Friday, April 23, 2010

பாரதியின் வசனகவிதை: காற்று - 12

பாரதியார் எழுதிய காற்று என்னும் வசனகவிதையின் பன்னிரண்டாம் பாகத்தை இங்கே கொடுக்கிறேன். முதல் பதினொன்று பாகங்களுக்கு முந்தையப் பதிவுகளைப் பாருங்கள்.

----------

காக்கை பறந்து செல்லுகிறது. காற்றின் அலைகளின் மீது நீந்திக்கொண்டு போகிறது. அலைகள் போலிருந்து, மேலே காக்கை நீந்திச் செல்வதற்கு இடமாகும் பொருள் யாது? காற்று அன்று. அஃதன்று காற்று. அது காற்றின் இடம், வாயு நிலயம். கண்ணுக்குத் தெரியாதபடி அத்தனை நுட்பமாகிய பூதத்தூள்களே (காற்றடிக்கும்போது) நம்மீது வந்து மோதுகின்றன. அத்தூள்களைக் காற்றென்பது உலக வழக்கு. அவை வாயுவல்ல. வாயு ஏறிவரும் தேர். பனிக்கட்டியிலே சூடேறினால் நீராக மாறி விடுகிறது. நீரிலே சூடேற்றினால் 'வாயு'வாகி விடுகிறது. தங்கத்திலே சூடேற்றினால் திரவமாகி உருகிவிடுகிறது. அத்திரவத்திலே சூடேற்றினால் 'வாயு'வாகின்றது.

இங்ஙனமே, உலகத்துப் பொருள்களனைத்தையும் 'வாயு' நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்த 'வாயு' பௌதிகத் தூள். இதனை ஊர்ந்துவரும் சக்தியையே நாம் காற்றுத் தேவனென்று வணங்குகிறோம்.

காக்கை பறந்து செல்லும் வழி காற்றன்று. அந்த வழியை இயக்குபவன் காற்று. அதனை அவ்வழியிலே தூண்டிச் செல்பவன் காற்று. அவனை வணங்குகின்றோம். உயிரைச் சரணடைகின்றோம்.

----------

உங்கள் உரை தேவை.

1 comment:

குமரன் (Kumaran) said...

6 comments:

G.Ragavan said...
இதுக்கு உரை என்ன சொல்வது? படிச்சதும் புரியுதே. இத இப்படியே படிச்சாப் போதாதா?
January 15, 2006 2:59 AM
--

சிவா said...
அவ்வளவா எளிது போல எனக்கு தோன்றவில்லை. மொத்தமாக படித்தால் என்ன சொல்ல வருகிறார்னு புரிஞ்சமாதிரியும் இருக்கு. புரியாதமாதிரியும் இருக்கு. ஏதோ இரண்டாம் அலைவரிசை ஹிந்தி சீரியல் மொழிபெயர்ப்பு போல ரொம்பவே குழப்புகிறது. எனவே குமரன் விளக்கம் வேறு யாராவது சொல்லும் வரை காத்திருக்கிறேன். :-))
January 15, 2006 7:53 AM
--

குமரன் (Kumaran) said...
சிவா சொல்ற மாதிரி இந்தி சீரியல் மொழிபெயர்ப்பு மாதிரிதான் புரிந்தும் புரியாமலும் இருக்கிறது. அதனால் இராகவன் உங்களுக்குப் புரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

மதுமிதா அக்காவிடம் கேட்டால் கவிதைகளை எல்லாம் விளக்கக் கூடாது. அவரவர்களுக்கு என்ன புரிகிறதோ அதுவே போதும் என்பார். விளக்கம் கொடுப்பதும் கேட்பதும் அப்படி அவரவர்களுக்கு என்ன புரிகிறது இந்தக் கவிதையில் என்பதைப் பார்ப்பதற்குத் தான்.
January 15, 2006 8:27 AM
--

Merkondar said...
தெளிவாக உள்ளது சற்று இரண்டு அல்லது மூன்று முறை படித்துப்பாருங்கள் நான் இரணடு முறை படித்துப் பார்த்தேன் சரி.
January 15, 2006 10:50 AM
--

G.Ragavan said...
// இராகவன் உங்களுக்குப் புரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்களேன். //

குமரன், மதுமிதா அக்காவினுடைய கருத்துதான் என்னுடையதும். செய்யுளுக்குப் பொருள் சொல்லலாம். ஆனால் கவிதைக்குச் சொல்லல் முறையன்று.

என்னார் சொன்னது போல் ரெண்டொரு முறை படித்தால் தெரிந்து விடுகிறது.
January 15, 2006 11:23 AM
--

குமரன் (Kumaran) said...
சரி. நீங்கள் சொல்ற மாதிரி தெரியலை. வழக்கம் போல எனக்கு என்ன தோன்றுகிறதோ அதனைச் சொல்கிறேன். :-)

காற்று என்பது ஒரு சக்தி. பூதத்தூள்கள் என்று பாரதியார் சொல்வது வாயு உருவில் இருக்கும் அணுக்கள். அவற்றின் சலனமே காற்று என்பது அறிவியலார் துணிபு. அதனைத் தான் பாரதியார் சொல்கிறார்.

உலகத்துப் பொருள்களையெல்லாம் வாயு நிலைக்குக் கொண்டு வந்துவிடலாம். இந்த வாயு பௌதிகத் துகள். அதனை ஊர்ந்து வரும் சக்தியே காற்று என்கிறார்.
January 16, 2006 6:49 PM