Thursday, January 07, 2010

கூரத்தாழ்வானின் குரு பரம்பரை - 6 (ஆளவந்தார் யமுனைத்துறைவன்)

"வணக்கம் தேவராஜன் ஐயா. அடியேன்"

"வா குமரா. நலமாக இருக்கிறாயா?"

"உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசிகளினால் நலமாக இருக்கிறேன் ஐயா"

"இன்றைக்கு இங்கு வந்த நோக்கம் என்ன?"

"ஆளவந்தாரின் வாழித்திருநாமத்தைப் படித்துக் கொண்டிருந்தேன் ஐயா. அதில் சில ஐயங்கள். கேட்டுத் தெளிவு பெறலாம் என்றே வந்தேன்"

"அப்படியா! என்ன ஐயங்கள்?"

"அதற்கு முன் ஆளவந்தாரின் திருக்கதையைக் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா"

"சரி. சொல்கிறேன் கேள்"

***

இடம்: நாதமுனிகளின் திருக்குமாரரான ஈஸ்வரமுனிகளின் திருமாளிகை (சான்றோர்களின் சிறு வீட்டையும் திருமாளிகை என்பது வைணவ வழக்கு).
காலம்: ஈஸ்வரமுனிகளின் திருக்குமாரரான யமுனைத்துறைவன் சிறுவயதில் வேதங்களைக் கற்றுக் கொள்ளும் காலம்.

வேதங்களைக் கற்றுக் கொள்ளும் போது ஆசிரியர் ஒரு முறை சொல்ல, மாணவர்கள் அதனை இரு முறை திருப்பித் திருப்பிச் சொல்லி மனப்பாடம் செய்வது வழக்கம். அதனைச் சந்தை சொல்லுதல் என்பார்கள். அப்படியே யமுனைத்துறைவனுடன் பயிலும் மாணவர்கள் அனைவரும் இரு முறை திருப்பித் திருப்பிச் சொல்லி பயின்று கொண்டிருக்கின்றனர். சில நேரங்களில் முந்தைய நாள் படித்த பாடத்தையே மறு நாளும் படித்து வருவதும் உண்டு.

"யமுனைத்துறைவா. நீயும் மற்ற மாணவர்களைப் போல் வேதங்களைக் கற்றுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறாயே?"

"ஐயா. அவர்கள் ஓதினவிடத்தையே ஓதிக் கொண்டிருக்கிறார்கள்"

"ஓ. சந்தை சொல்கிறார்களா? அப்படி செய்தால் தானே வேத பாடம் மனதில் நிலைக்கும். நீயும் சென்று அவர்களுடன் ஓதுவாய்"

"ஐயா. அடியேனுக்கு இந்தப் பகுதி பாடம் ஆகிவிட்டது"

"அப்படியா? எங்கே சொல்!"

அந்தப் பகுதியை ஓரெழுத்தும் பிசகாமல் ஓரொலியும் பிசகாமல் யமுனைத்துறைவன் சொல்லுவதைக் கேட்டு அனைவரும் இவரின் மேதைமையைக் கண்டு வியக்கின்றனர். ஒரே ஒரு முறை ஆசிரியர் சொன்னதை உருப் போட்டு மனப்பாடம் செய்யும் திறன் யாருக்கு அமைந்திருக்கிறது? நான்கு வேதங்களையும் இப்படியே பல முறை உருப்போட்டு கற்காமல் ஒரே உருவில் கற்று மகிழும் இந்த சிறுவனை அனைவரும் வாழ்த்தினர்.

***

இடம்: சோழன் அரசவை
காலம்: அரசபுரோகிதன் ஆக்கியாழ்வான் செருக்கழியும் காலம்

பெரும்பண்டிதனான ஆக்கியாழ்வான் நாட்டில் இருக்கும் எல்லா புலவர்களையும் வென்று தனக்கு நிகர் யாருமில்லை என்றும் இன்னும் வாதப் போர் புரிந்து தன்னிடம் தோற்க யார் இருக்கிறார்கள் என்றும் அப்படியே யாராவது இருந்தால் அவர்களைத் தானாகவே வாதப்போருக்கு அழைப்பதும் என்று இருக்கிறார். யமுனைத்துறைவனின் ஆசிரியர் மஹாபாஷ்ய பட்டருக்கும் அப்படியே வாதப்போர் அழைப்பு வர அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு சிறுவனான யமுனைத்துறைவன் அரசன் அனுப்பிய பல்லக்கில் ஏறி சோழன் அரசவைக்கு வந்திருக்கிறார்.

"ஆகா. இந்தச் சிறுவனின் மேதைமை முகத்திலேயே தெரிகிறது. இவன் நிச்சயம் நம் ஆக்கியாழ்வாரை வாதத்தில் தோற்கடிப்பான்"

"தேவி. நம் ஆக்கியாழ்வார் எத்துணைப் பெரும்புலவர் என்று அறிந்துமா இப்படி சொல்கிறாய்? இவரோ கல்விக்கடலுக்குக் கரை கண்ட வயோதிகர். அவனோ சிறுவன். இவரை அவன் வெல்லுவது எங்ஙனம்?"

"அரசே. இந்தச் சிறுவன் தோலான் (தோல்வியடையமாட்டான்). அதில் எனக்கு உறுதியுண்டு. அப்படி அவன் தோற்றால் என்னை முரட்டு நாய்களுக்கு இரையாக இடலாம்"

"தேவி. அவன் தோற்பான் என்பதில் எனக்கு உறுதியுண்டு. அவன் வென்றானாகில் என் அரசில் பாதியை அவனுக்குத் தருகிறேன்"

"அரசே. வாதத்தைத் தொடங்கலாமா?"

"தொடங்குங்கள்"

"சிறுவா! உன் ஆசிரியரை அழைத்தால் நீ வந்ததென்ன?"

"ஐயா. தங்களை வாதப்போரில் வெல்ல அடியேனே போதும் என்பதால்"

"ஹாஹாஹா. சரியான வேடிக்கை. சரி தான். உன் பெயர் என்ன?"

"அடியேன் பெயர் யமுனைத்துறைவன்"

"யமுனைத்துறைவா. இந்த வாதத்தை விரைவில் முடிக்கும் வகையில் ஒரு உத்தி செய்யலாம். நீ உண்டு என்று சொல்வதை நான் இல்லை என்று சொல்வேன். நீ இல்லை என்று சொல்வதை நான் உண்டு என்று சொல்வேன். அப்படி சொல்ல இயலாவிட்டால் தோற்றவனாவேன். வென்றவர் தோற்றவர் தலையில் குட்டலாம்"

"அப்படியே ஐயா. இதோ மூன்று வாக்கியங்களைச் சொல்கிறேன். அவற்றை இல்லை என்று நிறுவுங்கள்.

உங்கள் அன்னை மலடியில்லை.

இந்த அரசன் சார்வபௌமன் (அனைத்துலகுக்கும் அரசன்; தூய்மையில் சிறந்தவன்).

இந்த அரசி கற்புக்கரசி"

'ஆகா. என்ன விபரீதம் இது?! சிறுவன் என்று அலட்சியமாக இருந்துவிட்டேனே. என் தாய் மலடி தான் என்று எப்படி என்னால் வாதிடமுடியும்?! அவள் மகன் நான் தான் இங்கே இவர்கள் முன் நிற்கிறேனே?! அரசன் சார்வபௌமன் இல்லை என்றோ அரசி பதிவிரதை இல்லை என்றோ இந்த அவையிலேயே நான் சொல்லத் தான் இயலுமா? சொல்லி உயிர் பிழைக்கவும் கூடுமா? நல்ல சங்கடம் வந்ததடா நமக்கு'

"யமுனைத்துறைவா. நான் தோற்றேன். இந்த வாக்கியங்களுக்கு மறுப்பாக என்னால் ஒன்றும் சொல்ல இயலாது".

"ஆகா. இது என்ன விந்தை?! நம் ஆக்கியாழ்வார் தோற்பதா? யமுனைத்துறைவரே! நீர் வென்றீர் என்று உறுதிபடுத்த வேண்டுமெனில் இந்த வாக்கியங்களை நீரே மறுத்துக் கூறும்! அப்படி கூற இயலவில்லை எனில் யாரும் இங்கே வென்றதாக ஆகாது"

"அப்படியே அரசே.

உலக வழக்கிலும் உண்மையிலும் இந்த வாக்கியங்களை மறுக்க இயலாது. ஆனால் வாதத்தில் சாத்திரப் பிரமாணம் என்று ஒன்று உண்டு. அதனைக் கொண்டு இந்த வாக்கியங்களை மறுக்க இயலும். இது வெறும் வாதத்திற்குத் தானே ஒழிய உண்மையில் இல்லை. இதனை ஏற்றுக் கொண்டால் மேலும் விளக்குகிறேன்"

"எல்லோரும் ஏற்றுக் கொள்கிறோம். விளக்குங்கள் யமுனைத்துறைவரே!"

"ஒரு மரம் தோப்பாகாது. ஒரு பிள்ளையைப் பெற்றவள் அந்தப் பிள்ளைக்கு என்ன ஆகுமோ என்று எப்போதும் பயந்து கொண்டே இருப்பதால் பெற்றும் பெறாதவள் ஆகிறாள். ஆக்கியாழ்வார் அவர் தாய்க்கு ஒரே பிள்ளை. அதனால் ஒரே பிள்ளை பெற்ற அவர் தாயாரை மலடி என்றும் சொல்வதில் தவறில்லை.

நீர் உமது நாட்டிற்கு மட்டுமே அரசன். உம் நாட்டை விட்டுச் சென்றால் உமக்கு மரியாதை இல்லை. அதனால் உம்மை சார்வபௌமன் (எல்லா பூமியையும் உடையவன்) என்று சொல்ல முடியாது என்னில் அதுவும் தவறில்லை. அது மட்டும் இன்றி குடிமக்கள் செய்யும் பாவங்களில் அரசனுக்கும் பங்கு உண்டு என்று சாத்திரங்கள் சொல்வதால் நீங்கள் பாவமே இல்லாத தூய்மையானவர் என்றும் சொல்ல இயலாது.

திருமணத்தின் போது தெய்வங்களான சோமன், கந்தர்வன், அக்னி என்னும் மூன்று பேரை ஒரு பெண் குறியீட்டு முகமாக மணந்து கொண்ட பின்னரே ஒரு மனிதனை மணக்கிறாள். அதனால் நடப்பில் கற்புக்கரசியாக அரசியார் இருந்தாலும் ஒரு வாதத்திற்காக அரசியார் நான்கு பேரை மணந்தவர் என்று சொல்லலாம்."

"ஆகா. ஆகா. ஆகா. அருமையான விளக்கங்கள். யமுனைத்துறைவா. நீ வென்றாய் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நாம் முன்பே சொன்னது போல் தோற்ற என் தலையில் குட்டுவாய்"

"ஐயா. நீங்கள் வயதில் மூத்தவர். நானோ சிறுவன். நான் தங்கள் தலையில் குட்டுவது தகாது. என்னை வற்புறுத்தாதீர்கள்"

"அடடா. என்னே இந்த சிறுவனின் பணிவு. தேவி. நீ சொன்னது போல் இந்தச் சிறுவன் வென்று விட்டான். நானும் சொன்னதைப் போல் என் அரசில் பாதியை இவனுக்குத் தருகிறேன். இனி நீ நாய்களுக்கு இரையாக வேண்டாம்.

இந்த சிறுவனை அருகில் அழைத்துக் கொண்டு வாருங்கள்"

யமுனைத்துறைவர் வெற்றி பெற்றதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஆரவாரத்துடன் அவரைத் தங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டு அரசனுக்கும் அரசிக்கும் அருகில் கூட்டி வந்தார்கள். அருகில் வந்ததும் அரசி மிகவும் அன்புடன் சிறுவனான யமுனைத்துறைவனை 'ஆளவந்தீரே' என்று சொல்லி உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டாள். ஆளவந்தாரும் அரசன் தந்த பாதி நாட்டை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

***

'நம் ஆசாரியர் அவரது ஆசாரியரின் ஆசையை நம்மிடம் தெரிவித்துவிட்டு திருநாட்டுக்கு எழுந்தருளி (காலமாகி) வெகு நாட்கள் ஆகின்றன. நம்மால் இன்னும் யமுனைத்துறைவனைச் சென்று காண இயலவில்லையே. எப்போது அவர் மாளிகைக்குச் சென்றாலும் கடுங்காவல் இருக்கிறது. உள்ளே சென்று அரசனைக் காண இயலவில்லை. என்ன செய்வது?'

நாதமுனிகள் தன் சீடரான உய்யக்கொண்டாரிடமும், உய்யக்கொண்டார் தன் சீடரான மணக்கால் நம்பியிடமும் தந்திருந்த கட்டளையைப் பற்றி மணக்கால் நம்பி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். தன் பேரன் யமுனைத்துறைவன் தக்க வயது வந்த பின்னர் அவனிடம் வைணவ சமயத் தலைமைப் பொறுப்பை தர வேண்டும் என்பது நாதமுனிகளின் கட்டளை. அதனை நிறைவேற்றத் தான் தகுந்த நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் வயோதிகரான மணக்கால் நம்பிகள்.

'இன்றைக்கும் ஒரு முறை யமுனைத்துறைவன் மாளிகைக்குச் சென்று பார்ப்போம்".

ஆளவந்தாரின் மாளிகைக்குச் சென்று பார்த்தால் வழக்கம் போல் கடுங்காவல் இருக்கிறது. உள்ளே செல்ல இயலவில்லை. அந்த நேரத்தில் மாளிகையில் சமையல் செய்யும் அந்தணர் ஒருவர் அங்கே வருகிறார்.

"அந்தணரே. அரசருக்கு மிகவும் பிடித்த உணவு எது?"

"பெரியவரே. அவருக்குத் தூதுவளைக்கீரை என்றால் மிகவும் பிடிக்கும். நானும் மாதம் ஒரு முறையாவது அக்கீரையைச் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அக்கீரை கிடைப்பதில்லை"

'இதனை முயன்று பார்த்தால் என்ன? நம் வீட்டிற்கு அருகில் தூதுவளைக் கீரை தழைத்து வளர்கிறது. அதனைக் கொண்டு வந்து கொடுத்தால் யமுனைத்துறைவன் எங்கிருந்து கிடைத்தது இந்தக் கீரை என்று கேட்பான். இந்த சமையல்காரரும் நம்மைப் பற்றி சொல்ல அவன் நம்மைப் பார்க்க விரும்பலாம். அப்படியே செய்து பார்ப்போம்'

"அந்தணரே. இனி வருந்த வேண்டாம். நாளை முதல் தினந்தோறும் தூதுளைக்கீரையை நான் கொணர்ந்து தருகிறேன்"

"ஆகா. அப்படியே செய்யுங்கள் பெரியவரே. அரசர் மிகவும் மகிழ்வார்"

தொடர்ந்து ஆறு மாதங்கள் தினந்தோறும் மணக்கால் நம்பிகள் யமுனைத்துறைவரின் சமையல்காரரிடம் தூதுவளைக் கீரையைத் தந்து வருகிறார். ஆனால் யமுனைத்துறைவரைப் பார்க்கும் வாய்ப்பு தான் இன்னும் கிடைக்கவில்லை. மிகவும் வருந்திய மணக்கால் நம்பிகள் சில நாட்கள் கீரையைத் தராமல் விடுகிறார்.

"பரிசாரகரே. சில நாட்களாக தூதுவளைக் கீரையைக் காணவில்லையே. ஏன்?"

"அரசே. ஆறு மாதங்களாக ஒரு அந்தணப் பெரியவர் அக்கீரையைத் தந்து வந்தார். சில நாட்களாக அவர் வரவில்லை. அதனால் தான் சாப்பாட்டில் கீரை இல்லை"

"ஆறு மாதங்களாக வருகிறாரா அந்தப் பெரியவர். அடடா. அவருக்கு என்ன தேவையோ? கவனிக்காமல் விட்டுவிட்டோமே. பரிசாரகரே. அடுத்த முறை அவர் வந்தால் எனக்குச் சொல்லுங்கள்"

மறுநாளே மணக்கால் நம்பிகள் கீரையுடன் வர சமையல்காரர் யமுனைத்துறைவரிடம் சொல்லி அவர் உத்தரவு பெற்று மணக்கால் நம்பிகளை யமுனைத்துறைவரிடம் அழைத்துச் சென்றார்.

"ஐயா. வாருங்கள். இந்த இருக்கையில் அமருங்கள். நீங்கள் ஆறு மாதங்களாக அடியேனுக்காக கீரை தந்து வருகிறீர்களாமே. அது எதற்காக? உங்களுக்கு ஏதேனும் செல்வம் வேண்டுமா? நிலம் வேண்டுமா?"

"ஆளவந்தாரே. எனக்கு அதெல்லாம் வேண்டாம். உங்கள் முன்னோர்கள் தேடி வைத்த செல்வம் என்னிடம் இருக்கிறது. அது இருக்கும் இடம் நான் அறிவேன். உமக்கு அந்த செல்வத்தைத் தரவே உம்மைக் காண விரும்பினேன். அந்த செல்வத்தை நீர் அடையும் காலம் வரும் வரையில் நான் இங்கே தடையின்றி வந்து செல்லும்படி ஆணையிட வேண்டும்"

"அப்படியே ஐயா"

அரசரின் ஆணை இருந்ததால் மணக்கால் நம்பி எந்த தடையும் இன்றி ஆளவந்தாரைத் தினந்தோறும் காண இயன்றது. பகவத் கீதையின் பதினெட்டு அத்தியாயங்களும் ஆளவந்தாருக்கு கற்பித்தார் மணக்கால் நம்பி. பயிர் முதிர்ந்து வர வர தலைசாய்வதைப் போல கீதையைக் கற்க கற்க ஆளவந்தாருக்கு அவரது முன்னோர் செல்வத்தை அடையும் மனநிலை முழுதும் தோன்றியது. இதுவே தக்க தருணம் என்று எண்ணி மணக்கால் நம்பியும் ஆளவந்தாரைத் திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று 'இதுவே உம் முன்னோர் சொத்து' என்று திருவரங்க நாதனைக் காட்டியருளினார்.

அன்று முதல் நிலையாக திருவரங்கத்திலேயே இருந்து வைணவத் தலைமையை ஏற்றுக் கொண்டார் ஆளவந்தார்.

***

"மிக்க நன்றி ஐயா. யமுனைத்துறைவரின் திருக்கதையைக் கேட்ட பின்னர் அவரது வாழித்திருநாமத்தின் வரிகள் மிக நன்றாகப் புரிகின்றன. அந்தப் புரிதலைச் சொல்கிறேன். அவை சரி தானா என்று சொல்லுங்கள்"

"ஆகட்டும் குமரா. சொல்"

"மச்சணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே
மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே
பச்சை இட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே
பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே
கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே
கடக உத்திராடத்துக் கால் உதித்தான் வாழியே
அச்சமற மனமகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே

மச்சு அணியும் மதிள் அரங்கம் வாழ்வித்தான் வாழியே! மாடங்கள் நிறைந்த, ஏழு மதில்களால் சூழப்பட்ட திருவரங்கத்தை வைணவ தலைமைத் தலமாக ஆக்கி வாழ்வித்தவன் வாழ்க! ஆளவந்தார் காலத்தில் தான் திருவரங்கத்தில் நிலையாக வைணவத் தலைமைப் பீடம் அமைந்தது. அதற்கு முன்னர் நாதமுனிகள் காலத்திலும் மற்ற ஆசாரியர்கள் காலத்திலும் திருவரங்கத்திற்கு முதன்மை இருந்தாலும் வைணவத் தலைமைப் பீடம் அங்கே நிலையாக அமையவில்லை. ஆளவந்தாரே அப்படி அமைத்து திருவரங்கத்தை வாழ்வித்தவர்.

மறை நான்கும் ஓர் உருவில் மகிழ்ந்து கற்றான் வாழியே! நான்கு வேதங்களையும் ஒரே தடவை சொல்லி மகிழ்ச்சியுடன் கற்றவன் வாழ்க! மற்றவர் போல் பல முறை சொல்லி வேதங்களைக் கற்காமல் ஒரே தடவையிலேயே வேதங்களைக் கற்கும் மேதைமை கொண்டவர் ஆளவந்தார்.

பச்சை இட்ட ராமர் பதம் பகரும் அவன் வாழியே! பச்சை என்னும் தூதுவளைக் கீரையைத் தந்து, திருத்தி ஆட்கொண்ட ராமமிச்ரரான மணக்கால் நம்பிகளின் சீடராக ஆகி அவரது திருவடிகளை என்றும் போற்றுபவன் வாழ்க!

பாடியத்தோன் ஈடேறப் பார்வை செய்தோன் வாழியே! பாஷ்யக்காரர் என்று பெயர் பெற்ற இராமானுசர் உய்யும்படி அவரைக் குளிரக் கண் பார்வை செய்தவன் வாழ்க! இராமானுசர் காஞ்சிபுரத்தில் அத்திகிரி வரதன் சன்னிதியில் திருப்பணி செய்து வரும் போது அங்கு வந்து தூரத்தில் இருந்து இராமானுசரைக் கண்டு 'ஆமுதல்வன் இவனே. நம் சமயத்தை நிலை நிறுத்தப் போகிறவன் இவனே' என்று சொல்லி இராமானுசரைக் குளிரக் கண் பார்வை செய்தவர் ஆளவந்தார்.

கச்சி நகர் மாயன் இரு கழல் பணிந்தோன் வாழியே! காஞ்சிபுரம் அத்திகிரி வரதனான பேரருளாளனிடம் இராமானுச முனியை வைணவ சமயம் விளங்கத் தந்தருளுமாறு பேரருளாளன் திருவடிகளைப் பணிந்தவன் வாழ்க!

கடக உத்திராடத்துக் கால் உதித்தான் வாழியே! ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தவன் வாழ்க! சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் நடை பயிலுவதால் எந்த மாதத்தில் எந்த ராசியில் இருக்கிறானோ அந்த மாதத்திற்கு அந்த ராசியைப் பெயராகக் கூறும் வழக்கம் உண்டு. அதன் படி கடகராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம்.

அச்சம் அற மன மகிழ்ச்சி அணைந்திட்டான் வாழியே! வைணவ சமயம் தழைக்க வேண்டுமே என்ற தனது அச்சம் இராமானுசரால் தீர அதனால் மன மகிழ்ச்சி அணைந்தவன் வாழ்க!

ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே! ஆளவந்தாரின் திருவடிகள் இரண்டும் எப்போதும் வாழ்க வாழ்க!

பொருள் சரி தானா ஐயா?"

"சரி தான் குமரா"

"அன்று இராமானுசரைத் தர வேண்டி அத்திநகர் தேவராஜனிடம் பணிந்தார் ஆளவந்தார். அவருடைய வாழித் திருநாமத்தின் பொருள் வேண்டி இன்று அடியேனும் தேவராஜனிடம் பணிந்தேன்.

மிக்க நன்றி ஐயா!"

16 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!
ஆளவந்தார் தாளிணைகள் அனவரதம் வாழியே!

இராமானுசரின் மானசீக குருவான ஆளவந்தார் திருவடிகளே சரணம்!

தூய பெரு நீர்
"யமுனைத் துறைவனை"
தூயோமாய் வந்தோம், தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க...

பித்தனின் வாக்கு said...

நல்ல கருத்துக்கள். மிக்க மகிழ்ச்சி. வைணவாக இருந்தும் எனக்கு ஏனே இந்த ஆச்சாரியர்கள் பால் மனம் ஒப்ப மாட்டேங்குது. அனாலும் ஆழ்வார்களின் மீது பற்றுதல் உண்டு. நன்றி அய்யா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமரன் அழகான அற்புதமாக எளிமையாகவும் சரித்திரத்தைக் கொடுத்திருக்கிறீர்கள்.
உங்கள் பதிவை இன்று படிக்க நேர்ந்தததும், இன்றைய குமுதம் இதழில் மதுரை சௌராஷ்ட்ரர்கள் தமிழர்கள் பற்றி ஒரு கட்டுரை வந்ததும் அதிசயம் அதிசயம்.
அதைவிட அதிசயம்,
4 ஆம் தேதி துளசிகோபாலுடன் புத்தகக் கண்காட்சிக்குப் போகும்போது, அப்படியே தத்ரூபம ஒரு ஆழ்வார் போல ஒருவர் உட்கார்ந்திருந்தது தான்.
அவரிடம் பேசாமல் வந்தது எனக்கு வருத்தமே. வேஷமிட்டவர் என்று மற்றவர் சொன்னாலும் நான் அவரை
மதுரைஸ்ரீ நடனகோபால நாயகி சுவாமிகள் போல வே இருந்தார். அப்படியே நினைத்தேன். பகவான் அற்புதம் செய்யும் இடம் எங்கெல்லாமொ இருக்கிறது.
நீங்கள் இவரப் பார்க்கவில்லையே என்று தோன்றுகிறது.
இந்த வாரக் குமுதம் 13/1/2010 தேதியிடப்பட்டதைப் பாருங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தூதுவளைக் கீரைக்கு ஆங்கிலத்தில் என்ன பேரு குமரன்?
இங்கிட்டு வாங்கிச் சாப்பிடலாம்-ன்னு தான்! :)
ஆளவந்தார் உண்ட கீரையை அடியேனும் உண்ண ஆசை!

Radha said...

மிக நன்றாக உள்ளது குமரன். :)
எளிமையாகவும் உள்ளது இன்னும் சிறப்பு. "ஓர் உருவில்" என்பது இது தானா?
"மனப்பாடம் செய்வதை", "உரு போடுவது" என்று சொல்லி கேட்டு உள்ளேன்.
இப்பொழுது விளங்குகிறது. :)

மெளலி (மதுரையம்பதி) said...

குருபரம்பரைத் தொடர் அருமை....அறியத் தந்தமைக்கு நன்றிகள் குமரன்.

மெளலி (மதுரையம்பதி) said...

தொடர் முடிவில் ஒரு ஆர்க் ஸ்ட்ரக்சர் போட்டுக் கொடுங்கள் குமரன், என்னைப் போன்ற மறதி அதிகமுள்ளவர்கள் மனதில் வாங்கிக் கொள்ள ஏதுவாகும்.

குமரன் (Kumaran) said...

பித்தனின் வாக்கு ஐயா. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

தங்களின் பதிவினைப் பார்த்தேன். இப்போது 'வெள்ளியங்கிரி மலை புனிதப் பயணம்' தொடரைப் படித்துக் கொண்டிருக்கிறேன். மிகவும் நன்றாக இருக்கிறது.

குமரன் (Kumaran) said...

குமுதத்தில் வந்திருக்கும் கட்டுரையைப் பற்றிய தகவலுக்கு நன்றி வல்லியம்மா. இணையத்தில் சந்தா கட்டாததால் இக்கட்டுரையைப் படிக்க இயலவில்லை. நல்லவேளையாக ஒரு நண்பர் இக்கட்டுரையை எடுத்து அனுப்பினார். படித்தேன். நன்றாக இருந்தது.

கீதாம்மா பதிவில் புத்தகக் கண்காட்சியில் சௌராஷ்ட்ரர்களின் பணிகளை விளக்கும் இடம் இருந்தது என்று படித்த போது நடனகோபால நாயகி சுவாமிகளைப் பற்றிய செய்தியும் அங்கு இருந்திருக்கலாம் என்று நினைத்தேன். ஒருவர் அவரைப் போல் வேடமிட்டு அமர்ந்திருந்தார் என்பதை உங்கள் பின்னூட்டத்தால் அறிந்தேன்.

நன்றி அம்மா.

குமரன் (Kumaran) said...

இரவி. இங்கே கிடைக்கிற ஒரே கீரை 'ஸ்பினாச்' தான். இந்தியக் கடைகளில் மற்ற கீரைகள் கிடைக்கின்றன. அதனால் தூதுவளை என்றே கேட்டு வாங்கலாம் என்று நினைக்கிறேன். :-)

குமரன் (Kumaran) said...

இராதா. எளிமையா இருந்துச்சா? மகிழ்ச்சி. நன்றி. :-)

ஆமாம். தேவ் ஐயா தான் 'ஓர் உருவில்' என்பதற்குப் பொருள் சொன்னார். அதற்கு முதல் நாள் தான் நீங்கள் அனுப்பிய 'குருபரம்பரா பிரபாவம்' படித்திருந்தேன். அதில் இந்த ஏகசந்தகிராஹி என்பதைப் படித்தது உடனே நினைவிற்கு வந்தது.

குமரன் (Kumaran) said...

மௌலி. நீங்க கேட்டதற்கு இன்னொரு வகையில் இரவி ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார். பிப்ரவரி தொடக்கத்திற்குள் அதனை இடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். பிப்ரவரி 3ம் தேதி கூரத்தாழ்வார் 1000வது ஆண்டு நிறைவாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

வழக்கம் போல...இன்னொரு வாழித் திருநாமம்...இதோ...

நாகணையான் வீர நாராயணத்து உதித்தான் வாழியே!
நற் கடக உத்திராடத்து அவதரித்தான் வாழியே!
போகம் உறு மணக்காலான் பொன் அடியோன் வாழியே!
பொய் ஆறு அங்கு மதி மதத்தின் பூண்டறுத்தான் வாழியே!

ஊகமுடைத் தத்துவார்த்த நிலையிட்டான் வாழியே!
உடையவரும் ஈடேற உகந்து இருந்தான் வாழியே!
அழகாரும் ஆளவந்தார் அடி இணை தான் வாழியே!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவி. பொருளும் சொல்லுங்கள். எனக்கு சில சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இதோ குமரன், சிறு விளக்கம்...

//நாகணையான் வீர நாராயணத்து உதித்தான் வாழியே!//
நாக அணையில் வீற்றிருக்கும் பெருமாளை உடைய வீர நாராயணபுரம் எனும் ஊரில் பிறந்தான் வாழியே!

//நற் கடக உத்திராடத்து அவதரித்தான் வாழியே!//
ஆடி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் பிறந்தான் வாழ்க!

//போகம் உறு மணக்காலான் பொன் அடியோன் வாழியே!//
இறைவனைப் போகத்தால் (அன்பால், சரணாகதியால்) அடைந்த மணக்கால் நம்பியின் பொன் அடிகள் பணிந்தவன் வாழியே!

//பொய் ஆறு அங்கு மதி மதத்தின் பூண்டறுத்தான் வாழியே!//
சரியற்ற வழியை (பொய் ஆறு) காட்டி, மதி என்னும் மனித அறிவையே பெரிதாகக் கொண்டு, இறைவனைத் தள்ளும்...சாங்கியம் முதலான ஆறு மதங்களின் அடிப்படையைத் தகர்த்தான் வாழியே!

//ஊகமுடைத் தத்துவார்த்த நிலையிட்டான் வாழியே!//
மிகவும் ஊக்கம் கொண்டு, விசிட்டாத்துவைத (விதப்பொருமை) தத்துவார்த்தங்களை நிலை நிறுத்தினான் வாழியே! (ஸ்தோத்ர ரத்னம், கீதார்த்த சங்கிரஹம், சித்தி த்ரயம் முதலான நூல்களின் வாயிலாய்)

//உடையவரும் ஈடேற உகந்து இருந்தான் வாழியே!//
உடையவரான இராமானுசர் மெள்ள மெள்ள ஈடேறி, சம்பிரதாயத்துக்கு வரும் வரை, அவரை உகந்து இருந்தான் வாழியே!

//அழகாரும் ஆளவந்தார் அடி இணை தான் வாழியே!//
அழகான ஆளவந்தார் திருவடிகள் வாழியே!

குமரன் (Kumaran) said...

விளக்கத்திற்கு நன்றி இரவி.