Thursday, February 26, 2009

உடுக்கை இழந்தவன் கை - 15 (பாரி வள்ளலின் கதை)

‘எத்தனை ஊர்களுக்குத் தான் செல்வது? வீரர்கள் என்றும் வள்ளல்கள் என்றும் பெரும் புகழ் கொண்ட இந்த வேளிர்கள் எல்லாம் வேந்தர்களின் பொல்லாப்பு நமக்கெதற்கு என்று அரசவையினர் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொண்டும் வேந்தர்களுக்குப் பெண் கொடுப்பது வேளிர்களின் வழக்கம் தானே; பின் ஏன் பாரி வேள் பெண் தர மறுத்தான் என்று கேள்வி கேட்டும் பாரிமகளிரை மணக்க மறுக்கின்றனர்.

எங்கும் நிறைந்த இறையே. என் நண்பன் பாரி சென்ற வழியே நானும் செல்ல மனம் துடிக்கின்றது. அவனுக்குத் தந்த வாக்கினை மட்டும் நிறைவேற்றிவிட்டேனென்றால் போதுமே. பிரிவெனும் துயரைத் துடைத்து எறிந்து விடலாமே. அதற்கு ஒரு வழி காட்ட மாட்டாயா?

இன்னும் ஓரிரு வேளிர்கள் தான் இத்தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடமும் சென்று என் மக்களை மணக்கக் கேட்கிறேன். அவர்களும் மறுக்காமல் இருக்க நீயே அருள் புரியவேண்டும்'

அருகில் அமைதியாக படுத்திருக்கும் அங்கவை, சங்கவை இருவரையும் பார்த்தபடியே மனத்தில் இறையை வேண்டிக் கொள்கிறார் கபிலர். பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் மலையமானின் இந்நகரத்திற்கு வந்த பின் இங்கிருக்கும் சத்திரத்தில் தரப்பட்ட உணவை ஏற்றுக் கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார்கள் மூவரும். இந்த முறை தான் மட்டும் தனியே அரசவைக்குச் சென்று மலையமானைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டு பின்னரே தன் ஆவலை வெளியிட வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார் கபிலர்.

***

'இன்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது. இன்றே மலையன் அவைக்குச் சென்று அவனைப் பாடுவோம்.

அடடா. இதென்ன புள் நிமித்தம் தடுக்கின்றதே. இன்றைக்குச் செல்ல வேண்டாமோ? பல முறை பெற்ற தோல்வியே நம் மன உறுதியைக் குலைக்கும் புள் நிமித்தமாக நின்று தடுக்கின்றதோ? இருக்கலாம். உள்ளே இருப்பவை தானே வெளியே தென்படுகின்றன. இந்தப் புட்கள் நின்று தடுத்தாலும் இன்றே மலையமானைச் சென்று பார்ப்போம். இனி மேலும் இந்தப் பெண்களின் துயரத்தைக் கண்டு கொண்டிருக்க முடியாது'

'மாளிகை வாசலுக்கு வந்துவிட்டோம். இதென்ன புலவர்களின் பெரும் கூட்டம். இன்றைக்கு ஏதேனும் முக்கியமான நாளா? மலையனின் பிறந்த நாளோ? அவன் ஏதேனும் போரில் வென்று வெற்றி விழா கொண்டாடுகின்றானா? நகரத்தில் எந்த வித கொண்டாட்டமும் தென்படவில்லையே. மாளிகை வாசலில் மட்டும் ஏன் இந்தக் கூட்டம்?

ம்ம்ம். அருகில் வந்துப் பார்த்தால் இவர்களில் பலர் புலவர்கள் இல்லை போலிருக்கிறதே. ஏதேனும் பரிசு பெற்றுச் செல்ல வந்திருக்கும் வறியவர்கள் போல் தான் இருக்கிறார்கள்'.

"காவலர்களே. இன்று ஏதேனும் முக்கிய விழாவா? மாளிகை வாசலில் இவ்வளவு பேர் நிற்கின்றார்களே"

"ஐயா. இது நாள்தோறும் காணும் காட்சியே. நம் அரசர் பெருமான் வேண்டும் என்று கேட்டு வந்தோருக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் வள்ளல் பெருமான். ஒவ்வொரு நாளும் அவரை வந்துப் பார்த்து ஏதேனும் இரந்து பெறுபவர்களும் உண்டு; அவரைப் பாடிப் பரிசில் பெறுபவர்களும் உண்டு"

'நாள்தோறும் காணும் காட்சியா? பரவாயில்லையே?! பாரியின் மாளிகை வாசலில் ஏதேனும் முக்கிய நாட்களில் மட்டும் தான் இவ்வளவு கூட்டம் கூடும்'

"புலவர்களும் இரவலர்களும் தனித்தனியே மன்னனைக் காண்பார்களோ?"

"இல்லை ஐயா. அனைவருமே ஒன்றாகத் தான் உள்ளே செல்வார்கள். அனைவருக்கும் பரிசு உண்டு"

"யார் எவர் என்று கூட பார்ப்பதில்லையா?"

"இல்லை ஐயா. எந்த வித வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே மரியாதை தான்"

'என்ன இது? காவலர்கள் சொல்வதைப் பார்த்தால் மலையனிடம் கற்றவருக்கும் மற்றவருக்கும் ஒரே மரியாதை தான் போலிருக்கிறதே? இது தவறல்லவா? இவன் பரிசினை வழங்கி வள்ளல் என்ற பெயரைப் பெறும் நோக்கம் மட்டுமே கொண்டவனோ? தமிழையும் புலமையையும் மதிக்காதவனோ? இது என்ன கொடுமை?'

"காவலரே. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். நானும் மன்னனைக் கண்டு பரிசில் பெற வந்திருக்கிறேன்"

"மகிழ்ச்சி ஐயா. நல்ல இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இதோ வரிசையில் நில்லுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் மாளிகை வாசலைத் திறப்பார்கள். அவைக்குச் சென்று மன்னரைக் காணலாம்"

கபிலர் வரிசையில் சென்று நிற்கிறார். புலவர்களும் வறியவர்களும் ஒரேயடியாகக் குழுமி இருக்கும் அந்த இடம் இரைச்சலாக இருக்கிறது. நான் முன்னே நான் முன்னே என்று ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். வாசற்கதவு திறந்ததும் அனைவரும் உள்ளே நுழைய முயன்று நெருக்கிக் கொள்கிறார்கள்.

உள்ளே அரசவையில் அவையினருடன் மன்னன் அமர்ந்திருக்கிறான். அவைக்காவலர்கள் வந்தவர்களை ஒழுங்குப்படுத்தி ஒவ்வொருவராக மன்னவனிடம் அனுப்புகிறார்கள்.

உள்ளே சென்ற ஒவ்வொருவருக்கும் பரிசு கிடைக்கின்றது. புலவர்கள் என்றால் அவர்கள் பாடி முடிக்கும் வரை கேட்டுவிட்டுப் பின்னர் பரிசு கொடுக்கிறான் மலையன். மற்றவர் என்றால் அவர்கள் வாழ்த்தி முடித்த உடனே பரிசு கிடைக்கின்றது. பலர் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். சிலர் நினைத்தது கிடைக்காமல் மன வருத்தத்துடன் செல்கின்றனர்.

"மன்னவர் வாழ்க. திருக்கோவலூர் மலையமான் வாழ்க.

மன்னவா. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். அந்தணன். உன்னைப் பாட வந்திருக்கிறேன். "

"மிக்க மகிழ்ச்சி புலவரே"

"நாள் அன்று போகிப் புள் இடைத் தட்பப்
பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடான்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடியோரே
"

"நல்ல பாடல் புலவரே. தங்களுக்கு ஒரு தேரை வழங்குகிறேன்"

"திருமுடிக்காரி. நான் தேரினை வேண்டி வந்தேன் என்று நினைத்தாயா? அவரவர் தகுதி அறிந்து அவரவர் வேண்டியதை வழங்குவது தானே முறை. அப்படியின்றி வருவோர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதியினைக் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் வழங்குவது தகுமா?

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்!
அது நன்கு அறிந்தனை ஆயின்
பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!"


"ஐயனே. மிகப்பெரும் உண்மையைச் சொன்னீர்கள். வேளிர்கள் என்றாலே வள்ளல்கள் என்று வழிவழியே வரும் பெயருக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வருபவர்களின் வரிசை அறியாமல் ஈந்து வந்தேன். இன்றைக்கு ஒரு நல்லுரையைக் கூறி நல்லறிவு புகட்டினீர்கள்"

"மன்னவா. இது நான் சொல்லும் அறிவுரை மட்டும் இல்லை. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர் என்று பொய்யாமொழியும் சொல்கிறதே"

"கற்றபின் நிற்க மறந்துவிட்டேன். கற்றலினும் கேட்டல் நன்று என்று எனக்காகத் தான் சொன்னார்களோ.

தாங்கள் ஒரு பெரும் புலவர் என்று நினைக்கிறேன். தங்களைப் பற்றி மேலும் அறிய விழைகிறேன்"

"மன்னவா. முன்னரே சொன்னது போல் நான் ஒரு தமிழ்ப்புலவன். அந்தணன். பெயர் கபிலன். அகத் திணைகளில் குறிஞ்சித் திணையில் நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறேன்"

"ஐயனே. நீங்கள் தான் குறிஞ்சிக்குப் புகழ் தந்த கபிலரா? இறையனாரும் முருகப்பெருமானும் கட்டிக் காத்த தமிழ்ச்சங்கத்தில் முதன்மை பெற்று இருப்பவர் தாங்கள் தானா? என் குலக்கடவுள் மாயோனின் திருவருளால் நீங்கள் என் மாளிகைக்கு வந்தீர்கள். உங்கள் பெருமை அறியாமல் நடந்து கொண்ட சிறியேனை மன்னிக்க வேண்டும்.

புலவர் பெருமானே. இந்த ஆசனத்தில் அமர வேண்டும்."

அவன் தந்த ஆசனத்தில் அமர்ந்தார் கபிலர்.

"மன்னவா. சிலர் எத்தனை முறை சொன்னாலும் நல்லவற்றைக் கேட்க மாட்டார்கள். நீ ஒரு முறை சொன்னவுடனேயே புரிந்து கொண்டாய். கூர் மதி படைத்தவன் நீ. என்னை மட்டுமின்றி இனி இங்கே வரும் எல்லோரையும் அவரவர் தகுதி அறிந்து அவர்களைப் பெருமை செய்வாய். அதனால் உன் பொருளும் புகழும் குலமும் வளரும்"

"அப்படியே செய்கிறேன் ஐயனே. தாங்கள் என்னிடம் பரிசில் பெற வந்ததாகத் தெரியவில்லை. என்னை நோக்கி வந்த காரணத்தைச் சொல்லி அருளுங்கள்"

"மலையமான். உன்னுடைய குலத்திற்குத் தகுந்த குலம் பாரி வள்ளலின் குலம். அந்தப் பாரிவேள் எனது நெருங்கிய தோழன். அவனது மக்கள் இருவரையும் நீ மணந்து கொள்ள வேண்டும்"

"ஐயனே. நானோ சிறியவன். எனக்கு எது நன்மை தரும் என்பதை சான்றோராகிய நீங்களே அறிவீர்கள். தங்கள் ஆணைப்படியே நடந்து கொள்கிறேன்"

"திருமுடிக்காரி. பாரிவேள் மூவேந்தர்களுக்கு பெண் தர மறுத்து இறந்து பட்டதை நீ அறிவாய் தானே?"

"அறிவேன் ஐயனே. வேந்தர்களுக்குப் பெண் தரும் வழக்கம் வேளிர் நடுவே இருந்தாலும் தர மறுக்கும் வேளிர்களும் உண்டு. அவர்களின் குல வழக்கத்தை நான் மதிக்கிறேன். வள்ளல் பாரிவேளின் குல வழக்கமும் அப்படியே அமைந்தது போலும். அதனால் அவர் பெண் தர மறுத்திருக்கலாம். இப்போது தங்களின் ஆணைப்படி வேளிர்களின் ஒருவனான நான் அப்பெண்களை மணந்து கொள்கிறேன்"

"வேந்தர்களிடம் உனக்கு பயம் இல்லையா?"

"ஐயனே. பெண் கேட்பது அவர்கள் உரிமை. தர மறுப்பது பாரிவேளின் உரிமை. பெண் தரவில்லையாயின் ஒதுங்கிச் செல்வதே வேந்தர்களுக்கு அழகாக இருந்திருக்கும். அதனை மீறி அவர்கள் பறம்பு நாட்டின் மேல் படையெடுத்தார்கள். சூழ்ச்சியால் வென்றார்கள்.

பாரிவள்ளல் தங்களிடம் அவர் மக்களை அடைக்கலமாகத் தந்தார். என்னிடம் அப்பெண்களை மணக்க வேண்டுவது உங்கள் உரிமை. அதனை ஏற்றுக் கொள்வது என் கடமை. அதனால் வேந்தர்கள் வெகுண்டால் அவர்களுக்குத் தகுந்த பதிலை மலையமான் அளிப்பான். அதனை அவர்களும் அறிவார்கள். அவர்களின் சூழ்ச்சி என்னிடம் செல்லாது"

"மன்னவா. உன் வீரத்தைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன். விரைவில் ஒரு நல்ல நாளில் உனக்கும் பாரி மகளிருக்கும் திருமணம் நடைபெறும்"

"தங்கள் ஆணை ஐயனே"

“குலம், கல்வி, செல்வம் என்று எல்லா வகைகளிலும் தகுதியுடைய கிழத்தியை மேற்கூறிய எல்லா வகைகளிலும் சமமான தகுதிகள் உடைய கிழவனுக்கு மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் தர மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் அருகில் நிற்க நடக்கும் திருமணம் கற்பு மணம் என்று சான்றோர் சொல்லுவர். அப்படிப்பட்ட கற்பு மணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உங்கள் திருமணம் திகழட்டும்"

***

பாடற்குறிப்புகள்:

1. 'நாள் அன்று போகி' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 124 ஆம் பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை (பாடப்பெறுபவரது பெருமைகளைக் கூறும் திணை); துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடியே கூறும் துறை).

பொழிப்புரை: நாள் நல்ல நாளாக அமையாமல், புள் நிமித்தம் இடையே நின்று தடுக்க, முறைப்படி மாளிகைக்குள் நுழையாமல், திறமையொன்றும் இல்லாமல் தகாத சொற்களைச் சொன்னாலும் வறுமையுடன் செல்லமாட்டார்கள், நெறிகளுடன் கூடிய இன்னிசையை எழுப்பிக் கொண்டு வீழும் அருவியை உடைய பெருமை பொருந்திய மலையை உடையவனைப் பாடியவர்கள்.

(கதையில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் இப்பாடலை அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டன).

2. 'ஒரு திசை ஒருவனை' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 121வது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை. துறை: பொருண்மொழிக்காஞ்சி (நீதிநெறிகளைக் கூறும் துறை)

பொழிப்புரை: ஒரு திசையில் 'வள்ளல் என்றாலே இவன் தான்' என்று சொல்லும்படி விளங்கும் ஒருவனிடம் பரிசில் பெற நினைந்து நான்கு திசைகளில் இருந்தும் பரிசு பெற விரும்புபவர்கள் வருவார்கள். அவர்களின் தகுதிகளை அறிவது மிக அரிது. அவர்களுக்கு ஈதலோ மிக எளிது. பெரிய வள்ளல் தன்மை உடைய தலைவனே! தகுதியின் படி ஒருவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நெறியினை நீ நன்கு அறிந்தாய் ஆயின் ஒரே தரமாகப் புலவர்களையும் பார்ப்பதை தவிர்ப்பாய்.

Monday, February 09, 2009

சிவன் பாட்டு, கண்ணன் பாட்டு, அம்மன் பாட்டு, முருகனருள் கூடும் கூடல்!!!


காணக் கண் கோடி வேண்டும்! ஐயன்
கால் தூக்கி நின்றாடும் காட்சி பொன்னம்பலத்தில்
(காணக்)
மானாட மழுவாட மதியாட புனலாட
மாலாட அயனாட மங்கை சிவகாமியாட
(காணக்)


நீர் பூத்த மேக நிறம் கொண்ட வண்ணா!
பார் பூத்த உந்திப் பரந்தாமனே கண்ணா!
கார் மேவும் ச்ரிரங்கம் காவிரிக் கரை மேலே
கள்ளத் துயில் கொண்டுலகைக் காக்கும் பெருமாளே!
ஏன் பள்ளி கொண்டீரையா? ஸ்ரீரங்கநாதா!
(ஏன்)


மணம் வீசும் கதம்ப வன வாசினீ!
மாமதுராபுரி ஆளும் தேவி மகராணி!
திக்குவிஜயம் செய்ய சேனையுடனே சென்று
சொக்கனுக்கு மாலையிட்ட மீனாட்சி!
(மணம்)


(கானக்) குறவள்ளி குஞ்சரி மருவிடும் குகனே!
திருச்செந்தூர் வளர் ஆறுமுகனே!
ஒரு மாங்கனி வேண்டிச் சிறுபிள்ளைத்தனமாக
உலகை வலம் வந்த சிவபாலா!
உன் திருக்கோவில் வலம் வர நான் என்ன
புண்ணியம் செய்தேன் வடிவேலா!




பச்சை மாமலை போல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே
ஆயர் தம் கொழுந்தே!
(பச்சை)
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு!
பலகோடி நூறாயிரம்!

Thursday, February 05, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 2

ஆசாரிய பரம்பரையில் திருமகள் நாதன், திருமகள், சேனைமுதலியார் என்ற மூன்று ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைச் சென்ற பகுதியில் பார்த்தோம். சேனைமுதலியாரின் அம்சமாகப் பிறந்தவர் நம்மாழ்வார். சேனைமுதலியாருக்கு அடுத்த ஆசாரியராகப் புகழப்படுபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். ஆசாரிய வரிசையில் முதல் மூவரும் தெய்வ உலகத்தைச் சேர்ந்த நித்யர்களாக இருக்க, அந்த வரிசையில் வரும் முதல் மனிதர் இவர். ஆழ்வார்களில் காலத்தால் நடுவினராக இருந்தாலும் அவர்களுள் முதன்மையானவராகக் கருதப்படுபவர் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனான நம்மாழ்வார். மற்ற அனைத்து ஆழ்வார்களும் இவரது அங்கங்களாகக் கருதப்படும் பெருமை உடையவர். ஆழ்வார்கள் வரிசையிலும் ஆசாரியர் வரிசையிலும் வைத்துப் போற்றப்படும் பெருமை பெற்ற ஒரே ஒருவர். வைணவ குல முதல்வர்; கூடஸ்தர்; குலபதி என்று போற்றப்படுபவர். அவருடைய தெய்வீகமான திருக்கதையை இங்கே படிக்கலாம்.





மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே
வேதத்தைச் செந்தமிழால் விரித்துரைத்தோன் வாழியே
ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே
அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே
நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே
நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே
மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்தருள்வோன் வாழியே
மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே

வைகாசி விசாகத்தில் தமிழ்க்கடவுள் திருமுருகனும் வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனும் பிறந்தார்கள். அதனால் 'வைகாசி விசாகத்தோன்' என்ற விருது இருவருக்கும் பொருந்துகின்றது. உலகத்தில் வைகாசி விசாகத்தில் பிறந்த நம்மாழ்வார் வாழ்க. மேதினியில் வைகாசி விசாகத்தோன் வாழியே.

வடமொழியில் இருக்கும் நான்கு வேதங்கள் காலத்தால் முந்தியவை. ஆக்கியவர் இவர் என்று காட்டும் படி இல்லாதவை - அதனால் 'அபௌருஷேயம்' என்று அழைக்கப்படுபவை. அப்படி காலத்தால் முந்தையதாக இருப்பதாலும் அதில் உள்ள சொற்கள் மறைமொழியாக இருப்பதாலும் சில இடங்களில் பொருள் தெளிவாக சட்டென்று விளங்காத படி அமைந்திருக்கின்றன. அப்படிப்பட்ட வேதங்களை 'எல்லோரும்' எளிதாக படித்து உணர்ந்து கொள்ளும் வண்ணம் செந்தமிழில் விரித்து உரைத்தார் நம்மாழ்வார். அதனால் தான் 'செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே' என்று சுவாமி வேதாந்த தேசிகன் மனம் உவந்து பாடினார். வேதத்தைச் செந்தமிழால் விரித்து உரைத்தோன் வாழியே.



குலமுதல்வன் என்றும் கூடஸ்தன் என்றும் குலபதி என்றும் போற்றும் படி ஆசாரிய வரிசையில் முதல் மானுட குருவாய் புவியில் அவதரித்தவர் பராங்குசனான நம்மாழ்வார். ஆதி குருவாய் புவியில் அவதரித்தோன் வாழியே.

என்றென்றும் தன் குருவான சேனைமுதல்வரின் திருவடிகளைத் தொழுபவர் நம்மாழ்வார். அனவரதம் சேனையர்கோன் அடி தொழுவோன் வாழியே.

கால வெள்ளத்தில் கரைந்து போன ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களைத் தேடி வந்த நாதமுனிகளுக்கு அந்த நாலாயிரம் பாசுரங்களையும் உரைத்து அவரை ஆசாரிய பரம்பரையில் அடுத்த ஆசாரியன் ஆக்கியவர் நம்மாழ்வார். நாதனுக்கு நாலாயிரம் உரைத்தான் வாழியே.

வயது, படிப்பு, பிறப்பு என்று எந்த ஏற்றத் தாழ்வுகளையும் பார்க்காத நல்ல மதுரகவியாழ்வார் வணங்கும் திருநாவுக்கரசர் நம்மாழ்வார். நன்மதுரகவி வணங்கும் நாவீறன் வாழியே.

திருமகள் நாதன் என்னும் பரதெய்வத்தின் திருப்பாதுகைகளாக - சடாரியாகத் திருக்கோவில்களில் என்றென்றும் வீற்றிருந்து திருமகள் நாதனின் திருவருளை அன்பர்களுக்கு அள்ளித் தருபவர் நம்மாழ்வார். மாதவன் பொற்பாதுகையாய் வளர்ந்து அருள்வோன் வாழியே.

என்றைக்கும் மகிழ்வுடன் மகிழம்பூ மாலையை அணிந்து உலகத்தில் வகுளாபரணராய் விளங்குபவர் மாறன் சடகோபனான நம்மாழ்வார். மகிழ் மாறன் சடகோபன் வையகத்தில் வாழியே.

Friday, January 30, 2009

நான்மணிக்கடிகையில் நாரணன்

சங்க இலக்கியத்தில் ஒரு வகையான பதினெண்கீழ்க்கணக்கு நூற்களில் 'நான்மணிக்கடிகை' என்றொரு நூல் இருக்கிறது. விளம்பிநாகனார் என்ற புலவர் எழுதியது. கடிகை என்றால் கல்வி கற்பிக்கப்படும் இடம்; பல்கலைக்கழகம். ஒரு கடிகையில் எப்படி பலவிதமான கல்விகள் கற்பிக்கப்படுகின்றனவோ அதே போல் இந்நூலில் பலவிதமான அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணிகள். அப்படிப்பட்ட மணியாக கருத்துகள் நான்கினை ஒவ்வொருப் பாடலிலும் சொல்லுவதால் இந்த நூலுக்கு 'நான்மணிக்கடிகை' என்று பெயர்.

இந்த நூலின் ஆசிரியர் மணிவண்ணனை வணங்குபவர் போலும். அதனால் தான் நூலுக்கும் 'நான்மணிக்கடிகை' என்று பெயர் வைத்து விட்டு முதல் இரண்டு பாடல்களால் மணிவண்ணன் மாயவனைப் புகழ்ந்து பாடியிருக்கிறார். கடவுள் வாழ்த்தாக மணிவண்ணனைப் பற்றிய நன்னான்கு கருத்துகளைச் சொல்லும் முதல் இரண்டு பாடல்களை இன்று பார்ப்போம்.

மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்;
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்;
முது நீர்ப் பழனத்துத் தாமரைத் தாளின்
எதிர் மலர் மற்று அவன் கண் ஒக்கும்; பூவைப்
புது மலர் ஒக்கும் நிறம்.

மாயோனுக்கு அடையாளமாக நான்கு செய்திகளைச் சொல்கிறார் புலவர். மாயவன் திருவுருவை மனத்திருத்தித் தியானிக்க நினைப்பவர்களுக்கு உதவும் பாடல். மாயோன் என்று தொல்காப்பியத்தால் சொல்லப்பட்டவனும் மாயவன் என்று பிற்கால சமய நூற்களால் சொல்லப்பட்டவனும் ஒரே தெய்வம் இல்லை என்று சொல்லித் திரிபவர்களுக்குப் பதில் சொல்வதைப் போல இந்த சங்க இலக்கிய நூலிலேயே 'மாயவன்' என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறார் புலவர்.

அவன் இல்லாத இடமே இல்லை; அவன் இல்லாத காலமே இல்லை என்னும் படி எங்கும் எப்போதும் நிலையாக இருக்கும் (மன்னும்) மாயவனின் ஒளி பொருந்திய திருமுகத்தை வானத்தில் தெரியும் நிலா ஒத்திருக்கும் என்கிறார் முதல் வரியில்.

அடுத்து அவனது சுடர் விடும் சக்கரப்படையை போல் இருக்கின்றது வானத்தில் சுடர் விட்டுத் திகழும் ஞாயிறு என்கிறார்.

வெகுகாலமாக இருக்கும் நீர்நிலையில் இருக்கும் தாமரைத் தண்டுகளில் முளைத்து வரும் தாமரை மலர் அவனது திருக்கண்களை ஒத்திருக்கும் என்கிறார்.

காயாம்பூ என்னும் பூவைப்பு அன்றே அலர்ந்திருந்தால் அந்தப் புதிய பூ அவனது திருமேனியின் நிறத்தை ஒத்திருக்கும் என்கிறார்.

நிலவைப் போன்ற திருமுகம், ஞாயிற்றைப் போன்ற திருச்சக்கரம், புதுமலர்த்தாமரையைப் போன்ற திருக்கண்கள், பூவைப்புதுமலர் போன்ற திருநிறம் என்றே மற்ற புலவர்கள் உவமைகளைக் கூற இவரோ அதனை மாற்றி நிலவு திருமுகத்தை ஒக்கும், ஞாயிறு சக்கரத்தை ஒக்கும், புதிய தாமரை திருக்கண்களை ஒக்கும், பூவைப்புதுமலர் நிறத்தை ஒக்கும் என்று 'மாறிய உவமை'களைக் காட்டுகிறார்.

மதி மாயவன் திருமுகத்தை ஒக்கும் என்பதைப் படிக்கும் போது 'கதிர்மதியம் போல் முகத்தான்' என்று வரும் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.

இங்கே ஞாயிறு சக்கரத்தை ஒத்திருக்கும் என்று படிக்கும் போது சிலப்பதிகாரத்தில் 'ஞாயிறு போற்றுதும்' என்று சொல்லி நூலை இளங்கோவடிகள் தொடங்கும் போது அங்கும் 'திகிரி போல்' என்று சொன்னது நினைவிற்கு வருகின்றது.

இந்தப் பாடல் சொல்வதைப் போலவே வடமொழி வேதங்களும் பல முறை இவனுடைய திருக்கண்கள் தாமரையைப் போன்று உள்ளன என்று சொல்வது நினைவிற்கு வருகின்றது. 'ஞாயிற்றின் கதிரால் விரியும் தாமரையைப் போன்ற திருக்கண்கள் உடையவன் இறைவன்' என்று சொல்லும் வரிகளுக்கு சொல்லப்பட்ட தவறான உரையைக் கேட்டுத் தானே இராமானுஜர் கண்ணீர் வடித்தார். அங்கே ஞாயிறும் தாமரையும் ஒரே வரியில் சொல்லப்பட்டதைப் போல் இங்கே ஒரே பாடலில் ஞாயிறும் தாமரையும் அடுத்து அடுத்து வருகின்றன.

அடுத்த பாடல் 'மாயோன் எனப்பட்டவன் கோகுலத்தில் வாழ்ந்த கண்ணன் இல்லை' என்று மறுப்பவர்களுக்கான பதிலாக அமைகிறது.

படியை மடியகத்து இட்டான்; அடியினால்
முக்கால் கடந்தான் முழுநிலம்; அக்காலத்து
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்; சோவின்
அருமை அழித்த மகன்.

இங்கே வாமன திருவிக்கிரம அவதாரத்தினை ஒரு அடியில் சொல்லிவிட்டு மற்ற மூன்று அடிகளிலும் கோகுலத்துக் கண்ணனின் திருவிளையாடல்கள் சொல்லப்படுகின்றன.


மண்ணைத் தின்றான் என்று கேள்விப்பட்டு வாயைத் திறந்து காட்டச் சொன்ன அசோதைக்கு தன் திருவயிற்றில் எல்லா உலகங்களையும் அவன் காட்டினான் என்பதால் 'படியை (உலகத்தை) மடி அகத்து இட்டான்' என்று பாடுகிறார் புலவர்.

முதல் அடியினால் நடுவுலகத்தையும் இரண்டாம் அடியினால் மேல் உலகங்களையும் மூன்றாவது அடியினால் மாவலியை பாதாள உலகத்திற்கு அதிபதியாக்கி கீழ் உலகங்களையும் அளந்தவன் வாமன திரிவிக்கிரமன் என்பதால் 'அடியினால் முக்கால் கடந்தான் முழுநிலம்' என்கிறார் புலவர்.

தனக்கென இடப்படும் படையலைத் தடுத்து கண்ணனே அதனை மலையுருவில் உண்டான் என்று இந்திரன் வெகுண்டு பெருமழை பொழிவிக்க அப்பொழுது பசுக்களின் கூட்டத்தைக் காக்க கோவர்த்தனமென்னும் குன்றை எடுத்தான் கோவிந்தன் என்பதால் 'அப்பொழுது ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான்' என்றார் புலவர்.

'குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன்'

என்று தமிழ்வேதமாம் திருவாய்மொழியும் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இருமணிகளைச் சொல்வது நினைவிற்கு வருகிறது.

பாணாசுரனின் செல்வ மகள் உஷை கண்ணனின் பேரன் அநிருத்தனை விரும்பி தன் தோழியின் மூலமாகக் கவர்ந்து சென்ற போது அவனை மீட்டுக் கொண்டு வர பாணாசுரனின் ஆயிரம் தோள்களையும் துணித்து அவனது நெருப்புக் கோட்டையை அழித்தான் அச்சுதன் என்பதை 'சோவின் அருமை அழித்த மகன்' என்பதால் சொல்கிறார் புலவர். சோவின் அருமை என்றால் நெருப்பு போல் சுடர்விடும் பொன் கோட்டை என்றும் ஒரு பொருள் உண்டு.

சிலப்பதிகாரமும் 'மூவுலகும் ஈரடியால் முறைநிரம்ப வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர்' பாடுகிறது. அங்கே சொல்லப்படும் சோ அரண் தொல்லிலங்கையின் பொற்கோட்டை.

இப்படி மாயோன் சீர் தொன்மையான தொல்காப்பியத்திலிருந்து நிறைய சங்க இலக்கியங்களில் பாடப்பட்டிருக்கிறது.

Wednesday, January 28, 2009

பழந்தமிழ் இலக்கியத்தில் வடநாடு

வடநாட்டினர் தமிழ்நாட்டைக் குறித்து அக்காலத்தில் தெரிந்திருப்பதைப் பார்க்கிலும், தமிழர்கள் வடநாட்டைப் பற்றி மிகுதியாக அறிந்திருந்தார்கள். இமயமலையையும் கங்கையாற்றையும் தமிழர்கள் பார்த்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.பழந்தமிழர் வடநாட்டைப் புண்ணிய நாடாகவும், வட திசையைப் புண்ணிய திசையாகவும் கங்கையாற்றைக் கடவுள் மாநதியாகவும் இமயம் முதல் குமரி வரை ஒருநாடாகவும் கண்டனர். இதற்குக் காரணமாய் இருந்தவை வடநாட்டுச் சமயங்களே எனலாம்.

சங்ககாலத்தில் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய இவை தமிழ்நாட்டில் வேரூன்றி விட்டன. கிமு.மூன்றாம் நூற்றாண்டிலேயே இச்சமயங்கள் தமிழ்நாட்டில் நன்கு தழைத்து சங்க இலக்கியங்களில் நன்கு புகுந்து விட்டன. சைவம் தமிழ்நாட்டுச் சமயமே என்று கூறினும் அது வடநாட்டுச் சமயமாகவே காட்சி அளிக்கிறது. இமயமே சிவனுறையும் கைலாயம் என்று குறிப்பதொன்றே இதற்குப் போதிய சான்றாகும். சைவம் தமிழர் சமயம் என்று போற்றுவதற்குப் போதிய ஆதாரம் இல்லை.

சைவ வைணவ சமண பௌத்த சமயங்கள் வடநாட்டைப் புண்ணிய நாடாகக் கருதுமாறு செய்து விட்டன. திருநாவுக்கரசர் கைலாயம் செல்லக் கருதி இமயம் நோக்கியே சென்றார். தொல்காப்பிய சிறப்புப் பாயிரத்துக்கு உரை எழுதிய பழைய உரையாசிரியர், வடவேங்கடம் என்கிற சொற்றொடரை எடுத்துக் காட்டி, ‘வடதிசை புண்ணிய திசை ஆகலான் அதனை முதற்கூறினார்’ என்றார். ஏணிச்சேரி முடமோசியார், ஆய் என்கிற வள்ளலைக் குறித்துப் பாடிய 132-ஆம் செய்யுளுக்கு உரை கூறிய உரையாசிரியர், ‘வடதிசை தேவருலகோடு ஒத்தலான்’ என்று குறிப்பெழுதி உள்ளார். அவரே, 229-ஆம் புறப்பாட்டில் விண்மீன் வீழ்ச்சியைக் குறிப்பிடுகையில் “தீத்திசையாகிய தெற்கும் மேற்குமான இரண்டனுள் ஒரு திசைக்கண் வீழ்ந்ததென்றுமாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்கள் வடதிசையைப் புண்ணிய திசையாகவும், தென்திசையைத் தீய யம திசையாகவும் கருதினார்கள்.

கீழ்வரும் நாலடியார்ச் செய்யுளைக் காண்க:

‘எந்நிலத்து வித்திடினும் காஞ்சிரங்காய் தெங்குஆகா
தென்னாட் டவரும் சுவர்க்கம் புகுதலால்
தன்னால்தான் ஆகும் மறுமை; வடதிசையும்
கொன்னாளர் சாலப் பலர்’

“தென்னாட்டவர் கூட முயற்சி செய்தால் சுவர்க்கம் போக முடிகிறது; வடநாட்டவராயிருந்தும் முயற்சி செய்யாமல் அதனை இழப்பவரும் இருக்கிறார்களே” என்கிற பொருளின் அடிப்படை அளவுகோலைப் பாருங்கள்.

இமய உச்சியில் சிவபெருமான் எழுந்தருளி இருப்பதாகவும் இமயத்தை ஈர்ஞ்சடை அந்தணன் (சிவ பெருமான்) வில்லாகக் கொண்டதாகவும் இமயத்து உச்சியில் இருந்து கங்கைப் பேரியாறு இழிந்து வருவதாகவும் இமயமலையில் முனிவர்கள் தவம் செய்வதாகவும் சங்ககாலத்து இலக்கியங்களிலும் குறிப்புகள் இருக்கின்றன.

வடதிசையில் இமயம் இருப்பதாலும் தென்திசையில் ஆய் வள்ளல் இருப்பதாலும் இப்பெருநாடு கவிழாமல் சமநிலையில் இருக்கிறது என்று பாடுகிறார் முடமோசியார். சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை “வட இமயமும் தென் பொதியமும் போன்று நீடு வாழ” வாழ்த்துகிறது புறநானூற்றின் இரண்டாம் பாடல். “இமயம் சேர்ந்த காக்கை பொன்னிறமாதல் போல்” என்கிறது யாப்பெருங்கலக் காரிகைச் செய்யுள்.

கங்கையாற்றை “வளமழை மாறிய என்றூழ்க்காலை மன்பதையெல்லாம் சென்றுணக் கங்கை” என்று புறநானூறும், “பொன்கொழித்து இழிதரும் போக்கருங் கங்கை” என்று பெரும்பாணாற்றுப் படையும் “கங்கையும் பேரியாறு கடர்படர்ந்து” என்று மதுரைக் காஞ்சியும் குறிப்பிடுகின்றன.

இவ்வாறு இமயத்தையும் கங்கையையும் வர்ணிப்பதோடு நில்லாமல் வடநாட்டில் நிகழ்ந்த செய்திகளையும் கூறுகின்றன சங்க இலக்கியங்கள். மகாபாரதப் போர் பற்றிய குறிப்பு முன்சொன்ன புறநானூற்றுப் பாடலில் இருக்கிறது. அகநானூறு வடநாட்டில் கிமு நான்காம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆட்சி புரிந்த நந்தர்களுடைய பெருஞ்செல்வத்தைக் குறிப்பிடுகிறது. *நந்தர்கள் ஆட்சி தமிழகத்தில் இருந்ததற்கு ஒரு குறிப்பும் இல்லை; ஆனால் அகநானூற்றின் 251, 265 ஆகிய பாடல்களில் அவர்களுடைய ஆட்சியின் பெருஞ் செல்வச் சிறப்பை மட்டும் காண்கிறோம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் வடநாட்டைச் சமய நிலையில் உயர்வாக குறிப்பிடினும் அரசியல் நிலையிலும் வீரச் சிறப்பைக் கூறும் முறையிலும் வடநாட்டை மதித்துக் கூறவில்லை. வடநாட்டினர் மேல் தமிழர்க்ள் பகை கொண்டிருந்தது போலவே தோன்றுகிறது. தமிழ் மன்னர்கள் வடநாடு சென்று இமயத்தில் தங்கள் இலச்சினைகளைப் பொறித்ததும் இமயம் முதல் குமரி வரை தமிழ் மன்னர்கள் ஆண்டதும் வடநாட்டு மன்னர்கள் தமிழ்நாட்டு மூவேந்தர்களுக்கு அடி பணிந்ததும் திறை கொடுத்ததும் வடபுல மன்னர்களான கனக விசயர்கள் தலையில் கண்ணகி படிவக் கற்களைச் சுமக்க வைத்ததும் வடநாட்டுக்குப் படையெடுத்ததுமான செய்திகளைப் பழந்தமிழ்ச் சங்க இலக்கியமாகிய பதிற்றுப்பத்து அகநானூறு சிலப்பதிகாரம் போன்றவை கூறுகின்றன.

பெருவீரனான அசோகனும் தமிழ்நாட்டில் காலெடுத்து வைக்கவில்லை.கலிங்கத்தை வென்றதோடு நின்றான். அவன் தன் கல்வெட்டுகளில் சேர சோழ பாண்டியர்களை நேச மன்னர்களாகவே குறிப்பிட்டான். புறநானூறு அசோகருக்குப் பின் வந்த மோரியர் படையெடுப்பை ‘வம்ப மோரியர் படையெடுப்’பாகவே கூறுகிறது. அப்படி வந்தவர் வெற்றி பெற்றதாகக் குறிப்பைக் காணோம்.

ஆனால் வரலாற்றுப் பேராசிரியர் பலர் தமிழ் மன்னர்களின் வீரச் செயல்களையும் படையெடுப்புகளையும் கற்பனைத் திறன் மிகுந்த காப்பியக் கதைகளாகத் தான் கருதுகின்றனர். பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் தவிர்த்த அனைவரும் செங்குட்டுவன் உள்ளிட்ட தமிழ் வேந்தர்களின் படையெடுப்புகள் அனைத்தையுமே கட்டுக்கதைகளாகப் புறக்கணிக்கின்றனர்.

வடவர்கள் காஞ்சியைத் தவிர பிற பழந்தமிழ் நகரங்களைப் புண்ணிய நகரங்களாகக் கருதவில்லை. தமிழ்ப் புலவர்களோ வட நாட்டைப் புண்ணிய நாடாகவும் வட மொழியைத் தெய்வ மொழியாகவும் மதித்தார்கள்; வடநாட்டுக் கதைகளைக் காப்பியங்களாகப் பாடினார்கள். இது பழந்தமிழர் பண்பாடு மட்டுமன்று; இன்றையத் தமிழர் பண்பாடும் ஆகும்.

- பேராசிரியர் அ.கி.பரந்தாமனார்

***

வெகு நாட்களுக்கு முன்னர் நண்பர் இரத்னேஷின் பதிவில் இப்பகுதியைப் படித்தேன். அப்போதே 'படித்ததில் பிடித்தது' வகையில் இடவேண்டும் என்று குறித்து வைத்துக் கொண்டேன். இப்போது தான் இட முடிந்தது. இக்கட்டுரையைத் தட்டச்சிய இரத்னேஷுக்கு நன்றிகள்.

Friday, January 23, 2009

எனக்குள் ஒரு கதை சொல்லி

இது ஒரு சுய ஆய்வு என்று சொல்லலாம். (சுய தம்பட்டம் என்று நினைத்தாலும் சரியே). என்னுள் இருக்கும் ஒரு திறன் ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறும் போது அடையும் வளர்ச்சிகளையும் தடைகளையும் எழுத்தில் வடிக்க எண்ணும் ஒரு முயற்சி இது. எவ்வளவு தூரம் வெற்றி பெறுகிறேன் என்பதை இக்கட்டுரையை எழுதி முடித்த பின் பார்க்க வேண்டும்.

ஒரு காலத்தில் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். ஆன்மிகம், தமிழ் இலக்கியம், தன் திறன் வளர்ச்சி (Self Development) போன்ற தலைப்புகளில் பேசத் தொடங்கினால் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தேன். அப்படிப் பேசும் போதெல்லாம் கேட்டவர்கள் நான் சொல்லும் கருத்துகளை ஏற்றுக் கொள்பவர்கள்; கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் கொண்டவர்கள்; மறுத்து பேசாதவர்கள். நான் சொன்ன கருத்துகளில் (முக்கால்வாசி கடன் பெற்ற கருத்துகள் - இலக்கியங்களில் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும்) மயங்கியா அவற்றை நான் சொன்ன விதத்தில் மயங்கியா, எந்த விதத்தில் அவர்களுக்கு என் பேச்சைக் கேட்க விருப்பமாக இருந்தது என்ற ஐயம் இப்போதும் உண்டு. ஆனால் கேட்டவர்கள் மீண்டும் மீண்டும் கேட்க வந்தார்கள். மீண்டும் மீண்டும் பேசச் சொன்னார்கள்.

சில நேரங்களில் மாற்றுக் கருத்துகள் கொண்டவர்களும் கேட்க வருவார்கள். அவர்கள் தங்களது மாற்றுக் கருத்துகளைச் சொல்லும் போது அந்தப் பேச்சு ஒரு கலந்துரையாடலாக மாறும். கலந்துரையாடல் என்றால் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் நிறைய உண்டு. அதனால் அப்படிப் பட்ட கலந்துரையாடல்களை மிகவும் விரும்பினேன். சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல் விதண்டா வாதங்களாக மாறத் தொடங்கும். மாற்றுக் கருத்தினைச் சொன்னவருக்கு ஏற்ற மறுப்பினைத் தகுந்த எடுத்துக்காட்டுகளுடன் சொன்ன பின்னரும் தடம் மாறித் தடம் மாறி புலனங்களை மாற்றி மாற்றிப் பேசி வேண்டா விவாதமாகச் சென்று கொண்டிருக்கும். யாரும் யாரிடமிருந்தும் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெரிந்தவுடன் பேசுவதை அப்போதே நிறுத்திவிட்டுக் கேட்கத் தொடங்கிவிடுவேன். அவர்களின் கருத்து அவர்களின் அனுபவங்களில் இருந்து வருகின்றது என்பதால் கருத்துகள் தவறென்று தோன்றினாலும் அந்த அனுபவங்களில் இருந்து ஏதேனும் கற்றுக் கொள்ள முடியுமா என்று பார்க்கத் தொடங்கிவிடுவேன்.

பள்ளி இறுதி வகுப்பில் தொடங்கிய இந்த 'பேசுதல்' முதுநிலை பட்டப்படிப்பு வரை தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த முதல் வருடமும் சென்னையில் அது தொடர்ந்தது. வேலையில் சேர்ந்த இரண்டாம் வருடம் அமெரிக்கா வந்துவிட்டேன். அதே வருடம் திருமணமும் நடந்தது. பேசுவது நின்றுவிட்டது. அமெரிக்கா வந்ததால் தான் என்று நினைக்கிறேன். திருமணத்தால் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.

சில வருடங்கள் (மனைவியைத் தவிர்த்து மற்றவரிடத்தில்) மணிக்கணக்கில் பேசுவது என்பதே இன்றிப் போனது. சில நேரங்களில் சில பக்தி இலக்கியஙகளுக்கும் சுலோகங்களுக்கும் ஆங்கிலத்தில் பொருள் சொல்லி மின்னஞ்சலில் நண்பர்களுக்கு அனுப்புவேன். இப்படியே சென்று கொண்டிருக்கும் போது வலைப்பதிவு தென்பட்டது. இத்தனை நாட்களும் பேசாமல் இருந்த வேகத்தில் நினைத்ததைப் பற்றி எல்லாம் எழுத ஒவ்வொரு பதிவாகத் தொடங்கி நிறைய பதிவுகள் தொடங்கினேன். எழுதிக் கொண்டிருக்கிறேன்.

ஒரு காலத்தில் பேசிக் கொண்டிருந்தவன் இப்போது அவ்வளவாகப் பேசாமல் எழுதும் போது என்ன மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன, புதிதாக ஏதேனும் தென்படுகின்றதா என்று இப்போது ஆய்ந்து பார்த்தால் ஒரு விதயம் கண்ணுக்குத் தென்பட்டது.

ஒரு நல்ல கதை சொல்லி என்னுள் இருக்கிறான். பேசும் போது நன்கு சுவையாகக் கதை சொல்லத் தெரிந்த அவனுக்கு எழுதும் போதும் அதே சுவையும் அழகும் வரும்படி எழுதத் தெரிந்திருக்கிறது (வரும்படி எதுவும் வரவில்லை இதுவரை). பேசும் போது எப்படி கதை கேட்பவர்களைத் தொடர்ந்து கேட்கும் படி செய்கிறேனோ அதே போல் எழுதும் போதும் படிப்பவர்களைத் தொடர்ந்து படிக்கும் படி செய்கிறேன். இது வரை எழுதிய தொடர்கதைகளிலும் சிறுகதைகளிலும் இது நன்றாகத் தெரிகிறது.

தொடர்கதைகள் எழுதும் போது சில உத்திகளையும் பயன்படுத்தியிருக்கிறேன். 'புல்லாகிப் பூண்டாகி' தொடர்கதை எழுதும் போது 'எப்போது கதையின் முக்கிய பகுதி வரப்போகிறது?' என்று நண்பர்கள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே கதை நிறைவு பெற்றுவிட்டது. நிறைந்த பின்னர் கதையை இன்னொரு முறை படித்துப் பார்த்தால் கதையின் முழுவடிவம் தென்படும். அந்தக் கதையில் உண்மை நிகழ்வுகளை வைத்து எழுதியதால் நிறைவு செய்வது எளிதாக வந்தது.

வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையிலான புனைவுக் கதைகளையும் தொடர்கதைகளாகச் சொல்லிச் செல்வது எளிதாக வருகின்றது. கோதையின் கதை, பெரியாழ்வார் கதை, பாரி வள்ளல்/கபிலர் கதையான 'உடுக்கை இழந்தவன் கை' போன்றவை எடுத்துக்காட்டுகள். பேசும் போது இருந்த அழகும் வருணனைகளும் கற்பனைகளும் எழுதும் போது இன்னும் வளர்ச்சி அடைந்துள்ளதைக் காண்கிறேன். ஆனால் ஒரு பெரும் தடையை கதைகளை 'எழுதும்' போது காண்கிறேன். கதையின் உச்சக்கட்டத்தை அடையும் போதும் புலனம் மாறும் போதும் ஒரு தடுமாற்றம் ஏற்படுகின்றது. பெரியாழ்வார் கதையின் உச்சக்கட்டமான பல்லாண்டு பாடிய நிகழ்வினைச் சொல்லிவிட்டு புலனம் மாறி அவருடைய பாசுரங்களைப் பற்றி பேச வேண்டிய நேரத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. கோதையின் கதையின் உச்சக்கட்டமான திருப்பாவை நோன்பு நோற்கும் நிகழ்வினைச் சொல்லும் போது புலனம் மாறி திருப்பாவையின் பொருளுரையைப் பேச வேண்டிய தருணத்தில் ஒரு தடுமாற்றம் வருகிறது. 'உடுக்கை இழந்தவன் கை' கதையின் உச்சக்கட்டமான கபிலர் பாரி மகளிரை மலையமானுக்கு மணம் செய்து கொடுக்கும் நிகழ்வினை எழுதும் போது ஒரு தடுமாற்றம் வருகிறது. இது வரை எழுதி வந்ததின் அழகு மாறாமல் அதே நேரத்தில் புலனம் மாறுவதும் கதையின் உச்சக்கட்டத்தை அடைவதையும் படிப்பவர்கள் உணர்ந்தும் உணராத வகையில் எப்படி சொல்வது என்பது புரியவில்லை போலும். முயன்றால் முடியும் என்று தெரிகிறது. ஆனால் முயல்வதற்கு கை முன்வரவில்லை. அதனால் அவை மாதக்கணக்கிலும் ஆண்டுக்கணக்கிலும் முன்னேறாமல் முடங்கி நிற்கின்றன.

இன்னொன்றையும் கவனிக்கிறேன். புத்தம் புதிதான புனைவை எழுத இயலவில்லை. தரவுகள் நிறைந்த ஒரு கதையை எடுத்துக் கொண்டு தரவுகளின் அடிப்படையில் என் கற்பனையைக் கலந்து விரித்து எழுதுவது தான் வருகிறதே ஒழிய முழுக்க முழுக்கக் கற்பனை செய்து எழுதும் திறன் இல்லாதது போல் தோன்றுகிறது. அப்படித் தொடங்கினால் என்னவோ தரையில் கால் பாவாமல் அந்தரத்தில் தொங்குவது போல் ஒரு உணர்வு. தரவுகள் என்ற தரை இல்லாமல் என்னால் கதை சொல்ல இயலவே இயலாது போலும்.

Thursday, January 22, 2009

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 1

வைணவ ஆசாரிய பரம்பரை திருமகள் நாதனான திருமாலிடம் இருந்து தொடங்குகிறது.

லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் நாத யாமுன மத்யமாம்
அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்


என்று எல்லா வைணவர்களும் திருவாராதன (பூசை) காலத்தில் தன்னுடைய ஆசாரிய பரம்பரையை வணங்கிவிட்டே திருவாராதனம் செய்கிறார்கள்.

'இலக்குமிநாதன் தொடக்கமாகவும் நாதமுனிகள், யாமுன முனிகள் (ஆளவந்தார்) நடுவாகவும், என்னுடைய ஆசாரியன் வரையிலாகவும் இருக்கும் குருபரம்பரையை வணங்குகிறேன்' என்பது இந்த சுலோகத்தின் பொருள்.


வைணவ ஆசாரிய பரம்பரை:

1. திருமகள் நாதன்
2. திருமகள்
3. சேனைமுதலியார் என்னும் விஷ்வக்சேனர்
4. மாறன் சடகோபன் என்னும் நம்மாழ்வார்
5. நாதமுனிகள்
6. உய்யக்கொண்டார்
7. மணக்கால் நம்பி
8. ஆளவந்தார்
9. பெரிய நம்பி
10. திருக்கச்சி நம்பி
11. எம்பெருமானார் என்னும் இராமானுஜர்
12. கூரத்தாழ்வான்

இப்படி திருமாலிடம் இருந்து தொடங்கி வரும் ஒவ்வொரு ஆசாரியனுடைய பெருமையையும் எட்டு வரிகளில் பாடும் 'வாழித் திருநாமம்' என்றொரு மரபு இருக்கிறது. பகவத் இராமானுஜரின் முதன்மைச் சீடரான கூரத்தாழ்வாரின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக திருமகள் கேள்வன் தொடங்கி கூரத்தாழ்வான் வரை உள்ள ஆசாரியர்களின் வாழித் திருநாமங்களைப் பார்ப்போம்.

இந்தக் கொண்டாட்டத்தை வலைப்பதிவுகளில் தொடங்கி வைத்தவர் ஷைலஜா அக்கா. அதனைத் தொடர்ந்து இரவிசங்கரும் ஒரு இடுகை இட்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து 'ஆசாரிய ஹ்ருதயம்' பதிவில் தொடராக கூரத்தாழ்வாரது திவ்ய சரிதம் பரவஸ்து சுந்தரால் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் அடியேன் வாழித் திருநாமங்களைத் தொடராக இடுகிறேன். இன்னும் நிறைய வரும்.

***

பெரிய பெருமாள்


திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே
செய்யவிடைத்து ஆய் மகளார் சேவிப்போன் வாழியே
இரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே
இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே
அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே
அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே
பெருகி வரும் பொன்னி நடுப்பின் துயின்றான் வாழியே
பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே

வாழித் திருநாமத்தின் பொருள்:

திருமகளான இலக்குமித் தாயாரும் மண்மகளான பூமித் தாயாரும் சிறப்பு பெறும் படி அமைந்தவன் வாழ்க. இறைவனைப் பற்றி சொல்லிக் கொண்டே வரும் புருஷ சூக்தம் என்னும் வேத மந்திரம் அவனது அடையாளமாக 'ஹ்ரீச்ச தே லக்ஷ்மீச்ச பத்ன்யௌ - உனக்கு பூமியும் இலக்குமியும் மனைவியர்' என்று கூறுகிறது. அப்படி அவன் பரம்பொருள் என்று சொல்வதற்கு அடையாளமாக அமையும் அருளும் பொறுமையும் வடிவான திருமகளும் மண்மகளும் சிறக்கும் படி வந்தமைந்த திருமாலே வாழி வாழி. செம்மையுடைய ஆயர்மகளான நீளாதேவி நப்பின்னைத் தாயாரின் சேவையைப் பெறுவோன் வாழ்க.

உலக உயிர்களின் இடர்களைக் களைய பாற்கடலை அடைந்து அங்கே பள்ளி கொண்டவன் வாழ்க. 'என்ன தவம் செய்தனை' என்று வியக்கும் படியாக அரிய தவம் செய்த தயரதனின் திருமகனாய், சக்ரவர்த்தித் திருமகனாய் அவதரித்தவன் வாழ்க.

அனைத்துயிர்களின் இருதயங்களிலும் உள் நின்று இயக்குபவனாக அந்தரியாமியாக ஆனவன் வாழ்க. பெருகி வரும் வடகாவிரி, தென்காவிரி நடுவில் இருக்கும் திருவரங்கத்தில் துயில்கின்றவன் வாழ்க. பெரிய பெருமாளாகிய எங்கள் தலைவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.

இறைவனின் ஐந்து நிலைகளும் இங்கே போற்றப்பட்டது.



1. திருமகளும், மண்மகளும், ஆயர்மகளும் அருகில் இருக்க பரம்பொருளாய் பரமபதத்தில் அமர்ந்திருக்கும் நிலை - பரம்
2. தேவர்களுக்கும் இருடிகளுக்கும் (ரிஷிகளுக்கும்) அருள் செய்வதற்காகவும் அவதாரம் செய்வதற்காகவும் பிரகிருதி மண்டலத்தில் பாற்கடலில் பள்ளி கொண்ட நிலை - வியூஹம்
3. தருமத்தை நிலை நாட்ட பல உயிர்களாக உருவெடுத்து இறங்கி வரும் நிலை - விபவம்/அவதாரம்
4. உள் நின்று இயக்குபவனாக எல்லா உயிர்களிலும் இருக்கும் நிலை - அந்தரியாமி
5. அனைவரும் எளிதில் கண்டு வணங்கும் வகையில் திருக்கோவில்களிலும் வீடுகளிலும் சிலை உருவில் இருக்கும் நிலை - அர்ச்சை

***

பெரிய பிராட்டியார்



பங்கயப் பூவில் பிறந்த பாவை நல்லாள் வாழியே
பங்குனியில் உத்திர நாள் பார் உதித்தாள் வாழியே
மங்கையர்கள் திலகம் என வந்த செல்வி வாழியே
மால் அரங்கர் மணி மார்பை மன்னுமவள் வாழியே
எங்கள் எழில் சேனை மன்னர்க்கு இதம் உரைத்தாள் வாழியே
இருபத்தஞ்சு உட்பொருள் மால் இயம்புமவள் வாழியே
செங்கமலச் செய்யரங்கம் செழிக்க வந்தாள் வாழியே
சீரங்க நாயகியார் திருவடிகள் வாழியே

சீரங்கநாயகித் தாயார் வைணவ ஆசாரிய பரம்பரையில் இரண்டாவது ஆசாரியர். முதல் ஆசாரியன் இறைவனே என்பதால் ஜீவாத்மாக்களுள் முதல் ஆசாரியராக திருமகள் அமைகிறாள். அதனால் பெண்ணை முதல் குருவாகக் கொண்ட மரபாக தமிழக வைணவ மரபைக் கூறவேண்டும். ஸ்ரீயை முதல் ஆசாரியராகக் கொண்டதால் இந்த மரபு ஸ்ரீவைஷ்ணவம் என்று அழைக்கப்படுகின்றது.

வாழித் திருநாமத்தின் பொருள்:

தாமரைப்பூவில் பிறந்த நன்மைகளெல்லாம் ஓருருவான பெண் வாழ்க. பங்குனி உத்திர நாளில் பிறந்தவள் வாழ்க. பெண்களில் சிறந்தவள் என்னும்படி இருப்பவள் வாழ்க. திருமாலவனாம் திருவரங்கன் மணி மார்பில் 'அகலகில்லேன் சிறிது நேரமும்' என்று நிலைத்து வாழ்பவள் வாழ்க. திருமாலவனுக்கு 'இவள் மனைவி' என்பதால் தனித்தன்மை; திருமகளுக்கு 'இவன் திருமார்பில் நிலைத்து வாழ்பவள்' என்பதால் தனித்தன்மை.

எங்கள் அடியார் குழாத்திற்கெல்லாம் தலைவனான 'சேனை மன்னருக்கு' இவ்வைணவ மரபை உரைத்தவள் வாழ்க. இவ்வுலகில் நிலையாக இருக்கும் தத்துவங்கள் இருபத்தி ஐந்து என்ற நுண்ணிய அறிவை திருமாலவனிடமிருந்து பெற்றவள் வாழ்க. செம்மையுடைய திருவரங்க நகரம் செழிக்கும்படி வந்தவள் வாழ்க. சீரங்க நாயகியாரின் திருவடிகள் வாழ்க வாழ்க.
***

சேனை முதலியார்

ஓங்கு துலாப் பூராடத்துதித்தச் செல்வன் வாழியே
ஒண்டொடியாள் சூத்ரவதி உறை மார்பன் வாழியே
ஈங்குலகில் சடகோபற்கு இதம் உரைத்தான் வாழியே
எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே
பாங்குடன் முப்பத்து மூவர் பணியுமவன் வாழியே
பங்கயத்தாள் திருவடியைப் பற்றினான் வாழியே
தேங்கு புகழ் அரங்கரையே சிந்தை செய்வோன் வாழியே
சேனையர் கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே

திருமாலின் தெய்வீகப் படைகளை 'மாதவன் பூதங்கள்', 'கடல்வண்ணன் பூதங்கள்' என்றெல்லாம் பாடுவார் நம்மாழ்வார். அந்தத் தெய்வீகப் படைகளின் தலைவனாக இருப்பவர் விஷ்வக்சேனர் எனப்படும் சேனை முதலியார். சேனைகளுக்கு முன்னவராக இருந்து படைகளை நடத்துபவர் என்பதால் அவருக்குச் சேனை முதலியார் என்ற திருப்பெயர். இவர் ஆசாரிய பரம்பரையில் மூன்றாவது ஆசாரியர்; ஜீவாத்மாக்களில் இரண்டாவது ஆசாரியர். எந்த வித தடைகளும் இன்றி எடுத்தக் காரியம் யாவினும் வெற்றி பெற வைணவர்கள் எல்லாக் காரியங்களுக்கும் தொடக்கத்தில் வணங்குவது சேனை முதலியாரை.

யஸ்ய த்விரத வக்த்ராத்யா பாரிசத்யா பரஸ்ஸதம்
விக்னம் நிக்னந்தி சததம் விஷ்வக்சேனம் தம் ஆச்ரயே

யாருடைய படையில் / அவையில் இரட்டைக் கொம்பனான விக்னேசர் முதலிய விஷ்ணு கணங்கள் இருக்கின்றார்களோ அந்த விஷ்வக்சேனரை தடைகள் எல்லாம் நீங்கும் பொருட்டு எப்போதும் வணங்குகிறேன்.

வாழித் திருநாமத்தின் பொருள்:

பெருமையில் சிறந்த ஐப்பசி மாத பூராட நட்சத்திரத்தில் உதித்த செல்வன் வாழ்க. ஒளி பொருந்திய நெற்றியையுடைய சூத்ரவதி என்றும் நீங்காமல் வாழும் மார்பை உடையவன் வாழ்க. (எம்பெருமான் திருமகளை என்றும் மார்பில் கொண்டிருப்பதைப் போல் சேனைமன்னரும் தன் பிராட்டியான சூத்ரவதியை என்றும் மார்பில் தாங்கியிருக்கிறார்). இங்கே இவ்வுலகில் சடகோபரான நம்மாழ்வாருக்கு மரபு வழி ஞானத்தை உரைத்தவன் வாழ்க.

இறைவனின் திருக்காரியங்கள் யாவும் தடையின்றி நடைபெறுவதற்காகத் தன் திருக்கையில் செங்கோலை ஏந்தி இருப்பவன் வாழ்க. அழகு பெற முப்பத்து மூக்கோடி தேவர்களும் வந்து பணியும் பெருமையுடையவன் வாழ்க. தாமரையாள் ஆகிய திருமகளின் திருவடிகளைப் பணிந்து அவளைக் குருவாகக் கொண்டவன் வாழ்க.

என்றென்றும் புகழ் மங்காத திருவரங்கனையே எப்போதும் சிந்தை செய்பவன் வாழ்க. சேனைகளின் தலைவனது செங்கமலத் திருவடிகள் வாழ்க வாழ்க.

***

இத்துடன் விண்ணுலக ஆசாரியர்களின் வரிசை நிறைவு பெற்றது. மண்ணுலக ஆசாரியர்களின் வாழித் திருநாமத்தை அடுத்த இடுகையில் பார்ப்போம்.