Monday, March 03, 2008

மாடு

இன்றைக்கு மாடு என்ற சொல்லைப் பற்றி அலசுவோம். மாடு என்றால் என்ன? பசு மாடு, எருமை மாடு, காளை மாடு என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அது இன்றைய மாடு. பால் கொடுப்பது. ஆனால் மாடு என்ற சொல்லே பல மொழிகளில் இல்லை என்பது தெரியுமா?

நம்மில் பலருக்கு தமிழ் ஆங்கிலம் நீங்கலாக பல மொழிகள் தெரியும். அந்தந்த மொழிகளில் மாடு என்பதை எப்படி அழைப்பார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு சொல்லும் அகப்படாது. ஆங்கிலத்தில் cattle என்று ஒரு சொல் உண்டு. அதற்கு ஆங்கில அகராதி தரும் பொருள் farm animals. பண்ணை விலங்குகள் என்ற வகையிற் பார்க்கப் போனால், பன்றியும் குதிரையும் கூட cattlesதான். வடமொழியிலோ அனைத்து விலங்குகளுமே பசுக்கள்தான். நிலமை இப்படியிருக்க தமிழில் மட்டும் எப்படி இப்படி ஒரு சொல் வந்தது? அது ஒரு சுவாரசியமான விவரம்.

தமிழன் தோன்றிய நாட்களில் பணம் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கவில்லை. அதற்குக் காரணம் அனைத்தும் பண்டமாற்றுதான். ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கிக் கொள்வது. பருத்தியைக் கொடுத்து துணிமணி வாங்குவார்கள் வாங்குவார்கள். செய்கூலியாக நெல், கம்பு, மற்றும் கேள்வரகு என்று அளப்பதே வழக்கமாக இருந்தது. அப்படியிருக்கையில் எப்படி ஒருவரது செல்வத்தை அளப்பது? இவ்வளவு செல்வமிக்கவர் என்று எப்படிச் சொல்வது? அதற்கும் தமிழன் ஒரு அளவை வைத்தான். ஒருவரிடமிருக்கும் பசுக்களையும் எருமைகளையும் வைத்து செல்வத்தை அளந்தார்கள்.

பட்டிக்காடுகளில் எத்தன மாடு இருக்கும் என்று கேட்டு ஒருவரின் வளப்பத்தைக் கண்டறியும் வழக்கம் இருந்தது/இருப்பது சிலருக்குத் தெரிந்திருக்கும். அன்றைக்கு மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். அவரிடம் 20 பசுச் செல்வம் இருக்கிறது. 30 எருமைச் செல்வம் இருக்கிறது என்று சொல்வதற்கு 20 பசு மாடு இருக்கிறது என்றும் 30 எருமை மாடு இருக்கிறது என்றும் அந்தக் காலத்தில் சொல்வார்கள். பின்னர் செல்வம் என்ற சொல்லும் பழக்கத்தில் வந்தது. ஆகையால் மாடு என்கின்ற பெயர் மாடுகளுக்கு அப்படியே நிலைத்து விட்டது. தமிழின் தொடக்கமே செல்வத்தோடுதான். முதலெழுத்தான அகரத்தைப் பாருங்கள். பக்கவாட்டில் தெரியும் மாட்டு முகம் போலத்தானே இருக்கிறது.

திருக்குறளில் கூட இதற்கான ஆதாரம் இருக்கிறது.
கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு
மாடல்ல மற்ற யவை.

இதில் வருகின்ற மாடு என்ற சொல் செல்வத்தைத்தானே குறிக்கிறது!

இனிமேல் யாரையாவது மாடு என்று திட்டுவீர்களா? :-)

அன்புடன்,
கோ.இராகவன்

***

இந்த இடுகை நண்பர் இராகவனால் 18 ஏப்ரல் 2006 அன்று 'சொல் ஒரு சொல்' பதிவில் இடப்பட்டது.

1 comment:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை நண்பர் இராகவனால் 18 ஏப்ரல் 2006 அன்று 'சொல் ஒரு சொல்' பதிவில் இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

59 கருத்துக்கள்:

முத்து(தமிழினி) said...
அய்யா,

கன்னடத்தில் வரும் மாடு,மாடி என்ற சொல்லின் மூலத்தையும் அலசுவீர்களா?

April 19, 2006 4:59 AM

Merkondar said...
கிராமங்களில் இந்த சொல் உண்டு எனது தாயார் கூட சொல்வார்கள் முழுமாடு சுருட்டி அவன் என. அதாவது முழு சொத்தையும் எடுத்துக்கொள்வான் அவன் என்பது அதன் பொருள்

April 19, 2006 5:04 AM

சிவமுருகன் said...
மாடு - செல்வம் நல்ல கருத்து.

//இனிமேல் யாரையாவது மாடு என்று திட்டுவீர்களா? :-)//

நிச்சயமாக யாரையும் திட்ட முடியாது ராகவன். ஆனால் நெல்லையில் ஒரு சமூகத்தினர் திட்டும் போது கூட "அட நீங்க நல்லா இருக்க" என்பர்.(சித்தி படத்திலும் வரும்) அது போலிருக்கலாமே?

April 19, 2006 5:22 AM

இலவசக்கொத்தனார் said...
//மாடல்ல மற்ற யவை.//

விவரம் பத்தாம இந்த குறளை எல்லாம் வெச்சு ரொம்ப கிண்டல் பண்ணி இருக்கோம். இப்போ தமிழ் கத்துக்கிற ஆர்வம் படிக்கும்போது இல்லாம போச்சேன்னு ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்யுது.

April 19, 2006 7:30 AM

G.Ragavan said...
// முத்து ( தமிழினி) said...
அய்யா, //

ஐயோ!

April 19, 2006 9:51 AM

G.Ragavan said...
// கன்னடத்தில் வரும் மாடு,மாடி என்ற சொல்லின் மூலத்தையும் அலசுவீர்களா? //

என்னை ஐயான்னு கூப்பிட்டீங்கள்ள....அதுனால அலச மாட்டேன் :-)

April 19, 2006 9:52 AM

G.Ragavan said...
// நிச்சயமாக யாரையும் திட்ட முடியாது ராகவன். ஆனால் நெல்லையில் ஒரு சமூகத்தினர் திட்டும் போது கூட "அட நீங்க நல்லா இருக்க" என்பர்.(சித்தி படத்திலும் வரும்) அது போலிருக்கலாமே? //

சிவமுருகன் நானும் யாரையும் எதிர்மறையாகத் திட்டுவதில்லை. டணால் தங்கவேலு திரைப்படத்தில் கூட அப்படிப் பேச மாட்டார் என்று கேள்வி.

April 19, 2006 9:55 AM

G.Ragavan said...
// கிராமங்களில் இந்த சொல் உண்டு எனது தாயார் கூட சொல்வார்கள் முழுமாடு சுருட்டி அவன் என. அதாவது முழு சொத்தையும் எடுத்துக்கொள்வான் அவன் என்பது அதன் பொருள் //

நல்ல எடுத்துக்காட்டு சொன்னீங்க என்னார். மிகச் சரியாகப் பிடித்தீர்கள்.

April 19, 2006 9:56 AM

குமரன் (Kumaran) said...
//பசு மாடு, எருமை மாடு, காளை மாடு என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். அது இன்றைய மாடு. பால் கொடுப்பது. //

இராகவன், உங்க ஊருல காளை மாடு பால் கொடுக்குமோ? அதிசயமான ஊர். அதிசயமான மாடு. அதிசயமான இராகவன். :-)

April 19, 2006 10:10 AM

குமரன் (Kumaran) said...
//ஆனால் மாடு என்ற சொல்லே பல மொழிகளில் இல்லை என்பது தெரியுமா?
//

புரியலையே? மாடு என்ற சொல்லே தமிழ்ச்சொல் தானே. அப்புறம் எப்படி மற்ற மொழிகளில் இருக்கும்? அவர்கள் தமிழில் இருந்து எடுத்துக் கொள்ளவில்லை என்கிறீர்களா? :-)

April 19, 2006 10:12 AM

குமரன் (Kumaran) said...
//அந்தந்த மொழிகளில் மாடு என்பதை எப்படி அழைப்பார்கள் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு சொல்லும் அகப்படாது. //

இல்லையே. எனக்குத் தெரிந்த வடமொழி, சௌராஷ்ட்ர மொழிகளில் தனியான சொல் இருக்கிறதே. பசு என்று வடமொழிச் சொல் அங்கே எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் என்றாலும் காவோ: (GaavO: ) - பசுமாடுகள் என்பது மாடுகளை மட்டுமே குறிக்கும் சொல் அன்றோ? சௌராஷ்ட்ரத்தில் அதனையே காய் (Gaay) & கொரு (Ghoru) என்போம். அவை மற்ற எந்த விலங்குகளையும் குறிக்காது. மாட்டினை மட்டும் குறிக்கும் சொற்கள்.

April 19, 2006 10:16 AM

குமரன் (Kumaran) said...
//வளக்கமாக//

இராகவன்,

நீங்களா இப்படி எழுதியது?????

April 19, 2006 10:17 AM

குமரன் (Kumaran) said...
//தமிழன் தோன்றிய நாட்களில் பணம் என்ற சொல்லே பயன்பாட்டில் இருக்கவில்லை.//

'இது மனிதன் தோன்றிய நாட்களில்' என்று இருக்கவேண்டுமோ? ஏனெனில் வடமொழியிலும் பசு என்ற சொல் செல்வத்தையும் குறிக்கிறது. அங்கும் நீங்கள் சொல்வது போல் பசு (எல்லா வீட்டு விலங்குகளையும்) செல்வமாகப் பார்த்து, பசு என்ற சொல் செல்வம் என்ற பொருளில் புழங்கியுள்ளது. இது தமிழின் (தமிழனின்) சிறப்பு மட்டும் அன்று.

April 19, 2006 10:19 AM

குமரன் (Kumaran) said...
//பின்னர் செல்வம் என்ற சொல்லும் பழக்கத்தில் வந்தது.//

அப்படியா? நீங்கள் குறிப்பிட்டுள்ள குறளில் இரண்டுமே (செல்வம், மாடு) பயின்று வந்துள்ளதே. என்னைக் கேட்டால் எப்படி நாம் பொருள் என்ற சொல்லை 'அருஞ்சொற்பொருள்' என்ற பொருளில் புழங்குவதைக் குறைத்துக் கொண்டு 'திடப்பொருள்', 'செல்வம்' என்ற பொருட்களில் புழங்குகிறோமோ அது போலவே 'மாடு' என்ற சொல்லும் தன் 'செல்வம்' என்ற பொருளை வழக்கில் இழந்து இன்று விலங்கின மாடு என்ற பொருளில் மட்டும் புழங்கப்படுகிறது. வள்ளுவர் காலம் முதல் செல்வம் என்ற சொல்லும் வழக்கில் இருந்திருக்கிறது.

April 19, 2006 10:23 AM

குமரன் (Kumaran) said...
//தமிழின் தொடக்கமே செல்வத்தோடுதான். முதலெழுத்தான அகரத்தைப் பாருங்கள். பக்கவாட்டில் தெரியும் மாட்டு முகம் போலத்தானே இருக்கிறது//

வாழ்க உங்கள் தமிழன்பு. :-)

April 19, 2006 10:24 AM

குமரன் (Kumaran) said...
ஒரு நல்ல சொல்லை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் இராகவன். ஆனால் செல்வம் என்ற தமிழ்ச்சொல் எல்லோருக்கும் புரியும் படி இருக்கும் போது மாடு என்பதனை எப்படி எங்கே பயன்படுத்துவது என்றும் சொல்லுங்கள். இல்லை வழக்கொழிந்த இந்தச் சொல்லை அறிமுகம் செய்யத் தான் இந்தப் பதிவு இட்டேன். தொடர்ந்து செல்வம் என்ற சொல்லையே புழங்கலாம் என்றால் எனக்கு அது ஏற்புடைத்து.

April 19, 2006 10:26 AM

குமரன் (Kumaran) said...
என்னார் ஐயா. நல்ல எடுத்துக்காட்டு. அந்தக் காலத்தில் ஒரு தலைவன் இன்னொரு தலைவன் மேல் படையெடுக்கும் போது முதலில் மாட்டினைத் தான் கவர்வானாம். உங்களுக்குத் தெரியாததா? இது தமிழர் மரபாகவும் இருந்திருக்கிறது. வடவர் மரபாகவும் இருந்திருக்கிறது. அதனைக் குறிக்கும் சொல்லாகவும் 'மாடுசுருட்டி' என்பது இருக்கலாமோ என்று எண்ணுகிறேன். ஆனால் அங்கும் மாடு என்பது செல்வம் என்ற பொருளில் தான் வருகிறது. அந்தக் கால வாழ்க்கை நிலையில் மாடு தானே பெருஞ்செல்வமாய் இருந்திருக்கிறது.

April 19, 2006 10:29 AM

manu said...
what is the good word is what comes to my mind.very many thanks to sri.Kumaran and sri.Raghavan.
Maadu...1,patience,
2,prosperity,
3,hard work,
4,beauty.
selvamaavathu sollaamal pogum.
Maadu has to be sent out.
adhanaal selvathukkum mela oru word shd be given to Maadu.please add a smiley here.

April 19, 2006 6:12 PM

தி. ரா. ச.(T.R.C.) said...
மாடு, மனை போனால் என்ன மக்கள் சுற்றம் போனால் என்ன மாடு=செல்வம்
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல்பெரும் பசுக்கள் நீங்காத செல்வம்--ஆண்டாள் தி.ரா.ச

April 19, 2006 6:48 PM

குறும்பன் said...
மக்களே தவறியும் "செல்வம்" என்ற பெயர் உடையவரை "மாடு" என்று அழைக்காதீர்கள், மாத்து தான் கிடைக்கும் இராகவன் விளக்கம் அங்கு தங்களுக்கு உதவாது. :-))
முத்து ஐயா என்றதற்காக கன்னட மாட்டை பற்றி எங்களுக்கு சொல்லாமல் விடாதீர்கள்.

April 19, 2006 7:43 PM

பொன்ஸ்~~Poorna said...
என்னங்க இது,,. மாட்டைப் போய் இப்படி அலசி ஆராய்ஞ்சுட்டீங்க!!!

கௌசிகன், குமரன் எழுதி இருக்கறதெல்லாம் படிங்க.. இந்த பதிவுக்கு 'விமர்சனத் திலகம்', 'குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்கும் புலவர்'னு, இன்னொருத்தர் வரணுமா என்ன?

April 19, 2006 8:21 PM

rnateshan. said...
மாடு, மாடு நீ இல்லை என்றால் ஏது வீடு!!(பில்டர் காப்பியும் சேர்த்துதான்)
நல்ல முய்ற்சி குமரன்!!

April 19, 2006 10:31 PM

முத்து(தமிழினி) said...
// முத்து ( தமிழினி) said...
அய்யா, //

ஐயோ!

// கன்னடத்தில் வரும் மாடு,மாடி என்ற சொல்லின் மூலத்தையும் அலசுவீர்களா? //

என்னை ஐயான்னு கூப்பிட்டீங்கள்ள....அதுனால அலச மாட்டேன் :-)

பச்சிளம் பாலகா ராகவன்,:))

கன்னடத்தில் உள்ள மாடுபேக்கு, மாடி ஆகிய சொற்களை அலசவும்.

April 19, 2006 11:27 PM

G.Ragavan said...
// இராகவன், உங்க ஊருல காளை மாடு பால் கொடுக்குமோ? அதிசயமான ஊர். அதிசயமான மாடு. அதிசயமான இராகவன். :-) //

அதிசயமான பதிவும் கூட :-)

// இல்லையே. எனக்குத் தெரிந்த வடமொழி, சௌராஷ்ட்ர மொழிகளில் தனியான சொல் இருக்கிறதே. பசு என்று வடமொழிச் சொல் அங்கே எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும் என்றாலும் காவோ: (GaavO: ) - பசுமாடுகள் என்பது மாடுகளை மட்டுமே குறிக்கும் சொல் அன்றோ? சௌராஷ்ட்ரத்தில் அதனையே காய் (Gaay) & கொரு (Ghoru) என்போம். அவை மற்ற எந்த விலங்குகளையும் குறிக்காது. மாட்டினை மட்டும் குறிக்கும் சொற்கள். //

வடமொழியில் பசு பக்ஷி என்பார்கள். அங்கு பசு என்பது விலங்கு மாடு அல்ல. சௌராஷ்டிரம் எனக்குத் தெரியாது. நான் எனக்குத் தெரிந்த மொழிகளான தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளையும் வடமொழி தெரிந்தவரைக் கேட்டும் எழுதிய பதிவு இது. இனிமேல் நானும் யாமறிந்த மொழிகளிலேன்னு போட்டு எழுதுறது நல்லதுன்னு நெனைக்கிறேன். :-)

April 20, 2006 6:19 AM

G.Ragavan said...
// //வளக்கமாக//

இராகவன்,

நீங்களா இப்படி எழுதியது????? //

ஆமாம் நான் தான்...தவறி விட்டது மன்னிக்கவும். வழக்கமாக என்றிருந்திருக்க வேண்டும். கொச்சைத் தமிழில் பேசினால் கூட உச்சரிப்பை விடாது இருக்க முயலும் நான் தவறு செய்தது வருத்தமாகத்தான் இருக்கிறது. இனிமேல் தவறு நேராத வகைக்கு எழுத முயல்கிறேன். சரியான பொழுதில் சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

April 20, 2006 6:20 AM

துளசி கோபால் said...
தெலுங்குலே பசு மாடு = ஆவு.
பன்மைக்கு 'லு' சேர்க்கணுங்கறது உங்களுக்குத் தெரியாதா?:-)

மலையாளத்துலே பசு= பசுதான்.

இதெல்லாம் வளக்கமாச் சொல்றது ஒரு பளக்கமாப் போச்சு.

April 20, 2006 4:07 PM

FloraiPuyal said...
Ragavan, interesting post. In general, almost all of tamil words have different meanings. Maadu is no different and takes meanings like place, wealth, as in pasu maadu, etc. In addition, Maadu is also an oblative in tamil. For instance, we still use phrases like "seyya maatten", "seyya maattathu" that acts as a supportive word for some action. This is still used in kannada in lieu of the verb "to do"
Also, english should not be considered for any comparison, since english is a very recent language and has a very small vocabulary compared with other languages. In chinese, the word "niu" is equal to tamil "maadu". "nai niu" is cow and so on. So as kumaran said it is not unique to tamil.
The charater 'அ' is very modern and evolved from ancient script, which is not even close to "maadu" in shape. :)

April 20, 2006 4:27 PM

G.Ragavan said...
// ஒரு நல்ல சொல்லை எடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள் இராகவன். ஆனால் செல்வம் என்ற தமிழ்ச்சொல் எல்லோருக்கும் புரியும் படி இருக்கும் போது மாடு என்பதனை எப்படி எங்கே பயன்படுத்துவது என்றும் சொல்லுங்கள். இல்லை வழக்கொழிந்த இந்தச் சொல்லை அறிமுகம் செய்யத் தான் இந்தப் பதிவு இட்டேன். தொடர்ந்து செல்வம் என்ற சொல்லையே புழங்கலாம் என்றால் எனக்கு அது ஏற்புடைத்து. //

குமரன், மக்கள் செல்வம் என்ற சொல்லையே பயன்படுத்தலாம். இந்தச் சொல்லை அறிமுகப் படுத்த வேண்டும் என்பதற்காகவே சொன்னேன். நாலு இடங்களில் படித்து நான் தெரிந்து கொண்டதைச் சொன்னேன்.

April 20, 2006 10:05 PM

G.Ragavan said...
// பச்சிளம் பாலகா ராகவன்,:))

கன்னடத்தில் உள்ள மாடுபேக்கு, மாடி ஆகிய சொற்களை அலசவும். //

என்ன முத்து இது...வெச்சாக் குடுமி...செரைச்சா மொட்டைங்குற மாதிரி.......

மாடபேக்கு மாடி எல்லாம் நீங்களும் அலசலாமே. கொஞ்சம் இந்தப் பக்கமும் வாங்க.

April 20, 2006 10:22 PM

இளவஞ்சி said...
//அதற்குக் காரணம் அனைத்தும் பண்டமாற்றுதான். ஒன்றைக் கொடுத்து ஒன்றை வாங்கிக் கொள்வது. //

அதனாலதான் நான் என் வாக்கை கொடுத்து கலர் டீவி வாங்கப்போறேன்!

தமிழரின் தொன்றுதொட்ட பழக்கத்தினை சரியான நேரத்தில் சொல்லி என் குற்ற உணர்வை நீக்கியதற்கு நன்றி!! :)

April 20, 2006 10:34 PM

முத்து(தமிழினி) said...
அரைகுறையா தெரிஞ்ச விஷயத்தை அலசப்போய் முதுகு பழுத்துருச்சி...

தெரியாத விஷயத்தை தொட்டா என்ன ஆகுமோ?

சிவ சிவா

April 20, 2006 10:42 PM

tbr.joseph said...
அன்றைக்கு மாடு என்ற சொல்லுக்கு செல்வம் என்று பொருள். அவரிடம் 20 பசுச் செல்வம் இருக்கிறது. 30 எருமைச் செல்வம் இருக்கிறது என்று சொல்வதற்கு 20 பசு மாடு இருக்கிறது என்றும் 30 எருமை மாடு இருக்கிறது என்றும் அந்தக் காலத்தில் சொல்வார்கள்//

உண்மைதான் ராகவன். பழைய வேதாகம காலத்திலும் ஒருவரின் வலிமையைக் குறிப்பதற்கு அவர்களிடம் எத்தனை கால்நடைகள் இருந்தன என்பதைத்தான் கருத்தில் கொண்டிருந்தார்கள். கால்நடைகளில் அக்காலத்தில் ஒட்டகங்களும் சேர்ந்திருந்தன.

April 21, 2006 12:17 AM

neo said...
முதலில் இந்த முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இராகவன் மற்றும் குமரன் :)

இந்த பக்கவாட்டிலிருந்து பார்த்தால் 'மாடு' போல் தெரியும் 'அ'கரம் என்கிற சங்கதியை முன்பொருமுறை கவிக்கோ அப்துல் ரகுமான் எழுதிப் படித்த நினைவு.தமிழனுடைய வாழ்வும், பண்பாடும் இயற்கையோடு இயைந்திருந்ததைச் சொல்லுமிடத்து அவர் இதைச் சுட்டி எழுதியிருந்தார்.

April 21, 2006 2:19 PM

G.Ragavan said...
நியோ, கவிக்கோவுக்குத் தெரியாத தமிழா! அரசியல் சார்புடையவராக அவர் எப்படியும் இருக்கட்டும். ஆனால் கவிஞராக மிகச் சிறந்தவர். நான் மதிக்கும் கவிஞர்களில் ஒருவர்.

April 21, 2006 10:45 PM

G.Ragavan said...
// தெலுங்குலே பசு மாடு = ஆவு.
பன்மைக்கு 'லு' சேர்க்கணுங்கறது உங்களுக்குத் தெரியாதா?:-)

மலையாளத்துலே பசு= பசுதான்.

இதெல்லாம் வளக்கமாச் சொல்றது ஒரு பளக்கமாப் போச்சு. //

வாங்க டீச்சர்....மீரு செப்பேதி அந்த்தா நிசமே. ஆப்பாலு அனி செப்தாரு. கான்ச்சி தாகுதாரு. எனுப்பாலு தெலுசா? தெல்லங்கா உண்டுந்தி. பெருகு சால கெட்டிகா உண்டுந்தி.

டீச்சர். மலையாளத்தில் மாடு உண்டோ?

April 21, 2006 10:49 PM

G.Ragavan said...
// உண்மைதான் ராகவன். பழைய வேதாகம காலத்திலும் ஒருவரின் வலிமையைக் குறிப்பதற்கு அவர்களிடம் எத்தனை கால்நடைகள் இருந்தன என்பதைத்தான் கருத்தில் கொண்டிருந்தார்கள். கால்நடைகளில் அக்காலத்தில் ஒட்டகங்களும் சேர்ந்திருந்தன. //

ஆமாம் ஜோசப் சார். பாலைவனப் பிரதேசங்களில் ஒட்டகங்கள் இருக்கத்தானே வேண்டும். டைனோசர்கள் இருந்திருந்தால் அவைகளையும் நாம் சேர்த்திருந்திருக்கலாம். ம்ம்ம்...டைனோசர் குடுத்து வெச்சது அவ்வளவுதான். ஒரு டைனோசர் இருந்தா ஒரு தெருவுக்கே பால் கறக்கலாம்.

April 21, 2006 10:52 PM

G.Ragavan said...
// மக்களே தவறியும் "செல்வம்" என்ற பெயர் உடையவரை "மாடு" என்று அழைக்காதீர்கள், மாத்து தான் கிடைக்கும் இராகவன் விளக்கம் அங்கு தங்களுக்கு உதவாது. :-)) //

குறும்பரே பெயருக்கேற்ற பின்னூட்டம். :-)

April 21, 2006 10:53 PM

G.Ragavan said...
// அரைகுறையா தெரிஞ்ச விஷயத்தை அலசப்போய் முதுகு பழுத்துருச்சி...

தெரியாத விஷயத்தை தொட்டா என்ன ஆகுமோ?

சிவ சிவா //

என்ன முத்து இப்பிடிச் சொல்லீட்டீங்க. தமிழ்தானுங்களே...அது தெரியாத விஷயமாப் போச்சா! நீங்க மட்டுமில்லை. நெறையப் பேருக இப்பிடித்தான். எல்லாருக்குமே கற்றது கை மண்ணளவுதான். அதுனால யோசிக்காம வந்து சொல்லுங்க.

April 21, 2006 10:55 PM

G.Ragavan said...
// அதனாலதான் நான் என் வாக்கை கொடுத்து கலர் டீவி வாங்கப்போறேன்!

தமிழரின் தொன்றுதொட்ட பழக்கத்தினை சரியான நேரத்தில் சொல்லி என் குற்ற உணர்வை நீக்கியதற்கு நன்றி!! :) //

கலர் டீவிக்கு வாக்கு பண்டமாற்று. அப்புறம் கேபிள் காசு, கரண்ட்டு பில்லு, கண்ணாடிச் செலவு எல்லாத்துக்கும் எதையெதைப் பண்டமாற்று செய்வீங்க?

April 21, 2006 10:56 PM

மலைநாடான் said...
ராகவன்!
எங்கள் தென் தமிழீழத்தில் அண்மைக்காலம் வரைக்கும், பசுக்களையும, எருமைகளையும், உள்ளடக்கிய 'பட்டி'யை வைத்து ஒருவரது செல்வ மதிப்பீடு செய்யப்பட்ட வழக்கு இருந்தது. அத்தகைய செல்வமுடையோரை ' போடியார்' என்று சொல்லி அழைக்கும் வழக்கும் இருந்தது. இப்போ...?

April 22, 2006 1:21 PM

துளசி கோபால் said...
ராகவன்,

மலையாளத்துலே 'மாடு' இல்லை( பசுவும் எருமையும்தான்)
ஆனால் மலையாளிகளிடத்தில் 'மாடு' உண்டு.( நீங்க சொன்ன அர்த்தத்திலும், கல்வி
என்ற செல்வம் நிறையப் பேருக்குக் கிடைச்சதிலும்)

April 23, 2006 2:22 AM

ஜெயஸ்ரீ said...
மாடு என்றால் செல்வம், விலையுயர்ந்த கல், மற்றும் சீதனம் என்றும் பொருள் உண்டு. வீட்டிற்கு வரும் மருமகளை மாட்டுப்பெண் என்று சிலர் சொல்வதுண்டு. மாடு போல் உழைக்க வேண்டும் என்பதால் அப்படியோ என்று சிறுவயதில் நினைத்ததுண்டு. ))

சீதனம்(மாடு) கொண்டு வருவதால் தான் அந்தப் பெயர் வந்தது என்று இப்போது புரிகிறது.

April 23, 2006 7:52 AM

மாயவரத்தான்... said...
மாடு பத்தின பதிவுன்ன உடனே தே.மு.தி.க.வின் இலவச மாடு குறித்த பதிவுன்னு நெனச்சு ஓடி வந்தேன். இங்கே வந்து பார்த்த உடனே தான் இது பேராசிரியர் நன்னனோட பதிவுன்னு புரிஞ்சிச்சி. பரவாயில்லையே.. இணையத்திலே தமிழ் வளருது!

அடுத்ததா தொலைக்காட்சி அப்படீன்ற வார்த்தையை தானே அலசப் போறீங்க?இல்லாட்டி 'அரிசி'?!

April 23, 2006 8:34 AM

johan-paris said...
இராகவன்!
நான் மத்திய ஆபிரிக்க விவரணப் படங்கள்; பிபிசி;நசனல் யீயோகிரபி தொலைக் காட்சியில் பார்த்துள்ளேன். இங்குள்ள பழங்குடி மக்கள் ;பெண்ணெடுக்க பெண்ணைப் பெற்றவருக்கு மாடுகளைத் தான்; கொடுக்கிறார்கள்.ஒருவரிடமுள்ள மாடுகளின் எண்ணிக்கையை வைத்தே; அவரின் பொருளாதாரமும்; அச்சமுதாயத்தில் மதிப்பும் தரப்படுகிறது.ஒரு தந்தை தன் மகனுக்கு சிறுவனாகவிருக்கும் போது ஒரு பசு கொடுக்கிறார். அதை அவன் தன் திருமண வயது வரும் பொழுது எவ்வளவு;பட்டியாக்கிறானோ! அவனுக்கே ! விரைவில் திருமணமாக வாய்ப்புக் கணிக்கப் படுகிறது.இப்போதும் அப்படியே தான் ;நடக்கிறது. ஆகவே மாடு என்பது; செல்வத்தையும் குறிப்பதே!
யோகன்
பாரிஸ்

April 23, 2006 1:09 PM

வெற்றி said...
இராகவன்,
நல்ல பதிவு. இன்னும் பல சுவையான பதிவுகளை உங்களிடமும் , குமரன் அவர்களிடமும் இருந்து எதிர்பார்க்கிறேன். 'சொல் ஒரு சொல்' தளம் நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் மிகையாகாது. நல்ல பணி.

April 27, 2006 11:55 AM

Natarajan said...
Sorry for writing in English. Kumaran and you are doing wonderful job.

Mikka Maghazchi. Nandri Raghavan!!!

Anbudan,
Natarajan

May 04, 2006 5:11 PM

குமரன் (Kumaran) said...
நண்பர் இராகவனின் கட்டளைப்படி அவருடைய இந்தப் பதிவிற்கு பின்னூட்டம் இட்டவர்களுக்குப் பதில் நான் சொல்கிறேன். அவர் சொன்னதாக நினைத்துக் கொள்ளுங்கள். :-) அதெப்படி தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு தான்னு சொல்றீங்களா? ஆமாங்க. இராகவன் அளவுக்குத் தமிழறிவு இல்லைன்னாலும் அவரா நடிக்கிற அளவுக்குத் தமிழ் தெரியும். :-)

May 12, 2006 1:58 PM

குமரன் (Kumaran) said...
மலைநாடான், பட்டி என்ற சொல் தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இந்த 'போடியார்' என்ற சொல் இருக்கிறதா தெரியவில்லை. ஒரு வேளை மதுரையார் என்று சொல்வது போல் போடியிலிருந்து வந்தவர்களை போடியார் என்று சொல்வார்களோ என்னவோ? :-)

பட்டியை வைத்துச் செல்வ மதிப்பீடு செய்வது உலகம் முழுக்க இருந்திருக்கும் போலிருக்கிறது.

May 12, 2006 2:03 PM

குமரன் (Kumaran) said...
மாடு என்பதற்கு உள்ள எல்லா பொருளையும் சொன்னதற்கு நன்றி மனு. செல்வம் மட்டுமா செல்லும்? மாடும் செல்லுமே? செல்லாவிட்டால் அது நொண்டி மாடாகிவிடாதா? :-) கோபித்துக் கொள்ளாதீர்கள். செல்வம் என்பதில் சிலேடை வைத்தீர்களல்லவா, மாட்டிலும் வைக்கலாம் என்று தோன்றியது.

May 12, 2006 2:06 PM

குமரன் (Kumaran) said...
சரியான எடுத்துக்காட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள் தி.ரா.ச.

May 12, 2006 2:07 PM
குமரன் (Kumaran) said...
நன்றி நடேசன் ஐயா. இந்தப் பதிவு இராகவனுடையது. அதனால் உங்கள் பாராட்டு அவருக்கு.

May 12, 2006 2:08 PM

குமரன் (Kumaran) said...
பொன்ஸ். இன்னொரு பட்டத்தையும் நீங்க எனக்குக் குடுத்திருக்கலாம் - வேலையில்லா பட்டதாரின்னு. அதனால தான் உக்காந்து குற்றமாக் கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கேன். கறுப்பு அண்ணாகிட்ட சொல்லிடாதீங்க. அப்புறம் அதையும் பயன்படுத்தத் தொடங்கிடுவார். :-)

May 12, 2006 2:10 PM

குமரன் (Kumaran) said...
ப்ளோரைபுயல். உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அப்படியே நான் சொன்னதை ஆதரித்ததிற்கும் நன்றி. :-)

May 12, 2006 2:12 PM

குமரன் (Kumaran) said...
Jayashree மாட்டுப் பெண் என்பதற்கு நல்ல விளக்கம் சொல்லிவிட்டீர்கள். நான் அது மாற்றுப்பெண் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன்.

May 12, 2006 2:14 PM

குமரன் (Kumaran) said...
மாயவரத்தாரே. உங்களுக்குத் தேர்தல் காய்ச்சல் (அது தாங்க தேர்தல் ஜுரம்) ரொம்ப அதிகமாய் இருந்தது போல. அதான் பார்த்ததெல்லாம் தேர்தலைத் தொடர்புடையதாய் தெரிந்திருக்கிறது. :-)

May 12, 2006 2:15 PM

குமரன் (Kumaran) said...
நன்றி யோகன் ஐயா. நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்ததை எங்களுடன் பகிர்ந்துகொண்டதற்கு.

May 12, 2006 2:16 PM

குமரன் (Kumaran) said...
வெற்றி. என்ன சொல்றீங்க? இந்தத் தளம் நடமாடும் பல்கலைக் கழகமா? இது எங்கேங்க நடமாடுது? இதற்கு உயிரே இல்லை; அப்புறம் எப்படி நடமாடும்? ஓ, இராகவன் நடமாடும் பல்கலைக்கழகம்ன்னு சொல்றீங்களா? அது சரி. :-)

உங்கள் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி வெற்றி.

May 12, 2006 2:18 PM

குமரன் (Kumaran) said...
படித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி 'இந்தியக் கனவு 2020' நடராஜன். :-)

May 12, 2006 2:19 PM

குமரன் (Kumaran) said...
யாருக்காவது பதில் சொல்ல விட்டுப் போயிருந்தா மன்னிச்சுக்கோங்க.

May 12, 2006 2:20 PM