Thursday, January 03, 2013

நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்!



முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயில் எழாய்!
செப்பம் உடையாய்! திறல் உடையாய்! செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயில் எழாய்!
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயில் எழாய்!
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!

முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு முன்னால் சென்று அவர்களது இடர்களை எல்லாம் நீக்கும் கடவுளே எழுந்திருப்பாய்!

சிறந்த குணங்களை உடையவனே! வலிமை உடையவனே! உன்னை வெறுத்தார்களுக்கு வெப்பம் கொடுக்கும் குற்றமில்லாதவனே! எழுந்திருப்பாய்!

செப்பு போன்ற மெல்லிய முலையும் சிவந்த வாயும் சிறிய இடையும் உடைய நப்பின்னைப் பிராட்டியே! திருமகளே! எழுந்திருப்பாய்!

உன் கணவன் மூலமாக நாங்கள் வேண்டியதெல்லாம் தந்து இப்போதே நாங்கள் மார்கழி நீராடும்படி செய்வாய்!

3 comments:

sury siva said...

கடந்த 19 நாட்களாக, இன்று இருபதாம் நாள் இந்தப் பாசுரங்களை தாங்கள் பதிவு செய்யத்துவங்கி, ஆண்டாள் பாசுரங்களை
யானும் தங்களது மற்றும் திருமதி வல்லி நரசிம்மன் அவர்களது வலைகளில் படித்து பேர்மகிழ்வடைந்து அதையே பாடி
இன்புற்று வருகிறேன்.

நேற்று ஒரு சொல் நாலாவது வரியில்.. கிடந்து .. என்பதற்கு, அதன் பொருள் என்னவென என் நண்பர் எனக்கு தெளிய வைக்கயில்
வைஷ்ணவ ஆச்சாரியரான பிரதிவாதி பயங்கர அண்ணங்கராச்சாரியரின் உரை பற்றி கேள்விப்பட்டேன்.

பாசுரங்களை பக்தி ரீதியாகவோ அல்லது லௌகீக ரீதியாகவோ படித்து பொருள் கேட்டு பாடி மகிழலாம் என்றாலும், அந்தப் பாசுரங்களை
விசிஷ்டாத்வைதத்தில் திளைத்தவர்களான ஆச்சாரியர்கள், வியாக்கியானம் செய்தவர்கள் . அவர்களைப் படித்தால் தான்
பாசுரங்களின் உண்மைப்பொருள் பொதிந்து புதைந்து கிடக்கும் பொருள் தெரிய வருமென நினைக்கிறேன்.

தங்களிடம் இந்த வியாக்யானம் இருக்கிறதா ?இன்டெர்னெட்டில் கிடைக்கவில்லை.

சுப்பு தாத்தா.
meenasury@gmail.com

பூமி said...

பாசுரங்களுக்கு ஶ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் வியாக்கியானங்களை இந்த பக்கத்தில் அனுபவிக்கலாம்.. http://dravidaveda.org .. நன்றி

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி பூமி.

சுப்பு ஐயா. பூமி தந்த திராவிட வேதா வலைத்தளத்தில் PBK வியாக்கியானம் இருக்கிறது. மணிப்பிரவாளத்தில் இருக்கும் அந்த விளக்கங்களைத் தற்காலத் தமிழில் மாற்றிப் படித்தால் எல்லோருக்கும் சுவைக்கும். விரைவில் அந்த வாய்ப்பு தர வேண்டுமென்று கோதை நாச்சியாரிடம் வேண்டுகிறேன்.