Friday, June 23, 2006

ஆறு வழிகள்

ஆறு பதிவுகள் என்று எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் இப்போது. முன்பு நாலு பதிவுகள் ஒரு முறை வலம் வந்தது போல் இப்போது ஆறு பதிவுகள் வலம் வருகின்றன. நாலு நாலாவோ ஆறு ஆறாவோ எடுத்து இது எனக்குப் பிடிக்கும் இது எனக்குப் பிடிக்காது என்று சொல்லும் அளவுக்கு மனதில் தெளிவு இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் நாலு பதிவு போடும் போதும் சரி. இப்போது ஆறு பதிவு போடும் போதும் சரி. பிடித்தது, பிடிக்காதது என்று எழுதாமல் 'ஆறு' என்ற கருப்பொருளில் வரும் ஒன்றினைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

நாலு பதிவுக்கு சிங். செயகுமாரும் நாமக்கல் சிபியும் என்னை அழைத்தார்கள். இந்த ஆறு விளையாட்டிற்கு வெங்கடரமணியும் இராம்பிரசாத் அண்ணாவும் அழைத்திருக்கிறார்கள். இவர்கள் நால்வருக்கும் நன்றி.

***

உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களை முழுவதும் புறந்தள்ளிய வழிகளும் இருக்கின்றன. ஆதிசங்கரரின் காலத்திலும் இப்படியே எத்தனையோ சமயங்கள் இருந்தன இந்தத் திருநாட்டில். சமயங்கள் ஒன்றில் ஒன்று கலப்பதும் புதிதாக ஒன்று உருவாவதும் இருந்த ஒன்று இன்னொன்றில் கலந்து முழுதும் உருத்தெரியாமல் மறைவதும் காலம் காலமாக எல்லா நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட (கவனிக்கவும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட என்றோ வேதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட என்றோ சொல்லவில்லை) சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அந்த ஆறு சமயங்களைப் பற்றியே இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.

***

காணபத்யம்:

முழுமுதற்கடவுள் என்று போற்றப்பட்டு எல்லாச் செயல்களையும் தொடங்குவதற்கு முன் வணங்கப்படும் ஆனைமுகன் கணபதியை எல்லாக் கடவுளர்களையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்று வணங்குவது காணபத்யம் என்னும் சமயம்.

கௌமாரம்:

அழகில் சிறந்தவன்; ஆறுமுகங்களைக் கொண்டவன்; முருகன்; குமரன்; கிழவன்; குகன் என்று பலவாறாகப் போற்றப் படும் குமரக்கடவுளை முழுமுதற்கடவுளாகப் போற்றுவது கௌமாரம்.

சௌரம்:

உலகுக்கெல்லாம் ஒளி கொடுத்து உலகச் செயல்கள் எல்லாம் நடக்கச் சக்தியும் கொடுக்கும் கண்கண்ட தெய்வமான சூரியனை முழுமுதற்கடவுளாக, பரம்பொருளாக வணங்குவது சௌரம்

சாக்தம்:

பரம்பொருளை அன்னை வடிவில் சக்தி வடிவில் வணங்குவது சாக்தம்

சைவம்:

பிறப்பிலியான சிவபெருமானைப் பரம்பொருளாக வணங்குவது சைவம்

வைணவம்:

திருமகள் மணாளனை, விஷ்ணுவை முழுமுதற்கடவுளாக வணங்குவது வைஷ்ணவம் என்றும் சொல்லப்படும் வைணவம்.

***

ஆதிசங்கரரின் காலத்தில் இந்த ஆறு சமயங்களுக்கும் வேறுபாடுகள் இருந்தன. அவர் காலத்திலேயே அவை ஒன்றுக்குள் ஒன்றாய் கலக்கத் தொடங்கியிருந்தன. தற்காலத்தில் இந்த ஆறு சமயங்களும் இரு பெரும் சமயங்களாக - சைவம், வைணவம் - உருமாறி நிற்கின்றன.

காணபத்யம், கௌமாரம், சாக்தம் இந்த மூன்றும் சைவத்தில் அடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில பாகங்களில் அவை இன்றும் சிறப்போடு இருக்கின்றன. காணபத்யம் மஹாராஷ்ட்ரத்திலும் கௌமாரம் தமிழகத்திலும் சாக்தம் வங்காளத்திலும் கேரளத்திலும் இந்த ஆறு சமயங்களிலும் தலைமையிடம் கொள்கின்றன. சௌரம் சைவத்திலும் வைணவத்திலும் கலந்து மறைந்துவிட்டது. சைவத்தில் சிவசூரியனாகவும் வைணவத்தில் சூரியநாராயணனாகவும் சௌரத்தின் சூரியன் உருமாறிவிட்டான். தற்காலத்தில் சூரியனை முழுமுதற்கடவுளாக வணங்குபவர் இந்தியாவில் இல்லாமல் போய்விட்டார்கள். ஆனால் உலக வரலாற்றைப் பார்த்தால் சூரியனை எல்லா நாட்டினரும் வணங்கியிருக்கிறார்கள் என்பது புலனாகும்.

வைணவம் மட்டுமே ஆதிசங்கரரின் காலத்திலிருந்து எந்த சமயத்தையும் எடுத்துக் கொள்ளாமலும் எந்த சமயத்திலும் கலந்துவிடாமலும் இருப்பது போல் தோன்றினாலும் மற்ற சமயங்களில் இருந்தத் தத்துவங்களை வைணவம் ஏற்றுக் கொண்டிருப்பது கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் தெளிவாகும்.

***

இந்த ஆறு விளையாட்டில் நானும் ஒரு ஆறு பேரை அழைக்கவேண்டுமே. சிந்தித்துப் பார்த்ததில் கீழே இருக்கும் ஆறுபேரை அழைக்கலாம் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் தவிர வேறு சிலரையும் அழைக்கலாம் என்று எண்ணிய போது ஏற்கனவே மற்றவர்களல் அழைக்கப் பட்டவர்களைத் தவிர்க்கவேண்டும் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் இதுவரை இந்த விளையாட்டிற்கு அழைக்கப் படாதவர்கள் என்று எண்ணுகிறேன். அழைக்கப்பட்டிருந்தால் சொல்லுங்கள். அவர்கள் பெயரை எடுத்துவிட்டு வேறு ஒருவர் பெயரை தருகிறேன்.

1. இராகவன்
2. இலவசக் கொத்தனார்
3. சிவமுருகன்
4. சிங். செயகுமார்
5. தருமி ஐயா
6. காஞ்சி பிலிம்ஸ்

32 comments:

இலவசக்கொத்தனார் said...

குமரன், கையைக் காமிச்சு விட்டுட்டீங்க. இந்த வாரயிறுதிநாட்களில் என்னாலான ஆறை எழுதிப் போடறேன்.

சிவமுருகன் said...

செவ்வாய் கிழமைக்கு பிறகு இடுகிறேன்.

கோவி.கண்ணன் said...

திரு குமரன்,
ஆதிசங்கரரைப் பற்றி எழுதிவிட்டு... அவரின் அத்வைதம் 'தத்வம் அஸி (நீயே அது)' பற்றி எழுதாதது ஏமாற்றம் அளிக்கிறது. மற்றபடி உங்கள் ஆறு ஒரு சரவண பொய்கை தான்

Ram.K said...

குமரன்,

ஆறு வழிகளும் 'Tip of the iceberg'.

ஒவ்வொன்றையும், சுருக்கமாகவும், அழகாகவும் விளக்கியுள்ளது என் மனதைக் கவர்ந்த ஒன்று.

ஆறு என்பது இந்த விளையாட்டில் (ஏற்கனவே ஆறு என்பதற்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருள்) பலவகையில் பலரால் கையாளப்படுவது இன்னும் அழகு.

அந்த வகையில் உங்களால் அழைக்கப்பட்டவர்கள் என்ன எழுதுவார்கள் ? என்று யோசித்தபடி அவற்றையும் படிக்க காத்திருக்கும்

குழந்தைமனதுடன்
பச்சோந்தி

VSK said...

அணுவைத் துளைத்து ஓர் ஏழ்கடலைக் காட்டி
குறுகத் தரித்த குறள்

என வள்ளுவருக்கு ஒரு பெருமை உண்டு.

அதனைச் சற்று மாற்றி,

அணுவைத் துளைத்து ஓர் ஏழ்கடலைக் காட்டி
குறுகத் தரித்த குமரன்

எனச் சொல்லலாம் போலிருக்கிறதே!

அருமையான விளக்கம்!
பாராட்டுகள்!

குமரன் (Kumaran) said...

எப்ப முடியுதோ அப்ப போடுங்க கொத்ஸ்.

குமரன் (Kumaran) said...

தேர்வு முடிஞ்சாச்சா சிவமுருகன்? தேர்வு முடிஞ்ச பின்னாடி போட்ட போதும்.

குமரன் (Kumaran) said...

திரு. கோவி. கண்ணன் ஐயா. இந்தப் பதிவில் ஆதிசங்கரரைப் பற்றி எழுதவில்லை. ஆறுசமயங்களைப் பற்றித் தான் எழுதியிருக்கிறேன். அவர் ஷண்மதஸ்தாபகர் என்பதால் அவரைப் பற்றியும் கொஞ்சம் பேசினேன். அவரைப் பற்றி விரைவில் எழுதுகிறேன். அப்போதும் அத்வைதம் பற்றி எழுதுவேனா என்று தெரியாது. அத்வைதம் என்பது கடல். அதில் புரியாத விதயங்கள் ஏராளம் இருக்கின்றன. அதனால் அந்தத் தத்துவத்தைப் பற்றி எழுதும் துணிவு இல்லை.

உங்கள் பாராட்டிற்கு மிக்க நன்ரி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராம்பிரசாத் அண்ணா. ஆறு சமயங்களைப் பற்றி எழுதும் போது அவற்றின் நுனியைப் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்பதே எண்ணம். விவரித்து எழுதினா பெருகும் என்று உங்களுக்குத் தெரியும்.

நான் அழைத்தவர்களும் உங்களைப் போல் புதுமையாக எழுதுவார்கள் என்று தான் எண்ணுகிறென்.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. உங்களில் அளவுக்கு மீறிய பாராட்டுரைக்கு மிக்க நன்றி. :-) ஏழ்கடல், குறுக என்னும் சொற்களைப் படிக்கும் போது அகத்தியரும் கடலைக் குடித்த அவரின் பெருவயிறும் நினைவிற்கு வருகின்றன. நல்ல வேளை. நான் குள்ளமும் இல்லை; பெருவயிறு இருந்தாலும் மிகப்பெரிய வயிறு இல்லை. :-)

மலைநாடான் said...

/இந்த ஆறு பேர் தவிர வேறு சிலரையும் அழைக்கலாம் என்று எண்ணிய போது ஏற்கனவே மற்றவர்களல் அழைக்கப் பட்டவர்களைத் தவிர்க்கவேண்டும் என்று தோன்றியது. இந்த ஆறு பேர் இதுவரை இந்த விளையாட்டிற்கு அழைக்கப் படாதவர்கள் என்று எண்ணுகிறேன்/

குமரன்!
எனக்கும் மனதில் இது தோன்றிய விடயம்தான். ஆனாலும் உங்களைப்போல் இவ்வளவு நாகரீகமாக என்னால் வெளிப்படுத்தத் தெரியவில்லை. அதுதான் குமரன். பதிவுக்கும், பண்புக்கும், பாராட்டுக்கள்

இலவசக்கொத்தனார் said...

குமரன்,

நீங்க கேட்டுக்கொண்ட மாதிரி நானும் ஒரு ஆறு பதிவு போட்டாச்சு. வந்து பாருங்க.

Anonymous said...

அன்புக் குமரா!
"ஆறு" பாரதச்சமயங்களைப்பற்றியும்,ரத்தினச் சுருக்கமான விளக்கம்;இதில் சௌர மெனும் சூரியவழிபாடு;இவற்றுடன் கலந்து;விட்டதென்பது,உண்மை; ஆனால் உலப் பழம் பண்பாடுகள்;அனைத்திலும் இந்தச் சூரியவழிபாடு இருந்துள்ளது,எகிப்து;சீனம்;அமேசன்கரை மாயா;அவுஸ்ரேலியப் பழங்குடி; யாவரும் சூரியனை வழிபட்டுள்ளார்கள்; இராமர் கூட" ரகுவம்ச சுதன்" என்கிரார். தியாகையர்;.
இங்கே பிரான்சில் "14ம் லூயி மன்னர்" பரம்பரை தங்களை சூரிய அரசர்களாகத்தான் கொள்கிறது. VERSAILLES அரண்மனை பூராகவும் தங்கமுலாம் பூசியதே! ;சூரியனை நினைவு கூரவே! ,அரண்மனைப் பின்முற்றத்தில்,சேர்க்கைத் தடாகத்தில் உள்ள நீர்த் தாரையில்; குதிரைகளில் சவாரி செய்யும் அரசகுமாரன் சிலை தங்கநிறத்திலுள்ளது. அது சூரியனெனவே ஆராச்சியாளர்கள் கூறுகிறார்கள்."தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருவனனை; உலகம் ஆராதித்ததில் ஆச்சரியமில்லை.
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

உங்கள் பாராட்டிற்கு மெத்த நன்றி மலைநாடான். அனைவரும் நினைப்பது தான் அது. நான் எழுதிவிட்டேன். அவ்வளவு தான்.

குமரன் (Kumaran) said...

கொத்ஸ். உங்க ஆறு பதிவுக்கு வந்து ஆறுக்கும் மேல் பின்னூட்டங்கள் போட்டாச்சு.

குமரன் (Kumaran) said...

விளக்கமான பின்னூட்டம் போட்டதற்கு நன்றி யோகன் ஐயா. நமது கர்ணனை மறக்கமுடியுமா? கர்ணன் திரைப்படத்தின் படி அவர் ஒரு சூரிய உபாசகர் தானே?!

இலவசக்கொத்தனார் said...

//கொத்ஸ். உங்க ஆறு பதிவுக்கு வந்து ஆறுக்கும் மேல் பின்னூட்டங்கள் போட்டாச்சு. //

இந்த சுறுசுறுப்பை என்னால மேட்ச் பண்ண முடியாது.

இலவசக்கொத்தனார் said...

//இவர்கள் நால்வருக்கும் நன்றி.//

நாலு பதிவுக்கு அழைத்ததுக்கு இப்போ நன்றியா? அப்பாடா!

SHIVAS said...

அழைப்புக்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

கொத்ஸு. அதான் நாலு பதிவுக்கு சுட்டி குடுத்திருக்கேன்ல. படிச்சுப் பாக்கறது. அப்பவும் நன்றி சொல்லியாச்சு. இப்ப ரெண்டாவது தடவை. நன்றி தான அப்பு? எத்தனை தடவை சொன்னா என்னா?

குமரன் (Kumaran) said...

அதென்னா கொத்ஸ். முன்னுக்கு பின் முரணா எல்லாரும் பேசுவாங்க தான். ஆனா நீங்க அடுத்தடுத்தப் பின்னூட்டங்கள்ல முன்னுக்குப் பின் முரணா பேசறீங்களே? சுறுசுறுப்புன்னு பாராட்டிப்புட்டு அதே மூச்சுல அப்பாடான்னு பெருமூச்சு வக்கிறீங்க... உங்களை மாதிரி பொடிப்பசங்களைப் புரிஞ்சுக்கவே முடியலை போங்க. ஹும்.

குமரன் (Kumaran) said...

என்ன காஞ்சி பிலிம்ஸ்? அழைப்புக்கு நன்றி மட்டும் சொல்லிட்டுப் போயிட்டீங்க. எப்ப 'ஆறு' பதிவு போடறீங்க?

Anonymous said...

அண்ணாச்சி,
ஆறு மதந்தே முன்னாடி இருந்துச்சுனுறீங்க. அப்படீன்னா எங்க ஊரு சொடலெ மாடன், அய்யனாரு, பேச்சியம்மா, காத்தவ ராயனெல்லாம் முன்னாலெ ஆரு கும்புட்டா ?

நெசமா தெரியலேனு தா கேக்குறேன்.

குமரன் (Kumaran) said...

பேர் சொல்ல விரும்பாத அண்ணாச்சி. நான் எழுதுனதைத் தான் கொஞ்சம் நல்லா படிங்களேன். நான் எப்பங்க ஆறு மதந்தேன் இருந்ததுன்னு சொன்னேன். ஆறு சமயங்களைப் பத்தி எழுதத் தொடங்கும் முன் சொன்ன வார்த்தைகளைப் படிக்கலையோ நீங்க? உங்களுக்காக அந்த வரிகளை மீண்டும் இங்கே தருகிறேன்.

//உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களை முழுவதும் புறந்தள்ளிய வழிகளும் இருக்கின்றன. ஆதிசங்கரரின் காலத்திலும் இப்படியே எத்தனையோ சமயங்கள் இருந்தன இந்தத் திருநாட்டில். சமயங்கள் ஒன்றில் ஒன்று கலப்பதும் புதிதாக ஒன்று உருவாவதும் இருந்த ஒன்று இன்னொன்றில் கலந்து முழுதும் உருத்தெரியாமல் மறைவதும் காலம் காலமாக எல்லா நாட்டிலும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் நாட்டில் ஆதிசங்கரரின் காலத்தில் இருந்த சமயங்களில் வேதங்களை ஏற்றுக் கொண்ட (கவனிக்கவும் வேதங்களை அடிப்படையாகக் கொண்ட என்றோ வேதங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட என்றோ சொல்லவில்லை) சமயங்களை ஆறு வகைக்குள் அடக்கி அந்த வழிபாட்டு முறைகளை சீர்படுத்தி வைத்தார் ஆதி சங்கரர். அந்த ஆறு சமயங்களைப் பற்றியே இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம்.
//

இதுல எங்கயாச்சும் நம்ம ஊரு சொடலெ மாடன், ஐயனாரு, பேச்சியம்மா, காத்தவராயன் எல்லாம் கும்புடுறவங்க இருந்ததில்லைன்னு சொல்லியிருக்கேனா? தெளீவா 'உலகில் இறைவனை வழிபட எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் வடமொழி வேதங்களைப் புறந்தள்ளாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களைப் பற்றிப் பேசாத வழிகளும் இருக்கின்றன; வடமொழி வேதங்களை முழுவதும் புறந்தள்ளிய வழிகளும் இருக்கின்றன'ன்னு சொல்லியிருக்கேனே. மாடன், ஐயனார், பேச்சியம்மை, காத்தவராயன் (முக்கியமா எங்க ஊரு கருப்பணசாமியை விட்டுட்டீங்களே? எங்கப்பாவோட இஷ்ட தெய்வங்கள் கருப்பணசாமியும் முருகனும் தான்) இவங்களை கும்புடுறவங்களையெல்லாம் 'வடமொழி வேதங்களைப் பற்றி ஒன்றுமே சொல்லாத வழிகள்'ன்னு சொல்லியிருக்கேனே; அதுல சேத்துக்கலாமே?!

'நெசமா தெரியலேனு தா கேக்குறேன்'னு சொல்லியிருக்கீங்க. அதனால என்னால முடிஞ்ச அளவு விளக்கம் சொல்லியிருக்கேன். இன்னும் ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க.

G.Ragavan said...

குமரன், உங்க பதிவு எப்படி என்னோட கண்ணை விட்டுப் போச்சு. ம்ம்ம்ம்...

ஆறுசமயங்கள். சைவ, வைணவ, சாக்த, கௌமார, காணாபத்திய, சௌராஷ்ட்டிரங்கள்.

நல்ல விளக்கங்கள். பல்வித நம்பிக்கைகள் தனித்தனியாக இருப்பது எப்படியோ அப்படிச் சிறப்பே கூடியிருப்பதும். தவறில்லை. யூத, கிருத்துவ, இஸ்லாமிய மதங்களுக்கும் இப்படி இணைப்பு சொல்லலாம். தவறில்லை.

பொதுவில் என்னைக் கேட்டால் எது பிடித்திருக்கிறதோ அந்த வழியில் செல். உன்னால் அடுத்தவருக்குக் கெடுதல் வரக்கூடாது. அவ்வளவுதான்.

என்னையும் அழைத்திருக்கிறீர்களே....ம்ம்ம்ம். முயற்சி செய்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவன். விரைவில் 'ஆறு' பதிவு எழுதுங்கள்.

ஆறு சமயங்களைப் பட்டியல் இடும்போது தட்டச்சுப் பிழை வந்துவிட்டது போலும். சௌராஷ்ட்ரம் ஒரு சமயம் இல்லை. சௌரம் தான் சரியான பெயர். சௌராஷ்ட்ரம் ஒரு மொழியின் பெயர். சௌராஷ்ட்ரர்களும் ஏனைய இந்துக்கள் போல் இந்த ஆறு சமயங்களையும் பின்பற்றுபவர்கள் தான்.

Anonymous said...

அண்ணாச்சி,
கோவப்படாமெ நா கேட்ட கேள்விக்கு பதில் சொன்னதுக்கு நன்றி. நா கொஞ்சம் கூமுட்டெ, அதா திருப்பிக் கேக்கேன். எல்லா தெரியாத விசயத்த தெரிஞ்சுக்கிடத்தே வேரொன்னுமில்லெ.

1. சொடலெ மாடன், அய்யனாரு, பேச்சியம்மா, காத்தவ ராயனெல்லாம் கும்புடுரதுக்கு முந்திக் காலத்துல எதுனா பெசல் பேரு இருந்துச்சா ? சைவ, வைணவ, சாக்த, கௌமார, காணாபத்திய, சௌரம் இது மாதரி.

2. முந்திக் காலத்துல சைவக்காரவுளும் வைணவக்காரவுகளும் சண்டெ பிடிச்சிக்கிட்டு இருந்ததா கேள்விப்பட்டிருக்கேன், அது மாதரி சொடலெ மாடன், அய்யனாரு, பேச்சியம்மா, காத்தவ ராயனெ கும்புடுரவுகளுக்குள்ள சண்ட சச்சரவு இருந்துச்சா அந்தக் காலத்துல ?

எங்கக் கொல தெய்வம் அய்யனாரு. இவரு பெரவிச் சைவம் (சாப்பாட்டு ஐட்டத்துல, ஆனா ரெண்டு பொண்டாட்டி), அதனால பொங்கலு மட்டும் தா வச்சிப் படைப்பாக. கறி, கோழியெல்லாம் கெடயாது. திருவிளா அப்ப வெறும் சாம்பாரும், ரசமுந்தே.

ஆளு சும்மா சூப்பரா சினிமா ஸ்டாரு கண்ணக்கா மீச இல்லாம, அளகா வெள்ளக் குதுர மேல இருப்பாரு. கையில அருவாளும் தொனெக்கி நாயும் உண்டு.

திருவிளா ஞாபகம் வந்திருச்சுங்கோவ். வாரேன்.

Geetha Sambasivam said...

குமரன்,
சும்மா படிச்சுட்டு நல்லா இருக்குனு சொல்லிட்டுப் போறது நல்லா இருக்காது. அதனாலேயே உங்க பதிவுகளைப் படிச்சாலும் பின்னூட்டம் இடுகிறதில்லை. ஆனால் இது என்ன சொல்றது? ரொம்ப நல்ல கருத்தைத் தெளிவாக எல்லாரும் ஏற்றுக் கொள்ளும்படி சொல்கிறீர்கள். என் ஆசிகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்.

குமரன் (Kumaran) said...

//1. சொடலெ மாடன், அய்யனாரு, பேச்சியம்மா, காத்தவ ராயனெல்லாம் கும்புடுரதுக்கு முந்திக் காலத்துல எதுனா பெசல் பேரு இருந்துச்சா ? சைவ, வைணவ, சாக்த, கௌமார, காணாபத்திய, சௌரம் இது மாதரி.
//

தெரியலைங்க. இந்தக் காலத்துல 'நாட்டார் தெய்வங்கள்', 'சிறு தெய்வங்கள்', 'எல்லைத் தெய்வங்கள்' என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் தனியாக ஏதாவது பெயர் இருந்ததா என்று தெரியவில்லை.

குமரன் (Kumaran) said...

//2. முந்திக் காலத்துல சைவக்காரவுளும் வைணவக்காரவுகளும் சண்டெ பிடிச்சிக்கிட்டு இருந்ததா கேள்விப்பட்டிருக்கேன், அது மாதரி சொடலெ மாடன், அய்யனாரு, பேச்சியம்மா, காத்தவ ராயனெ கும்புடுரவுகளுக்குள்ள சண்ட சச்சரவு இருந்துச்சா அந்தக் காலத்துல ?
//

என்னங்க இப்படி கேட்டீங்க. என் சாமி, உன் சாமி அப்படிங்கற சண்டை எந்தக் காலத்திலயும் இருக்கத் தான் செய்யுது. சுடலை மாடன், ஐயனார், பேச்சியம்மன், விருமாண்டி, காத்தவராயன், கருப்பணசாமி போன்ற தெய்வங்களைப் பற்றி வழங்கி வரும் வரலாறுகளைப் பார்த்தாலே தெரியுமே அந்த சண்டைகளைப் பற்றி.

குமரன் (Kumaran) said...

//எங்கக் கொல தெய்வம் அய்யனாரு. இவரு பெரவிச் சைவம் (சாப்பாட்டு ஐட்டத்துல, ஆனா ரெண்டு பொண்டாட்டி), அதனால பொங்கலு மட்டும் தா வச்சிப் படைப்பாக. கறி, கோழியெல்லாம் கெடயாது. திருவிளா அப்ப வெறும் சாம்பாரும், ரசமுந்தே.

ஆளு சும்மா சூப்பரா சினிமா ஸ்டாரு கண்ணக்கா மீச இல்லாம, அளகா வெள்ளக் குதுர மேல இருப்பாரு. கையில அருவாளும் தொனெக்கி நாயும் உண்டு.

//
ஆமாங்க. எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் ஐயனாருக்கு சைவப் படையல் தான் எல்லா இடத்துலயுமே. ஐயனார் கோவிலில் இருக்கும் மற்ற தெய்வங்களுக்குத் தான் அசைவப் படையல் இடுகிறார்கள். வரலாற்றில் இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று எண்ணுகிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி கீதா அம்மா. நீங்கள் அவ்வப்போது வந்து பின்னூட்டம் இடுவீர்கள். ஆனால் தொடர்ந்து படிப்பது தெரியாது. தொடர்ந்து படிப்பதற்கு மிக்க நன்றி. உங்கள் ஆசிகளுக்கும் மிக்க நன்றி. என்றும் அவற்றை வேண்டுகிறேன்.