Monday, October 14, 2024

பாட்டி மேல் ஒரு ஸ்லோகம்

அக்டோபர் 11ம் தேதி மறைந்த என் தாய்வழிப் பாட்டி திருமதி. சந்திரா அவர்களின் பிறந்தநாள் . இன்று அவர் மேல் ஒரு வடமொழிப் போற்றுதலை எழுதும் பேறு கிடைத்தது.

மந்த ஸ்மித முகீம்
மதுர ஸுக பாஷிநீம்
குப்பார்ய க்ருஹிநீம்
கீதாம்ருத வர்ஷிநீம்
பஞ்ச கன்யா தாத்ரீம்
ஏக புத்ர ஜனநீம்
மம மாதாமஹீம்
சந்த்ராம்பாம் ஆச்ரயே!
பொருள்:

எப்போதும் புன்னகையுடன் கூடிய முகத்தை உடையவர். இனிய நற்சொற்களைப் பேசுபவர். திரு. குப்புசாமி அவர்களின் மனைவியார்.
பகவத் கீதை உபன்யாசம் செய்து மக்களிடம் பரப்பியவர். கீதை என்னும் அமிர்தத்தை மழை போல் பொழிபவர்.
ஐந்து பெண்களின் தாயார். ஒரு மகனைப் பெற்றவர் .
எனது அம்மாவின் அம்மா திருமதி. சந்திரா அம்மையாரை பணிகிறேன்.

Friday, February 02, 2024

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே! பாகம் 2



வி: அந்த வீடு என்பது என்ன? சுவர்க்கமா?

கு: சுவர்க்கம், செய்த புண்ணியம் தீரும் வரை இருக்கும் நிலை ஆயிற்றே. அது வீடாகுமா?

வி: அப்படியென்றால் சுவர்க்கம் வேண்டி செய்யும் புண்ணிய காரியங்கள் பயன் அற்றவையோ?

கு: அப்படித் தான் தோன்றுகிறது. நிலையாக என்றும் மாறாத விடுதலை நிலையே வீடு ஆகும். வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே என்றாரே வகுளாபரணர் மாறன் சடகோபனான நம்மாழ்வார்!

வி: சரி தான். வைகுந்தம் புகுவதையோ பயன் உள்ளது என்கிறார் ஆழ்வார்?!

கு: அது தானே வீடு. அதனால் அது தவிர வேறு எது செய்வதும் பயன் அல்ல என்கிறார் போலும்.

வி: சரி. இன்னும் கொஞ்சம் நுணுகிப் பார்ப்போம்.

வீடு தருவது யார்?

கு: வைகுந்தமாம் பரமபதத்தில் இருக்கும் பரவாஸுதேவன் தான்.

வி: அந்த பரமனை நாம் மனிதர்கள் பற்ற இயலுமோ?

கு: அது எப்படி?! அனந்தன், கருடன், விஷ்வக்ஸேனன் போன்ற நித்யஸூரிகளுக்கும், வீடு பெற்று வைகுந்தம் புகுந்த முக்தர்களுக்கும் மட்டுமே அவன் பற்றத்தக்கவன்.

வி: அப்படி என்றால் பரமபதநாதனைப் பற்றுவதும் பயன் அல்ல தானே?!

கு: ஆமாம். உண்மை தான்.

வி: ஒரு வேளை திருப்பாற்கடலில் இருக்கும் வ்யூஹ வாஸுதேவனைப் பற்றுவது பயன் உள்ளதோ?

கு: அங்கும் பிரமனும், ருத்ரனும் முதலாகக் கொண்ட தேவர்கள் மட்டுமே பற்ற இயலும். மானிடர்களான நம்மால் பற்ற இயலாது.

வி: ஆக வியூஹ நிலையும் பயன் அல்ல என்ற வகையில் சேர்ந்து விடுகிறது.

ஒரு வேளை இராம கிருஷ்ணாதி அவதாரங்களைப் பற்றுவது பயன் உள்ளதோ?

கு: அந்த விபவ அவதாரங்கள் நிகழும் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு வேண்டுமானால் அது பயன் உள்ளதாக இருந்திருக்கலாம். நமக்கு அதுவும் பயனில்லை.

வி: ம்ம்ம். ஒருவேளை நம் உள்ளேயே இருக்கும் அந்தர்யாமியை பற்றலாமோ?

கு: அதுவும் நம் போன்ற சாதாரணர்க்கு இயலுமோ? உள்ளிருக்கும் அவனை யோகியரும் ஞானியருமே அறிவர்; அறிந்து பற்ற இயலும். நமக்கு அந்தர்யாமியை பற்றுதலும் பயன் இல்லை.

வி: பின் இருப்பது ஒன்றே ஒன்று தான்! விக்ரஹ ரூபமாய் இருக்கும் அர்ச்சாவதாரமே கதி!

கு: ஆழ்வார் சொல்வதும் அது தான் போலும்.

பயன் அல்ல செய்து பயன் இல்லை நெஞ்சே என்ற போது, இம்மையில் சுகமும் மறுமையில் சுவர்க்கமும் வேண்டி செய்யும் செயல் எதுவும் பயன் இல்லை!

அதே போல், வீடு பெற வேண்டி, இறைவனின் ஐந்து நிலைகளில் பரம் (வைகுந்தம்), வ்யூஹம் (திருப்பாற்கடல்), விபவம் (ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்), அந்தர்யாமி - இந்த நான்கு நிலைகளைப் பற்றுவது பயன் அற்றவை என்கிறார் போலும்.

வி: இந்த பாசுரத்தில் அடுத்த வரிகளைப் பார்த்தால் அப்படி தான் தோன்றுகிறது.

புயல் மழை வண்ணர் புரிந்து உறை கோயில்
மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை
அயல் மலை அடைவது அது கருமமே!


கு: ஆமாம். இறைவனின் ஐந்து நிலைகளில் ஐந்தாம் நிலையான அர்ச்சை (விக்ரஹ ரூபி) இருக்கும் இடம் கோவில்கள். அதிலும் இங்கே திருமாலிருஞ்சோலை ஆன அழகர் கோவிலில் இருக்கும் புயல் மழை வண்ணராம் சுந்தரத்தோளுடையானை அடைவதே பயன் உள்ளது என்கிறார்.

வி: எங்கே அப்படி சொல்கிறார் என்று விளக்குவாயா?

(தொடரும்)

பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே! பாகம் 1


விஜயன் (பாடிக் கொண்டே வருகிறார்): பயன் அல்ல செய்து பயனில்லை நெஞ்சே!
குமரன்: விஜயா! இது என்ன பாட்டு?
வி: குமரா! நம்மாழ்வார் பாசுரம் இது. நம் அழகர் கோவிலைப் பற்றி பாடிய பாசுரம்.
கு: சரி தான். பயன் இல்லாதது என்று எதைச் சொல்கிறார்?
வி: நீயே சொல்லேன். பயன் உள்ளவை எவை; இல்லாதவை எவை என்று!
கு: ம்ம்ம். அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு வித புருஷார்த்தங்களை அடைவதற்கு வேண்டியவை செய்வது பயன் உள்ளவை. சரி தானா?
வி: அறம், பொருள், இன்பம் இம்மூன்றுமே இகத்தைச் சார்ந்தது. அவை எப்போது பயன் உள்ளவை ஆகும்?
கு: வீடு என்னும் பயனை நோக்கியதாக அவை இருக்கும் போது.
வி: வீடு என்றால் என்ன?
கு: பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவது வீடு.
வி: சரி தான். வீடு என்ற பயனை நோக்கியதாக மற்ற மூன்றும் அமையுமா?
கு: அமையும் என்றே எம்பெருமானார் இராமானுசர் சொல்கிறார். கண்ணனுக்கே ஆமது காமம், அறம், பொருள் என்கிறார்.
கண்ணன் மேல் காமம், காதல் அமைதல் வீடு பெற வழி.
கண்ணனுக்கு உகந்ததாக செய்யப்படுவதே அறம்; அதுவே வீடு பெற வழி.
கண்ணனுக்கு உகந்தவற்றை செய்ய ஈட்டப்படுவது பொருள் என்னும் செல்வம்; அதுவே வீடு பெற வழி.
வி: சரி தான். அந்த வீடு என்பதை யார் தருவார்?
(தொடரும்)

Thursday, December 21, 2023

பகல் பத்து உற்சவத்துல என்ன செய்வாங்க?

 'குமரா, பகல் பத்து இராப்பத்துன்னு 20 நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள், மொத்தம் 21 நாள் திருவிழா சரியா?' 


'மாதவா. ஒரு சிறு திருத்தம் மட்டும் சொல்றேன். பகல்பத்து நீ சொன்னது போல வைகுண்ட ஏகாதசிக்கு முன்னால் வரும் பத்து நாட்கள். இராப்பத்து பத்து இரவும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கி தொடங்கிறும்'


'ஓ அப்படியா. அப்படின்னா 21 நாள் கணக்கு எப்படி?'


'இராப்பத்து பத்து நாளும் முடிஞ்ச பிறகு 21ம் நாள் பகல் முழுக்க இயற்பா, சாற்றுமுறைன்னு கடைசி நாள் திருவிழா நடக்கும்'


'ஓகே சரி தான். ஏன் இவ்வளவு விரிவா 21 நாள் உற்சவம் நடத்துறாங்க?'


'வேதத்துக்கு சமமான நாலாயிர திவ்ய பிரபந்த பாசுரங்களையும் கேட்டு ரசிக்கணும்னு பெருமாளுக்கு ஆசை. அதனால இந்த 21 நாள் திருவிழா. திருவத்யயன உற்சவம்ன்னு சொல்லுவாங்க. அத்யயனம்னா என்னன்னு தெரியும்ல?'


'வேதம் படிக்கிறது தானே?'


'ஆமா. அதை வேத அத்யயனம்ன்னு சொல்லுவாங்க. வேதத்துக்கு சமமான ஆழ்வார் பாசுரங்களையும் திராவிட வேதம்னு சொல்லுவாங்க. இந்த திராவிட வேதத்தை உட்கார்ந்து ஆனந்தமா ரசிக்கணும்னு விதி'


'ஆமாம்பா. நானும் பாத்துருக்கிறேன். வேதம் சொல்றப்ப நின்னுக்கிட்டு சொல்றவங்க, பாசுரம் சொல்றப்ப உக்காந்துருவாங்க'


'ஆமா. பெருமாளும் உக்காந்து தான் பாசுரம் எல்லாம் கேப்பாரு. ஏன்னா பாசுரங்களோட இனிமை அப்படி'


'ஆமாம் குமரா. இனிமையான தமிழ் தான் பாசுரங்கள் எல்லாம். 


சரி. 21 நாள்ல நாலாயிரம் பாசுரங்கள் பாடுவாங்கன்னு சொன்னியே. அதைப் பத்தி சொல்லு'


'சொல்றேன். பகல்பத்து ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய ஒரு நாளைக்கு 200 பாசுரம்ங்கற கணக்குல முதல் இரண்டாயிரம் பாசுரங்களைப் பாடுவாங்க. 


பெரியாழ்வார் பாடுன திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி

கோதை நாச்சியார் பாடுன திருப்பாவை, நாச்சியார் திருமொழி 

குலசேகர ஆழ்வார் பாடுன பெருமாள் திருமொழி 

திருமழிசை ஆழ்வார் பாடுன திருச்சந்த விருத்தம் 

தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடுன திருப்பள்ளியெழுச்சி, திருமாலை 

திருப்பாணாழ்வார் பாடுன அமலனாதிபிரான் 

மதுரகவி ஆழ்வார் பாடுன கண்ணிநுண்சிறுத்தாம்பு 

திருமங்கையாழ்வார் பாடுன பெரிய திருமொழி, திருகுறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் 


இந்த எல்லா பிரபந்த பாசுரங்களையும் பாடுவாங்க. இதெல்லாம் சேர்த்து முதல் ஆயிரம், இரண்டாம் ஆயிரம்ன்னு சொல்லுவாங்க.'


'திருப்பல்லாண்டு, திருப்பாவை கேட்டிருக்கேன் குமரா. இவ்வளவு பாசுரங்களைப் பத்தி இன்னைக்கு தான் கேள்விப்படறேன்'


'ஒன்னு கவனிச்சியா? நிறைய பிரபந்தங்களுக்கு திருமொழின்னு பேரு இருக்கு. அதனால இந்த பகல் பத்து உற்சவத்துக்கு திருமொழித் திருநாள்ன்னும் ஒரு பேரு இருக்கு'


'பொருத்தமான பேரு தான். அப்படின்னா இராப்பத்து உற்சவத்துக்கும் இன்னொரு பேரு இருக்கணுமே'


'இருக்கே!'


(தொடரும்)

Monday, December 18, 2023

21 நாள் வைகுண்ட வாசல் தொறப்பாங்களா?

 'குமரா. சொர்க்க வாசலுக்கும் பரமபத வாசலுக்கும் வித்தியாசம் சொன்னே. ஆனா இன்னைக்கு வைகுண்ட ஏகாதசி இல்லையே. அதைப் பத்தி சொல்லு'


'மாதவா. வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு வைகுண்ட வாசல் தொறப்பாங்கங்கறது சரி தான். ஆனா அன்னைக்கு மட்டும் இல்லை, இருபத்திவொரு நாள் தொறப்பாங்கன்னு தெரியமா?'


'அப்படியா?! தெரியாம போச்சே. வைகுண்ட ஏகாதசிக்கு கோவில்ல கூட்டம் ரொம்ப அதிகமா இருக்கும். 21 நாள் தொறப்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா கூட்டம் இல்லாத நேரம் கோவிலுக்கு போயிருப்பேனே'


'இப்ப என்ன. இனிமே கூட்டம் இல்லாத நேரம் போயி வைகுண்ட வாசல் தொறக்குறத தரிசனம் பண்ணு'


'சரி தான். இன்னும் விவரம் சொல்லு. அப்பத்தானே அத செய்ய முடியும்'


'சொல்றேன் சொல்றேன். வைகுண்ட ஏகாதசிக்கு பத்து நாள் முன்னாடி இருந்து, அதாவது அமாவாசைக்கு மறு நாள்ல இருந்து, ஒவ்வொரு நாளும் காலையில வைகுண்ட வாசல் தொறப்பாங்க. வைகுண்ட வாசல் வழியா பெருமாள் வெளியே வந்து, கோவிலுக்கு பக்கத்துல இருக்கிற பந்தல்லயோ மண்டபத்திலேயோ உக்காந்து, எதிர்ல ஆழ்வார்கள் ஆசாரியர்கள் எல்லாரும் உக்காந்திருக்க, பாசுரம் கேப்பாரு. இந்த பத்து நாளை என்ன சொல்லுவாங்கன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்'


'நீ சொல்றது பகல் பத்து உற்சவமா?'


'ஆமா. பகல் பத்து உற்சவம் தான். 


ஆழ்வார்கள் பாடுன நாலாயிர திவ்ய பிரபந்தந்துல இருந்து பாசுரம் எல்லாம் பாடுவாங்க'


'நாலாயிரம் பாட்டும் ஒவ்வொரு நாளும் பாடுவாங்களா என்ன?'


'இல்லை. மொத்தமா 21 நாளுக்கும் சேர்த்து நாலாயிரம் பாடுவாங்க'


'ஓ சரி சரி. நீ பகல் பத்து உற்சவம் பத்தி சொன்னே. அதே மாதிரி இராப்பத்து உற்சவமும் இருக்கு. சரிதானே'


'ஆமா. உற்சவத்தோட பேரு சொல்ற மாதிரி பத்து நாள் இரவு பெருமாள் பரமபத வாசல் வழியா வந்து, ஆழ்வார்கள் ஆசார்யர்களோட உட்கார்ந்து பாசுரம் கேப்பார்'. 


'சரி தான். வைகுண்ட ஏகாதசிக்கு முன்னாடி பத்து நாள், பின்னாடி பத்து நாள், வைகுண்ட ஏகாதசி ஒரு நாள். ஆக மொத்தம் 21 நாள். சரியா?'


'அது தான் இல்லை'


(தொடரும்) 

Thursday, December 14, 2023

சொர்க்க வாசலா? வைகுண்ட வாசலா?

 'வா குமரா! என்ன இந்த பக்கம்?'

'கிருஷ்ணன் கோவிலுக்கு வந்தேன். அப்படியே உன்னைப் பாத்துட்டு போலாம்னு'
'என்ன விஷேசம்?'
'ஒண்ணுமில்ல. வைகுண்ட வாசல் திருவிழா நடக்குதுல்ல. அதான்'
'வைகுண்ட ஏகாதசிக்குத் தானே சொர்க்கவாசல் தொறப்பாங்க?'
'மாதவா. அது சொர்க்க வாசல் இல்ல. வைகுண்ட வாசல்'
'ரெண்டும் ஒண்ணு தானேப்பா?!'
'இல்லை. புண்ணியம் செஞ்சவங்க போறது சொர்க்கம். பாவம் செஞ்சவங்க போறது நரகம்'
'அதான் தெரியுமே?! வைகுண்டம்ங்கறதும் புண்ணியம் செஞ்சவங்க போறது தானே? அப்ப அத சொர்க்கம்ன்னு சொன்னா தப்பா?'
'ஒரு வகையில சரி தான். ஆனா, இன்னொரு விதத்துல சொன்னா வித்தியாசம் புரியும்'
'அப்ப சொல்லு!'
'இந்திரனும் தேவர்களும் இருக்கிறது சொர்க்கம். நாம செஞ்ச புண்ணியம் தீர்ந்தவுடனே நாம சொர்க்கத்துல இருந்து திரும்பவும் பூமியில அடுத்த பிறவி எடுப்போம்'
'சரி'
'வைகுண்டம் போறதுன்னா திரும்பி வந்து இன்னொரு பிறவி எடுக்கிறது இல்லை.
அங்கே தான் பெருமாளும், ஆதி சேஷன், கருடன், சேனைமுதலியார், ஆழ்வார் ஆசாரியர்கள் எல்லாரும் இருக்காங்க.
மோக்ஷம், முக்தின்னு சொல்றது இந்த வைகுண்டம் போறதத்தான்.
அங்கே போனா திரும்பி வர்ற கதை இல்லை.
ந புனர் ஆவர்த்ததே ந புனராவர்த்ததே ன்னு வேதம் பாடும். அப்படின்னா வைகுண்டம் போனவங்க திரும்பி வருவதில்லை; திரும்பி வருவதில்லைன்னு அர்த்தம்'
'அப்படியா?
அப்ப யாராவது காலம் ஆனா இப்படியாப்பட்ட இந்த பிரமுகர் வைகுண்ட பதவி அடைந்தார்னு போஸ்டர் அடிக்கிறாங்கள்ல. அந்த வைகுண்ட பதவின்னா என்ன?'
'அவர் காலம் ஆனதும் சொர்க்கம், நரகம் ரெண்டுக்கும் போகாம வைகுண்டத்துக்கு போகணும்ங்கறது இவங்க விருப்பம். அதத்தான் அப்படி சொல்றாங்க.
ஓம் சாந்தின்னு சொல்றதும் அது தான். சும்மா போறது வர்றதுன்னு இல்லாம இந்த ஆத்மா வைகுண்டம் போயி நிம்மதியா இருக்கட்டும்னு வேண்டிக்கிறது'
'சரிப்பா. இப்ப புரியுது.
ஆனா வைகுண்ட ஏகாதசி இன்னைக்கு இல்லையே? அன்னைக்குத் தானே வைகுண்ட வாசல் தொறப்பாங்க?!'
(தொடரும்)
- அன்பன் குமரன் மல்லி

கீதையும் அருச்சுனனும்

 'சுவாமி. அடியேன். தேவரீரிடம் ஒரு விண்ணப்பம்!'

'சொல்லும் பிள்ளாய்!'
'கீதையை எம்பெருமானிடம் நேரே கேட்ட அருச்சுனன் எம்பெருமானைப் பெற்றானா இல்லையா?'
'அருச்சுனன் பெருமாள் திருவடியை அடைந்தானா இல்லையா என்பதால் உமக்கு என்ன வந்தது?
கீதையைச் சொன்னவன் எல்லாருக்கும் பொதுவானவன். கீதையும் பகவானின் திருவாக்கு. இது இரண்டும் நிச்சயம்.
அவரவர் தமதமது அறிவு அறி வகை, அவரவர் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, அவரவர்களுக்கு இருக்கும் ருசிக்கு ஏற்ப, கீதையிலிருந்து வெவ்வேறு பயன்களைப் பெறுகிறார்கள்.
கீதையிலிருந்து நன்மை பெற்றவர்களைப் பார்த்து நாமும் அதன் படி கீதையிலிருந்து நன்மை அடைய பார்ப்பதன்றோ நமக்கு ஏற்றது?
குளிர்ந்த தண்ணீர் எங்காவது இருந்தால், அதோ அந்த குளத்துக்கு உரியவன் அதில் நீர் குடித்தானா என்று கேட்காமல், நீர் குடித்துத் தாகம் தீர்ந்தவர்களைப் பார்த்து, அது போலே நாமும் தாகம் தீர்ப்பதன்றோ நல்லது?'
- ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யர்களான நம்பிள்ளைக்கும் நஞ்சீயருக்கும் நடந்த உரையாடல் என்று திருவாய்மொழி விளக்கவுரையில் வரும் ஒரு நிகழ்ச்சி இது. இதனை தற்கால மொழி நடையில் அடியேன் குமரன் மல்லி எழுதினேன்

கீதையும் திருவாய்மொழியும்

 'ஸ்வாமி. அடியேன். ஒரு விண்ணப்பம்!'

'சொல்லவேண்டும்!'
'கீதையை அறிந்த ஒருவருக்கும் திருவாய்மொழி அறிந்த ஒருவருக்கும் என்ன வேறுபாடு?'
'இதனை அடியேன் சொல்லவும் வேண்டுமோ?
கீதையை அறிந்த ஒருவர் ஒரு அறிஞர் கூட்டத்தில் வந்து கீதையில் இருந்து ஒரு வார்த்தை சொன்னால், அவருக்கு என்ன பரிசாகக் கொடுக்கிறார்கள் என்று பார்த்துள்ளீரா?'
'உண்டு ஸ்வாமி. ஓர் உழக்கு அரிசி சன்மானமாகக் கொடுப்பார்கள்'
'அவர்கள் நிரந்தரமாக இருக்க ஓர் இடம் தருவார்களா?'
'இல்லை ஸ்வாமி'
'திருவாய்மொழி கற்றவர் அதில் ஒரு பாசுரம் விண்ணப்பம் செய்தால், ஸர்வேச்வரனுக்கு உகந்தவர் ஆன தேவர் முனிவர் எல்லாரும் புறப்பட்டு வந்து, தங்கள் தங்கள் இருப்பிடங்களை ஒழித்துக் கொடுத்து அவரை ஆதரித்து நிற்பார்கள்'
'எங்கு அதனைக் காணலாம் ஸ்வாமி'
'சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின என்று தொடங்கும் திருவாய்மொழி பாசுரங்களைப் பார்த்தாலே தெரியுமே!'
'அடியேன் தாசன்'
- திருவாய்மொழியின் விளக்கவுரையான ஈடு வியாக்யானத்தில் சொல்லப்பட்ட, 'நம்பி திருவழுதி நாடு தாசர்' என்ற ஆசார்யாருக்கும் ஒரு அன்பருக்கும் நடந்த உரையாடல் இது. இதனை தற்கால மொழி நடையில் அடியேன் குமரன் மல்லி எழுதினேன்.

Monday, April 03, 2023

எழுதாக் கற்பு

பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே!
செம்பூ முருக்கின் நல் நார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்
படிவ உண்டிப் பார்ப்பன மகனே!
எழுதாக் கற்பின் நின் சொல் உள்ளும்
பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
மருந்தும் உண்டோ?! மயலோ இதுவே!

- குறுந்தொகை 156, பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்

பார்ப்பன மகனே! இளைய பார்ப்பனனே!
செந்நிறமான பூக்களை உடைய முருக்க மரத்தின் வலிமையான நாரை (பட்டையை) களைந்து மென்மையாக்கிய தண்டு (கைக்கோல்) பிடித்த
தாழ்வாகக் கமண்டலத்தை பிடித்த
படிவர்கள் (முனிவர்கள்) உணவை உண்ணும்
பார்ப்பன மகனே!

எழுதாக் கற்பு எனப்படும் வேதத்தைக் (எழுதப்படாமல் ஆனால் கற்கப்படும்; கற்பு = கல்வி) கற்ற
உன் சொல்லில்
பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் திறமை உடைய மருந்து உள்ளதா? (இல்லையல்லவா?!)
(எனக்கு அறிவுரை கூறினால் அவள் மேல் நான் கொண்ட காதல் தீரும் என்று நீ நினைத்தது) ஒரு மயக்கமே! (மயலோ!)

பொருள் உரை: அன்பன் குமரன் மல்லி (ம. ந. குமரன்) 

Thursday, September 15, 2022

அலர்மேல் மங்கை உறை மார்பா!

 அகலகில்லேன் இறையும் என்று 

அலர்மேல் மங்கை உறை மார்பா! 

நிகர் இல் புகழாய்! உலகம் மூன்று 

உடையாய்! என்னை ஆள்வானே! 

நிகர் இல் அமரர் முனிக்கணங்கள் 

விரும்பும் திருவேங்கடத்தானே!

புகல் ஒன்று இல்லா அடியேன் உன் 

அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே!


- நம்மாழ்வார், திருவாய்மொழி 


'ஒரு நொடியும் பிரிய மாட்டேன்' என்று அலர்மேல்மங்கை தாயார் என்றும் உறையும் திருமார்பா! 


நிகரில்லாத புகழை உடையவனே! 


மூன்று உலகங்களையும் உடையவனே! 


என்னை ஆளும் இறைவனே! 


நிகர் இல்லாத தேவர்கள் கூட்டங்களும் முனிவர்கள் கூட்டங்களும் விரும்பித் தொழும் திருவேங்கடத்தானே!


வேறு கதி இல்லாத (வேறு புகலிடம் இல்லாத) அடியேன் உன் திருவடிகளின் கீழே என்றென்றும் சரணடைந்தேனே!


Tuesday, November 09, 2021

கந்தர் சஷ்டி 2021


சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்

வேந்தனைச் செந்தமிழ் நூல் விரித்தோனை விளங்கு வள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார் மயில்வாகனனைச்
சாம்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே
- அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்
சிவந்த திருமேனியையுடைய சேந்தனை, கந்தப்பெருமானை, திருச்செங்கோட்டு மலைக்கு உரியவனை, சிவந்த சுடரும் வேலுக்கு அரசனை, (தமிழ் சங்கத்தில் அமர்ந்து) செந்தமிழ் நூல்களை வளர்த்தவனை,
புகழுடன் விளங்குகின்ற வள்ளியம்மையின் கணவனை, மணம் மிகுந்த கடம்ப மலரை அணிந்தவனை, மழையைப் பொழியும் மேகத்தைக் கண்டு மகிழ்கின்ற மயிலை வாகனமாக உடையவனை, உயிர் பிரியும்வரை மறவாதவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லையே!

நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
- அருணகிரிநாதரின் கந்தர் அலங்காரம்
நல்ல நாள் தீய நாள் என்பதெல்லாம் என்ன செய்யும்? நான் முன்பு செய்த நல்வினை தீவினை தான் என்ன செய்யும்? என் வினைகளுக்கு ஏற்ப பயன் தர என்னை தேடி வரும் நவகோள்களும் (நவகிரகங்களும்) என்ன செய்யும்? கொடிய கூற்றுவன் (யமன்) தான் என்ன செய்ய முடியும்? குமரேசனுடைய இரண்டு திருவடிகளும் அவற்றில் உள்ள சிலம்புகளும் சதங்கைகளும் தண்டைகளும், ஆறு திருமுகங்களும், பன்னிரு திருத்தோள்களும், அவற்றில் அணிந்த கடம்ப மாலையும் எனக்கு முன்னே வந்து தோன்றிடுமே!

ஆறிரு தடந்தோள் வாழ்க! ஆறுமுகம் வாழ்க! வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க! செவ்வேள்
ஏறிய மஞ்ஞை வாழ்க! ஆனை தன் அணங்கு வாழ்க!
மாறிலா வள்ளி வாழ்க! வாழ்க சீர் அடியார் எல்லாம்!
- ஸ்ரீ கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்த புராணம்
முருகப்பெருமானின் மலைகளைப் போல் உயர்ந்த (தட) பன்னிரு (ஆறு * இரு) திருத்தோள்கள் வாழ்க!
ஆறு திருமுகங்களும் வாழ்க!
க்ரௌஞ்சம் என்னும் மாய மலையைப் பிளந்த (வெற்பைக் கூறு செய்) ஒப்பில்லாத (தனி) திருவேல் வாழ்க!
சேவல் (குக்குடம்) கொடி வாழ்க!
சிவந்த தலைவனாம் (செவ்வேள்) சேந்தன் ஏறும் மயில் (மஞ்ஞை) வாழ்க!
ஐராவதம் என்னும் தெய்வ யானை வளர்த்த (ஆனை தன்) திருமகளார் (அணங்கு) தெய்வயானை அம்மை வாழ்க!
ஒப்பில்லாத (மாறு இலா) வள்ளியம்மை வாழ்க!
சிறப்புடைய முருகன் அடியவர்கள் எல்லாரும் வாழ்க!

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
- அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதி
ஆறுமுகங்களும் பன்னிரு தோள்களும் கொண்ட திருவுருவாகவும்,
உருவம் பெயர் குணங்களற்ற அருவான பிரம்மமாகவும்,
உண்டு என்று சொல்பவர்களுக்கு என்றும் உள்ள இறையாகவும்,
இல்லை என்று சொல்பவர்களுக்கு இல்லாதவனாகவும்,
மலரின் மணம் மிகுந்த மொட்டாகவும்,
மலர்ந்த மலராகவும்,
நவமணிகளாகவும்,
அவற்றின் ஒளியாகவும்,
எல்லா உயிர்களையும் தோற்றுவிக்கும் கருவாகவும்,
அவற்றின் உள்ளே நின்று அவற்றை நடத்துவிக்கும் உயிராகவும்,
அவை எல்லாம் இறுதியில் சென்று அடையும் கதியாகவும்,
அந்த நற்கதி அடைவதுவே அவற்றின் இயல்பு நிலை என்னும் படி விதியாகவும்,
அமைந்து
எனக்கு குருவாக வந்து அருள்வாய் குகக்கடவுளே!

Saturday, December 16, 2017

வந்தது மார்கழி!

வந்தது மார்கழி! வங்கக் கடல் கடைந்து 
சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த 
சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால்! 
சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை!
வந்தாள் சுடர்கொடியாய் சூடிக் கொடுத்திடவே!
தந்தாள் திருப்பாவை பாடி நாம் பரவ! 
முந்தை வினை அகல முகிலோன் திருவடியில் 
சிந்தை தனை வைத்துப் பாடி மகிழ்வோமே!

மார்கழி மாதம் வந்தது!

கப்பல்கள் (வங்கம்) நிறைந்த கடலைப் போல், பெரிய தத்துவங்கள் நிறைந்த தமிழ்க் கவிதை உருவாகி, அதனைக் கடைந்து நல்லோர் எல்லோரும் தமிழ் அமுதம் உண்ண வழி  என்ன என்று திருமகள் கேள்வன் செல்வத் திருமால் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கவலையைத் தீர்த்தாள் பெரியாழ்வார் திருமகளான கோதை!

பாமாலையோடு பூமாலையும் திருமாலுக்குச் சூடிக் கொடுக்க, சுடர்கொடியாய் வந்தாள்!

நாம் பாடி மகிழும்படி திருப்பாவை தந்தாள்!

முன்பு செய்த வினைப்பயன்கள் அகல, முகில்வண்ணன் திருவடிகளில் நம் சிந்தனையை வைத்து, திருப்பாவையைப் பாடி மகிழ்வோம்!

Saturday, September 23, 2017

இராமானுச நூற்றந்தாதி 2



கள் ஆர் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே

பொருள்: தேன் நிறைந்த மலர்களால் நிரம்பிய சோலைகளை உடைய தென் திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை தமது நெஞ்சிலே என்றும் நினைக்காத மக்களை நீங்கி, திருக்குறையலூர் தலைவர் ஆன திருமங்கையாழ்வார் திருவடிகளிலே என்றும் நீங்காத அன்பு கொண்ட இராமானுசரின் சிறந்த குணநலன்களைத் தவிர வேறு ஒன்றையும் என் நெஞ்சம் நினைக்காது. இப்படிப்பட்ட பெருநிலை எனக்கு எப்படி ஏற்பட்டது என்று அறியேன்.

விரிவுரை: இவ்வளவு நாளும் தென்னரங்கன் திருவடிகளை நினைக்காத சிறு மனிசரோடு உறவு கொண்டிருந்தேன். இன்று அதைத் தொலைத்தேன். திருமங்கை ஆழ்வாரின் திருவடிகளையே என்றும் மனத்தில் கொண்டிருக்கும் எம்பெருமானாருடைய சிறந்த சீலங்களே என் நெஞ்சில் நிலை நின்றது. இப்படிப்பட்ட நிலைமை என் முயற்சியால் ஆவது இல்லை. எம்பெருமானாரது காரணமே இல்லாத பெரும் கருணையே இதனை நிகழ்த்தி உள்ளது. 

Tuesday, September 19, 2017

இராமானுச நூற்றந்தாதி - 1

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே!

பொருள்: நெஞ்சே! தாமரைப் பூவில் என்றும் நிலையாகத் தங்கியிருக்கும் திருமகள் நிலையாக வாழும் திருமார்பை உடையவன் திருமால். அவனது புகழ் நிறைந்த பாசுரங்களில் நிலையாக இருப்பவர் மாறனாகிய நம்மாழ்வார். அவரது திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் இராமானுசர். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள் நிலையான அறிவில் நிலைத்து வாழ வந்தவர் இராமானுசர். அவரது திருவடித்தாமரைகளில் நாம் நிலையாக வாழ வேண்டும் என்றால் அவரது திருநாமங்களைத் தொடர்ந்து சொல்லுவோம்!

விரிவுரை:

தாயாரை முன்னிட்டே பெருமாளை சரணடைய வேண்டும் என்ற சம்பிரதாயத்தின் படி இங்கே முதல் பாசுரத்திலேயே 'பூ மன்னு மாது பொருந்திய மார்பன்' என்று தொடங்குகிறார்.

திருமகள் தாமரை மலரில் பிறந்து அங்கேயே நித்ய வாசம் செய்பவர். அந்த தாமரையை விட்டு விட்டு 'அகலகில்லேன் இறையும்' (சிறிது காலமும் பிரிந்து இருக்க மாட்டேன்) என்று மிக விருப்பத்துடன் திருமகள் வந்து வசிக்கும் படியான பெருமை கொண்டது திருமாலின் திருமார்பு.

அப்படிப்பட்ட பெருமையை உடைய திருமாலின் தெய்வீக குணங்களையும் பெருமைகளையும் பொங்கிப் பெருகும் படி நிறைந்துள்ள திருவாய்மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களைப் பாடி அவற்றிலே நிலையாக வாழ்பவர் நம்மாழ்வார். அப்படிப்பட்ட மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவடிகளில் நிலையான பக்தி செய்து அவரது திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் மூலம் உண்மைப் பொருளை அறிந்து உய்ந்தவர் இராமானுசர்.

பல கலைகள் கற்று அவற்றில் தேர்ந்தவர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் முதலிய பெரியோர்கள் பலரும் நிலையான ஞானத்தை அறிந்து அதில் நிலைத்து நிற்கும் படி வந்தவர் எம்பெருமானார்.

பல கலைகள் கற்றும், உய்யும் வழி எது என்று அறியாமல், பல வழிகளையும் ஆராய்ந்து, சந்தேகம் மயக்கம் முதலியவற்றால் தடுமாறுகிறவர்களை, நிச்சயமான ஞானத்தை அருளி நிலையான வாழ்வை அருள வந்தவர் இராமானுசர் என்று சொன்னாலும் பொருத்தமே.


அப்படிப்பட்ட இராமாநுசருடைய திருவடிகளை நாம் அடைந்து உய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவரது திருநாமங்களைச் சொல்லுவது ஒன்றே. நெஞ்சே! இராமானுசரின் திருநாமங்களைச் சொல்லுவோம்.

Wednesday, February 08, 2017

கேள்வன்!!!

சொல் ஒரு சொல் என்று முன்பொரு முறை எழுதிக் கொண்டிருந்தேன். ஏதாவது ஒரு புதிய () பழைய தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொண்டு அதனை அலசி ஆராய்வது வழக்கம். அந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இயலும் போதெல்லாம் எழுதுகிறேன். இயன்றவரையில் படித்து ஆதரியுங்கள்.

நாலாயிரப் பனுவல்களில் (திவ்ய ப்ரபந்தம்) ஈடுபாடு உடைவர்களுக்கு 'கேள்வன்' என்ற சொல் தெரிந்திருக்கும். தாமரையாள் கேள்வன், திருமகள் கேள்வன், பூமகள் கேள்வன், அலராள் கேள்வன் என்றெல்லாம் திருமகளின் தலைவனான திருமாலைப் போற்றி வரும் பாசுர வரிகள்.

கேள்வன் என்றால் என்ன? அதன் அடிப்படைச் சொல் எது? அதனுடன் தொடர்புடைய சொற்கள் எவை?

தேடினேன் இன்று.

'கேண்மை' என்பது தான் இதன் அடிப்படைச் சொல் என்று தோன்றுகிறது.

நட்பு என்று பொருள். உறவு என்றும் சொல்லலாம்.

அதில் இருந்து வந்த இன்னொரு சொல் 'கேள்'. வினைச் சொல்லாய் வரும் போது 'கேட்பாய்' என்று பொருள் தரும் இச்சொல் பெயர்ச் சொல்லாய் அமையும் போது நட்பு, உறவு என்ற பொருள் கொள்கிறது.

அடுத்து வரும் சொற்கள் கேளன், கேளி. ஆமாம். தோழன் தோழி தான்.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

கேள்விப்பட்டிருப்பீர்களே...

கணியன் பூங்குன்றனாரின் சங்கப் பாடல்.

பலரும் சொற்பிழையாய் கேளீர் என்று எழுதுவார்கள். கேளிர் என்பது தான் சரி.

உறவினர் என்று பொருள்.

அப்படியென்றால் கேள்வன் என்றால் என்ன பொருள்?

உறவுகளில் நெருங்கிய உறவு! நட்பில் ஊறிய உறவு! கணவன்!

கேள்வன் என்றால் கணவன், தலைவன் என்ற பொருளை மட்டும் சொல்லிச் சென்றுவிடுகிறார்கள்.


ஆனால் அதை விட நண்பன் என்ற பொருள் இன்னும் நெருக்கத்தைத் தருகிறது போல் தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?