Thursday, February 26, 2009

உடுக்கை இழந்தவன் கை - 15 (பாரி வள்ளலின் கதை)

‘எத்தனை ஊர்களுக்குத் தான் செல்வது? வீரர்கள் என்றும் வள்ளல்கள் என்றும் பெரும் புகழ் கொண்ட இந்த வேளிர்கள் எல்லாம் வேந்தர்களின் பொல்லாப்பு நமக்கெதற்கு என்று அரசவையினர் கூறும் அறிவுரையை ஏற்றுக் கொண்டும் வேந்தர்களுக்குப் பெண் கொடுப்பது வேளிர்களின் வழக்கம் தானே; பின் ஏன் பாரி வேள் பெண் தர மறுத்தான் என்று கேள்வி கேட்டும் பாரிமகளிரை மணக்க மறுக்கின்றனர்.

எங்கும் நிறைந்த இறையே. என் நண்பன் பாரி சென்ற வழியே நானும் செல்ல மனம் துடிக்கின்றது. அவனுக்குத் தந்த வாக்கினை மட்டும் நிறைவேற்றிவிட்டேனென்றால் போதுமே. பிரிவெனும் துயரைத் துடைத்து எறிந்து விடலாமே. அதற்கு ஒரு வழி காட்ட மாட்டாயா?

இன்னும் ஓரிரு வேளிர்கள் தான் இத்தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களிடமும் சென்று என் மக்களை மணக்கக் கேட்கிறேன். அவர்களும் மறுக்காமல் இருக்க நீயே அருள் புரியவேண்டும்'

அருகில் அமைதியாக படுத்திருக்கும் அங்கவை, சங்கவை இருவரையும் பார்த்தபடியே மனத்தில் இறையை வேண்டிக் கொள்கிறார் கபிலர். பெண்ணையாற்றங்கரையில் இருக்கும் மலையமானின் இந்நகரத்திற்கு வந்த பின் இங்கிருக்கும் சத்திரத்தில் தரப்பட்ட உணவை ஏற்றுக் கொண்டு அங்கேயே தங்கியிருக்கிறார்கள் மூவரும். இந்த முறை தான் மட்டும் தனியே அரசவைக்குச் சென்று மலையமானைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டு பின்னரே தன் ஆவலை வெளியிட வேண்டும் என்று உறுதி கொண்டிருக்கிறார் கபிலர்.

***

'இன்றைக்கு நல்ல நாளாக இருக்கிறது. இன்றே மலையன் அவைக்குச் சென்று அவனைப் பாடுவோம்.

அடடா. இதென்ன புள் நிமித்தம் தடுக்கின்றதே. இன்றைக்குச் செல்ல வேண்டாமோ? பல முறை பெற்ற தோல்வியே நம் மன உறுதியைக் குலைக்கும் புள் நிமித்தமாக நின்று தடுக்கின்றதோ? இருக்கலாம். உள்ளே இருப்பவை தானே வெளியே தென்படுகின்றன. இந்தப் புட்கள் நின்று தடுத்தாலும் இன்றே மலையமானைச் சென்று பார்ப்போம். இனி மேலும் இந்தப் பெண்களின் துயரத்தைக் கண்டு கொண்டிருக்க முடியாது'

'மாளிகை வாசலுக்கு வந்துவிட்டோம். இதென்ன புலவர்களின் பெரும் கூட்டம். இன்றைக்கு ஏதேனும் முக்கியமான நாளா? மலையனின் பிறந்த நாளோ? அவன் ஏதேனும் போரில் வென்று வெற்றி விழா கொண்டாடுகின்றானா? நகரத்தில் எந்த வித கொண்டாட்டமும் தென்படவில்லையே. மாளிகை வாசலில் மட்டும் ஏன் இந்தக் கூட்டம்?

ம்ம்ம். அருகில் வந்துப் பார்த்தால் இவர்களில் பலர் புலவர்கள் இல்லை போலிருக்கிறதே. ஏதேனும் பரிசு பெற்றுச் செல்ல வந்திருக்கும் வறியவர்கள் போல் தான் இருக்கிறார்கள்'.

"காவலர்களே. இன்று ஏதேனும் முக்கிய விழாவா? மாளிகை வாசலில் இவ்வளவு பேர் நிற்கின்றார்களே"

"ஐயா. இது நாள்தோறும் காணும் காட்சியே. நம் அரசர் பெருமான் வேண்டும் என்று கேட்டு வந்தோருக்கெல்லாம் வாரி வாரி வழங்கும் வள்ளல் பெருமான். ஒவ்வொரு நாளும் அவரை வந்துப் பார்த்து ஏதேனும் இரந்து பெறுபவர்களும் உண்டு; அவரைப் பாடிப் பரிசில் பெறுபவர்களும் உண்டு"

'நாள்தோறும் காணும் காட்சியா? பரவாயில்லையே?! பாரியின் மாளிகை வாசலில் ஏதேனும் முக்கிய நாட்களில் மட்டும் தான் இவ்வளவு கூட்டம் கூடும்'

"புலவர்களும் இரவலர்களும் தனித்தனியே மன்னனைக் காண்பார்களோ?"

"இல்லை ஐயா. அனைவருமே ஒன்றாகத் தான் உள்ளே செல்வார்கள். அனைவருக்கும் பரிசு உண்டு"

"யார் எவர் என்று கூட பார்ப்பதில்லையா?"

"இல்லை ஐயா. எந்த வித வேறுபாடும் இல்லை. அனைவருக்கும் ஒரே மரியாதை தான்"

'என்ன இது? காவலர்கள் சொல்வதைப் பார்த்தால் மலையனிடம் கற்றவருக்கும் மற்றவருக்கும் ஒரே மரியாதை தான் போலிருக்கிறதே? இது தவறல்லவா? இவன் பரிசினை வழங்கி வள்ளல் என்ற பெயரைப் பெறும் நோக்கம் மட்டுமே கொண்டவனோ? தமிழையும் புலமையையும் மதிக்காதவனோ? இது என்ன கொடுமை?'

"காவலரே. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். நானும் மன்னனைக் கண்டு பரிசில் பெற வந்திருக்கிறேன்"

"மகிழ்ச்சி ஐயா. நல்ல இடத்திற்குத் தான் வந்திருக்கிறீர்கள். இதோ வரிசையில் நில்லுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் மாளிகை வாசலைத் திறப்பார்கள். அவைக்குச் சென்று மன்னரைக் காணலாம்"

கபிலர் வரிசையில் சென்று நிற்கிறார். புலவர்களும் வறியவர்களும் ஒரேயடியாகக் குழுமி இருக்கும் அந்த இடம் இரைச்சலாக இருக்கிறது. நான் முன்னே நான் முன்னே என்று ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். வாசற்கதவு திறந்ததும் அனைவரும் உள்ளே நுழைய முயன்று நெருக்கிக் கொள்கிறார்கள்.

உள்ளே அரசவையில் அவையினருடன் மன்னன் அமர்ந்திருக்கிறான். அவைக்காவலர்கள் வந்தவர்களை ஒழுங்குப்படுத்தி ஒவ்வொருவராக மன்னவனிடம் அனுப்புகிறார்கள்.

உள்ளே சென்ற ஒவ்வொருவருக்கும் பரிசு கிடைக்கின்றது. புலவர்கள் என்றால் அவர்கள் பாடி முடிக்கும் வரை கேட்டுவிட்டுப் பின்னர் பரிசு கொடுக்கிறான் மலையன். மற்றவர் என்றால் அவர்கள் வாழ்த்தி முடித்த உடனே பரிசு கிடைக்கின்றது. பலர் மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். சிலர் நினைத்தது கிடைக்காமல் மன வருத்தத்துடன் செல்கின்றனர்.

"மன்னவர் வாழ்க. திருக்கோவலூர் மலையமான் வாழ்க.

மன்னவா. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். அந்தணன். உன்னைப் பாட வந்திருக்கிறேன். "

"மிக்க மகிழ்ச்சி புலவரே"

"நாள் அன்று போகிப் புள் இடைத் தட்பப்
பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும்
வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப்
பாடான்று இரங்கும் அருவிப்
பீடு கெழு மலையற் பாடியோரே
"

"நல்ல பாடல் புலவரே. தங்களுக்கு ஒரு தேரை வழங்குகிறேன்"

"திருமுடிக்காரி. நான் தேரினை வேண்டி வந்தேன் என்று நினைத்தாயா? அவரவர் தகுதி அறிந்து அவரவர் வேண்டியதை வழங்குவது தானே முறை. அப்படியின்றி வருவோர்களுக்கெல்லாம் அவர்களின் தகுதியினைக் கருத்தில் கொள்ளாமல் மனம் போன போக்கில் வழங்குவது தகுமா?

ஒரு திசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்
வரிசை அறிதலோ அரிதே பெரிதும்
ஈதல் எளிதே மா வண் தோன்றல்!
அது நன்கு அறிந்தனை ஆயின்
பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே!"


"ஐயனே. மிகப்பெரும் உண்மையைச் சொன்னீர்கள். வேளிர்கள் என்றாலே வள்ளல்கள் என்று வழிவழியே வரும் பெயருக்கேற்ப நடந்து கொள்ளவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் வருபவர்களின் வரிசை அறியாமல் ஈந்து வந்தேன். இன்றைக்கு ஒரு நல்லுரையைக் கூறி நல்லறிவு புகட்டினீர்கள்"

"மன்னவா. இது நான் சொல்லும் அறிவுரை மட்டும் இல்லை. பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அது நோக்கி வாழ்வார் பலர் என்று பொய்யாமொழியும் சொல்கிறதே"

"கற்றபின் நிற்க மறந்துவிட்டேன். கற்றலினும் கேட்டல் நன்று என்று எனக்காகத் தான் சொன்னார்களோ.

தாங்கள் ஒரு பெரும் புலவர் என்று நினைக்கிறேன். தங்களைப் பற்றி மேலும் அறிய விழைகிறேன்"

"மன்னவா. முன்னரே சொன்னது போல் நான் ஒரு தமிழ்ப்புலவன். அந்தணன். பெயர் கபிலன். அகத் திணைகளில் குறிஞ்சித் திணையில் நிறைய பாடல்கள் இயற்றியிருக்கிறேன்"

"ஐயனே. நீங்கள் தான் குறிஞ்சிக்குப் புகழ் தந்த கபிலரா? இறையனாரும் முருகப்பெருமானும் கட்டிக் காத்த தமிழ்ச்சங்கத்தில் முதன்மை பெற்று இருப்பவர் தாங்கள் தானா? என் குலக்கடவுள் மாயோனின் திருவருளால் நீங்கள் என் மாளிகைக்கு வந்தீர்கள். உங்கள் பெருமை அறியாமல் நடந்து கொண்ட சிறியேனை மன்னிக்க வேண்டும்.

புலவர் பெருமானே. இந்த ஆசனத்தில் அமர வேண்டும்."

அவன் தந்த ஆசனத்தில் அமர்ந்தார் கபிலர்.

"மன்னவா. சிலர் எத்தனை முறை சொன்னாலும் நல்லவற்றைக் கேட்க மாட்டார்கள். நீ ஒரு முறை சொன்னவுடனேயே புரிந்து கொண்டாய். கூர் மதி படைத்தவன் நீ. என்னை மட்டுமின்றி இனி இங்கே வரும் எல்லோரையும் அவரவர் தகுதி அறிந்து அவர்களைப் பெருமை செய்வாய். அதனால் உன் பொருளும் புகழும் குலமும் வளரும்"

"அப்படியே செய்கிறேன் ஐயனே. தாங்கள் என்னிடம் பரிசில் பெற வந்ததாகத் தெரியவில்லை. என்னை நோக்கி வந்த காரணத்தைச் சொல்லி அருளுங்கள்"

"மலையமான். உன்னுடைய குலத்திற்குத் தகுந்த குலம் பாரி வள்ளலின் குலம். அந்தப் பாரிவேள் எனது நெருங்கிய தோழன். அவனது மக்கள் இருவரையும் நீ மணந்து கொள்ள வேண்டும்"

"ஐயனே. நானோ சிறியவன். எனக்கு எது நன்மை தரும் என்பதை சான்றோராகிய நீங்களே அறிவீர்கள். தங்கள் ஆணைப்படியே நடந்து கொள்கிறேன்"

"திருமுடிக்காரி. பாரிவேள் மூவேந்தர்களுக்கு பெண் தர மறுத்து இறந்து பட்டதை நீ அறிவாய் தானே?"

"அறிவேன் ஐயனே. வேந்தர்களுக்குப் பெண் தரும் வழக்கம் வேளிர் நடுவே இருந்தாலும் தர மறுக்கும் வேளிர்களும் உண்டு. அவர்களின் குல வழக்கத்தை நான் மதிக்கிறேன். வள்ளல் பாரிவேளின் குல வழக்கமும் அப்படியே அமைந்தது போலும். அதனால் அவர் பெண் தர மறுத்திருக்கலாம். இப்போது தங்களின் ஆணைப்படி வேளிர்களின் ஒருவனான நான் அப்பெண்களை மணந்து கொள்கிறேன்"

"வேந்தர்களிடம் உனக்கு பயம் இல்லையா?"

"ஐயனே. பெண் கேட்பது அவர்கள் உரிமை. தர மறுப்பது பாரிவேளின் உரிமை. பெண் தரவில்லையாயின் ஒதுங்கிச் செல்வதே வேந்தர்களுக்கு அழகாக இருந்திருக்கும். அதனை மீறி அவர்கள் பறம்பு நாட்டின் மேல் படையெடுத்தார்கள். சூழ்ச்சியால் வென்றார்கள்.

பாரிவள்ளல் தங்களிடம் அவர் மக்களை அடைக்கலமாகத் தந்தார். என்னிடம் அப்பெண்களை மணக்க வேண்டுவது உங்கள் உரிமை. அதனை ஏற்றுக் கொள்வது என் கடமை. அதனால் வேந்தர்கள் வெகுண்டால் அவர்களுக்குத் தகுந்த பதிலை மலையமான் அளிப்பான். அதனை அவர்களும் அறிவார்கள். அவர்களின் சூழ்ச்சி என்னிடம் செல்லாது"

"மன்னவா. உன் வீரத்தைக் கண்டு மிக்க மகிழ்ந்தேன். விரைவில் ஒரு நல்ல நாளில் உனக்கும் பாரி மகளிருக்கும் திருமணம் நடைபெறும்"

"தங்கள் ஆணை ஐயனே"

“குலம், கல்வி, செல்வம் என்று எல்லா வகைகளிலும் தகுதியுடைய கிழத்தியை மேற்கூறிய எல்லா வகைகளிலும் சமமான தகுதிகள் உடைய கிழவனுக்கு மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் தர மணமகளின் பெற்றோர் மகிழ்வுடன் அருகில் நிற்க நடக்கும் திருமணம் கற்பு மணம் என்று சான்றோர் சொல்லுவர். அப்படிப்பட்ட கற்பு மணத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக உங்கள் திருமணம் திகழட்டும்"

***

பாடற்குறிப்புகள்:

1. 'நாள் அன்று போகி' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 124 ஆம் பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை (பாடப்பெறுபவரது பெருமைகளைக் கூறும் திணை); துறை: இயன்மொழி (உள்ளதை உள்ளபடியே கூறும் துறை).

பொழிப்புரை: நாள் நல்ல நாளாக அமையாமல், புள் நிமித்தம் இடையே நின்று தடுக்க, முறைப்படி மாளிகைக்குள் நுழையாமல், திறமையொன்றும் இல்லாமல் தகாத சொற்களைச் சொன்னாலும் வறுமையுடன் செல்லமாட்டார்கள், நெறிகளுடன் கூடிய இன்னிசையை எழுப்பிக் கொண்டு வீழும் அருவியை உடைய பெருமை பொருந்திய மலையை உடையவனைப் பாடியவர்கள்.

(கதையில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிகள் இப்பாடலை அடிப்படையாகக் கொண்டே சொல்லப்பட்டன).

2. 'ஒரு திசை ஒருவனை' என்று தொடங்கும் பாடல் புறநானூற்றின் 121வது பாடல். கபிலர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியது. திணை: பாடாண்திணை. துறை: பொருண்மொழிக்காஞ்சி (நீதிநெறிகளைக் கூறும் துறை)

பொழிப்புரை: ஒரு திசையில் 'வள்ளல் என்றாலே இவன் தான்' என்று சொல்லும்படி விளங்கும் ஒருவனிடம் பரிசில் பெற நினைந்து நான்கு திசைகளில் இருந்தும் பரிசு பெற விரும்புபவர்கள் வருவார்கள். அவர்களின் தகுதிகளை அறிவது மிக அரிது. அவர்களுக்கு ஈதலோ மிக எளிது. பெரிய வள்ளல் தன்மை உடைய தலைவனே! தகுதியின் படி ஒருவரைப் பெருமைப்படுத்த வேண்டும் என்ற நெறியினை நீ நன்கு அறிந்தாய் ஆயின் ஒரே தரமாகப் புலவர்களையும் பார்ப்பதை தவிர்ப்பாய்.

29 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

மீள் நல்வரவு பாரி மன்னன் சமூகமே! :)

குமரன் (Kumaran) said...

பாரிவள்ளல் சமூகமா? புரியலையே இரவி.

தருமி said...

கதையை உங்கள் தமிழில் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

அது சரி, இந்தப் பதிவின் தொடுப்பு என் "அந்தப்' பதிவில் எப்படி வருகிறது / வந்துள்ளது?

தருமி said...

Email follow-up comments to dharumi2@gmail.com --- இதற்காக மீண்டுமொரு முறை ...

மெளலி (மதுரையம்பதி) said...

புள் நிமித்தம் - அப்படின்னா என்னங்க?

குமரன் (Kumaran) said...

தருமி ஐயா.

முன்பே ஒரு முறை கேட்டிருந்தீர்கள். அப்போதும் சொன்னேன். அதே பதில் தான் இப்போதும். நானாக இணைக்கவில்லை. பிளாக்கர் செய்யும் குறும்பு இது.

நானாக செய்தது: உங்கள் பதிவினை நான் பின் தொடர்கிறேன் (Follow) என்று பிளாக்கரிடம் சொன்னது & என் பதிவில் வலப்பக்கத்தில் நீங்கள் இடும் ஒவ்வொரு இடுகைக்கும் சுட்டி (விளம்பரம்) தானாக வருகின்ற மாதிரி அமைத்தது.

நான் செய்யாமல் தானாக நடப்பது: நான் ஒவ்வொரு முறை கூடலில் இடுகை இடும் போதும் தானாக அந்த இடுகையின் சுட்டியை நான் தொடரும் பதிவர்களின் பதிவில் காட்டுவது. உங்கள் பதிவு, இரவிசங்கர் கண்ணபிரான் பதிவு என்று இன்னும் நிறைய இடங்களில் தானாக அது வருவதைப் பார்த்திருக்கிறேன். எப்படி தவிர்ப்பது என்று தெரியவில்லை. Sorry for the inconvenience.

குமரன் (Kumaran) said...

நிமித்தம்ன்னா சகுணம் மௌலி. பறவைகள் காட்டும் நிமித்தம் 'புள் நிமித்தம்'. காக்கை கரைவது விருந்தினர் வருகையைச் சொல்வது போல் மற்ற பறவைகளின் செயல்களை வைத்து நிமித்தம் பார்க்கும் வழக்கம் பழந்தமிழரிடையே இருந்திருக்கிறது.

மெளலி (மதுரையம்பதி) said...

//நிமித்தம்ன்னா சகுணம் மௌலி. பறவைகள் காட்டும் நிமித்தம் 'புள் நிமித்தம்'.//

நன்றிங்க குமரன்....

Kavinaya said...

பாடல்களைக் கொண்டு உரையாடல்களை அழகா அமைச்சிருக்கீங்க. நல்லாயிருக்கு குமரா.

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நான் ஒரு தமிழ்ப்புலவன். "அந்தணன்". பெயர் கபிலன்.//

போச்சு! கோவி இங்கேயும் வரப் போறாரு! :)

//குமரன் (Kumaran) said...
பாரிவள்ளல் சமூகமா? புரியலையே இரவி//

ரெம்ப நாள் வராம இருந்து, இப்போ மீண்டும் பாரியின் கதை கூடலில் வருது இல்லையா? :)

அதுவும் இனி மங்கல நிகழ்வுகள்...பாரி மன்னனின் மொத்த சமூகமும் வரும்! அதான் மீள் நல்வரவு பாரி மன்னன் சமூகமே என்று சொன்னேன் குமரன்! தொடரைச் சீக்கிரம் முடிங்க! சித்திரைப் புத்தாண்டுக்குள்ளாற! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த முறை தான் மட்டும் தனியே அரசவைக்குச் சென்று மலையமானைப் பற்றி முதலில் நன்கு தெரிந்து கொண்டு//

அருமை! நல்ல தமிழ்க் காவலர் நம் கபிலர்! பெண்களை உடன் அழைத்துப் போய் மொத்த அரசவையின் நடுவிலும் கேட்பதில் இருக்கும் தர்ம சங்கடத்தை உணர்ந்து கொண்ட பின்னால், தன் போக்கை மாற்றிக் கொள்கிறாரே! சான்றோர்க்கு இதுவே அழகு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//கற்றவருக்கும் மற்றவருக்கும் ஒரே மரியாதை தான் போலிருக்கிறதே? இது தவறல்லவா?//

எப்படித் தவறாகும் குமரன்?

பொருட் செல்வத்தை மட்டும் வைத்து தனிச் சலுகை காட்டினா தவறு சொல்லும் நாம்,
கல்விச் செல்வத்தை வைத்து, தனி சலுகை காட்டணும் என்று எதிர்பார்ப்பது நியாயமா?

ஏதோ விவாதக் களம், தமிழாராய்ச்சி சபை-ன்னா அங்கு கற்றவர்க்குத் தனி இடம் சரி!
இது பொதுவில் பரிசில் பெறும் நிகழ்ச்சி தானே! அப்புறம் என்ன கற்ற குடி தனி, மற்ற குடி தனி?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இறையனாரும் முருகப்பெருமானும் கட்டிக் காத்த தமிழ்ச்சங்கத்தில் முதன்மை பெற்று இருப்பவர் தாங்கள் தானா?//

இறையனார் கவிதை குறுந்தொகையில் இருக்கு! முருகனார் கவிதை சங்க இலக்கியத்தில் இருக்கா குமரன்? :)

திருவிளையாடல் வசனத்தில் சொல்லிச் சொல்லி, இறையனாரும் எம்பெருமான் முருக வேளும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்தில்-ன்னு டயலாக் பரவலாக ஆகி விட்டதோ? :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அதனால் உன் பொருளும் புகழும் குலமும் வளரும்//

//மலையமான். உன்னுடைய குலத்திற்குத் தகுந்த குலம் பாரி வள்ளலின் குலம். அவனது மக்கள் இருவரையும் நீ மணந்து கொள்ள வேண்டும்"//

வெறும் குலத்தை மட்டுமா வைத்து கபிலர் இப்படிப் பேசுகிறார்?
பண்டைத் தமிழ்த் திருமணங்கள், (களவு மணம் அல்ல, கற்பு மணம்)இப்படியா "தகுந்த குல" அளவில் பேசப்படுகின்றன?

அதுவும் திருமுடிக்காரி போன்ற ஒரு மன்னன் அந்தப் பெண்களைப் பார்க்கக் கூட இல்லை! கபிலரிடத்தில் சரி என்று சொல்கிறானே?
பொதுவாக மன்னர்கள் ஓவியமாச்சும் பார்ப்பார்களே?

//குலம், கல்வி, செல்வம் என்று எல்லா வகைகளிலும் தகுதியுடைய கிழத்தியை மேற்கூறிய எல்லா வகைகளிலும் சமமான தகுதிகள் உடைய கிழவனுக்கு //

என்னாது கிழவனுக்கும் கிழத்திக்கும் கல்யாணமா?
குமரனுக்கும் குமாரத்திக்கும் இல்லையா? :))))))

Jokes apart..
"குலம், கல்வி, செல்வம் என்று எல்லா வகைகளிலும்" என்று நீங்களே சொல்லி உள்ளீர்கள்!
ஆனால் பாரி மகளிரின் கல்வி, செல்வம் பற்றி ஒன்றுமே எடுத்து இயம்பாது, குலத்திற்குத் தகுந்த குலம் என்றே கபிலர் உரையாடுவதன் காட்சி சரி தானா குமரன்?

தவறாகக் கேட்டிருந்தால் அடியேனை மன்னிக்கவும்!

குமரன் (Kumaran) said...

//நான் ஒரு தமிழ்ப்புலவன். "அந்தணன்". பெயர் கபிலன்.//

போச்சு! கோவி இங்கேயும் வரப் போறாரு! :)

----------------->

யார் என்ன சொன்னாலும் அஞ்சாதே நெஞ்சமே
உள்ளதை உள்ளபடி கூறு....

இதோ கபிலரின் ஒரு பாடலில் அவர் தன்னைத் தானே செய்து கொள்ளும் அறிமுகம்:

புறநானூறு 200வது பாடல்

...
யானே பரிசிலன் மன்னும் அந்தணன்
...

இன்னொரு இடம், புறநானூறு 201வது பாடல்
....யானே
தந்தை தோழன் இவர் என் மகளிர்
அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே
...

குமரன் (Kumaran) said...

//அதுவும் இனி மங்கல நிகழ்வுகள்...பாரி மன்னனின் மொத்த சமூகமும் வரும்! //

அப்படியா? அப்படி யாரும் வருவாங்கன்னு தோணலை இரவி. அங்கவை சங்கவையே வருவாங்களா இல்லையான்னு தெரியலை. :-)

//தொடரைச் சீக்கிரம் முடிங்க! சித்திரைப் புத்தாண்டுக்குள்ளாற! :)
//

தொடர் எப்ப வரணும்ன்னு நானா முடிவு செய்கிறேன்? சித்திரையோ தையோ புத்தாண்டிற்குள் நிறைவு பெறுவது அவன் விருப்பம். :-)

குமரன் (Kumaran) said...

இரவி,

வரிசையறிதல் பற்றி கபிலரும் வள்ளுவரும் என்ன சொன்னார்களோ அதனைத் தான் இங்கே கதையில் சொல்லியிருக்கிறேன். கற்றவருக்கும் மற்றவருக்கும் அவர்கள் எதற்காக வந்தார்கள் என்று அறிந்து அதற்கேற்ப நடந்து கொள்வதையே இங்கே 'வரிசையறிதல்', 'மரியாதை' என்றெல்லாம் சொல்கிறார்கள். மற்றவரைத் தாழ்த்தி இவர்களை உயர்த்தச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் தான் 'பொருட்செல்வத்தின் அடிப்படையில் தனிச்சலுகை போல் கல்வியின் அடிப்படையில் தனிச்சலுகை' என்ற கேள்வி வரும். இங்கே தனிச்சலுகை வேண்டப்படவில்லை. அவர்களின் தகுதியறிந்து அவர்கள் எதனைத் தேடி வந்தார்கள் என்று அறிந்து அதற்கேற்பத் தருவதே 'மரியாதை'.

இங்கே கபிலர் மலையமான் தரும் பொருளை வேண்டி வரவில்லை. அவர் வேண்டி வந்தது வேறு. அங்கே அவருக்குத் தேர் தருவது சரியில்லை. அது அவருக்கும் மரியாதையில்லை. மலையனுக்கும் மரியாதையில்லை. அதனையே இங்கே பேசுகிறார்கள். சரி தானா?

// அப்புறம் என்ன கற்ற குடி தனி, மற்ற குடி தனி? //


இது தவறான கேள்வி என்று நினைக்கிறேன். பழந்தமிழரிடை குலப்பெருமை குடிப்பெருமை இருந்திருக்கிறது ஆனால் கற்ற குடி மற்ற குடி என்று இருந்ததாகத் தெரியவில்லை. ரிக் வேத காலத்தைப் போலவே எல்லா குடியினரும் கற்றவராக இருந்திருக்கிறார்கள் என்பதே இது வரை படித்த வரை நான் அறிந்திருப்பது. :-)

குமரன் (Kumaran) said...

முருகப்பெருமான் எழுதுன கவிதை இப்ப கிடைக்கிற தொகை நூற்கள்ல இல்லை போலிருக்கு இரவி. ஆனா மரபா சொல்லிக்கிட்டு வர்றாங்கல்ல. அதனால முருகனார் எழுதுன பாட்டு தொகுக்கப்படறதுக்கு முன்னாடியே காலவெள்ளத்துல மறைஞ்சிருச்சு போலிருக்கு. :-)

//திருவிளையாடல் வசனத்தில் சொல்லிச் சொல்லி, இறையனாரும் எம்பெருமான் முருக வேளும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்தில்-ன்னு டயலாக் பரவலாக ஆகி விட்டதோ? :))
//

அப்படியும் இருக்கலாம். நான் எழுதுன வரிக்குத் தரவு என்னான்னு கேட்டிருந்தீங்கன்னா இதைத் தான் காட்டியிருப்பேன். :-)

குமரன் (Kumaran) said...

பாரி மக்களின் கல்வியைப் பற்றி மலையனுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது போலிருக்கு இரவி. யானைக்கு முன்னே வரும் மணியோசையைப் போல அவங்க எழுதுன பாட்டு அவங்களுக்கு முன்னாடி வந்து அவங்க கல்விப் பெருமையைச் சொல்லிவிட்டது போலும்.

பாரிவள்ளலின் செல்வம் தான் எல்லோருக்கும் தெரியுமே. அதனால் அதைப் பற்றிய கேள்வியும் இல்லை.

மிச்சம் இருப்பது குலம். அதனை மட்டும் இங்கே சொல்லி பெண்ணெடுக்கச் சொல்கிறார் புலவர். மன்னனும் மறுக்கவில்லை.

பின்னர் குலம், கல்வி, செல்வம் இம்மூன்றிலும் ஒத்த கிழவன் கிழத்தியை மணக்கும் 'கற்பு மணத்திற்கு' இவர்கள் மணம் எடுத்துக்காட்டு என்று சொல்கிறார்.

சரி தானா இரவி?

குமரன் (Kumaran) said...

என் சரித்திரம்
மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்
---------------------------------------------------------------------------­----
அத்தியாயம்-49
வரிசை அறிதல்
சாஸ்திரங்களில் விற்பத்தி உள்ள வித்துவான் யாரேனும் வந்தால் அவரைப்
பார்த்துப் பேசுவதிலும் அவர் என்னென்ன விஷயங்களில் வல்லவர் என்பதை
அறிந்து கொள்வதிலும் அவருக்கு அதிக விருப்பம் இருந்தது. வித்துவான்கள்
வந்தால் மடத்து வேலைக்காரர்கள் உடனே தேசிகரிடம் தெரிவிப்பார்கள்.
கொலு மண்டபத்து வாயிலில் ஒரு காவற்காரன் இருப்பது வழக்கம். அக்காலத்தில்
முத்தையன் என்ற ஒரு கிழவன் இருந்தான். சுப்பிரமணிய தேசிகரிடம் தொண்டு
புரிந்து பகிய அவன் அவருடைய இயல்புகளை நன்றாக அறிந்திருந்தான். யாராவது
சாஸ்திரிகள் வந்தால் அவரிடம் மரியாதையாகப் பேசி அவர் இன்ன இன்ன
விஷயங்களில் வல்லவர் என்பதை அறிந்து கொள்வான். பிறகு ஓரிடத்தில் அவரை
அமரச் செய்து உள்ளே சென்று பண்டார சந்நிதிகளிம் ''ஒரு பிராமணர்
வந்திருக்கிறார்'' என்பான்.
''என்ன தெரிந்தவர்?'' என்று தேசிகர் கேட்பார்.
''தர்க்கம் வருமாம்'' என்றோ, ''மீமாம்சை தெரிந்தவாம்'' என்றோ, வேறு
விதமாகவோ அவன் பதில் சொல்வான்.
உடனே வித்துவான் உள்ளே செல்வதற்கு அனுமதி கிடைக்கும். அவர் சென்று
தேசிகரோடு சம்பாஷணை செய்வார். பேசப் பேச, வந்த வித்துவான், ''நாம் ஒரு
சிறந்த ரசிக சிகாமணியோடு பேசுகிறோம்'' என்பதை உணர்ந்து கொள்வார்.
வித்துவானுடைய திறமையை அறிந்து தேசிகரும் ஆனந்தமுறுவர். இவ்வாறு பேசிக்
கொண்டிருக்கும்போதே, தேசிகர் வந்த வித்துவானுடைய தகுதியை
அறிந்துவிடுவார். அப்பால் அவருக்கு அளிக்கப் பெறும் அந்தச் சம்மானத்தை
வித்துவான் மிக்க மகிழ்ச்சியோடு பெற்றுக் கொள்வார்.
''இங்கே சில காலம் தங்க வேண்டும்; அடிக்கடி வந்து போக வேண்டும்'' என்று
தேசிகர் சொல்வார். அவ்வார்த்தை உபசார வார்த்தையன்று; உண்மையான அன்போடு
கூறுவதாகவே இருக்கும். ''இம்மாதிரி இடத்துக்கு வராமல் இருப்பது ஒரு
குறை'' என்ற எண்ணம் வித்துவானுக்கு உண்டாகிவிடும். அவர் அது முதல்
திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்தவராகிவிடுவார்.
இவ்வாறு வருகிற வித்துவான்களுக்கு ஊக்கமும், பொருள் லாபமும் உண்டாவதோடு
தேசிகருடைய அன்பினால் அவர்களுடைய கல்வியும் அபிவிருத்தியாகும். ஒரு
துறையில் வல்லார் ஒரு முறை வந்தால் அவருக்குத் தக்க சம்மானத்தைச்
செய்யும்போது தேசிகர், ''இன்னும் அதிகமான பழக்கத்தை அடைந்து வந்தால் அதிக
சம்மானம் கிடைக்கும்'' என்ற கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்துவார்.
வித்துவானும் அடுத்த முறை வரும்போது முன் முறையைக் காட்டிலும் வித்தையிலே
அதிக ஆற்றல் பெற்று வருவார். அதன் பயனாக அதிகமான சந்தோஷத்தையும்
சம்மானத்தையும் அடைவார்.
பல சமஸ்தானங்களில் நூற்றுக்கணக்காகச் சம்மானம் பெறும் வித்துவான்களும்
தேசிகரிடம் வந்து சல்லாபம் செய்து அவர் அளிக்கும் சம்மானத்தைப் பெறுவதில்
ஒரு தனியான திருப்தியை அடைவார்கள். தேசிகர் அதிகமாகக் கொடுக்கும் பரிசு
பதினைந்து ரூபாய்க்கு மேல் போகாது. குறைந்த பரிசு அரை ரூபாயாகும்.
ஆனாலும் அப்பரிசை மாத்திரம் அவர்கள் கருதி வருபவர்களல்லர்; வித்தையின்
உயர்வையும், அதை உடையவர்களின் திறமையையும் அறிந்து பாராட்டிப் பேசும்
தேசிகருடைய வரிசை அறியும் குணத்தை அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக
எண்ணியே வருவார்கள்.
மடத்திற்கு வரும் வித்துவான்கள் சில சமயங்களில் வாக்கியார்த்தம்
நடத்துவார்கள். தாம் தேசிகரைப் பாராட்டி இயற்றிக் கொணர்ந்த
சுலோகங்களையும் செய்யுட்களையும் சொல்லி விரிவாக உரை கூறுவார்கள். பல நூற்
கருத்துக்களை எடுத்துச் சொல்வார்கள். இடையிடையே தேசிகர் சில சில
விஷயங்களைக் கேட்பார். அக்கேள்வியிலிருந்தே தேசிகருடைய அறிவுத் திறமையை
உணர்ந்து அவ்வித்துவான்கள் மகிழ்வார்கள். இப்படி வித்தியா விநோதத்திலும்
தியாக விநோதத்திலும் தேசிகருடைய பொழுது போகும்.

***

இங்கே வந்த வித்துவான்களுக்கு எல்லாம் ஒரேயடியாக 'அரை ரூபாய்' சன்மானம் செய்திருந்தால் வந்தவர்களுக்கு எல்லாம் கிடைத்திருக்கும். ஆனால் அவர்கள் தொடர்ந்து வந்திருப்பார்களா? சன்மானத்தோடு அவர்கள் யார், எதற்காக வந்தார்கள், அவர்களின் தகுதி என்ன என்றெல்லாம் பேசித் தெரிந்து கொண்ட பின்னர் சன்மானம் தந்தால் தானே மரியாதை. வந்தவருக்கும் தந்தவருக்கும். சங்க காலத்திற்கும் இது பொருந்தும். இந்த காலத்திற்கும் இது பொருந்தும். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்
கபிலருக்கு என்ன வேண்டும் என்றே கேட்காமல் ஏதோ ஒரு தேர் தந்ததைப் பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை!

கபிலர் வருகையின் நோக்கம் முன்னரே மன்னனுக்கு அறிவிக்கப்படவில்லை! அப்படி அறிவித்திருந்து, பின்னரும் ஒரே வரிசையில் வா என்று அவன் சொல்லி இருந்தால் தவறு தான்!

//"காவலரே. நான் ஒரு தமிழ்ப்புலவன். பெயர் கபிலன். நானும் மன்னனைக் கண்டு பரிசில் பெற வந்திருக்கிறேன்"//
என்று தான் கபிலரும் சொல்கிறார்! காவலரும் பரிசில் பெற வந்திருக்கேன் என்று அவரே சொன்ன பின்னர் தான் ஒரே வரிசையில் வரச் சொல்கின்றனர்!

அப்படி இருக்க...
//மலையனிடம் கற்றவருக்கும் மற்றவருக்கும் ஒரே மரியாதை தான் போலிருக்கிறதே? இது தவறல்லவா?// என்று கபிலர் எதிர்ப்பார்ப்பது தான் தவறு என்று குறிப்பிட்டேன்!

ஒன்று வந்ததன் நோக்கம் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும்!
அதை விடுத்து, பரிசில் பெற வந்தேன் என்று மட்டும் பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டு,

"எனக்கு மட்டும் தனி வழி வேணும்! ஏன்னா என் கிட்ட கல்விச் செல்வம் இருக்கு" என்று சொல்வது போல் தொனிக்கிறது கபிலரின் வார்த்தைகள்! அது சரி அன்று தான் சுட்டிக் காட்டினேன்!

குமரன் (Kumaran) said...

கபிலர் மேல் தவறில்லை இரவி. சரியாக நடந்ததை சரியாகச் சொல்லாமல் விட்ட கதைசொல்லியின் மேல் தான் தவறு. :-)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
கபிலர் மேல் தவறில்லை இரவி//

நிச்சயமா! செந்தமிழ்க் கவிஞர், சாலச் செம்மல், நட்புத் திலகம் கபிலர் அப்படி எல்லாம் அடாவடி பண்ண மாட்டாரே-ன்னு அப்பவே யோசிச்சேன்!

//சரியாக நடந்ததை சரியாகச் சொல்லாமல் விட்ட கதைசொல்லியின் மேல் தான் தவறு. :-)//

ஹா ஹா ஹா
அப்புறம் எங்க அ.உ.சூ.சா தான் ஏதோ அடாவடி பண்ணி இருக்காரு-ன்னு முடிவுக்கு வந்தேன்! :))

Jokes apart...
தவறு-ன்னு எல்லாம் ஒன்னுமில்லை குமரன்! கதைக் கோர்ப்பு அவ்வளவே!

நாளை, இந்தத் தொடரை வாசிப்பவர்கள்...
கபிலர் ஏதோ கல்விச் செல்வம் உள்ளவர்க்கு மட்டும், வலிந்து தனி வழி, தனி மதிப்பு எதிர்பார்த்தார் என்பது போல் தொனித்து விடக் கூடாதே என்ற ஆவலில் சொன்னேன்! பிழையாகச் சொல்லி இருந்தால் மன்னியுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பாரிவள்ளலின் செல்வம் தான் எல்லோருக்கும் தெரியுமே. அதனால் அதைப் பற்றிய கேள்வியும் இல்லை.

மிச்சம் இருப்பது குலம். அதனை மட்டும் இங்கே சொல்லி பெண்ணெடுக்கச் சொல்கிறார் புலவர்//

பாரி மகளிர் கல்வி பற்றி முன்னரே மன்னன் அறிந்திருக்கான்!
செல்வம் பற்றியும் ஊருக்கே தெரியும்!

அப்படி இருக்க குலம் மட்டும் முன்னரே தெரியாதா என்ன? அதை மட்டுமே கபிலர் உரையாடல்களில் சொல்வது தான் சற்றே இடித்தது! மறுபடியும்... காட்சிப்படுத்தல் பிழை தான் இது!

//குலம், கல்வி, செல்வம் இம்மூன்றிலும் ஒத்த கிழவன் கிழத்தியை மணக்கும் 'கற்பு மணத்திற்கு' இவர்கள் மணம் எடுத்துக்காட்டு என்று சொல்கிறார்.
சரி தானா இரவி//

சரி தான் குமரன்!

குமரன் (Kumaran) said...

//அப்படி இருக்க குலம் மட்டும் முன்னரே தெரியாதா என்ன? அதை மட்டுமே கபிலர் உரையாடல்களில் சொல்வது தான் சற்றே இடித்தது! மறுபடியும்... காட்சிப்படுத்தல் பிழை தான் இது!


//

இங்கே காட்சிப்படுத்தல் பிழை இல்லை இரவி. குலத்தை மட்டுமே கபிலர் உரையாடலில் சொல்லுவதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. பாரிக்கு கபிலர் செய்து தந்த உறுதிமொழியை வெகுநாட்களுக்கு முன்னர் படித்ததால் நீங்கள் மறந்திருக்கலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//குமரன் (Kumaran) said...
குலத்தை மட்டுமே கபிலர் உரையாடலில் சொல்லுவதற்குத் தகுந்த காரணம் இருக்கிறது. பாரிக்கு கபிலர் செய்து தந்த உறுதிமொழியை வெகுநாட்களுக்கு முன்னர் படித்ததால் நீங்கள் மறந்திருக்கலாம்//

:)
குமரன் எழுத்தை மறக்கவும் போமோ?
நீங்க ஒரு முறை சொன்னா நூறு முறை சொன்னா மாதிரி அ.உ.ஆ.சூ. அவர்களே!

பாரி வேளிர் குலத்துக்கு மட்டுமே, தன் மகளிரை மணம் முடிக்கணும்-ன்னு தான் உறுதியா இருந்தான்! சில பேச்சுக்களும் பேசினான்!
அதைத் தங்கள் குலத்தை இழிவு படுத்தியாக எண்ணிக் கொண்ட மூவேந்தர்கள் பதிலுக்கு ஆடப் போய் தான், பாரியின் துயரமான மறைவு!

அதெல்லாம் ஞாபகம் இருக்கு குமரன்!
மேலும் கபிலர், அப்பவே பாரியை எச்சரிக்கிறார் அல்லவா? நண்பனாக இருந்தாலும் அவன் கருத்தில் வேறுபடுகிறார் அல்லவா?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஆன்ற தமிழ் மறையை உணர்ந்தவராச்சே கபிலர்! தம் நண்பன் பாரிக்கும் அதை எடுத்துக்காட்ட முயன்றார்! அவனோ முரண்டு பிடித்தான்!

சரி, நட்புக்காக அவனுக்கு தந்த வாக்கின் பேரில், பாரி மகளிருக்கு வேளிர் குலத்தில் மணம் முடிக்க முயற்சிக்கிறார்! அதெல்லாம் புரிகிறது! இல்லை-ன்னு சொல்லலை!

அதான் பாரி வேளிர்-ன்னு மலையமானுக்குத் தெரியும்! மலையமான் வேளிர்-ன்னு அவருக்கும் தெரியுமே!
தெரிஞ்சி தானே அங்கே செல்கிறார்!

அப்புறம் அங்கும் போய் குலத்தை மட்டுமே பேசுவது தான் சற்று வருத்தமாக இருந்தது! பாரி பேசினால் ஓக்கே! ஆனால் கபிலர் அப்படியில்லை அல்லவா! அவனுக்கே "குலம்" பற்றி அறிவுரை சொன்னவர் தானே!

அதான் காட்சிப்படுத்தல் என்று சொன்னேன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கேள்விகளை ஒதுக்காது செறிவுடன் கலந்துரையாடியமைக்கு நன்றி குமரன்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவர்கள் விளையாடும் பட்டாம்பூச்சி விருது உங்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கு குமரன்! வந்து, வாங்கி, விருதைப் பெருமைப்படுத்த வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்! :)

http://madhavipanthal.blogspot.com/2009/03/blog-post_15.html