சொல் ஒரு சொல் என்று
முன்பொரு முறை எழுதிக்
கொண்டிருந்தேன். ஏதாவது ஒரு புதிய
(அ) பழைய தமிழ்ச் சொல்லை
எடுத்துக்கொண்டு அதனை அலசி ஆராய்வது
வழக்கம். அந்த வழக்கத்தை மீண்டும்
தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இயலும்
போதெல்லாம் எழுதுகிறேன். இயன்றவரையில் படித்து ஆதரியுங்கள்.
நாலாயிரப்
பனுவல்களில் (திவ்ய ப்ரபந்தம்) ஈடுபாடு
உடைவர்களுக்கு 'கேள்வன்' என்ற சொல்
தெரிந்திருக்கும். தாமரையாள் கேள்வன், திருமகள் கேள்வன்,
பூமகள் கேள்வன், அலராள் கேள்வன்
என்றெல்லாம் திருமகளின் தலைவனான திருமாலைப் போற்றி
வரும் பாசுர வரிகள்.
கேள்வன்
என்றால் என்ன? அதன் அடிப்படைச்
சொல் எது? அதனுடன் தொடர்புடைய
சொற்கள் எவை?
தேடினேன்
இன்று.
'கேண்மை'
என்பது தான் இதன் அடிப்படைச்
சொல் என்று தோன்றுகிறது.
நட்பு என்று பொருள். உறவு
என்றும் சொல்லலாம்.
அதில் இருந்து வந்த இன்னொரு
சொல் 'கேள்'. வினைச் சொல்லாய்
வரும் போது 'கேட்பாய்' என்று
பொருள் தரும் இச்சொல் பெயர்ச்
சொல்லாய் அமையும் போது நட்பு,
உறவு என்ற பொருள் கொள்கிறது.
அடுத்து
வரும் சொற்கள் கேளன், கேளி.
ஆமாம். தோழன் தோழி தான்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்!
கேள்விப்பட்டிருப்பீர்களே...
கணியன் பூங்குன்றனாரின் சங்கப் பாடல்.
பலரும் சொற்பிழையாய் கேளீர் என்று எழுதுவார்கள்.
கேளிர் என்பது தான் சரி.
உறவினர்
என்று பொருள்.
அப்படியென்றால்
கேள்வன் என்றால் என்ன பொருள்?
உறவுகளில்
நெருங்கிய உறவு! நட்பில் ஊறிய
உறவு! கணவன்!
கேள்வன்
என்றால் கணவன், தலைவன் என்ற
பொருளை மட்டும் சொல்லிச் சென்றுவிடுகிறார்கள்.
ஆனால் அதை விட நண்பன்
என்ற பொருள் இன்னும் நெருக்கத்தைத்
தருகிறது போல் தோன்றுகிறது. என்ன
சொல்கிறீர்கள்?
3 comments:
நல்ல சிந்லசி நண்பரே. மேலும் ஓங்குக
சிந்தனை *
மிக்க நன்று...நெருக்கமானவன், சொந்தங்கள்..
Post a Comment