Friday, May 31, 2013

திருப்பாவை அறிமுகம் - 2

பேரொளி வீசும் ஸ்ரீவைகுண்டம். சூரிய சந்திர அக்னிகளின் ஒளி தேவையில்லாத சுயம்பிரகாசமான திவ்யதேசம். பரவாஸுதேவனான பகவான் நித்யசூரிகளாலும் முக்தர்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டு தன் தேவியர்களான லக்ஷ்மிதேவி, பூதேவி, நீளாதேவி ஆகியோருடன் ஆதிசேஷன் என்னும் திவ்யாசனத்தில் வீற்றிருக்கும் திருமாமணிமண்டபம்.

எங்கும் இன்பம் ததும்பும் இந்த சூழலில் இறைவன் முகத்தில் மட்டும் ஏதோ ஒரு சுணக்கம். திருத்தேவியர்களுக்கு அது ஆச்சரியமாய் இருந்தது.

பெரிய பிராட்டி லக்ஷ்மிதேவி: சுவாமி! தங்கள் திருமுகத்தில் ஏதோ ஒரு கவலை இருப்பது போல் தோன்றுகிறதே. என்னவென்று அடியேனுக்குச் சொல்லலாமா?

பெருமாள்: தேவி. இந்த மனிதர்கள் நாம் அவர்களுக்கு அருளிய சுதந்திரத்தைக் கொண்டு நல்வழியை அடையாமல் தீயவழியிலேயே சென்று துன்பமுறுகிறார்களே. அதைக்கண்டு தான் எனக்கு வருத்தம். எல்லாம் வல்ல நம் அருளைக்கொண்டு அவர்கள் எல்லாரையும் நல்லவழியில் திருப்பிவிட முடியும். ஆனால் அது அவர்களுக்கு நாம் அருளிய சுதந்திரத்துக்கு எதிராக முடியுமே. அவர்களாக நல்வழியில் திரும்பினால் தானே நன்றாய் இருக்கும்.

பூதேவி: சுவாமி. சரியாகச் சொன்னீர்கள். இதற்கு என்ன தான் வழி?

வாஸுதேவன்: தேவி. நானும் அதைத்தான் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். நாம் நால்வரும் கூடி ஆலோசித்தால் ஏதாவது ஒரு நல்ல வழி தென்படலாம்.

நான் இதுவரை கணக்கற்ற அவதாரங்கள் எடுத்து விட்டேன். அந்த அவதாரங்களின் முக்கிய நோக்கங்கள் தீயவர்களை அழிப்பதும், நல்லவர்களைக் காப்பதும், தருமத்தை நிலைநாட்டுவதும் ஆக இருந்தாலும், கிருஷ்ணாவதாரத்தில் அருச்சுனனை முன்னிட்டு கீதையையும் உபதேசித்துவிட்டேன். அதில் மக்கள் நற்கதி அடைய உள்ள பல வழிகளையும் சொல்லியிருக்கிறேன். ஆனாலும் அவர்கள் கேட்டமாதிரி தெரியவில்லை.

ஒருவேளை நான் கடவுளாக வந்து சொல்வதால் அவர்களுக்கு என் பேச்சினை கேட்டு நடக்க கடினமாக உள்ளதோ என்று எண்ணி எனக்கு திவ்யாபரணங்களாகவும் திவ்யாயுதங்களாகவும் இருந்து சேவை செய்யும் நித்யர்களையும் ஆழ்வார்களாக பிறக்கவைத்தேன். அவர்களும் மண்ணுலகில் மனிதர்களாகப் பிறந்து இனிய தமிழ்ப் பாடல்களால் மனமுருகப் பாடி நல்வழி காட்டினர். அந்த பக்திபூர்வமான நாலாயிர திவ்ய ப்ரபந்தங்களைக் கேட்டு சிலர் நல்வழி சேர்ந்தனர். ஆனால் பெரும்பான்மை மக்கள் இன்னும் 'தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் இவையுண்டு தானுண்டு' என்று தான் இருக்கிறார்கள்.

எல்லாரும் பின்பற்றும் படி நல்வழியை எப்படி காண்பிப்பது? நான் மீண்டும் அவதாரம் எடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

நீளா தேவி: சுவாமி. நீங்கள் அருளிய சுதந்திரத்தால் நம் குழந்தைகளாகிய உலக மக்களுக்கு ஒரு குணம் வளர்ந்து உள்ளது. நீங்களே மனிதனாகப் பிறந்து 'நானே கடவுள். என்னை நன்றாய் சரணடை' என்று கூறினால், 'மனிதன் எப்படி கடவுளாக முடியும். அது சாத்தியம் இல்லை. நீர் என்னை ஏமாற்றுகிறீர்' என்று சொல்லி உங்கள் பேச்சைக் கேட்கமாட்டார்கள். நீங்களும் தலைகீழாக நின்றாலும் அவர்களை நம்பவைப்பது குதிரைக்கொம்பு. நீங்கள் கீதையில் எங்கு எடுத்தாலும் 'என்னையே வணங்கு. என்னையே சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களிலும் இருந்து கடைத்தேற்றுவேன்' என்று தான் கூறியிருக்கிறீர்கள். அது உண்மைதான் என்றாலும் அது மனித இயல்பிற்கு மாற்றாக இருப்பதால் 'எப்படி இந்த இடையன், இடைப்பெண்களின் காதலில் திளைத்தவன் கடவுளாக முடியும்' என்றெண்ணி இந்த மக்கள் கீதையில் சொன்னதை கேட்பதில்லை.
ஸ்ரீதேவி: நீளா சொன்னது உண்மைதான் சுவாமி. மக்கள் குணம் அப்படி தான் இருக்கிறது. ஆழ்வார்கள் மனிதர்களாக இருந்து 'இறைவன் இவனே. இவனிடம் இப்படி தான் பக்தி கொண்டு வழிபடவேண்டும்' என்று வாழ்ந்து காட்டினர். அதனால் அவர்கள் கொஞ்சமாவது மக்களை நல்வழியில் திருப்புவதில் வெற்றி பெற்றார்கள்.

நாராயணன்: அப்படி என்றால் நான் அவதாரம் எடுப்பதைவிட இன்னொரு ஆழ்வார் பிறப்பது தான் சரி என்று சொல்கிறீர்களா?

மண்மகள்: ஆமாம் சுவாமி. அது தான் சரி. ஆனால் இது வரை ஆண்கள் தான் ஆழ்வார்களாகப் பிறந்துள்ளார்கள். என்ன தான் தந்தை நல்வழியில் நடந்து காண்பித்தாலும் குழந்தைகள் தாய் காட்டிய வழியை தான் எளிதாகப் பின்பற்றுவர். ஒவ்வொருவரும் தமக்குரிய நல்ல குணங்களைப் பட்டியலிட்டு அதனை தாங்கள் எங்கு கற்று கொண்டோம் என்று பார்த்தால் அது தாய்மார்களிடமிருந்தோ, பாட்டிமார்களிடமிருந்தோ, அத்தைமார்களிடமிருந்தோ, தமக்கைகளிடமிருந்தோ தான் கற்றிருப்பதைக் காணலாம். அதனால் இப்போது பிறக்கப் போகும் ஆழ்வார் ஒரு பெண்ணாக இருந்தால் அது சிறப்பாய் இருக்கும்.

கேஸவன்: ஆஹா. அற்புதமான யோசனை. அப்படியே செய்யலாம். யாரை பெண் ஆழ்வாராகப் பிறக்க சொல்லலாம் என்று ஏதாவது யோசனை இருக்கிறதா? அப்படி பிறப்பவர் வெறும் பெண்ணாக மட்டும் இல்லாமல் சர்வ லோகத்துக்கும் தாயாகவும் இருந்தால் இன்னும் கருணையுடன் நல்வழியைக் காட்ட முடியும் அல்லவா? உங்களில் யாராவது ஒருவர் பிறந்தால் என்ன?

திருமகள்: சுவாமி. எங்கள் மூவரில் ஒருவர் பிறப்பது தான் சரி. நானோ 'அகலகில்லேன் இறையும்' என்று உங்களுடனேயே இருப்பவள். நீங்கள் அவதாரம் எடுக்கும் போதெல்லாம் நானும் உங்களைத் தொடர்ந்து சீதையாகவும் ருக்மணியாகவும் அவதாரம் செய்வேன். நீங்கள் இப்போது அவதாரம் செய்யப் போவதில்லையாதலால் நான் உங்களைப் பிரிந்து அவதரிப்பது என்பது ஆகாது.

மாதவன்: ஆமாம் லக்ஷ்மி. நீ சொல்வது சரிதான். நீ என்னுடன் எப்போதும் இருப்பதால் தானே என்னை மாதவன் என்றும் திருமாலவன் என்றும் 
ஸ்ரீமந் நாராயணன் என்றும் எல்லோரும் வணங்குகிறார்கள்.

அலைமகள்: சுவாமி. நம் குழந்தைகள் உம்மை சரணடையும் போது அவர்கள் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நீங்கள் அவர்களுக்கு அருள் செய்வது வழக்கம். அப்படி அவர்கள் செய்த பாவங்களைப் பார்த்து நீங்கள் அவர்களுக்கு அருள் செய்யாமல் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது, உங்கள் கருணையின் வடிவமான நான் உங்கள் அருகில் இருந்து 'அவர்கள் நம் குழந்தைகள் அல்லவா. அவர்கள் எத்தனைதான் குற்றங்கள் செய்திருந்தாலும் அவர்களை மன்னித்து ஏற்று கொள்வது தான் பெற்றோர்களாகிய நமக்கு பெருமை' என்று சிபாரிசு செய்வது வழக்கம். அப்போது அந்தப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் மண்மகளோ 'என்ன? குற்றம் செய்தனரா? இல்லையே. நம் குழந்தைகள் எப்படி குற்றம் செய்வார்கள்?' என்று சொல்லும் அளவுக்கு பொறுமை உடையவள். நான் 'குற்றம் செய்திருந்தாலும் மன்னித்து விடுங்கள்' என்று சொல்லும் போது அவள் 'குற்றமே செய்யவில்லை. பின் எப்படி மன்னிப்பது?' என்பாள். அதனால் தானே அவளை பொறுமையின் சிகரம் பூமாதேவி என்று சொல்லுகிறார்கள். அதனால் மண்மகள் மண்ணில் மானிட வடிவம் தாங்கி தாயன்புடன் மக்களுக்கு நல்வழி காட்டுவதே நல்லது.

நிலமகள்: ஆம் சுவாமி. நீங்கள் கட்டளையிட்டால் நான் பூமியில் அவதரிக்கிறேன்.

அச்யுதன்: நல்லது பூமா. நம் பக்தனாகிய விஷ்ணுசித்தனுக்கு திருமகளாகப் பிறந்து மக்களுக்கு நல்வழி காட்டி பின் திருவரங்கத்தில் என்னை அடைவாய்.


(2005ல் எழுதியதன் மறுபதிவு)

6 comments:

குமரன் (Kumaran) said...

Comments from the original post:

16 comments: தேசிகன் said...
குமரன்,

முடிந்தால் இதை படித்துப்பாருங்கள் போன மார்கழி ஏழுதியது.

http://www.desikan.com/blogcms/wiki/index.php?id=thiruppavai

November 26, 2005 12:28 AM
G.Ragavan said...
ஆகா! அட்டகாசம் குமரன். தொடக்கமே பிரம்மாண்டம். இந்த பிரம்மாண்டத்தையும் நல்ல நடையையும் உங்களோடு போட்டி போடத் துணிந்தாரே, அவரிடம் எடுத்துச் சொல்லி போட்டியிலிருந்து விலகச் சொல்ல வேண்டியதுதான்.

November 26, 2005 12:35 AM
குமரன் (Kumaran) said...
அன்பு தேசிகன். வருக வருக. உங்களை என் வலைப்பதிவுகளை படிக்கவைக்க எத்தனையோ முயற்சி செய்துள்ளேன். கடைசியில் கோதை தமிழ் தான் உங்களை இங்கே கூட்டிவந்துள்ளது :-) மிக்க மகிழ்ச்சி.

ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்து உங்கள் வலைப்பதிவுகளைப் படித்து வருபவன் நான். அதனால் போன வருடம் நீங்கள் எழுதிய திருப்பாவை தொடரையும் படித்துள்ளேன் :-) அந்தத் தொடரில் நீங்கள் போட்டுள்ள ஓவியங்களும் அருமை.

நேற்று இரவு தான் 'ச்ரீரங்கத்துக் கதைகள்' படிக்க ஆரம்பித்தேன். போன முறை மதுரைக்குச் சென்ற போது இந்த புத்தகத்தை வாங்கினேன். முன்னுரையில் சுஜாதா உங்களைப் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்து உங்களுக்கு ஒரு பின்னூட்டம் எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன். வந்து பார்த்தால் நீங்கள் இங்கு வந்து பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அந்த புத்தகத்தில் உள்ள உங்கள் ஓவியங்கள் நன்றாய் இருக்கின்றன.

உங்கள் திருப்பாவைத் தொடரில் நீங்கள் பாடலின் ஒலிவடிவத்துக்கும் சுட்டி கொடுத்துள்ளீர்கள். அதனால் உங்கள் பதிவின் சுட்டியை என் பதிவுகளில் கொடுக்கலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் அனுமதி தேவை.

November 26, 2005 6:51 AM
குமரன் (Kumaran) said...
போட்டியில் இருந்து அந்த செஞ்சொற்பொற்கொல்லன் விலகவேண்டியது இல்லை என்று சொல்லுங்கள் இராகவன். என் பதிவுகள் கொஞ்சம் தத்துவம் பேசும். அந்த போட்டியாளர் பதிவுகள் தமிழ் பேசும். இரண்டுமே தேவை. அதனால் போட்டியில் இருந்து விலகவேண்டாம் என்று கூறுங்கள். :-)

November 26, 2005 7:01 AM
தி. ரா. ச.(T.R.C.) said...
Dear Kumaran,
Avathara ragasiyathudan amarkalamaka arambiyhu uleerkal avatahara perumay partryum avatharikka seytha empurumanin perumayum patri padikka avalaga ullen.entha oru vishayathayum muzhu edupadudan ezhuthukireergal. enathu vendukolukku mathipalithathiruku nandri.TRC

November 27, 2005 12:18 AM
சிவா said...
குமரன்,
அமர்க்களமான ஆரம்பம். முன்னுரையை கதை உரையாடல் வடிவில் கொடுத்ததற்க்கு நன்றி. தொடருங்கள். படித்து இன்புற காத்திருக்கிறோம்.

November 27, 2005 5:26 AM
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றி TRC சார். கரும்பு தின்ன கூலியா? திருப்பாவை பற்றி காலம் காலமாய் பேசிக்கொண்டே இருக்கலாமே. ஆண்டாள் அவதார வைபவம் தொடரும் பதிவுகளில் வரும்.

November 27, 2005 2:42 PM
குமரன் (Kumaran) said...
பாராட்டுகளுக்கு நன்றி சிவா. முன்னொரு முறை திருப்பாவை பொருள் எழுத ஆரம்பித்த போது இந்தப் பதிவில் உள்ள விஷயம் ஒரே பத்தியில் சொல்லிவிட்டேன். இங்கு கதை/உரையாடல் வடியில் எழுத தூண்டுதல் உங்களிடம் இருந்து தான் வந்தது. நீங்கள் தானே எதையும் விளக்கத்தோடு நிறுத்தாமல் கதை வடிவில் சொல்லுங்கள்; அது நன்றாய் இருக்கிறது என்று எப்போதும் சொல்வீர்கள்.

ஆனால் அப்படி எழுதுவதால் இந்த முன்னுரையே பல பதிவுகள் வரும் என்று எண்ணுகிறேன். மார்கழி முடிவதற்குள் திருப்பாவை முதல் பாடலை பார்த்துவிடலாம் என்று எண்ணுகிறேன். திருமாலவன் கருணை எப்படி இருக்கிறதோ.

November 27, 2005 2:46 PM

குமரன் (Kumaran) said...

Natarajan said...
Dear Kumaran,

Mikka Nalla Paathivu. Thodarttum Ummathu Irrai Paani.

How come people vote -ve for this?I understand if they do not vote, but the -ve votes does not make sense at all. Hey, Arrivilligaal, ungal -ve vote endrum Irrai panniyey thadukaathu.

Veeney just like that sillarathannamag behave seyvathai thavirakavum.

Kumaran, neengal thodarungul. Ummaku Aaandavan thunnai Irrukiraan.

Anbudan,
Nata

November 27, 2005 9:29 PM
குமரன் (Kumaran) said...
நடராஜன், உங்கள் ஊக்குதலுக்கு நன்றி. என் எல்லாப் பதிவுகளுக்கும் எப்போதும் இரண்டு -ve ஓட்டுகள் இப்போதெல்லாம் விழுகின்றன. அவற்றைப் பற்றி நாம் கவலைப்படாமல் படிப்பவர்கள் எல்லாம் தங்களுக்குப் பிடித்திருந்தால் +ve ஓட்டு போட்டு விட்டால் அந்த -ve ஓட்டின் விளைவை சரியாக்கிவிடலாம் :-)

November 27, 2005 10:08 PM
G.Ragavan said...
// போட்டியில் இருந்து அந்த செஞ்சொற்பொற்கொல்லன் விலகவேண்டியது இல்லை என்று சொல்லுங்கள் இராகவன். என் பதிவுகள் கொஞ்சம் தத்துவம் பேசும். அந்த போட்டியாளர் பதிவுகள் தமிழ் பேசும். இரண்டுமே தேவை. அதனால் போட்டியில் இருந்து விலகவேண்டாம் என்று கூறுங்கள். :-) //

ஆகா! செஞ்சொற்பொற்கொல்லந்தான் பாவைக்கு விளக்கம் சொல்லப் போகிறான் என்றே முடிவு கட்டி விட்டீர்களா? சரி. உங்கள் விருப்பப்படியே ஆகட்டும். :-)

November 27, 2005 10:45 PM
இராமநாதன் said...
அட குமரன்,
புது பூவா? இன்னிக்குத்தான் பார்த்தேன். தொடருங்கள்.

November 27, 2005 11:14 PM
தேசிகன் said...
அன்புள்ள குமரன்,
முயற்சி செய்தீர்களா ? ஒரு ஈ-மெயில் போட்டிருந்தால் போதுமே. எப்படியோ கோதை தமிழ் கூட்டிவந்தது என்னமோ உண்மை. என் வலைப்பதிவு மற்றும் ஓவியங்கள் உங்களை கவர்ந்துள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். தாராளமாக சுட்டியை கொடுக்கலாம்.

November 28, 2005 12:19 AM
குமரன் (Kumaran) said...
செஞ்சொற்பொற்கொல்லரே. உங்கள் திருப்பாவைப் பதிவுகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

November 28, 2005 5:59 AM
குமரன் (Kumaran) said...
நன்றி இராமநாதன். கொஞ்ச நாளா உங்களைப் பார்க்க முடியலயேன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். வந்துட்டீங்க. ரொம்ப வேலையோ?

November 28, 2005 6:00 AM
குமரன் (Kumaran) said...
தேசிகன், உங்களிடமிருந்து இன்றாவது பதில் வரவில்லையென்றால் மின்னஞ்சல் அனுப்பலாம் என்று தான் எண்ணியிருந்தேன். சுட்டி கொடுக்க அனுமதித்தமைக்கு மிக்க நன்றி. தவறாமல் வந்து படித்து உங்கள் கருத்துகளைக் கூறுங்கள்.

November 28, 2005 6:02 AM

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//ஆகா! செஞ்சொற்பொற்கொல்லந்தான் பாவைக்கு விளக்கம் சொல்லப் போகிறான் என்றே முடிவு கட்டி விட்டீர்களா?

சரி. உங்கள் விருப்பப்படியே ஆகட்டும். :-)//

இன்புறுவர் எம் பாவாய்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

//நாராயணன்: அப்படி என்றால் நான் அவதாரம் எடுப்பதைவிட இன்னொரு ஆழ்வார் பிறப்பது தான் சரி என்று சொல்கிறீர்களா?//

:)

திருமா, பூமா, நீளா ரொம்ப நல்லாப் பேசிக்கறாங்க;
அவரு தான் ரொம்பக் குழம்புறாரு:)

//உங்களில் யாராவது ஒருவர் பிறந்தால் என்ன?//

"பிறவான்-இறவான்" என்பதே இறைவனுக்குப் பெருமை!

ஆனா, இவனும்-இவளும், அடிக்கடிப் "பிறப்பதால்",
உபன்னியாசகர்கள்/ மதவாதிகள், இவர்களைக் கேலி செய்வதும் உண்டு; மக்களும் இவர்களைப் பெரிதாகப் போற்றுவதில்லை;

அதனாலென்ன?
அம்மா-அப்பாவுக்குப் போற்றி முக்கியமா? பிள்ளை முக்கியமா?

நாம் பிறக்காமல் இருக்க
இவர்கள் பிறக்கின்றார்களே!

"பிறப்பு-இல் பல்-பிறவிப்" பெருமான் திரு-வடிகளே சரணம்!

kannabiran, RAVI SHANKAR (KRS) said...

ஓர் ஐயம்

//ஸ்ரீவைகுண்டம். சுயம்பிரகாசமான திவ்யதேசம். பரவாஸுதேவனான பகவான்//

பதிவில், இடையிடையே கேஸவன், மாதவன் -ன்னு "மூனாவது மனுஷாள்" எல்லாம் வராங்களே; இவிங்கெல்லாம் யாரு?:)

எதுக்கு, எம்பெருமானோடு பேசிக்கொண்டு இருக்கும் அன்னையர், திடீர்-ன்னு, இவங்க கிட்டல்லாம் நடுநடுல பேசுறாங்க?:)

குமரன் (Kumaran) said...

இரவி -

புருஷ சூக்தம் அஜாயமானோ பஹுதா விஜாயதே என்கிறது. நம்மாழ்வாரும் பிறப்பில் பல்பிறவிப் பெருமான் என்கிறார்.

கேஸவன் = க + ஈச இருவருக்கும் காரணன். க = பிரம்மன்; ஈச = ஈசானன்.

மாதவன் = திருமகள் கேள்வன்.

எல்லாம் ஒரே ஆள் தானே. அதனால் தான் மூவரும் குழப்பம் இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.