Thursday, December 22, 2011

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி - பெரியாழ்வார் திருமொழி 1.3

'நாலாயிரம் கற்போம்' பத்தித் தொடரில் நான்காவது பகுதி இது. பெரியாழ்வார் திருமொழியின் முதல் பத்தின் மூன்றாம் திருமொழி இந்த 'மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி' என்று தொடங்கும் பத்துப் பாசுரங்கள்.

இந்தப் பத்துப் பாசுரங்களில் திருவாய்ப்பாடியில் எம்பெருமான் கண்ணன் பிறந்திருந்த போது அவனை யசோதை தாலாட்டியதைக் கூறுகிறார் பெரியாழ்வார்.
 
பாசுரம் 1 (22 Dec 2011)

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி

ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்

பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்

மாணிக்குறளனே தாலேலோ!

வையம் அளந்தானே தாலேலோ!


மாணிக்கங்களை இருபுறமும் கட்டி இடையில் வயிரங்களைக் கட்டி மாற்றில்லாத ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் பிரமன் உனக்காகத் தந்தான்! உன்னுடைய உடைமைகளை இரந்து பெறுவதற்காக குள்ள மாணவனாக வந்த கண்ணனே தாலேலோ! உன்னுடைமைகளான மூவுலகங்களையும் பெற்ற மகிழ்ச்சியில் திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகங்களை எல்லாம் அளந்தவனே தாலேலோ!


---

பாசுரம் 2 (23 Dec 2011)


உடையார் கனமணியோடு ஒண்மாதளம்பூ

இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கினோடு

விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்

உடையாய் அழேல் அழேல் தாலேலோ!

உலகம் அளந்தானே தாலேலோ!

உன் இடுப்பின் அழகிற்கு ஏற்ற அழகிய ஒலி எழுப்பும் பொன்மணிகளோடு அழகிய பொன் மாதுளம்பூ இடையிடையே விரவிக் கோத்த அரைஞானை, காளை வாகனம் ஏறும் மண்டையோடு ஏந்தியதால் காபாலி என்று பெயர் உடைய ஈசன் அனுப்பிவைத்தான். எம்மை உடைய தலைவனே அழாதே அழாதே தாலேலோ! உலகம் அளந்தவனே தாலேலோ!

கனகம் = பொன்; கனகமணி என்பது இங்கே கனமணியென்று வந்தது.

--- பாசுரம் 3 (23 Jan 2012)
என் தம்பிரானார் எழில் திருமார்வர்க்கு
சந்தம் அழகிய தாமரைத் தாளர்க்கு
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துவனாய் நின்றான் தாலேலோ
தாமரைக்கண்ணனே தாலேலோ


என் தலைவனான அழகிய திருமார்பை உடைய, மணமும் விரிவும் நிறமும் அழகிய தாமரையைப் போல் உள்ள திருவடிகளை உடைய உனக்கு மூவுலகங்களுக்கும் தலைவனான இந்திரனும் அழகினை நிலையாக உடைய கிண்கிணியைத் தந்து உன் பெருமையை எண்ணி விலகி நிற்காமலும் உன் எளிமையை எண்ணி அணுகி நிற்காமலும் தகுந்த தொலைவில் உவனாக நின்றான் தாலேலோ! தாமரைக்கண்ணனே தாலேலோ!

அவன் என்று சுட்டும் படி விலகி நிற்கவில்லை. இவன் என்று சுட்டும் படி அணுகி நிற்கவில்லை. உவன் என்று சுட்டும்படி தனக்குத் தகுந்த தொலைவில் இந்திரன் நின்றான்.

19 comments:

கோவி.கண்ணன் said...

//ஆணிப்பொன்னால் செய்த அழகிய சிறிய தொட்டிலை மிகவும் விருப்பமுடன் //

ஆணிக்கு பொருள் என்ன ?

குமரன் (Kumaran) said...

ஆணிப்பொன் = மதிப்பில் உயர்ந்த பொன்; தூய பொன்; மாற்றுப்பொன் (பொன்னின் தரத்தை மதிப்பிடப் பயன்படும் ஒப்பீட்டுப் பொன்).

24 காரட் பொன்னை ஆணிப்பொன்னு சொன்னாங்க போல.

ஷைலஜா said...

ஆணிமுத்து என்பார்களே உயர்ந்த என்ற பொருளாக இருக்கணும் நல்ல பாடல் குமரன். ரொம்பநாள் கழிச்சி இங்க மாணிக்கமும் வைரமும் இழுத்து வந்தன.

குமரன் (Kumaran) said...

பாடுனதைக் கேட்டீங்களா? :-)

ஷைலஜா said...

கேட்டீங்களான்னு கேட்டப்புறம் கேட்டேன் நீலாம்பரில அழகா பாடற இந்த பிரபலப்பின்னணிப்பாடகர் யார் யார் யார் அவர் யாரோ பேரதுதான் என்றும் குமரரோ?:) அருமை!!!

குமரன் (Kumaran) said...

ஆமாம் அக்கா. ஆணிமுத்து, ஆணிப்பொன் இவற்றில் எல்லாம் ஆணிங்கறது உயர்ந்தங்கற பொருள்ல தான் வருது போல.

பாடுனது நீலாம்பரி இராகமா? எனக்கு அது தெரியாது. ஏதோ ஒவ்வொரு தடவை ஒவ்வொரு மாதிரி பாடுவேன். இதே இராகத்துல அடுத்த பாசுரம் வந்தா வியப்பு தான். :-)

பாராட்டுகளுக்கு நன்றி அக்கா.

மதுரையம்பதி said...

குமரன், வைரம் - வயிரம் இதில் எது சரி?. என்ன வித்தியாசம்...?

குமரன் (Kumaran) said...

இரண்டுமே ஒன்று தான் மௌலி. வேறுபாடு இல்லை. ஒன்றிற்கு ஒன்று போலி. உரைநடையில் பெரும்பாலும் வைரம் என்று எழுதுவார்கள். செய்யுளில் இலக்கண விதிகளுக்கு ஏற்ப இடத்திற்குத் தகுந்தபடி தளை தட்டாமல் இருக்க சில நேரம் வைரம் என்றும் சில நேரம் வயிரம் என்றும் எழுதுவார்கள்.

சித்திரவீதிக்காரன் said...

பாசுரமும், அதன் எளிய விளக்கமும், அதற்கேற்ற பொருத்தமான படங்களும் அருமை. பகிர்விற்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சித்திரவீதிக்காரரே.

நாடி நாடி நரசிங்கா! said...

மாணிக்கம் கட்டி வயிரம் இடை கட்டி
ஆணிப்பொன்னால் செய்த வண்ணச்சிறுதொட்டில்
பேணியுனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையம் அளந்தானே தாலேலோ!

---

பாசுரம் 2 (23 Dec 2011)


உடையார் கனமணியோடு ஒண்மாதளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கினோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்
உடையாய் அழேல் அழேல் தாலேலோ!
உலகம் அளந்தானே தாலேலோ!

அருமையான் பாசுரங்களை பதிவிட்டீர்கள்

நாடி நாடி நரசிங்கா! said...

Thks:)

Rajesh

குமரன் (Kumaran) said...

நன்றி ராஜேஷ்.

Ranjani Narayanan said...

இத்தனை நாளாக உங்கள் பதிவுகளைப் படிக்கத் தவறிவிட்டேனே என்று வருத்தமாகி விட்டது, குமரன்.

எளிய தமிழில் சிறப்பாக எழுதுகிறீர்கள்.

பாராட்டுக்கள்.

இனி தொடர்ந்து வருவேன்.

http://ranjaninarayanan.wordpress.com
http://pullikkolam.wordpress.com
http://thiruvarangaththilirunthu.blogspot.in/

குமரன் (Kumaran) said...

பாராட்டுகளுக்கு நன்றி அம்மா.

உங்கள் பதிவுகளைப் படிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

Ravikumar Monni said...

குமரன், நீங்கள் இணைக்கும் படங்கள் மிக அருமையாகவும் பொருத்தமாகவும் உள்ளன. எங்கு, எப்படி தேடுகிறீர்கள்?

குமரன் (Kumaran) said...

இரவி - கூகிளாண்டவரே துணை. :)

# * # சங்கப்பலகை அறிவன் # * # said...

குமரன்,
அருமையான பாடல்கள்.
அம்மா என் மகனுக்குப் பாடும் தாலாட்டுப் பாடல்களில் மிக(அவனுக்கு) பிடித்தமான பாடல்கள் இவையே..
இரண்டு விடயங்கள்
1.எங்கே பாடலின் ஒலி வடிவம்..சைலஜாவின் பதிலைப் பார்க்கும் போது ஒலிவடிவம் இந்தப் பதிவில் இருப்பதாகத் தோன்றுகிறது.ஆனால் எனக்குத் தெரியவில்லை.ஏதேனுப் நுட்பக் கோளாறா?
2.பாடல்களுக்கான பதிகம் அல்லது அத்தியாயத் தலைப்பைப் பதிவுகளில் சுட்டலாமே?

குமரன் (Kumaran) said...

அறிவன் -

நுட்பக் கோளாறு என்று தான் எண்ணுகிறேன். ஒலிவடிவத்திற்கு வேறு இடத்தைத் தேட வேண்டும்.

இப்பாசுரங்களைத் தொடர்ந்து எழுத வேண்டும். மூவாண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் இருக்கிறது.