Sunday, November 12, 2006

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!

மன்னுபுகழ் கோசலை தன் மணிவயிறு வாய்த்தவனே!
தென்னிலங்கை கோன் முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன் சேர்
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்தென் கருமணியே!
என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!

புண்டரிக மலர் அதன் மேல் புவனியெல்லாம் படைத்தவனே!
திண் திறலாள் தாடகை தன் உரம் உருவச் சிலை வளைத்தாய்!
கண்டவர் தம் மனம் வழங்கும் கணபுரத்தென் கருமணியே!
எண் திசையும் ஆளுடையாய்! இராகவனே! தாலேலோ!

கொங்கு மலி கருங்குழலாள் கோசலை தன் குலமதலாய்!
தங்கு பெரும் புகழ்ச் சனகன் திருமருகா! தாசரதீ!
கங்கையிலும் தீர்த்த மலி கணபுரத்தென் கருமணியே!
எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!

தாமரை மேல் அயன் அவனைப் படைத்தவனே! தசரதன் தன்
மாமதலாய்! மைதிலி தன் மணவாளா! வண்டினங்கள்
காமரங்கள் இசை பாடும் கணபுரத்தென் கருமணியே!
ஏமருவும் சிலை வலவா! இராகவனே! தாலேலோ!

பாராளும் படர் செல்வம் பரத நம்பிக்கே அருளி
ஆரா அன்பு இளையவனோடு அருங்கானம் அடைந்தவனே!
சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!




சுற்றம் எல்லாம் பின் தொடரத் தொல் கானம் அடைந்தவனே!
அற்றவர்கட்கு அருமருந்தே! அயோத்தி நகர்க்கு அதிபதியே!
கற்றவர்கள் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிற்றவை தன் சொல்கொண்ட சீராமா! தாலேலோ!

ஆலின் இலைப் பாலகனாய் அன்றுலகம் உண்டவனே!
வாலியை கொன்று அரசு இளைய வானரத்துக்கு அளித்தவனே!
காலின் மணி கரையலைக்கும் கணபுரத்தென் கருமணியே!
ஆலிநகர்க்கதிபதியே! அயோத்திமனே! தாலேலோ!

மலையதனால் அணை கட்டி மதிளிலங்கை அழித்தவனே!
அலைகடலைக் கடைந்து அமரர்க்கு அமுதருளிச் செய்தவனே!
கலை வலவர் தாம் வாழும் கணபுரத்தென் கருமணியே!
சிலை வலவா! சேவகனே! சீராமா! தாலேலோ!

தளை அவிழும் நறுங்குஞ்சித் தயரதன் தன் குலமதலாய்!
வளையவொரு சிலையதனால் மதிளிலங்கை அழித்தவனே!
களை கழுநீர் மருங்கு அலரும் கணபுரத்தென் கருமணியே!
இளையவர்கட்கு அருளுடையாய்! இராகவனே! தாலேலோ!

தேவரையும் அசுரரையும் திசைகளையும் படைத்தவனே!
யாவரும் வந்தடி வணங்க அரங்க நகர் துயின்றவனே!
காவிரி நல் நதி பாயும் கணபுரத்தென் கருமணியே!
ஏவரி செஞ்சிலை வலவா! இராகவனே! தாலேலோ!



கன்னி நன் மா மதிள் புடை சூழ் கணபுரத்தென் காகுத்தன்
தன்னடிமேல் தாலேலோ என்றுரைத்த தமிழ்மாலை
கொல் நவிலும் வேல் வலவன் குடைக்குலசேகரன் சொன்ன
பன்னிய நூல் பத்தும் வல்லார் பாங்காய பத்தர்களே!

குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்!

***

வடுவூர் வல்வில் இராமன் திருவுருவ தரிசன சௌபாக்கியத்தை எல்லோரும் பெறும் படி அடியேனுக்கு இராகவனின் தரிசனத்தைச் செய்வித்த இரவிசங்கர் கண்ணபிரானுக்கு மிக்க நன்றி.

33 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தன் பரிசைத், தரணிக்கு அளித்த குமரனவர் வாழ்க!
புதிரா புனிதமா, வடுவூர் ராமன் பரிசை, புவிக்களித்த, குமரனவர் வாழ்க!

ராமனே பரிசானது எவ்வளவு சிறப்பு என்று வெட்டிப்பையல் பாலாஜியும் குறிப்பிட்டார், தனி அரட்டையில்!

பரிசைப் பாசுரத்துள் சுற்றிக் கொடுத்த குமரனுக்கு நன்றி!

குமரன் (Kumaran) said...

நன்றிகள் இரவிசங்கர்.

இலவசக்கொத்தனார் said...

நானும் கே.ஆர்.எஸ். போட்டியில் வென்ற மாதிரி இருக்கு! பங்கு பெறாமலயே.

பகிர்ந்தளித்தமைக்கு நன்றி, குமரன்.

குமரன் (Kumaran) said...

மிக்க மகிழ்ச்சி கொத்ஸ். :)

Dr.N.Kannan said...

"எங்கள் குலத்தின்னமுதே! இராகவனே! தாலேலோ!"

இப்படி இவர் ராகவனுக்கு தாலாட்டுப் பாடினார். கோதை நாச்சியாருக்கு தாலாட்டு உண்டு தெரியுமோ? ஆழ்வார் திருநகரியில் கண்டு எடுத்து அதை மதுரைத் திட்டத்தில் போட்டிருக்கிறேன். வாசித்து மகிழுங்கள்.

இவைதான் நம் குலதனம்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கண்ணன் சார்,

கண்டேன் கோதை நாச்சியார் தாலாட்டு!
தாங்கள் முன்பு அனுப்பிய பாசுர மடல் சுட்டி வேறு பல இடங்களுக்கும் கூடவே இட்டுச் சென்றது! அப்போது தான் இதை மதுரைத் திட்டத்தில் கண்டு வியந்தேன்!

பலர் மகிழ, இதோ சுட்டி

"பாமாலை பாடிப் பரமனுக்கு என்னாளும்
பூமாலை சூடிப் புகழ்தளித்த தெள்ளமுதே
அஞ்சு வயதில் அவனியில் வந்துதித்த
பிஞ்சாய்ப் பழுத்த பெண்ணமுதே தாலேலோ"

நாட்டுச் சொற்களாய்ப் போட்டு எளிமைக்கு எளிமை, இனிமைக்கு இனிமை!
மிக்க நன்றி சார்!

ஞானவெட்டியான் said...

அன்பு குமரா,

//சீராளும் வரை மார்பா! திருக்கண்ணபுரத்தரசே!
தாராளும் நீண்முடி என் தாசரதீ! தாலேலோ!//

கண்ணபிரான் தந்த பாக்களைப் படித்தவுடன் ஞாவகம் வந்தது, "காண ஒரு காலம் வருமோ?" எனும் நூல்தான்.
திருக்கண்ணபுரத்தானின் பெருமையை நண்பர்.திரு.இராமகி ஒரு பொத்தகமாக வெளியிட்டுள்ளர். அதிலுள்ளவற்றை அவரின் அநுமதியோடு என் வலைப்பூவில் இட்டுள்ளேன். அருமையான பாடல்கள், பொருட் செறிவுள்ள வரிகள்.

Anonymous said...

குமரா!!
பாசுரம் படம் மிக மனமகிழ்வைத் தந்தன!!!
யோகன் பாரிஸ்

மதுமிதா said...

போட்டி நடந்ததே தெரியவில்லை
அருமையான பரிசு வேறு

வாழ்த்துகள் குமரன்
நன்றி இரவிசங்கர் கண்ணபிரான்

Anonymous said...

அருமை! அற்புதம்!
கண்கொள்ளா காட்சி!
- PositiveRAMA

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//என்னுடைய இன்னமுதே! இராகவனே! தாலேலோ!//

குமரன்
நீங்க தாலேலோ பாட்டைப் போட்டதால், இந்தத் தகவலையும் கருமணியான் இராமன் இருக்கும் உங்கள் பதிவிலேயே சொல்லி விட அனுமதி தாருங்கள்!

நவ-14 குழந்தைகள் தினம் அன்று, பிள்ளைத்தமிழ் தாலேலோ பாடல்கள் பற்றிய தனி வலைப்பூ ஒன்று!
http://pillaitamil.blogspot.com/

நவ-17 கார்த்திகை மாதம்.
ஸ்ரீ வேங்கடேஸ்வர சுப்ரபாதம் - பொருளுடன்.
http://verygoodmorning.blogspot.com/

என்றும் போல், பதிவுலக அன்பர்களின் அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன்!

ரங்கா - Ranga said...

குமரன் மற்றும் இரவிசங்கர் கண்ணபிரானுக்கு என் நன்றிகள்.

சிறு வயதில் இந்தப் பாடலை BV ராமன், BV லக்ஷ்மணன் பாடி வானொலியில் கேட்டிருக்கிறேன். மிகவும் அருமையாக இருக்கும். இதன் ஒலிவடிவம் இணையத்தில் இருந்தால் தரவும்.

ரங்கா.

நாமக்கல் சிபி said...

சில நிமிடங்களே ஆனாலும் ரகு குல மணி விளக்கை மனதில் நினைக்க வைத்த KRSற்கும், பாசரத்துடன் படத்தை அளித்த குமரனுக்கும் என் நன்றிகள் பல...

குமரன் (Kumaran) said...

கண்ணன் ஐயா. நீங்கள் ஆழ்வார் திருநகரியில் கண்டெடுத்து மதுரைத் திட்டத்தில் இட்ட கோதை நாச்சியார் தாலாட்டை ஏற்கனவே பார்த்து ஆற அமரப் படிப்பதற்கு எடுத்து வைத்திருக்கிறேன். இனி மேல் தான் முழுவதும் படிக்க வேண்டும்.

உண்மை. இவைதாம் நம் குலதனம். அழைத்தவுடன் வந்து படித்துப் பின்னூட்டமிட்டதற்கு நன்றி ஐயா.

குமரன் (Kumaran) said...

கோதை நாச்சியார் தாலாட்டின் சுட்டியைத் தந்ததற்கு நன்றிகள் இரவிசங்கர். பாசுர மடல் சுட்டியையும் அனுப்புங்கள். நான் தேடித் தேடி கிடைக்காமல் விட்டுவிட்டேன்.

குமரன் (Kumaran) said...

ஞானவெட்டியான் ஐயா. திருக்கண்ணபுரம் பெருமையை நீங்கள் உங்கள் பதிவில் எழுதிப் படித்த நினைவு இருக்கிறது. அது இராம.கி. ஐயா எழுதியது என்பது இப்போது தான் தெரியும். மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி யோகன் ஐயா.

குமரன் (Kumaran) said...

மதுமிதா அக்கா. இது இரண்டாவது போட்டி. 'புதிரா? புனிதமா?' என்ற தலைப்பில் இரவிசங்கரின் பதிவைப் பார்த்தால் உள்ளே வந்துவிடுங்கள். அங்கே தான் போட்டி நடக்கிறது. அடுத்தப் போட்டி முருகனை முதல்வனாய்க் கொண்டு இருக்கும் என்று இரவி சொல்லியிருக்கிறார்.

ஆமாம் அக்கா. மிகச் சிறப்பான பரிசு தான். நான் மட்டுமே பார்த்து அனுபவிக்க மனம் ஒப்பவில்லை. சரி என்று திவ்யப்ரபந்தத்தின் பக்கம் போய் முதலில் தெரியும் இராமனைப் போற்றும் பத்தினை எடுத்து இடலாம் என்று இட்டேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி நம்பிக்கை ஒளி பாசிடிவ் இராமா.

குமரன் (Kumaran) said...

உங்கள் புதிய வலைப்பூ அறிவிப்புகளை இங்கே தர இராமபிரான் இசைந்துவிட்டார் இரவிசங்கர். :-)

நாளை முதல் பிள்ளைத் தமிழ் கிடைக்குமா? அருமை.

வேங்கடேஸ்வர சுப்ரபாதமுமா? மிகச் சிறப்பு. நானும் குறித்து வைத்திருந்தேன். நீங்கள் தொடங்கி விடுவதால் அதனை என் பட்டியலில் இருந்து இப்போது எடுத்துவிடலாம். நன்றி.

குமரன் (Kumaran) said...

ரங்கா அண்ணா. பி.வி. இராமன் & லக்ஷ்மணன் இருவரும் பாடியதைத் தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் சுட்டி தருகிறேன்.

குமரன் (Kumaran) said...

வெட்டிபையலாரே. நீங்கள் தானே இராகவனைப் பற்றிய புதிர் போட்டியைக் கேட்டது. எல்லாம் பெருமையும் பாலாஜிக்கே.

நாமக்கல் சிபி said...

//குமரன் (Kumaran) said...

வெட்டிபையலாரே. நீங்கள் தானே இராகவனைப் பற்றிய புதிர் போட்டியைக் கேட்டது. எல்லாம் பெருமையும் பாலாஜிக்கே. //

இராகவனைப் பற்றி நான் கேட்டேன்... அதை அனைவரும் சுவைக்க கொடுத்தது KRSம், தாங்களும்தான்...

பத்மா அர்விந்த் said...

என்னிடம் வேங்கடேச சுப்பிரபாதத்தின் தமிழ் வடிவ CD இருக்கிறது. மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது. உங்கள் பதிவையும் படிக்கிறேன் ரவி.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//வாழ்த்துகள் குமரன்
நன்றி இரவிசங்கர் கண்ணபிரான்//

மிக்க நன்றி மதுமிதா அக்கா!

//என்னிடம் வேங்கடேச சுப்பிரபாதத்தின் தமிழ் வடிவ CD இருக்கிறது. மொழி பெயர்ப்பு நன்றாக இருக்கிறது. உங்கள் பதிவையும் படிக்கிறேன் ரவி//

மிக்க நன்றி பத்மாஜி!
Dr. சா. பார்த்தசாரதி என்பவர், "வந்துதித்தாய் ராமா நீ" என்று தொடங்கி, பாடலாகவே நன்கு மொழிபெயர்த்துள்ளார். நீங்கள் அதைத் தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதே மெட்டிலேயே, பாடல் வடிவில் நன்றாக இருக்கும்.

அடியேன் முயற்சி, சொற் பொருள் விளக்கமும், அதில் வரும் ஆழ்வார் பாசுரங்களின் ஒப்பு நோக்கும் தான்! படித்து விட்டு தங்களின் கருத்தை அவசியம் சொல்லுங்கள்!

ஜெயஸ்ரீ said...

முழுப் பாடலையும் அளித்ததற்கு நன்றி குமரன்.

மிக அழகான தாலாட்டுப் பாடலும் கூட. திருமணங்களில் ஊஞ்சலிலும், குழந்தைகளைத் தொட்டிலிடும் விழாக்களிலும் அதிகம் பாடப்பட்ட பாடல்.

பி.வி.ராமன் சகோதரர்கள் குரலில் வானொலியில் முன்பு கேட்டிருக்கிறேன்.

"வாத்சல்யம் " என்ற தாலாட்டுப் பாடல் தொகுப்பில் பாம்பே ஜெயஸ்ரீ குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். எவ்வளவு தேடியும் சுட்டி இணையத்தில் கிடைக்கவில்லை.

Anonymous said...

http://www.emusic.com/
album/10821/
10821347.html

enRenRum-anbudan.BALA said...

குமரன்,
அற்புதமான "பெருமாள்" பாசுரங்கள், வாசித்தவை தான்.

Pl. read:
http://balaji_ammu.blogspot.com/2005/02/3.html

என்னை துரத்தித் துரத்தி பொருள் கேட்கும் தாங்கள், பாசுரங்களுக்கு (சிலவற்றுக்காவது) பொருள் தந்திருக்கலாம் :))) நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

குமரன் (Kumaran) said...

தொட்டிலிலிடும் விழாக்களில் சரி. திருமண ஊஞ்சலிலுமா இந்தப் பாடல்களைப் பாடுவார்கள்? வியப்பாக இருக்கிறது ஜெயஸ்ரீ.

ஜெயஸ்ரீ கேட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடல் சுட்டியை ஒரு பெயர் சொல்ல விரும்பாத நண்பர் கொடுத்திருக்கிறார் பாருங்கள். :-)

குமரன் (Kumaran) said...

எ.அ.பாலா (சீனியர் சார்)! சிலேடை அருமை. :-) குலசேகரப் பெருமாளின் 'பெருமாள் திருமொழி'ப் பாசுரங்கள்; பெரிய பெருமாளை குலதனமாகக் கொண்டிருந்த பெருமாளைப் பற்றிய பாசுரங்கள் இவை. :-)

உங்களைத் துரத்தித் துரத்திப் பொருள் கேட்டதுண்டு. ஆனால் இந்தப் பாசுரங்கள் மிக எளிதாக இருந்ததாகவும் பொருள் உரைக்கத் தொடங்கினால் பாசுரங்களை அப்படியே உரைநடையில் எழுதினாலே போதும் என்றாற் போலும் தோன்றியதால் பொருள் சொல்லாமல் விட்டுவிட்டேன். அவ்வளவு தான். :-)

உங்கள் பதிவைப் படித்துப் பார்க்கிறேன்.

Anonymous said...

http://www.youtube.com/watch?v=UgJeI5wj-Xw

குமரன் (Kumaran) said...

சுட்டிக்கு மிக்க நன்றி நண்பரே. பாடல் மிக அருமையாகப் பாடப்பட்டிருக்கிறது. இரசித்துக் கேட்டேன்.

Unknown said...

பாயஸத்தில் வந்தவனே என் ஆயாஸத்தைத் தீர்த்தவனே என்று ஆரம்பித்து ராகவனே தாலேலோ என்று பழைய பாகவதர்கள் பாடுவார்கள். அதனுடைய முழு வரிகள் யாராவது தெரிந்தால் தயவுசெய்து அனுப்பி வைக்க வேண்டுகிறேன்.
ராமகிருஷ்ணன். திருவிசலூர் அய்யாவாள் ம்