Sunday, August 09, 2009

வாழ்க இரவிசங்கரன் படி! பல்லாண்டு வாழ்க வாழ்க!

பேசும் பேச்செல்லாம் ஈசன் திருநாமம்
வாசம் கொள்வதுவோ கேசன் திருவாசல்
நேசம் மிகு நெஞ்சில் தேசும் மிக ஒளிரும்
நேசன் இரவி சங்க ரேசன் வாழியவே!

வாழி கேயாரெஸ் வாழி புதுயார்க்கன்
வாழி புதுஜெர்சி வாழ் வேந்தன் வாழியவே
மாயோனை சேயோனை தாயோனை மறவாத
மாயவன் இரவிசங்கரன்!


***


ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
ஆனே(று) ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

நப்பின்னைப் பிராட்டியை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்ற கண்ணனின் அடிமையாய் வாழும் நல்வாழ்க்கையை அன்றி வலிமை மிக்க உடலில் அருமையான அழகிய புஜங்களும் மார்புகளும் கொண்ட வீர வாழ்க்கையை நான் வேண்டேன். வளைந்திருக்கும் சங்கினைத் தன் இடக்கரத்தில் ஏந்தியிருக்கும் திருவேங்கடத்தானின் கோனேரித் தீர்த்தத்தில் வாழும் கொக்காய் பிறப்பேனே.



ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வான் ஆளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே

கொக்காய்ப் பிறப்பேன் என்றேன். ஆனால் கொக்காய்ப் பிறந்தால் ஏதோ ஒரு நேரத்தில் திருவேங்கடத்தை விட்டுப் பறந்து போக வாய்ப்புண்டு. அதனால் கொக்காய் பிறப்பதைக் காட்டிலும் மீனாய்ப் பிறப்பது மேல்.

அளவில்லாத செல்வத்துடன் அரம்பையர்களால் சூழப்பட்டு வானுலகத்தை ஆளும் பெரும் வாய்ப்பையும் மண்ணுலகத்தில் அரசாள்வதையும் நான் வேண்டேன். தேனால் நிரம்பியப் பூக்களைக் கொண்ட சோலைகள் உடைய திருவேங்கடத்தில் இருக்கும் நீர்ச்சுனையில் மீனாய்ப் பிறக்கும் பெரும் வாய்ப்பு உடையவன் ஆவேனே.



பின்னிட்ட சடையானும் பிரமனும் இந்திரனும்
துன்னிட்டுப் புகல் அரிய வைகுந்த நீள்வாசல்
மின்வட்டச் சுடராழி வேங்கடக்கோன் தான் உமிழும்
பொன்வட்டில் பிடித்(து) உடனே புகப் பெறுவேன் ஆவேனே

மீனாய்ப் பிறந்தாலும் வேங்கடவன் அருகாமை கிடைக்காது. அது மட்டுமின்றி என்றாவது அந்த நீர்ச்சுனை வற்றிப் போனால் மீனாய் எடுத்தப் பிறவியும் வீணே போகும்.

பின்னலுடைய சடையணிந்த சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் விரைந்து உன்னைக் காண்பதற்காக வைகுந்தத் திருவாசலில் குழுமி நிற்கின்றனர். நீ மின்னலைப் போல் சுழலும் வட்ட வடிவு கொண்ட சக்கரத்தைக் கொண்டுள்ளாய். திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.



ஒண்பவள வேலை உலவு தண் பாற்கடலுள்
கண் துயிலும் மாயோன் கழலிணைகள் காண்பதற்கு
பண்பகரும் வண்டினங்கள் பண் பாடும் வேங்கடத்து
செண்பகமாய் நிற்கும் திருவுடையேன் ஆவேனே

நீ உமிழும் பொன்வட்டிலைத் தாங்கும் அடிமையாய் இருப்பேன் என்றேன். ஆனால் அதனால் உன் திருமுகத்தைக் காணும் பேறு மட்டுமே கிடைக்கும். திருவடிகள் அல்லவா அடியவர்க்குப் பெரும்பேறு.

அருமையான பவளங்களை அலைகள் கரையினில் தினமும் சேர்க்கும் குளிர்ந்தத் திருப்பாற்கடலில் அறிதுயில் புரியும் மாயவா உன் கழலிணைகள் காண்பதற்கு வழி தெரிந்துவிட்டது. பாடல்களைப் பாடிய படி வண்டுக் கூட்டங்கள் திரியும் திருவேங்கட மலையில் ஒரு செண்பக மரமாய் நிற்கும் பெரும்பேறு உடையேன் ஆவேனே. தினந்தோறும் உன் திருவடிகளுக்கு அர்ச்சனையாய் செண்பக மலர்கள் தந்து எப்போதும் உன் திருவடிகளில் நிலையாக இருப்பேனே.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே

செண்பக மரமாய் நிற்கும் பேறு பெரும் புண்ணியம் செய்தவர்க்கே கிட்டுமோ என்னவோ? அப்படியென்றால் திருவேங்கட மலை மேல் ஒரு முள்செடியாயாவது பிறக்கும் பேறு பெறுவேன்.

வலிமையும் அழகும் மிகுந்த பட்டத்து யானையின் கழுத்தின் மீதேறி இன்பத்தை நுகரும் செல்வத்தையும் அரசாட்சியையும் நான் வேண்டேன். எனக்கும் இந்த ஈரேழ் உலகங்களுக்கும் தலைவனான திருவேங்கட நாதனின் திருமலை மேல் ஒரு முள்செடியாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே.



மின்னனைய நுண்ணிடையார் உருப்பசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு ஆடலவை ஆதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடாம் அருந்தவத்தன் ஆவேனே


முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).

மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.

வானாளும் மாமதி போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார் பூஞ்சோலைத் திருவேங்கட மலை மேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே.

மலைச்சிகரமாய் நின்றாலும் யாருக்கும் பயனின்றிப் போகலாம். எத்தனையோ சிகரங்கள் இருக்கின்றன; அதனால் அடியார்களுக்கும் பயனின்றிப் போகலாம். ஆனால் திருவேங்கட மலையில் ஒரு காட்டாறாய் நான் இருந்தால் உன் திருமுழுக்குக்கும் ஆவேன்; அடியார்களின் தாகத்திற்கும் ஆவேன்.

வானத்தில் இருக்கும் விண்மீன்களையெல்லாம் தன் ஒளியால் வென்று வானத்தை ஆளும் முழுமதியைப் போல் வெண்கொற்றக் குடையின் கீழ் அரசாளும் மன்னவர்களை எல்லாம் திறத்தால் வென்று அவர்கள் தலைவனாக வீற்றிருக்கும் பெருமையையும் நான் வேண்டேன். தேன் நிரம்பும் பூக்கள் உடைய சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் ஒரு காட்டாறாய் பாயும் எண்ணத்தைக் கொண்டவன் ஆவேனே.



பிறையேறு சடையானும் பிரமனும் இந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறை முடிப்பான் மறையானான்
வெறியார் தண் சோலைத் திருவேங்கடமலை மேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையேன் ஆவேனே

பொற்சிகரமாய் நின்றாலும் உன் கோயிலைச் சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் அடியார்களால் உன் கோயிலை அடைய முடியாமல் போகலாம். அதனால் அவர்கள் உன் கோயிலை அடையும் வழியாக நான் ஆவேன்.

பிறையினை தன் சடையில் வைத்திருக்கும் சிவபெருமானும் பிரமனும் இந்திரனும் முறையுடன் உன்னை வேண்டிச் செய்யும் பெரும் வேள்விகளுக்கான பயன்களைத் தந்து அவர்களின் குறை தீர்ப்பாய். அவர்கள் முறை என்ன என்று அறியும் வகை சொல்லும் வேதங்களாய் நின்றாய். நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்ட திருவேங்கட மலை மேல் அடியவர்கள் உன் திருக்கோயிலை அடையும் வழியாகக் கிடக்கும் நன்னிலை உடையவன் ஆவேனே.


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே

உன் கோயிலுக்கு வரும் வழிகள் பல இருக்கலாம். அதனால் உன்னைக் காண வரும் அடியார்களில் சிலர் நான் வழியாய்க் கிடந்தாலும் என் மேல் வராமல் வேறு வழியாய் உன் கோயிலை அடையலாம். அவர்கள் எல்லோருடைய திருவடிகளும் என் மேல் பட வேண்டும் என்றால் உன் திருக்கோயிலின் படியாய் கிடக்கும் பேறு வேண்டும்.

பற்பல பிறவிகளாய் செய்த ஒன்றுடன் ஒன்று பிணைந்த காட்டுச் செடிகளைப் போல் இருக்கும் என் வலிய வினைக்கூட்டங்களைத் தீர்க்கும் திருமகள் மணாளா. நான் என்றோ செய்த சிறிய நல்வினையை நினைவில் நெடுங்காலம் கொண்டு எனைக் காப்பவனே நெடியவனே. திருவேங்கடவா. உன் கோயிலின் வாசலில் அடியவர்களும் வானவர்களும் அரம்பையர்களும் வந்து உன்னைக் காணுமாறு ஒரு படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே.



உம்பர் உலகாண்டு ஒரு குடைக்கீழ் உருப்பசி தன்
அம்பொற்கலை அல்குல் பெற்றாலும் ஆதரியேன்
செம்பவள வாயான் திருவேங்கடமென்னும்
எம்பெருமான் பொன்மலை மேல் ஏதேனும் ஆவேனே.

நான் ஏன் இப்படி இது ஆவேன்; அது ஆவேன் என்று உன்னை வேண்டிக் கொண்டிருக்கிறேன். அடியவனுக்கு அழகு தன் தலைவன் தன்னை எந்த நிலையில் வைத்தாலும் அதில் மகிழ்ந்திருந்து தலைவனுக்குத் தொண்டு செய்வதே. அதனால் நீ என்னை எந்த நிலையில் வைத்தாலும் அதற்கிணங்க ஏதேனும் ஒன்றாய் திருவேங்கட மலை மேல் நான் ஆவேன்.

தேவர்கள் உலகங்களை ஒரு குடை கீழ் ஆண்டு ஊர்வசியின் அழகிய பொன்னாடைகள் அணிந்த இடையிலிருந்து கிடைக்கும் இன்பத்தைப் பெற்றாலும் அதனை விரும்பேன். சிவந்த செம்மையான் திருப்பவள வாயானின் திருவேங்கடமென்னும் எம்பெருமானுடைய பொன் மலையில் அவன் திருவுள்ளப்படி ஏதேனும் ஆவேனே.


மன்னிய தண் சாரல் வடவேங்கடத்தான் தன்
பொன்னியலும் சேவடிகள் காண்பான் புரிந்திறைஞ்சி
கொன்னவிலும் கூர்வேல் குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் தமிழ்வல்லார் பாங்காய பத்தர்களே

என்றென்றும் குளிர்ந்த சாரல் வீசும் வடவேங்கடத்தை உடைய எம்பெருமானின் பொன்னைப் போன்ற செவ்விய திருவடிகளைக் காண்பதற்கு இறைஞ்சி எல்லா எதிரிகளையும் வெல்லும் கூரிய வேலினைக் கைக் கொண்ட குலசேகரன் சொன்ன இந்தத் தமிழ்ப்பாடல்களை சொல்லி மனத்தில் வைத்தவர்கள் இறைவனுக்கு மிகவும் நெருக்கமான பக்தர்கள் ஆவார்கள்.

45 comments:

Raghav said...

அருமை குமரன்.. நல்லாருக்கீங்களா?

ரவி அண்ணாவிற்கு வாழ்த்து சொல்லிக்கிறேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரவிஅண்ணா...

எனது ”ஞான ஆசார்யருக்கு” என் நமஸ்காரம்.

Raghav said...

//வாழி கேயாரெஸ் வாழி புதுயார்க்கன்
வாழி புதுஜெர்சி வாழ் வேந்தன் வாழியவே
மாயோனை சேயோனை தாயோனை மறவாத
மாயவன் இரவிசங்கரன்!//

பிரபந்த கோஷ்டியில் நானும் கலந்துக்கிறேன்.

Raghav said...

குமரன் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டுக்குறேன்.. உங்ககிட்ட கேள்வி கேட்டு ரொம்ப நாளாச்சு.. )

குலசேகரன் படி என்பது எது? கருவறை முன்புள்ளதைத் தானே கோவில்களில் சொல்கிறார்கள். ஆனால் அதன்மீது அர்ச்சகர்கள் தவிர வேறு அடியார்கள் யாரும் உபயோகப்படுத்த முடியாதே..

passerby said...

குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் புகழ்கிறீரா அல்லது இகழ்கிறீரா?

யாரோ ஒரு உம் நண்பரின் துதிபாடி பின்னர் கடவுள் படத்தைபோட்டு அதன் பின்னர் ஆழ்வாரின் பாடல்களைபோட்டு, அதன் விளக்கத்தை புத்தகங்களிலிருந்து எடுத்துப்போட்டு - இது என்ன விளையாட்டு?

ஆழ்வாரையும், திருப்பதியையும் விட பெரிய ஆளா உம் நண்பர்? அவர் துதியைப் படித்துவிட்டுத்தான் ஆழ்வார் பாடல்களைப்படிக்க வேண்டுமோ?

பாடல்களுக்கு அப்படியே புத்தகங்களிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டீர்? சரி. ஏன் அந்த ஆழ்வார் மீனாக, குறுகாக பிறக்கவேண்டுமென நினத்தார்? நீர் என்ன உணர்கிறீர் அதைப்பற்றி?

புத்தகத்தையே படித்துவிடலாமே? காசு செலவில்லாமல் கிடைக்கும்.

Radha said...

Kumaran,
Very nice post !! :-)

Ravi/KRS/King of Research in Spirituality,
Happy birthday !!
May you have pure love for your favourite Lord and always ! :-)
~
Radha

மெளலி (மதுரையம்பதி) said...

கே.ஆர்.எஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இப்போத்தான் 2 மணிநேரம் முன்னால் திருப்பதியில் இருந்து வந்தேன். அருமை. நன்றி குமரன்.

கோவி.கண்ணன் said...

கே ஆர் எஸு க்கு வாழ்த்துகள்.

****

வெறும் வைணவப் படமாகப் போட்டு, ஒற்றைத் தன்மையில் அவரை.......


சரி சரி அப்பறம் வருகிறேன்
:)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

முதலில் பாகவத அபசாரத்துக்கு அடியேன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்!

//வெண் தாடி வேந்தர் said...
குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் புகழ்கிறீரா அல்லது இகழ்கிறீ்ரா//

ஐயா,
மன்னிக்கவும்!
குமரன் ஒரு விளையாட்டான முறையில் வாழ்த்து சொன்னதாய் எடுத்துக்கணும்-ன்னு தங்களை மிகவும் கேட்டுக் கொள்கிறேன்!

அடியேன் என் பதிவில், "இதய-வாசல் படியாய்’ ஆக மாட்டேனா-ன்னு கேட்டு இருந்தேன்! அதான் குமரன் அப்படிச் சொல்லி இருக்காரு!

இதில் கொல்லி காவலன் கோழியர் கோன் குலசேகராழ்வாருக்கு எள்ளளவும் ஏதும் கற்பிக்கும் நோக்கம் இல்லை! இராமபிரானுக்கே படைகள் அனுப்பத் துணிந்த அன்னாரின் ஈரப் பாசுரம் உள்ளம் எங்கே? அடியேன் எங்கே?

குலசேகரன் படி = மேல்படி!
அடியேன் விழைந்தபடி கருவறைக் கழுநீரோடும் கீழ்ப்படி!

சினம் தவிர்ந்து, மன்னியுங்கள்!
பழுதல்ல பாங்காய பக்தர்களே!

//பாடல்களுக்கு அப்படியே புத்தகங்களிலிருந்து எடுத்துப் போட்டுவிட்டீர்?//

இது குமரனின் இருநூறாம் சிறப்பு இடுகை! இரண்டு ஆண்டுக்கு முன் பாசுர விளக்கம் எழுதியது! புத்தகத்தில் இருந்து எடுத்துப் போடவில்லை! இது வாழ்த்துடன் கூடிய மீள்பதிவே! :)

ஹரி ஓம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மதுரையம்பதி said...
இப்போத்தான் 2 மணிநேரம் முன்னால் திருப்பதியில் இருந்து வந்தேன். அருமை. நன்றி குமரன்//

ஆகா! சூப்பரு!
எப்படிண்ணா இருக்காரு அவரு?
தரிசனம் நல்லபடியா ஆச்சா?

அவர் திருமுகம் நலமா?
மோவாயில் வலி இல்லையே? பச்சைக் கருப்பூரப் பொடி தயாசிந்தில் கொட்டி விடாமல் ஒட்டிக் கொண்டு தானே இருக்கு?

அவர் திருவாழி திருச்சங்கு நலமா?
அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பு அன்னை அவள் நலமா? தயா தேவி நலமா?

அவர் வஜ்ர க்ரீடமும், பெரு நெற்றியும், திருமண்காப்பும், குளிர்ந்த கண்களும், கூரிய நாசியும், தித்திக்கும் செவ்வாயும் நலமா?

ஆபரணத்துக்கு அழகு செய்யும் பெருமாள் நலமா?
மகர கண்டி, லஷ்மீ ஹாரம் நலமா? புஷ்ப மாலைகளும் துளசீ மாலையும் நலமா? அவர் இடுப்பு தசாவதார ஒட்டியாணம் நலமா? பீதக ஆடை நலமா?

மோட்சத்தைக் காட்டிக் கொடுக்கும் திருக் கரங்கள் நலமா?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ என்னும் அவர் திவ்ய மங்கள ஸ்ரீ பாத திருவடிகள் நலமா?

அவர் சேதனா சேதன பெரிய திருவடியும், பெத்த ஆஞ்சநேய ஸ்வாமியும், சேனை முதலியார், அனந்தன், ஆதிசேடன் என்று அனைவரும் நலமா?

அவர் அடிக் கீழ் அமர்ந்து புகுந்த எங்கள் மாறன் நலமா?
அவர் பொற் கிணறும் பூங்கிணறும் நலமா? அவர் பாரகா மணி நலமா? ஆனந்த நிலையம் நலமா? ரங்க விலாசம் நலமா? ஸ்ரீ பாஷ்யக்காருலு நலமா? அவரைப் பார்க்கும் வரதனும் ஆளரியும் நலமா? புஷ்ப மண்டப யாமுனைத் துறை நலமா?

அவர் உண்டியலும், லட்டும், வடையும் நலமா? :)
அன்னை வகுளையும் நலமா? ஞானப் பிரான் நலமா? கோனேரி நலமா?

அவர் திருமேனி செளந்தர்யத்துக்கு ஒரு குறையும் இல்லையே?
செவ்வடி செவ்வித் திருக்காப்பு!
செவ்வடி செவ்வித் திருக்காப்பு!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி ராகவ் - ஞான ஆசார்யனா? ஒதை படப் போற! மெளலி அண்ணா நோட் திஸ் பாயிண்ட் :)

நன்றி ராதா - ஆசிக்கும் ஸ்பெஷல் நன்றி! :)

நன்றி மெளலி அண்ணா.

நன்றி கோவி அண்ணா! அதானே நாயன்மார் படமெல்லாம் போட்டிருக்கலாம் தானே? எத்தினி பதிவு போட்டிருக்கேன்? தீபாளிக்கு இன்னும் ரெண்டு மாசம் இருக்குண்ணே! :)

நன்றி இடுகை ஆசிரியர், எங்கள் சூப்பர் ஸ்டார் குமரன் அவர்களே! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வாழி கேயாரெஸ் வாழி புதுயார்க்கன்
வாழி புதுஜெர்சி வாழ் வேந்தன் வாழியவே
மாயோனை சேயோனை தாயோனை மறவாத
மாயவன் இரவிசங்கரன்!//

ஹைய்யோ! இது என்ன டகால்ட்டி?
நானே சரி செய்து விடுகிறேன்! இருங்க!

வாழி பரகாலன்! வாழி கலிகன்றி!
வாழி குறையலூர் வாழ் வேந்தன் - வாழியரோ!
மாயோனை வாள்வலியால் மந்திரங்கொள் மங்கையர் கோன்
தூயோன் சுடர்மான "வேல்"!

நெஞ்சுக்கு இருள்கடி தீபம், அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல் அமுதம், தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரண சாரம், பரசமயப்
பஞ்சுக்கு அனலின் பொறி பரகாலன் பனுவல்களே!

எங்கள் கதியே! இராமானுச முனியே!
சங்கைக் கெடுத்தாண்ட தவராசா - பொங்குபுகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை ஆயிரம் அனைத்தும்
தங்குமனம் நீ எனக்குத் தா!

ஷைலஜா said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்டதிண் தோள் மணிவண்ணன் கருணையோடு
மகிழ்ச்சியுடன் என்றும் வாழ
திருவரங்கப்ரியாவின்
மனம் நிறைந்த வாழ்த்துகள்!

Sridhar Narayanan said...

பிறந்தநாள் வாழ்த்துகள் கேயாரெஸ். இப்பவாவது மேஜரானீரா இல்லை இன்னமும் நான் டீனேஜ்னு உட்டாலக்கடி அடிச்சிட்டிருக்கீரா?

//வாழி கேயாரெஸ் வாழி புதுயார்க்கன்
வாழி புதுஜெர்சி வாழ் வேந்தன் வாழியவே
மாயோனை சேயோனை தாயோனை மறவாத
மாயவன் இரவிசங்கரன்!//

புதுஜெர்சிவாழ் வேந்தனா? இது எப்போலேந்து? :))

//அவர் திருமுகம் நலமா?
மோவாயில் வலி இல்லையே? பச்சைக் கருப்பூரப் பொடி தயாசிந்தில் கொட்டி விடாமல் ஒட்டிக் கொண்டு தானே இருக்கு?//

இந்த பச்சை கற்பூரத்திற்கு ஒரு கதை உண்டே. எங்கேனும் எழுதியிருக்கிறீர்களா? இங்கே அமெரிக்காவில் நிறைய கோவில்களில் தெர்மக்கோலில்தானே நாமமே ஒட்டி வைக்கிறார்கள். மோவாயிலும் அந்த தெர்மக்கோலையே ஒட்டி வைக்கிறார்கள். சரி சரி டென்ஷன் ஆகி பகவத் அபசாரம்னு உணர்ச்சிவசப்படாதீங்க.

பிறந்தநாள் கொண்டாட்டத்தைப்பற்றி அப்புறமா விரிவா பதிவு போடுஙக் :)

தமிழ் said...

குமரன் அவர்களே
நலமா

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

குமரன் (Kumaran) said...

நல்லா இருக்கேன் இராகவ்.

ஆழ்வார் பாசுரம் படி பாத்தா குலசேகரன் படி அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும் திருக்கோவிலின் வாசல் படியாகத் தான் இருக்க வேண்டும். ஆனால் அங்கிருந்தால் அர்ச்சாவதாரத்தின் திருப்பவளவாயைக் காண இயலாதே. அதனால் தான் ஆசாரியர்கள் கருவறை படியை குலசேகரன் படியாகக் குறித்தார்கள் போல. அந்த திருப்படியில் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்குவார்கள். நித்ய கைங்கர்யம் செய்யும் அடியார்களும் கிடந்து இயங்குவார்கள். திருப்பவளத்தையும் கண்டு களிக்க முடியும்.

குமரன் (Kumaran) said...

வெண் தாடி வேந்தர். நல்ல கேள்விகள். 'வல்லீர்கள் நீங்களே. நானே தான் ஆயிடுக'. நான் செய்த தவறுகளை மன்னிக்க வேண்டும்.

குமரன் (Kumaran) said...

வைணவ மரபில் இரு முறைகள் இருக்கின்றன. லக்ஷ்மி நாத சமாரம்பாம் நாத யாமுன மத்யமாம் அஸ்மத் ஆசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம் என்று திருமகள் நாதன், நாதமுனிகள், யாமுனமுனிகள், என்னுடைய ஆசாரியன் என்றும் அந்த வரிசையில் வணங்குவதும் இருக்கிறது. மணவாள மாமுனிகள்/வேதாந்த தேசிகன் தனியனைக் கூறிவிட்டு பின்னர் உடையவர் தனியனைக் கூறிவிட்டு பின்னர் ஆழ்வார் தனியனைக் கூறிவிட்டு பின்னரே இறைவனைப் பாடும் ஈரப்பாசுரங்களைப் பாடும் மரபும் இருக்கிறது. இரண்டாவது முறையில் பாடினால் மணவாள மாமுனிகள்/வேதாந்த தேசிகன் உடையவரை விட பெரியவர்கள் என்றும், உடையவர் ஆழ்வார்களை விட பெரியவர் என்றும், ஆழ்வார்கள் இறைவனை விடப் பெரியவர்கள் என்றும் பொருள் கொள்ள வேண்டுமா? அடியார்கள் அரங்கனை விட உயர்வானவர்கள் என்று அரங்கனே கூறிக் கொண்டாலும் நடப்பில் அரங்கனைக் காணவும் வணங்கவும் தானே முதன்மைப் போட்டி?

அதே முறைப்படி அன்பரும் அடியவரும் ஆன இரவிசங்கரை வாழ்த்தும் பாடல்களை முதலில் இட்டு ஆழ்வார் பாசுரங்களைப் பின்னர் இட்டேன். இதில் தவறிருப்பதாக அடியேனுக்குத் தோன்றவில்லை. ஆழ்வாருக்கும் எம்பெருமானுக்கும் இதில் ஏதும் தாழ்ச்சி இல்லை. அப்படி ஒரு அடியவருக்குத் தோன்றியதால் அக்குற்றத்திற்கு அடியேன் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

குமரன் (Kumaran) said...

குலசேகர ஆழ்வாரின் பக்தியைப் புகழவோ இகழவோ அது என்ன என்று தெரிந்திருக்க வேண்டுமே? என்றும் நீரிலேயே வாழ்ந்து எப்போதோ நீரின் மேல் துள்ளி எழும் மீனுக்கு வானம் எப்படிப்பட்டது என்று சொல்லி புகழவோ இகழவோ இயலுமா? அடியேன் சிறிய ஞானத்தன்.

குமரன் (Kumaran) said...

ஆழ்வார் பாசுரங்களுக்கு இங்கே தந்திருக்கும் விளக்கங்கள் அப்படியே புத்தகத்திலிருந்து எடுத்து இட்டுவிட்டேன் என்று குற்றம் சாட்டியிருக்கிறீர்கள். தேவரீர் இங்கிருங்கும் விளக்கத்தை அப்படியே வரிக்கு வரி சொல்லுக்குச் சொல் எந்த புத்தகத்திலோ படித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது; ஏனெனில் உங்களைப் போன்றவர்கள் பொய்யே சொல்ல மாட்டீர்கள். அதனால் அந்த புத்தகம் எந்த புத்தகம்; எங்கே கிடைக்கும் என்றும் தெரிவித்தீர்கள் என்றால் அனைவரும் பயன்பெறுவார்கள் - தயை கூர்ந்து சொல்லுங்கள்.

Raghav said...

//அன்பரும் அடியவரும் ஆன இரவிசங்கரை வாழ்த்தும் பாடல்களை முதலில் இட்டு ஆழ்வார் பாசுரங்களைப் பின்னர் இட்டேன். இதில் தவறிருப்பதாக அடியேனுக்குத் தோன்றவில்லை. //

எனக்கும் தான் குமரன். அடியாரான வேதாந்த தேசிகரை சிறப்பித்து விட்டே ஆழ்வாரின் சமர்ப்பணையை தேவாதிராஜன் - ஆண்டாள் திருக்கல்யாணத்தில் சமர்ப்பிக்கிறார்கள் கீழ்க்கண்டவாறு..

“சூடிக் கொடுத்த நாச்சியார் திருக்கல்யாண மஹோத்சவத்திலே, ஸ்ரீமத் வேதமார்க்க ப்ரதிஷ்டாபனாசார்ய உபய வேதாந்தசார்யரின், பட்டர்பிரான் பெரியாழ்வார் சமர்ப்பனை” என்றும்.. இதே போன்றே மற்றைய ஆழ்வார் சமர்ப்பனைகளும்..

அதேபோல் தானே அடியார்கள் வாழ என்று அடியார்களை வாழ்த்தி விட்டு அரங்க நகரை வாழ்த்தி விட்டு பின்பு தானே ஆசார்யர்கள், ஆழ்வார்கள் எம்பெருமான் அனைவரும்.. அடியாருள் ஒருவரான ரவி அண்ணனை வாழ்த்தி விட்டு ஆழ்வார் பாசுரங்களை சொல்வதில் தவறேதும் தெரியவில்லை.

கோவில்களில் அர்ச்சனை செய்யுமுன், நாம் நன்றாக இருக்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துவிட்டு தானே எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராதா. :-)

KRS = ‘K’ing of ‘R’esearch in ‘S’pirituality. அருமை. :-)

குமரன் (Kumaran) said...

திருப்பதி சென்று வீட்டிற்கு வந்தவுடன் கூடலுக்கு வந்துவிட்டீர்களா? அருமை மௌலி. :-)

குமரன் (Kumaran) said...

சொல்றதை முழுசா சொல்லிட்டுப் போனா என்ன கோவி.கண்ணன்? அப்பத் தானே பதில் சொல்ல வசதியாக இருக்கும்? :-)

குமரன் (Kumaran) said...

நலமாக இருக்கிறேன் திகழ்மிளிர்.

பிறந்த நாள் வாழ்த்துகளை இரவிசங்கருக்கு அனுப்பிவிட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

இன்னும் சில எடுத்துக்காட்டுகள் தந்ததற்கு நன்றி இராகவ்.

Radha said...

குமரன்,
சில பாசுரங்களில் தட்டச்சுப் பிழை உள்ளது போலத் தெரிகிறது.
"உமிலும்" என்பது "உமிழும்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
"குடவாம்" என்பது "குவடாம்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அல்லது இந்த பாசுரங்களில் பாட பேதம் இருக்கலாம்.

"தம்பகமாய் நிற்கும்" என்பதற்கு "தூணாய் நிற்கும்" என்று பொருள்படும்படி சில உரைகளில் விளக்கங்கள் காணப் பெறுகின்றன. அடியார்கள் ப்ரசாதம் சாப்பிட்டுவிட்டு தூணில் கைகளை துடைத்துவிடுவர். :-)
அப்படிப்பட்ட ஒரு தூணாய் நிற்க வேண்டும் என்று லேசான ஒரு ஹாஸ்யரசம் தொனிக்கும் வகையில் சொற்பொழிவுகளில் கேட்டு இருக்கிறேன்.

தங்கள் விளக்கமும் நன்றாக உள்ளது. :-)

நிற்க, உங்களுக்கு,ராகவிற்கு எல்லாம் பொறுமை ஜாஸ்தி !! :-)
~
ராதா

கோவி.கண்ணன் said...

//குமரன் (Kumaran) said...

சொல்றதை முழுசா சொல்லிட்டுப் போனா என்ன கோவி.கண்ணன்? அப்பத் தானே பதில் சொல்ல வசதியாக இருக்கும்? :-)
//

இப்பதான் துயரங்களில் இருந்து மீண்டு ஆசுவாசப்படுத்திக் கொண்டு எழுத தொடங்கி இருக்கிறீர்கள், அடுத்து அடுத்து பதிவு வருமே, அப்போது எனக்கு வேளை வாய்க்கும் !
:)

Raghav said...

//உங்களுக்கு,ராகவிற்கு எல்லாம் பொறுமை ஜாஸ்தி !! :-)//

ஹா ஹா.. ராதா, குமரன் பற்றி சொன்னது மட்டும் சரி.. :)

Radha said...

ராகவ்,
நீங்க பொத்தாம் பொதுவா 'எனது ”ஞான ஆசார்யருக்கு” என் நமஸ்காரம்' என்று சொல்லிட்டு போனீங்க. நீங்க குமரனை குறிப்பிட்டீர்களா அல்லது ரவியை குறிப்பிட்டீர்களா அல்லது "அருமை குமரனையும் ரவி அண்ணாவையும்" பற்றி எழுதும்பொழுது, இவர்கள் இருவரும் அல்லாத ஒருவர், உங்கள் ஞான ஆசார்யர், ஞாபகத்திற்கு வந்து அவரை நமஸ்காரம் செய்தீர்களா என்று விளங்கவில்லை. (நாராயண ! நாராயண !) எப்படி வைத்துக் கொண்டாலும் ஏனோ ரவி உங்களை உதைபட போறேன்னு மிரட்டி இருக்கார். (நாராயண ! நாராயண !)
அதற்கு எல்லாம் சற்றும் கோபம் கொள்ளாமல் ஒரு வெண்தாடி வேந்தரின் பின்னூட்டத்திற்கு பொறுமையாக இன்னொரு பின்னூட்டம் அளித்த உங்கள் பொறுமை உண்மையிலே மெச்சத் தகுந்தது தானே ! நாராயண ! நாராயண ! :-)
~
ராதா

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி ஷைல்ஸ்-க்கா! :)

நன்றி ஸ்ரீதர் அண்ணாச்சி!
//புதுஜெர்சிவாழ் வேந்தனா? இது எப்போலேந்து? :))//
அது புதுஜெர்சி வாள் வேந்தன்! :)

//இந்த பச்சை கற்பூரத்திற்கு ஒரு கதை உண்டே. எங்கேனும் எழுதியிருக்கிறீர்களா?//

:))
http://madhavipanthal.blogspot.com/2006/10/2_12.html

//இங்கே அமெரிக்காவில் நிறைய கோவில்களில் தெர்மக்கோலில்தானே நாமமே ஒட்டி வைக்கிறார்கள். மோவாயிலும் அந்த தெர்மக்கோலையே ஒட்டி வைக்கிறார்கள்//

குளிருக்கு இதமா இருக்கணும்-ல்ல? அதான் "தெர்மோ"க்கால் போல! :)
அலங்காரத்துக்குப் பலதும் பயன்படுத்தறது வழக்கம் தான் அண்ணாச்சி! ஆனால் பிரதிஷ்டையான மூலவர் திருமேனியில் இப்படிப் பண்ண மாட்டாங்க-ன்னே நினைக்கிறேன்!

//சரி சரி டென்ஷன் ஆகி பகவத் அபசாரம்னு உணர்ச்சிவசப்படாதீங்க//

ஹிஹி! நான் என்னிக்கி இதுக்கெல்லாம் உணர்ச்சி/வசம்/எல்லாம் பட்டிருக்கேன்! பாகவதா அபச்சாரம் (அடியார் பழித்தல்) தான் தப்பு! "பகவத்" எல்லாம் அவனை என் தோழி ஸ்டைல்-ல கலாய்ச்சிக்கலாம்! மானமிலாப் பன்றி-ன்னு! ப்ரீயா வுடுங்க! :)

//பிறந்தநாள் கொண்டாட்டத்தைப்பற்றி அப்புறமா விரிவா பதிவு போடுஙக் :)//

ரொம்பபபபப முக்கியம்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நன்றி திகழ்மிளிர்! :)

//"குடவாம்" என்பது "குவடாம்" என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அல்லது இந்த பாசுரங்களில் பாட பேதம் இருக்கலாம்//

குவடு - மலை முகடு என்பதே சரி!

//தம்பகமாய் நிற்கும்" என்பதற்கு "தூணாய் நிற்கும்" என்று பொருள்படும்படி சில உரைகளில் விளக்கங்கள் காணப் பெறுகின்றன//

கொடி மரம் என்னும் ஸ்தம்பத்தை தம்பம்/தம்பகம் என்று கொள்வாரும் உண்டு!

//அடியார்கள் ப்ரசாதம் சாப்பிட்டுவிட்டு தூணில் கைகளை துடைத்துவிடுவர். :-) அப்படிப்பட்ட ஒரு தூணாய் நிற்க வேண்டும் என்று//

அடப் பாவிங்களா? :))
தூணில் இருந்து ஆளரி வருவாரு! அதுக்குத் தான் அவருக்கும் திருவமுதுப் பருக்கைகள் கண்டருளப் பண்ணுகிறோம்-ன்னு சொல்லாம வுட்டீங்களே! :)

குமரன் (Kumaran) said...

தட்டச்சுப் பிழைகளைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி இராதா. சரி செய்கிறேன்.

என்னுடைய பொறுமை ஊரறிந்த இரகசியம்; குறைந்த பட்சம் கோவி.கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். :-) கேட்டுப் பாருங்கள். :-)

Radha said...

KRS said..
//கொடி மரம் என்னும் ஸ்தம்பத்தை தம்பம்/தம்பகம் என்று கொள்வாரும் உண்டு!//
இந்த விளக்கமும் கேள்விப்பட்டு இருக்கிறேன். தம்பகம் என்றால் முள்செடி என்று இங்கு தான் தெரிந்து கொண்டேன்.
"செண்பக மரமாக பிறந்து வேங்கடவனுக்கு சமர்பிக்கப் பெறும் புஷ்பங்களை பொழிய நிறைய புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நான் அவ்வாறு செய்ய வில்லை எனில் ஒரு முள்செடியாகவாது பிறக்க வேண்டும்" என்ற விளக்கம் மிகவும் பிடித்திருந்தது.

//திருவேங்கடத்தலைவா. நீ உன் எச்சிலை உமிழும் போது அதனைத் தாங்குவதற்காக பொன்வட்டிலைப் பிடித்து நின்று என்றும் உன்னுடனே எல்லா இடத்திற்கும் செல்லும் பேறு பெறுவேன் ஆவேனே.//
அருமையான விளக்கம் குமரன். அனுமன் சொடக்கு கைங்கர்யம் செய்த கதையை நினைவூட்டுகிறது.

Radha said...

//என்னுடைய பொறுமை ஊரறிந்த இரகசியம்; குறைந்த பட்சம் கோவி.கண்ணனுக்கு நன்றாகத் தெரியும். :-) கேட்டுப் பாருங்கள். :-) //
கோ.வி.கண்ணனுடன் இணையத்தில்
நீங்கள் நிறைய "உரையாடி" இருக்கிறீர்கள் என்று அறிவேன். :-)
நீங்கள் கேட்டுகொண்டபடியே "புல்லாகி பூண்டாகி" தொடருக்கு விமர்சனம் எழுத தொடங்கினேன். கோவி.கண்ணனுக்கு ஆதரவாக என்னுடைய விமர்சனமும் வருகிறது.
(அதாவது முடிந்தபொழுதெல்லாம் கண்ணனை நுழைத்து இருக்கிறீர்கள்.)
விமர்சனத்தை தந்தால் தங்கள் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். :-)

Radha said...

குமரன்,
தாங்கள் இன்னும் கால அவகாசம் கிடைக்கப் பெறாமல் உள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.
நேரம் காலம் தெரியாமல் கோதைத் தமிழில் இட்ட பின்னூட்டங்கள் போன்று இன்னொரு தமாஷ் காரியம் செய்ய வேண்டாம் என்று நினைக்கிறேன். விமர்சனத்தை இன்னும் சில காலம் கழித்து மின்னஞ்சல் செய்கிறேன். என் கிரிதாரி உங்களுக்கும் துணை புரியட்டும்.
~
ராதா

குமரன் (Kumaran) said...

இராதா,

பேருந்தில் செல்லும் போது தான் பெரும்பாலும் சேமித்து வைத்துக் கொண்ட இடுகைகளைப் படிக்கிறேன். அப்போது தான் பின்னூட்டங்களுக்கும் பதில் எழுதுகிறேன். கோதைத் தமிழில் நீங்கள் இட்ட பின்னூட்டங்களை அந்த இடுகைகளோடு சேர்த்துப் படித்துப் பார்த்துப் பதில் எழுத வேண்டும் என்று எண்ணுவதால் அதற்கான நேரம் இன்னும் கிடைக்கவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். அப்போது ஒவ்வொன்றாகப் படித்துப் பார்க்கிறேன்.

நீங்கள் 'புல்லாகிப் பூண்டாகி' தொடருக்கு விமரிசனம் எழுதி முடித்தாகிவிட்டால் உடனே அனுப்புங்கள். பின்னூட்டமாகவோ மின்னஞ்சலாகவோ உங்கள் பதிவில் இடுகையாகவோ. அதற்கும் உடனே பதில் எழுத முயல்கிறேன்.

நன்றி.

Radha said...

நண்பரே,
ஒரு அவசரமும் இல்லை. :-) நீங்கள் நன்றாக செட்டில் ஆன பிறகு பேசலாம்.
என் வருத்தம் நீங்கள் மறுமொழி தராதது குறித்து அல்ல. சமயமில்லா சமயமாக பார்த்து பின்னூட்டம் அளித்தேன் என்று தான் வருத்தம். கிரிதாரியின் சங்கல்பம் அவ்வாறு இருந்தது எனில் நாம் ஒன்றும் செய்வதற்கில்லை என்று சமாதானம் சொல்லிக் கொண்டேன்.
நிச்சயம் கோதைத் தமிழில் மீண்டும் எழுதத் தொடங்குவீர். அப்பொழுது நிச்சயமாக வந்து கோஷ்டியில் கலந்து கொள்வேன். :-)
~
ராதா

S.Muruganandam said...

KRSக்கு ஒரு தனியன், அசத்தி விட்டீர்கள் குமரன் ஐயா.

பகவானை விட பாகவதனுக்கே ஸ்ரீ வைஷ்ணவத்தில் ஏற்றம் எனவே தாங்கள் இட்ட விதம் தவறில்லைதான் என்று தோன்றுகிறது.

கலியுக நாரதருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு.

குமரன் (Kumaran) said...

வருத்தம் எல்லாம் தேவையில்லை இராதா. எல்லா நேரமும் நல்ல நேரம் தான். ஒவ்வொன்றாக பின்னூட்டங்கள் வர வர படித்துக் கொண்டே தான் இருந்தேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் கைலாஷி ஐயா. வருங்காலத்தில் 'குமரன் இயற்றியது'ன்னு தலைப்புல போட்டு இந்த தனியன்களையும் பாடுவார்கள் எல்லோரும். :-)

Unknown said...

Vanakkam sir,
Perumal thirumozhi vilakkam excellent. kuvadu ullavarai kumaran vazhga.
ARANGAN ARULVANAGA.
ANBUDAN,
k.srinivasan.

குமரன் (Kumaran) said...

Thanks Srinivasan Sir.

S.Muruganandam said...

குமரன் ஐயா தங்களுக்கு கவிநயா அவர்கள் நல்ல நண்பர் என்னும் விருதைக் கொடுத்தார்கள், ஆனால் சுவையான வலைப்பூ என்ற விருதையும் கொடுக்கவில்லை என்ற (சிறு)வருத்தத்தைப் போக்க அவர் விருது கொடுத்த அடியேன் தங்களுக்கு அவ்விருதை அளிக்கின்றேன். விவரம் அறிய அட்ரா சக்கை நமக்கும் கூட விருது ! ! ! பதிவில் சென்று காணுங்கள். வாழ்த்துக்கள் ஐயா.

Thenammai Lakshmanan said...

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம் -மல்லாண்ட திண்தோள்
மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வித்
திருக் காப்பு.

என்று திருவடியில் இருந்துதானே கடவுளைத் தொழ
ஆரம்பிக்கின்றோம்.
பெரிய திருவடி , சிறிய திருவடி கடந்துதானே
அவரைத் தரிசனம் செய்கின்றோம்
அடிகளுக்குக் கீழ் இருக்கும் அடியாரில் இருந்து
ஆரம்பிக்கலாம் என அவர் நினைத்தது சரிதான்

குமரன் (Kumaran) said...

தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி தேனம்மை லக்ஷ்மணன்.