லப் போகிறாராம். ஆகா பெரும் பாக்கியம். பெரும் பாக்கியம்.

***

மகரிஷி சுகரின் கருணையால் பகவான் கிருஷ்ணனின் லீலைகளைப் பற்றி கேட்டு ஆனந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த ஆனந்தம் என்றுமே நிலைக்க வேண்டும். என்றுமே நிலைக்க வேண்டும். கண்ணா. உன் கதைகளைக் கேட்ட நான் வேறு எதையுமே இனி மேல் கேட்க விரும்பவில்லை. மகரிஷி கதையினைச் சொல்லி முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இனியும் இங்கிருக்க எனக்கு விருப்பமில்லை. இறைவா. என் வேண்டுதலுக்குச் செவி சாய்ப்பாய்.

17 comments:

G.Ragavan said...

இப்பிடிக் கந்த புராணம், பாகவதம்னு சொல்லிக்கிட்டே போறீங்களே...கதைய எப்பச் சொல்லப் போறீங்க :)

அது சரி..அந்தக் கல்லுதான் அன்னைக்குக் கண்ணல் கால்ல விழுந்துச்சா. எங்கயிருந்து விழுந்துச்சு?

G.Ragavan said...

இப்பிடிக் கந்த புராணம், பாகவதம்னு சொல்லிக்கிட்டே போறீங்களே...கதைய எப்பச் சொல்லப் போறீங்க :)

அது சரி..அந்தக் கல்லுதான் அன்னைக்குக் கண்ணல் கால்ல விழுந்துச்சா. எங்கயிருந்து விழுந்துச்சு?

குமரன் (Kumaran) said...

இராகவன். இந்த அத்தியாயத்துல சொல்லியிருக்கிறதைப் படிச்சா அந்தக் கல்லு கண்ணன் கால்ல எப்படி பட்டுதுன்னு தோணுது உங்களுக்கு? :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

என்னடா, போன தொடர்-ல
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி
மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
ன்னு பாட்டைப் போட்டாரே-ன்னு அப்பவே நெனைச்சேன்!

இங்கிட்டு வந்து பாத்தா...தூது போயி, அரண்மனை வாசல்-ல கல்லு தட்டுப்பட்டு, தடுமாறி, அது உருண்டு ஓடி, உள்ள வந்து,
ஹூம்...அந்தக் கண்ணனடிபட்ட கல்லடியார் இப்போ எங்கே இருக்காரு குமரன்? :-)

குமரன் (Kumaran) said...

கண்ணன் அடிபட்ட கல்லடியார் எங்கே இருக்காரா? கண்ணனுக்குத் தானே அது தெரியும்?! என்னைக் கேட்டால்?

இலவசக்கொத்தனார் said...

குமரன் ரொம்ப சுவாரசியமான பதிவு. ஆனால் இந்த கதைக்கு நடுவில் இது இருப்பது (போன பதிவு கூட) கொஞ்சம் ஓட்டத்தை மட்டு படுத்துவது மாதிரி இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

போன இடுகையும் இந்த இடுகையும் இனி வரப்போகும் இடுகைகளும் தான் இந்த கதையே கொத்ஸ். இவை இரண்டும் கதைக்கு நடுவில் வரவில்லை. இவை தான் கதையே.

ஏழாவது எட்டாவது அத்தியாயத்தில் தலைப்பு சொல்லும் கதையைத் தொட்டுவிடுவேன் என்று முன்பு சொன்னேன். இந்த எட்டாவது அத்தியாயத்தில் தொட்டுவிட்டேன். இந்த இடுகையில் அது எப்படி தொடப்பட்டது என்று புரியாவிட்டால் அடுத்து வரும் அத்தியாயங்களில் தெளிவாகப் புரிந்து விடும் கொத்ஸ். :-)

குமரன் (Kumaran) said...

இராகவனுக்கும் உங்களைப் போன்ற குழப்பம் இருக்கிறது என்று நினைக்கிறேன் கொத்ஸ். ஆனால் அவருடைய பின்னூட்டத்தில் அவரையே அறியாமல் அடுத்த அத்தியாயத்தைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். :-)

இரவிசங்கருக்குக் கொஞ்சம் புரிந்துவிட்டது என்று நினைக்கிறேன். இன்னும் சிலருக்கும் புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். அவர்கள் வந்து என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

VSK said...

//கருவறை போல் இருந்த ஒரு அறையில் ஒரு நட்டு வைத்தக் கல் இருந்தது. சிவலிங்கமா ஏதாவது சிலையா என்று தெரியவில்லை//

மூன்றாம் அத்தியாயத்தில் ஒரு கல் வந்தது, தாத்தாவின் கருவறையில்.

7-ல் ஒரு கல்லைப் பற்றிய பாட்டு!

இப்போ கண்ணன் காலத்தில் இருந்து ஒரு கல் உருண்டு, உருண்டு இங்கு வருகிறது!

அதுதான் தாத்தா சொல்லப்போறாரோ? இல்லை காட்டவே போறாரா?

கதை சுவாரஸ்யமாகத்தான் போகிறது.

cheena (சீனா) said...

கண்ணன் தூது சென்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறேன். இன்று இப்பதிவைப் படித்ததும் கற்பனையில் கண்டு மகிழ்ந்தேன். எனக்குப் பிடித்த காட்சி கன்ணன் தூது செல்வது- கதையைப் புரிந்து கொள்ள முயல்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

எங்கிருந்து எங்கு வந்துவிட்டீர்கள் குமரன்....
கண்ணனிடம் சொல்லுங்க எனக்கும் பிருந்தாவனமதிலொரு புல்லாய் பிறவி தரவேண்டுமென்று.

Geetha Sambasivam said...

காத்திருக்கேன்.

Geetha Sambasivam said...

மற்றொரு முறை அனைத்தையும் படித்தேன், ஓரளவு புரிய ஆரம்பிக்கிறது! இருந்தாலும் காத்திருக்கேன்.

குமரன் (Kumaran) said...

7ல் கல்லைப் பற்றி பாட்டா? எந்தப் பாட்டைச் சொல்கிறீர்கள் எஸ்.கே?

தாத்தா என்ன சொல்லப் போறார்ன்னு அடுத்த அத்தியாயத்துல நீங்களே சொல்லிடுவீங்க எஸ்.கே. அவர் காட்டவும் செய்வார்ன்னு தான் நினைக்கிறேன். :-)

கதை சுவையாரமா (நன்றி: கோவி.கண்ணன்) போகுதுன்னு பாராட்டுனதுக்கு நன்றி. அப்படி சொன்ன கொத்ஸுக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

எனக்குக் கர்ணன் படத்தில் பார்த்த கிருஷ்ணன் தூது காட்சி தான் நினைவில் இருக்கிறது சீனா ஐயா. வேறு திரைப்படத்திலும் இந்தக் காட்சி வந்ததா? என்டியாரின் அந்த மாயப் புன்னகை கண்ணனைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்துமே.

அடுத்த அத்தியாயத்தில் கதை புரிந்து விடும் என்று நினைக்கிறேன் ஐயா. திங்கள் வரை காத்திருங்கள்.

குமரன் (Kumaran) said...

மௌலி. சென்ற அத்தியாயத்திலேயே இதற்குக் குறிப்பு தந்திருந்தேனே. கண்ணன் தூது சென்ற வரிகளைக் கேட்டுக் கொண்டே கந்தன் உறக்கத்தில் ஆழ்ந்தான் என்று. அதனை அழுத்தமாகவும் (போல்ட் செய்தும்) செய்திருந்தேன்.

இந்த அத்தியாயத்தில் சில வரிகளை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன் (போல்ட் செய்து). அது யார் கண்ணிலும் படவில்லையா அல்லது இனி மேல் வந்து அதனைப் பற்றி சொல்வார்களோ தெரியவில்லை.

கண்ணனிடம் நீங்களே சொல்லுங்க மௌலி. எதற்கு நான் வேறு நடுவில். :-) அப்படி சொல்லும் போது 'புல்லாகிலும் நெடுநாள் நில்லாது ஆதலினால் கல்லாய் பிறவி தர வேண்டும்'ன்னு கேட்டீங்கன்னா இன்னும் நல்லது. அவன் உதைத்து விளையாட வாய்ப்பாக இருக்குமே. :-)

குமரன் (Kumaran) said...

இன்னும் ரொம்ப காத்திருக்க வேண்டாம் கீதாம்மா. அடுத்த அத்தியாயத்தில் புரிந்து விடும். அப்படியே புரியாவிட்டாலும் தாத்தா கடைசி அத்தியாயத்துலயோ அதுக்கு முந்தின அத்தியாயத்திலேயோ தெளிவா சொல்லிப் புரிய வச்சுடுவார்.