Monday, January 11, 2010

நான் தமிழன்!

நான் தமிழன் (தமிழ் சௌராஷ்ட்ரர்கள்) என்ற தலைப்பில் குமுதம் இதழில் வந்த இரா. மணிகண்டனின் கட்டுரை:

தமிழ்நாட்டில் 'தமிழ்த்தாய்' வாழ்த்துப் பாட யாருமே முன்வரவில்லை. அழைப்பு விடுத்த அன்றைய முதல்வர் கலைஞருக்கு இது பேரதிர்ச்சி. ஆனால் துணிந்து பாடி வரலாற்றில் இடம்பெற்றார் டி.எம். சௌந்தர்ராஜன். பி. சுசீலாவுடன் இணைந்து அவர் பாடிய 'நீராருங் கடலுடுத்த...' என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான், இன்றைக்கு தமிழ் நெஞ்சங்கள் அனைத்திலும் குடிகொண்டிருக்கிறது. துணிச்சல் மிக்க மதுரைக்காரர் என்று பாராட்டியது கலைஞர் மட்டுமல்ல தமிழ்த்தாயும்தான். அந்தக் குரலில் இருந்த கம்பீரம், தமிழைத் தலைநிமிர வைத்தது.


கோடானகோடி தமிழ் இதயங்களைக் கொள்ளை கொண்ட அந்த வெண்கலக்குரலை தமிழுலகிற்குத் தந்து பெருமை தேடிக் கொண்டது சௌராஷ்ட்ர சமூகம்.

இன்றைக்குத் தமிழகத்தின் பல பகுதிகளிலும் விரவியிருக்கும் சௌராஷ்ட்ர சமூகத்தார் பெரும்பாலும் பட்டு நெசவு நெய்பவர்களாகவும் பட்டு நூல் வியாபாரிகளாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் இவர்களை 'பட்டு நூல்காரர்கள்' என்கிறார்கள்.

குஜராத் பகுதிகளில் உள்ள சௌராஷ்ட்ர இனமக்களே சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்து தமிழகம் வந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இவர்களின் வருகை பற்றி பல்வேறு கருத்து முரண்கள் எழுகின்றன.

விஜயநகர ஆட்சியின் போது நாயக்க மன்னர்க ள் மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டனர். அப்போது நாயக்க மன்னர்களுக்குப் பட்டாடை நெய்து தருவதற்கு என்றே சில சௌராஷ்ட்ர குடும்பங்களை மதுரையில் குடியேற்றியதாகவே பலரும் கூறுகிறார்கள்.

அப்படி குடியேறியவர்கள் தமிழ்நாட்டுக் கலை, இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றில் பிரிக்கமுடியாத ஒரு அங்கமாக தங்களை நிலைநிறுத்திக்கொண்டனர். மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம், பரமக்குடி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஆரணி, சென்னை, கோவை, பெரியகுளம், திருபுவனம் என்று அவர்கள் பரந்து விரிந்து வாழுகிறார்கள்.

இன்றைக்கு சுமார் 20 லட்சம் மக்கள்வரை வாழும் இச்சமூகத்தார் வீட்டில் பேசுவது சௌராஷ்ட்ரம் என்றாலும் அவர்களின் வாழ்வாதார மொழி தமிழ்தான்.

பக்தி இலக்கியத்தில் சௌராஷ்ட்ரர் பங்கு குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. திருபுவனத்தில் தம் வழிபாட்டிற்காக ஒரு பெருமாள் கோயில் கட்டியுள்ளனர். சௌராஷ்ட்ர சபை நடத்தும் 'பக்தபிரகலாத நாடக சபை' நாடகக் கலைக்கு உயிர் ஊட்டி வருகிறது. ஸ்ரீமத் நடனகோபால நாயகி சுவாமிகள் (1843 - 1914) 'மதுரையின் ஜோதி' என்றும் சௌராஷ்ட்ர ஆழ்வார் என்றும் போற்றப்படுபவர். கடவுளை நாயகனாகவும் தன்னை நாயகியாகவும் பாவித்து இவர் பாடிய கீர்த்தனைகள் பலரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவை.


சுதந்திரப் போராட்டத்தில் குதித்த பல சௌராஷ்ட்ர தொண்டர்களின் வீரவரலாறுகள் வெளியில் வராமலே போய்விட்டன. காந்தியத்தில் பற்றுக் கொண்ட ஏ.ஜி. சுப்புராமனும் அவரது புதல்வர் ஏ.ஜி.எஸ். ராம்பாபுவும் மதுரை எம்பியாக தலா இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அ.தி.மு.க. அரசில் அமைச்சராக இருந்த எஸ்.ஆர். ராதா, பா.ஜ.க.வின் முன்னாள் சேலம் எம்.எல்.ஏ. லட்சுமணன், கும்பகோணம் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஆர். ராமசாமி உள்ளிட்ட பலர் அரசியலில் பங்காற்றியுள்ளனர்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில் சௌராஷ்ட்ரர்களின் பங்கு அளவிடற்கரியது. தமிழ்த்திரை இசை உலகின் அடையாளமாகத் திகழ்ந்தவர் டி.எம். சௌந்தர்ராஜன்.

பட்டு நெசவு செய்யும் சமூகத்திலிருந்து பாட்டு நெசவு செய்தவர் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இரு சிகரங்களைத் தன் குரலால் உயர்த்திப் பிடித்தவர். ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி சாதனை செய்தவர்.


ஏ.எல். ராகவன் இன்னொரு சௌராஷ்ட்ர சமூகம் தந்த இசைக்கொடை. 'சீட்டுக்கட்டு ராஜா', 'என்ன வேகம் நில்லு பாமா', 'அங்கமுத்து தங்கமுத்து' உள்ளிட்ட பல பாடல்களால் தமிழ்த்திரை இசை உலகிற்கு அணி சேர்த்த ஏ.எல் ராகவன், நடிகை எம்.என். ராஜமின் கணவர் என்பது கூடுதல் சிறப்பு. எம்.என். ராஜம், எம்.ஜி.ஆர்., சிவாஜி, என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்தவர். எம்.ஆர். ராதாவுடன் நடித்த 'ரத்தக் கண்ணீர்' அவரது சினிமா வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனை.

'அத்தானும் நான் தானே', 'சித்தாடை கட்டிக்கிட்டு', 'மண்ணை நம்பி மரமிருக்கு..' போன்ற பல பாடல்களைத் தந்து தமிழர் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்த எஸ்.சி. கிருஷ்ணன் சௌராஷ்ட்ர சமூகத்தவரே.



இயக்குநர் ஸ்ரீதரால் 'வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்யப்பட்ட வெண்ணிற ஆடை நிர்மலா 100 படங்களுக்கும் மேல் நடித்து திரையுலகில் முத்திரை பதித்த தனிப்பெரும் கலைஞர்.

இலக்கிய உலகிலும் சௌராஷ்ட்ர சமூகத்து மக்கள் தனி முத்திரை பதித்துள்ளனர்.

இராமராய் என்பவர் சௌராஷ்ட்ர எழுத்தை மீட்டெடுத்தவர். அதனால் இராமராய் லிபி என்றே குறிப்பிடுபவரும் உண்டு.


'மணிக்கொடி' காலத்து முதுபெரும் எழுத்தாளர் எம்.வி. வெங்கட்ராம். தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க ஆளுமை. தனது 'காதுகள்' நாவலுக்கு சாகித்ய அகாடமி விருதினைப் பெற்றுத் தந்து, தமிழை கௌரவித்தவர். இவரது 'வேள்வித் தீ' நாவல் தமிழுக்கு சௌராஷ்ட்ர சமூகம் பற்றிய பதிவாகும்.

இவரைத் தொடர்ந்து சாகித்ய அகாடமியின் சௌராஷ்ட்ர மொழிக்கான 'பாஷா சம்மான்' விருது, தமிழகத்தில் சௌராஷ்ட்ரர் வரலாறு எழுதிய கே.ஆர். சேதுராமனுக்கும் சௌராஷ்ட்ர இலக்கணம், ராமாயணம் எழுதிய தாடா. சுப்ரமணியனுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

நாவல் இலக்கியத்தில் தனியொரு முத்திரை பதித்த சுபா என்ற இரட்டையர்களில் பாலகிருஷ்ணன் சௌராஷ்ட்ரம் தந்த கொடையே.

சென்ற நூற்றாண்டுவரை ஒரு ஊர் சௌராஷ்ட்ரர்கள் மற்ற ஊர் சௌராஷ்ட்ரர்களுக்கு பெண் கொடுக்க மாட்டார்கள். ஆனால் இப்போது எல்லாமே மாறி கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்கின்றனர். திருமணத்தின்போது அவர்களின் வரலாற்றைச் சொல்லும் நிகழ்ச்சி மிக முக்கியமாக இடம்பெறுவது சிறப்பு. இன்றைக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் சௌராஷ்ட்ரர்கள் சகோதர பாசம்மிக்கவர்களாகவும் தமிழின் ஒரு அங்கமாகவும் விளங்குவது தமிழுக்கு உயர்வு.

நன்றி: குமுதம் 13.1.2010 இதழ்

***

17 பிப்ரவரி 2010 அன்று சேர்க்கப்பட்டது:

'சௌராஷ்ட்ர மேதாவி', 'சௌராஷ்ட்ர எழுத்தின் விஸ்வகர்மா', மேதகு தொப்பே. முனிசவ்ளி ராமாராய் அவர்களின் திருவுருவச் சிலை மதுரை தெற்கு கிருஷ்ணன் கோவில் ஆண்டாள் சன்னிதித் தூண்கள் ஒன்றில் இருக்கிறது. அப்படத்தைத் திரு. மார்கண்டேயன் சுரேஷ்குமார் அனுப்பினார். அதனை இங்கே இடுகிறேன்.

20 comments:

ஜீவி said...

எம்.என்.ராஜம் அவர்கள் தமிழை மிக அழகாக, அழுத்தம் திருத்தமாக உச்சரித்து நடித்த நடிகை என்று பாராட்டுப் பெற்றவர்.

Unknown said...

நல்ல கட்டுரை குமரன்.

தமிழக சவுராஷ்டிரர்களுக்கு சவுராஷ்டிர மொழியில் எழுத தெரியுமா?இல்லை பேசுவதுடன் சரியா?குஜராத்தில் பேசப்படும் சவுராஷ்டிர மொழியை ஒப்பிடுகையில் தமிழக சவுராஷ்டிர மொழி மாறிவிட்டதா?ஏன் கேட்கிறேன் என்றால் இதேபோல் கோவையில் குடியேறிய கன்னட, மலையாள, தெலுங்கு பேசும் மொழிசிறுபான்மையினருக்கு தம் தாய்மொழியில் எழுத வராது.பேச்சு மட்டும்தான்.ஒரிஜினல் கன்னடம்,தெலுங்கு,மலையாளத்திலிருந்து இவர்கள் பேசும் மொழிகள் பெரிதும் மாறுபட்டு திரிந்து creole மொழிகளாகிவிட்டன

குறும்பன் said...

சௌராஷ்ட்ரர்கள் எடப்பாடியிலும் நிறைய என்று கேள்விப்பட்டுள்ளேன்.

தமிழ் said...

பகிர்வுக்கு நன்றிங்க‌

Unknown said...

தைதிருநாளும்]
தமிழ் திருநாளுமாகிய பொங்கல்அன்று தேசிய தமிழ் கீதத்தை [[நீராரும் கடலுடுத்த ]]] எல்லோரும் ஒரு தடவை யாவது பாடி மகிழ்வோமாக
இன்றைய கால கட்டத்தில் தமிழை கற்று தரவும்
அதை சரி வர புரிந்து கொள்ள முடியாமையில் இன்றைய தலை முறை இந்த
"அபூர்வ தேசிய கீத பாடலை "பாடீ மகிழட்டும்
.பாடலை நீங்கள் எழுதி விடுங்கள்




வாழ்க தைதிருநாள்
வளர்க தேசிய கீதம் ...//
சித்ரம்..//
.

.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நல்ல தொகுப்பு குமரன்!
இன்றைய தலைமுறைக்கு, மொழியின் வளம் பற்றிச் சொல்லி,
அதற்கு இது வரை செய்த பணிகள் பற்றிச் சொல்லி,
உற்சாகம் ஊட்ட, இது போன்ற கட்டுரைகள் அவசியம் வர வேணும்!

தமிழ் மொழிக்கு, செளராஷ்டிரத்தின் நற்பணிகளும்...
செளராஷ்டிரத்துக்கு, தமிழின் நல்லாசிகளும்...
என்றும் கிடைக்கட்டும்!

குமரன் (Kumaran) said...

ஆமாம் ஜீவி ஐயா. டி.எம்.எஸ்., எம்.என்.ராஜம், இவர்களெல்லாம் வீட்டில் வேற்று மொழியைப் பேசுபவர்கள் என்று சொன்னால் நம்புவது முதலில் கடினம் தான். அவ்வளவு நன்றாக இருக்கும் இவர்களது தமிழ் உச்சரிப்பு. (கல்லூரிக் காலம் வரையில் என் பெயர் எம். என். குமரன் - மல்லி நடராஜன் குமரன். அதனால் எம்.என். இராஜம் உங்க அக்காவா என்றும் எம்.என். நம்பியார் உங்க அண்ணாவா என்றும் நண்பர்கள் கிண்டல் செய்வார்கள். சில நண்பர்கள் எம்.என். குமரன் என்று அழைப்பது எமன். குமரன் என்று விளிப்பது போல் இருக்கும். :-) )

மாடல மறையோன் said...

எம்.என்.இராஜம், வெ.நிர்மலா போன்றோரின் இளமைக்கால படங்களைப்போட்டிருக்கலாம். இருவரும் பேரழகிகள் அல்லவா? ஒட்டுமொத்தத் தமிழ்கமே இவர்களை வேறொரு வகுப்பாரென்றல்ல்வா என நினைத்துக்கொண்டிருக்கிறது! அப்ப்டியிருக்க குமரன் வகுப்புப்பெண்டிரும் அழகானவர்களே எனத்தெரியுமல்லவா>

இவ்விருவரும் சிறந்த் நடிகைகள் (இராஜம் மிகச்சிறந்த நடிகை) எனினும், பெண்டிர் அழகு என்பது ஒரு வகுப்பாருக்குப் பெருமைதரும் விசயமே.

கட்டுரையின் ஒரு குறை: குமரன் வகுப்பார் மதுரையில் செய்த, செய்துவரும் கல்விச்சேவையைக் குறிப்பிடாததே. சினிமாத்துறைக்கே முக்கியம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இ.ஆ.பவில் பலர் இருக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

செல்வன். தமிழகச் சௌராஷ்ட்ரர்கள் சில பேர்களுக்கே சௌராஷ்ட்ர எழுத்தில் எழுதத் தெரியும். பெரும்பாலானோர் எழுத்து இருப்பதே தெரியாமல் தான் இருக்கிறார்கள். குஜராத்தில் குஜராத்தி மட்டும் தான் இருக்கிறது; சௌராஷ்ட்ர மாவட்டத்திலும் குஜராத்தி தான். தமிழக சௌராஷ்ட்ர மொழி குஜராத்தியுடன் கொஞ்சம் ஒத்துப் போனாலும் மராத்திக்கும் கொங்கணிக்கும் தான் நெருக்கமாக இருக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஏற்கனவே எழுதிய சில இடுகைகளைப் பார்த்தால் உங்கள் கேள்விகளுக்கு மேற்கொண்டு பதில்கள் இருக்கலாம். படித்துப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2008/06/blog-post_03.html

http://koodal1.blogspot.com/2008/06/blog-post_5471.html

குமரன் (Kumaran) said...

எடப்பாடி எங்கே இருக்கிறது குறும்பன்?

குமரன் (Kumaran) said...

நன்றி திகழ்.

குமரன் (Kumaran) said...

நன்றி சித்ரம்.

பாடல் இதோ:

நீர் ஆரும் கடல் உடுத்த நில மடந்தைக்கு எழில் ஒழுகும்
சீர் ஆரும் வதனம் எனத் திகழ் பரத கண்டம் இதில்
தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்
தக்க சிறு பிறை நுதலும் தரித்த நறும் திலகமுமே
அத்திலக வாசனை போல் அனைத்து உலகும் இன்பம் உற
எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழ் அணங்கே!
தமிழ் அணங்கே!
உன் சீர் இளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

குமரன் (Kumaran) said...

நன்றி இரவி.

குமரன் (Kumaran) said...

ஜோ அமலன் ராயன் பர்னாண்டோ ஐயா. எனக்கு நினைவு தெரிந்த போதிலிருந்து பார்த்த முகங்களைத் தான் இட்டிருக்கிறேன்; அவர்கள் அழகிகளாய் இளமையுடன் இருந்த காலத்தில் நான் பிறக்கவில்லையே - என்று சொன்னால் கோவித்துக் கொள்ள மாட்டீர்களே?! :-) இணையத்தில் தேடிய போது கிடைத்த படங்களைத் தான் இட்டேன். இளமையுடன் இருக்கும் படங்கள் கிடைக்கவில்லை.

மதுரையிலும் மற்ற இடங்களிலும் சௌராஷ்ட்ரர்கள் செய்யும் கல்விச் சேவையைப் பற்றிய குறிப்பு இக்கட்டுரையில் இல்லை என்பது குறை தான். இக்கட்டுரை ஏதோ இணையத்தில் கிடைத்த விக்கி தகவல்களைக் கொண்டு தொகுக்கப்பட்டது போல் தான் தோன்றுகிறது; கட்டுரையாளர் சௌராஷ்ட்ரர்களிடம் பேசினாரா இல்லையா என்று தெரியவில்லை.

சாதி என்ற சொல்லுக்கு இடக்கரடக்கலாக வகுப்பு என்ற சொல்லைப் புழங்கியிருக்கிறீர்கள் போலும். தமிழகத்தில் சௌராஷ்ட்ரர்கள் ஒரு தனி சாதியாகக் கொள்ளப்பட்டாலும் அது ஒரு மொழிக்குழுவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறேன்; தமிழர்கள் என்று குறித்தால் அது எப்படி ஒரு மொழிக்குழுவாக எடுத்துக்கொள்ளப்படுமோ அது போலவே சௌராஷ்ட்ரர்கள் என்று குறித்தால் அதையும் ஒரு மொழிக்குழுவாகவே எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சௌராஷ்ட்ரர்கள் இடையில் சாதி வேறுபாடுகள் இல்லை.

குறும்பன் said...

எடப்பாடி சேலம் மாவட்டத்தில் இருக்கு. இது ஒரு சட்டமன்ற தொகுதியும், நகராட்சியும் ஆகும். கும்பகோணம் - எடப்பாடி க்கு சோழன் போக்குவரத்து பேருந்து செல்லும். எங்க அப்பாகிட்ட எதுக்கு எடப்பாடியிலிருந்து கும்பகோணத்துக்கு வண்டி உடராங்கன்னு கேட்டதுக்கு எடப்பாடிகாரங்களுக்கும் கும்பகோணகாரங்களுக்கும் தொழில் மற்றும் திருமண உறவுகள் இருப்பதால் அடிக்கடி போவாங்க. அதனாலதான் என்றார். அதனால தான் இங்க பட்டுநூல் காரங்க இருப்பது எனக்கு தெரியும்.

குமரன் (Kumaran) said...

நன்றி குறும்பன். சேலத்திலும் நிறைய பட்டுநூல்காரர்கள் இருக்கிறார்கள்.

மார்கண்டேயன் said...

நேசத்திற்குரிய குமரன் அவர்களுக்கு,
ஸௌந்தர்ய ஸௌராஷ்டிரர் பற்றிய செய்திகளை குமுதம் இதழில் படிக்கும் வாய்ப்பு அமைந்தது,
பலருடைய புகைப்படங்கள் இல்லாததால் சரியாக தெரிந்துகொள்ள முடியவில்லை,
நீங்கள் அந்த குறையினை தீர்த்துவிடீர்கள்,

ஐயன்மீர்,

இத்தனை பேருடைய புகைப்படங்களை கொடுத்த நீங்கள், 'சௌராஷ்ட்ர மேதாவி', 'சௌராஷ்ட்ர எழுத்தின் விஸ்வகர்மா', மேதகு தொப்பே முனிசவ்ளி ராமா ராய் அவர்களின் புகைப்படம் கொடுக்காதது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது,

தங்கள் மின்னஞ்சலுக்கு ராமாராய் அவர்களின் புகைப்படம் அனுப்பியுள்ளேன், கடிந்து பிரசுரிக்கவும்,

நேசத்துடன், மார்கண்டேயன்.

குமரன் (Kumaran) said...

நன்றி மார்கண்டேயன் சுரேஷ்குமார். நீங்கள் அனுப்பிய படத்தை இடுகையில் சேர்த்திருக்கிறேன்.

வெற்றிவேல் said...

நல்ல தேடல்... அழகான கட்டுரை. இப்போதுதான் முதன் முதலில் கேள்விப்படுகிறேன் சவ்ராஷ்டிரியர் பற்றி...

நன்றி...

குமரன் (Kumaran) said...

நன்றி வெற்றிவேல்.