Sunday, December 30, 2007

புல்லாகிப் பூண்டாகி - அத்தியாயம் 12


எந்த ஒரு இடத்திலும் மூன்று நாட்களுக்கு மேல் தங்காத விரதத்தை மேற்கொண்ட தனது குரு தோதா புரி தக்ஷிணேஷ்வரத்தில் பதினோரு மாதங்கள் தங்கியிருந்தார் என்று கேள்விபட்ட போது மிகுந்த வியப்பாக இருந்தது ஜகன்மோகனுக்கு. அவருடைய வயது என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஒருமுறை குருநாதரே 150 வருடங்களுக்கு மேலாக வாழ்வதாகக் கூறினார். ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபட்டவர்களுக்கு நீண்ட நாட்கள் வாழ்வது பெரிய காரியமே இல்லை என்பதையும் கூறினார். ஆன்மிகப் பயிற்சிகள் கடுமையாக இருப்பதாலும் வெகு நீண்ட நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டிய தேவை இருப்பதாலும் ஏற்படும் தடங்கல்கள் எண்ணற்றவையாக இருப்பதாலும் இந்த மாதிரி நீண்ட ஆயுள் ஆன்மிகப் பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்குத் தேவையாக இருக்கின்றது என்பதையும் கூறி அருளினார்.

அவருடைய அருளினால் அத்வைத சித்தாந்தம் நன்கு ஜகன்மோகனின் ஆழ்மனத்திற்கும் புரிந்தது. கடந்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து அத்வைத அனுபவத்தைப் பெறுவதற்காக ஆன்மிகப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். குருநாதரின் கருணையால் அவரது ஆன்மிகப் பயிற்சியில் ஏற்பட்ட தடங்கல்கள் எல்லாம் அவை ஏற்பட்ட சில நாட்களிலேயே நீங்கி நல்ல முன்னேற்றம் அடைந்தது வந்திருக்கிறார்.



அப்படி தனது ஆன்மிகப் பயிற்சிகளில் உறுதுணையாக இருந்து வரும் குருநாதர் தனது விரதத்திற்கு மாறாக பதினோரு மாதங்கள் தக்ஷிணேஸ்வரத்தில் தங்கியிருந்தார் என்றால் அதற்கு மிகப்பெரிய காரணம் ஏதாவது இருக்க வேண்டும் என்று எண்ணினார் ஜகன்மோகன். இந்தக் கேள்வியுடன் குருநாதரை வணங்கித் தியானித்த போது அவரது திருவுருவம் தியானத்தில் எதிரே தோன்றியது.

"ஜகன்மோகன். தக்ஷிணேஸ்வரத்தில் என்ன இருக்கிறது என்பதை நீயே சென்று பார்"

இந்தக் கட்டளை கிடைத்தவுடன் கொஞ்சமும் தாமதிக்காமல் தக்ஷிணேஸ்வரத்திற்குக் கிளம்பிவிட்டார் ஜகன்மோகன். தக்ஷிணேஸ்வரம் சென்று அடைந்த போது காளி மாதாவிற்கு மாலை நேர பூஜை நடந்து கொண்டிருந்தது. காளிகட்டத்தில் நீராடிவிட்டு ஜகன்மோகன் கோவிலுக்குச் சென்று அடைந்த போது பூஜையின் நடுவில் இருந்த இராமகிருஷ்ணரைக் கண்டார்.


'இந்தச் சிலையின் முன்னால் இப்படி உணர்ச்சிகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓடும் படி உட்கார்ந்திருக்கும் இந்த மனிதனா நம் குருநாதரை இந்த இடத்தில் பதினோரு மாதங்கள் கட்டிப் போட்டது? இந்த சிலைக்கு செய்திருக்கும் அலங்காரமும் இந்த கூட்டத்தின் ஆரவாரமும் ஆன்மிகப் பயிற்சிக்குத் தடைகளாக அல்லவா இருக்கும்? இவருக்கா நம் குருநாதர் அத்வைத சித்தாந்தத்தைப் போதித்து நிர்விகல்ப சமாதிநிலையைக் காட்டுவித்தார்?'

காலம் முழுக்க உருவ வழிபாடு ஆன்மிகப் பயணத்தில் கீழ்படியில் இருப்பவர்களுக்கானது; உருவமும் குணமும் பெயரும் அற்ற எங்கும் நிறைந்த பிரம்மத்தையே தியானிப்பது தான் ஆன்மிகப் பயிற்சிக்கு உகந்தது என்று எண்ணி வரும் ஜகன்மோகனுக்கு இவையெல்லாம் குழப்பமாக இருந்ததில் வியப்பில்லை. அவரது குருநாதர் ஈஸ்வர தோதா புரியும் பலமுறை உருவ வழிபாட்டையும் அதில் மயங்கிப் போகும் உணர்ச்சிகளையும் அதனால் ஏற்படும் தடைகளையும் பற்றி சொல்லியிருக்கிறார். அதனால் தக்ஷிணேஸ்வரத்தில் கண்ட காட்சி பெரும்குழப்பமாக இருந்தது அவருக்கு.



இப்படி எல்லாம் எண்ணமிட்டுக் கொண்டிருந்த ஜகன்மோகன் கூட்டத்தோடு கூட்டமாக இராமகிருஷ்ணரின் அருகில் சென்றார். இன்னும் இராமகிருஷ்ணர் அன்னை பவதாரிணியின் திருவுருவத்திலேயே லயித்துப் போய் மெய்மறந்து கண்களில் நீர் சோர உடலெல்லாம் தொய்வுற்று உட்கார்ந்திருக்கிறார். அருகில் செல்ல செல்ல ஒரு பெரிய அதிர்வு தன்னைத் தாக்குவதை உணர்ந்தார் ஜகன்மோகன். பாதி தூரம் சென்ற போதே பல வருடங்களாகச் செய்து வந்த ஆன்மிகப் பயிற்சிகளினால் ஏற்பட்ட ஒழுங்குகளையும் மீறி அவருக்கு அங்கேயே தியானம் கைகூடியது. அப்படியே அந்த இடத்திலேயே அவர் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.

"ஜகன்மோகன். நான் பதினொரு மாதங்கள் இங்கே இருந்ததைப் பற்றித் தானே உனக்கு கேள்விகள். இங்கு என்ன நடந்தது என்பதை நீயே பார்"

குருநாதரின் குரல் இதனைச் சொன்ன பிறகு ஜகன்மோகனுக்கு தன் குருநாதருக்கும் இராமகிருஷ்ணருக்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகள் எல்லாம் தெரியத் தொடங்கின. சாரதா தேவியாரை மணந்து இல்லறத்தில் இருக்கும் ஒருவர், உருவ வழிபாட்டின் உச்சிக்குச் சென்ற ஒருவர், தான் ஐம்பத்திரண்டு ஆண்டுகளாக அடைய முயன்றுவரும் நிலையை, குருநாதர் தோதாபுரி நாற்பது ஆண்டுகள் முயன்று அடைந்த நிலையை ஒரே நாளில் அடைந்து அந்த நிலையிலேயே மூன்று நாட்கள் தங்கியிருந்தார் என்பதை அறிந்த ஜகன்மோகனுக்கு மிகுந்த வியப்பு ஏற்பட்டது. இப்படி ஒரே நாளில் நிர்விகல்ப சமாதி நிலையை அடைந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தனக்குச் சீடனாக இருந்த நிலையிலிருந்து தனக்குக் குருவாக இருந்து சொல்லித் தர நிறைய இருக்கிறது என்பதை உணர்ந்த தோதாபுரி தன் விரதத்திற்கு எதிராக அந்த இடத்திலேயே பதினொரு மாதங்கள் தங்கியிருந்தார் என்பதை உணர்ந்த ஜகன்மோகனுக்கு வியப்பு எல்லையை மீறியது.

கண் விழித்துப் பார்த்த ஜகன்மோகனின் எதிரில் காளி மாதா கோடி சூரியப் பிரகாசத்துடன் ஜொலித்துக் கொண்டிருந்தாள். தியானத்தில் ஆழும் முன் வெறும் மனிதனாகத் தோன்றிய இராமகிருஷ்ணர் அன்னையின் ஒளிக்கு ஈடான ஒளியுடனும் பொன்னிற மேனியுடனும் விளங்கிக் கொண்டிருந்தார். தானாக ஜகன்மோகனின் கரங்கள் இருவரையும் நோக்கி கூப்பின. அந்த நொடியில் தன் பஞ்ச கோசங்களிலும் மாற்றம் ஏற்பட்டதை உணர்ந்தார் ஜகன்மோகன். கை கூப்பிய படியே கோவிலை விட்டு வெளியே வந்து தனிமையான ஒரு இடத்தில் குருநாதரை வணங்கி தியானத்தில் அமர்ந்தார்.

அத்வைத வேதாந்தத்தில் கரை கண்டவரும் அனுபூதிமானும் ஜீவன் முக்தருமான தோதாபுரி தன் முக்கிய சீடர்களுள் ஒருவரான ஜகன்மோகனிடம் தியான நிலையில் பேசத் தொடங்கினார்.

"ஜகன்மோகன். நீ காண்பது கனவல்ல. உண்மையே."

"சுவாமி. அடியேனுக்கு அது புரிகிறது. ஆனால் இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை சாத்தியப்பட்டது?"

"இல்லறமோ துறவறமோ ஆன்மிகப் பயிற்சி செய்வதற்கு இரண்டுமே ஏற்றது தானே?"

"ஆமாம் சுவாமி. இரண்டுமே ஏற்றது தான். ஆனால் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு ஆன்மிகப் பயிற்சி செய்வதில் எண்ணற்ற தடைகள் ஏற்படுமே?"

"அது உண்மை தான் ஜகன்மோகன்"

"அப்படி இருக்க இராமகிருஷ்ணருக்கு எப்படி இந்த நிலை ஒரே நாளில் சாத்தியமானது?"

"அது தான் உனது உண்மையான கேள்வியா ஜகன்மோகன்?"

"இல்லை சுவாமி. என் மனத்தில் உள்ள குழப்பம் அது இல்லை தான். திருமணம் செய்வது ஆன்மிகப் பயிற்சிகளுக்குத் தடையானது என்ற எண்ணத்தில் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன். இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன். அது தான் குழப்பத்திற்குக் காரணம்"

"அதனை அறிகிறேன் ஜகன்மோகன். உனக்கு இன்னொரு ஆவலும் இருக்கிறது. அதையும் சொல்."

"ஆமாம் சுவாமி. உருவ வழிபாட்டில் ஈடுபட்டு அந்தச் சுவையையும் அறிய வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது"

"ஜகன்மோகன். இரண்டு ஆவல்களாலும் ஒரு குறையும் இல்லை. நீ விரும்பும் இந்த இரண்டு அனுபவங்களும் உனக்குக் கிடைக்கும். அவற்றால் குழப்பம் அடையாதே"

"அதெப்படி சுவாமி? இந்த அனுபவங்களை நான் அடைய வேண்டும் என்றால் நிர்விகல்ப சமாதியும் முக்தியும் எனக்கு இந்தப் பிறவியிலேயே கிடைக்குமா? இல்லை என்றால் நான் வழி தவறிப் போவதாக ஆகாதா?"

"ஜகன்மோகன். அனுபவங்களின் வாசனைகள் இரண்டு விதமாக நீங்கும். ஒன்று அந்த அனுபவத்தை முழுமையாக அனுபவித்துவிட தானாக அந்த வாசனையும் அதோடு சேர்ந்து வரும் ஆவலும் நீங்கும். மற்றொன்று அந்த அனுபவத்தைத் தரும் பொருட்கள் நம்மை விட்டு வலுவாக நீக்கப்பட்டு அதனால் அந்த அனுபவத்தைத் தொடர்ந்து பெறும் வாய்ப்பு இல்லாமல் போய் அந்த வாசனையும் ஆவலும் நீங்கும். உனக்கு ஏற்பட்டிருக்கும் ஆவல்களும் உன் முந்தைய பிறவிகளில் ஏற்பட்ட அனுபவங்களின் வாசனையே. முழுமையடையாத அந்த அனுபவங்கள் தான் உன்னை மீண்டும் அவற்றை அனுபவிக்கத் தூண்டுகின்றன. ஆன்மிக வாழ்வில் நன்கு முன்னேற்றமடைந்த உனக்கு அந்த அனுபவங்கள் மீண்டும் ஏற்பட்டாலும் வழி தவறிப் போக இயலாது. அதனால் கவலை வேண்டாம்"

"உண்மையாகத் தானா சுவாமி?"

"நிச்சயமாக. கவலை வேண்டாம். இந்தப் பிறவியில் தொடர்ந்து உன் ஆன்மிக முயற்சிகளைச் செய்து வா. அடுத்த பிறவியிலிருந்து உனக்கு நீ விரும்பும் அனுபவங்கள் ஏற்படும்"

***

நிர்விகல்ப சமாதி: மனம், மொழி, மெய் என்று மூன்று கரணங்களும் அவற்றின் உணர்வுகளும் நீங்கி எங்கும் நிறைந்து எல்லாமும் ஆகி நிற்கும் - பெயர், உருவம், இடம், காலம் என்று எல்லாவற்றையும் தாண்டி நிற்கும் - உண்மை, அறிவு, இன்பம் (சத் சித் ஆனந்தம்) இவற்றின் வடிவமாக நிற்கும் பரம்பொருளைக் காணும் நிலை; பரம்பொருளாகவே ஆகி நிற்கும் நிலை. விகல்பம் என்றால் வேறுபாடு; நிர்விகல்பம் என்றால் வேறுபாடு இல்லாத நிலை; சமாதி என்றால் ஆதிக்குச் சமமான நிலை. Nirvikalpa samadhi என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.

பஞ்ச கோசங்கள்: ஒவ்வொருவரையும் ஐந்து விதமான போர்வைகள் போர்த்தியிருக்கின்றன என்பது இந்திய தத்துவங்களின் கருத்து. உடல் என்னும் உணவால் ஆன அன்னமயகோசம்; உணர்ச்சிகளால் ஆன பிராணமய கோசம்; எண்ணங்களால் ஆன மனம் என்னும் மனோமய கோசம்; பெற்ற அனுபவங்களின் அறிவினால் ஆன விஞ்ஞான மய கோசம்; இன்பமே உருவான ஆனந்த மய கோசம். இந்த ஐந்து போர்வைகளும் ஒரு ஆத்மாவைச் சூழ்ந்திருக்கிறது என்பது இந்தியத் தத்துவங்களின் கருத்து. பஞ்ச கோசங்களைப் பற்றி விரிவாக இன்னொரு முறை பார்க்கலாம். Pancha kosha என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.

வாசனைகள்: முற்பிறவிகளிலும் இந்தப் பிறவியிலும் அடைந்த அனுபவங்களின் எச்சங்கள்; தொகுப்புகள். Vasana என்று தேடினால் கூகிளாரும் சொல்லுவார்.

10 comments:

கோவி.கண்ணன் said...

//"இல்லை சுவாமி. என் மனத்தில் உள்ள குழப்பம் அது இல்லை தான். திருமணம் செய்வது ஆன்மிகப் பயிற்சிகளுக்குத் தடையானது என்ற எண்ணத்தில் தான் நான் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தேன். இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன். அது தான் குழப்பத்திற்குக் காரணம்"//

இராமகிருஷ்ணர் திருமணம் ஆனவர், இல்லறவாசி என்ற அளவில் சரிதான், அவர் அன்னை சாரதாதேவியை அன்னையாகத்தான் நினைத்தார், அவர்கள் கணவன் மனைவியாக வாழவில்லை.

இராமலிங்க அடிகளாரும் திருமணத்தன்றே மனைவியை பிரிந்தார்.

குமரன் (Kumaran) said...

இராமகிருஷ்ண சாரதாதேவி தெய்வீகத் தம்பதியரைப் பற்றி நீங்கள் சொன்னதை அறிவேன் கோவி.கண்ணன். இராமலிங்க வள்ளலாரைப் பற்றிச் சொன்னதை இன்று தான் அறிந்தேன். நன்றி.

இலவசக்கொத்தனார் said...

ஒரு மாதிரி இந்தியா திக்விஜயமும் நடக்குது போல இருக்கே!! நடக்கட்டும் நடக்கட்டும். :)

cheena (சீனா) said...

நண்ப, குமர, நல் வாழ்த்துகள் - இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

படிக்கப் படிக்க இன்பம் - ஒவ்வொரு வரியையும் நிதானமாக, பொறுமையாக, பொருளுணர்ந்து படித்தேன். அருமை அருமை.

இராமகிருஷ்ணர் - சாரதா தேவி தம்பதிகளாக வாழ வில்லை. இராமலிங்க அடிகளாரும் மனைவியைப் பிரிந்தவர். திருமணம் செய்தவர்கள் ஆன்மீகப் பயிற்சிக்குத் தடையாக இல்லறத்தை உணர்ந்தார்களா ? அதனால் இல்லறத்திலிருந்து விலகினார்களா ? இல்லறத்திலும் ஆன்மீகத்திலும் சேர்ந்தே புகழ் பெற்றவர்கள் இல்லையா ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நிர்+விகல்ப+சம+ஆதி ன்னு பிரித்துச் சொன்னதற்கு நன்றி குமரன்!

//அது தான் உனது உண்மையான கேள்வியா ஜகன்மோகன்?"

"இல்லை சுவாமி. இன்று இராமகிருஷ்ணரைப் பார்த்த பின்னால் நான் எதையோ இழந்தது போல் உணர்கிறேன். அது தான் குழப்பத்திற்குக் காரணம்//

என்ன கேள்வி என்பது சரியாகப் புரிந்துவிட்டால்,
சரியான பதிலும் கிடைத்து விடும் அல்லவா குமரன்?

Geetha Sambasivam said...

அருமையான பதிவுகள், புதிய விஷயம் தெரிந்து கொண்டேன்.

ராமகிருஷ்ண பரமஹம்சர், இல்வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்பது தெரிந்தும், இல்லறவாசி எனக் குறிப்பிட்டதால் கோவிக்கு சந்தேகம் வந்ததோ என்னமோ? ஒரு நிமிஷம் நானும் கொஞ்சம் யோசித்தேன். :)))))

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். உலக திக்விஜயம் செய்யலாம்னு தான் ஆசை. ஆனா பொறுமையில்லையே. என்ன செய்ய? :-)

குமரன் (Kumaran) said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சீனா ஐயா. நிதானமாகப் பொறுமையாகப் படித்ததற்கு மிக்க நன்றி ஐயா. நானும் எழுதும் போது மிக்க கவனத்துடன் தான் எழுதினேன். எந்த தவறும் வந்துவிடக்கூடாது என்று நினைத்து எழுதியிருக்கிறேன்.

திருமண வாழ்விலிருந்து விலகியவர்களைப் பற்றி இங்கே பேசியிருக்கிறோம். திருமண வாழ்வில் இருந்த அருளாளர்களைப் பற்றி இரவிசங்கரின் பதிவில் உங்கள் கேள்விக்குப் பதிலாகப் பேசியிருக்கிறோம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உண்டு.

ஆன்மிகப்பயிற்சிக்குத் தடை அறுபகைவர்களான ஆசை, கோபம், கருமித்தனம், மயக்கம், கருவம், பொறாமை (காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸர்யம்) என்பவைகளே. துறவியானாலும் இவற்றில் எது இருந்தாலும் ஆன்மிகப்பயிற்சியில் தடையே. இல்லறத்தில் இவற்றின் அனுபவம் எளிதாக அமைந்துவிடுவதால் ஆன்மிகப்பயிற்சிக்குத் தடையாக இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இல்லறமோ தறவறமோ அவையே ஆன்மிகப் பயிற்சிக்குத் தடையில்லை.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இரவிசங்கர். நமக்கு என்ன கேள்வி என்பதே பல நேரங்களில் புரிவதில்லையே. அதனால் தான் நல்ல குரு நமக்கு உண்மையிலேயே என்ன கேள்வி என்பதை நாமே கண்டுபிடிக்கும் படி செய்துவிட்டுப் பின்னர் உண்மையான அந்தக் கேள்விக்குத் தகுந்த பதிலைத் தருகிறார்.

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. இந்த அத்தியாயத்தில் புதியதாக நான் எதுவுமே எழுதவில்லையே?!

இராமகிருஷ்ணர் இல்வாழ்க்கையில் ஈடுபடவில்லை என்றாலும் புற உலகிற்கும் அவரது சீடர்களுக்கும் அன்னை சாரதா தேவியார் அவரது துணைவியார் தானே. அந்த வகையில் இல்லறத்தில் ஏற்பட்ட அந்த 'மனைவி' என்ற பந்தத்தை பரமஹம்ஸரும் அவரது சீடர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன் அம்மா. எனக்கும் எழுதும் போது தயக்கம் வந்ததால் தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி கூறாமல் இல்லறத்தில் மனைவியுடன் வாழ்ந்தார் என்பதை மட்டுமே கூறினேன்.