Tuesday, May 28, 2013

பெரியாழ்வார் என்று அழைப்பது ஏன்?

ஆசார்யன்: கேசவா. உனக்கு ஏதோ சந்தேகம்; கேட்கவேண்டும் என்று சொன்னாயே. என்ன சந்தேகம்?

சிஷ்யன்: அடியேன். நீங்கள் நேற்றுவரை பெரியாழ்வாரின் திவ்ய சரித்திரத்தைச் சொன்னீர்கள். அதில் தான் எனக்கு ஒரு சந்தேகம். ஆழ்வார்கள் பதின்மர் இருக்கும்போது விஷ்ணுசித்தரை மட்டும் பெரியாழ்வார் என்பது ஏன்?

ஆசார்யன்: நல்ல கேள்வி கேட்டாய் கேசவா. பெரியாழ்வார் என்று பட்டர்பிரானை அழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. ஒவ்வொன்றாய் சொல்கிறேன். கவனத்துடன் கேள்.

இவர் விஷ்ணுவிடம் எப்போதும் தன் சித்தத்தை வைத்திருந்த படியாலும் விஷ்ணுவின் சித்தம் இவர் மேல் இருந்த படியாலும் இவருக்கு விஷ்ணுசித்தன் என்று பெயர்.

எல்லாருக்கும் எம்பெருமான் ரக்ஷகன். அவனே எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவன். அப்படிப்பட்ட இறைவனுக்கே தீயவர் கண்பட்டு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று பதறி அவனைக் காக்கும் பொறுப்பை தன்னில் ஏற்றுக்கொண்டதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எல்லாம், தன்னை அவன் காக்கவேண்டும் என்று எண்ணியிருக்க, இவர் யசோதையின் நிலையடைந்து கண்ணனை தாலாட்டி சீராட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் 'தான்' என்னும் எண்ணத்தைக் கொஞ்சமாகவேனும் கொண்டிருந்தனர்.
'வையம் தகளியாய் வார்கடலே நெய்யாக...சூட்டினேன் சொல்மாலை', 'அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக...ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத் தமிழ் புரிந்த நான்', 'திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன்...என்னாழி வண்ணன் பால் இன்று' என்றார்கள் முதலாழ்வார்களான பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும்.

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும் உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகலொன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


என்றார் நம்மாழ்வாரும். இப்படி இவர்கள் 'நான்' என்ற எண்ணம் கொஞ்சமாவது கொண்டிருந்தபடியால் இவர்களை சிறந்தவராகச் சொல்லமுடியவில்லைபோலும். விஷ்ணுசித்தரோ 'பல்லாண்டு பல்லாண்டு' என்று பாடியவர். அப்படி பல்லாண்டு பாடுவது மற்ற ஆழ்வார்களுக்கு எப்போதோ ஏற்படும் உணர்வு. ஆனால் இவருக்கோ அதுவே இயற்கை. அதனால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர். அப்படியின்றி இவரோ அதே திருமேனி அழகைக் கண்டவுடன் அவனைப் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்திப்பாட ஆரம்பித்துவிட்டார். அந்தப் பல்லாண்டு பாடுவதன் பலனைக் கூறும்போது கூட

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பிய சொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே


என்று என்றும் பரமனைச் சூழ்ந்திருந்து பல்லாண்டு பாடி ஏத்துவதே பல்லாண்டு பாடுவதன் பயன்; மற்றொன்றில்லை என்று திடமாய்க் கூறியவர். தன் சுகத்தை எதிர்பார்த்தாரில்லை. அதனால் இவர் பெரியாழ்வார்.

அது மட்டும் இன்றி எம்பெருமானின் கட்டளைப்படி கோதை நாச்சியார் தான் சூடிக் கொடுத்த மாலையை பெருமாளுக்குச் சமர்ப்பித்து இறைவனருள் பெற்றவர். கோதை நாச்சியாரின் தந்தையாகவும் ஆசார்யனாகவும் இருக்கும் பேறு பெற்றவர். அதனால் அழகிய மணவாளனையே மருமகனாகப் பெறும் பேறு பெற்றவர். அழகிய மணவாளனோ பெரிய பெருமாள். அவனை மருமகனாகப் பெற்ற இவரோ பெரியாழ்வார்.

(2005ல் எழுதியதன் மறு பதிவு)

6 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

36 comments:

G.Ragavan said...
பெரியாழ்வாரைப் பற்றி இவ்வளவு இருக்கின்றதா! அருமையாகச் சொன்னீர்கள். நிறைய தெரிந்து கொண்டேன். அருமையான பதிவு குமரன்.
December 12, 2005 6:03 AM
தேசிகன் said...
குமரன்,

இந்த 'நான்' கருத்துக்கு நான் உடன்படமாட்டேன். நான் படித்த/கேட்ட செய்தி - பெருமாளுக்கே பல்லாண்டு பாடியதால் இவர் 'பெரியாழ்வார்' என்று அழைக்கப்படுகிறார். இன்னும் கொஞ்சம் ரிசர்ச் செய்து பார்க்கிறேன்.
December 12, 2005 6:03 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
I agree with you 100% on NAAN of azhvars.what an amount of research u have done on this.That is why u took two days leave. TRC
December 12, 2005 7:21 AM
ரங்கா - Ranga said...
தங்களின் 'நான்' பற்றிய கருத்தை முதல் முறையாகக் கேள்விப்படுகிறேன். வித்தியாசமான, அதே சமயத்தில் அர்த்தமுள்ள கருத்து.

வேதத்தின் பொருளை ஆழ்ந்து உணர்ந்து எழுதியதால் 'ஆழ்வார்கள்' என அழைக்கப்பட்டனர் என்று சிறு வயதில் உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். வலைத்தளத்திலும் இதைப் பற்றி படித்திருக்கிறேன். விபரங்களுக்கு இங்கே!

அதிகமான பாசுரங்களை எழுதாவிட்டாலும், மிகவும் ஆழ்ந்து எழுதியதால் பெரியாழ்வார் என்றழைக்கப்பட்டாரோ?
December 12, 2005 12:48 PM
Anonymous said...
Excellent Karuthukkal. Wanted to give a '+', inga sila network problem, so panna mudiyalai.

Thanks,
Kumaresh
December 12, 2005 3:00 PM
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி இராகவன்.
December 13, 2005 4:32 AM
குமரன் (Kumaran) said...
தேசிகன். ஆழ்வார்களின் 'நான்' என்பதைப் பற்றிய கருத்தைப் பற்றி நீங்கள் செய்யும் ஆய்வின் முடிவை கட்டாயம் இங்கே தெரியப்படுத்துவீர்கள் என்று எண்ணுகிறேன். அதே நேரத்தில் இந்தக்கருத்து மற்ற ஆழ்வார்களைக் குறைத்துக் கூற விழையவில்லை; பெரியாழ்வாரின் பெருமையைக் கூறுவதற்காகச் சொன்ன உயர்வு நவிற்சி என்பதையும் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். இந்தக் கருத்தை நான் ஏதோ ஒரு ஆசார்யரின் பிரசங்கத்திலோ எழுத்திலோ படித்ததாய் ஞாபகம். சொந்தக் கருத்து இல்லை; அதனால் சம்பிரதாயத்துக்கு இயைந்ததாய் தான் இந்தக் கருத்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.

கோதை நாச்சியாரைப் பற்றி இனி எழுதும் போது, நாயகி பாவத்தின் பெருமையைக் கூறி மற்ற ஆழ்வார்கள் அதனை ஏறிட்டுக்கொள்ள வேண்டி இருக்க, இவளுக்கு அது தாழ்நிலத்தில் சேரும் தண்ணீரைப் போல் இயற்கையாய் வந்தது என்ற சம்பிரதாயக் கருத்தைக் கூறப்போகிறேன். அப்போது இந்த 'நான்' என்னும் எண்ணம் கோதைப் பிராட்டியிடம் வெகு தூக்கலாய் இருப்பதையும் ஸ்வப்ரயோஜனம் முதன்மையாய் நாச்சியார் திருமொழியில் தென்படுவதையும் கூறுவதில்லை. ஏனெனில் அது சொல்லப் புகுந்த கருத்துக்கு உடன்பாடில்லை.
December 13, 2005 4:43 AM
குமரன் (Kumaran) said...
அன்பு TRC. இந்தப் பதிவை எழுத அதிக சிரமம் எடுத்துக்கொள்ளவில்லை. பெரியோர்கள் ஏற்கனவே இந்த ஆய்வுகளை எல்லாம் செய்துவிட்டார்கள். அவர்கள் சொன்னதையும் எழுதியதையும் வைத்துத் தான் இந்த பதிவை இட்டேன். உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி.
December 13, 2005 4:45 AM
குமரன் (Kumaran) said...
அன்பு ரங்கா. பாராட்டுகளுக்கு நன்றி. ஆழ்வார்களைப் பற்றிய வலைப்பக்கத்தின் சுட்டியைக் கொடுத்ததற்கு நன்றி.

//அதிகமான பாசுரங்களை எழுதாவிட்டாலும், மிகவும் ஆழ்ந்து எழுதியதால் பெரியாழ்வார் என்றழைக்கப்பட்டாரோ?//

நல்ல விளக்கம். நீங்கள் ஏற்கனவே சொன்ன மாதிரி பெரியாழ்வார் திருமொழி பிரணவத்தின் விளக்கம். பிரணவமாம் ஓம்காரம் சின்ன சொல்லாக இருந்தாலும் மிக ஆழ்ந்த பொருள் உடையது. அதுபோல் தான் பெரியாழ்வார் திருமொழியும்.
December 13, 2005 4:49 AM
குமரன் (Kumaran) said...
நன்றி குமரேஷ். அடுத்த முறை ஓட்டளிப்பதில் ஏதாவது பிரச்சனை இருந்தால் refresh செய்து பார்க்கவும். முழுமையாக refresh ஆனபின்னால் ஓட்டளிக்க முடியும்.
December 13, 2005 4:50 AM

குமரன் (Kumaran) said...

Comments from original post:

தேசிகன் said...
குமரன்,
// அதே நேரத்தில் இந்தக்கருத்து மற்ற ஆழ்வார்களைக் குறைத்துக் கூற விழையவில்லை;//

நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சொன்ன கருத்து கூட சரியாக இருக்கலாம். நான் இன்னும் கொஞ்சம் படித்து விட்டு பிறகு வருகிறேன்.
December 13, 2005 5:43 AM
சிவா said...
பெரியாழ்வார் விளக்கத்துக்கு நன்றி குமரன்.
December 13, 2005 6:34 AM
ஞானவெட்டியான் said...
>>மற்ற ஆழ்வார்கள் எல்லாம், தன்னை அவன் காக்கவேண்டும் என்று எண்ணியிருக்க, இவர் யசோதையின் நிலையடைந்து கண்ணனை தாலாட்டி சீராட்டிக் காக்கும் பொறுப்பை ஏற்றதால் இவர் பெரியாழ்வார்.

மற்ற ஆழ்வார்கள் எல்லோரும் கண்ணனின் அருளைக் கருதி, எதிர்பார்ப்புகளுடன் துதித்தனர். ஆனால், பெரியாழ்வாரோ, கண்ணனைக் கண்ணுக்குள் வைத்துக் காத்து, தாயின் நிலையில் இருந்து அன்பு செலுத்தினார். தாயின் அன்புக்கும் அரவணைப்புக்கும் ஈடுண்டோ?
அதனால் பெரியாழ்வார் என அழைக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?
December 14, 2005 6:36 AM
குமரன் (Kumaran) said...
உண்மை ஞானவெட்டியான் ஐயா.
December 14, 2005 1:09 PM
நாமக்கல் சிபி said...
//வெறும்(!?) குமரன்! இன்றுதான் விஷ்னு சித்தர் வரலாறு அனைத்தும் படித்தேன்(தங்கள் புண்ணியத்தில்)

"பல்லாண்டு பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு, பல கோடி நூறாயிரம்.." என்று சங்கு சக்கரத்தைத் தோள்களிலும், அன்னை மஹாலக்ஷுமியை மார்பினிலும் தாங்கி காட்சி தரும் எம் பெருமான் திருமேனி மீது கண் பட்டுவிடலாகாதே என்று பல்லாண்டு பாடும் விஷ்னு சித்தரின் தாயுள்ளம் கண்டு நெஞ்சம் நெகிழத்தான் செய்கிறது குமரன்.
February 10, 2006 8:57 AM
குமரன் (Kumaran) said...
விஷ்ணு சித்தர் வரலாறு முழுக்கப் படித்ததற்கு மிக்க நன்றி சிபி. உங்களைப் போல் மெகாத் தொடர் எழுத நான் செய்த முயற்சியே இது. நன்றாய் வந்திருக்கிறதா?
February 10, 2006 9:33 AM
நாமக்கல் சிபி said...
//நன்றாய் வந்திருக்கிறதா? //

என்ன (வெறும்!?) குமரன் இப்படிக் கேட்டுப்புட்டீங்க? மிகவும் நன்றாய் வந்திருக்கிறது. இன்னும் இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம் தங்களிடமிருந்து.
February 10, 2006 9:36 AM
நாமக்கல் சிபி said...
//நன்றாய் வந்திருக்கிறதா? //

என்ன (வெறும்!?) குமரன் இப்படிக் கேட்டுப்புட்டீங்க? மிகவும் நன்றாய் வந்திருக்கிறது. இன்னும் இது போல் நிறைய எதிர்பார்க்கிறோம் தங்களிடமிருந்து.

கோதை தமிழ் நாளைதான் படிக்க வேண்டும்.
February 10, 2006 9:36 AM
குமரன் (Kumaran) said...
நன்றாய் வந்திருக்கிறதா? நன்றி சிபி. இறையருள் இருந்தால் நிச்சயம் இன்னும் நிறைய எழுத முடியும்.

கோதை தமிழை நாளைக்குப் படிங்க. மெதுவாப் படிங்க. அவசரமில்லை.
February 10, 2006 9:39 AM
நாமக்கல் சிபி said...
//இறையருள் இருந்தால் நிச்சயம் இன்னும் நிறைய எழுத முடியும்//

இறையருள் நிச்சயம் இருக்கிறது குமரன்.
இல்லையென்றால் தங்களுக்கு இத்தொண்டு செய்யும் பாக்கியம் இருந்திருக்குமா என்ன? எங்களுக்கும் அவற்றைப் படுக்கும் வாய்ப்பு வாய்த்திருக்குமா?

(அது சரி, என் மின்னஞ்சலுக்கு தாங்கள் இன்னும் பதிலுரைக்க வில்லையே?)
February 10, 2006 9:44 AM
குமரன் (Kumaran) said...
சிபி. நீங்கள் என் gmail idக்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் வீட்டிற்கு போன பிறகு தான் நான் படிக்க முடியும். படித்த பின் பதில் சொல்கிறேன்.
February 10, 2006 1:35 PM
தமிழ் குழந்தை said...
தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.
May 05, 2006 3:11 AM
குமரன் (Kumaran) said...
நன்றி தமிழ்க்குழந்தை
May 06, 2006 4:31 PM

குமரன் (Kumaran) said...

Comments from original post:


கீதா சாம்பசிவம் said...
நீங்கள் எழுதும் எழுத்தும், படிக்கும் படிப்பும் பின்னூட்டம் இடக்கூடப் பயமாக இருக்கிறது. இத்தனை நாள் போல சும்மா வந்து பார்த்துவிட்டுத் தான் போகவேண்டும்.
May 07, 2006 5:21 AM
மலைநாடான் said...
அருமை குமரன்!
'நான்' குறித்த வெளிப்படுத்தல் மிக அருமை. பாராட்டுக்கள்
May 07, 2006 3:45 PM
குமரன் (Kumaran) said...
கீதா அம்மா. யாராயிருந்தாலும் கற்றது கைம்மண்ணளவு. தயங்காமல் பின்னூட்டம் இடுங்கள். நீங்கள் சொல்லாவிட்டால் நீங்கள் படித்தீர்களா இல்லையா என்று எனக்கு எப்படித் தெரியும்?
May 08, 2006 10:11 AM
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றி மலைநாடான்.
May 08, 2006 10:11 AM
வல்லிசிம்ஹன் said...
குமரன்,
பெரியாழ்வார் இன்னோரு தடவைப் பெருமாளை ஈன்றாரோ
என்று,

நினைத்ததும் உண்டு.அவ்வளவு தாய்ப் பாசம்.

ஒவ்வொரு தரமும் நெகிழ வைத்துவிடுகிறீர்கள்.நன்றி. வாழ்த்துக்கள்.
October 09, 2006 8:07 PM
குமரன் (Kumaran) said...
இந்தப் பதிவு வெகு நாட்களுக்கு முன் எழுதியது அம்மா. உங்கள் அன்பான சொற்களுக்கு மிக்க நன்றி.
October 10, 2006 6:27 AM
குமரன் (Kumaran) said...
அன்பின் குமரன்:

நாளையிலிருந்து இரண்டு வாரங்கள் பிரயாணம். பின்னூட்டம் செய்ய
முடியவில்லை. எனவே என் சார்பாக இதைப் போட்டுவிடுங்கள்:

பெரியாழ்வார் ஏன் இப்பட்டத்தைப் பெற்றார் என்பது சுவாரசியமான கேள்வியே.

1. எல்லோரும் நாயகி-நாயக பாவத்தில் உறவாடிக் கொண்டிருக்கும் போது, இவர்
தாய்-சேய் உறவு கொண்டார். இறைவனுக்கே தாய் என்றால் அவர் 'பெரிய
ஆழ்வார்தான்'!

2. பெரிய பெருமாளான ரங்கராஜனுக்கு பெண் கொடுத்து மாமனார் வேறு
ஆகிவிட்டார். அதனால் பெரியாழ்வார்.

3. வைணவ சம்பிரதாயத்தில் பாகவத்திற்கு சிறப்புண்டு. தமிழில் பாகவதம்
பாடிய பெருந்தகை. அதனால் 'பெரியாழ்வார்'.

4. தமிழ் இலக்கியத்திற்கு 'பிள்ளைத் தமிழ்' எனும் மரபைத் தந்தவர், அதனால்
பெரியாழ்வார்.

மற்றபடி, எல்லா ஆழ்வார்களும் மங்களா சாசனம் பாடியுள்ளனர். இவரும் பாடியுள்ளார்.

'நான்' எனும் கூறு நம்மாழ்வார் போன்ற ஞானிகளுக்கு இருந்த்து என்று
கூறுவது அபச்சாரம். அகந்தை என்பது துளிக்கூட இல்லாத புண்ணிய ஆத்மா அது.
எனவே அக்கூற்று சரியில்லை.

உண்மையில் உடலை விட்டு உயிர் பிரிகின்ற காலை, ஆத்மாவிற்கு இரண்டு
வாய்ப்புக்கள் கிடைக்கின்றன.

அ. நான் என்பது முற்றும் அழிந்து அந்த ஒன்று மட்டும் நிற்கும் நிலை. இது
கேவல மோட்சம்.

ஆ. நான் என்பது அழிந்த பின்பும் வைகுந்த வைபவத்திற்காக இட்டுக்கட்டிய
'நான்' ஒன்று உண்டு. அப்போதுதான் ஆன்மாவின் உண்மை நிலையான சேஷத்துவம்
அறியப்படுகிறது. எனவே நான் என்பது அவ்வளவு அசிங்கமான ஒன்றில்லை. "இத்தலை
உண்டு எனில்தானே, அத்தலைக்கு மங்களாசாசனம்" என்பது வைணவப்பேச்சு!

சோகம்..தாசோகம் என்ற கேள்வி வரும் போது தாசோகம் என்று தெரிவு செய்பவனே
வைணவன். அப்போது 'நான்' இல்லை, ஆனால், 'அடியேன்' உண்டு.

கண்ணன்

---------------------------------

நா. கண்ணன் ஐயா தனிமடலில் அனுப்பியது.
October 13, 2006 2:48 AM
Tamil Paiyan said...
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
July 05, 2008 11:14 AM
shri ramesh sadasivam said...
இந்த தளத்தின் எல்லா பதிவுகலையும் ஓரே மூச்சில் படித்து விட்டேன். பிரம்மாதமான பக்தி பிரவாகம். ஆழ்வார்கள் நாயன்மார்கள் கதைகளை எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது. மஹா விஷ்ணு ஊர்வலத்தின் போது காட்சி தந்த அழகை மிகவும் ரசித்தேன். தங்கள் வருணனை பிரம்மாதம். வாழ்த்துக்கள் குமரன். ஓம் நமோ நாராயணாய
September 19, 2008 4:59 AM
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி திரு. ரமேஷ் சதாசிவம் ஐயா.
September 19, 2008 5:43 AM
In Love With Krishna said...
This is the first time i came across your blog!
Wonderful!!!
June 24, 2010 5:05 AM
குமரன் (Kumaran) said...
Thanks. Please visit my other blogs too. You would like at least some of them.
July 01, 2010 9:19 AM
mrknaughty said...
நல்ல இருக்கு
thanks
mrknaughty
October 03, 2010 6:56 AM

Kannabiran, Ravi Shankar (KRS) said...

பதிவுலகின் பொற்காலப் பதிவர், கூடல் குமரனை வணங்கிச், சிற்சில சிறுசொல் சொல்லப் போந்தேன்..

"ஏழை ஏதலன் கீழ்மகன்" என்று என்னை எண்ணாது, "கருத்தை" மட்டுமே கொள்ள வேண்டுகிறேன்
----

//மற்ற ஆழ்வார்கள் 'தான்' என்னும் எண்ணத்தைக் கொஞ்சமாகவேனும் கொண்டிருந்தனர்//

முருகா... இதென்ன இப்படிச் சொல்லி விட்டீர்கள்?

அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம் அடியார் அடியோங்களே
- என்றே வாழ்ந்து முடித்த, 32 வயசு நாயகி பாவப் பையன் (மாறன்), கொஞ்சமாகவேனும் "தான்" ஏறி இருந்தானா?

அப்படிப் பார்த்தால், இதே பெரியாழ்வாரின் பல்லாண்டு பாசுரத்திலேயே "நான்" வருகிறதே?

[செல்வனைப் போலத் திருமாலே, ***நானும்*** உனக்குப் பழவடியேன்]

-------

//மற்ற ஆழ்வார்கள் எம்பெருமான் திருமேனி அழகைக் கண்டு, தம்மில் பெண்மையை ஏறிட்டுக்கொண்டு, அதன் மூலம் தாங்கள் சுகம் பெற விழைந்தனர்//

பெண்மையை ஏறிட்டுக் கொண்ட ஆழ்வார்கள் = ரெண்டே பேரு தான்
1) நம்மாழ்வார் = பராங்குச நாயகி
2) திருமங்கை = பரகால நாயகி

மற்ர ஆழ்வார்கள் எவரும் இப்படிச் "சுகம் பெற" விழையவில்லையே!

படிக்கையில், சற்றே துணுக்குற்றேன்:(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//அவனே எல்லா உலகங்களையும் உயிர்களையும் காப்பவன்.

அப்படிப்பட்ட இறைவனுக்கே தீயவர் கண்பட்டு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று பதறி அவனைக் காக்கும் பொறுப்பை//

இது ஒன்று தான், "பெரிய ஆழ்வார்" என்ற பேரைப் பெற்றுத் தந்தது; வேறு அல்ல!

மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தானன்றி – "பொங்கும்
பரிவாலே" வில்லிபுத்தூர் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்;
(உபதேச ரத்தின மாலை)

இந்த வெண்பா, சொல்லி விடும், ஏன் பெரிய ஆழ்வார் என்று இவர் மட்டும் பெயர் பெற்றார் என்று;
* மற்ற ஆழ்வார்கள் எல்லாருக்கும் அவன் பால் "ஆர்வம்"
* இவருக்கு மட்டுமே "பரிவு", பொங்கும் பரிவு

மற்றவர்களுக்கு "ஆர்வம்" மட்டுமே! அவனே அவனே என்கிற ஆர்வம்!

ஆனால், அவன் நம்மைக் காப்பாற்றுவது போய்,
நாம் அவனைக் காப்பாற்ற வேணும்-ன்னு அவங்களுக்குத் தோனலை!

** அவனை "எம்-பெருமானாகப்" பார்த்தார்கள்;
** "எம்-சிறுமானாகப்" பார்க்கவில்லை;

பெரியாழ்வார் மட்டுமே "எம் சிறுமானாகப்" பார்த்தார்;
கண்ணன் பிறந்த தேதியைப் பாட்டில் எழுதினால், கம்சன் கண்டு பிடிச்சிருவானோ? -ன்னு பயந்து, date of birth மாற்றிக் குடுத்து, "பொய்யும்" சொல்லத் துணிந்த ஆழ்வார்;

"அத்தத்தின் பத்தாம் நாள் வந்து தோன்றிய அச்சுதன்" -ன்னு பாடினார்

அஸ்த நட்சத்திரத்தின் பத்து
= முன் வரிசையில் கூட்டினா, திருவோணம்
= பின் வரிசையில் கழிச்சா, ரோகிணி

ஆனாலும், "திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே" -ன்னு தொடர்ந்து "நைசாக" மழுப்பினார்;
இப்படி Date of Birth குழப்பம் செய்தல், பள்ளிக் கல்விச் சட்டப்படி தவறல்லவா?:)
அதற்கும் துணிந்த ஆழ்வார்;அவனைக் காப்பது ஒன்றே குறிக்கோள்!

இந்தப் "பொங்கும் பரிவாலே" தான் = பெரீய்ய்ய்ய்ய ஆழ்வார்
(தான் அற்று இருந்ததால் அல்ல)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//பெரிய பெருமாள். அவனை மருமகனாகப் பெற்ற இவரோ பெரியாழ்வார்//

ஆம்!

பொதுவாக, திருவரங்கத்தை ஒட்டிய எல்லாமே "பெரிய" என்ற அடைமொழியோடு வரும்...

பெரிய பெருமாள்
பெரிய பிராட்டி
பெரிய கோயில்
பெரிய திருவடி (கருடன்)
பெரிய அவசரம் (நிவேதனம்)
பெரிய ஜீயர்

அந்த வரிசையில்...
* பெரிய திருவடியின் அம்சமான இவரும் = பெரிய ஆழ்வார்
* பெரிய பெருமாளுக்கே பெண்ணை தாரை வார்த்துக் கொடுத்தவர் ஆதலாலே = பெரிய ஆழ்வார்
-----

[பெரிய பெருமாளுக்கே தாரை வார்த்துக் குடுத்த இன்னொருவனும் மகா(பெரிய) பலி]