Wednesday, October 15, 2008

உடுக்கை இழந்தவன் கை - 14 (பாரி வள்ளலின் கதை)

'பெரியப்பா. வெகு நாட்களாக இந்த ஊரில் தங்கியிருக்கிறோமே. ஏன்?'

'சங்கவை. நானும் அதைப் பற்றி தான் வியந்து கொண்டிருக்கிறேன். அவை முன்னவர்களிடம் கலந்து கொண்டு நமக்கு ஒரு பதிலைத் தருவதாகச் சொன்ன இருங்கோ வேள் இத்தனை நாளாகியும் நம்மை அழைத்து ஒரு விடையும் சொல்லவில்லை. பதில் சொல்லாமல் இருப்பதைப் பார்த்தால் இவனும் தயங்குகிறான் என்றே தோன்றுகிறது. நாளை காலை நான் மட்டும் அரசவைக்குச் சென்று அவனைப் பார்த்துவர எண்ணியிருக்கிறேன்'.

'சரி பெரியப்பா'.

***

இருங்கோவேள் தனியே இருக்கும் போது அவனைக் காண முயன்று தோற்ற கபிலர் அவையில் அவன் இருக்கும் போது அவைக்குள் வருகிறார்.

கபிலரைக் கண்ட இருங்கோவேளின் முகம் களையிழக்கிறது. அவையில் நுழைந்த புலவரை வருக என்று வரவேற்காமல் அவை அலுவலில் ஈடுபட்டவனைப் போல் வேறு திசை நோக்கிப் பேசிக் கொண்டிருக்கிறான்.

'ஹும். இவனாவது பாரி மகளிரை மணந்து கொள்வான் என்று எண்ணினேன். ஆனால் இவனோ வேண்டி வந்ததைக் கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். அப்படிக் காலம் தாழ்த்தியதிலேயே இவனுடைய எண்ணத்தைப் புரிந்து கொண்டு சென்றிருக்கவேண்டும். அப்படி சென்றிருந்தால் இப்போது இங்கே வந்து இப்படி அவமானப்பட வேண்டியிருக்காது.'

"வேளிர் தலைவா"

இப்படி கபிலர் நேரடியாக விளித்த பின்னர் கவனிக்காமல் இருக்க இருங்கோவேளால் முடியவில்லை.

"ஓ. கபிலரா. வருக வருக"

"மன்னா. வழி வழியாக வரும் செல்வத்தைக் கொண்டிருக்கிறாய் நீ. பார்வைக்குப் புலியைப் போல் தோன்றும் பாறைகளை உடைய மலையை உடையவன் நீ. உன்னிடம் வந்து இவர்கள் பெரும்வள்ளலாம் பாரியின் மக்கள் என்று சொல்லி யாசித்த என் அறிவின்மையை பொறுத்துக் கொள்வாய்.

வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறுமணி கிளரக் சிதறு பொன் மிளிரக்
கடிய கதழு நெடுவரைப் படப்பை
வென்றி நிலைஇய விழுப்புகழ் ஒன்றி
இருபாற் பெயரிய உரு கெழு மூதூர்க்
கோடி பலவடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி
நுந்தை தாய நிறைவுற எய்திய
ஒலியற் கண்ணிப் புலிகடிமாஅல்
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல்
எவ்வி தொல் குடிப் படீஇயர் மற்றிவர்
கைவண் பாரி மகளிர் என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும
விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து
அரும்பற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டொள் வீ தாயது உறுகல்
இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடு கிழவோயே.


இப்போது நான் விடைபெறுகிறேன். நின் வேல் வெல்லட்டும்".

***

பாடற்குறிப்பு:

இப்பாடல் பாடாண் திணையிலும் பரிசில் துறையிலும் அமைந்திருக்கிறது. கபிலர் இருங்கோ வேளைப் பாடியது. புறநானூறு 202வது பாடல்.

இப்பாடலில் சில வரலாற்று நிகழ்ச்சிகளைக் கூறுகிறார் கபிலர். அவை என்ன என்று சங்க இலக்கியங்களைத் தேடினால் கிடைக்கலாம். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

பொழிப்புரை:

வெட்சிப்பூவைச் சூடிய காட்டில் வாழும் வேடுவர்கள் விரட்டிக் கொண்டு வர புகலிடம் தேடி எல்லாத் திசைகளிலும் ஓடும் மாடுகள் தங்கள் கழுத்தில் சூடிய மணிகளிலிருந்து பெரும் ஓசை கிளம்பவும் தங்கள் உடலில் சூடிய பொன்னணிகள் பல இடங்களில் சிதறவும் விரைந்து ஓடும் படி அமைந்திருக்கும் நெடிய மலைப் பக்கம். அந்த மலையில் வெற்றியென்பது என்றும் நிலை பெற்ற சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம் பேரரையம் என்று இருபகுதியாகப் பெயர் பெற்ற பகுதிகள் கொண்ட பழைய மூதூர். அந்த ஊரில் பல கோடியாக அடுக்கப்பட்டப் பொன்னை உனக்கு உதவும் அரையத்தின் கேட்டை இனி கேட்பாய்.

உனக்கு வழி வழியாக உன் தந்தையின் மூலமாக வந்த செல்வ நிறைவைப் பெற்ற தழைத்த மாலையையுடைய புலிகடிமாலே! அந்த அரையம் கெடுதற்குக் காரணத்தைக் கேட்பாய். உன்னையொக்கும் அறிவை உடைய உன்னவருள் ஒருவன் புகழப்பெற்ற செய்யுளையுடைய கழாஅத்தலையரென்னும் புலவரை உண்டான பயனே அது. நன்கு செய்யப்பட்ட தேரினை உடைய தலைவா! இவர்கள் எவ்வியினுடைய பழைய குடியில் பிறந்தவர்கள். அப்படியிருக்க இவர்களைப் பெரும் வள்ளலான பாரியின் மகளிரென்று உன்னிடம் சொல்லிய தெளியாத என் புன் சொல்லைப் பொறுப்பாயாக. பெருமானே! உன்னிடம் இருந்து விடை பெறுகிறேன். நின் வேல் வெல்லட்டும். மலையில் அரும்பே இல்லாமல் எல்லா மலர்களும் மலர்ந்து நிற்கும் கரிய காலையுடைய வேங்கைமரத்தின் ஒளிவீசும் பூவானது உதிர்ந்துக் கிடக்கும் கல் பார்ப்பதற்கு வரிகளைக் கொண்ட பெரும்புலியைப் போல் தோன்றும். அப்படித் தோன்றும் பாறைகளைக் கொண்ட மலைநாட்டிற்கு உரியவனே!

விளக்கம்:

வெட்சியைச் சூடி ஒரு அரசனின் படை வீரர்கள் இன்னொரு அரசனின் எல்லைக்குள் சென்று அந்தப் பகையரசனின் மாடுகளை விரட்டி கவர்ந்து வருதல் வெட்சித் திணையின் பகுதி. இந்தப் பாடலின் தொடக்கத்தில் கானத்து வேடுவர்கள் வெட்சி அணிந்து கடமா நல்லேற்றை விரட்டுகிறார்கள் என்று சொன்னதைப் படித்தால் முதலில் அது இருங்கோவேளைப் புகழ்வது போல் தோன்றுகிறது. ஆனால் பாடலின் மற்ற பகுதிகளைப் பார்த்தால் பகையரசனின் படைகள் இருங்கோவேளின் எல்லைக்குள் வந்து மாடுகளை விரட்டுவதைச் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது.

அந்த மலைப்பக்கத்து இது வரை வெற்றி என்பது நிலையாக நின்றதும் உனக்கு கோடிப்பொன் உதவியதும் ஆன அரையம் கொண்ட மூதூர் இனி வெற்றியை இழந்து கெட்டுப் போகும் என்று சொல்கிறார். அதற்குக் காரணம் உன்னவரில் ஒருவன் முன்பு இன்னொரு புலவரை அவமதித்தது போல் நீ என்னை அவமதித்தது என்கிறார்.

உனக்குக் குடிப்பெருமை மட்டுமே தான் இருக்கிறது; உன் சொந்த முயற்சியால் பெற்ற செல்வம் எதுவும் இல்லை என்ற இகழ்ச்சி தோன்ற 'உன் தந்தையின் வழி வந்த செல்வம் உனக்கு நிறைவாக இருக்கிறது' என்கிறார்.

வேங்கைமரத்தின் உதிர்ந்த பூக்கள் கொண்ட பாறைகள் பார்ப்பதற்கு வரிகளைக் கொண்ட புலியைப் போல் காட்சி தருகின்றது என்று சொன்னதும் 'பார்வைக்கு மட்டுமே நீ புலி' என்று இகழ்ச்சி தோன்றக் கூறுவதாகத் தோன்றுகிறது.

18 comments:

குமரன் (Kumaran) said...

இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் இந்தத் தொடர்கதையின் அடுத்த பகுதி வருவதற்குக் காரணம் நான் இல்லை. இருங்கோ வேள் தான். அவன் தான் கபிலரை இவ்வளவு நாட்களாகக் காக்க வைத்துவிட்டான். :-)

பழமைபேசி said...

புலியை முறத்தால் அடித்த பெண்கள் பற்றிய சங்ககாலப் பாடல் உங்களிடம் உளதா?

Geetha Sambasivam said...

இருவாட்சிப் பூக்கள் தான் வெட்சி என சொல்லப் பட்டதோ???

மெளலி (மதுரையம்பதி) said...

//இருங்கோவேளைப் புகழ்வது போல் தோன்றுகிறது. ஆனால் பாடலின் மற்ற பகுதிகளைப் பார்த்தால் பகையரசனின் படைகள் இருங்கோவேளின் எல்லைக்குள் வந்து மாடுகளை விரட்டுவதைச் சொல்கிறாரோ என்று தோன்றுகிறது//

இப்படி எல்லாம் ஆயிடும்முன்னு மிரட்டறாரோ? :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இவ்வளவு நாட்களுக்குப் பின்னர் இந்தத் தொடர்கதையின் அடுத்த பகுதி வருவதற்குக் காரணம் நான் இல்லை. இருங்கோ வேள் தான்//

அதான் தாமதம் இருங்கோ பேருலயே இருக்கே!
பொறுமையா இருங்கோ - வேள் :)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கபிலர் வேண்டுகோளை ஏற்க மறுக்கிறான் இருங்கோ வேள்.
ஆயினும் அவன் ஒரு கொடையாளி. அவனைப் பற்றிய பிற பாடல்கள், அவன் வன்மையையும் வண்மையையும் பேசுகின்றன.

துவரைப்பதியை (துவாரசமுத்திரம்) ஆண்ட நாற்பத்தொன்பது தலைமுறை வேளிர் குலத்துள் இவனும் ஒருவன்.

உவரா வீகைத் துவரை ஆண்டு, நாற்பத் தொன்பது வழிமுறை வந்த, வேளிருள் வேளே
என்றும் போற்றப்படுகிறான்.

சான்றோன் தவத்துக்குத் தடையாய் இருந்து காட்டுப் புலியைக் கொன்றமையால் புலி-கடி-மால் என்ற சிறப்புப் பெயர் இவனுக்கு.

கபிலரைக் காக்க வைத்து, பாரி மகளிரை மணங் கொள்ள ஏன் இவன் உட்பட, ஏனைய அரசர்கள் எல்லாரும் தயக்கம் காட்டினர் என்பது தான் வியப்பு! மூவேந்தர் அச்சமோ?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இருங்கோவேளின் முன்னோர் யாரோ ஒருவர் கழாத்தலையார் என்னும் புலவரை இகழ்ந்தமையால், அவர்களின் அரையம் என்னும் நகரம் அழிந்தது என்று கபிலர் பாடுகிறார்.

முன்னோர் செய்த வினைகள் சந்ததியைப் பற்றும் என்று எச்சரிக்கை செய்கிறாரோ கபிலர்? ஆனால் இருங்கோவேள் கபிலரை அவமதித்ததாகத் தெரியவில்லையே!

பெண்ணுக்கு எப்படித் தம் கணவரைக் கொள்ளும் உரிமை உள்ளதோ, அதே போல் இருங்கோவேளுக்கும் தம் துணையைத் தானே தேர்ந்து கொள்ளும் உரிமை உள்ளது அல்லவா? அப்படியிருக்க கபிலர் சினத்தின் காரணம் ஏனோ?

குமரன் (Kumaran) said...

புலியை முறத்தால் அடித்த பெண்ணைப் பற்றிய புறநானூற்றுப் பாடலைப் படித்திருக்கிறேன் பழமைபேசி. உங்கள் பின்னூட்டம் கண்டவுடன் தேடிப் பார்த்தேன்; கிடைக்கவில்லை. கிடைத்தவுடன் சொல்லுகிறேன்.

குமரன் (Kumaran) said...

இருக்கலாம் கீதாம்மா. எனக்கு தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

இருக்கலாம் மௌலி. இந்தப் பாடல் எனக்கு அவ்வளவாகப் புரியவில்லை. அதனால் தான் இந்தப் பகுதியை எழுத இவ்வளவு தாமதம். :-)

குமரன் (Kumaran) said...

அட ஆமாம். அவருடைய பேருலயே இருங்கோ இருங்கோன்னு இருக்குல்ல? :-) வர்றவங்களை எல்லாம் இருங்கோ இருங்கோன்னு சொல்லுவாரு போல.

குமரன் (Kumaran) said...

இவர்கள் எல்லாம் மூவேந்தர்கள் மேல் அச்சம் கொள்ளும் போது மலையமான் திருமுடிக்காரி மட்டும் அஞ்சாமல் இருந்தானா? இல்லை இவர்கள் மறுத்ததற்கும் அவன் ஏற்றதற்கும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? புரியவில்லை.

கபிலர் மூவேந்தர்களுக்கு மகண்மறுத்து வேளிர்களிடம் மட்டும் சென்று இறைஞ்சுவதைக் கண்டு அதில் ஒரு தொடர்ச்சியைக் கண்டேன்; அதனைக் கொண்டு இந்தத் தொடரின் கருவை வைத்தேன். ஆனால் மூவேந்தர் மேல் இருக்கும் அச்சம் மட்டும் தான் காரணமா இவர்கள் மறுத்ததற்கு, அப்படியெனில் மலையமானுக்கு மட்டும் அந்த அச்சம் இல்லாமல் போனதேன்? புரியவில்லை இன்னும்.

குமரன் (Kumaran) said...

இந்தப் பாடலில் இகழ்ச்சி தோன்றத் தான் கபிலர் பாடியிருப்பதாக உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். இருங்கோவேள் செய்த அவமதிப்பு பாடல்களில் பதியப்படவில்லை. ஆனால் அதற்கு செய்யப்பட்ட எதிர்வினை என்னும்படியான வஞ்சப்புகழ்ச்சி அணி இந்தப் பாடலில் தென்படுகிறது.

பெண்ணை மணக்காமல் மறுக்க அவனுக்கு உரிமை உண்டு. அதனால் தான் இதற்கு முன்னர் இன்னொரு வேளிரிடம் சென்று கேட்டபோது அவன் மறுக்க பேசாமல் வந்தார் போலும் கபிலர். இந்த முறை வேறு ஏதோ வகையில் அவமரியாதை செய்திருக்கிறான். நான் கதையில் 'அவன் காக்கவைத்தான்; முகம் திருப்பிக் கொண்டான்' என்று சொல்லியிருக்கிறேன். இவை கற்பனையே.

பழமைபேசி said...

புலியை முறத்தால் அடித்த பெண்ணைப் பற்றிய புறநானூற்றுப் பாடல் கிடைக்கிற போது, என் விபரப் பட்டையில் இருக்கும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். நன்றி!

Kavinaya said...

இந்த கதையை இன்னும் படிக்கல.

//மலையில் அரும்பே இல்லாமல் எல்லா மலர்களும் மலர்ந்து நிற்கும் கரிய காலையுடைய வேங்கைமரத்தின் ஒளிவீசும் பூவானது உதிர்ந்துக் கிடக்கும் கல் பார்ப்பதற்கு வரிகளைக் கொண்ட பெரும்புலியைப் போல் தோன்றும்.//

இகழ்ச்சியோ புகழ்ச்சியோ, இந்த உதாரணம் நல்லாருக்கு :)

குமரன் (Kumaran) said...

நன்றி கவிநயா அக்கா.

பாச மலர் / Paasa Malar said...

நீண்ட நாட்களாக வலைப்பதிவுகளைப் படிக்க முடியாமல் இருந்த போது..மீண்டும் ஆரம்பிக்கையில் நிறைய அத்தியாயங்கள் இத்தொடரில் படிக்க வேண்டியிருக்கும் என்று நினைத்தேன்..ஒரு அத்தியாயம்தான் படிக்கவில்லை என்று கொஞ்சம் திருப்தியாகத்தான் இருக்கிறது..இருந்தாலும் சற்றே ஏமாற்றம்..

பூக்கள் விழுந்த பாறை..புலி உடல் வரிகளுக்கு உவமை..பொருத்தம்..வேங்கைப்பூ..வேங்கை பொருத்தம் அழகாயுள்ளது..

குமரன் (Kumaran) said...

வாங்க பாசமலர். ஏமாற்றம் தந்ததற்கு மன்னிக்கவும். நேரம் கிடைக்காததால் எழுத முடியவில்லை. இன்னும் ஒன்றிரண்டு பகுதிகள் வரும் என்று நினைக்கிறேன். விரைவில் எழுத வேண்டும்.