Wednesday, October 31, 2007

சைவர்களின் பெருமாளும் வைணவர்களின் பெருமானும்...

உலகத்தில் எதுவுமே முழுக்க முழுக்க நல்லதாகவோ முழுக்க முழுக்கக் கெட்டதாகவோ இருப்பதாகத் தெரியவில்லை. இறை நம்பிக்கையாளர்கள் இறைவன் தான் எக்குறையும் அற்றோன் என்ற நம்பிக்கை கொண்டுள்ளார்கள். அந்த இறைசக்தி என்பதைத் தவிர்த்துப் பார்த்தால் எதுவுமே எவருமே நல்லதும் கெட்டதும் கலந்த கலவையாகத் தான் இருக்கிறது/இருக்கிறார்கள்.

நிறை குறை இரண்டும் இருக்கும் இடத்தில் குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திப் பேசி வருவது எல்லோருக்கும் இயற்கையாக இருக்கிறது. நிறைகளைப் பேசினால் சுவை குறைந்து போரடிக்கிறது. குறைகளைப் பேசினால்? மிகச் சுவையாக இருக்கிறது. சொற்போர்கள் நடப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இந்தச் சுவைக்காகவும் சொற்போர்களுக்காகவும் குறைகளே பெரிதுபடுத்திக் காட்டப்படும் போது நிறைகளைப் பற்றிய பேச்சுக்களும் வரவேண்டும்; வந்தால் தான் எல்லோருக்கும் நல்லது.

நாம் எல்லோரும் குறை கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களாகவும் அனைத்தும் அறிந்ததைப் போல் பேசிவரும் அரைகுறை அறிவு வலையுலக 'ஹாய் மதன்களாகவும்' மாறி வருகிறோம். இந்த நேரத்தில் நான் சைவன்; நான் வைணவன் என்று சொல்லிக் கொள்ளும் நம்பிக்கையாளர்களாவது நாயன்மார்கள் பெருமாளைப் பற்றிப் பாடியிருப்பதையும் ஆழ்வார்கள் சிவபெருமானைப் பற்றிப் பாடியிருப்பதையும் அறிய வேண்டும்; அறிந்து சொல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டிய காலம் இது. இல்லை என்றால் 'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்றாற் போல் ஆகிவிடும்.

***

அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள் ஊர்தி
உரை நூல் மறை உறையும் கோயில் வரை நீர்
கருமம் அழிப்பு அளிப்பு கையது வேல் நேமி
உருவம் எரி கார் மேனி ஒன்று.

அரன் என்பதும் நாரணன் என்பதும் அவர்கள் பெயர்கள். ஆவின் விடையும் (எருதும்) பறவையும் அவர்களின் ஊர்தி. அவர்கள் சொன்னது ஆகம நூலும் மறை நூலும். அவர்கள் உறையும் கோயில் கயிலை மலையும் பாற்கடலும். அவர்களின் தொழில் அழித்தலும் காத்தலும் (அளிப்பு). அவர்கள் கையில் இருப்பது வேலும் சக்கரமும். அவர்களின் உருவம் தீ நிறமும் முகில் நிறமும். ஆனால் மேனியோ ஒன்று.

இங்கே வைணவத்தின் முதலாழ்வார்களின் ஒருவரான பொய்கையாழ்வார் மிக மிகத் தெளிவாக இருவரின் மேனியும் ஒன்றே; இருவரும் ஒன்றே என்று கூறிவிட்டார்.

***

ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை
ஒருபால் உமையவளாம் என்றால் இருபாலும்
நின்னுருவம் ஆக நிறந்தெரிய மாட்டோமால்
நின்னுருவமோ மின்னுருவோ நேர்ந்து


ஒரு பக்கம் உலகளந்த மாலவன் உருவம்; இன்னொரு பக்கம் உமையவளின் உருவம். இப்படி இருந்தால் இருபக்கத்திலும் உன்னுருவம் எது என்று நிறத்தால் அறிய முடியாத படி இருக்கிறதோ? இல்லை. உன் உருவம் மின்னலை நிகர்த்து இருப்பதால் நொடியில் தோன்றி மறைகிறது போலும்.

இங்கே உலகளந்த மாலவனையும் உமையவளையும் அரனின் திருவுருவத்தில் பிரிக்க முடியாத அளவிற்குக் காண்கிறார் சிவபெருமானால் 'இந்தக் காரைக்கால் பேயார் என் தாயார்' என்று சொல்லப்பட்ட காரைக்கால் அம்மையார்.

***

தாழ்சடையும் நீள்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்
சூழ் அரவும் பொன் நாணும் தோன்றுமால் - சூழும்
திரண்டு அருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு
இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து

சூழ்ந்து திரண்டு அருவிகள் பாயும் திருமலை மேல் என் தந்தையான வேங்கடவனுக்கு சிவன், பெருமாள் என்ற இரண்டு உருவங்களும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தாழ்ந்து நிற்கும் சடைமுடியும் தெரிகிறது; நீண்டு உயர்ந்த திருமுடியும் (கிரீடமும்) தெரிகிறது. கூர்மையான மழுவாயுதமும் சக்கரமும் தெரிகிறது. கழுத்தைக் கையைச் சூழும் பாம்புகளும் தெரிகின்றன; பொன்னால் செய்த அணிகளும் தெரிகின்றன.

சைவத்தின் பேயார் சொன்னதையே இங்கே வைணவத்தின் பேயாராம் பேயாழ்வாரும் சொல்லியிருக்கிறார்.

***

இடம் மால் வலம் தான் இடப்பால் துழாய் வலப்பால் ஒண்கொன்றை
வடமாலிடம் துகில் தோல் வலம் ஆழி இடம் வலம் மான்
இடமால் கரிதால் வலம் சேது இவனுக்கெழில் நலம் சேர்
குடமால் இடம் வலம் கொக்கரையாம் எங்கள் கூத்தனுக்கு


இடப்பக்கத்தில் திருமால்; வலப்பக்கம் தானாகிய சிவபெருமான். இடப்பக்கம் திருத்துழாயாம் துளசி; வலப்பக்கம் அழகிய கொன்றைப்பூ. இடப்பக்கத் திருமால் அணிவது மெல்லிய பட்டாடை (துகில்); வலப்பக்கச் சிவபெருமான் அணிவது தோலாடை. இடப்பக்கம் திருவாழி என்னும் சக்கரம்; வலப்பக்கம் மான். இடப்பக்கம் கரிய நிறம்; வலப்பக்கம் அழகு தரும் சிவந்த நிறம். நலம் சேர்க்கும் குடத்தை எடுத்துக் கூத்தாடும் குடக்கூத்தாடி இடப்பக்கம்; கொக்கரையென்னும் தாளமும் உடுக்கையும் கொண்டு கூத்தாடும் கூத்தன் வலப்பக்கம்.

தம்பிரான் தோழராம் சுந்தரமூர்த்தி நாயனாரின் தோழர் சேரமான் பெருமாள் சொல்வது இது.

***

வைணவத்தின் குலமுதல்வனாகப் போற்றப்படும் மாறன் சடகோபனாகிய நம்மாழ்வார் பாடிய திருவாய்மொழியில் மீண்டும் மீண்டும் முக்கண்ணனைப் பாடும் பாட்டுகள் வருகின்றன. அவற்றையும் மற்ற அருளாளர்கள் பாடியதையும் அடுத்த இடுகையில் காண்போம்.

***

பாசுர மடல் திரு நா.கண்ணன் அவர்களுக்கு பதிகங்களையும் பாசுரங்களையும் பட்டியல் இட்டதற்கு நன்றிகள்

17 comments:

கோவி.கண்ணன் said...

குமரன்,

சிவனுக்கு ஒரு கைலாய மலை சிறப்பித்துக் கூறுவதைப் பார்த்தே திருமாலுக்கும் ஒரு மலை வேண்டும் என்று திருப்பதி (ஏழு மலைகள்) உயர்வாக்கப்பட்டதா ?

வந்ததற்கு...
:)

G.Ragavan said...

குமரன், இந்தப் பதிவு யாருக்கு?

ஒற்றுமை உயர்வு தரும் என்பதை ஏற்பதற்கு எந்த மறுப்பும் இல்லை. அரங்கம் சென்று கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே என்று உருகவும் என்னால் முடிகிறது. நம்புவீர்கள் என்றே நினைக்கிறேன்.

ஆனால் அரியை அணைக்க முடிந்த என்னால் ராமனை ஏற்க முடியாது. குறை என்று இல்லை. கொள்கை அளவில் சிலபல மறுப்புகள் உள்ளன.

அதுவுமில்லாமல் நாளைக்கு யாரேனும் சிவனும் ஏசுவும் ஒன்றுதான்...அதாவது எல்லாம் ஒன்று என்று பொதுவாகவும் கூறலாம். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பமே.

குமரன் (Kumaran) said...

இராகவன். நீங்கள் கோவித்துக் கொள்ளவில்லை என்று நம்புகிறேன். இது யாரையும் குறிவைத்து இல்லை. வேற்றுமைகளை பேசிக் கொண்டிருக்கும் போது ஒற்றுமைகளை அருளாளர்கள் பாடியிருக்கிறார்கள்; அதனையும் முன்னுக்கு நிறுத்துவோம் என்பதே இந்த இடுகையின் நோக்கம்.

அரங்கனைக் கண்டு நீங்கள் உருக மாட்டீர்கள் என்று சொன்னால் தான் நம்பமாட்டேன். இராமன் அவதாரம் என்பதால் (அதாவது அவன் மனிதன்; அவதாரம் என்று நம்பப்படுவதால்) அவனிடம் தென்படும் குறைகளைக் கண்டு நீங்கள் ஏற்காமல் இருக்கலாம். அதனைப் பற்றியும் நான் ஒன்றும் சொல்லவில்லை. வற்புறுத்தவும் இல்லை. கொள்கை அளவில் உங்கள் உயிராம் முருகனிடமே உங்களுக்கு மறுப்புகள் இருக்கலாம் என்று எண்ணுவதால் இராமனிடம் இருப்பதில் வியப்பில்லை.

நாளைக்கு என்ன? இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற அருளாளர்கள் எப்போதோ சொல்லிவிட்டார்களே -ஏசுவும் சிவனும் ஒன்று என்று. நாளை ஏசுவைப் பற்றியும் சிவனைப் பற்றியும் பேச்சு வந்தால் அப்போது கட்டாயம் அவர்களின் கருத்துகளையும் முன்வைக்க வேண்டும்.

இந்த இடுகையில் சொன்னவைகளை ஏற்பதைப் பற்றி ஒன்றுமே நான் சொல்லவில்லை. அருளாளர்கள் சொன்னவற்றை எடுத்து முன் வைப்பது மட்டுமே இந்த இடுகையின் நோக்கம்.

குமரன் (Kumaran) said...

இராகவன். இந்த இடுகை உங்களை நோக்கியில்லை; இராமனைப் பற்றிய உங்கள் மறுப்புகளைப் பற்றி இல்லை என்று இப்போது சொல்லிவிட்டேன். அந்த ஐயம் இப்போது நீங்கியிருக்கும் என்று எண்ணுகிறேன். அந்த ஐயம் நீங்கிய பிற்கு இந்த இடுகையைப் பற்றிய கருத்துகள் ஏதேனும் இருந்தால் அதனைச் சொல்ல வேண்டுகிறேன்.

துளசி கோபால் said...

//அதுவுமில்லாமல் நாளைக்கு யாரேனும் சிவனும் ஏசுவும் ஒன்றுதான்...அதாவது எல்லாம் ஒன்று என்று பொதுவாகவும் கூறலாம். அதை ஏற்பதும் மறுப்பதும் அவரவர் விருப்பமே.//

என்ன ராகவன் இப்படிச்சொல்லிட்டீங்க?
எல்லா கடவுளர்களும் ஒன்றுதானெப்பா?

நாமதான் வெவ்வேறு பெயர்களில் சொல்லிக்கிட்டு இருக்கோம்.

இறைவன் ஒருவன்

வெட்டிப்பயல் said...

//Collapse comments

கோவி.கண்ணன் said...

குமரன்,

சிவனுக்கு ஒரு கைலாய மலை சிறப்பித்துக் கூறுவதைப் பார்த்தே திருமாலுக்கும் ஒரு மலை வேண்டும் என்று திருப்பதி (ஏழு மலைகள்) உயர்வாக்கப்பட்டதா ?//

நல்ல வேளை அதுக்காக உருவாக்கப்பட்டுச்சானு கேக்காம விட்டீங்களே ;)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்தச் சுவைக்காகவும் சொற்போர்களுக்காகவும் குறைகளே பெரிதுபடுத்திக் காட்டப்படும் போது நிறைகளைப் பற்றிய பேச்சுக்களும் வரவேண்டும்; வந்தால் தான் எல்லோருக்கும் நல்லது//

மிகவும் உணர்ந்து சொல்லப்பட்ட சொற்கள் குமரன்.
முதலில் உங்களின் இந்த இடுகைக்கு என் மனமார்ந்த நன்றி.

//நம்பிக்கையாளர்களாவது நாயன்மார்கள் பெருமாளைப் பற்றிப் பாடியிருப்பதையும் ஆழ்வார்கள் சிவபெருமானைப் பற்றிப் பாடியிருப்பதையும் அறிய வேண்டும்; அறிந்து சொல்ல வேண்டும்.//

மிகவும் உண்மை!
ஆழ்வார்கள் சிவ பெருமானைப் பற்றி மட்டும் பாடவில்லை!
சிவனடியார்களைப் பற்றியும் போற்றிப் பாடி உள்ளார்கள்.

பொதுவா, இறைவன் ஒன்றே என்றே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்தால் கூட, மனிதர் என்று வரும் போது வேறுபடுவதும் மாறுபடுவதும் வாடிக்கை! அதில் தவறும் இல்லை!

அப்படி இருக்க, திருமாலையும் ஈசனையும் ஏத்தும் ஆழ்வார்கள், இன்னும் ஒரு படி மேலே போய், சிவனடியார்களையும் போற்றியே பாடி உள்ளார்கள்! காதலாகிக் கசியும் போது, உன் பக்தி தாழ்த்தி என் பக்தி உயர்த்தி என்ற சிந்தனை கூட வராது!

பாருங்கள் திருமங்கை மன்னன், கோச்செங்கணான் நாயன்மாரைப் போற்றும் பாடல்!

அம்பரமும் பெருநிலனும் திசைகள் எட்டும்
அலைகடலும் குலவரையும் உண்ட கண்டன்,
கொம்பமரும் வடமரத்தின் இலைமேல் பள்ளி
கூடினான் திருவடியே கூடிகிற்பீர்,
வம்பவிழும் செண்பகத்தின் வாச முண்டு
மணிவண்டு வகுளத்தின் மலர்மேல் வைகு
செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில்
திருநறையூர் மணிமாடம் சேர்மின் களே

வெட்டிப்பயல் said...

//G.Ragavan said...

குமரன், இந்தப் பதிவு யாருக்கு?//

:-))

எல்லாருக்கும் தான் ஜி.ரா. ஏன் இந்த சந்தேகம்? எவ்வளவு சூப்பரா பாட்டெல்லாம் எழுதியிருக்காரு.

இந்த பதிவை நான் புக் மார்க் பண்ணிக்கறேன் :-) (பிறகாலத்துல பயன்படும்)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் அரியை அணைக்க முடிந்த என்னால் ராமனை ஏற்க முடியாது. குறை என்று இல்லை. கொள்கை அளவில் சிலபல மறுப்புகள் உள்ளன//

ஜிரா
இங்கு நீங்கள் மட்டும் தனியாக இல்லை! உங்க கட்சியில் 'அவ்வப்போது' நானும் உண்டு! :-)
என் முன்னே இராமனையும் இலக்குவனையும் வைத்தால், இராமனைத் தள்ளி விட்டு இலக்குவனைத் தான் கொள்வேன்!
கண்ணனை வைத்தால்? - உங்களுக்கே தெரியும் நாம் இருவரும் யாரைக் கொள்வோம்-னு!:-)

//அரங்கனைக் கண்டு நீங்கள் உருக மாட்டீர்கள் என்று சொன்னால் தான் நம்பமாட்டேன்.//

குமரன்
ஜிரா என்னும் பாகாழ்வார் பாடிய பாசுரங்களையும், நயனகிரி என்னும் அடியேன் பதிகங்களையும் வலையேற்றி விடுவோமா? :-))))

கோவி...
நீங்க தான் என் சத்குரு! :-)
எப்படீங்க? எப்படி எப்படி எப்படி???

சிவனுக்கு கைலாய மலைன்னா திருமாலுக்கும் ஒரு மலை வேண்டுமா?
அப்படின்னா திருமாலுக்கு ஒரு பாற்கடல்-ன்னா சிவனுக்கு இராமேஸ்வரம் கடலா? :-))
சூப்பரு!

கோவி.கண்ணன் said...

//வெட்டிப்பயல் said...
நல்ல வேளை அதுக்காக உருவாக்கப்பட்டுச்சானு கேக்காம விட்டீங்களே ;)
//

பாலாஜி,
நாராயணா...நாராயணா... நான் அப்படியெல்லாம் சொல்வேனா ?
:)

குமரன் (Kumaran) said...

//

கோவி.கண்ணன் said...
குமரன்,

சிவனுக்கு ஒரு கைலாய மலை சிறப்பித்துக் கூறுவதைப் பார்த்தே திருமாலுக்கும் ஒரு மலை வேண்டும் என்று திருப்பதி (ஏழு மலைகள்) உயர்வாக்கப்பட்டதா ?

வந்ததற்கு...
:)

//

//நாராயணா...நாராயணா... //

கோவி.கண்ணன்.

நாரதர் கலகம் நன்மையில் முடியும் என்பார்கள். ஒற்றுமையை வலியுறுத்தும் இந்த இடுகைக்கு வந்து படித்தும் இந்த மாதிரி 'வந்ததற்கு என்னால் முடிந்தது' என்று எழுதிவிட்டுச் செல்கிறீர்களே. நீங்கள் நாரதர் என்றால் இந்தக் கலகங்கள் நன்மையில் முடியும் என்று சொல்லலாம். ஆனால் நீங்கள் தான் நாரதர் இல்லையே?! :-)

உங்கள் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. அடியேன் அறிந்த வரை கயிலையில் சிவபெருமான் உறைகிறான் என்று சொல்லும் அதே கால கட்டத்திலேயே ஏழு மலை வேங்கடவனைப் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. மேலும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலம் வரை சைவ வைணவ போட்டி குறிப்பிடும்படியாக இல்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் சொன்னது போல் 'உயர்வாக்கப்பட்டது' என்று சொல்லி நிறுவ முயன்றால் அது இராம.கி. ஐயா அடிக்கடிச் சொல்வாரே 'பாட்டனுக்குப் பேரன் அப்பன் என்று காட்டுவது' அது போல் முடியும் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி Lateral Thinking Abilityஐ வேறு இடங்களில் பயன்படுத்தினால் இன்னும் பயன் அதிகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

சிரிப்பான் போட்டதால் இதனை Lighter Senseல் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது. ஆனாலும் விளையாட்டே சில நேரங்களில் வினையாகின்றதல்லவா? அப்போது அந்த வினைக்குப் பயனை யார் ஏற்றுக் கொள்வது?

ஆகா. கோவி. கண்ணனுக்குச் சொல்லும் பதிலில் வினை, வினைப்பயன் என்றெல்லாம் எழுதுகிறேனே. என் நேரம் இன்று சரியில்லையோ? :-) இது கட்டாயம் Lighter Senseக்குத் தான். :-)

குமரன் (Kumaran) said...

வாங்க துளசியக்கா. ரொம்ப நாளைக்கப்புறம் என் பதிவுகள் ஒன்றில் உங்கள் பின்னூட்டம். :-) நன்றிகள்.

இராகவனுடைய பின்னூட்டம் இந்த இடுகை அவரை நோக்கியதா என்ற ஐயத்தின் எதிர்வினை என்று நினைக்கிறேன். இல்லாவிட்டால் இப்படி சொல்லியிருக்க மாட்டார்.

குமரன் (Kumaran) said...

என்றோ படி எடுத்து வைத்த 'பாசுர மடல்' இடுகைகளைப் படித்துக் கொண்டு வரும் போது இந்தப் பாடல்களைப் படித்தேன் இரவிசங்கர். உடனே இவற்றை முன் வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பாசுர மடல்களை எழுதிய கண்ணன் ஐயாவிற்குத் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.

நீங்கள் திருமங்கையாழ்வார் செம்பியன் கோச்செங்கணானைப் பாடிய பாடலைக் காட்டியிருக்கிறீர்கள். இணையத்தில் இந்த இடுகைக்காகத் தேடிய போது மறைந்த குன்றகுடி அடிகளார் இராமானுஜரையும் திவ்யப் பிரபந்தத்தையும் போற்றி உரைப்பதைப் பற்றிய குறிப்புகளைக் கண்டேன்.

செம்பியன் கோச்செங்கணான் பல மாடக் கோவில்களை கட்டினார் என்று படித்திருக்கிறேன். அவை சைவ ஆலயங்கள் மட்டுமே என்று நினைத்திருந்தேன். இந்தப் பாடலின் மூலம் திருநறையூர் பெருமாள் கோவிலும் ஒரு மணிமாடக் கோவில்; அதனைக் கட்டுவித்தவர் கோச்செங்கணான் என்ற குறிப்பு கிடைக்கிறது என்று நினைக்கிறேன். சரியா? அது மட்டுமின்றி திருமங்கை மன்னர் சோழப் பேரரசருக்குக் கீழே தானே ஆட்சி செய்தார். அந்த வகையிலும் செம்பியனைப் போற்றுகிறார் போலும்.

குமரன் (Kumaran) said...

பாலாஜி. நீங்க ரெண்டு பின்னூட்டம் போட்டிருக்கீங்க. அது ரெண்டுமே என்னை நோக்கி இல்லை. அதனால நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை. :-)

கோவி.கண்ணன் said...

//இராம.கி. ஐயா அடிக்கடிச் சொல்வாரே 'பாட்டனுக்குப் பேரன் அப்பன் என்று காட்டுவது' //

ஓ ! அப்படியா ? என் கவனத்தில் தப்பி இருக்கிறது !

பாவாணர் சொல்லுவார் "பேத்தி பாட்டியை பெற்றாள் என்பது போல" அதே போன்று தான் இருக்கிறது இராமகி ஐயாவின் கூற்று.

//உங்கள் கேள்விக்கு எனக்கு விடை தெரியாது. அடியேன் அறிந்த வரை கயிலையில் சிவபெருமான் உறைகிறான் என்று சொல்லும் அதே கால கட்டத்திலேயே ஏழு மலை வேங்கடவனைப் பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன.//

திருகைலாயம் - ஸ்ரீவைகுண்டம் இது போன்று ஒரு தனித் தனிமதக் கொள்கைகள் போன்று சைவம் வைணவம் முறையே கிறித்துவம், இஸ்லாம் போன்று ஒன்றில் இருப்பது மற்றொன்றில் இருப்பதாக எனக்கு பட்டது அதனால் தான் கேட்டேன். சமய ஆர்வலர்களுக்கு 'சர்க்கரை என்பது இனிப்பு' அது போதும் என்ற மனநிலையில் இருப்பார்களோ? நான் சர்க்கரை எப்படி தாயாரிக்கிறார்கள் , அதில் எதையெல்லாம் கலக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளவதை விழைகிறேன். சில சமயம் நான் கேட்பவை உங்களை எரிச்சல் படுத்துகிறதோ தெரியவில்லை. நோக்கம் அதுவல்ல.

RATHNESH said...

கோவி.கண்ணன் மற்றும் குமரன்,

கயிலை மலையில் வைணவப் பாத்தியதை கிடையாது. வில்லங்கம் இல்லாத சொத்து அது. வேங்கட மலை முருக அம்சங்கள் உள்ளது என்கிற விவகாரத்தில் அது வில்லங்கமான சொத்தாச்சே.

குமரனுக்கு பின்குறிப்பு: எண்ணங்களில் கொள்கைகளில் வெளிப்படுத்து முறைகளில் இவ்வளவு STRICT RESERVATIONS அவசியம் தானா? இறுக்கமாகவோ SUFFOCATING ஆகவோ இல்லை?

குமரன் (Kumaran) said...

இரத்னேஷ். எது தேவையான Strictness எது தேவையில்லாத Strictness என்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு பொருளைப் பேசிக்கொண்டே வரும் போது அதனைத் தொடர்ந்து பேசாமல் tangentialஆக எல்லா இடங்களுக்குப் போவதால் எனக்கு suffocation ஏற்படுகிறது. ஆனால் பலருக்கு அது இயற்கையாக இருக்கிறது.

முடிந்தால் இந்த இடுகைகளைப் படித்துப் பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2006/02/140.html
http://gragavan.blogspot.com/2006/01/blog-post_24.html
http://koodal1.blogspot.com/2006/01/137.html