Wednesday, October 27, 2010

இன்பத்துப் பால்: நாணுத்துறவுரைத்தல் - 2





'நாணமும் இல்லை. ஆண்மையும் இல்லை. இரண்டுமே காதல் என்னும் கடும்புனலால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. என் காதல் நிறைவேற மடல் ஏறியே தீருவேன்' என்று சொல்லிக் கொண்டே வரும் காதலன் வாய்மொழியாக இன்னும் சில குறள்கள் இந்த அதிகாரத்தில் இருக்கின்றன.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண்.


என் காதலியை நினைத்து நினைத்து எல்லோரும் உறங்கும் இரவிலும் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் மடல் ஊர்தலைப் பற்றி நடு இரவிலும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன் - மடல் ஏறுவதைப் பற்றி நடு இரவிலும் நினைப்பேன்

மன்ற - உறுதியாக

படல் ஒல்லா பேதைக்கு என் கண் - பேதையான என் காதலியை எண்ணி என் கண்கள் மூடாது.

'மடல் ஏறுவேன் மடல் ஏறுவேன் என்கிறீர்களே. இதோ பொழுது கழிந்துவிட்டது. இனி மேல் எப்படி மடல் ஏறப் போகிறீர்?' என்று வினவிய தோழியிடம் காதலன் கூறியது இது.

'பொழுது சாய்ந்துவிட்டது; இரவு வந்துவிட்டது என்று ஊரார் வேண்டுமானால் உறங்கலாம். ஆனால் என் காதலியின் நினைவால் என் கண் உறங்குவதே இல்லை. அதனால் நள்ளிரவானாலும் மடல் ஏறுதல் பற்றி நான் நினைக்கிறேன். அதனை செயல்படுத்தவும் செய்வேன்' என்றான்.

இன்றைக்குப் போய் நாளை வாரும்; தலைவியைக் காணலாம் என்று தோழி சொல்லாமல் இப்போதே இருவரையும் கூட்டி வைக்க வேண்டும் என்பது காதலன் நோக்கம். அதனால் நடு இரவானாலும் நீ எங்களைச் சேர்த்து வைக்கவில்லை என்றால் மடலேறுவேன் என்கிறான்.

***

கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணில் பெருந்தக்கது இல்.


கடல் போலக் கரையற்ற காதல் நோயால் வருந்தினாலும் அதை நீக்குவதற்காக மடல் ஏறத் துணியாத பெண்ணினத்தைப் போல் பெருமையுடையது எதுவுமே இல்லை.

கடல் அன்ன காமம் உழந்தும் - கடலைப் போல் கரையில்லாத காதல் நோய் உற்று வருந்தினாலும்

மடல் ஏறாப் - மடல் ஏறுவதைப் பற்றி எண்ணாத

பெண்ணில் பெருந்தக்கது இல் - பெண்ணைப் போல் பெருமையுடைய ஒன்று இல்லை.

'பேதை என்று எங்கள் தலைவியைச் சொன்னீரே. பேதையர் அன்றோ காம நோயால் வருந்தி மடல் ஏறத் துணிவார்கள். பேரறிவினராகிய நீர் அப்படி மடல் ஏறத் துணியலாமா? அது உம் அறிவுண்மைக்குப் பொருந்துமா?' என்று தோழி கேட்க, 'பெண்களைப் போல் பெருமையுடைய இனம் இல்லை. கடல் போல் காதல் நோய் இருந்தாலும் அதனை நீக்க பெண்கள் மடலேறுவதில்லை. நான் பெருமை மிக்க பெண்ணினத்தைச் சேர்ந்தவன் இல்லை. அதனாலே தான் என்னால் இத்துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள இயலவில்லை' என்றான் காதலன்.

***



தன் காதல் எப்படி எல்லாம் தன்னையும் தன் நாணத்தையும் மீறி வெளிப்படுகின்றது என்று தலைவி சொல்வதாக அமைகின்றன அடுத்து வரும் குறட்பாக்கள்.

நிறை அரியர் மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும்.


எனது காதல் பெருக்கு, நற்குணங்கள் உள்ளவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்றும் நினைக்காது; எளியவள் இவள்; அதனால் இவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று நினைக்காது. என்னையும் என் நாணத்தையும் மீறி என் காதல் மறைவாக இருந்த நிலை நீங்கி ஊரறிய மன்றத்தில் ஏறும்.

நிறை அரியர் மன் - குணங்களால் சிறந்தவர் அதனால் அரியவர் (என்றோ)

அளியர் - எளியவர் (என்றோ)

என்னாது - என்று நினைக்காது

காமம் - என் காதல்

மறை இறந்து - மறைவிலிருந்து நீங்கி

மன்று படும் - எல்லோரும் அறிய வெளிப்படும்

நற்குணங்கள், நல்ல பண்புகள் உடையவரைக் காம நோய் 'இவர்கள் அரியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இல்லையேல் 'எளியவர்' என்று எண்ணி விட்டுவிடலாம். இவ்விரண்டும் இங்கே நடக்கவில்லை. இவளது நிறை எல்லாம் நீங்கும் படி ஊரார் அறிய இவள் காதல் தானே வெளிப்படுகிறது.

***

அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.


இப்படியே மறைந்து இருந்தால் யாருக்கும் தெரியாது என்று எண்ணியோ என்னவோ என் காம நோய் இவ்வூரின் நடுவே வெளிப்பட்டு அம்பலும் அலரும் ஆயிற்று.

அறிகிலார் எல்லாரும் என்றே - எல்லோரும் அறியவில்லை என்று எண்ணிக் கொண்டு

என் காமம் - என் காதல்

மறுகின் மறுகும் மருண்டு - என்னையும் மீறி மிகவும் வேகவேகமாக வெளிப்பட்டுவிட்டது

காதல் நோய் எத்தனை தான் மீறினாலும் என் நாணத்தால் அதனைத் தடுத்து நிறுத்தியிருந்தேன். இப்படியே மறைவாகவே இருந்தால் யாரும் என் காதலை அறியமாட்டார்கள் என்று நினைத்ததோ என்னவோ என் காதல். ஊரார் அறிய மன்றுபட்டது.

***


யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாதவாறு.


என் கண்ணெதிரேயே என் காதலைக் குறித்து நான் பட்ட பாடு தான் படாத அறிவில்லாதவர் நகைக்கின்றார்கள்.

யாம் கண்ணின் காண நகுப - நான் கண்ணால் காணும் படி நகைக்கிறார்கள்

அறிவில்லார் - அறிவில்லாதவர்கள்

யாம் பட்ட தாம் படாதவாறு - நான் படுவதை அவர்கள் படாததால்

'அலர் தூற்றுவது மட்டும் இல்லை. நான் காணவே என் கண் எதிரேயே சிலர் நகுகின்றார்கள். நான் பட்ட பாடு அவர்கள் பட்டிருந்தால் காதல் நோயின் கடுமை பற்றிய அறிவு அவர்களுக்கு இருக்கும். அந்த அறிவு இல்லாததால் தான் இப்படி நகைக்கிறார்கள்' என்று தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறாள் தலைவி.

'என் உணர்வுகளை நீ அறிய மாட்டாய். ஏனென்றால் நானல்ல நீ' என்று சொல்வது போல் ஏதோ ஒரு அண்மைக்கால பாட்டும் வருமே? பாடல் வரிகள் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா?