Saturday, December 16, 2017

வந்தது மார்கழி!

வந்தது மார்கழி! வங்கக் கடல் கடைந்து 
சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த 
சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால்! 
சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை!
வந்தாள் சுடர்கொடியாய் சூடிக் கொடுத்திடவே!
தந்தாள் திருப்பாவை பாடி நாம் பரவ! 
முந்தை வினை அகல முகிலோன் திருவடியில் 
சிந்தை தனை வைத்துப் பாடி மகிழ்வோமே!

மார்கழி மாதம் வந்தது!

கப்பல்கள் (வங்கம்) நிறைந்த கடலைப் போல், பெரிய தத்துவங்கள் நிறைந்த தமிழ்க் கவிதை உருவாகி, அதனைக் கடைந்து நல்லோர் எல்லோரும் தமிழ் அமுதம் உண்ண வழி  என்ன என்று திருமகள் கேள்வன் செல்வத் திருமால் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் கவலையைத் தீர்த்தாள் பெரியாழ்வார் திருமகளான கோதை!

பாமாலையோடு பூமாலையும் திருமாலுக்குச் சூடிக் கொடுக்க, சுடர்கொடியாய் வந்தாள்!

நாம் பாடி மகிழும்படி திருப்பாவை தந்தாள்!

முன்பு செய்த வினைப்பயன்கள் அகல, முகில்வண்ணன் திருவடிகளில் நம் சிந்தனையை வைத்து, திருப்பாவையைப் பாடி மகிழ்வோம்!

Saturday, September 23, 2017

இராமானுச நூற்றந்தாதி 2



கள் ஆர் பொழில் தென்னரங்கன் கமலப் பதங்கள் நெஞ்சில்
கொள்ளா மனிசரை நீங்கி குறையல் பிரான் அடிக்கீழ்
விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால்
உள்ளாது என் நெஞ்சு ஒன்றறியேன் எனக்குற்ற பேரியல்வே

பொருள்: தேன் நிறைந்த மலர்களால் நிரம்பிய சோலைகளை உடைய தென் திருவரங்கத்தில் பள்ளி கொள்ளும் திருவரங்கப் பெருமானின் தாமரை போன்ற திருவடிகளை தமது நெஞ்சிலே என்றும் நினைக்காத மக்களை நீங்கி, திருக்குறையலூர் தலைவர் ஆன திருமங்கையாழ்வார் திருவடிகளிலே என்றும் நீங்காத அன்பு கொண்ட இராமானுசரின் சிறந்த குணநலன்களைத் தவிர வேறு ஒன்றையும் என் நெஞ்சம் நினைக்காது. இப்படிப்பட்ட பெருநிலை எனக்கு எப்படி ஏற்பட்டது என்று அறியேன்.

விரிவுரை: இவ்வளவு நாளும் தென்னரங்கன் திருவடிகளை நினைக்காத சிறு மனிசரோடு உறவு கொண்டிருந்தேன். இன்று அதைத் தொலைத்தேன். திருமங்கை ஆழ்வாரின் திருவடிகளையே என்றும் மனத்தில் கொண்டிருக்கும் எம்பெருமானாருடைய சிறந்த சீலங்களே என் நெஞ்சில் நிலை நின்றது. இப்படிப்பட்ட நிலைமை என் முயற்சியால் ஆவது இல்லை. எம்பெருமானாரது காரணமே இல்லாத பெரும் கருணையே இதனை நிகழ்த்தி உள்ளது. 

Tuesday, September 19, 2017

இராமானுச நூற்றந்தாதி - 1

பூ மன்னு மாது பொருந்திய மார்பன் புகழ் மலிந்த
பா மன்னு மாறன் அடி பணிந்து உய்ந்தவன் பல்கலையோர்
தாம் மன்ன வந்த இராமானுசன் சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே!

பொருள்: நெஞ்சே! தாமரைப் பூவில் என்றும் நிலையாகத் தங்கியிருக்கும் திருமகள் நிலையாக வாழும் திருமார்பை உடையவன் திருமால். அவனது புகழ் நிறைந்த பாசுரங்களில் நிலையாக இருப்பவர் மாறனாகிய நம்மாழ்வார். அவரது திருவடிகளைப் பணிந்து உய்ந்தவர் இராமானுசர். பல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள் நிலையான அறிவில் நிலைத்து வாழ வந்தவர் இராமானுசர். அவரது திருவடித்தாமரைகளில் நாம் நிலையாக வாழ வேண்டும் என்றால் அவரது திருநாமங்களைத் தொடர்ந்து சொல்லுவோம்!

விரிவுரை:

தாயாரை முன்னிட்டே பெருமாளை சரணடைய வேண்டும் என்ற சம்பிரதாயத்தின் படி இங்கே முதல் பாசுரத்திலேயே 'பூ மன்னு மாது பொருந்திய மார்பன்' என்று தொடங்குகிறார்.

திருமகள் தாமரை மலரில் பிறந்து அங்கேயே நித்ய வாசம் செய்பவர். அந்த தாமரையை விட்டு விட்டு 'அகலகில்லேன் இறையும்' (சிறிது காலமும் பிரிந்து இருக்க மாட்டேன்) என்று மிக விருப்பத்துடன் திருமகள் வந்து வசிக்கும் படியான பெருமை கொண்டது திருமாலின் திருமார்பு.

அப்படிப்பட்ட பெருமையை உடைய திருமாலின் தெய்வீக குணங்களையும் பெருமைகளையும் பொங்கிப் பெருகும் படி நிறைந்துள்ள திருவாய்மொழி முதலிய திவ்ய பிரபந்தங்களைப் பாடி அவற்றிலே நிலையாக வாழ்பவர் நம்மாழ்வார். அப்படிப்பட்ட மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவடிகளில் நிலையான பக்தி செய்து அவரது திருவாய்மொழி முதலிய பிரபந்தங்கள் மூலம் உண்மைப் பொருளை அறிந்து உய்ந்தவர் இராமானுசர்.

பல கலைகள் கற்று அவற்றில் தேர்ந்தவர்களான கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் முதலிய பெரியோர்கள் பலரும் நிலையான ஞானத்தை அறிந்து அதில் நிலைத்து நிற்கும் படி வந்தவர் எம்பெருமானார்.

பல கலைகள் கற்றும், உய்யும் வழி எது என்று அறியாமல், பல வழிகளையும் ஆராய்ந்து, சந்தேகம் மயக்கம் முதலியவற்றால் தடுமாறுகிறவர்களை, நிச்சயமான ஞானத்தை அருளி நிலையான வாழ்வை அருள வந்தவர் இராமானுசர் என்று சொன்னாலும் பொருத்தமே.


அப்படிப்பட்ட இராமாநுசருடைய திருவடிகளை நாம் அடைந்து உய்ய வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அவரது திருநாமங்களைச் சொல்லுவது ஒன்றே. நெஞ்சே! இராமானுசரின் திருநாமங்களைச் சொல்லுவோம்.

Wednesday, February 08, 2017

கேள்வன்!!!

சொல் ஒரு சொல் என்று முன்பொரு முறை எழுதிக் கொண்டிருந்தேன். ஏதாவது ஒரு புதிய () பழைய தமிழ்ச் சொல்லை எடுத்துக்கொண்டு அதனை அலசி ஆராய்வது வழக்கம். அந்த வழக்கத்தை மீண்டும் தொடங்கலாம் என்று தோன்றுகிறது. இயலும் போதெல்லாம் எழுதுகிறேன். இயன்றவரையில் படித்து ஆதரியுங்கள்.

நாலாயிரப் பனுவல்களில் (திவ்ய ப்ரபந்தம்) ஈடுபாடு உடைவர்களுக்கு 'கேள்வன்' என்ற சொல் தெரிந்திருக்கும். தாமரையாள் கேள்வன், திருமகள் கேள்வன், பூமகள் கேள்வன், அலராள் கேள்வன் என்றெல்லாம் திருமகளின் தலைவனான திருமாலைப் போற்றி வரும் பாசுர வரிகள்.

கேள்வன் என்றால் என்ன? அதன் அடிப்படைச் சொல் எது? அதனுடன் தொடர்புடைய சொற்கள் எவை?

தேடினேன் இன்று.

'கேண்மை' என்பது தான் இதன் அடிப்படைச் சொல் என்று தோன்றுகிறது.

நட்பு என்று பொருள். உறவு என்றும் சொல்லலாம்.

அதில் இருந்து வந்த இன்னொரு சொல் 'கேள்'. வினைச் சொல்லாய் வரும் போது 'கேட்பாய்' என்று பொருள் தரும் இச்சொல் பெயர்ச் சொல்லாய் அமையும் போது நட்பு, உறவு என்ற பொருள் கொள்கிறது.

அடுத்து வரும் சொற்கள் கேளன், கேளி. ஆமாம். தோழன் தோழி தான்.

யாதும் ஊரே! யாவரும் கேளிர்!

கேள்விப்பட்டிருப்பீர்களே...

கணியன் பூங்குன்றனாரின் சங்கப் பாடல்.

பலரும் சொற்பிழையாய் கேளீர் என்று எழுதுவார்கள். கேளிர் என்பது தான் சரி.

உறவினர் என்று பொருள்.

அப்படியென்றால் கேள்வன் என்றால் என்ன பொருள்?

உறவுகளில் நெருங்கிய உறவு! நட்பில் ஊறிய உறவு! கணவன்!

கேள்வன் என்றால் கணவன், தலைவன் என்ற பொருளை மட்டும் சொல்லிச் சென்றுவிடுகிறார்கள்.


ஆனால் அதை விட நண்பன் என்ற பொருள் இன்னும் நெருக்கத்தைத் தருகிறது போல் தோன்றுகிறது. என்ன சொல்கிறீர்கள்?