Sunday, December 16, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 6

முந்தைய அத்தியாயத்தை இங்கே பாருங்கள்.


மணிகண்டன் சொன்னதைக் கேட்டதும் கந்தனுக்கு உடலும் உள்ளமும் ஒரு தடவை சிலிர்த்தது. திருப்புகழ் எனும் அமுதத்தைத் தந்த அருணகிரிநாதர் தொடக்கம் முதல் முடிவு வரை வாழ்ந்த இடங்களை எல்லாம் பார்க்கிறோம் என்ற சிலிர்ப்பு. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டல்லவா அவரின் வாழ்க்கை. இளமையில் சென்ற சிற்றின்ப வழியென்ன, அதனால் பெற்ற பெருநோய் தான் என்ன அவை எல்லாம் முருகனின் திருவருள் பெற்று 'சும்மா இரு சொல்லற' என்ற உபதேசம் பெற்று உய்யும் வழியைத் தானே காட்டியது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட உயர்வு தாழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை நடக்கும் போது தாழ்வாகத் தோன்றினாலும் பின்னர் திரும்பிப் பார்க்கையில் அதுவும் நன்மைக்கே என்று புரிகிறதல்லவா? வேண்டிய அளவிற்குத் திருப்புகழையும் கந்தரலங்காரத்தையும் தான் பெற்ற அனுபூதியையும் பாடிய பின்னர் கிளி வடிவாக மாறி சிறிது காலம் அருணகிரிநாதர் வசித்த கோபுரத்தின் அடியில் நிற்கிறோம் என்ற பொழுது கந்தனுக்கு நொடியில் இந்த எண்ணங்கள் எல்லாம் வந்து சென்றன.

கந்தன் கேசவனைப் பார்த்தான். "கேசவா. இந்தக் கிளி கோபுரம் பத்தி தெரியுமா?"

"தெரியும். அருணகிரிநாதர் படத்துல பாத்திருக்கேன்"

"அப்ப சரி. வாங்க. உள்ள போயி அண்ணாமலையாரைப் பாக்கலாம்"

கோபுர வாயிலில் நுழைந்து உள்ளே செல்லும் போது கந்தனின் பார்வையில் பட்டது ஒரு மின்னல் கொடி. அழகென்றால் அப்படி ஒரு அழகு. எந்த வகையில் கவர்ச்சி என்று புரியவில்லை. ஒரு நொடியில் அவளின் உருவம் மனத்தில் முழுக்க நிறைந்துவிட்டது. அவள் கடந்து சென்ற பின்னரும் கந்தனால் அவள் உருவத்தை மறக்க முடியவில்லை. அவன் திரும்பிப் பார்த்ததைக் கண்டு கேசவன் ஒரு குறுநகை செய்தான். அவன் சிரிப்பதைப் பார்த்து கந்தனும் சிரித்துக் கொண்டான். மணிகண்டனுக்கோ இவை எதுவும் தெரியவில்லை. அவன் இவர்கள் முன்னால் சென்று கொண்டிருந்தான்.

அந்தப் பெண்ணைப் பார்த்த பின்னர் தனது கல்லூரிக் காலம் கந்தனுக்கு நினைவிற்கு வந்தது.

'எத்தனை பொண்ணுங்ககிட்ட மனசைப் பறி கொடுத்திருக்கேன்?! காலேஜ் நாட்களை நினைச்சாலே ஒரு கிக் தானா வந்துருது. சின்ன வயசுல இருந்து பாத்த பூங்கோதை பன்னெண்டாப்பு படிக்கிறப்ப தேவதை மாதிரி தெரிஞ்சாளே. அவகிட்ட காதலைச் சொல்லிரணும்ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கிறப்பவே செகண்ட் இயர்ல கம்ப்யூட்டர் சயின்ஸ் படிச்சுக்கிட்டு இருந்த ஷ்யாமளா கண்ணுல பட்டா. இப்ப மனசு இவகிட்ட போயிருச்சு. அந்த நேரம் பாத்து பர்ஸ்ட் இயர்ல நல்லா செகப்பா துறுதுறுன்னு வருஷம் 16 குஷ்பு மாதிரி ரமா வந்து சேர்ந்தா. பசங்க கண்ணு எல்லாம் அவ பக்கம் தான். ரெண்டு மூணு தடவை காலேஜ் பஸ்ல அவ வந்து சந்தேகம் கேட்டாளும் கேட்டா பசங்க பொறாமையில வெந்து சுண்ணாம்பாயிட்டாங்க. எவனோ ஒருத்தன் ஷ்யாமளாகிட்ட போயி அதை போட்டுக்குடுத்துட்டான். அவ்வளவு தான். அவ என்னை திரும்பிக் கூடப் பாக்கலை. அவளை எப்படியாவது கவர்ந்துரணும்னு எத்தனை கவிதை எழுதுனேன். எக்ஸாம் ஹாலுல எத்தனை டெஸ்குல கவிதையெல்லாம் கிறுக்கி வச்சேன். அவ்வளவும் வேஸ்ட். அவ கண்டுக்கவே இல்லை. ஆனா தேன்மொழி கண்டுக்கிட்டா. பதில் கவிதை எழுதிவச்சா. அதைப் படிச்சதும் நாடி நரம்பெல்லாம் அடங்கிப் போச்சு. இப்பக்கூட அதை நெனைச்சா படபடன்னு இருக்கு. ஓடிப் போயி அம்மா தாயே; நான் ஏற்கனவே இன்னொரு பொண்ணைக் காதலிக்கிறேன்னு சொல்லிட்டேன். ஆனா அவ கடைசி வரைக்கும் எனக்கு ரூட் போட்டுக்கிட்டு தான் இருந்தான்னு சிவில் குரூப் இந்துமதி சொன்னா.

நாலு வருஷமும் இப்படியே போச்சு. கடைசியில ஷ்யாமளாவை மறந்துட்டு பூங்கோதைகிட்டயே போய் லவ்வைச் சொன்னா டூ லேட். எங்க வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டா. ஹும். அவ கல்யாணத்துக்குப் போயி பக்கத்துலயே இருந்து வாழ்த்திட்டு வந்தேன். இப்ப ஏதோ வெளிநாட்டுல போயி செட்டில் ஆயிட்டாளாம்.'

இந்த எண்ணங்களுடன் கூடவே எத்தனையோ பெண்கள் கல்லூரிக் காலத்தில் அண்ணா அண்ணா என்று சொல்லிப் பழகியதையும் அதையெல்லாம் கண்டு நண்பர்கள் டேய் நீ கந்தனா கண்ணனான்னு ஓட்டியதும் நினைவிற்கு வந்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் கந்தன். கேசவனுக்கு இதெல்லாம் தெரியும். அதனால தான் இப்ப இந்தப் பெண்ணை கந்தன் பார்ப்பதைக் கண்டு இவனைத் திருத்தவே முடியாது என்று நினைத்துக் கொண்டு சிரித்தான்.




மூவரும் அண்ணாமலையார் சன்னிதிக்குள் நுழைந்தார்கள். மின்விளக்கு வெளிச்சத்தில் அண்ணாமலையாரைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய பணக்காரர் சுற்றம் சூழ உட்கார்ந்திருப்பது போல் தோன்றியது கந்தனுக்கு. நிறைய நகையெல்லாம் போட்டு நன்கு அலங்காரம் செய்திருப்பதால் அப்படி தோன்றியதோ என்னவோ?



கேசவன் தன்னை மறந்து அண்ணாமலையாரை வணங்கிக் கொண்டிருந்தான். அண்ணாமலையாரின் அலங்காரம் மிக அழகாக மனத்தில் பரவியது. கண்ணை மூடி வணங்கும் போதும் அது மனத்தின் முன்னால் நின்றது. கந்தனுக்கு அந்த அளவிற்கு மனம் ஒருப்பட்டது போல் தெரியவில்லை.

மூவரும் அண்ணாமலையாரை வணங்கிவிட்டு உட்பிரகாரத்தை வலம் வந்தார்கள். வேணுகோபால சுவாமி சன்னிதிக்கு வந்த போது கந்தனின் மனம் கொஞ்சம் அடங்கத் தொடங்கியிருந்தது. வேணுகோபால சுவாமியை வணங்கிவிட்டு வைகுண்ட வாசல் வழியாக உண்ணாமுலையம்மன் சன்னிதிக்கு வந்தார்கள்.




உண்ணாமுலையம்மன் சன்னிதியில் நிற்கும் போதும் கந்தனின் மனம் அம்மனின் திருவுருவத்தில் லயிக்காமல் கொஞ்சம் அலை பாய்ந்தது.




'பிள்ளையாரும் முருகனும் அம்மனோட குழந்தைங்க தானே. அவங்களுமா அம்மனிடம் பால் குடிக்கவில்லை? ஞானசம்பந்தருக்கு அம்மன் பால் கொடுத்ததா சொல்றாங்களே. அவருக்கு முலைப்பால் தானே கொடுத்ததா சொல்வாங்க. அதுவும் கிண்ணத்துல வச்சு தான் கொடுத்தாங்களோ? உண்ணாமுலையம்மன்னு பேரு வச்சிருக்காங்களே'



மூவரும் அமைதியாக அம்மனை வணங்கிவிட்டு வெளியே வந்த போது நன்கு இருட்டியிருந்தது. அப்படியே அந்தப் பிரகாரத்தைச் சுற்றி வரும் போது கல்லினால் செய்த திரிசூலம் ஒன்று இருந்தது. பக்கத்தில் வந்தவுடன் கந்தனின் மனம் கோவிலில் நுழைந்ததிலிருந்து உணராத ஒரு அருமையான உணர்வை பெற்றது. மனம் குவிவதை உணர்ந்த கந்தன் வியப்புடன் சுற்றிப் பார்க்க பக்கத்தில் பிடாரி அம்மன் சன்னிதி இருந்தது. அவன் மனத்தைக் காந்தம் போல் இழுத்தது அந்த சன்னிதி. சன்னிதிக்குள் நுழைந்து அங்கிருந்த பிடாரி அம்மனை வணங்கினான். மாரியம்மனைப் போல் இருந்த அந்த அம்மனை வணங்கிக் கொண்டே மணிகண்டனைப் பார்த்தான்.






"மணிகண்டா. இந்த அம்மன் யாரு?"

"பிடாரி அம்மன்னு சொல்லுவாங்க அண்ணா. அவ்வளவு தான் எனக்குத் தெரியும்"

கோவிலில் எங்குமே உணராத மன அமைதி ஏன் இங்கே கிடைத்தது என்று கந்தனுக்குப் புரியவில்லை. குவிந்த மனத்துடன் பிடாரி அம்மனை மீண்டும் மீண்டும் வணங்கினான். வணங்க வணங்க மனம் இன்னும் நன்றாகக் குவிந்தது. மனம் நிறைந்தது.

"இப்ப வீட்டுக்குப் போனா தான் சாப்பாடு முடிச்சு மேல போயி தூங்கலாம்"

மணிகண்டன் சொல்ல மூவரும் அதிகம் பேசாமல் வீட்டிற்கு நடந்தார்கள். இரவு உணவு முடித்துவிட்டு மீண்டும் மலை ஏறும் போது தான் இரவை மலையில் கழிக்கப் போகிறோம் என்பது கந்தனுக்கு உறைத்தது. அது வரை மணிகண்டன் வீட்டில் தான் தங்கப் போகிறோம் என்று நினைத்திருந்தான்.

"மலை மேல குளிருமா மணிகண்டா?"

"இந்த வெயில் காலத்துல குளிர எல்லாம் செய்யாது அண்ணா. நல்லா இதமா இருக்கும்"

"கொசுத் தொல்லை இருக்குமா?"

"கொசுவெல்லாம் இருக்காது அண்ணா. அப்படியே இருந்தாலும் உங்களுக்குத் தெரியாது. இன்னைக்குச் சுத்துன சுத்துல நல்லா அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கப் போறீங்க"

உண்ட மயக்கமும் கொஞ்சம் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான் கந்தன். அரைகுறை மனத்துடனேயே மலை மேல் ஏறினான்.

20 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

ஆகா, இருதரம் போயும் இந்த சூலத்தை நான் கவனித்தது இல்லை. பட்டாரிகா என்னும் ஒரு பெயர்தான் பிடாரி என்றானதாக படித்திருக்கிறேன்.

மெளலி (மதுரையம்பதி) said...

//கோவிலில் எங்குமே உணராத மன அமைதி ஏன் இங்கே கிடைத்தது என்று கந்தனுக்குப் புரியவில்லை. குவிந்த மனத்துடன் பிடாரி அம்மனை மீண்டும் மீண்டும் வணங்கினான்.//

ஏங்க குமரன் அப்படி ஒரு ஈர்ப்பு...அன்னை ஏதும் கவனைஈர்ப்பு தீர்மானத்துடன் அமர்ந்திருக்கிறாளா?

VSK said...

மலைவலம் முடித்து ஆலய தரிசனமும் சிறப்பாக முடிந்ததும், கதை ஒரு பெண்னை வைத்து நகரத் தொடங்கி இருக்கிறது!

மலையில் பெரியவர் என்ன சொல்லப் போகிறாரோ!

பார்க்கலாம்.

அண்ணமலைக்கு ஹரோஹரா!

இலவசக்கொத்தனார் said...

கந்தன் மனம் அலைபாய்ந்தது ரொம்ப இயற்கையா இருந்தது. பிடாரி அம்மன் என்ன ப்ளான் வெச்சு இருக்காளோ தெரியலையே....

Geetha Sambasivam said...

இப்போ தான் சொல்ல நினைப்பதைச் சொல்ல ஆரம்பிச்சிருக்கீங்கனு நம்பறேன். நல்லாப் போயிட்டிருக்கு. தொடரட்டும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//'எத்தனை பொண்ணுங்ககிட்ட மனசைப் பறி கொடுத்திருக்கேன்//

ஆகா...எனக்கு என்னமோ இது confession பதிவு மாதிரித் தான் தெரியுது! :-))

//டேய் நீ கந்தனா கண்ணான்னு ஓட்டியதும் நினைவிற்கு வந்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் கந்தன்//

டேய் நீ "குமரனா" கண்ணான்னு ஓட்டியதும் நினைவிற்கு வந்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டான் "குமரன்"

அப்படித் தானே குமரன்? :-)))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சுற்றுக்குச் சுற்று...சன்னிதி போட்டோவை எங்கண்ணே பிடிச்சீங்க? இல்லாக்காட்டி நீங்களா புடிச்சதா? இல்ல சீவீஆரு கொடுத்து வுட்டாரா? :-))

//'பிள்ளையாரும் முருகனும் அம்மனோட குழந்தைங்க தானே. அவங்களுமா அம்மனிடம் பால் குடிக்கவில்லை? //

உண்ணா முலைக்கு வெளக்கம் சொல்லவே இல்லியே! பின்னூட்டத்துல சொல்லுங்க!

குமரன் (Kumaran) said...

அடுத்த முறை போகும் போது தேடிப் பார்த்து விடுங்கள் மௌலி. :-)

பட்டாரிகா, பிடாரி இரண்டுமே முடிசூட்டப்பட்ட தலைவி என்ற பொருளைத் தரும் சொற்கள். இதிலிருந்து அதுவோ அதிலிருந்து இதுவோ வந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

குமரன் (Kumaran) said...

//ஏங்க குமரன் அப்படி ஒரு ஈர்ப்பு...அன்னை ஏதும் கவனைஈர்ப்பு தீர்மானத்துடன் அமர்ந்திருக்கிறாளா?
//

நீங்கள் அடுத்த முறை செல்லும் போது பார்த்துச் சொல்லுங்கள் மௌலி.

குமரன் (Kumaran) said...

அண்ணாமலைக்கு ஹரோஹரா!

நன்றி எஸ்.கே.

குமரன் (Kumaran) said...

அனுபவமா கொத்ஸ்?! இயற்கையா இருந்ததுன்னு சொல்றீங்களே அதான் கேட்டேன். :-)

Unknown said...

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இப்படிப்பட்ட உயர்வு தாழ்வுகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவை நடக்கும் போது தாழ்வாகத் தோன்றினாலும் பின்னர் திரும்பிப் பார்க்கையில் அதுவும் நன்மைக்கே என்று புரிகிறதல்லவா?

Very true....and very nice... Waiting for the next update :-)

Anbudan,
Natarajan

குமரன் (Kumaran) said...

இல்லீங்க கீதாம்மா. சொல்ல நினைக்கிறதை தொடர்ந்து சொல்லிக்கிட்டுத் தான் வர்றேன். :-)

குமரன் (Kumaran) said...

//அப்படித் தானே குமரன்? :-)))//

அருமையான கண்டுபிடிப்பு இரவிசங்கர். :-) நான் confess பண்றது இருக்கட்டும். கொத்ஸ் ரொம்ப இயற்கையா இருக்குன்னு சொல்லி confess பண்றார் பாத்தீங்களா? :-)

குமரன் (Kumaran) said...

படங்கள் எல்லாம் தந்து உதவியது http://www.arunachaleswarar.com/

கோவிலைப் பற்றி இந்த இடுகைகளில் சொன்ன தகவல்களை விட அதிகத் தகவல்கள் இந்த வலைப்பக்கத்தில் இருக்கின்றன.

உண்ணாமுலைக்கு என்ன விளக்கம் சொல்லணும்ன்னு தெரியலையே இரவிசங்கர். நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை நீங்களே சொல்லிடுங்க.

குமரன் (Kumaran) said...

நன்றி நடராஜன்.

G.Ragavan said...

பிடாரியம்மன் ரொம்ப எளிமையா இருப்பாங்களா? எளிமையைப் போல அருமருந்தில்லைன்னு சொல்வாங்க. மனசுக்குப் புரியுது. ஆனா ஆசை நாடலையே. ஆனா கந்தனுக்கு எளிமை பிடிச்சிருக்கு போல. நல்லதுதான். எதுனால அப்படியாச்சுன்னு அடுத்தடுத்த பகுதிகள்ல தெரிஞ்சிட்டுப் போகுது.

குமரன் (Kumaran) said...

எல்லா பெரிய கோவில்களிலும் பிடாரி அம்மன்/மாரியம்மன் எப்படி இருக்காங்களோ அப்படித் தான் திருவண்ணாமலை கோவிலிலும் இருக்காங்கன்னு நினைக்கிறேன் இராகவன்.

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் - கதை தொடங்குகிறது. கதாநாயகி அறிமுகம். கந்தன் இள வயதில் கண்ணனாக இருந்திருக்கிறான். அருமையான் வர்ணணை. கோவிலிலும் மனம் அலை பாய்வதைத் தடுக்க முடியாது. இருப்பினும் கோவிலை விட்டு வெளியே வரும் முன்பே மனம் அமைதி அடைந்து விடும். உண்னாமுலை அம்மன் - விளக்கங்களுக்குக் காத்திருக்கிறோம்.

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. இந்தக் கதையின் கதாநாயகனுக்கு நாயகி கடைசி அத்தியாயத்தில் தான் வருவாள். இந்த அத்தியாயத்தில் வந்தவள் கதாநாயகி இல்லை. :-)

ஏறக்குறைய எல்லா இளைஞர்களும் இந்தக் காலத்தில் அப்படி தான் கண்ணனாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் ஐயா. குறைந்த பட்சம் மனசளவிலாவது. :-)

உண்ணாமுலை அம்மன் என்ற பெயருக்கு இன்னும் என்ன விளக்கம் தருவது என்று தெரியவில்லை ஐயா. பெயர் என்ன சொல்கிறதோ அது தான் விளக்கம். இரவிசங்கர் தான் வந்து மேல் விளக்கம் தரவேண்டும்.

உண்மை ஐயா. கோவிலிலும் மனது அலைபாய்கிறது. ஆனால் பின்னர் அடங்கிவிடுகின்றது. அப்படித் தான் கந்தனுக்கும் ஆகியிருக்கிறது.