Friday, May 22, 2009

சமயங்களும் தத்துவங்களும் - 1

இன்றைக்கு இந்து மதம் என்றும் சநாதன தருமம் என்றும் சொல்லப்படும் இந்திய சமயங்களின் தத்துவங்களின் தொகுப்பினில் இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி பலருக்கும் பலவிதமான தவறான புரிதல்கள் இருப்பதை சமயப்பதிவர்கள், ஆன்மிகப்பதிவர்கள் என்று அழைக்கப்படும்/புரிந்து கொள்ளப்படும் அன்பர்கள் எழுதும் பதிவுகளிலிருந்தும் பின்னூட்டங்களிலிருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் ஒத்த தன்மைகளைப் பற்றியும் அவற்றிற்கு இடையில் உள்ள வேற்றுமைகளைப் பற்றியும் எனக்குப் புரிந்தவரையில் எழுதலாம் என்று நினைக்கிறேன். வேற்றுமைகளைப் புரிந்து கொள்வது அவ்வேற்றுமைகளைப் பெரிதுபடுத்தி சண்டை போட்டுக் கொள்வதற்காக இல்லை; அவ்வேற்றுமைகளைப் புரிந்து கொண்டு இந்தியத் தத்துவங்களும் சமயங்களும் அந்த வேற்றுமைகளுடன் ஒத்திசைந்து இந்திய அறிவுத்தளத்தில் எப்படி இயங்குகின்றன என்ற தெளிவைப் பெறுவதற்காக.

சமயங்கள் என்பவை 'முழுமுதற்கடவுள்' என்று ஏதேனும் ஒரு கடவுளை முதன்மைப்படுத்துபவை. அவை திருமாலவனைப் போற்றும் மாலியம் (வைணவம், விண்ணவம்), சிவபெருமானைப் போற்றும் சிவனியம் (சைவம்), சூரியனைப் போற்றும் சௌரம், சக்தியைப் போற்றும் சாக்தம், கணபதியைப் போற்றும் காணபத்யம், குமரனைப் போற்றும் கௌமாரம் என்று பலவகையாகச் சொல்லலாம்.

தத்துவங்கள் என்பவை உண்மைப்பொருட்கள் யாவை என்பதைப் பற்றி பேசுபவை. இறை, உலகம், உயிர் மற்றும் உள்ள உண்மைப் பொருட்கள் எவை எவை என்று பட்டியலிட்டு அவற்றின் ஒற்றுமை வேற்றுமைகளைப் பேசுபவை. அல்லிருமை (அத்வைதம்), இருமை (த்வைதம்), விதப்பொருமை (விசிஷ்டாத்வைதம்), எண்ணவியலா வேற்றுமையுள் ஒற்றுமை (அசிந்த்ய பேதாபேதம்) போன்றவை.

இந்திய சமய தத்துவ நிலத்தில் இந்தச் சமயங்களும் தத்துவங்களும் பலவிதமாகக் கலந்து ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வடிவத்துடன் இறைவழிபாட்டுச் சமயங்கள் விளங்குகின்றன.

தமிழகத்தை மட்டுமே எடுத்துக் கொண்டால் அல்லிருமைத் தத்துவமும் (அத்வைதம்) சிவனிய மாலிய சாக்த சமயங்களும் கலந்த சமயத் தத்துவங்களும், சைவசித்தாந்தமும் சிவனிய கௌமாரங்களும் இயைந்த சமயத்தத்துவங்களும், விதப்பொருமைத் தத்துவமும் (விசிஷ்டாத்வைதம்) திருமாலிய சமயம் இணைந்த சமயத் தத்துவமும் விளங்குகின்றன. இவை போக இருமைத் தத்துவத்துடன் (த்வைதம்) இணைந்த திருமாலியமும் சிறுபான்மையாகத் தமிழகத்தில் உண்டு.

இன்னொருவகையில் இப்படி சொல்லலாம்.

சிவனியத்தில் அல்லிருமையும் சைவசித்தாந்தமும் உண்டு.
மாலியத்தில் அல்லிருமையும் விதப்பொருமையும் இருமையும் உண்டு.
சாக்தத்தில் அல்லிருமை உண்டு.
கௌமாரத்தில் சைவசித்தாந்தம் உண்டு.

மற்றும் ஒரு வகையில் சொல்வதென்றால்

அல்லிருமையில் சிவனியம், மாலியம், சாக்தம் உண்டு.
விதப்பொருமையில் மாலியம் உண்டு.
சைவசித்தாந்தத்தில் சிவனியமும் கௌமாரமும் உண்டு.
இருமையில் மாலியம் உண்டு.

இவை தமிழகத்தில் இந்த வகையில் இருக்கும் போது மற்ற மாநிலங்களில் வேறு வகைகளில் சமயங்களும் தத்துவங்களும் கலந்து விளங்குகின்றன. எடுத்துக்காட்டுகளாகச் சிலவற்றைச் சொல்கிறேன். அசிந்த்ய பேதாபேத தத்துவத்துடன் விண்ணவம் கலந்த சமயம் வங்காளத்தில் கௌட வைணவம் என்ற பெயரில் விளங்குகிறது; அதே வங்காளத்தில் அதே அசிந்த்ய பேதாபேத தத்துவத்துடன் சாக்தம் கலந்த சமயமும் விளங்குகிறது. சைவ சித்தாந்தத்தை ஒத்த தத்துவங்களுடன் காஷ்மீரச் சைவமும் கருநாடக சைவமும் விளங்குகின்றன. அத்வைதத்துடன் கலந்த காணபத்யம் மராட்டியத்தில் விளங்குகின்றது. இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

சொல்ல வரும் கருத்து என்னவென்றால் இவற்றுள் எந்த சமயமும் எந்த தத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளங்கலாம்; எந்த தத்துவமும் எந்த சமய வடிவிலும் இயங்கலாம் என்பதையே. தத்துவங்களுக்கும் சமயங்களும் இடையே இருக்கும் வேறுபாட்டினைப் புரிந்து கொண்டால் அவை எப்படி எப்படி இணைந்து செயல்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வது எளிதாக இருக்கும்.

இதனுடைய தொடர்ச்சியாக இன்னும் சில கருத்துகள் சொல்ல வேண்டும். அவற்றை இனி வரும் இடுகைகளில் சொல்கிறேன்.

தத்துவங்களுக்கும் சமயங்களுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்திருந்தாலும் அண்மைக்காலம் வரையில் அவற்றிற்கு உரிய வரையறைகளைத் தெளிவாக மனத்தில் கொண்டதில்லை. அந்த வரையறைகளை மனத்தில் தெளிவு பெறுமாறு செய்த நண்பர் இரவிசங்கருக்கு நன்றி.

Thursday, May 14, 2009

இறைவனை விட இராமானுசர் ஏற்றம் (எம்பெருமானிலும் எம்பெருமானார் ஏற்றம்)




'எம்பெருமானாருடைய திவ்விய சரிதம்' என்ற 1950ஆம் ஆண்டு நூலை இப்போது ஒருங்குறியில் தட்டச்சி 'உடையவர்' பதிவில் எழுதி வருகிறேன். அந்த நூலில் 'எம்பெருமானிலும் எம்பெருமானார் ஏற்றம்' என்ற தலைப்பில் 5 வகையான வேறுபாடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றை அந்த நூலில் உள்ளபடியே 'உடையவர்' பதிவில் இட்டிருக்கிறேன். கொஞ்சம் எளிய தமிழில் இங்கே அந்த தலைப்பில் உள்ள கருத்துகளை எடுத்து எழுதுகிறேன்.

***

1. உலகமக்களைத் திருத்திப் பணிகொள்ளும் ஆற்றல்:

அடல் கொண்ட நேமியன் ஆருயிர் நாதன் அன்று ஆரணச் சொல்
கடல் கொண்ட ஒண்பொருள் கண்டு அளிப்ப பின்னும் காசினியோர்
இடரின் கண் வீழ்ந்திட தானும் அவ்வொண்பொருள் கொண்டு அவர் பின்
படரும் குணன் எம் இராமானுசன் தன் படியிதுவே


இப்பாடலின் பொருள்: வெற்றியைத் தரும் வீரத்தை குணமாகக் கொண்ட சக்கரத்தை உடையவனும் எல்லா உயிர்களுக்கும் தலைவனுமான இறைவன், குருசேத்திரப் போர் தொடங்குவதற்கு முன்பு வேதங்கள் என்னும் கடலின் சாரமான முதன்மைப் பொருளை 'பகவத் கீதை' என்ற பெயரில் தந்தான். அதன் பின்னரும் உலகத்தவர் துன்பத்தில் வீழ்ந்தார்கள். இராமானுசரோ அதே ஒண்பொருளாக கீதையைக் கொண்டே உலக மக்களை எல்லாம் இறைவனின் திருவடிகளில் சேர்த்தார். இதுவே அவரின் பெருமை.

விளக்கம்: இறைவனான எம்பெருமான் கண்ணனாய் பிறந்தருளிய போது வேத வேதாந்த உபநிடதங்களின் சாற்றான தெளிந்த உண்மைப் பொருளைக் கீதையாகத் தானே முன் நின்று உபதேசித்தான். அந்த உபதேசம் அருச்சுனனை முன்னிட்டுச் செய்யப்பட்டது. போர்க்களத்தில் செய்யப்பட்டதால் அவனுக்கு மட்டுமே பயன்படும்படி ஆனது. போருக்குப் பின்னர் அருச்சுனனுடைய செயல்களை எல்லாம் பார்த்தால் அவனுக்குக் கூட அந்த உபதேசம் பயன்பட்டதோ இல்லையோ என்று ஐயம் கொள்ளலாம்படி இருக்கிறது. ஆனால் எம்பெருமானாராகிய இராமானுசரோ இறைவனான எம்பெருமான் உபதேசித்தும் பயன் தராத அதே கீதையைக் கொண்டே உலகத்தோரைத் திருத்தி திருமகள் கேள்வனான இறைவனுக்கு அடியார்கள் ஆக்கினார். அதுவே அவர் பெருமை.

2. எம்பெருமானின் அவதாரங்களை விட எம்பெருமானாரின் அவதாரம் சிறந்தது:

மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே

இப்பாட்டின் பொருள்: இந்த மண்ணுலகத்தினில் மீன், ஆமை, பன்றி, சிங்கம், மனிதர் என்று பலவிதமான பிறவிகளிலும் பிறந்து எங்களது திருமகள் நாயகனே நேரில் வந்து நின்றாலும் உலகத்தவர்கள் அவனது உண்மை இயல்பைக் காண இயலாது மயங்கி போகின்றனர். ஆனால் எங்கள் அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே கிடைப்பதற்கு அரிய ஞானத்தைப் பெற்று நாராயணனுக்கு அடியவர்களாக அதே உலக மக்கள் ஆனார்களே.

விளக்கம்: இந்த நிலவுலகில் பற்பல பிறப்புகளை எம்பெருமான் எடுத்தாலும் அவனது தெய்வீக உண்மை உருவை அறிந்து மக்கள் திருந்தவில்லை. நான் வெறும் மானிடன் என்று நினைத்து என்னை மூடர்கள் அவமதிக்கிறார்கள் (அவஜானந்தி மாம் மூடா மானுசீம் தனும் ஆச்ரிதம்) என்று கீதையிலே அவன் வருந்தி நிற்கும் படி ஆயிற்று. ஆனால் எம்பெருமானாருடைய பிறப்போ சிறந்தது. ஏனெனில் எம்பெருமானார் பிறந்த பின்னர் உலக வாழ்க்கையில் உழன்று கொண்டிருந்தவர்கள் எவ்வகையான அறிவு கொண்டிருந்தார்களோ அந்த அந்த அறிவுக்குத் தகுந்த படி ஞானத்தைப் புகட்டி எல்லோரையும் ஞானிகளாக்கி இறைவனுக்கு அடியார்கள் ஆக்கினார்.

3. உலகமக்களுக்கு எளிதில் வைகுந்தம் புகவைத்தல்:

ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தொறும் நைபவர்க்கு
வானம் கொடுப்பது மாதவன் வல்வினையேன் மனத்தில்
ஈனம் கடிந்த இராமானுசன் தன்னை எய்தினார்க்கு அத்
தானம் கொடுப்பது தன் தகவென்னும் சரண் கொடுத்தே.

இப்பாடலின் பொருள்: ஞானத்தினால் யார் யார் இறைவன் மேல் பக்தி, பரபக்தி, பரமபக்தி என்ற நிலைகளை அடைந்து நாள்தோறும் அவனை அடையத் துடித்துக் கொண்டு இருக்கிறார்களோ அவர்களுக்கே வெகு முயற்சியும் துன்பமும் அடைந்த பிறகே திருமகள் நாயகன் வைகுந்தம் என்னும் முக்தி நிலையைத் தருகிறான். வலிய வினைகள் செய்த அடியவனின் மனத்தில் இருக்கும் தீமைகளை நீக்கிய இராமானுசரோ தன்னை அடைந்தவர்களுக்கு அதே வைகுந்தம் என்னும் மோட்ச நிலையைத் தருவது தன்னுடைய கருணை என்னும் அடைக்கலத்தை மட்டுமே கொண்டு.

விளக்கம்: ஞானம் அடைந்து பக்தியில் சிறந்து இவ்வுலகவாழ்க்கையில் இருப்பு கொள்ளாமல் இறைவனை அடைய யார் யார் துடிக்கிறார்களோ அவர்களை எல்லாம் மிகவும் சோதித்து தடைகளைத் தந்து அவர்களைச் சிரமப்படுத்தியே இறைவன் அவர்களுக்கு விடுதலை என்னும் மோட்சத்தை அளிக்கிறான். ஆனால் எம்பெருமானாரோ தன்னுடைய கருணை என்னும் ஒன்றின் மூலமே மற்றவர்களிடம் அன்பினைப் பொழிபவர் ஆதலால் எந்த வித தகுதியும் இல்லாத அடியார்களையும் அவர்களுடைய பாவங்கள் எல்லாம் நீங்கும் படி தன் திருவருளினால் திருத்தி அவர்களும் விடுதலை அடையும் படி செய்கிறார்.


4. மீண்டும் மீண்டும் பிறப்பில் தள்ளுதலும் கருணையால் உடனே உய்வித்தலும்:

சிந்தையினோடு கரணங்கள் யாவும் சிதைந்து முன்னாள்
அந்தமுற்று ஆழ்ந்தது கண்டு அவை என்றனுக்கு அன்று அருளால்
தந்த அரங்கனும் தன் சரண் தந்திலன் தான் அது தந்து
எந்தை இராமானுசன் வந்து எடுத்தனன் இன்று என்னையே

இப்பாடலின் பொருள்: அறிவும் ஐம்புலன்களும் எல்லாம் நீங்கி பிரளய காலத்தில் இருட்டில் ஆழ்ந்து என்னைப் போன்ற உயிர்கள் கிடந்தது கண்டு தனது அருளால் பிரளயத்தை நீக்கி எனக்கு அறிவும் ஐம்புலன்களும் தந்த திருவரங்கனும் தன்னுடைய திருவடிகள் என்னும் அடைக்கலத்தைத் தரவில்லை. ஆனால் என் தந்தையான இராமானுசரோ இறைவனின் திருவடிகள் என்னும் அடைக்கலத்தை எனக்குத் தந்து தாழ்ந்து கிடந்த என்னை வந்து மேலே எடுத்துக் கொண்டார்.

விளக்கம்: பிரளய காலத்தில் எல்லா உயிர்களும் அறிவும் ஐம்புலன்களும் நீங்கப் பெற்று சூக்கும உருவில் மூலப் பிரகிருதி என்னும் இயற்கைச் சக்தியில் ஆழ்ந்து கிடந்தார்கள். அவ்வாறு ஆழ்ந்து கிடந்ததைக் கண்டு அவ்வுயிர்கள் மேல் கருணை கொண்டு அவற்றிற்கு ஐம்புலன்களையும் அறிவினையும் அருளினான் திருவரங்கன். ஆனால் அப்போதும் அவர்களுக்குத் தன் திருவடிகள் என்னும் அடைக்கலத்தைத் தந்து விடுதலை தரவில்லை. தன்னுடைய அலகிலா விளையாட்டு ஆடும் சுயநலத்திற்காக இவ்வுயிர்கள் உலகத்தில் பிறந்து இறந்து அல்லல்படும் படி விட்டான். ஆனால் எம்பெருமானாரோ தாய் போல் அன்பு செய்து தந்தை போல் நலத்தை உரைத்து இறைவனுடைய திருவடிகளை அடையும் வழி காட்டி நம்மை உய்வித்தார்.

5: எதிரிகளை அழிப்பதும் வெல்லுவதும்:

தேரார் மறையின் திறம் என்று மாயவன் தீயவரைக்
கூர் ஆழி கொண்டு குறைப்பது கொண்டல் அனைய வண்மை
ஏர் ஆர் குணத்து எம் இராமானுசன் அவ்வெழில் மறையில்
சேராதவரைச் சிதைப்பது அப்போதொரு சிந்தை செய்தே.

இப்பாடலின் பொருள்: வேதங்களின் கட்டளைப்படி நடக்காத தீயவர்களை மாயவனான இறைவன் தன்னுடைய கூர்ந்த போர்ப்படையான சக்கரத்தால் கொன்று குறைக்கிறான். ஆனால் மேகத்தைப் போல் அள்ளித் தரும் வள்ளலான, உயர்ந்த குணத்தை உடைய எம்பெருமானாரோ அந்த அழகிய மறையில் சேராமல் வெளியே நிற்பவர்களையும் அந்த மறைகளுக்குத் தவறான பொருள் உரைப்பவர்களையும் அவ்வப்போது தன் திருவுள்ளத்தில் உதிக்கின்ற நல்ல கருத்துகளால் திருத்திக் கொள்வார்.

விளக்கம்: இறைவனின் ஆணைகள் மறைகளாகவும் மறை நூல்களாகவும் இருக்கின்றன. அம்மறைகள் சொல்லும் வழியில் நடக்காத தீயவர்களை கூரிய சக்கரப்படை கொண்டு கொன்று வீழ்த்துகிறார் இறைவன். அவ்வாறு இன்றி, வேதங்களின் வழி நடப்பவர்கள் மட்டும் இன்றி, வேதங்களை மறுக்கும் சமயத்தவர்களும் வேதங்களுக்குத் தவறான பொருள் உரைக்கும் சமயத்தவரும் மனம் மாறித் திருந்தி நல்வழிக்கு வரும் வகையில் வாதங்களில் நல்ல கருத்துகளைக் கூறி அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறார் எம்பெருமானார்.

தமிழ்மணத்தில் ஐந்தாயிரம் வலைப்பதிவுகள் - வாழ்த்துகள்!

தமிழ்மணத் திரட்டியின் ஐந்தாயிரமாவது வலைப்பதிவாக என்னுடைய 'உடையவர்' பதிவு நேற்று இணைக்கப்பட்டதாக தமிழ்மண நிர்வாகிகளில் ஒருவரான திரு. நா. கணேசன் ஐயா நேற்று மின் தமிழ் கூகுள் குழுமத்தில் அறிவித்தார்.

ஐந்தாயிரம் வலைப்பதிவுகளைத் திரட்டும் முதல் தமிழ்த் திரட்டி தமிழ்மணம் தான் என்று நினைக்கிறேன். தமிழ்மணம் இன்னும் மென்மேலும் வளர்ச்சி பெற்று தமிழ் வலையுலகத்திற்குத் தொண்டு செய்ய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Tuesday, May 12, 2009

கவியோகியாரின் தமிழ்த்தாய் வாழ்த்து!


கவியோகி சுத்தானந்த பாரதியார் பாடிய இத்தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்களை அண்மையில் சுப்புரத்தினம் ஐயா அவர்களுடைய வலைப்பதிவில் படித்தேன். அன்னை தமிழ் பெற்றிருக்கும் பெருமையெல்லாம் அவனியெங்கும் எடுத்துரைக்கும் வகையில் இப்பாடல்கள் அமைந்திருப்பதைப் படித்துப் பாடி மகிழ்ந்தேன்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி என்னும் ஐம்பெரும் காப்பியங்களும் சூளாம்ணி முதலிய ஐஞ்சிறு காப்பியங்களும் அவனியெல்லாம் புகழும் திருக்குறளும் அன்னைக்கு அணிகலன்களாக அமைந்திருப்பதை முதல் பாடல் சொல்கிறது.

குண்டலம் என்பது காதில் அணியும் அணிகலன் என்பதால் குண்டலகேசி என்னும் நூல் அன்னைக்குக் காதணியாக அமைகின்றது. வளையல் என்பது கைகளில் அணியும் அணிகலன் என்பதால் வளையாபதி என்னும் நூல் அன்னைக்குக் கையணியாக அமைகின்றது. மாணிக்க பதக்கங்கள் மணி மாலைகளுடன் மார்பில் அணியப்பட வேண்டியவை என்பதால் சீவக சிந்தாமணி என்னும் நூல் அன்னையின் மார்பில் ஒளி வீசி நிற்கின்றது. மேகலை என்பது முத்துகளால் செய்யப்பட்டு இடையில் அணியப்படுவதால் மணிமேகலை இடையணியாக விளங்குகின்றது. சிலம்பு என்பது கால்களில் அணியும் அணிகலன் என்பதால் சிலப்பதிகாரம் அன்னையின் பூந்தாமரைப் பாதங்களில் ஒலி செய்து விளங்குகின்றது.

சூளாமணி என்னும் அணிகலன் தலையணியாக அமைவதால் சூளாமணி முதலிய ஐஞ்சிறுகாப்பியங்கள் அன்னையின் தலையில் அணிந்த அணிகலன்களாக அமைகின்றன. இப்படி மேனியெங்கும் ஒளி வீசும் பெருமை கொண்ட அணிகளை அணிந்த பேரரசியாம் தமிழன்னை திருக்குறள் என்னும் செங்கோலினைத் தாங்கி சீராட்சி செய்கின்றாள்.

காதொளிரும் குண்டலமும் கைக்கு வளையாபதியும் கருணை மார்பின்
மீதொளிர் சிந்தாமணியும் மெல்லிடையில் மேகலையும் சிலம்பார் இன்பப்
போதொளிர் பூந்தாமரையும் பொன்முடி சூளாமணியும் பொலியச் சூடி
நீதியொளிர் செங்கோலாய் திருக்குறளைத் தாங்கு தமிழ் நீடு வாழ்க!

காது ஒளிரும் குண்டலமும்
கைக்கு வளையாபதியும்
கருணை மார்பின் மீது ஒளிர் சிந்தாமணியும்
மெல்லிடையில் மேகலையும்
சிலம்பு ஆர் இன்பப் போது ஒளிர் பூந்தாமரையும்
பொன்முடிச் சூளாமணியும்
பொலியச் சூடி
நீதி ஒளிர் செங்கோலாய் திருக்குறளைத்
தாங்கும் தமிழ் நீடு வாழ்க!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் என்னும் சைவ சமயக் குரவர்கள் நால்வர் இயற்றிய இசை அமுதம் இருக்கின்றது. வைணவ குரவராம் நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் அவரே வெளிப்படுத்திய மற்ற ஆழ்வார்களின் நாலாயிர பாசுரங்களும் இருக்கின்றன. தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே என்பதால் திருத்தொண்டர் புராணம் என்றும் பெரிய புராணம் என்றும் சொல்லப்படும் சேக்கிழார் பெருமான் இயற்றிய பால் வடி செந்தமிழ் நூலும் இருக்கின்றது. கல்வியில் சிறந்த கம்பன் இயற்றிய இராமவதாரச் சித்திரமும் இருக்கின்றது. இந்நூல் இல்லாத இடம் எல்லாம் இருள் சூழ்ந்து இரவு போல் இருக்க இங்கு மட்டும் பகல் என்று சொல்லலாம் படி செய்திருக்கும் நாயனாராம் திருவள்ளுவரின் திருக்குறளும் இருக்கின்றது. இப்பெரும் நூல்கள் எல்லாம் இருக்கும் போது நமது தமிழன்னை காலத்தை வென்று ஓங்கும் கற்பக மரத்தைப் போல் வேண்டியவற்றை எல்லாம் அருளி என்றும் நிலைத்திருப்பதில் ஏதேனும் ஐயம் உண்டா?

நால்வர் இசை அமுதிருக்க நம்மாழ்வார் மொழியிருக்கச் சேக்கிழாரின்
பால்வடி செந்தமிழ் இருக்கக் கம்பச்சித்திரம் இருக்கப் பகலே போன்று
ஞாலத்தில் அறம் விளங்கும் நாயனார் குறளிருக்க நமது நற்றாய்
காலத்தை வென்றோங்கும் கற்பகம் போல் கனி பெருகக் கண்டிலோமோ


நால்வர் இசை அமுது இருக்க
நம்மாழ்வார் மொழி இருக்க
சேக்கிழாரின் பால் வடி செந்தமிழ் இருக்க
கம்பச் சித்திரம் இருக்க
பகலே போன்று ஞாலத்தில் அறம் விளங்கும் நாயனார் குறள் இருக்க
நமது நற்றாய்
காலத்தை வென்று
ஓங்கும் கற்பகம் போல்
கனி பெருகக் கண்டிலோமோ?!

Sunday, May 10, 2009

தாமரையாள் இனி தாமதியாள்!

இனிய மாலைப்பொழுது!
என்னவள் என்னருகில்!

அழகிய முகம்! சந்திரனை நிகர்த்தது!
ஆம்! சந்திரனுக்கும் உண்டல்லவோ முகப்பருக்கள்!

ரோசாப்பூ கன்னம்!
ரோசா மேல் பனித்துளிகள்
பளபளக்கும் முகப்பருக்கள்!

மாதுளம் விதைகளை
அள்ளித் தெளித்தாற் போல்
அழகிய கன்னங்களில்
சிவந்த முகப்பருக்கள்!

(10 ஜூன் 1998)

***

தாமரை முகம்!
தாமரைக் கண்கள்!
தாமரைக் கன்னம்!
தாமரை இதழ்கள்!
தாமரை மொட்டெனும் நாசி!
தாமரைக் கைகள்!
தாமரைப் பாதங்கள்!
தாமரை இலை வயிறு!
அதற்கு மேலே
ஆதவன் எனைக் கண்டு
மலரத் துடிக்கும்
தாமரை மொட்டுகள்!
ஆகா!
அழகிய தாமரைக் காடன்றோ என் காதலி?!

அவள் அருகிருக்க
வசந்தமும் வேண்டுமோ?
வான் தென்றலும் வேண்டுமோ?
தேமாஞ்சோலை வேண்டுமோ?
திகட்டாத சந்திரனும் வேண்டுமோ?

திருவெனும் பெயருடையாள்!
தாமரையாளும் அவளே!
ஸ்ரீ அவளை இதயத்தில் தரிப்பதால்
ஸ்ரீதரன் ஆகின்றேன் நான்!

(10 ஜூன் 1998)

***

தங்கத்தில் ஓர் குறை தோன்றிய போதினும்
தாரணியோர் அதைத் தாங்கியே வாங்குவர்!
மங்கையவள் சொக்கத் தங்கம் என்பேன் எனது
அங்கையில் வந்தினி ஆட்சி செய்வாள் அவள்!

குங்குமம் போல் அந்தக் கோல மயில் மேனி!
அங்கங்கள் யாவுமே அழகியத் தாமரை!
தாமரையாள் இனி தாமதியாள்! அன்புத்
தா மரை போல் எனைத் தாவணைவாள்!

(04 ஜூன் 1998)

Friday, May 08, 2009

நம்மையுடையவன் நாராயணன் நம்பி (& திருமகள்)


இந்திய ஆன்மிகத் தத்துவங்களில் ஒரு தனித்தன்மையுடன் விளங்குவது ஆழ்வார்களின் அருளிச் செயல்களான நாலாயிர திவ்விய பிரபந்தங்களை அடிப்படையாகக் கொண்ட தமிழக வைணவ தத்துவம். நிலையான வாழ்வு (முக்தி) என்பது என்ன, அதனை அடைவதற்கான வழிமுறைகள் எவை, அவ்வழிகளில் ஈடுபடாமல் உயிர்க்கூட்டத்தைத் தடுப்பவை எவை என்றெல்லாம் மிகவும் விரிவாக இந்தியத் தத்துவங்கள் பேசுகின்றன. அவற்றை எல்லாம் விவரிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. திருமகளை முதன்மை ஆசாரியராகக் கொண்ட தமிழக வைணவத்தின் தனித்தன்மையைப் பேசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

அப்படிப்பட்ட தனித்தன்மை தான் என்ன என்றால் மற்ற தத்துவங்களில் எல்லாம் அடைய வேண்டிய பேறு (முக்தி) என்பதும் அடையும் வழிகள் என்பவையும் வேறு வேறாகச் சொல்லப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக பேறு என்பது மயக்கத்தைத் தரும் மாயையிலிருந்து விடுபட்டு தன் உண்மை உருவினை உணர்ந்து அடைவது என்றும், அந்தப் பேற்றினை அடையும் வழி முறைகள் செயல் (கருமயோகம்), அன்பு (பக்தியோகம்), நினைவு (தியானயோகம்), அறிவு (ஞானயோகம்) போன்றவற்றில் ஒன்று என்றும் சொல்லப்படும். ஆனால் தமிழக வைணவத்திலோ பேறும் வழியும் ஒரே பொருள் தான். ‘நம்மை உடையவன் நாராயணன்’ என்று உணர்ந்து ‘நாராயணனே நமக்கே பறை தருவான்’ என்று அவன் அருளே அவனைப் பெறும் வழியாகக் கொண்டு தன் முயற்சியால் அவனை அடைவது இயலாத ஒன்று என்றிருப்பதைச் சொல்லும் இந்தத் தத்துவம்.

மற்றைய தமிழகத் தத்துவங்களும் இறையருளாலேயே இறையை அடைவது என்ற கருத்தைச் சொன்னாலும் (எடுத்துக்காட்டாக 'அவன் அருளாலே அவன் தாள் வணங்கி' போன்ற திருவாசகக் கருத்துகள்) அதனை முதன்மையாகவும் முழுமுதல் கருத்தாகவும் சொல்வதில்லை (என்று நினைக்கிறேன்).

நாராயணனே இன்றும் அன்றும் என்றும் நம்மையுடையவன் என்ற உண்மையை உணர்ந்து அந்த உணர்வுடன் இருப்பது மட்டுமே போதும். அவனே அந்த உண்மை உணர்வினை அவன் அருளாலே நமக்குக் கொடுத்து அந்த உணர்வில் என்றும் நின்று நம் இயற்கை நிலையான தொண்டு நிலையைத் தொடர்ந்து செய்யும் வகை செய்வான். அந்தத் தொண்டு நிலையை அடைவதே பேறு. அவனே பேறு. அந்தப் பேற்றினை அடையும் வழியாகவும் அவனே நின்று அருளுவான். அவனுடைய அருளே அப்பேற்றினை நல்கும். வேறு எந்த வழியும் (உபாயமும்) வேண்டாம்.

வேதங்களும் நாராயணனையே பரதெய்வமாகக் கூறுகின்றது என்று வேதத்தின் அடிப்படையில் எழுந்த எல்லா தத்துவங்களும் ஏற்றுக் கொள்கின்றன. அவற்றில் முதன்மையான அல்லிருமை (அத்வைதம்), விதப்பொருமை (விசிஷ்டாத்வைதம்), இருமை (த்வைதம்) போன்ற தத்துவங்கள் மீண்டும் மீண்டும் அதனைப் பறை சாற்றுகின்றன. இம்மூன்றினுள் வடமொழி வேதங்களை மட்டுமில்லாமல் தமிழ் வேதங்களான ஆழ்வார்களின் நாலாயிரப் பனுவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, விதப்பொருமைத் தத்துவத்தின் உருவாக எழுந்த தமிழக வைணவம் உபய வேதாந்தம் (இரு வேதங்களின் முடிவு) என்ற பெயரும் கொண்டு அமைந்திருக்கிறது.

இந்த உபய வேதாந்தத்தின் தனித்தன்மை இத்துடன் நின்றுவிடவில்லை. இந்தத் தத்துவத்திற்கு ஸ்ரீவைஷ்ணவம் என்றே பெயர் அமைந்திருப்பதற்குக் காரணம் இந்தத் தத்துவத்தில் நாராயணனுடன் திருமகளும் சேர்ந்து முதன்மையுடன் போற்றப்படுவதால்.

நாராயணன் மட்டுமே தான் நம்மையுடையவனா? திருமகள்? இந்தக் கேள்விக்கு திருமகளும் நம்மையுடையவள் என்றே தமிழக வைணவம் சொல்கிறது. சரி. பேறு என்ற போது திருமகளும் திருமகள் கேள்வனும் பேறு என்று சொல்லுவோம்; வழி என்ற போதும் அப்படித் தானா என்றால் அதற்கும் பதில் 'ஆமாம்' என்பதே.

'ஈச்வரீம் ஸர்வபூதானாம்' என்கிறது வேதம். அனைத்து உயிர்களையும் உடைமையாகக் கொண்டவள் என்பது இதன் பொருள். அதனால் 'திருமகளும் நம்மையுடையவள்'; அவளும் அவள் மணாளனும் இணைந்ததே பரதெய்வம் என்று விளங்குகிறது. இருவரும் இணைந்தே படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய அனைத்து பிரபஞ்ச காரியங்களையும் செய்கிறார்கள்.

'அகலகில்லேன் இறையும்' என்று இவள் கணப்பொழுதும் பிரியாமல் அவனுடன் சேர்ந்தே இருக்கிறாள் என்கிறது தமிழ் மறை. அதனாலும் அவளும் நம்மையுடையவள் என்பது தெரிகிறது.

'அலமேஷா பரித்ராதும் மைதிலீ ஜநகாத்மஜா' - 'நம்மைக் காக்க ஜநகனின் திருமகள் மட்டுமே போதும்' என்று வால்மீகி இராமாயணம் பறை சாற்றுகிறது. 'வேரி மாறாத பூ மேல் இருப்பாள் வினை தீர்க்குமே' என்கிறது தமிழ் மறை. இதனால் பேறாக இருக்கும் அவள் அப்பேற்றினைப் பெற்றுத் தரும் வழியாகவும் இருக்கிறாள் என்பது தெரிகிறது.

இப்படி இவர்கள் இருவருமே பெறும் பேறாகவும் அப்பேற்றினைப் பெறும் வழியாகவும் இருக்கிறார்கள் என்று இருவரையும் ஒரு சேர முதன்மை தந்து போற்றுகிறது உபய வேதாந்தமான தமிழக வைணவம்.

ஸ்ரீமந் நாராயண சரணௌ சரணம் அஹம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:


(திருமகளுடன் இணைந்திருக்கும் நாராயணனின் திருவடிகளை அடைக்கலமாகப் பற்றுகிறேன். திருமகளும் நாராயணனும் என்னை உடையவர்கள். நான் என்னை உடையவன் இல்லை)

அகலகில்லேன் இறையும் என்று
அலர்மேல்மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்றும்
உடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள்
விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்றில்லா அடியேன் உன்
அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

(நொடிப்பொழுதும் விலகியிருக்க மாட்டேன் என்று சொல்லி எப்போதும் தாமரையில் வாழும் மங்கையான திருமகள் உறையும் திருமார்பினைக் கொண்டவா. நிகரில்லாத புகழை உடையவா. மூவுலகங்களையும் உடையவா. என்னை ஆள்பவா. நிகரில்லாத நித்யர்களும் முனிவர்களும் விரும்பும் திருவேங்கடத்தானே. உன்னையன்றி வேறு கதி இல்லாத அடியேன் உன் திருவடிகளின் கீழ் அடைக்கலமாக என்றும் நீங்காமல் அமர்ந்தேன்)

Wednesday, May 06, 2009

ஐங்குறுநூற்றில் தைப்பொங்கல்!

தமிழ் மாதங்களில் ஓரெழுத்து ஒருமொழிப் பெயராய் அமைந்த ஒரே மாதம் "தை".

இதன் பெருமை பல மடங்காகும்.

எல்லாவற்றையும் இணைப்பது என்ற நுட்பத்தில் எல்லா நலங்களையும் வளங்களையும் ஒருசேரக் கூட்டும் மாதமானதால் அதன் சிறப்பு கருதி "தை" எனத் தனித்து கூறப்பட்டது.

நாட்டியம் ஆடும் நிலையில் ஓர் ஒழுங்கான தாளப்பிரிவிற்குத் "தை" என்று பெயர். இதனால் வாழ்வியல் முறையில் வீட்டிற்கும் நாட்டிற்கும் ஓர் ஒழுங்கைக் கற்பிக்கும் மாதமாகத் "தை" உள்ளது எனலாம். ஏனைய மாதங்களுக்கும் பெயர்களுக்கும் இல்லாத இந்நுட்பம் "தை" மாதத்திற்கு மட்டுமே அமைந்திருப்பதால் தான் "தை பிறந்தால் வழி பிறக்கும்" என ஆன்றோர் இம்மாதத்திற்கான சிறப்பைப் பழமொழியாகக் கூறிக் கொண்டாடினர் போலும்.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை உலகில் நிகழும் இயற்கை மாறுதல் நிகழ்வைச் சூரியனைக் கொண்டே நம் முன்னோர் உணர்ந்ததால் வான மண்டலத்தில் சூரியன் நிலநடுக் கோட்டுக்குத் தெற்கிலிருந்து வடக்கு போகும் இத் "தை" மாதத் தொடக்கத்தை உத்தராயணம் என்றனர். வடக்கிருந்து சூரியன் தெற்கே பயணமாவதைத் தட்சிணாயணம் என்றனர்.

இந்த வகையில் ஆடிப்பட்டம் தேடி விதைத்து வேளாண்மைத் தொழிலைச் செய்யத் தொடங்கிய ஆறாவது மாதத்தில் அறுவடை கண்ட பூரிப்பால் தைதை எனக் குதித்தாடிய மகிழ்வைப் புலப்படுத்த வேண்டி அதைத் தைப் பொங்கலாகக் கொண்டாடினர் எனலாம்.
புதுவரவான நெல்லைக் கண்டதும் எல்லாம் புதுமையாகவே இருக்க வேண்டும் என்ற விருப்பமான தொடர்ச்சியில் புதுப்பானை, புதுக்கரும்பு, புதுமஞ்சள், புத்தாடை போன்ற பொலிவுகள் பொங்கலைத் தோரணங்கட்டி வரவேற்றன. இயற்கையின் உதவியால் இவையெல்லாம் கிடைத்தன என்ற நன்றிப் பெருக்கோடு புத்தரிசிப் பொங்கலிட்டு அதை இயற்கைக்குப் படைத்துத் தானும் சுற்றமும் சூழ இருந்து உண்டு களித்தனர் மக்கள்.

இப்புதுப் பொங்கலுக்குப் பயன்படும் பொருள்கள் யாவும்

மருதம்
முல்லை
நெய்தல்
குறிஞ்சி

நிலங்களின் பங்களிப்பாகும்.

எல்லாம் கூடினால்தான் சுவை கூடும் என்ற ஒற்றுமை உண்மையின் விளக்கமாகவே, ஆக்கிய பொங்கலைச் சூரியனுக்குப் படைக்கும் வழிபாட்டில் பகற்பொழுதாயினும் அறியாமை இருளைப் போக்கும் விதமாகவும் விளக்கேற்றி வைக்கப்படுகிறது. இதுமுதலாக எல்லாம் மங்கலகரமாகவே நடக்கவேண்டும் என்பதை உணர்த்தவே மஞ்சள் கொத்து வழிபாட்டில் சேர்க்கப்படுகிறது.

பொங்கல் பற்றி ஆண்டாள் நாச்சியார் "பாற்சோறு மூட நெய் பெய்து" என்றும், முழங்கை வழிவாரக் கூடியிருந்து உண்டு மகிழ்வதாகத் திருப்பாவையில் குறிப்பிடுகிறார். தனிமை எப்போதும் சுகம் தராது; கூட்டுறவுதான் எல்லா சுகமும் தரும் என்பதால் அந்த எளிய உண்மையையே "கூடியிருந்து" என்ற சொற்களால் ஆண்டாள் கூறியுள்ளார். ஆக தைப்பொங்கலைப் பெண்கள் கூடியிருந்து கொண்டாடினர் என்பது பெறப்படுகிறது.

இவ்வாறு கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு வணக்கத்தோடு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்ளும் உறவுத் தொடர்ச்சியும் இருந்ததாக ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தால் ஓரளவு உணரமுடிகிறது. இதில் கூறப்படும் வாழ்த்து, அரசனை முன்னிலைப் படுத்தும் வாழ்த்தாகத் தொடங்கிப் பொங்கலுக்குரிய பொருத்தமான சிந்தனையின் வழி சமூகத்தை வாழ்த்தும் வாழ்த்தாக அமைகிறது. நூலின் தொடக்கமாகிய மருதத்திணைப் பாடலை ஓரம்போகியார் என்பவர் பாடியுள்ளார். அகப்பொருள் நிலையில் பெண்கள் பாடுவதாக முதல் பத்துப் பாடல்களும் உள்ளன.

வாழி ஆதன்! வாழி அவினி! என்பதாகவே பத்துப் பாடல்களும் தொடங்குகின்றன. முடிவுடை வேந்தர் மூவேந்தர். மூவரில் சேரமன்னன் ஒருவன் அவினி. அவனது குடிப்பெயர் ஆதன். குடிப்பெயரும் இயற்பெயரும் சேர்ந்த நிலையில் மன்னனை வாழத்திய பிறகு அவனது அரசும், அவனது ஆளுகைக்கு உட்பட்டவையும் வாழ்த்தப்படுகின்றன. இவ்வாழ்த்து யாவும் பெண்களால் பாடப்படுபவை என்பது சிந்திக்கத்தக்கது. நோன்பிருந்து தைந்நீராடி, தக்க கணவரையடைந்து இல்லறத்தை அமைத்துக் கொண்ட தலைமைக்குரிய பெண்கள் தம் அனுபவத்தால் வாழ்த்தும் தகுதிபெற்றவர்கள் என்பதால் ஓரம்போகியார் பெண்கள் வாழ்த்துவதாகப் பாடியது பெண்மையைப் போற்றியதற்கான அடையாளம் எனலாம்.

நல்ல ஆட்சியாளரது ஆளுகைக்குக் கீழேதான் மக்கள் விழாக்கள் கொண்டாடி மகிழ்வோடும் அமைதியோடும் வாழ முடியும் என உணர்ந்த பெண்கள் "வாழி அவினி! வாழி ஆதன்" என முதலில் அரசனை வாழ்த்தினர். பின்னர் வாழ்த்தப்படுபவை யாவும் முன்பின்னாக அமைந்தாலும் அவற்றை ஒருமுகப்படுத்திக் காணும் போதுதான் ஒட்டுமொத்த வீட்டையும் நாட்டையும் ஒழுங்குபடுத்தி அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் பத்துப்பாடல்களுக்குள் கிடக்கும் வாழ்த்துகள் வரிசைப் படுத்தும்போது பொங்கல் சிந்தனையின் ஏற்றத்தை உணரலாம்.

அரசுமுறை செய்க(8) என்ற வாழ்த்து, ஒரு நாட்டிற்கான நல்ல தலைமைதான் வாழ்த்து பெறமுடியும் என்பதை உணர்த்துவதாக உள்ளது. அந்த அரசு மக்களுக்கான தேவையை நிறைவேற்றுவது கடமையானாலும் அமைதியான வாழ்வைத் தருவதே அதன் முதற்கடமை என்பதை நினைவூட்டும் விதமாக "வேந்து பகை தணிக" (6) என வாழ்த்தப்பட்டது. வேந்தனுக்குப் போரால் வரும் வெற்றிப் புகழைவிட போர் தவிர்த்ததால் அதாவது பகை உணர்ச்சி இல்லாமையால் வரும் சமாதானப் புகழே நிலையானது என்பதால் அவ்வாறு வாழ்த்தப்பட்டது.

அரசனுக்குப் பகை உணர்ச்சி நீங்குவதால் பகைவர்கள் இல்லாமையால் பகைவர்களால் வரும் உள்நாட்டு, வெளிநாட்டுத் தொல்லைகள் நீக்கும் வகையில் மக்கள் அமைதியாக வாழமுடியும். பகைவர்கள் வாழமுடியாமல் போவதால் அவர்கள் பொலிவிழந்து போவதையும் பெண்கள் "பகைவர் புல் ஆர்க" (4) என்று வாழ்த்துகின்றனர்.
இத்தகு நல்ல அரசால் நாட்டில் களவு போன்ற தீமைகள் நடவா என்ற எதிர்பார்ப்பில் "களவு இல்லாகுக" (8) என்றும் "தீது இல்லாகுக" (9) என்றும், "அல்லது கெடுக" (7) என்றும் பெண்கள் வாழ்த்தினர். ஆக அரசு எவ்வழி அவ்வழி குடிகள் என்றபடி நல்லாட்சியின் கீழ் வாழும் மக்கள் நம்பிக்கையோடு வாழும்போதுதான் நன்மைகளும் அறங்களும் ஓங்கும் என்பதால் "நன்று பெரிது சிறக்க" (9) என்றதோடு "அறம் நனி சிறக்க" (7) என்றும் வாழ்த்தப்பட்டது.

அறங்களும் நன்மைகளும் நாட்டில் ஓங்க வேண்டுமானால் சுற்றுப்புறச் சூழல் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதை நினைவுபடுத்தும் விதமாக "மாரி வாய்க்க" (10) என மழைபெய்தால்தான் வேளாண் தொழிலும் ஏனையவும் சிறக்கும் என்பதன் காரணத்தால் "விளைகவயலே" (2) என்றும் "நெல் பல பொலிக" (1) என்றும் வாழ்த்தப்பட்டது. உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெற்றுவிட்டால் நாட்டில் பசி, பட்டினி இல்லாமல் போகும் என்பதை உணர்த்தவே பசி இல்லாகுக (5) எனப்பட்டது.

இவ்வாறாக உழவால், உணவால், அறிவால், செல்வத்தால் நிரம்பிய நாடானாலும் நல்ல ஊட்டச்சத்தால் சுகாதாரக் கேடின்றி வாழமுடியும் என்பதைக் கூறவே "பால்பல ஊறுக, பகடு பல சிறக்க" (3) என்றதோடு "பிணிசேண் நீங்குக" (5) என்றும் வாழ்த்தப்பட்டது. இப்படி எல்லா நன்மைக்கும் அரசனே காரணம் என்பதால் அவனது வாழ்நாள் நீடிப்பதன் மூலம் குடிகள் நல்லாட்சியைப் பெறமுடியும் என்பதால் நிறைவாக அரசன் "யாண்டு பல நந்துக" (6) என அவனது வாழ்நாளை நீட்டிக்க வாழ்த்தினர் பெண்கள்.

பெண்கள், நல்லாட்சி செய்யும் அரசனையும் அவனது வாழ்நாளையும் ஆட்சியையும் வாழ்த்துவதன் மூலம் நாடும் வீடும் அமைதியுறும் என்பதைப் புரிந்து கொண்டு வாழ்த்திய ஐங்குறுநூற்றின் வாழ்த்துத் தொடர்கள் யாவும் தைப்பொங்கல் சிந்தனையை எதிரொலிப்பனவாகவே உள்ளன எனலாம்.

தமிழாகரர் தெ.முருகசாமி

நன்றி: தமிழ்மணி (தினமணி)

நன்றி: திரு. கண்ணன் நடராஜன் (மின் தமிழ்)

***

'ஐங்குறுநூற்றில் தைப்பொங்கல்' என்ற தலைப்பில் வந்த இக்கட்டுரையை ஒளவை. நடராஜன் ஐயாவுடைய திருமகனார் கண்ணன் ஐயா அவர்கள் மின் தமிழில் பொங்கலை ஒட்டி இட்டிருந்தார். இக்கட்டுரையின் முதல் பகுதியில் 'தை' மாதத்தைப் பற்றிய சுவையான கருத்துகளும் அடுத்த பகுதியில் ஐங்குறுநூற்றில் இருக்கும் வாழ்த்துப் பாடல்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இவையிரண்டும் தனித்தனியாகச் சுவையாக இருக்கின்றன. ஆனால் ஐங்குறுநூற்றுப் பாடல்கள் பொங்கலைப் பற்றித் தான் கூறுகின்றனவா? அன்றி அவைப் பொதுவாகப் பாடப்பெற்ற வாழ்த்துப்பாடல்களா? இந்த ஐயம் இப்போதும் இருக்கிறது. இப்பாடல்களை நேரடியாகப் படித்துப் பார்த்தால் இந்த ஐயம் தீரலாம். இன்னும் நேரம் அமையவில்லை.

Sunday, May 03, 2009

மாதமிழில் சொல்லேதும் இல்லை!

ஏக்கம் கொண்டேனடி உன் மேல்!
இணைந்திருப்பது நாம் எக்காலம்?
தூக்கம் இல்லாமல் உழல்கின்றேன்!
தாங்கமுடியவில்லை என் மோகம்!

பார்த்ததுண்டு எத்தனையோ பெண்கள்!
பார்த்ததில்லை உன் போலே எங்கும்!
பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத கண்கள்
பெற்ற உன்னைப் பார்க்கிறேனே எங்கும்!

உயர்வான தமிழ்ச்சொல்லைக் கொண்டு
உன்னழகைப் போற்றிடவே எண்ணம்!
மயர்வுற்று நிற்கின்றேன் இன்று
மாதமிழில் சொல்லேதும் இல்லை!

கண் கொண்ட பயன் அன்று பெற்றேன்
கண்டு கொண்டேன் கன்னி உனை அன்று!
பெண் கொண்ட பேரழகை எல்லாம்
பருகி உளம் நிறைவு பெறல் என்று?

கொண்டேனோ நான் உன் மேல் காதல்
கொதிக்கிறதே தினமும் என் தேகம்!
பெண் உந்தன் மேனி தனைக் கண்டால்
பெற்றிடுவேன் நான் ராசபோகம்!


***

மாமாவும் அத்தையும் நாளை இங்கே வருகிறார்கள். ஆறு மாத காலம் இங்கே தங்குவார்கள். அவர்களுக்காக ஒரு அறையை ஒழித்துக் கொடுப்பதற்காக அந்த அறையில் இருந்ததை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டிருந்த போது 28 மே 1998ல் எழுதிய இந்தக் கவிதை கண்ணில் பட்டது. அட நல்லா இருக்கே என்று நினைத்துக் கொண்டு இங்கே பதிந்து வைக்கிறேன். :-)

Friday, May 01, 2009

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும்பெண்கொடியே!!!


எங்கள் ஊரில் குளிர்காலம் முடிந்து இளவேனில் காலம் தொடங்கியிருக்கிறது. மிதமான குளிருடன் கூடிய மாலை வேளையில் வீட்டிற்குப் பின்புறத்தில் இருக்கும் ஓய்விடத்தில் அமர்ந்திருந்தேன். பல நாட்களுக்குப் பிறகு அமைதியாக ஓய்வாக அமர்ந்து வானத்தைப் பார்க்கும் வாய்ப்பு. மனம் சிறிதே ஒடுங்கி கண்ணை நன்கு திறந்து கண்ட காட்சியைத் தான் இங்கே விவரிக்கப் போகிறேன்.

முதலில் கண்ணில் தென்பட்டது வானத்தில் ஆங்காங்கே இருந்த கருநிற மேகங்கள். காலையில் பெய்த மழையின் மிச்சமாக இந்த மேகங்கள். அந்த முகில்களைச் சுற்றிப் பரந்து விரிந்த நீல நிற வானம். வலப்பக்கமாக ஒளிவீசும் மாலைக் கதிரவன். செந்நிறத்துடன் கண்கூசாத சுடர்களை வீசித் திகழ்கிறான். எங்கும் நிறைந்த எந்த நிறமும் இல்லாத எல்லா நிறத்தையும் ஏற்கின்ற வெட்ட வெளி. தரையில் சில நாட்களாகப் பெய்த மழையால் தழைத்து வளர்ந்த பச்சைப் பசும் புல். ஆகா. இது அன்னையின் தோற்றமன்றோ. அன்னையின் திருவுருவமே அன்றோ கண்களுக்குத் தெரிகிறது. அந்த மோன நிலையில் இக்காட்சியைக் கண்டு வாய் தானாகவே அவள் புகழைப் பாடியது...

பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே!!!