Tuesday, August 21, 2007

கொழும்பு மயூராபதி அம்மன்

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தான 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவம்

[28 - July - 2007] [Font Size - A - A - A]

-கலாபூஷணம் செல்வத்தம்பி மாணிக்கவாசகர்-
கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானத்தின் 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மகோற்சவம் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகி (18.08.2007) சனிக்கிழமை பஞ்சரதோற்சவமும் (சித்திரத்தேர்) 19.08.2007 ஞாயிற்றுக்கிழமை காலை இந்து சமுத்திர தீர்த்தோற்சவமும் மாலை இந்திரவிழாவும் நடைபெறும்.

மேலும், ஆடிப்பூர மஹோற்சவத்தை முன்னிட்டு மங்கையரின் பால்குட பவனி நடைபெறவுள்ளது, இம்முறை நடைபெறவுள்ள பால்குட பவனியில் 2,500 க்கு மேற்பட்ட மங்கையர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இத்துடன் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அன்றைய தினம் இவ்விழாவிலே கலந்து கொள்ளலாம்.

பால்குட பவனி 15.08.2007 புதன்கிழமை காலை 7 மணிக்கு பம்பலப்பிட்டி சம்மாங்கோட்டார் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பமாகி லோறன்ஸ் வீதி, அமரசேகர மாவத்தை, ஹவ்லொக் வீதியூடாக மயூரா பிளேஸை வந்தடையும். அன்றைய தினம் மாலை 5.30 மணியளவில் இசை வல்லுநர்களின் பக்க வாத்தியத்துடன் சங்கீத வித்துவான் நாகராஜா `மாரியம்மன் தாலாட்டு' இசைக்கப்படும்.

மேலும், உலகில் ஏற்படும் தீமைகளைப் போக்குவதற்கும் நன்மைகளைப் பெருக்குவதற்கும், உலக உயிர்களுக்கு அருள் புரிவதற்குமாக அன்னை பராசக்தி பல்வேறு நிலைகளில் நின்று செயற்படுகின்றாள். இதனைச் சக்தியின் கூறுகள் அல்லது சொரூபங்கள் என அழைப்பர். சக்தியே அலைமகளாகவும் கலைமகளாகவும் உமையாகவும் காளியாகவும் துர்க்கையாகவும் வேறு பல சொரூபங்களாகவும் காட்சியளிக்கின்றாள்.

இச்சொரூபங்கள் யாவற்றுள்ளும் வீரத்தின் உறைவிடமாக விளங்குபவள் துர்க்கை. செல்வத்தின் உறைவிடமாக விளங்குபவள் திருமகள். கலைகளின் உறைவிடமாக விளங்குபவள் கலைமகள். இத்துடன் உலகப் பொருள்களின் இயக்கத்துக்கெல்லாம் சக்தி இன்றியமையாதது. இயற்கை சக்திக்கு அழிவில்லை என்பதை மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் ஒரு மனதாக ஒப்புக் கொள்கின்றனர். சக்தியின்றிச் சிவம் இல்லை. சிவம் இன்றி சக்தியில்லை. அசைவற்றிருக்கும் அறிவு வடிவத்தைச் சிவம் என்றும் அசைவுள்ள ஆற்றல் வடிவத்தைச் சக்தி என்றும் கூறுவர்.

இன்று கொழும்பு மாநகரில் சைவமும் தமிழும் தழைத்தோங்கவும் கலியுகத்தில் தொழுவார் துன்பம் துடைக்கும் தூய அம்பிகை வீற்றிருக்கும் ஆலயமே மயூரபதி ஷ்ரீ பத்திரகாளி அம்மன் தேவஸ்தானம். ஆதியில் இவ்வாலயம் மிகவும் சிறிதாக இருந்து நாளடைவில் இது வளர்ந்து இன்று மாபெரும் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு ஒரு பெரும் ஆலயமாக ஈழத்தில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் பெயர் பெற்று விளங்குகின்றது. இன்று 20 ஆவது ஆண்டு ஆடிப்பூர மஹோற்சவத்தை கொண்டாடும் தருணத்தில் இவ்வாலயமானது `ஆல்போல தழைத்து அறுகுபோல் வேரூன்றி' நிற்பதற்குக் காரணமாக அமைந்தவர் இவ்வாலயத்தின் அறங்காவலர் பொன். வல்லிபுரம் என்றால் மிகையாகாது

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரில் `மயூரா இடம்' என்ற இடத்தில் ஆங்கிலேய ஆட்சியில் ஓர் நெசவாலை (Wellawatte Spinning & Weaving mills) உருவானது. இத் தொழிற்சாலையில் வேலை செய்வதற்காகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு குடிமனைகள் அமைக்கப்பட்டு அமர்த்தப்பட்டார்கள். அவர்களின் வழிபாட்டிற்காக ஓர் அவை ஒதுக்கப்பட்டு வரதராஜப் பெருமாள் ஆலயம் என்று பெயரிடப்பட்டு வழிபாடு, பூசைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. 1977 தொடக்கம் 1980 வரையில் மண்டபத்திலே நடைபெற்றுக்கொண்டிருந்த வழிபாடு அருகில் இருந்த அரச மரத்தடிக்கு மாற்றப்பட்டது. இரு அரசமரங்களுக்கிடையில் ஓர் வேப்பமரமும் இருந்ததைக் கண்ட அடியார்கள் ஓர் சூலத்தை நிறுத்தி அன்னை காளி அம்மனாக வழிபடத் தொடங்கினர். ஓர் தகரக் கொட்டிலும் அமைக்கப்பட்டு அன்னையை வழிபட்டு வந்தனர்.சில காலம் செல்ல 1985 ஆம் ஆண்டில் அந்த இடத்திலே ஆலயம் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் ஒரு சிலரின் மனதில் உதிக்க ஓர் ஆலயம் உருவாக்கப்பட்டு சுற்றுமதிலும் , மண்டபமும் எழுப்பப்பட்டது. இக் காலங்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூசையும் சிவராத்திரி, நவராத்திரி, திருவெம்பாவை காலங்களில் விஷேட ஆராதனைகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

இப்படியாக வளர்ந்து வரும் காலத்தில் 1987 ஆம் ஆண்டு ஆனி மாதம் அறங்காவலர் பொன். வல்லிபுரம் அம்பாளின் அழைப்பை ஏற்று ஆலயத்தைப் பார்க்கச் சென்றார். அப்போது கும்பாபிஷேகத்துக்கு நாள் நியமிக்கப்பட்டு விட்டதாகச் சொன்னார்கள். ஆனால், மூர்த்திகள் மகாபலிபுரத்திலிருந்து வந்து சேரவில்லை. கும்பாபிஷேகம் செய்வதற்கு குருக்களுமில்லை என்று வேதனைப்பட்டார்கள்.

அதை உணர்ந்த பொன். வல்லிபுரம் முன்னாள் இந்துகலாசார அமைச்சர் செல்லையா இராசதுரையின் உதவியினால் விக்கிரகங்கள் எல்லாம் தருவிக்கப்பட்டன. மேலும் கப்பித்தாவத்தை பாலசெல்வ விநாயகமூர்த்தி ஆலயம் பிரதம குரு சிவஸ்ரீ சண்முகரத்தின சர்மா அனுசரணையுடன் பிரதிஷ்டா சிரோன்மணி சாமி விஸ்வநாதகுருக்கள் கும்பாபிஷேகம் செய்வதற்கு முன்வந்தார்கள். கார்த்திகை மாதம் பூர்வபட்ச உத்தராட நட்சத்திரத்திலே 25.11.1987 புதன்கிழமை மிகவும் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாட்கள் மண்டலாபிஷேகமும் நடைபெற்றது. 1988 ஆம் ஆண்டு அம்பாளின் உற்சவமூர்த்திக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அக்காலகட்டத்தில் ஸ்ரீ சிவபாலயோகி சுவாமிகளும் ஆலயத்திற்கு விஜயம் செய்து ஆசீர்வதித்தார்கள். இவ்வாண்டிலேதான் சிறார்களுக்காக அறநெறிப்பாடசாலையும் நடனப் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டது. 1988 இல் இருந்து இன்று வரை ஆடிப்பூர இலட்சார்ச்சனையும் பௌர்ணமித் திருவிழாவும் தங்கு தடையின்றிச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது.

கொழும்பு மயூராபதி அம்மன் எண்ணற்ற மக்களுக்குப் பாதுகாப்பையும் அருளையும் வாரி வழங்குகிறாள் என்பதற்கு இவ்வாலயத்தில் அலைமோதும் பக்தர்களின் கூட்டமே சாட்சி. இங்கு சாதி, மத, இனபேதங்கள் ஒன்றும் கிடையாது. அனைவரும் அவளது குழந்தைகள். சாந்தியும் , ஒற்றுமையும் சமாதானமும் இங்கு இயல்பாக மலர்ந்து நிற்கின்றது.

நன்றி: தினக்குரல்

***

கொழும்பு மயூராபதி அம்மன் கோவில் தேர்த்திருவிழா பற்றி படங்களுடன் மாயாவின் பதிவில் பார்த்தேன். பின்னர் இணையத்தில் மயூராபதி அம்மனைப் பற்றி தேடிப் பார்த்ததில் கிடைத்த தினக்குரல் செய்தியினை இங்கே தருகிறேன்.

6 comments:

மாயா said...

நன்றி அண்ணா

கானா பிரபா said...

மிக்க நன்றிகல் குமரன், தவறவிட்ட செய்தியைத் தேடித் தந்தமைக்காக

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
மிக்க நன்றி!
தினக்குரல் படிக்க நேரமிருக்கா??? ஆச்சரியம்.

குமரன் (Kumaran) said...

மாயா. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். படங்கள் போட்டு ஆர்வத்தைத் தூண்டியவர் நீங்கள் தானே.

குமரன் (Kumaran) said...

நன்றி பிரபா.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. இதற்கு முன் தினக்குரல் படித்ததில்லை. மாயாவின் பதிவைப் பார்த்துவிட்டு 'மயூராபதி அம்மன்' என்று கூகிளில் தேடிய போது கிடைத்தது தினக்குரல் பக்கம்.