Saturday, April 08, 2006

166: பங்குனி உத்திரம் - 1

வருகின்ற ஏப்ரல் 11ம் நாள் பங்குனி உத்திரத் திருநாள். பங்குனி உத்திரத் திருநாள் பலவிதங்களில் சிறப்புடையது. அதன் சிறப்புக்களை ஒரே பதிவில் சொல்லிவிட முடியாது என்பதால் இன்று தொடங்கி இரண்டு மூன்று பதிவுகளில் அதனைச் சொல்ல முயல்கிறேன்.

கங்கையில் புனிதமான காவிரி நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில் தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்விய தரிசனம் கிடைக்காது. அண்ணலும் அவளும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோலத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை.




வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய இராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போது தான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ச்ரிரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசனகவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்த போது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம். அன்றிலிருந்து இராமானுஜர் 'உடையவர்' என்ற திருநாமத்தாலும் அழைக்கப் படுகிறார்.

எம்பிரானை எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானைத் தண் தாமரைக் கண்ணனை
கொம்பராவு நுண்ணேரிடை மார்வனை
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே!

என் தலைவனை, என் தந்தை, அவர் தந்தை, அவர் தந்தை இப்படி என் முன்னோர் அனைவருக்கும் தலைவனை, குளிர்ந்த தாமரைக் கண்களை உடையவனை, பூங்கொம்பினை ஒத்த நுண் இடையாளான திருமகளைத் தன் மார்பில் உடையவனை, என் இறைவனைத் தொழாய் மட நெஞ்சமே!

நெஞ்சமே நல்லை நல்லை உன்னைப் பெற்றால்
என் செய்யோம் இனி என்ன குறைவினம்
மைந்தனை மலராள் மணவாளனை
துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்!

என் மனமே! உன்னை நான் பெற்றதால் நன்றாகப் போனது. என்றும் இளையவனை, மலராளாகிய பெரியபிராட்டியின் மணவாளனை நான் தூங்கும் போதும் (என் உயிர் பிரியும் போதும்) நீ விடாது தொடர்ந்து போகிறாய். நன்று. நன்று. உன்னைப் பெற்று நான் என்ன தான் செய்ய முடியாது? இனி எனக்கு என்ன குறை?

நீயும் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் நெஞ்சமே சொன்னேன்
தாயும் தந்தையுமாய் இவ்வுலகினில்
வாயும் ஈசன் மணிவண்ணன் எந்தையே

என் நெஞ்சமே! நீயும் நானும் இப்படி கூட்டணி அமைத்து அவனை வணங்கி வந்தால், இவ்வுலகத்தில் நமக்குத் தாயும் தந்தையுமாய் இருக்கும் ஈசன் மணிவண்ணன் என் தந்தை வேறெந்த பிறவி நோயும் நமக்கு வரும்படி விடமாட்டான். சொன்னேன் கேட்டுக் கொள்.

எந்தையே என்றும் எம்பெருமான் என்றும்
சிந்தையுள் வைப்பன் சொல்லுவன் பாவியேன்
எந்தை எம்பெருமான் என்று வானவர்
சிந்தையுள் வைத்துச் சொல்லும் செல்வனையே

வானவர்கள் எல்லாம் 'என் தந்தையே! என் தலைவனே' என்று தங்கள் சிந்தையில் வைத்து வணங்கும் செல்வனை (சம்பத் குமாரனை) இந்த உலகினில் பிறந்து எண்ணற்ற பாவங்களைச் செய்த நானும் 'எந்தையே' என்றும் 'எம்பெருமான்' என்றும் சொல்லி சிந்தையில் வைப்பேன். என்ன பேறு பெற்றேன்?

செல்வ நாரணன் என்ற சொல் கேட்டலும்
மல்கும் கண்பனி நாடுவன் மாயமே
அல்லும் நன்பகலும் இடைவீடின்றி
நல்கி என்னை விடான் நம்பி நம்பியே.

வழியில் போகும் ஒருவர் செல்வநாராயணன் என்று சொல்லவும் அதனைக் கேட்டு என் கண்களில் நீர் நிரம்பி வழியும். இது என்ன மாயம்? எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருந்த நான் எப்படி ஆகிவிட்டேன்? இரவும் பகலும் இடைவீடு இன்றி என்னை நம்பித் தன்னை எனக்குத் தந்து என்னை விடான் என் அழகிய மணவாள நம்பி.

(இவை மாறன் சடகோபனாகிய நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள்)

***

கோதை பிறந்த ஊராம் தென்புதுவை நகரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்க மன்னாரும் மகிழ்ந்திருக்கும் காட்சி இங்கே.


கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் - நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்

***

மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப் படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் ச்ரி பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காகக் குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே.

(பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆற்றில் இறங்கும் படம் இல்லாததால் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் படத்தை இங்கு இடுகிறேன்)

***

17 comments:

சிவமுருகன் said...

இதே நன்னாளில் தான் சிதையின் கரத்தையும் பற்றினார் இராமர்.

பங்குனி உத்திரத்தில் பிரசன்னவெங்கடேசர், சித்திரா பவுர்ணமியில் கள்ளழகர், வைகாசி விகாசத்தில் கூடலழகர் என்று மூவரும் பவுர்ணமி நாளில் வைகையில் எழுந்தருள்வது சிறப்பு.

Machi said...

பங்குனி உத்திரம் முருகனுக்கு உகந்த நாள் என்று நினைத்திருந்தேன், உங்க பதிவை பார்த்த பின் தான் பெருமாளுக்கும் இது உகந்த நாள் என்று அறிந்துகொண்டேன்.

Karthik Jayanth said...

குமரன் ,

அருமையான பதிவு.. நன்றிகள் பல.

VSK said...

ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவு என்றால், குறைந்தது 5 [அ] 6 பதிவுகள் வேண்டியிருக்குமே!
வேட்டைதான் எங்களுக்கு!!

நாமக்கல் சிபி said...

பங்குனி உத்திரத்தன்றுதான் நாமக்கல்லிலும் தேர்த்திருவிழா நடைபெறும். இலட்சுமி நரசிம்மரும் நாககிரித் தாயாரும் தம்பதி சமேதராய் தேரில் உலா வருவர். நாமக்கல் தேர்த்திருவிழாவில் மாதக்கணக்கில் தேர்க்கடைகள் இருக்கும். சிறு வயதில் நிறைய அனுபவித்திருக்கிறேன். வடம் பிடிப்பதும் கூட உண்டு.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/04/06-2006.html)

குமரன் (Kumaran) said...

பல புதிய சொற்களை இந்தப் பதிவில் பயன்படுத்தியிருக்கிறீர்கள். அருஞ்சொற்பொருள் சொல்லுங்கள் என்று ஒரு நண்பர் கேட்டுக் கொண்டதால்...

இளையபெருமாளாகிய இராமானுஜ முனி: எம்பெருமானார் என்றும் இவரைக் கூறுவார்கள். இராமானுஜன் என்றால் இராமனுக்கு அனுஜன், இராமனுக்குத் தம்பி என்று பொருள். அதனால் பல நூல்களில் இராமனுஜரைக் குறிக்க லக்ஷ்மண முனி என்றும், இளையபெருமாள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

கத்யம் (Gadyam) என்றால் வடமொழியில் எழுதப் படும் வசன கவிதை. வசனம் போல் இருக்கும் ஆனால் எந்த விதப் பா வகையிலும் சேராமல் ஆனால் இராகத்துடன் சொல்ல முடியும் படி எழுதுவது இது. பாரதியாரும் இந்த முறைப்படி தமிழில் வசன கவிதைகள் எழுதியிருக்கிறார்.

உடையவர் என்றால் சொத்தினை உடையவர் என்ற பொருளில் வழங்கப் படுகிறது. இறைவனுக்கு இரண்டு விதமான சொத்துக்கள் இருப்பதாக வைஷ்ணவ மரபு கூறும். ஈரேழு பதினாறு லோகங்கள் என்று சொல்லப் படும் அதல, சுதல முதலிய பாதாள லோகங்கள், மத்திய லோகமான பூலோகம், சுவர்க்க லோகம், புவர்லோகம் முதலிய மேல் உலகங்கள் இவை எல்லாம் பிரகிருதி மண்டலத்தில் இருப்பவை - இவற்றை லீலா விபூதி - இறைவனின் விளையாட்டுக்கு ஆன சொத்து என்று கூறுவர். இந்த பிரகிருதி மண்டலத்துக்கு அப்பால் என்றும் நிலையாக இருக்கும் பரமபதமாகிய வைகுண்டத்தை நித்ய விபூதி - அழியாச் சொத்து என்று கூறுவர். இந்த இரண்டு சொத்துக்களையும் உபய விபூதி (உபய என்றால் இணையான இரண்டு என்று பொருள்) என்று சொல்வார்கள். இராமானுஜரை இந்த இரண்டு சொத்துக்களுக்கும் 'உடையவ'ராக நியமிக்கிறார் பெரிய பிராட்டியார்.

வில்லிபுத்தூரைப் பற்றிக் குறிப்பிடும் போது கோதை நாச்சியாரும் அவரது திருத்தகப்பனார் விஷ்ணு சித்தராகிய பெரியாழ்வாரும் 'தென்புதுவை' என்று குறிக்கிறார்கள். அதனையே இங்கு நான் சொன்னேன். புத்தூர் என்பதைப் புதுவை ஆக்கினார்கள். தற்காலத்தில் பாண்டிச்சேரியாகிய புதுச்சேரி புதுவை என்று குறிக்கப்படுகிறது.

குமரன் (Kumaran) said...

சிவமுருகன், சீதா கல்யாணமும் நடைபெற்றது பங்குனி உத்திரத்தில் தான் என்பது எனக்குப் புதிய செய்தி. மிக்க நன்றி.

தமிழ் மாதங்களின் பெயர் அந்த அந்த மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ அதன் படி அமைகிறது. முழு நிலவையே நம் முன்னோர் திங்கள் என்று சொல்லியிருப்பார்கள் போலிருக்கிறது. அதனால் தான் மார்கழித் திங்கள் என்னும் மார்கழி மாதத்தில் மார்க்கசீருஷ நட்சத்திரத்திலும், பங்குனி மாதத்தில் உத்திர பல்குனி நட்சத்திரத்திலும், சித்திரையில் சித்திரை நட்சத்திரத்திலும், வைகாசியில் விசாக நட்சத்திரத்திலும், கார்த்திகையில் கார்த்திகை நட்சத்திரத்திலும் பௌர்ணமி அமைகிறது. மற்ற மாதங்களுக்கும் அப்படியே. எனக்குத் தற்போது நினைவிற்கு வரவில்லை.

சித்ரா பௌர்ணமி அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்குவது தெரியும். கூடலழகர் வைகாசி விசாகத்தன்று ஆற்றில் இறங்குவது இது வரை தெரியாது. சொன்னதற்கு மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

ஆமாம் குறும்பன் சார். பங்குனி உத்திரம் முருகனுக்கு மிகவும் உகந்த நாள் தான். என் பெயர் குமரனாய் இருப்பதற்கும் அது தான் காரணம். ஆனால் அதே நேரத்தில் மற்ற கடவுளருக்கும் பங்குனி உத்திரம் உகந்த நாள் என்பதை நான் அறிந்த வரையில் இங்கே கூறுகிறேன். இந்தத் தொடரின் அடுத்தப் பதிவையும் இட்டுவிட்டேன். அதனையும் படித்துப் பாருங்கள்.

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி கார்த்திக் ஜெயந்த்.

குமரன் (Kumaran) said...

எஸ்.கே. சார். ஒவ்வொருவருக்கும் ஒரு பதிவு என்று போடவில்லை. அப்படி போட்டால் நீங்கள் சொல்வது போல் 5 அல்லது 6 பதிவுகள் போட வேண்டியிருக்கும். 3 பதிவுகள் மட்டும் போடுவதாக எண்ணம். அடுத்தப் பதிவைப் போட்டுவிட்டேன். படித்து உங்கள் கருத்தைக் கூறுங்கள்.

குமரன் (Kumaran) said...

சிபி. நாமக்கல்லிலும் பங்குனி உத்திரத்தில் தான் தேர்த் திருவிழாவா? நான் ஒரே ஒரு முறை நாமக்கல் வந்திருக்கிறேன். நாமக்கல் ஆஞ்சனேயரும், இலட்சுமி நரசிம்மரும், நாமகிரித் தாயாரும் என் கண்களிலேயே நிற்கிறார்கள். பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

ரங்கா - Ranga said...

குமரன்,
அருமையான பதிவு. இன்னும் சில விபரங்கள்.

இராமானுஜரை ஆதிசேஷன் அவதாரம் என்பர். லக்ஷ்மணரும் இதுபோன்று ஆதிசேஷன் அவதாரம்; ஆகையாலே தான் இராமானுஜர் லக்ஷ்மணமுனி என்றழைக்கப்படுகிறார்.

தட்சனின் வதத்திற்கு பிறகு தாட்சாயினி தேவி சிவபெருமானிடம் 'தட்சனின் பெண் என்ற உடலுடன் உங்களுடன் இருக்க விருப்பமில்லை; மறுபடி பூமியில் பிறந்து வேறுடலுடன் உங்களை அடைய விருப்பம்' என்று விண்ணப்பித்தார். அதே சமயத்தில் மக்கட்பேறு இல்லத பர்வதராஜனும் சிவனை நோக்கித் தொழுதான். சிவபெருமானும் இவ்விரு விருப்பங்களுக்கு இணங்க, பர்வத ராஜனின் மகளாக பார்வதி தேவி தோன்றினார். அப்போது சூரனின் தொல்லை தாங்க முடியாமல் முனிவர்கள் சிவபெருமானிடம் முறையிட வந்தார்கள். பார்வதிதேவியை மணந்து கொண்டு முருகப் பெருமான் தோன்றக் காரணமாய் இருந்ததால், சிவ பெருமான் மண நாளான பங்குனி உத்திரத்தை முருகனுக்கு உகந்தது என்று கூறுவர்.

ரங்கா.

சிவா said...

நல்ல தொடர். என்னை மாதிரி ஆளுங்களுக்கு அங்கே அங்கே கதை இருக்கு. நானும் பங்குனி உத்திரம் என்பது முருகனை கொண்ட பண்டிகை என்று மட்டுமே நினைத்திருந்தேன். விளக்கத்துக்கு நன்றி குமரன்.

Karthik Srinivasan said...

Back to form, Kumaran! கலக்குங்க!

வேதபுரி புதுச்சேரி (புதுவை) ஆனதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

புத்தூர் என்று பெயர் இருந்ததா?

குமரன் (Kumaran) said...

பாராட்டுக்களுக்கு நன்றி ரங்காண்ணா. மேல் விவரங்களுக்கும் மிக்க நன்றி. பார்வதி திருமணக்கதையை இரண்டாம் பகுதியில் கொடுத்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

இது சரியில்லை சிவா. கதை சொன்னா மட்டும் தான் வருவேன்னு சொன்னா எப்படி? :-) எப்படியோ கொஞ்சம் நாள் நம்ம பதிவுகளைப் படிக்காம இருந்த நீங்க மறுபடியும் படிக்கத் தொடங்கிட்டீங்க. அது போதும் எனக்கு. :-)

குமரன் (Kumaran) said...

கார்த்திக் (Kay Yes), நான் எப்பவும் Formல தான் இருக்கேன். நீங்க தான் இந்தப் பக்கம் வர்றதில்லை. மின்னஞ்சல் போட்டு அழைக்க வேண்டியிருக்கு. :-)

வேதபுரி, புதுச்சேரி, புதுவை எல்லாம் பாண்டிச்சேரியின் மறுபெயர்கள்.

புத்தூர் என்று நான் சொன்னது வில்லிபுத்தூரை.