Sunday, August 08, 2010

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே! அந்தக் கண்ணனுக்கு மட்டும் இல்லை இந்தக் கண்ணபிரானுக்கும் இது பொருந்தும்! ஏறக்குறைய இவர் நண்பர்கள் அனைவருக்குமே இவரிடம் கொஞ்சம் குறைந்த பட்சம் லேசான மனத்தாங்கல் இருக்கிறது! ஆனால் இவரை விரும்பாதவரே இல்லை! எல்லாருமே நண்பர்கள் தான்! இந்த இனிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு இன்று பிறந்தநாள் (ஆகஸ்ட் 9)! எல்லா நலமும் பெற்று, விட்டுப் போனவை எல்லாம் மீண்டும் கிடைத்து, இறைத்தொண்டிலேயே கவனம் எல்லாம் நிலைத்து, பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் இரவிசங்கர் வாழ நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி அருள் புரிய வேண்டும்!

***

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே!


பெரியபிராட்டியாருடன் என்றும் நீங்காது இருக்கும் திருமாலே! உமது திருமுகத்தின் ஒளியே மேலே கிளம்பி உம் தலையில் நீர் தரித்திருக்கும் திருவபிஷேகமாக (கிரீடமாக/திருமுடியாக) ஒளிவீசித் திகழ்கிறதோ? நீர் தேவ தேவன் என்பதையும் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என்பதையும் பரமபுருஷன் என்பதையும் உமது திருமுடியின் பேரழகும் பேரொளியும் காட்டுகின்றதே! நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ! திருமுடியின் பேரொளியைக் காண தீராமல் திருவடிக்கு வந்தால் திருவடியின் பேரொளி மேலே பிடித்துத் தள்ளுகிறதே! அடடா! உமது திருமேனியின் ஒளியே உமது பட்டுப் பீதாம்பரமாகவும் உமது திருமேனியில் ஒளிவீசும் திருவாபரணங்களாகவும் அனைத்தும் பொன்னிறம் என்னும் படி கலந்து ஒளிவீசுகிறதே! கடலிலே அகப்பட்ட துரும்பை ஒரு அலை இன்னொரு அலையிலே தள்ளி அது இன்னொரு அலையிலே தள்ளி அலைப்பதைப் போலே உமது திருமுடியின் ஒளி திருவடிகளிலே தள்ள அது திருமேனியின் ஒளியிலே தள்ளுகிறதே! காலம் என்னும் தத்துவம் இருக்கும் வரையில் கண்டுகொண்டே இருந்தாலும் திருப்தி வராது என்னும் படியான பேரழகும் பேரொளியும் வாய்த்தது தான் என்னே! நீரே சொல்லியருள வேண்டும்!



கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை ஒவ்வா
சுட்டுரைத்த நன்பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி!


உண்மையைச் சொன்னால் தாமரை உமது திருக்கண்கள், திருப்பாதங்கள், திருக்கைகள் இவற்றிற்கு ஒப்பாகாது! காய்ச்சிய நன்பொன்னின் பேரொளியும் உமது திருமேனியின் ஒளிக்கு ஒப்பாகாது! ஏதேதோ ஒப்பு வைத்து இந்த உலகத்தார் உம்மைப் புகழ்வனவெல்லாம் பெரும்பாலும் வெற்றுரையாய்ப் பயனின்றிப் போகும்படி செய்யும் பேரொளி உடையவர் நீர்!

பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி இன்மையில் படியோவி நிகழ்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே!


எளிமையின் எல்லை நிலமான கோவிந்தனே! பரஞ்சோதியாக பேரழகுடனும் பேரொளியுடனும் நீர் திகழ, ஏகம் அத்விதீயம் என்றும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன் என்றும் பேசும் படியாக உம்மை விட மற்றோர் பரஞ்சோதி இல்லாத வண்ணம் இந்த பிரம்மாண்டத்தை நடத்திக் கொண்டு உமது திருமேனியாகவே இந்த பிரபஞ்சத்தையெல்லாம் உம் எண்ணத்தாலேயே படைத்த எமது பரஞ்சோதியே! உலகத்தார் போற்றுவனவெல்லாம் வெற்றுரையாய் ஆக்கும் பரஞ்சோதியாகவும் நீர்மைக்கு எல்லைநிலமாகவும் ஒரே நேரத்தில் இருக்கும் உமது அளவில்லாத தெய்வீக குணங்களை எல்லாம் அடியேனாலும் பேச முடியாது!

மாட்டாதே ஆகிலும் இம்மலர்தலைமாஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மாஞாலம் வருத்தாதே?


மலரில் பிறந்த பிரம்மனால் படைக்கப்பட்ட இந்த பேருலகத்தில் வாழ்பவர்கள் எல்லாம் மலர் போன்ற உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்! அவர்களைக் கடைத்தேற்றும் வழியைக் காணாமல் நீர் உமது திருமேனியிலும் திருவடிகளிலும் திருமுடியிலும் இருக்கும் மலர்த்துழாய் மேலே மனம் வைத்தீர்! இப்படி இருந்தால் இம்மாஞாலத்து மக்கள் வருந்த மாட்டார்களா?

வருந்தாத அருந்தவத்த மலர்கதிரின் சுடர் உடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வருங்காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக அளிப்பாய்! சீர் எங்கு உலக்க ஓதுவனே?


அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்! வரும் காலம், நிகழ் காலம், இறந்த காலம் என்ற மூன்று காலங்களும் ஆகி உலகத்தையும் உலக மக்களையும் ஒருங்கே காத்தருள்கிறிர்! உமது சீரை சொல்லி முடிப்பது அடியேனால் முடியுமோ?



ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய்! பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய்! என் சொல்லி யான் வாழ்த்துவனே?


ஓதுபவர்களின் வேதங்களெல்லாமும், மற்றும் எந்த உலகத்திலும் எப்படிப்பட்ட சாத்திரங்களும், உமது புகழைத் தான் ஓதுகின்றன! பிறிதொன்றுமில்லை! மலர்கள் வாழ்கின்ற நந்தவனத்தில் விளைந்த திருத்துழாய் விளங்கும் திருமுடியினாய்! அலர் மேல் மங்கை வாழும் மார்பினாய்! உம்மை வாழ்த்துவதற்கு அடியேன் எதனைச் சொல்லி வாழ்த்துவேன்!

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீர் உலகெல்லாம் படையென்று முதல் படைத்தாய்!
கேழ்த்த சீர் அரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதோ?


பெருகி இருக்கும் பிரம்மாண்ட நீரில் இருந்து உலகங்களையும் உலகமக்களையும் படைப்பாய் என்று உமக்குள்ளிருந்து தோன்றிய தாமரையில் நான்முகனைப் படைத்தீர்! பலர் உம்மை வாழ்த்துவார்களாக இருக்கிறார்கள்! மிகச் சிறந்த ஞானம் முதலிய குணங்களை உடைய அரன் முதலாகச் சொல்லப்படும் தெய்வங்கள் எல்லாம் உமது குணங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துக்கொண்டு பல்வேறாகப் போற்றித் துதிக்கிறார்கள்! அப்படித் அவர்கள் துதித்தால் உமது தொன்மையான புகழ் அவ்வளவு தான் என்று ஆகிவிடாதோ? உம்மால் படைக்கப்பட்ட பிரமதேவனால் படைக்கப்பட்டவர்கள் எப்படி உமது தொன்மையான புகழைப் பாட முடியும்? அப்படி அவர்கள் பாடினால் உமது தொல் புகழ் மாசு பெற்றுவிடுமே!

மாசூணாச் சுடர் உடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான்கோலத்து அமரர்கோன் வழிப்பட்டால்
மாசூணா உனபாத மலர்ச்சோதி மழுங்காதே?


குற்றமே அடையாத ஒளிவீசும் திருமேனியுடன், கூடாது குறையாது குற்றமே அடையாத பேரறிவுடன், எல்லாப் பொருட்களும் ஆகி, அனைத்திற்கும் அடிப்படையானீர்! அப்படி இருக்க குற்றமில்லாத உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!

மழுங்காத வைந்நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?


தொழ வேண்டும் என்ற பெரும் காதல் உணர்வுடன் இருந்த களிறு ஆகிய கஜேந்திரன் என்னும் யானையைக் காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை பொருந்திய வாய்களை உடைய சக்கரத்தை வலக்கையில் ஏந்தி, கருடப்பறவையின் மேல் ஏறி, யானை துன்பமடைந்து கொண்டிருந்த மடுக்கரையில் தோன்றினீர்! அது பொருந்தும்! உமது மழுங்காத ஞானமே கருவியாகக் கொண்டு அனைத்தையும் நடத்திக் கொள்ளலாமே! விரிந்து பரந்த உலகில் தொழும் அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?



மறையாய நால்வேதத்துள் நின்ற மலர்ச்சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்
இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இது வியப்பே!


மறையான நான்கு வேதங்களுக்கும் உட்பொருளாக நின்ற விரிந்த பேரொளியே! முறைப்படி இவ்வுலகங்களையெல்லாம் படைத்தீர்! வராகப் பெருமானாகி அவற்றை இடந்தீர்! பிரளய காலத்தில் அவற்றை உண்டீர்! பின்னர் உலகத் தோற்றக்காலத்தில் அவற்றையெல்லாம் உமிழ்ந்தீர்! வாமன திரிவிக்கிரமனாகி அவற்றை அளந்தீர்! பிறைதாங்கிய சடையை உடைய சிவபெருமானும் நான்முகனும் இந்திரனும் நீர் எல்லாவற்றையும் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்த சர்வஸ்வாமியாக இருப்பதை அறிந்து உம்மைப் போற்ற நீர் வீற்றிருப்பது என்ன வியப்போ? வியப்பில்லையே!

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடங்குருகூர்ச் சடகோபன்
துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே


மற்றவர்களுக்கு வியப்பாக இருப்பவை எல்லாம் தன்னிடம் வியப்பில்லாமல் போகும் படியான பெருமையையுடைய, மெய்ஞானத்தை அருளும் வேதங்களாக இருப்பவனை, வெற்றியும் புகழும் உடையவர்கள் பலர் வாழ்கின்ற பெரிய ஊரான திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபனாகிய நம்மாழ்வார் குற்றங்கள் ஏதும் இன்றி தொழுது உரைத்த ஆயிரம் பாடல்களுள் இந்தப் பத்துப் பாடல்கள் தம்மைப் பாடுபவர்களை ஒலி நிறைந்த கடல் சூழ்ந்த உலகத்தில் முன்னேற்றி மீண்டும் பிறவா நிலையைக் கொடுக்கும்.

18 comments:

மதுரையம்பதி said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கே.ஆர்.எஸ்.

நாடி நாடி நரசிங்கா! said...

Hi,

Thanks for this post

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//போனவை எல்லாம் மீண்டும் கிடைத்து//

ஆசிக்கு நன்றி குமரன் அண்ணா!

கேட்டதும் கொடுப்பவரே குமரா குமரா-வா? :)
முடிச்சோதி முகச்சோதிப் பாசுரம் கேட்டா, அதை வாழ்த்தோடு கட்டிக் கொடுக்கறீங்களா? :)

//குறைந்த பட்சம் லேசான மனத்தாங்கல் இருக்கிறது! ஆனால் இவரை விரும்பாதவரே இல்லை!//

:)))

தாங்கல் என்றால் தாங்குவது தானே! மனத்தாங்கல்=மனத்திலே தாங்குவது! :)

@மெளலி அண்ணா, @ராஜேஷ் - வாழ்த்துக்கு நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இறைத்தொண்டிலேயே கவனம் எல்லாம் நிலைத்து//

எவருக்கு மனத்தாங்கல் இருந்தாலும்,
அவருக்கெல்லாம்,
இங்கேயே, கூடல் குமரன் சன்னிதியில்,
மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

தாங்கலும் தகர்ந்து தழைந்து ஏல்-ஓர் எம்பாவாய்!
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல்-ஓர் எம்பாவாய்!

நாடி நாடி நரசிங்கா! said...

மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாத பல சமய மதி கொடுத்தாய் :)))
உமது பேரழகிய திருவுருவத்தில் மனம் வைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்! அது போதாதென்று அவர்கள் மனம் குழம்பும் படியாக பற்பல சமயங்களையும் ஆக்கி வைத்தீர்!:)))

ஒரு சிலர் இந்த சாமிய கும்புத்தா அந்த சாமி கோச்சிக்குமா!

ஒரு சிலர் எங்க சாமி பெரிசு! நீங்க வழிபடுற சாமி சின்னது௧

ஒரு சிலர் நாங்க வழ்படுற கடவுள் தான்பா கடவுள். நீங்கல்லாம் வழிபடுறது கடவுளே இல்ல!

ம் இப்படி பலர்! நல்ல காமெடியா இருக்கும் .
அதனால்தான் நம்மாழ்வார் சொல்லிட்டார் போல!

நாடி நாடி நரசிங்கா! said...

(ஆனா இவ்ளோ சமயம் எம்பெருமான் ஏற்படுத்தி கொடுத்தும் ஒரு சிலர் இருக்காங்க! என்னமோ ஞானி மாதிரி நேற்று பொறந்துட்டு கடவுளே இல்லன்னு சொல்வாங்க! அது வேற விஷயம்)

In Love With Krishna said...

நீரே எம்மையுடையவர்! உமது திருவடிகளே சரணம்! சரணம்! ஆகா! திருமுடி பரமேஸ்வரன் என்று ஒளிவீசிக் காட்டுகின்றதே என்று திருவடிகளையடைய வந்தேன்! அடியேனுக்கே உரிய அந்தத் திருவடிகளின் அழகும் ஒளியும் திருமுடியின் அழகையும் ஒளியையும் மிஞ்சுவதாக இருக்கிறதே! உமது திருவடிகளின் பேரொளியே நீர் நிற்கும் தாமரை மலராக பரந்து அலர்ந்துவிட்டதோ!:))

S.Muruganandam said...

கே.ஆர்.எஸ். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வாழ்த்துக்கு நன்றி கைலாஷி ஐயா!

இப்போ கொஞ்சம் கேள்விகள் குமரன் அண்ணா! :)

1. கடிச்சோதி என்றால் என்ன?

2. சீர் எங்கு உலக்க ஓதுவனே? - உலக்க என்றால் என்ன?

3. ஆழ்வார்கள் ஜோதி ரூபமாய் பெருமாளை அனுபவித்து உள்ளனரா?
ஏன் கேட்கிறேன்-ன்னா, அருட்பெருஞ் சோதி என்பது பொதுவாக இறைவனுக்குப் பொருந்தினாலும், சிவபெருமானே ஜோதி வடிவமாகத் திகழ்பவர்! ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் சோதியை யாம் பாடக் கேட்டேயும் என்று துவங்குவது திருவெம்பாவை! அப்படி இருக்க, இங்கு ஆழ்வார் பரஞ்சோதி என்று பெருமாளை அழைப்பது வியப்பாகவும் இனிப்பாகவும் இருக்கிறது!
//பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா! பண்புரைக்க மாட்டேனே!//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாது வாழ் மார்பினாய்!//

ஸ்ரீவத்சன் = மாமார்பன்!(திருமறுவன்)
எப்படியெல்லாம் தமிழாக்கம் அமைகிறது பாருங்கள்!

//உயர்ந்த கோலம் கொண்ட தேவர் தலைவன் உம்மை வழிப்பட்டால் உமது குற்றம் அடையாத திருப்பாத மலர்களின் பேரொளி மழுங்கிவிடுமே!//

ஏன், அமரர்கள் வழிபட்டால் திருவடிகளின் ஒளி குறைகிறதாம்? சற்றே விளக்க வேணும்! அப்போ நாம் வழிபட்டாலும் அப்படியா? குன்றாத திருவடிகளின் ஒளியும் குன்றிடுமா என்ன?

//பிறையேறு சடையானும்//

விடையேறு சடையான் என்றால் விடையின் மேல் ஏறு சடையான்! ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை!
பிறை ஏறு சடையான் எப்படி? எப்போது பிறையின் மேல் அவர் ஏறினார்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

/தொழுங் காதல் களிறு அளிப்பான் புள் ஊர்ந்து தோன்றினையே//

அது என்ன "காதல்" களிறு? இதுக்குத் தான் இந்தப் பாசுரங்களைச் சொல்லுமாறு அப்போது உங்க கிட்ட கேட்டு இருந்தேன்! :)

//அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து தோன்றினால் உமது பெரும் பேரொளி குன்றி விடாதா?//

அதானே! அதான் ஞானமே படையாக வைச்சி இருக்கானே!
அதைக் கொண்டே யானையைக் காத்து இருக்கலாமே! எதுக்கு அப்படி அலறி அடித்துக் கொண்டு ஓடியாற வேணும்?

தூணிலும் துரும்பிலும் இருக்கும் எம்பெருமான், முதலையின் பிடி/வாயிலும் அல்லவா இருக்கிறான்! அங்கே இருந்து கொண்டே யானையைக் காப்பாற்றி இருக்கலாமே! ஏன் அப்படி அலறி அடித்துக் கொண்டு ஓடியாற வேணும்?

//மழுங்காத ஞானமே படையாக மலர் உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே//

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதே மாலிருஞ்சோலை நம்பிக்குத் தான், நூறு தடா அக்காரவடிசில் சொல்லிக் காதல் நிறைவேற்றிக் கொண்ட கோதை! அதே போல், அதே நம்பிக்கு நானும் சொல்லி, சோலைமலை முருகா என்று அமைந்து கொள்கிறேன்!

முடிச்சோதிப் பாசுரம் இட்டு, வாழ்த்துச் சொல்லியமைக்கு நன்றி குமரன் அண்ணா!

சக கென சேகு, தகு திமி தோதி, திமி என ஆடும் மயிலோனே!!
திரு மலிவான "பழமுதிர் சோலை"
என் மனம் மிசை மேவு பெருமாளே!!
எனது முன் ஓடி வர வேணும்!!
எனது முன் ஓடி வர வேணும்!!

Radha said...

//அரிய தவத்தால் வந்ததோ என்னும் படி விளங்கும் ஆனால் உமக்கு இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த மலர்ந்து வீசும் கதிருடன் கூடிய சுடர்கின்ற திருமேனியுடன், இயல்பாக வருத்தமே இல்லாமல் அமைந்த என்றும் குறையாத விரியாத ஞானத்துடன், எல்லையில்லாமல் எங்கும் நிறைந்திருக்கின்றீர்!//
இந்த விளக்கம் கடினமானதாக இருக்கிறது குமரன். ஒரே பெரிய வரியாய் விரிகிறது.

Radha said...
This comment has been removed by the author.
Radha said...

Belated birthday wishes Ravi ! :-)

// ஆழ்வார்கள் ஜோதி ரூபமாய் பெருமாளை அனுபவித்து உள்ளனரா? //
"சோதியாகி எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி என்றால் அளவாகுமோ?"
உங்கள் இஷ்ட தெய்வமான திருவேங்கடத்தான் பாசுரம். :-)

மேலும் திருவாய்மொழி கடைசியில்...
"சூழ்ந்ததனில் பெரிய பர நண்மலர் சோதீயோ !"

Radha said...

//1. கடிச்சோதி என்றால் என்ன?
2. சீர் எங்கு உலக்க ஓதுவனே? - உலக்க என்றால் என்ன? //

திருவாய்மொழி உரை நுல்களில் இருந்து:
உலக்க = முடிய
கடி = இடை, அரை
கடிச்சோதி = அரையில் இருந்து கிளம்பும் ஒளி;

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//Radha said...
Belated birthday wishes Ravi ! :-)//

ரொம்ப நன்றி ராதா! :)

//உங்கள் இஷ்ட தெய்வமான திருவேங்கடத்தான் பாசுரம். :-)//

முடிவே கட்டிட்டீங்களா? :)

//கடிச்சோதி = அரையில் இருந்து கிளம்பும் ஒளி;//

இடுப்பில் இருந்து ஜோதியா? என்னவா இருக்கும்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்த விளக்கம் கடினமானதாக இருக்கிறது குமரன். ஒரே பெரிய வரியாய் விரிகிறது//

இதெல்லாம் குமரனுக்கு ஒன்னுமே இல்லை! 2006-07 பதிவைப படிச்சிப் பாருங்க! குமரன் மூச்சு விடாம ஒரே வரியில் ஒரு பத்தி முழுக்கச் சொல்லுவாரு! :)