Wednesday, August 11, 2010

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே



திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே
உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


திருவாடிப்பூரம் ஆகிய இன்றையத் திருநாளில் உலகத்தில் அவதரித்தவள் வாழ்க!
திருப்பாவை முப்பதும் சொன்னவள் வாழ்க!
பெரியாழ்வார் பெருமையுடன் வளர்த்தப் பெண் பிள்ளை வாழ்க!
திருப்பெரும்புதூரில் அவதரித்த இராமானுஜமுனிக்குத் தங்கையானவள் வாழ்க!
ஒரு நூற்று நாற்பத்தி மூன்று பாசுரங்களைப் பாடியவள் வாழ்க!
உயர்வற உயர்நலம் உடைய அரங்கனுக்கு மலர்மாலையை மகிழ்ந்து தான் சூடிக் கொடுத்தவள் வாழ்க!
மணம் கமழும் திருமல்லிநாட்டைச் சேர்ந்தவள் வாழ்க!
புதுவை நகரெனும் வில்லிபுத்தூர் நகர்க் கோதையின் மலர்ப்பதங்கள் வாழ்க வாழ்க!

கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழுமூர் நான்மறைகள் ஓதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.

கோதை பிறந்த ஊர்
கோவிந்தன் நிலைத்து வாழும் ஊர்
ஒளிவீசும் மணி மாடங்கள் விளங்கும் ஊர்
நீதியில் சிறந்த நல்ல பக்தர்கள் வாழும் ஊர்
நான்மறைகள் என்றும் ஒலிக்கும் ஊர்
அப்படிப்பட்ட வில்லிபுத்தூர் வேதங்களின் தலைவனின் ஊர்

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்திற்கும் வித்தாகும் - கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானுடரை
வையம் சுமப்பதும் வம்பு.

பஞ்சமா பாதகங்களைத் தீர்க்கும்
பரமனின் அடிகளைக் காட்டும்
வேதங்கள் அனைத்திற்கும் வித்து ஆகும்
அப்படிப்பட்டக் கோதையின் தமிழ்ப் பாசுரங்கள்
ஐயைந்தும் ஐந்தும் (முப்பதும் - திருப்பாவை)
அறியாத மானுடரை
வையம் சுமப்பது வீண்

அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கற்கு
பன்னு திருப்பாவை பல்பதியம் இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னங்கள் சூழ, அன்னம் விளையும் வயல்கள் கொண்ட புதுவை என்னும் திருவில்லிபுத்தூர்.
ஆங்கு அவதரித்த ஆண்டாள், ஆரா அமுதன் அழகிய திரு அரங்கன் மீது பாடிக் கொடுத்தாள் நல்ல பாமாலை...வாய்க்கு மணம்!
போதாது என்று பூமாலையும் சூடிக்கொடுத்தாள்...மேனிக்கே மணம்!
அந்த மாலைகளை அனைவரும் சொல்லுவோம்.


சூடிக் கொடுத்தச் சுடர்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் - நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

மலர்மாலையை மாலவனுக்குச்
சூடிக் கொடுத்த சுடர்கொடியே!
தொன்மையான பாவை நோன்பிற்காக
திருப்பாவை பாடி அருளிய பலவிதமான வளையல்களை அணிந்தவளே!
'மன்மதனே. நீ மனம் இரங்கி திருவேங்கடவனுக்கே என்னை மணாட்டியாக விதி' என்று நீ கூறிய வார்த்தைகளை நாங்களும் ஏற்று
என்றும் புறந்தொழாமல்
என்றும் படிதாண்டா பத்தினிகளாக
எம்பெருமானையே பற்றி வாழ அருள்வாய்.

இன்றோ திருவாடிப்பூரம் எமக்காக
அன்றோ ஆண்டாள் அவதரித்தாள் - குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திருமகளாராய்.

இன்றல்லவோ திருவாடிப்பூரம்! (இந்தத் திருநாளில்)எம் பொருட்டு அன்றோ ஆண்டாள் அவதரித்தாள்!(எம் மேல் அவள் கருணை எப்படிப்பட்டதெனில்) என்றும் அழியாத பெரும்பேறான வைகுந்த வான்போகத்தை (அடியாரைக் காத்தருளுவதை விட கீழானதென்று) இகழ்ந்து பெரியாழ்வர் திருமகளாராய்!

அடையுங்கள் அடையுங்கள் ஆண்டாள் திருவடி அடையுங்கள் நம் ஆண்டாள் திருவடி அடையுங்கள்!

7 comments:

நாடி நாடி நரசிங்கா! said...

திருவாடிப்பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்றெடுத்தப் பெண்பிள்ளாய் வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்தி மூன்றுரைத்தாள் வாழியே

உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே

வண்புதுவை நகர்க் கோதை மலர்ப்பதங்கள் வாழியே

நாடி நாடி நரசிங்கா! said...

Thanks

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Bday dee kOthai! :)
U & me so close, same august, just 3 days! :)

Mukil said...

திருஆடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியவே!
திருவரங்கத்தான் இதயம் திருடினாள் வாழியவே!

பிறந்தநாள் வாழ்த்துகள்டீ கோதை!

குமரன் (Kumaran) said...

வருகைக்கு நன்றி அக்காரக்கனியின் Lover, இரவி & முகிலரசி.

Ramkumar G Krish said...

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

Unknown said...

,ஆண்டாள் திருவடிகள் சரணம்