Monday, November 21, 2005

58: நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்...

அதிகாலை நேரம். நேற்று இரவு ஒரு நல்ல பாலகுமாரன் நாவல் படித்ததால் இரவு தூங்குவதற்கு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் என்ன? வழக்கம் போல் அதிகாலையில் எழுந்தால் தானே வீட்டில் செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு அலுவலகம் செல்ல முடிகிறது. இன்றும் காலை எழுந்ததில் இருந்து ஒரே வேலை. இன்று அவசியம் காய்கறி வாங்க சந்தைக்குப் போகவேண்டும். காலையில் போனால் தான் புத்தம் புதிதாய் வந்த காய்கனிகள் கிடைக்கும். அதனால் எத்தனை வேலை இருந்தாலும் மற்றவர் போல் மாலையில் சந்தைக்குப் போகாமல் முடிந்தவரை காலையிலேயே போவதை வழக்கமாய் வைத்துக்கொண்டிருக்கிறேன்.

இதோ சந்தைக்கு வந்தாயிற்று. நல்லவேளை. இன்றைக்குச் சந்தையில் அவ்வளவாய் கூட்டம் இல்லை. சனி ஞாயிறு என்றால் ஆற அமர காய்கனிகளைத் தேர்ந்தெடுத்து பேரம் பேசி வாங்கலாம். ஆனால் இன்றோ அலுவலகம் செல்லவேண்டும். அதனால் அவசர அவசரமாய் எங்கெங்கு நல்ல காய்கறி தென்படுகிறதோ அங்கெல்லாம் அவ்வளவாய் பேரம் பேசாமல் வாங்கிவிட்டு போகவேண்டியது தான்.

அது யார்? புதிதாய் ஒரு பாட்டி தெருவோரம் எதையோ விற்றுக்கொண்டிருக்கிறாளே? இதுவரை அவரை இங்கு பார்த்ததில்லை. முள்ளங்கி மட்டும் தான் வைத்துக்கொண்டிருக்கிறார். நன்றாய் வெள்ளையாய் நீளமாய் ஒல்லியாய் இளசாய் இருக்கிறது. சாம்பாரோ குழம்போ வைத்தால் நன்றாய் இருக்கும்.

என்னைப் பார்த்தவுடன் பாட்டி 'ஒன்னு ஒரு ரூபாதான். எடுத்துக்கோ சேட்டு' என்றாள். குரல் மிகவும் நடுங்கியது. ஒரு 80, 90 வயதாவது இருக்கும். நான் ஒன்றும் சொல்லவில்லை. இந்த தள்ளாத வயதில் காய்கறி விற்கும் படி என்ன கஷ்டமோ?

'சேட்டு. நீ தான் போணி பண்ணி வைக்கணும். மூனு ரெண்டு ரூபாக்கு குடுக்கறேன். வாங்கிக்கோ' . இன்னும் நான் முள்ளங்கிகளையும் அந்த பாட்டியையும் மாறி மாறி பார்த்துகொண்டிருந்தேன்.

ஒரு ஆறு முள்ளங்கிகளை எடுத்துக் கொண்டு 'இத எல்லாமே எடுத்துக்கோ சேட்டு. அஞ்சு ரூவா குடு போதும். எல்லாத்தையும் அப்படியே சாப்புடலாம். அவ்வளவு எளசு' என்றாள். இதற்கு மேல் பாவம் ஒன்றும் சொல்லாமல் இருக்கக்கூடாது. அவருக்கு ஏதோ அவசரம். சீக்கிரம் விற்றுவிட்டுப் போக விலையை குறைத்துக்கொண்டே போகிறார். என்னை சேட்டு என்று வேறே நினைத்துவிட்டார் போல. அது தான் முள்ளங்கியை அப்படியே தின்னலாம் என்கிறார்.

'பாட்டி. நான் சேட்டு இல்ல. தமிழ் தான். அந்த ஆறு முள்ளங்கிய குடுங்க' என்றேன்.

'அப்படியா தம்பி. செவப்பா குண்டா பாத்தவுடனே சேட்டுன்னு நெனச்சேன்' என்றார். நான் சிரித்து விட்டு 5 ரூபாய் கொடுத்துவிட்டு அந்த முள்ளங்கிகளை வாங்கிக்கொண்டேன்.

'உங்கள இதுவரைப் பார்த்ததே இல்லையே. புதுசா வந்திருக்கீங்களா?'

'இல்லியேப்பா. நான் எப்பவும் இங்கயே தான் உக்காந்திருப்பேன். நீதான் இந்தப் பக்கமே பாக்கறதில்ல.'

'அப்படியா பாட்டி' என்று சிறிது வழிந்துவிட்டு வந்துவிட்டேன். அவருக்கு என்ன கஷ்டம் என்று கேட்க நினைத்தும் ஏதோ ஒன்று கேட்கவிடாமல் தடுத்தது. நீதான் இதுவரை என்னை பார்க்கவில்லை என்று சொன்னாரே அதுவாய் இருக்குமோ? இருக்கலாம். எனக்கு கண் தெரியவில்லை என்றல்லவா சொல்லிவிட்டார். அவர் எக்கேடு கெட்டால் எனக்கென்ன? நமக்கு ஆயிரம் வேலை இருக்கிறது. நாமுண்டு நம் வேலை உண்டு என்று இருக்கவேண்டியது தான்.

-----------------------------------------

கடந்த மூன்று வாரங்களாக சந்தை பக்கமே போகவில்லை. சரியான வேலை. இருக்கும் காய்கறிகளை வைத்து காலம் தள்ளியாச்சு. ஆனால் அந்த பாட்டியை பற்றிய கேள்வி மனதில் உறுத்திக்கொண்டே இருந்தது. நாம் அப்பொழுதே அந்த பாட்டிக்கு என்ன கஷ்டம் என்று கேட்டு ஏதாவது முடிந்த அளவு உதவி செய்திருக்க வேண்டும். ஏன் தான் இப்படி இருக்கிறோமோ? இந்த நான் என்ற எண்ணத்தை அந்த ஏழைக்கிழவியிடம் கூடக் காண்பிக்கவேண்டுமா? நாமெல்லாம் என்ன மனித ஜென்மமோ? சுற்றி எத்தனையோ பேர் கஷ்டப்படும்போது முடிந்த உதவி செய்யாமல் நமக்கென்ன என்று வந்துவிடுகிறோம்.
இன்றைக்கு அவசியம் சந்தைக்குப் போகவேண்டும். போகும்போது நிச்சயமாய் அந்தப் பாட்டியைப் பற்றி விசாரித்து ஏதாவது உதவி செய்யவேண்டும்.

எங்கே அந்தப் பாட்டியைக் காணோமே? தினமும் இங்கு தான் உட்கார்ந்திருக்கிறேன் என்று பொய் தான் சொன்னார் போல. வாரத்திற்கு ஏதோ ஒரு நாள் வருவார் என்று நினைக்கிறேன். இதற்கு முன் நான் வரும் போதெல்லாம் அவர் வந்ததில்லை போலும்; அதனால் தான் நான் பார்க்கவில்லை.

அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த பாதை ஓரம் இருந்த கடைக்காரரிடம் அவரைப் பற்றி விசாரித்தேன்.

'இங்க ஒரு பாட்டி உக்காந்திருந்துச்சே. எங்க அந்தப் பாட்டி?'

'அந்தப் பாட்டிக்கு என்ன சார். சந்தோசமா போய் சேந்துருச்சு'.

ஓ....அந்தப் பாட்டிக்கு எந்த கஷ்டமும் இல்லையோ; நாம் தான் தேவையில்லாமல் கற்பனை செய்து கொண்டோமோ? யாரோ மகனோ மகளோ இல்லை வேறு உறவுக் காரர்களோ அவரை சந்தோசமா வைத்திருக்கிறார்கள் போல. அந்த கடைக்காரர் என் பதிலை எதிர்பார்க்காமல் மேலும் தொடர்ந்தார்.

'அந்த பாட்டி தினமும் இங்கன உக்காந்து தான் வித்துகிட்டு இருக்கும். அது போயி மூனு வாரம் போல ஆச்சே. என்னைக்கு சார் நீங்க பாத்தீங்க'

'நானும் ஒரு மூனு வாரத்துக்கு முன்னால பாத்தேன். அவங்க தினமும் வர்றவங்க தானா?'

'ஆமாம் சார். சின்ன வயசிலயே புருசங்காரன் செத்துபோயிட்டான். ரெண்டு பொண்ணுங்க. கஷ்டப்பட்டு அவங்களை வளத்து கல்யாணமும் பண்ணி குடுத்தாச்சு. அதுக்கப்பறமும் கஷ்டப்பட்டு இந்த காய்கறி வியாபாரம் செஞ்சுகிட்டு இருந்தாங்க. செத்து போற கடைசி நா வரைக்கும் கஷ்டப்பட்டு எப்படியோ இப்ப சந்தோசமா போய் சேந்துட்டாங்க'.

ஓ...அந்த சந்தோசமா போய்ச் சேர்வதைத் தான் அந்த கடைக்காரர் சொன்னாரா? மனம் பாரமாய் இருந்தது. வேறு ஒன்றும் சொல்லாமல் நடையைக் கட்டினேன்.

33 comments:

சிவா said...

குமரன்! இது நீங்களா! ஏதோ பாடலுக்கு விளக்கம் பார்க்க வந்தா, அசத்திப்புட்டியலே, அசத்தி. உண்மை தான், நெறைய சமயம் நம் உள் மனசு அடிச்சிக்கும் 'ஏதாவது பண்ணலாமே' என்று. ஆனால் இறங்கி வந்து பண்ணுவது சில நேரமே. உங்களுக்கு இப்படியும் எழுத வரும் என்று பார்க்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. இனி கூடலில் இப்படி நிறைய எதிர் பார்க்கிறேன்.

Anonymous said...

நல்ல பதிவு குமரன். சிவா சொன்னது போல - Why don't you dedicate this blog for such articles - மற்ற விளக்க உரைகள் எல்லாம் வேறு Blog ல் நடக்கட்டும். :-)

Unknown said...

What should I say about this? Many think the same way. Our DreamIndia movement started the same way. I was thinking, thinking and thinking a lto to get a bag of rice and wheat for Tara Bhai, finally I asked Varun. He said, we can always, I am there with you. So Swami, Mohamed, Varun and I we got that for her. That was the first time. Once I broke that feeling of hesitation, I have never had problems in speaking to old people. I used to sit and lsiten to a old lady near Akruti. Now my friends in Mumbai are taking care of her. I would be really happy, if people can let us know about more old people like this,so that we can help. All of us will reach that stage one day.

It is nice that you could write something like this. Second time I see u come up with some social issues, one was during Tsunami time. Hope your words will change a few.

Anbudan,
nata

ஞானவெட்டியான் said...

நிகழ்வு மனம் நெகிழச் செய்துவிட்டது.
அதன் தலைப்பே என்ன செய்திருத்தல் வேண்டும் எனக்குறிப்பது அருமை.

Unknown said...

குமரன்,
படித்தவுடன் மனம் கனத்துவிட்டது.
எனக்கும் இது போல் சில சம்பவங்கள் நடந்துள்ளது. இப்போதெல்லாம் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன்.
"நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்"

Anonymous said...

Kumaran,
Excellent article !! Like others said, I too came here expecting explanation for Sanga Tamil songs. Many times, I've had this same feeling (oscillating mind - thinking whether they need our help or not; even if they are in need of some help, to help them then and there or later etc.). Thanks again Kumaran.

Kumaresh

குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவா நான் தான். பாராட்டுகளுக்கு நன்றி.

//உங்களுக்கு இப்படியும் எழுத வரும் என்று பார்க்கும் போது //

கல்லூரியில் படிக்கும் போது நிறைய கதைகள் எழுதியுள்ளேன். (எத்தனை என்று கேட்காதீர்கள். சொல்லும் அளவுக்கு இல்லை) :-) அப்துல் கலாம் பிறந்த நாளுக்கு ரொம்ப நாட்களுக்கு அப்புறம் கவிதை எழுதிய மாதிரி இப்போது ரொம்ப நாட்களுக்கு அப்புறம் கதை எழுதியிருக்கிறேன். இதே மாதிரி கூடலில் இன்னும் சில கதைகள் வரும். :-)

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி பானுவாசன். (உங்கள் பெயருக்குக் கொஞ்சம் விளக்கம் கொடுக்கிறீர்களா? எனக்குத் தெரியும் உங்கள் இயற்பெயர் கார்த்திக் என்று. அது தான் உங்கள் புனைப்பெயரைப் பற்றி கேட்கிறேன்).

கூடலில் கதைகளும் இனிமேல் வரும் கார்த்திக். ஆனால் உங்கள் அளவுக்கு எழுத முடியுமா என்று தெரியவில்லை. :-)

குமரன் (Kumaran) said...

//It is nice that you could write something like this. Second time I see u come up with some social issues, one was during Tsunami time. Hope your words will change a few.
//

நடராஜன். நிறைய இது மாதிரி எழுதலாம் தான். ஆனால் சொன்னதையே சொன்னால் போரடிக்காதா? சொல்லை விட செயலில் காட்டுவது நல்லது. அதைத்தான் நம் நண்பர்கள் உதவியுடன் நாம் செய்கிறோமே அது போதும்.

யாரையும் மாற்ற வேண்டி இதை எழுதவில்லை. யாரிடமாவது குறை இருந்தால் தானே மாறுவதற்கு. நல்ல காரியம் செய்யும் முன் எற்படும் சிறு தயக்கம் எல்லாருக்கும் உண்டு. அதைதான் இங்கு எழுதியுள்ளேன்.

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி ஞானவெட்டியான் ஐயா. சொல்லுதல் யார்க்கும் எளிய. அதைப் போல் இங்கு தலைப்பில் என்ன செய்திருக்க வேண்டும் என்று குறித்திருக்கிறேன்; ஆனால் எப்போதும் அதை செய்ய முடிகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும்.

குமரன் (Kumaran) said...

கல்வெட்டு அண்ணா/அக்கா. வருகைக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி. நீங்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது உங்கள் பதிவுகளைப் பார்க்கும் போது நன்றாய்த் தெரிகிறது. மகிழ்ச்சி. நானும் கூடுதல் கவனத்துடன் இருக்க முயற்சி செய்கிறேன்.

குமரன் (Kumaran) said...

அன்பு குமரேஷ். வருகைக்கு நன்றி. நீ என் எல்லாப் பதிவுகளையும் படிக்கிறாய் என்று தெரியும் ஆனால் இன்று தான் உன் கருத்தினைச் சொல்லியிருக்கிறாய். நன்றிகள்.

//Like others said, I too came here expecting explanation for Sanga Tamil songs//

உங்கள் எதிர்பார்ப்பின் படி சங்கத் தமிழ்ப் பாடல் விளக்கம் நிச்சயமாய் சொல்லப்படும். :-) ஆனால் அவ்வப்போது இது போல் diversion இருக்கும்.

Unknown said...

The change I mentioned is to "get rid" of the hesitation and nothing else.

You seem to have got that wrong.

Anbudan,
nata

குமரன் (Kumaran) said...

Oh Ok. ஆனால் அந்த தயக்கம் என்னை முதற்கொண்டு எல்லோருக்கும் இருப்பதால் அதனை ' ' பண்ண முடியுமா என்று தெரியவில்லை. கல்வெட்டு சொன்ன மாதிரி கூடுதல் கவனத்துடன் இருக்க முயல்வது தான் நாம் இப்போது உடனே செய்யமுடிவது; செய்யவேண்டியது.

Anonymous said...

I guess everyone comes across such incidents in their day to day life and I guess you have described it in a nice and touchy way. Good start Kumaran...!

குமரன் (Kumaran) said...

Thanks for your comments Anand.

Anonymous said...

Dear MNK,
Very good. Nadai is so good. You can continue like this.

Best wishes.

NS Kumaran.

G.Ragavan said...

குமரன், கலக்கீட்டீங்க கலக்கி. இன்னும் என்ன எழுதாம மிச்சம் வெச்சிருக்கீங்க? அதையும் எழுதி அனைத்தும் எழுதிய ஆல்ரவுண்டர் பட்டம் கொடுத்திருவோம்.

மதுமிதா said...

குமரன்

ஒரு பதிவு இட எண்ணியிருந்தேன்.
அதை உடனே செய்திருக்கணும்னு இப்ப நினைக்கிறேன்.

உண்மையிலேயே இது சிறுகதையா?
வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வா தெரியுது.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு பாட்டியை கடந்துதான் வரவேண்டியிருக்கிறது.

இது கதைன்னா
உங்களுக்கு கதையும் நெகிழ்வா எழுத வருது குமரன்

குமரன் (Kumaran) said...

அன்பு நண்ப NS குமரன்,

பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

குமரன் (Kumaran) said...

இராகவன். நன்றி. இன்னும் ஒவ்வொன்னா வந்துகிட்டு இருக்கு. ஆனா ஆல்ரவுண்டர்ன்னு பெயர் வாங்க முடியுமான்னு தெரியல. :-)

குமரன் (Kumaran) said...

//ஒரு பதிவு இட எண்ணியிருந்தேன்.
அதை உடனே செய்திருக்கணும்னு இப்ப நினைக்கிறேன்.
//
மதுமிதா அக்கா. நன்றே செய்மின் அதை இன்றே செய்மின். :-)

//இது கதைன்னா
உங்களுக்கு கதையும் நெகிழ்வா எழுத வருது குமரன்
//
வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி. நன்றிகள் அக்கா.

சிங். செயகுமார். said...

வணக்கம் குமரன் ! எனக்கும் கதை எழுதனும்னு ஆசைதான் உங்களையெல்லாம் பார்த்தா பயமா இருக்கே!

துளசி கோபால் said...

குமரன்,

இந்தப் பதிவை எப்படி இத்தனைநாள் கோட்டைவிட்டேன்னு தெரியலை(-:

தலைப்புலே சொன்னதுலே
//நன்றே செய்மின் அதை இன்றே செய்மின். // ஒரு ச்சின்ன மாற்றம் வேணுமே.

'இன்றே செய்மின்' கிடையாது. இப்போதே, இந்த க்ஷணமே செய்மின்.

ஒரு நொடி தவறுனாலும் அப்புறம் செய்ய மனசு வராது. அந்த எண்ணம் மாறிடும்.

நல்ல பதிவு. இப்படி எத்தனைதரம், பின்னாலே திரும்பிப் பாக்க்றப்ப செய்யாமப் போனோமேன்னு பச்சாதாபம் உண்டாயிருக்குது. ஹூம்...

குமரன் (Kumaran) said...

செயகுமார். கிண்டல் தானே செய்கிறீர்கள். :-)

நான் எழுதுவதெல்லாம் கதையிலேயே சேராதுன்னு சிலபேர் சொல்றாங்க. நீங்க என்னடான்னா...

நீங்களும் கதை எழுதுங்கள். என்னைப் போன்றவர்கள் நிச்சயம் படிப்போம்.

குமரன் (Kumaran) said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி அக்கா. உண்மைதான். இன்றே செய்மின் இல்லை. இப்போதே இந்தக்கணமே செய்மின் தான் சரி.

தருமி said...

ம்..ம்ம்...பல்துறை மன்னர்தானோ! நல்லது. இனிதே நடக்கட்டும். வாழ்த்துக்கள்.

குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு நன்றி தருமி ஐயா. எல்லாம் உங்க ஆசிர்வாதம் (நீங்க தானே 40 வயசுக்கு கீழ இருக்கற எல்லா வலைப்பதிவு பிள்ளைகளுக்கும் மொத்தமா ஆசிர்வாதம் செஞ்சது. அதுல நானும் இருக்கேன். அதான் என்னையும் ஆசிர்வாதம் பண்ணுனதா நினைச்சுகிட்டேன்). :-)

cheena (சீனா) said...

குமரன், என்ன எழுதுவது என்று தெரியவில்லை. சில நினைவுகளில் நமது அலை வரிசை ஒரே மாதிரி இருக்கிறது. We r in the same wave length. இது மாதிரி பாட்டிகளை வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறோம். என்ன செய்கிறோம். ம்ம்ம்ம்

திரும்பச் சந்திக்க ஆசைப்படும் போது - முடியவில்லையே - வருத்தத்திற்கு எல்லைஇல்லை.

துளசி கூறிய படி, மனதில் தோன்றிய அக்கணமே செய்து விட வேண்டும். ஒரு மணித்துளி தள்ளிப் போட்டாலும் தவறுவதற்கு வாய்ப்பு உண்டு.

மனம் பாரமாக இருக்கிறது

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. மனப்பாரத்தை நீக்குங்கள். இறைவன் நமக்கு என்று கொடுத்ததை வைத்து அவனுக்குத் தொண்டாக மற்றவர்களுக்கு முடிந்த வரை உதவுவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து தொடங்கலாம். இப்படி முன் பின் தெரியாத பாட்டி தாத்தா சிறுவர் சிறுமியர்களுக்கு உதவுவதில் கூட ஏமாற்றிவிடுவார்களோ என்ற தயக்கம் இருக்கிறது. அதனால் நாம் நன்கு அறிந்த நம் உறவினர்கள் நண்பர்கள் என்று தொடங்கலாம். தீபாவளி பதிவில் சொன்னது போல் வீட்டில் வேலை செய்பவர்களிடம் இருந்தும் தொடங்கலாம். அப்போது அந்த 'ஏமாற்றிவிடுவார்களோ' என்ற தயக்கமும் வராது. இல்லையா?

படித்து உங்கள் கருத்தினைச் சொன்னதற்கு மிக்க நன்றி சீனா ஐயா.

cheena (சீனா) said...

குமரன், கருத்துக்கு நன்றி.

ஈகைத் திருநாளன்று, யாருக்கு உதவி செய்ய வேண்டும் என எப்படித் தீர்மானிக்கிறீர்கள் எனக் கேட்டபோது,
இசுலாமிய நண்பர் ஒருவர் கூறியது:

முதலில் உறவினர்கள், அடுத்து நண்பர்கள், அடுத்து அண்டை வீட்டுக்காரர்கள், அடுத்து முகம் தெரியாதவர்கள் - என வரிசைப்படுத்தி, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப உதவ வேண்டும் என அவர்களின் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறதாம்.

தங்களின் கருத்தும் இதையே கூறுகிறது. இவ்வழியைத் தொடரலாம்.

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. அது நல்ல வழியாக எனக்குத் தோன்றுகிறது. ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் இப்படி ஒரு முறை உதவி செய்துவிட்டால் அப்படியே தொடர்ந்து செய்வோம் என்று அவர்களால் முடிந்த வேலையையும் செய்யாமல் இருந்துவிடுகிறார்கள் சில நேரத்தில் - உறவினர்களிடம் இதனை நிறையக் காணலாம். அதனால் அந்த எண்ணம் அவர்களிடம் வராத முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒரு நல்ல வழி 'மீனைக் கொடுக்காதே. மீன் பிடிக்கக் கற்றுக் கொடு' என்பார்களே. அந்த வகையில் உதவியைச் செய்வது.

cheena (சீனா) said...

குமரன், இக்கருத்தும் சரியானதே - உடன்படுகிறேன். ம்ம்ம் - மீனைப் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது சிரமமான காரியம் அல்லவா ? இருப்பினும் மனதில் கொள்கிறேன்.