Saturday, October 20, 2007

திருமால், சிவன், முருகன் எனும் மூவரைப் போற்றும் திருமுருகாற்றுப்படை


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் என்று சொல்லும் வழக்கம் திருமுருகாற்றுப்படையின் அடிப்படையிலேயே வந்தது என்பது பலருக்கும் தெரியும். பரிசு பெற்ற ஒரு புலவர் பரிசு தந்த புரவலரின் - வள்ளலின் பெருமைகளைக் கூறி, அந்த வள்ளலின் ஊருக்குச் செல்லும் வழியை இன்னொரு புலவருக்குச் சொல்லுதல் ஆற்றுப்படை எனப்படும். முருகப்பெருமானின் திருவருளைப் பெற்ற நக்கீரர் என்னும் தெய்வப்புலவர் திருமுருகனின் பெருமைகளைக் கூறி அவனின் ஊர்களான ஆறு வீடுகளைப் பற்றிப் பாடி மற்றவருக்குச் சொல்வது திருமுருகாற்றுப்படை. இந்த சங்க கால நூலில் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய் என்னும் திருச்செந்தூர், திருவாவினன்குடி என்னும் பழனி, திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் திருவேரகம் சுவாமிமலை என்றும் குன்றுதோறாடல் 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்' என்று சொல்வது போல் இவ்வைந்தும் போக இருக்கும் எல்லா முருகன் திருக்கோவில்களையும் குறிக்கும் என்றும் சொல்லுவார்கள்.

முருகப்பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகப் பாடும் இந்தத் திருமுருகாற்றுப்படையில் முப்பெரும் தெய்வங்களாக மூவர் போற்றப்படுகின்றனர்.

...வால் எயிற்று
அழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடுஞ்சிறைப்
புள்ளணி நீள் கொடிச் செல்வனும், வெள்ளேறு
வலைவயின் உயரிய பலர் புகழ் திணிதோள்
உமையமர்ந்து விளங்கும் இமையா முக்கண்
மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்,
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத்
தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவராக
...

ஒளிவீசும் நெற்றியுடன் தீயென மூச்சினை விடும் அஞ்சும் படி வரும் மிகுந்த வலிமை கொண்ட பாம்புகளும் அஞ்சும் படி அவற்றைத் தாக்கும் பல வரிகளுடன் கூடிய நீண்ட வலிய சிறகுகளைக் கொண்ட பறவையைக் (கருடனைக்) கொடியில் கொண்ட செல்வனும் (திருமாலும்), வெண்மையான எருதின் மேல் எல்லோரும் போற்றும் உமையம்மையோடு அமர்ந்து விளங்கும் இமைக்காத மூன்று கண்களையுடைய மூன்று கோட்டைகளை கொளுத்திய சினம் மிகுந்த செல்வனும் (சிவபெருமானும்), மலை போன்ற உடலையும் அழகான நடையும் நீண்ட தும்பிக்கையும் கொண்ட யானையின் மேல் அமர்ந்திருக்கும் பெருமையும் புகழும் உடைய செல்வனும் (திருமுருகனும்)...

நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத் திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகின்றனர் என்ற குறிப்பைக் கண்டு இணையத்தில் திருமுருகாற்றுப்படை நூலைப் பார்த்தேன். நான் தேடிய வரையில் பலராமனைப் பற்றிய பாடல் அடிகள் கிடைக்கவில்லை. சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள என்னால் இயலாததால் பலராமனைக் குறிக்கும் பாடல் அடிகள் என் கண்ணிற்குத் தென்படாமல் சென்றிருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.

உசாத்துணை: மதுரைத் திட்டத்தினரின் திருமுருகாற்றுப்படை பக்கம்

16 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள //
முடியாமையும் சங்க இலக்கியப் பக்கம் போகப் பயத்தை ஏற்படுத்துகிறது.
திருமால் பற்றிக் கூறியுள்ளாதால் தனியாக ராமர் பற்றிக் கூறவில்லையா?

G.Ragavan said...

குமரன், திருமுருகாற்றுப்படையைத் தொட்டு நீண்டகாலமாகிறது. திருவாவினன்குடிக்குள்ள செய்யுள்தானே இது.

நீங்கள் குடுத்துள்ள வரிகளையும் அதற்கு அடுத்த வரிகளையும் படித்துப் பார்த்துப் பொருள் கொள்ள முயன்றேன்.

புள்ளணி நீள்கொடிச் செல்வனும், முக்கண்ணனும், முருகனும் ...... இது நீங்கள் கொடுத்த வரிகளின் குறுகிய பொருள். இந்த மூவருக்கும் என்ன என்பது அடுத்த வரியில் இருக்கிறது.

பலர் புகழ் மூவரும் தலைவராக ஏமுறு (போற்றப்படும்) ஞாலத்தில் (உலகத்தில்) தோன்றி.... என்று பா தொடர்கிறது.

அதாவது மாலையும் சிவனையும் முருகனையும் தலைவராக ஏற்றுப் போற்றும் இந்த உலகத்தில் தோன்றி..... சரி. தோன்றியது யார்?

தாமரை பயந்த தாவில் ஊழி....

தாவு என்பதற்குக் கொள்கை என்றும் பொருள் சொல்லலாம்.... தாமரையில் பிறந்த கொள்கைக்கு ஊழி போல....

நிற்க...நீங்கள் கொடுத்துள்ள வரிகளை மீண்டும் படித்துப் பார்க்கிறேன்.

நீங்கள் சொன்ன பொருள் தவறோ என்று தோன்றுகிறது.

மொத்தம் மூனு பேரச் சொல்லீருக்கு.

1. புள்ளணி நீள் கொடிச் செல்வன் - இது மால்னே வெச்சுக்கலாம். ஏன்னா நஞ்சைக் கொடுக்கும் பாம்பைப் புடைக்கும் புள் (பறவை) பருந்து. அந்தப் பருந்தை வெச்சு அதை மால்னு சொல்லலாம்.

2. முக்கண்ணுன்னு தெளிவாவே சொல்லியாச்சு. அதுக்கு மேல பேச்சே இல்ல.

3. இங்கதான் இடிக்குது. ஏன்னா....

=================================
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து
ஈரிரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடைத்
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்,
=================================
இது முருகன் இல்ல...இந்திரன்னு நெனைக்கிறேன். ஏன்னா.... நல்லாப் படிங்க... வேள்வி முற்றிய வென்றடு கொற்றம்னு சொல்லுது. வேள்வி செஞ்சு கிடைக்கிற பதவி இந்திரப் பதவின்னு சொல்றாங்களே. நகுசங்கூட செஞ்சான்னு நெனைக்கிறேன். அதுவுமில்லாம ஆனை எருத்தம் ஏறியவன் இந்திரனாகவும் இருக்கலாமே.

இப்ப திரும்ப அடுத்த வரிக்கு வருவோம்...

மால், சிவன், இந்திரன் ஆகியோரைத் தெய்வமாகக் கொண்டாடும் நாட்டில் தோன்றி....

தாமரையில் தோன்றிய கொள்கைகளுக்கு (மறைகளாக் கூட இருக்கலாம்) ஊழியாகத் தோன்றிய முருகன்..... இப்படியும் பொருள் கொண்டு போகலாம்னு தோணுது. சரியாத் தெரியலை.

ஆனா படிக்கனும். மற்றவங்க என்ன சொல்லீருக்காங்கன்னும் படிக்கனும்.

குமரன் (Kumaran) said...

இராகவன். நமக்குத் தெரிந்த சிறிதளவு (அது எந்த அளவு என்பது தமிழன்னைக்குத் தான் வெளிச்சம் :-) ) தமிழைக் கொண்டு உரையின்றி இந்த பாடல் பகுதிகளை விளங்கிக் கொள்ள முயல்கிறோம். உசாத்துணையாக வைத்திருக்கும் பக்கத்தில் இருக்கும் திருமுருகாற்றுப்படை நூலில் இருந்து இன்னும் கொஞ்சம் படித்து எப்படி புரிகிறது என்றும் சொல்லுங்கள். நானும் படித்துப் பார்க்க முயல்கிறேன்.

நான் அடுத்து எங்கே செல்வேனோ என்ற எண்ணத்தில் புள்ளணி நீள் கொடிச் செல்வனைத் திருமால் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று முழு மனமின்றிச் சொன்னது போல் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் படித்துப் பார்த்து உங்களுக்கு புட்கொடியுடையவன் திருமால் என்ற பொருள் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். பிணிமுகம் ஏறியவன் முருகன்; ஐராவதம் ஏறியவன் இந்திரன் - இந்த ஒற்றுமையால் திருக்கிளர் செல்வன் இந்திரன் என்று சொல்வதில் எனக்கு மறுப்பு இல்லை. நூறு பல் வேள்வி என்ற பகுதிக்கும் சொல்லும் விளக்கம் ஏற்புடைத்தாய் இருக்கிறது. நான் இன்னும் நன்கு நுணுகிப் பார்க்கவேண்டும். அது போல் புட்கொடி உடையவர் திருமாலைத் தவிர்த்து வேறு யாராவது இருக்கிறார்களா என்பதையும் சிந்தித்துச் சொல்லுங்கள்.

பலராமனையும் சொல்வதாக நான் படித்தக் குறிப்பு சொல்கிறது. எங்காவது அவர் தென்படுகிறாரா என்றும் சொல்லுங்கள்.

cheena (சீனா) said...

//சங்க நூலான திருமுருகாற்றுப்படையை உரையின் உதவியின்றி விளங்கிக் கொள்ள
முடியாமையும் சங்க இலக்கியப் பக்கம் போகப் பயத்தை ஏற்படுத்துகிறது.//

ரிப்பீட்ட்ட்ட்டெய்

G.Ragavan said...

// நான் அடுத்து எங்கே செல்வேனோ என்ற எண்ணத்தில் புள்ளணி நீள் கொடிச் செல்வனைத் திருமால் என்றே வைத்துக்கொள்ளலாம் என்று முழு மனமின்றிச் சொன்னது போல் சொல்லியிருக்கிறீர்கள். மீண்டும் படித்துப் பார்த்து உங்களுக்கு புட்கொடியுடையவன் திருமால் என்ற பொருள் முழுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கிறதா என்று சொல்லுங்கள். //

இல்லை... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. மனமின்றி என்றெல்லாம் ஒன்றுமில்லை. அது மால்தான் என்பதற்கு வரிவரியாக விடை சொல்லி முடிவிற்கு வந்திருக்கிறேன்.

புட்கொடி என்று நான்முகனையும் சொல்லலாம். அங்கு அன்னக்கொடி. ஆனால் அன்னத்தால் பாம்பினைப் புடைக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆகையால்தான் பருந்து என்று சொல்லி... அதை வைத்து அது மால் என்று முடிவுக்கு வர முடிகிறது என்று சொன்னேன். அதை நீங்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்று நினைக்கிறேன். :) புட்கொடிக்கு வேறு எவரையும் இந்த இடத்தில் நினைக்க முடியவில்லை.

உசாத்துணைன்னா என்ன? யாரந்த உசா?

G.Ragavan said...

குமரன், கண்டுபிடிச்சிட்டேன். :) நான் சொன்னது சரி... அது இந்திரந்தான்...

http://murugan.org/texts/tirumurukarruppadai_layne_little.htm

இங்க போய் பாருங்க...

ஆனா நான் தாமரையில் பயந்தல தப்புப் பண்ணீட்டேன். :)

இதப் படிச்சிட்டு சொல்லுங்க....உண்மையிலேயே திருமாலையும் சிவனையும் இது புகழுதான்னு...

எனக்கு இந்தச் செய்யுளைப் படிக்கிறப்போ.... ஏதோ வரலாற்றுச் செய்தி படிக்கிறாப்புல இருக்கு. இந்தத் தமிழ் இலக்கியங்கள் சொல்ற இந்திரனும்.. புராண இந்திரனும் வெவ்வேறையோன்னு தோணுது.

குமரன் (Kumaran) said...

யோகன் ஐயா. உரையின்றி விளங்கிக் கொள்ள இயலாமல் தான் இருக்கிறது. இது வரை நானும் சங்க இலக்கியங்கள் பக்கம் செல்லாததற்குக் காரணமும் அதுவே. இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அகராதியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டுப் படித்துப் புரிந்து கொள்ள முயல்கிறேன். சில நூற்களுக்குத் தமிழ் இணையப் பல்கலைகழகத்தில் உரைகள் இருக்கின்றன. அவற்றையும் இனி படிக்க நினைத்துள்ளேன்.

இராமனைப் பற்றிக் கூறும் சங்க இலக்கிய பகுதிகள் அவனைத் திருமாலின் அவதாரம் என்ற பொருள் படும் படி கூறுவதை நான் இதுவரையில் காணவில்லை ஐயா. அப்படி ஏதேனும் படித்தால் கட்டாயம் எழுதுகிறேன். இங்கே திருமாலைச் சொல்லியிருக்கிறார் நக்கீரர். இராமனைச் சொல்ல வேண்டிய அவசியம் இங்கே இல்லை என்று நினைக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராகவன். இது திருவாவினன்குடிக்கான பகுதி தான். திருவாவினன்குடி என்ற பெயரை திரு+ஆ+இனன்+குடி என்று பிரித்து இலக்குமியும், காமதேனுவும், பகலவனும் முருகனை வணங்கிய தலம் என்று தலபுராணம் சொல்கிறது. திருமுருகாற்றுப்படையின் இந்தப் பகுதியை மீண்டும் நன்கு படித்து இந்தக் கருத்தினை நக்கீரரும் சொல்கிறாரா என்று பார்க்கவேண்டும்.

தாமரை பயந்த தாவில் ஊழி - இதனை இன்னும் நெருங்கிப் படித்து விட்டுச் சொல்கிறேன்.

மால், சிவன், இந்திரன் என்னும் மூவரைத் தெய்வமாகப் போற்றும் நாட்டில் - இதனைத் தான் இவ்வரிகள் சொல்கின்றன என்றால் தொல்காப்பியம் சொல்லும் மாயோன், வேந்தன் இருவரும் புட்கொடிச் செல்வனும், யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனுமாக இருக்கும் வாய்ப்பு மிக அதிகமாகிறது. பார்ப்போம். இன்னும் எத்தனை தரவுகள் இப்படி கிடைக்கிறது என்று.

குமரன் (Kumaran) said...

சீனா ஐயா. இராகவன் பதிவுகளைப் படித்திருக்கிறீர்களா? சங்க இலக்கியங்களை அங்கேயும் இனிமேல் இங்கேயும் படிக்கலாம். படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்.

குமரன் (Kumaran) said...

புட்கொடி என்றவுடன் சேவல்கொடியும் தோன்றியது இராகவன். நீங்கள் சொன்னது போல் பாம்புப்பகைக் கொடியுடையவன் என்றதால் சேவற்கொடி இல்லை என்று தோன்றியது. உசாத்துணை என்று தான் Referenceக்கு தமிழ் விக்கிபீடியாவில் புழங்குகிறார்கள். நானும் புழங்கத் தொடங்கிவிட்டேன். :-)

குமரன் (Kumaran) said...

ஆங்கில மொழி பெயர்ப்புக்கு மிக்க நன்றி இராகவன். படித்துப் பார்க்கிறேன். திருமுருகாற்றுப்படை முழுவதுமாக இந்த ஆங்கில மொழிபெயர்ப்பின் துணையுடன் படிக்கலாம் என்று தோன்றுகிறது. இணையத்தில் திருமுருகாற்றுப்படைக்கு உரை கிடைக்கிறதா?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாற்பெரும் தெய்வத்து நன்னகர் நிலைஇய//

இந்த வரிகளை நான்கு நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக எடுத்துக் கொள்ளலாமா குமரன்?
சேயோன், மாயோன், இந்திரன், வருணன் என்று பாலையைத் தவிர்த்து குறிப்பிடுவதாகவும் கொள்ளலாமே?

திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டில் ஒன்றாக இருப்பது போலவே
சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறையிலும் உள்ளது!
நக்கீரரும் அறுபத்து மூவருள் ஒருவராகத் தான் கருதப்படுகிறார்!
சைவ இலக்கிய உரைகளில் தேடினால், திருமுருகாற்றுப்படை உரையும் கிட்டலாம்!

எனக்கும் தாழ் பெருந்தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வன் = இந்திரன் என்று தான் படுகிறது குமரன்.
காரணம்: வேள்விகள், நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டம் (சபை)
இந்தச் சுட்டியையும் பாருங்கள்! உரை இல்லாவிட்டாலும், தலைப்புகளில் இந்திரன் என்று தான் இவர்களும் குறிக்கிறார்கள்!
http://www.chennailibrary.com/ebooks1/thirumurugatrupadai.html

புட்கொடி = பறவைக் கொடி என்று கொண்டாலும் பெரும்பாலும் இலக்கியங்களில் புட்கொடியான் என்று மாயவன் தான் குறிக்கப்படுகிறான்.
புள்ளூரும் பரமா, புள்ளேறும் பரமா என்று சொல்லும் போது புள்ளை மயிலாகக் கொண்டு முருகனைத் தான் பாடுகிறார் ஆழ்வார் என்று கூடச் சொல்லலாமே! :-)))

பிரம்மனுக்கு அன்னம் வாகனம் தான்! ஆனால் அன்னக் கொடி அவனுக்கு உண்டா என்ன?
கருடக் கொடி=திருமால்
சேவற் கொடி=முருகன்
அவ்வளவு தான்; காகக் கொடி உடையவனாக சனீஸ்வரனைச் சொல்வார்கள்! (காகத்துவஜன்)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இந்தத் தமிழ் இலக்கியங்கள் சொல்ற இந்திரனும்.. புராண இந்திரனும் வெவ்வேறையோன்னு தோணுது//

நாட்டம்-னா சபைன்னு பொருள் கொண்டேன்!
மீண்டும் அகராதியில் தேடினா
நாட்டம் என்பதற்கு கண் என்ற பொருளும் வருகிறது
nāṭṭam . < நாடு-. 1. Eye; கண். வயவர் தோளு நாட்டமு மிடந்துடிக்கின்றன (கம்பரா. கரன்வதை.

இப்போ பாட்டைப் பாருங்க!
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து
நூறு பல் வேள்வி முற்றிய
வென்றடு கொற்றத்து
நூற்றுப்பத்து = 100*10=100
நாட்டத்து = கண்

ஆயிரம் கண் யாருக்கு? :-)))))

தமிழ் இலக்கியங்கள் சொல்ற இந்திரனும்.. புராண இந்திரனும் வெவ்வேறையோன்னு கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாற் பெருந் தெய்வத்து நல் நகர் நிலைஇய

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப்
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக,

ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றி,
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவற் சுட்டி, காண்வர//

எனக்கென்னமோ, இந்தப் பகுதி, தேவர் பலரும் திருவாவினன்குடிக்கு வருகை புரிவதைக் குறிக்கிறது என்று தான் எண்ணுகிறேன் குமரன்!

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக = இது மும்மூர்த்திகளையோ, இல்லை தெய்வங்களையோ குறிக்கிறதா என்று தெரியவில்லை! தேவர்கள் திரண்டு வருவதைச் சொல்லும் போது மூவர் தலைவராக வருவதாகச் சொல்கிறார். அவ்வளவு தான்!

ஆனால் அதற்கு முந்தைய அடியில் தெளிவாக நாற் பெரும் தெய்வம் என்கிறார்! முதலில் நாலு தெய்வம் என்று சொல்லிப் பின்னர் ஏன் மூன்று தெய்வம் என்று குறைக்க வேண்டும்?

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//நாஞ்சில் (கலப்பை) கொடியுடைய பலராமனும், புட்கொடியுடைய திருமாலும், எருதேறிய சிவபெருமானும், பிணிமுகம் ஏறிய முருகப்பெருமானும் உலகம் காக்கும் நாற்பெருந்தெய்வங்களாகத்//

ஆற்றுப்படையில் வாலியோனை நானும் தேடினேன்! கிட்டவில்லை! ஆனால் இதே நக்கீரர் வேறொரு புறநானூற்றுப் பாடலில் நாற்பெருந் தெய்வங்களாகக் கூறுகிறார்...பாருங்கள்!

56. கடவுளரும் காவலனும்!
பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்; (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்).
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
திணை: பாடாண். துறை : பூவை நிலை.

ஏற்று வலன் உயரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
=சிவன்

கடல்வளர் புரிவளை புரையும் மேனி
அடல்வெந் நாஞ்சில் பனைக் கொடியோனும்
=வாலியோன்

மண்ணுறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்
=மாயோன்

மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய்யோனும்
=சேயோன்

என ஞாலம் காக்கும் கால முன்பின்
தோலா நல்லிசை நால்வர் உள்ளும்
.........

Unknown said...

ராமன் திருமால் அவதாரம் தானே இந்து கடவுளுக்கு பல பெயர்களில் அழைக்கிறது இங்கு பிரிவினை வேண்டாம்