Monday, August 22, 2011

நற்றிணையில் மாயோனும் வாலியோனும்...


கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலன்களாலும் காதல் கொண்டு தலைவனும் தலைவியும் பகலிலும் இரவிலும் ஒருவரை ஒருவர் தனிமையில் கண்டு கூடிக் குலாவி மகிழ்ந்து பின்னர் தலைவியைப் பிரிந்து தலைவன் சென்ற போது அவன் பிரிவை எண்ணி வருந்தும் தலைவியரையே சங்க இலக்கியத்தில் பல முறை காண்கிறோம். நற்றிணையில் தொகுக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலோ கூடிப் பிரிந்த தலைவன் தலைவியை மீண்டும் காண்பதற்காக வருந்தி வரும் போது அவனை ஏதோ ஒரு காரணத்தால் மறுத்து விலகியிருக்கும் தலைவியைக் காட்டுகிறது.

மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன்
வாலியோன் அன்ன வயங்கு வெள்ளருவி!
அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
வருந்தினன் என்பதோர் வாய்ச்சொல் தேறாய்!
நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
அறிவறிந்து அளவல் வேண்டும்! மறுதரற்கு
அரிய! தோழி வாழி! பெரியோர்
நாடி நட்பின் அல்லது
நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே!


நற்றிணை 32ம் பாடல்
திணை: குறிஞ்சி
துறை: இது தலைவிக்குக் குறைநயப்புக் கூறியது
இயற்றியவர்: கபிலர் (பாடியவர் என்றும் சொல்லலாமோ?)


பாடலின் பொருள்: மாயோனைப் போல் கரு நிறம் கொண்டு ஓங்கி உயர்ந்து நிற்கும் மலையின் ஒரு பக்கத்தில் மாயோனின் முன்னவனாகத் தோன்றிய பலராமன் என்னும் வாலியோனின் நிறம் போல் வெள்ளை நிறம் கொண்ட அழகிய அருவி இருக்கிறது. அந்த மலையின் தலைவன் உன் உறவினை விரும்பி வேண்டி நமது அண்டையில் அடிக்கடி வந்து நின்று வருந்துகிறான் என்று நான் சொன்னால் அந்த வார்த்தையை நீ ஏற்றுக் கொள்ளவில்லை! நீயே அதனை நேரில் கண்டு உனது மற்ற தோழியரோடு சேர்ந்து சிந்தித்து அவனது காதலை உணர்ந்து அவனுடன் அளவளாவுதல் வேண்டும். அவனது காதல் மறுத்தற்கு அரியது. தோழி நீ வாழ்க! பெரியவர்கள் நட்பு கொள்வதற்கு முன்னர் நட்பு வேண்டி வந்தவர்களைப் பற்றி ஆராய்வார்கள்! உன்னைப் போல் நட்பு கொண்ட பின்னர் நட்பு கொண்டவர்களிடத்து ஆராய்ச்சியைச் செய்ய மாட்டார்கள்!

செல்வத்திலும் அறிவிலும் வலிமையிலும் ஆற்றலிலும் சிறந்த ஆளும் திறத்தவராகிய தலைமக்களே சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் பேசப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பாடலில் காதலன் 'மலைக் கிழவோன்' என்று குறிக்கப்படுவதன் வழி அவனும் அப்படி செல்வத்திலும் ஆட்சியிலும் மற்ற வகைகளிலும் சிறந்த ஒரு தலைமகன் என்பது சொல்லப்படுகிறது. அதனை இங்கே 'அவன் உனக்கு ஏற்றவன். அவன் மலையின் தலைவன். அதனால் உன் காதலைப் பெறும் தகுதியுடையவன்' என்று தோழி சுட்டிக் காட்டுவதன் மூலம் காதலியும் ஒரு தலைமகள் என்பதைக் காட்டுகிறது. சங்கப் பாடல்கள் பெரும்பாலும் தலைமக்களையும் அவர்தம் காதலையும் உணர்வுகளையுமே பேசியதால் தான் அவர்களைக் காதலன் காதலி என்று குறிக்காமல் தலைவன் தலைவி என்றும் கிழவன் கிழத்தி என்றும் பாடலை எழுதியவர்களும் உரையாசிரியர்களும் குறித்தார்கள் போலும்.

கபிலரின் இந்தப் பாடலில் வரும் 'பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' என்னும் கருத்தே கொஞ்சம் மாற்றத்துடன் திருக்குறளில் 'நாடாது நட்டலின் கேடில்லை நட்டபின் வீடில்லை நட்பாளவர்க்கு' என்று (கருத்தை அழுத்தமாய் வலியுறுத்த?) எதிர்மறையாக வருவதைக் காணலாம். அதனால் 'ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை' என்பது ஒரு பழமொழியைப் போல் சங்க காலத்தில் வழங்கியிருத்தல் கூடும் என்று தோன்றுகிறது.

குறிஞ்சித் திணைப் பாடலாகிய இந்தப் பாடலில் முல்லைக்குரிய மாயோனும் அவனுடனே பெரும்பாலும் குறிக்கப்படும் வாலியோனும் பேசப்படுகிறார்கள். மக்கள் நன்கு அறிந்த ஒன்றையே உவமையாகக் கூறுவார்கள் என்பதால் மாயோன் என்னும் கண்ணனின் கருநிறமும் அவனது நெடிய தோற்றமும் இங்கே மலைக்கு உவமையாகவும், வாலியோன் என்னும் பலதேவனின் வெண்ணிறமும் அவனது வலிமையும் இங்கே அருவிக்கு உவமையாகவும் அமைந்திருக்கிறது.

21 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நல்லதொரு பதிவு நண்பா.
அழகான விளக்கம்.

குமரன் (Kumaran) said...

நன்றி நண்பரே.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்லதொரு விளக்கம்! நல்ல பதிவு!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவி.

Radha said...

// ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்; நட்டபின் ஆராய்தல் பிழை //
குமரன்,
ஒரு விதண்டாவாதக் கேள்வி. நட்பில் "ஒரு வழி நட்பு" என்பது உண்டா? நாம் இறைவனை நண்பனாக பாவிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். நம் குறைகள்/கேவலங்கள் நீங்கும் வரை அது ஒரு வழி நட்பாக இருக்குமா? ச்சே ! என்ன ஒரு பைத்தியக்காரத்தனமான கேள்வி எல்லாம் தோன்றுகிறது ?

குமரன் (Kumaran) said...

இராதா, ஒரு வழி நட்பு உண்டு. இறைவன் எப்பொழுதுமே நம்மை நண்பனாகத் தான் கொண்டிருக்கிறான். நாம் அதனை உணர்ந்து நாமும் நட்பு கொள்ளும் வரை அவனது நட்பு ஒரு வழி நட்பு தானே. :-)

Radha said...

குமரன்,
அற்புதமான பதில்.
you made my day !!! :-)

குமரன் (Kumaran) said...

இராதா,

காலை 5:30 மணிக்கு எழுந்தவுடன் அரைத் தூக்கத்துடன் கணினியைத் திறந்து மின்னஞ்சலைப் பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன் பிறந்த எங்கள் புதிய .com நான் தூங்கும் போது ஏதேனும் பிரச்சனை செய்யாமல் இருந்ததா என்று அறிய. வழக்கமான மின்னஞ்சல்கள் இருந்தன. உங்கள் பின்னூட்டம் கண்ணில் தென்பட்டது. அரை தூக்கத்திலேயே படித்தேன். படித்தவுடன் தோன்றிய கருத்தை உடனே எழுதினேன். வழக்கமாக பதில் சொல்லும் முன் செய்யும் சிந்தனை கூட இல்லை. அதனால் இது என் பதில் இல்லை. உங்கள் கிரிதாரியின் பதிலே என்று எடுத்துக் கொள்ளலாம்.

Radha said...

சில பலவீனமான தருணங்களில் மிகவும் நம்பிக்கை இழந்து விடுவது என்பது நிகழ்கிறது...
மேலே சொல்லியது யாராக இருந்தாலும் நிறைய தெம்பினை அளிக்கிறது. மிகவும் நன்றி குமரன். :-)

Radha said...

"நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
"

மேற்படி குறட்பாக்களை எல்லாம் கிரிதாரி அறிவான் என்று எண்ணிக் கொள்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

இந்தக் குறட்பாக்களுக்கு எல்லாம் பொருள் என்ன இராதா?

தமிழ் said...

ஆஹாஹா! அருமையான விளக்கம்... நன்றி குமரன் ஐயா!

தமிழ் said...

இந்த குறட்பாக்களுக்கு எல்லாம் நீங்க என்ன பொருள் கொடுத்தாலும் வாங்கிக் கொள்வோம்! :-))

குமரன் (Kumaran) said...

நன்றி தமிழ்.

இராதா தான் வந்து பொருள் தரவேண்டும். அவர் தரும் பொருளை நானும் வாங்கிக் கொள்கிறேன்.

Radha said...

இவை பழைமை என்னும் அதிகாரத்தில் உள்ள குறட்பாக்கள் குமரன். நாமக்கல் கவிஞர், பரிமேலழகர் உரைகளில் இருந்து...
**********
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்
[கெழுதகைமை - உரிமை; உறுப்பு - இலக்கணம், உப்பு - சுவை, இனிமை; உப்பாதல் - இனிமையுடன் உட்படுதல்]
நண்பர் என்பதற்கு அடையாளம் ஒருவரிடம் ஒருவர் கொண்டாடும் உரிமை. அந்த உரிமையைக் கெடுத்துவிடாமல் இனிமையாக நடந்து கொள்ள வேண்டியது நல்லவர்களுடைய கடமை.
----
விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்

[தலைப்பிரிதல் - விட்டுவிடுதல்; விழைவு - விருப்பம்; விழையார் - விரும்பாதவர், பகைவர் ]
"பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் விழையார் விழையப் படுப" - பழைமையான நண்பர்களிடத்தில் (அவர்கள் குற்றம் செய்துவிட்ட போதிலும் முன்போலவே) அன்பாக நடந்து கொள்பவர்களைப் பகைவர்களும் பாராட்டுவார்கள்.

----
அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

அழிவு தரக்கூடிய காரியத்தைச் செய்துவிட்டாலும், அன்பினால் தொடர்ந்து வரும் நட்புடையவர்கள் அன்பற்று நடந்து கொள்ள மாட்டார்கள்.
----
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
'ஒன்றோ' என்பதற்கு ஒன்று மட்டுமா என்று பொருள். பழைமை பற்றிய நண்பர்கள் துன்பம் உண்டாக்கத்தக்க காரியங்களைச் செய்துவிட்டால், அறியாமை என்ற ஒன்றுக்காக மட்டுமல்ல; மிகுந்த உரிமை உடையவர்கள் என்பதையும் உணர்ந்து பொறுத்துக் கொள்க.
******************

குமரன் (Kumaran) said...

நான் இது வரை படித்திராத குறட்பாக்கள் இராதா. பொருளும் தந்ததற்கு மிக்க நன்றி.

நாடி நாடி நரசிங்கா! said...

nice:)

குமரன் (Kumaran) said...

நன்றி இராஜேஷ்.

இந்திரன் said...

:)

மதன்மணி said...

மதன்மணி பேசுகிறேன்
நலமா பதிவரே
மிகவும் நன்றாகவுள்ளது

குமரன் (Kumaran) said...

நன்றி மதன்மணி.