செய்கின்ற தொழிலே தெய்வமென்பார்
செய்தொழில் கரணங்கள் தெய்வமென்பார்
உய்வழி காட்டும் அவ்வாயுதங்கள்
ஒவ்வொன்றும் உறுதியாய் தெய்வமென்பார்
பாங்காக வருடத்தில் ஒரு நாளேனும்
பகுத்தறிவு கொண்டுஅத் தெய்வம் தன்னை
நீங்காத நற்செல்வம் அருள்வாய் என்று
நிறைவாக ஆயுத பூஜை செய்வார்
காலையில் எழுந்ததுமே கடுங்குளிரில்
களைப்பின்றி செல்வதற்கு உதவும் தெய்வம்
கார் என்ற பெயர் கொண்டு விளங்கும் அதனை
கணப்பொழுதும் மறவாமல் வணங்குகின்றோம்
ஆள்பாதி ஆடையும் பாதியென்றே
அருமையாய் சொன்னார்கள் முன்னோர் அன்று
அதற்கேற்ப ஆடைகளை துவைக்கும் தெய்வம்
அதை வணங்க எனக்கென்ன வெட்கம் வெட்கம்?
பல் போனால் சொல் போச்சு என்பதோர் சொல்
பழங்காலச் சொல்வழக்கு அதை மறவாமல்
பல்தன்னை தினந்தோறும் விளக்கிக் சொல்லை
பலநாளாய் காக்கின்ற தெய்வம் நன்று
பற்றுக பற்றற்றான் பற்றை என்றே
பழந்தமிழர் சொல்லிவைத்தார் பலநாள் முன்பே
பற்றற்றான் பற்றென்றால் என்னவென்றால்
பண்ணவனின் பாதுகைகள் என்று சொன்னார்
பாதுகைகள் பெருமை தனை பாரிலுள்ளோர்
பல்லாண்டு பாடியே வாழ்த்துகின்றார்
பாதுகைகள் பெருமைதன்னை ஆயிரம் பா
பாடியுமே வாழ்த்தியுள்ளார் அறிவீர் நீரே!
காரென்ன வாஷிங் மெஷினுமென்ன
கனஜோராய் டூத் பேஸ்ட் அதுவுமென்ன
கால்தன்னைக் காக்கின்ற காலணியென்ன
காண்கின்றோம் அத்தனையும் தெய்வம் தெய்வம்
மேல் சொன்ன உயிரற்ற பொருட்களுடன்
மேல் நின்ற உயிருள்ள மாந்தர் மாக்கள்
தாள் பரப்பி நிற்கின்ற ஈசன் அவனின்
தகை சார்ந்த வடிவங்கள் என்று கண்டோம்
தூணிலும் இருக்கின்றான் தும்மலிலும் உண்டு
பேணி நின்ற எல்லாவற்றிலும் உண்டு
நாணி நிற்கும் நல்ல பெண் தன்னிலும் உண்டு
நனி நின்ற தலித் அன்பன் தன்னிலும் உண்டு
ஓர் தெய்வம் அவன் எங்கும் நிறைந்து உள்ளான்
ஒருமையுடன் அவன் திருவடி வணங்குகின்றோம்
மாறுபடு கருத்துகளைச் சொல்லும் நண்பர்
மனம் உவக்க என்றுமே சொல்லிச் செல்க!
19 comments:
//தூணிலும் இருக்கின்றான் தும்மலிலும் உண்டு
பேணி நின்ற எல்லாவற்றிலும் உண்டு
நாணி நிற்கும் நல்ல பெண் தன்னிலும் உண்டு
நனி நின்ற தலித் அன்பன் தன்னிலும் உண்டு//
குமரன் ...!
என்ன இவ்வளவு வேகமாக இருக்கிறீர்கள் !
கவிதை நன்றாக இருக்கிறது !
தும்மலில் இருக்கிறான் என்றால் கிருமிகளில் என்று பொருள் கொள்க !
:))
குமரன் !
குமரன் கவிதை எழுதுகிறார் என்பதே மகிழ்ச்சியாக உள்ளது !
கவிதை நடையில் மருத்துவர் சாயல் இருக்கிறது ! நன்றாக வந்திருக்கிறது !
தவறாக நினைக்காதீர்கள் இது வெறும் கருத்து தான் ! :)
அவரைப் போல் செழுமையாக எழுதுயிருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளவும் !
கோவி.கண்ணன் ஐயா. அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் இருப்பவன் இறைவன். அவன் கிருமிகளிலும் / கிருமிகளாகவும் இருக்கிறான் என்பதில் என்ன ஐயம்?
கோவி.கண்ணன் ஐயா. பாதி கவிதை முடித்து இன்னும் என்ன சொல்ல வேண்டும் என்று பார்ப்பதற்காக சிவபாலன் பதிவைப் பார்த்த போது உங்கள் பின்னூட்டம் தென்பட்டது. அதனால் அதனையும் இங்கே சேர்த்துக் கொண்டேன்.
கோவி.கண்ணன் ஐயா. முடிந்தால் என்னுடைய விண்மீன் வாரத்தில் எழுதிய முதல் பதிவைப் பாருங்கள். அதில் சொல்லியிருக்கிறேன். மேல்நிலைப்பள்ளி, கல்லூரி படிக்கும் காலத்தில் பல நூறு கவிதைகள் எழுதியிருக்கிறேன். வேலைக்குச் சேர்ந்த பின் இது வரை நூற்றுக்கும் குறைவாகத் தான் எழுதியிருக்கிறேன்.
எதுகை மோனையுடன் எழுதுவது பிடிக்கும். ஆனால் இலக்கணம் தெரியாது என்பதால் மரபுக் கவிதையை எழுதியதில்லை. எழுதுவதெல்லாம் மரபு போல் இருக்கும் கவிதைகள் தான். சொல்லிப் பார்க்கச் சந்தத்துடன் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.
தங்கள் பாராட்டிற்கு நன்றி.
அனைத்திலும் தெய்வம் கண்ட
குமரன் கூட ஒரு தெய்வமே
குமரன் சார்
கவிதை நன்றாக எழுதியுள்ளீர்கள்.
கருத்து உடன் பாடில்லை எனினும் கவிதை நன்றாக வந்துள்ளது.
நன்றி
குமரன்...! இறைவன் சர்வவியாபி என்ற கருத்து புத்த மதகருத்துக்களை ஒட்டியது ! அது அன்பே கடவுள் என்ற நாத்திக தத்துவமும் கூட. தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் எங்கும் இருப்பான் என்று பொருள்தானே, தனிச் சிறப்பாக சொல்ல முடியாது ! அங்கே இருப்பது என்பது இல்லாதது போல் ஆகிவிடுகிறது. தனித்து சிறப்பாக, எதனுடனும் ஒப்பிட முடியதது தான் இறைத்தத்துவம். இதை இஸ்லாமியர்கள் நமபுகிறார்கள். நாம் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற பிரகலாதன் கதையை கூறுகிறோம். ஆனால் இரன்யனிடம் கடவுள் இருந்திருந்தால் அவனையே கடவுள் அழித்திருப்பாரா ?
தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பிரகலாதன் 'தந்தையே உன்னிடமும் இருக்கிறான்' என்று சொல்லவில்லையே ! தத்துவம் தவறாகிறதே !
கல்லில் உறைபவனை சொல்லில் வடித்துள்ளீர்கள் அருமை.
அவனிலும் (நாத்திக வாதி) உள்ளது ஒரு அமானுஷய சக்தி அதன் பெயர் நாம் (ஐ போன்றவர்) வைத்தது கடவுள். அவர்கள் கூறிக்கொள்வது பகுத்தறிவு. செயல் என்னமோ ஒன்று தான்.
செய்யும் தொழிலே தெய்வம், கைகளில் உள்ள ஆயுதங்களே தெய்வங்களின் அடையாளங்கள்.
எல்லாமே இறைவன் என்ற கருத்து மிக செரிவானது ஆனால் எல்லாமே இறைவன் என்ற விழிப்புணர்ச்சி வராமல் இறைவன் தான் எல்லாமே என்ற நம்பிக்கை வளர்ச்சி பெற்று விடவும் கூடாது.
எல்லாமே இறைவன் என்னும் பொழுது எல்லா உயிர்களிடத்திலும் அன்பு பெருகலாம். ஆனால் இறைவனே எல்லாம் என்னும் பொழுது தவறுகளுக்கு காரணம் காண்பித்து தப்பித்துக் கொள்ளும் அளவுக்கும் மூட நம்பிக்கைகள் பெருகி விடக் கூடாது.
//கவிதை நடையில் மருத்துவர் சாயல் இருக்கிறது ! நன்றாக வந்திருக்கிறது !
தவறாக நினைக்காதீர்கள் இது வெறும் கருத்து தான் ! :)
அவரைப் போல் செழுமையாக எழுதுயிருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளவும் !
//
கருத்துகளில் சில ஒற்றுமைகள் இருப்பதால் என் கவிதை நடையிலும் மருத்துவர் சாயல் இருக்கிறது என்று சொன்னீர்களா கோவி. கண்ணன் ஐயா. இல்லையேல் அவர் எழுதிக் கொடுத்து அதனை நான் இங்கே இட்டேன் என்று சொல்கிறீர்களா? :-) மண்டபத்திலே யாரோ எழுதிக் கொடுத்ததை இங்கே இட இங்கே என்ன ஆயிரம் பொன்னா பரிசு கொடுக்கிறார்கள்? :-) என் கவிதை தான் என் கவிதை தான். சிவபாலனின் உருவில் இருக்கும் கடவுளின் கட்டளையை தலைமேல் ஏற்று அடியேன் எழுதிய கவிதை.
நீயே தெய்வம் என்று சொன்ன கால்கரி சிவா அண்ணாவும் தெய்வமே.
நன்றி சிவபாலன்.
//கருத்துகளில் சில ஒற்றுமைகள் இருப்பதால் என் கவிதை நடையிலும் மருத்துவர் சாயல் இருக்கிறது என்று சொன்னீர்களா கோவி. கண்ணன் ஐயா. இல்லையேல் அவர் எழுதிக் கொடுத்து அதனை நான் இங்கே இட்டேன் என்று சொல்கிறீர்களா? :-) மண்டபத்திலே யாரோ எழுதிக் கொடுத்ததை இங்கே இட இங்கே என்ன ஆயிரம் பொன்னா பரிசு கொடுக்கிறார்கள்? :-) என் கவிதை தான் என் கவிதை தான். சிவபாலனின் உருவில் இருக்கும் கடவுளின் கட்டளையை தலைமேல் ஏற்று அடியேன் எழுதிய கவிதை. //
என்ன கொடுமை குமரன் !
தவறாக நினைத்துவிடப் போகிறீர்கள் என்று *அவரைப் போல் செழுமையாக எழுதுயிருக்கிறீர்கள் என்று பொருள் கொள்ளவும் !* சொல்லியிருக்கேனே !
அதைப்படித்துமா இப்படி ஒரு சந்தேகம் !
உங்கள் தத்துவபடியே... !நீங்களும் எஸ்கேவும், ஏன் நானும் கூட ஒன்றே !
ஆப்டாரல் கவிதை அதே போல் இருக்கிறது என்றதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?
:))
கோவி.கண்ணன் ஐயா. உங்களின் நோக்கம் இந்து மதக்கருத்துகள் மற்ற மதங்களிலும் இருக்கின்றன என்பதாக இருந்தால் உங்களின் பின்னூட்டத்தை வேறு விதமாகப் படிப்பேன். ஆனால் உங்களின் பின்னூட்டம் ஏதோ இந்து மதத்தில் இந்தக் கருத்துகள் இல்லாதது போன்றும் மற்ற சமயங்களில் மட்டுமே இருப்பது போன்றும் அங்கிருந்தே இங்கு வந்தது போன்றும் ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. இது தங்களின் உண்மை நோக்கமா இல்லை நீங்கள் எழுதியதை நான் தவறாகப் புரிந்து கொள்கிறேனா என்று தெரியவில்லை.
/இறைவன் சர்வவியாபி என்ற கருத்து புத்த மதகருத்துக்களை ஒட்டியது/
இறைவன் என்பவனைப் பற்றியே புத்தர் பேசவில்லை; இறைவன் இருக்கிறான் என்றோ இல்லை என்றோ அவர் சொல்லவில்லை என்று அறிகிறேனே - அது தவறா? இல்லை பிற்கால பௌத்தம் சொல்லும் கருத்தினைச் சொல்கிறீர்களா?
புத்த மதகருத்துகளை ஒட்டியது என்றால் புத்த மதத்திலும் இந்தக் கருத்து உண்டு என்று பொருளா இல்லை இந்து மதத்தில் இல்லை என்று பொருளா?
//அது அன்பே கடவுள் என்ற நாத்திக தத்துவமும் கூட. //
நான் அறிந்த ஒரு பழம்பாடலைச் சொல்கிறேன்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே
இது திருமந்திரம் என்ற சைவ சமய நூலில் வரும் பாடல். திருமந்திரம் நாத்திக நூலா? இல்லை நாத்திகம் திருமந்திரத்திலிருந்து இந்தக் கருத்தை எடுத்துக் கொண்டதா?
//தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றால் எங்கும் இருப்பான் என்று பொருள்தானே, தனிச் சிறப்பாக சொல்ல முடியாது ! //
புரியவில்லை.
//அங்கே இருப்பது என்பது இல்லாதது போல் ஆகிவிடுகிறது.//
தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்று சொல்லுவதும், அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் என்று சொல்லுவதும் அங்கே இருப்பது தான் இங்கேயும் இருக்கிறது எங்கும் இருக்கிறது என்ற பொருளைத் தானே கொடுக்கிறது? முதல் வாக்கியத்தில் 'உம்'மையும் இரண்டாம் வாக்கியத்தில் உட்புறமும் வெளிப்புறமும் சுட்டப்படுகிறதே.
//தனித்து சிறப்பாக, எதனுடனும் ஒப்பிட முடியதது தான் இறைத்தத்துவம். //
உண்மை. சொல்லுக்கும் மனத்திற்கும் எட்டாத அந்த இறை தத்துவத்தை சொல்லால் சொல்ல முயலும் போது அது குறைபாடுடன் தான் தோன்றுகிறது. அதனால் தான் வேதங்களும் இறைதத்துவம் இதனை விடப் பெரியது; அதனை விடப் பெரியது என்று சொல்லிக் கொண்டே சென்று கடைசியில் சொல்லி முடியாது; எவ்வளவு சொன்னாலும் அதனை விடப் பெரியது இறை என்று நிறுத்துகிறது.
//இதை இஸ்லாமியர்கள் நமபுகிறார்கள்//
இந்துகளும் நம்புகிறார்கள் இதனையே.
//நாம் தூணிலும் இருக்கிறான் துரும்பிலும் இருக்கிறான் என்ற பிரகலாதன் கதையை கூறுகிறோம். ஆனால் இரன்யனிடம் கடவுள் இருந்திருந்தால் அவனையே கடவுள் அழித்திருப்பாரா ?
தூனிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்ற பிரகலாதன் 'தந்தையே உன்னிடமும் இருக்கிறான்' என்று சொல்லவில்லையே ! தத்துவம் தவறாகிறதே ! //
மிக நல்ல கேள்வி. எங்கும் நிறைந்த இறை வடிவாய் நீங்களும் நானும் இருக்கிறோம் என்கிறோம். பின்னர் ஏன் நீங்களும் நானும் வாதம் செய்கிறோம்? ஏன் உலகில் எத்தனை விதமான வேறுபாடுகள்? உங்கள் கேள்விகளின் நீட்சியாக இந்தக் கேள்விகளையும் பார்க்கிறேன். முதலில் அன்பர்கள் யாராவது வந்து இந்த கேள்விகளுக்குத் தகுந்த பதில் சொல்கிறார்களா பார்க்கலாம். இல்லையேல் இந்தப் பதிவு முழுவதும் நீங்களும் நானும் மட்டுமே பேசிக் கொண்டிருப்பதாய் முடியும். யாரும் பதில் சொல்லாவிட்டால் நாளை அடியேன் பதில் சொல்கிறேன்.
தத்துவம் த்வறா?
இதுதான் ஒரு ஆணவம் அறிவை மறைத்த தந்தைக்கும், அடக்கமும், பக்தியும் உருவான மகனுக்கும் இடையே நடந்த உரையாடல், புராணத்தில் வருவதுபடி.
ஹிரண்யகசிபு: எங்கே உன் கடவுள்?
பிரஹ்லாதன்: தந்தையே அவன் எங்கும் இருக்கிறான், உம்முள்ளும், என்னுள்ளும், எங்கும் இருக்கிறான்.
ஹி: அப்படியானால், இதோ இந்தத் தூணிலும் அவன் இருக்கிறான் என்கிறாயா?
பி: ஆம் தந்தையே! துரும்பிலும் இருக்கிறான். நீங்கள் காட்டும் தூணிலும் இருக்கிறான்.
ஹிரண்யகசிபு கோபத்துடன் தன் முட்டிக்கையால் அந்தத் தூணை உடைக்கிறான்.
இப்போது சொல்லுங்கள்.
பிரஹலாதன் சொன்ன தத்துவம் தவறா என்று, கோவியாரே!
உயிர்ப்பொருளான தன்னையும் தந்தையையும் காட்டிய போது, அதை உணராமல், உணர மறுத்து திடப் பொருளான தூணைக் காட்டிக் கேலி செய்ய முற்பட்டவன் ஹிரண்யகசிபு.
ஆத்திரம் கண்ணை மறத்திடும் போது அறிவுக்கு வேலை கொடு என்பதை அறியாதவன்.
அவன் கேட்ட கேள்விக்கு பதில் அடக்கத்துடன் சொன்ன அறிவுப் பிள்ளை பிரஹ்லாதன்.
நல்ல பொருள் பொதிந்த கவிதை குமரன்.
//ஆப்டாரல் கவிதை அதே போல் இருக்கிறது என்றதற்கு இவ்வளவு ஆர்பாட்டமா ?
//
Man - EGO = God
நன்றி செந்தில்குமரன். எல்லாமே இறைவன் என்ற எண்ணத்தில் எல்லாரிடமும் அன்பு கொள்ள வேண்டும். இறைவனே எல்லாம் என்ற சரணாகதி நிலையும் வேண்டும். இரண்டுமே அடியேனிடம் இல்லை.
நன்றி எஸ்.கே.
Post a Comment