Tuesday, November 09, 2010

முதல் மூவரைப் போற்றும் இனியவை நாற்பது


சங்க இலக்கியத்தின் பகுதியான பதினெண்கீழ்கணக்கு நூல்களில் ஒன்று 'இனியவை நாற்பது'. இது இனியவற்றைப் பட்டியல் இடும் நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நூல். இது ஒரு தொகுப்பு நூல் இல்லை. ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்ட நூல். நூலில் இருக்கும் நாற்பது பாடல்களின் அமைப்பினிலேயே இதன் கடவுள் வாழ்த்தும் இருக்கிறது. இவ்விரு காரணங்களால் இந்த நூலை இயற்றிய ஆசிரியரே கடவுள் வாழ்த்தையும் இயற்றினார் என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

இந்த நூலின் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார். சேந்தன் என்பது இவரது இயற்பெயர் என்பதும், பூதன் என்பது இவரது தந்தையார் பெயர் என்பதும், இவர் மதுரையில் வாழ்ந்தவர் என்பதும், இவரது தந்தையார் தமிழ் ஆசிரியர் என்பதும் இந்த பெயரில் இருந்து தெரிகிறது. இவர் தந்தையார் தமிழ் ஆசிரியர்களில் சிறந்தவராக இருந்திருக்க வேண்டும். அதனால் தான் 'மதுரைத் தமிழாசிரியர்' என்ற சிறப்புப் பெயர் அடைந்திருக்கிறார். பிற்காலத்தில் மகாமகோபாத்யாய, மகாவித்வான் என்று ஆசிரியர்களில் சிறந்தவர்களுக்குச் சிறப்புப் பெயர் தந்து பெருமைப்படுத்தியதை இங்கே ஒப்பு நோக்கலாம். 'மதுரைத் தமிழாசிரியர்' என்பது பெருமைக்குரியதாக இருந்ததால் தன் பெயருடன் அதனையும் இணைத்தே இந்த நூலின் ஆசிரியர் சொன்னார் என்று எண்ணுகிறேன். பாரதி என்று முன்னோர்களில் ஒருவருக்குத் தரப்பட்ட பட்டத்தை அந்த குடிவழியில் வந்த ஒவ்வொருவரும் தங்கள் பெயருடன் இணைத்துக் கொள்வதை இங்கே ஒப்பு நோக்கலாம்.

இந்த நூலின் கடவுள் வாழ்த்துப்பாடலில் சிவன், திருமால், பிரமன் என்ற முப்பெரும் தேவர்களைப் போற்றுகிறார் ஆசிரியர். சிவனை முதலிலும், திருமாலை அடுத்தும், பிரமதேவனை பின்னரும் இந்தப் பாடலில் போற்றுகிறார்.

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே
தொல் மாண் துழாய்மாலையானைத் தொழல் இனிதே
முந்துறப் பேணி முக நான்கு உடையானைச்
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.


இந்தப் பாடலின் முதல் அடியில் இனிதான ஒரு பொருளையும், இரண்டாம் அடியில் இனிதான இன்னொரு பொருளையும், அடுத்த இரு அடிகளில் இனிதான இன்னொரு பொருளையும் கூறுகிறார். இந்த நூலில் நான்கு பாடல்களைத் தவிர்த்து மற்ற பாடல்களில் எல்லாம் இப்படியே மூன்று இனியவைகளைக் கூறும் முறை தொடர்கிறது.

கண் மூன்றுடையான் சிவபெருமான். மூன்று கண்கள் கொற்றவை, நரசிம்மன், விநாயகன், முருகன் என்பாருக்கும் உண்டு. இங்கே அன் விகுதியுடன் சொன்னதால் கொற்றவை இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. திருமால் அடுத்த அடியில் கூறப்படுவதால் நரசிம்மனும் இங்கே குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. மும்மூர்த்திகளில் விநாயகனும் முருகனும் வருவதில்லை ஆதலால் மும்மூர்த்திகளைச் சொல்லும் இந்தப் பாடலில் அவர்களும் குறிக்கப்படவில்லை என்பது தெளிவு. முக்கண் முதல்வன் என்று சிவபெருமானே போற்றப்படுவதால் அவனே இங்கே குறிக்கப்படுகிறான் என்பது தெளிவு.

தாள் சேர்தல் என்றால் தஞ்சமாக, சரணாக அடைதல் என்று பொருள். தாளினை இடையறாது சிந்தித்தல் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்தலும் அவற்றைத் தஞ்சமாக அடைதலும் மிக இனிது என்று முதல் அடி கூறுகிறது. வைணவமே திருவடிகளின் பெருமைகளைப் பரக்கப் பேசும்; தஞ்சமடைதலை மீண்டும் மீண்டும் பேசும் என்பதே நாம் அறிந்தது. இங்கோ சைவத்திலும் திருவடிகளின் பெருமைகளைக் கூறுதல் உண்டு என்று காட்டுவது போல் இந்த வரி அமைந்திருக்கிறது.

மாசில் வீணையும், மாலை மதியமும், வீசு தென்றலும், வீங்கிள வேனிலும், மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே என்று பிற்காலத்தில் தேவாரப் பதிகத்தில் இந்தப் பாடலில் சொல்லப்பட்ட இனிமையே விரித்துக் கூறப்பட்டது போலும்.

இனிமை என்று மட்டும் கூறாமல் மிகவும் இனிமை என்று அழுத்திக் கூறுவது போல் 'கடிது இனிதே' என்கிறார் ஆசிரியர்.

அடுத்த அடியில் துழாய் மாலை சூடும் திருமாலைப் போற்றுவதன் இனிமையைப் பேசுகிறார். தமிழ்க்கடவுள் முருகன் மட்டுமே என்றொரு வழக்கு இருக்க, முருகனும் திருமாலும் சிவனும் கொற்றவையும் தொன்மையான தமிழர் கடவுளரே என்று நானும் நண்பர்கள் சிலரும் தொடர்ந்து கூறி வருகிறோம். தொன்மையான தொல்காப்பியம் திருமாலைப் போற்றும் தரவுகள் நிறைய இருக்கின்றன. திருமாலின் அந்தத் தொன்மையை வலியுறுத்துவதைப் போல் 'தொன்மையும் மாட்சிமையும் கொண்ட துழாய்மாலையான்' என்று அடைமொழிகளுடன் கூறுகிறார் ஆசிரியர்.

தற்போது கிடைக்கும் பழந்தமிழ் நூல்களிலேயே முதல் நூலான தொல்காப்பியத்திலேயே குறிக்கப்படுபவன் திருமாலாகிய மாயோன் என்பதால் அவனது தொன்மை விளங்குகிறது. பெருமை மிக்கதை முதலில் சொல்வது என்ற தமிழ் மரபின் படி மாயோனை முதலில் சொன்னது தொல்காப்பியம் - அதனால் திருமாலின் மாட்சிமையும் விளங்குகிறது. இவ்விரண்டையும் இங்கே அடைமொழிகளாகச் சொல்கிறார் ஆசிரியர்.

துழாய் மாலையானைத் தொழுவது இனிது என்கிறார் ஆசிரியர். தொழுவது என்றால் என்ன? வணங்குவது மட்டுமா? தொண்டு செய்வதும் தானே தொழலில் அடங்கும். திருமாலுக்குத் தொண்டு என்னும் கைங்கரியம் செய்வதே வாழ்வின் பயன் என்றும் திருமாலுக்குத் தொண்டு செய்து அடியவனாய் இருப்பதே உயிரின் இயல்பு என்றும் வைணவ தத்துவம் கூறும். தொழல் என்னும் சொல்லைச் சொல்லி அந்தத் தத்துவங்களை அனைத்தையும் நினைவூட்டி விட்டார் ஆசிரியர்.

பிரமன், திருமால், சிவன் என்று வரிசைப்படுத்தி முதல் மூவரைச் சொல்வது மரபு. அந்த மரபிற்கு மாறாக சிவன், திருமால், பிரமன் என்று சொல்கிறாரே இங்கு என்று நினைத்துக் கொண்டிருந்தால் அந்த மரபினை நானும் அறிவேன் என்று சொல்வதைப் போல் அடுத்த அடியினை எழுதுகிறார் சேந்தனார்.

முந்துறப் பேணி என்று சொன்னதன் மூலம் சிவன், திருமால் இவர்களுக்கு முன்னரே மக்களால் போற்றப்படுபவன் பிரமன் என்று சொல்லாமல் சொல்கிறார். பிரமனை நான்முகன் என்று குறிப்பதும் மரபே. அதனை ஒட்டி இங்கேயும் முகனான்கு உடையான் என்று சொல்கிறார் ஆசிரியர்.

சிவபெருமானின் தாள் சேர்தல் இனிது; திருமாலைத் தொழல் இனிது; ஆனால் பிரமதேவனையோ சென்று அமர்ந்து மறைகளால் ஏத்துதல் இனிது. வேதன் என்றும் வேதமுதல்வன் என்றும் நான்முகனை அல்லவோ சொல்வார்கள். அந்த மரபின் படி வேதங்களை ஓரிடத்திற்குச் சென்று அமர்ந்து விரிவாக ஓதி நான்முகனை வணங்குவது இனிது என்று இங்கே சொல்கிறார் ஆசிரியர்.

இந்தப் பாடலைப் படிக்கும் போதும் விளக்கத்தைப் படிக்கும் போதும் உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

8 comments:

Radha said...

பாடலும் இனிதே. விளக்கமும் இனிதே. :-)

குமரன் (Kumaran) said...

நன்றி இராதா. :-)

Kavinaya said...

//பாடலும் இனிதே. விளக்கமும் இனிதே. :-)//

ரிப்பீட்டேய்!

குமரன் தமிழ் அழகுக்கு கேட்கணுமா? :)

குமரன் (Kumaran) said...

அக்கா. இப்படி சொன்னா நான் என்ன சொல்றது? :-)

நன்றி! :-)

இந்திரன் said...

smooth flow :)

குமரன் (Kumaran) said...

நன்றி இந்திரன்.

வெற்றி said...

குமரன்,
வழக்கம் போல நல்ல பதிவு. எளிமையான ,அருமையான விளக்கம்.
மிக்க நன்றி.

பூதஞ்சேந்தனார் வாழ்ந்த காலம் எது?

நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றி. பூதஞ்சேந்தனாரின் காலம் எது என்று எனக்கு தெரியாது.