Wednesday, March 08, 2006

156: ஈழத்தில் இசை வளர்ச்சி

நண்பர் யோக நடராஜன் என் வலைப்பதிவுகளை என்று படிக்கத் தொடங்கினார் என்பது எனக்குச் சரியாக நினைவில்லை. என் நட்சத்திர வாரத்தில் என்று நினைக்கிறேன். அன்று முதல் மின்னஞ்சலிலும் என்னுடன் பேசத் தொடங்கினார். அண்மையில் தான் எழுதி 'உன்னையே நீ அறிவாய் - பத்தாம் ஆண்டு நிறைவு மலரில்' வந்த 'ஈழத்தில் இசை வளர்ச்சியில் நாதஸ்வர தவில் கலைஞர்களின் பங்கு' என்ற தலைப்பில் உள்ள கட்டுரையை பி.டி.எஃப். கோப்பாக அனுப்பியிருந்தார். நல்ல கட்டுரையாக இருந்தது. அவரின் வேண்டுகோளின் படி அந்த கட்டுரையை இங்கு பதிக்கிறேன். படித்துப் பார்த்து உங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில் சொல்லுங்கள்.

நண்பர் யோக நடராஜனிடம் அவரைப் பற்றிய மேல் தகவல்களைக் கேட்டிருந்தேன். அவர் தன்னைப் பற்றிச் சொன்னவை:
பெயர்: யோக நடராஜன் (Johanadarajah)
தந்தையார் பெயர்: அருணாசலம்
ஊர்: யாழ்ப்பாணம், இலங்கை.
தற்போது ஃப்ரான்ஸ் நாட்டுக் குடிமகன். 22 வருடமாக பாரீஸ் நகரத்தில் வாசம். திருமணமானவர்.
வயது: 51.
படிப்பு: GCE a/l, + 2 க்கு சமமான படிப்பு.
இலங்கையில் Brown & Companyயில் கணக்கராக வேலை செய்தார். தற்போது கடந்த 18 வருடமாக Baker & McKenzie என்ற பன்னாட்டு சட்ட நிறுவனத்தில் Mail Serviceல் வேலை பார்க்கிறார்.

அவருடைய கட்டுரையை இங்கே பார்க்கலாம்

32 comments:

Anonymous said...

Good essay, but too long.

செல்வன் said...

கரகாட்டம்,வில்லுபாட்டு எல்லாம் தமிழகத்தில் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது.பூம் பூம் மாடு என ஒன்றை இனி எங்காவது பார்க்க முடியுமா என தெரியவில்லை.சினிமா வந்து அனைத்தையும் புரட்டி போட்டு விட்டது.

காலத்திற்கேற்ற படி சில மாற்றங்கள் செய்தால் இக்கலைகள் பிழைக்கலாம் என தோன்றுகிறது

Ram.K said...

இந்தக் கட்டுரை எனக்கு எஸ். இராமகிருஷ்ணனின் கதாவிலாசத்தில் வந்த ஒரு கட்டுரையை நினைவுபடுத்துகிறது.

தற்காலத்தில் கோயில்களில் கூட மின்சார வாத்தியம் அமைத்து நாதஸ்வரம் இசைப்பது - மனித இசை - நின்றுபோய்விட்டது.

கல்யாணம் தவிர, நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஸ்டீரியோ இசைக்கருவிதான் பயன்படுத்தப்படுகிறது.

ஈழத்தில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் இந்த இசை வளர்ச்சி என்பது மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

நல்ல கட்டுரை.

நன்றி.

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவு நண்பர் யோக நடராஜா அவர்களின் கட்டுரைப் பற்றிய பதிவு என்பதால் அவர் வந்து எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் பின்னூட்டம் போடட்டும். பின்னர் என் பதில் பின்னூட்டங்களைப் போடுகிறேன்.

வசந்தன்(Vasanthan) said...

ம். சின்ன வயசில் இந்துக் கோயில் திருவிழாக்களில் நாதஸ்வர, தவில் கச்சேரிகள் பார்ப்பது வழக்கம்.
தனியொரு மதத்துக்கு என்றிருந்த இவ்விரு இசைக்கருவிகளும் தமிழரின் இசைவடிவங்களாகப் பொதுமைப்படுத்தப்பட்டது பெரும்பாலும் தொன்னூறுகளின் தொடக்கத்தில்தான் என்று நினைக்கிறேன். யாழ்.திருமறைக்கலாமன்றம் இதற்குரிய முக்கிய பங்காளி.
பின் யாழ்ப்பாண இடப்பெயர்வின் பின் நாதஸ்வர, தவில் இசை வளர்ந்ததாகச் சொல்ல முடியாவிட்டாலும், மத அடையாளங்களிலிருந்து பெருமளவு விடுபட்டுவிட்டதென்றே தோன்றுகிறது.
இன்று பிரபல்யமான சில இந்துக்கோயில்களை விடுத்து மற்றவற்றிலெல்லாம் ஒலிநாடாக்களைத்தான் ஒலிக்க விடுகிறார்கள்.
இதற்கு மக்களின் பொருளாதார, யுத்த சூழ்நிலைகள் முக்கியமானவை.
************************
ஏனைய கலைகள் பற்றிய செல்வனின் ஆதங்கம் முக்கியமானது. கூத்து பற்றி எழுதிய இங்கே ஒருபதிவும் இங்கே இன்னொரு பதிவும் எழுதியிருக்கிறேன்.

rnateshan. said...

வித்தியாசமான முயற்சி குமரன்!
இனி யோக நடராஜ்!!
தாங்கள் இப்போதும் வாசிக்கிறீர்களா!!எக்காரணத்தை மட்டும் வாசிப்பதை நிறுத்திவிடவேண்டாம்!!
இது மங்கல வாத்தியம் மங்களத்தை உண்டாக்கும்!
தெய்வ சன்னதியில் வாசிக்க பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்!ஆனால் அதை பலர் உணர்வதில்லை!!
திருமணத்தில் மாங்கல்ய தாரணம் முடிந்தவுடன் ஆபோகி வாசிக்கப்படும்!!
ஆஹா என்ன இன்பம்!!
எப்போது சென்றாலும்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே
இன்பத்தில் ஆடுது என் மனமே
என்ற பாடலையும்
சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா
என்ற பாடலையும் வாசிக்க செய்வேன்.
எங்கே பல இடத்தில் contract தான்!!
மொத்தம் 18 பாட்டுதான்!19 பாடல் இனி அடுத்த நிகழ்ச்சியில் தான்!!
திருக்கடவூர் சன்னதியில்
மாப்பிள்ளை ஊர்வலத்தில்
சக்கனி ராஜா என்று வாசித்துக் கேட்ட காலத்தை நினைவு கூர்ந்தேன்!
தங்களுக்கு தனி மெயில் இடலாமா!
அப்ப்டி எனில் ஐ.டி தரவும்!
இறைவன் தங்களுக்கு என்றும் துணையிருப்பான்!!
கற்பக வல்லி நின் பொற்பதம் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா எனக்காக வாசியுங்களேன்!!

G.Ragavan said...

எந்த இசைக்கருவியும் சிறந்ததே. அதன் சிறப்பு அதனைச் சிறப்பாகப் பயன்படுத்துவதில் உள்ளது. அந்த வகையில் நாதசுரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்திவரும் யோகநடராஜனுக்கு வாழ்த்துகள். இசை என்பது இறைவனிடத்தில் அழைத்துச் செல்லும் சுகானுபாவம். அதைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் மிக நன்று.

வசந்தன்(Vasanthan) said...

//இது மங்கல வாத்தியம் மங்களத்தை உண்டாக்கும்!
தெய்வ சன்னதியில் வாசிக்க பூர்வ ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்!ஆனால் அதை பலர் உணர்வதில்லை!!//


இப்படிச் சொல்லிச் சொல்லியே எல்லாவற்றையும் அழித்துவிடுவீர்கள் போல?
"தெய்வக் கலை"க்கே இப்படியென்றால் மிச்சக் கலைகளுக்கு?
மக்கள் கலையாக இல்லாதவை இருந்தென்ன செத்தென்ன?

குமரன் (Kumaran) said...

அனானிமஸ் அண்ணா. நல்ல கட்டுரைகள் எல்லாமே கொஞ்சம் நீளம் அதிகமாய்த் தான் இருக்கும். :-) இந்த வார நட்சத்திரம் ஸ்ருசலின் பதிவுகளைப் படித்துப் பாருங்கள். :-) பின்னர் யோக நடராஜாவின் இந்தக் கட்டுரை நீளம் என்று சொல்ல மாட்டீர்கள். :-)

குமரன் (Kumaran) said...

செல்வனுக்கு யோகன் கொடுத்த மறுமொழி:

செல்வன். கருத்துக்கு முதல் நன்றி.

என்னையும் அடியனாக்கி இருவினை நீக்கியாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதபங்கயங்கள் போற்றி!

என்னையும் உங்கள் குழாமுள் சேர்த்த உங்களுக்கு நன்றி!

காலத்துக்கேற்றபடி மாற்ற இது என்ன கால் சட்டையா? ஐயா, பழங்கலைகளை அப்படியே பேணுங்கள். புதுக்கலைகளை இன்னும் தேடுங்கள். இதுவே எங்கள் வேண்டுகோள்

யோகன்.

குமரன் (Kumaran) said...

பச்சோந்தி (இராமபிரசாத்)க்கு யோகன் கொடுத்த மறுமொழி:

கருத்துக்கு முதல் நன்றி. நீங்கள் குறிப்பிட்ட புத்தகம் படிக்கக் கிடைக்கவில்லை. முயல்கிறேன். இக்கலையைப் பேணும்போது இக்கலைக் குடும்பமே இக்கலையோடு உடன் வாழுது. ஆயிரம் கருவிகள் வந்தாலும் கலைஞனும் இரசிகனும் ஒருங்கே சந்தித்து பெறும் சுகானுபவத்திற்கு நிகரிலை. இதைத் தவிர்ப்பதால் நட்டம் நமக்கே! பாரதி நம்மைப் பார்த்துத்தான் அன்றே சொன்னாரே! 'கண் விற்றுச் சித்திரம் வாங்கும் கூட்டம்'.

யோகன்
பாரிஸ்

குமரன் (Kumaran) said...

வசந்தன் அவர்களின் பதிவுகளைப் படித்துவிட்டு பின்னர் மறுமொழி தருவதாக யோகன் சொல்லியிருக்கிறார். மற்றவர்களின் கருத்துக்கு அவரின் மறுமொழி இனிமேல் வரும். கட்டுரையைப் படித்துக் கருத்து சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி.

குமரன் (Kumaran) said...

அன்புடன் திரு.நடேசன் அவர்கட்கு!

தங்கள் பின்னூட்டத்திற்கு,நன்றி. முதற்கண் யான் தெரிவிக்கவிரும்புவது, நான் ஓர் இசைக்கலைஞன் அல்ல!!நாதஸ்வரக்கலைக் குடும்பத்தவனுமில்லை!!!-வெறும் இசை இரசிகனே!!!!. இசைக்கலைஞனாகவில்லையெனும் தீராக்கவலை எனக்கு இன்றுமுண்டு.எனினும் இசையை நன்கு இரசிக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை!!.அது தெரிந்தால் உங்களுக்கு வாசித்துக் காட்டுவதற்குத் தடையில்லை .நீங்கள் குறிப்பிட்ட "சக்கினிராஜ- கரகரப்பிரியா" காரைக்குருச்சியாருடைய ஒலிநாடா வாங்கிக் கேளுங்கள்.தெவிட்டாது.பாரிசில் இருப்பதால் நல்லதொரு கச்சேரி கேட்டுப் பலவருடங்களாகிவிட்டன.நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்; சுடச் சுடக் கச்சேரி கேட்பீர்கள்.நம்மிசையை கேட்டுப் பேற்றி!; வாழவையுங்கள்.என் மின்னஞ்சல் தருகிறேன். விரும்பின் தொடர்பு கொள்ளவும்.

நன்றி

யோகன்

பாரிஸ்

குமரன் (Kumaran) said...

அன்பு இராகவனுக்கு!
தங்கள்,பின்னூட்டம் பார்த்தேன். நீங்களும், திரு.நடேசன் அவர்களும்,என்னை இசைக்கலைஞராக கருதுமளவுக்கு, என் எழுத்து தெளிவுபடுத்தவில்லையோ,எனும் ஐயம் எனக்கு வந்துள்ளது. நான் வெறும் இரசிகன். இசையைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது, இசைத்தட்டைக் கேட்கும் போது மனதை வருடினால், என்ன? இராகம் என அறிந்து பதிந்து வைப்பேன்.இசையேன்றில்லை; எக்கலையும்;அர்ப்பணிப்போடு செய்யும் போது,அது உயர்வடைகிறதென்பதே ,என் கருத்து,நீங்கள் கூட இவ்விளவயதில்,நல்லெழுத்துப் பணி செய்கிறீர்கள். அது கூட தெய்வீகமே!;உங்கள் பக்கமொன்றில் பார்த்தேன்.சொற்பொழிவும் உங்களால் முடியுமென,தொடரவும்.
நன்றி
யோகன்
பாரிஸ்

யோகன், பாரிஸ் said...

அன்புடன் வசந்தனுக்கு!

பின்னூட்டம் படித்தேன், நீங்கள் ஈழத்தவர் என்பதைப் புரிந்தேன். தங்கள் கருத்தில் 'தனியொரு மதத்திற்கு என்றிருந்த இவ்விரு இசைக்கருவிகளும், தமிழர்களின் இசைவடிவங்களாகப் பொதுமைப்படுத்தப்பட்டது' - என்பதை நான் ஏற்கேன். இந்துக்களாகவே இருந்த தமிழர்களில் சிலர், ஐரோப்பிய அரேபிய வாணிபத்தில் வந்த - கிருஸ்துவத்தையும், இஸ்லாமையும் ஏற்றுக் கொண்டு மதம் மாறிய பொழுது, இக்கலைகளைச் 'சாத்தான்' எனத் தவிர்த்தனர். அதற்கு அச்சமய மதகுருக்களும், மிகத்தூபம் போட்டனரென்பதே வரலாறு!
இவற்றில் மாற்றமேற்படுத்த முற்பட்டவர்களில் யாழ் திருமறைக் கலா மன்றத்தினர், தமிழாராச்சி மகாநாடு - ஆரம்ப கர்த்தா தவத்திரு தனிநாயகம் அடிகள், தென்னிந்தியாவில் திருச்சி கலைக்காவேரி...யை பிரதானப் படுத்தலாம். இது கூட நீங்கள் குறிப்பிடுவது போல் 1990ல் நடந்த மாற்றமல்ல. 1960ல் தமிழரசுக் கட்சியின் காலத்தில் அமரர் சேவியர் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலத்தில் ஏற்படத் தொடங்கிய மாற்றம்...!

'யாழ்பாண இடப்பெயர்வின் பின் நாதசுரக்கலை வளரவில்லை' என்பது போல் கூறியுள்ளீர்கள்... அக்கலை வாழ்கிறது. அதற்கு உதாரணம் அக்கலைஞர்களின் பிள்ளைகள்...தொடர்ந்தும் இன்னும் அங்கிருந்தே இசைச்சேவை செய்வதை, அவர்தம் உறவினர்கள் மூலம் கேட்டறிந்தேன். அத்துடன் 'மத அடையாளம் விடுபடவில்லை' ... அதற்கு மத அடையாளம் கொடுத்தது தவறு என்ற கருத்தில் இருந்து, கொடுத்தவர்கள் விடுபட்டதென்பதே... உண்மை., நீங்களும் இதை நன்றாக உணர்வீர்கள்.

மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல், பொருளாதாரம், யுத்த சூழல்... சில ஆலயங்கள் தவிர்ந்த, ஏனையவற்றில் இக்கலைஞர்களை வைத்து இசைச் சேவை செய்ய முடியாதுள்ளதென்பதனை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நாளை... நிலமை சுமூகமடைந்தால், அந்த நிலை மாறும், என்பதில் எனக்கு மாறாத நம்பிக்கையுண்டு. ஏனெனில் ஈழத்தமிழ் மக்கள்... உலகம் பூராவும் சென்று, எங்கள் கலை கலாச்சாரத்தைப் பேணவேண்டுமெனும் மனநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். ...அதனால் அது நடக்கும்...அத்துடன் விடுதலைப் புலிகளும் பழங்கலைகளில் அதீத ஈடுபாடு காட்டுவது கண்கூடு!

கூத்துப்பற்றிய உங்கள் கூற்று உண்மை. அதைவிட உண்மை கரகாட்டம், வில்லுப்பாட்டு. எனினும் தொலைக்காட்சி வருகைக்குப் பின், இவை சற்றுத் 'துளிர்' விடுவதுபோல் உள்ளது. இட்டு நிரப்பவாவது... இவற்றை நாடத் துவங்கிவிட்டார்கள்....கால ஓட்டத்தில் மாறுமென நம்புவோம்.

கூத்து, நாடகம், வில்லுப்பாட்டு... போன்ற கலைகள்... உச்சத்தில் இருந்த காலத்தில்... திரைப்படமில்லை... இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் வீடுவிட்டு வெளியே சென்றால், மீண்டும் வீடு திரும்புவோமா என்ற அச்ச உணர்வு யாவருக்குமே இன்று உலகில் உண்டு. வீட்டுக்குள்ளேயே, 'திரைப்படம்' வந்தும் விட்டது. எனினும் அரசும் கலையார்வம் மிக்கோரும், பழங்கலை பேணுவோரும் ஒன்று சேர்ந்து இவற்றை மீளக் கொணரலாம். யார் பூனைக்கு மணி கட்டுவது? ஆட்சிக் குதிரையைப் பிடித்துப் பிள்ளைக்குக் கொடுப்பதிலேயே ஆட்சியாளர் காலம் கழிகிறது. இதைச் சரிசெய்ய நம் நாடுகளுக்குச் சர்வாதிகாரி வேண்டும். விருப்பமா?

80ல் அழிந்துவிடுமோ என்றஞ்சிய கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் இப்போ உலக அரங்குகளில் அமோகமாக இருக்கிறது. அந்த நிலை நம் பழங்கலைக்கு வரும்... உங்களைப் போன்றோர் அது பற்றிச் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்களே! அது தான் ஊட்டமும்...ஆரம்பமும். நம்பிக்கையே வாழ்க்கை!

அடுத்து 'தெய்வம் என்றால் அது தெய்வம், வெறும் சிலையென்றால் அது சிலை தான்'... பார்ப்பவர் பக்குவம் பொறுத்த விடயம்... ஆழமாக இறங்க விரும்பவில்லை... ஆனால் 'தெய்வீகக்கலை' என்பதைத் தெய்வத்தின் கலை, தெய்வத்திற்கான கலை என்று தவறாகக் கருதிவிட்டீர்கள்...அவர் சொல்ல முற்பட்டது, கலையின் சிறப்பை! அதை மிகுதிப் படுத்திக் கூறிய 'சொல்'. எனவே யாவும் மனிதருக்கே! அவற்றில் தெய்வாம்சம் பொருந்தியவையும் உண்டு. 'நம் தாயார் முகத்தில் நாம் தெய்வத்தைக் காண்பது போல்' எனக் கொள்ளலாம். அது பார்வையைப் பொறுத்த விடயம்... பெரும்பான்மையினர் அப்படியே கருதுகிறார்கள்... நாமும் கருதுவோம்.

எல்லா 'இங்கர்சாலின்' பேரப்பிள்ளைகளும்... கடவுள் இல்லையெனக் கூறி, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என மாறி...இன்று கோவில் குடமுழுக்கு, மஞ்சள் துண்டு... எனப் போய்க் கொண்டிருக்கிறார்கள்... நானும் நீங்களும் எம்மாத்திரம். அல்லாவோ, ஜேசுவோ, அரியோ, அயனோ... மற்றும் யாவும் மனிதனின் மன அமைதிக்கே! அவை கூறிய நல்லவற்றைக் கொள்வோம்...

நன்றி.

அன்புடன்,
யோகன்
பாரிஸ்.

நாமக்கல் சிபி said...

குமரன்,
அருமையான கட்டுரை. இன்றுதான் படித்தேன். உள்ளூர் விஷய்ங்களுக்கு உள்ளூரில் அவ்வளவு கவனிப்பு இருக்காது (எல்லா விஷயங்களிலும்). அது போல் தான் இந்த இனிய த்வில் மற்றும் நாதஸ்வரக் கலையும் போல.
தென்னிந்தியாவில் குறிப்பாக தபிழ்நாட்டில் இப்போது இதற்கு குறிப்பிடும்படியான வளர்ச்சி இருக்கிறதா என்ன என்று ஆராய வேண்டும்.

அக்காலத்தில் இருந்தது போலல்லாமல் பெயர் சொல்லும்படியான வித்வான்கள் இக்காலத்தில் அதிகம் உள்ளனரா என்ன?

நாகரிக/கலாச்சார வளர்ச்சி என்று ஒருபுறம் திரை இசைக் கலைஞர்கள், ஆர்க்கேஸ்ட்ராக்கள் வந்துவிட்டபடியால் திருமண வீடுகளில் கூட முதல் நாள் மாலையில் திரை இசக் கச்சேரி தானே நடக்கிறது. முகூர்த்த நேரத்திலும், மற்றும் சில கட்டாய சடங்குகளிலும் மட்டுமே இத்தகைய மங்கள இசைக் கருவிகள் தேவை என்றாகிவிட்டது என்பதே கசப்பான உண்மை.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

Vetrivel said...

யோகன் அண்ணே,
உங்க கட்டுரையையும், தந்திட்டுருக்கற பதில்களையும் படிச்சேன். என்னாலான ஒருதுளி கண்ணீர சமர்ப்பிக்கிறன். உங்கள மாதிரி ஒருத்தர் ரெண்டு பேர் இருந்தாப் போதும். வர தலமுறைக்கு பயமில்ல.

வசந்தன்(Vasanthan) said...

யோகன்,
உங்கள் பின்னூட்டம் பார்த்தேன்.
அதிகம் சொல்ல ஏதுமில்லை. நான் என் வாழ்நாளிற் பார்த்த அனுபவத்தைக் கொண்டே 90களின் தொடக்கத்தில் என்று குறிப்பிட்டேன். முதன்முதல் எங்கள் ஊர் தேவாலயத்தில் நாதஸ்வரமும் தவிலும் இசைக்கப்பட்டது 90 இல்தான். அதற்கே எத்தனை பிடுங்குப்பாடு?

என் கோபம், தெய்வக்கலையென்று சிலவற்றையும் நீசக்கலையென்று வேறு சிலவற்றையும் ஒதுக்கிக் கதைப்பதுதான். (நீங்கள் அப்படிச் சொல்லவில்லையென்று இப்போது நினைக்கிறேன்) எடுத்துக்காட்டு 'பறை'. புலிகளின் கவின்கலை மன்றத்தில் பறை பயிற்றுவிக்கவென்று தொடங்கிய திட்டம் ஒருவரும் முன்வராததால் கைவிடப்பட்டது. ஆனால் அவர்களின் வீதிநாடகங்கள் மூலம் ஓரளவுக்கு பறை பன்முகப்படுத்தப்பட்டது. பறைபற்றிய ஒளிவிவரணங்கள் புலிகளின் ஒளிவீச்சில் இடம்பெற்றன. அவர்களின் விடுதலைப்பாடல்களிலும் பறை பரீட்சார்த்தாகச் சேர்க்கப்பட்டன. (தேசத்தின் புயல்கள் -2).
இருந்தும் அக்கருவி மீதான இழிவுமனப்பான்மை மக்களிடம் நீங்கவில்லையென்றே சொல்லலாம்.

johan-paris said...

அன்புடன் சிபிக்கு!
தங்கள் பின்னூட்டம் கண்டேன். குமரனுக்கு, இக்கட்டுரையை அனுப்பி ,நன்றெனில் அவர் தளத்திலே
இடும்படி கூறினேன். இட்டநாள் முதல் வரும் பின்னூடங்களில், இக்கலையின் இன்றைய நிலை பற்றிய
ஆதங்கம், அனைவர் பின்னூட்டத்திலும்; தொனித்தது. ஏன்? எப்படி? எதற்காக? என வினா எழுப்புகிறார்கள். இக்கலையை நேசிப்பவன் என்ற வகையில்; அதுவே பேரானந்தத்தைத் தந்தது.இந்த வலைப்பதிவுகளில் உலாவரும், சிறுதொகையினரில்; பெருந்தொகையினர், உணர்கிறார்கள். இக்கலை சிரமதிசையிலும் வாழ்வதற்கு ,நாம் தான் மனம் வைக்கவேண்டும்.குறைந்தது நமது வீட்டு வைபவங்களுக்காவது, இவற்றை ஒழுங்கு செய்யவேண்டும். செய்வோமா..?
தங்கள் பக்கங்கள் எதுவும் இதுவரை நான் படிக்கவில்லை. படித்துப் பின்னூட்டுவேன்.
உங்களுக்கு திருமணமாகவில்லை எனில், அதற்கு குறைந்தது 5 கூட்டம் ஒழுங்கு செய்து, எனக்கு அழைப்பும் வைய்யுங்கள். கட்டாயம் வருவேன்.நல்ல கல்யாணக் கச்சேரி கேட்டுப் பல வருடமாச்சு!!!
யோகன்
பாரிஸ்

கானா பிரபா said...

வணக்கம் யோகன், மற்றும் குமரன்

தங்களின் இப்பதிவை நான் நடாத்தும் " முற்றத்து மல்லிகை" என்ற வானொலி நிகழ்ச்சியில் ஒருபகுதிரைக் கொடுத்திருந்தேன். நல்லதொரு கட்டுரை, எமது உணர்வோடும், பாரம்பரியத்தோடும் ஒன்றிவிட்ட இக்கலையின் நிலை பற்றிய அழகான பார்வை இது.

வாழ்த்துக்கள்.

கானா பிரபா

johan-paris said...

அன்புடன் சிபிக்கு!
தங்கள் பின்னூட்டம் கண்டேன். குமரனுக்கு, இக்கட்டுரையை அனுப்பி ,நன்றெனில் அவர் தளத்திலே
இடும்படி கூறினேன். இட்டநாள் முதல் வரும் பின்னூடங்களில், இக்கலையின் இன்றைய நிலை பற்றிய
ஆதங்கம், அனைவர் பின்னூட்டத்திலும்; தொனித்தது. ஏன்? எப்படி? எதற்காக? என வினா எழுப்புகிறார்கள். இக்கலையை நேசிப்பவன் என்ற வகையில்; அதுவே பேரானந்தத்தைத் தந்தது.இந்த வலைப்பதிவுகளில் உலாவரும், சிறுதொகையினரில்; பெருந்தொகையினர், உணர்கிறார்கள். இக்கலை சிரமதிசையிலும் வாழ்வதற்கு ,நாம் தான் மனம் வைக்கவேண்டும்.குறைந்தது நமது வீட்டு வைபவங்களுக்காவது, இவற்றை ஒழுங்கு செய்யவேண்டும். செய்வோமா..?
தங்கள் பக்கங்கள் எதுவும் இதுவரை நான் படிக்கவில்லை. படித்துப் பின்னூட்டுவேன்.
உங்களுக்கு திருமணமாகவில்லை எனில், அதற்கு குறைந்தது 5 கூட்டம் ஒழுங்கு செய்து, எனக்கு அழைப்பும் வைய்யுங்கள். கட்டாயம் வருவேன்.நல்ல கல்யாணக் கச்சேரி கேட்டுப் பல வருடமாச்சு!!!
யோகன்
பாரிஸ்

johan-paris said...

அன்புமிக்க சகோதரர் வெற்றிவேலுக்கு!
"ஆவுரித்துத் தின்றுளலும் புலையரேனும்;கங்கைவார் சடைக்கரத்தார்க் அன்பராயின்; கண்டீர் நாம் வணங்கும் கடவுள் அவரே!- நாவுக்கரசர் அருள் வாக்கு. வாசித்து பதிலிட்டு உற்சாகப்படுத்திய
இசை அன்பர்களாகிய நீங்கள் எல்லோரும், என் சகோதரர்களே! எம் மொழி; இசை; கலை; வாழும் என்ற என் நம்பிக்கைக்கு, நீங்கள் எல்லோரும் உரமிட்டுள்ளீர்கள்.
நன்றிகள் பல!
யோகன்
பாரிஸ்

Anonymous said...

அன்பு யோகன்,
வணக்கம்.
தங்களின் "இசையில் நாதசுரம்" உண்மையில் ஆக்கமாகவிருப்பினும் என்னைப் பொருத்தவரை ஒரு தலையாய ஆய்வுக் கட்டுரை.
நல்ல இயல்பான தமிழைப் படிக்கவே மனம் குளிர்ந்துபோனேன். கோர்வையாக இட்டுச் செல்லும் பாங்கு எனைக் கவர்ந்தது.
தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே.
அன்பு,
ஞானவெட்டியான்

மலைநாடான் said...

அன்பு யோகன்!
உங்கள் கட்டுரை உண்மையில் எதிர்காலத்தில் மிகவும் பயன்தரக்கூடிய ஒரு ஆவனம்.
இது குறித்து மேலும் கருததுப்பரிமாற ஆவல்.முயல்வேன். உங்கள் எழுத்துப்பணி தொடர வாழ்த்துக்கள். மேலும் கானா.பிரபாவின் பதிவிற்கு எழுதிய பின்னூட்டத்தில், மகாகவியின் கவிதைப்பாடல்கள் எங்கு பெறமுடியுமெனக் கேட்டிருந்தீர்கள். என்னிடம் ஒரு தொகுப்பு இருந்தது. ஆயினும் தற்போது காணவில்லை. இரவல் வாங்கிய நண்பர் யாரோ திருப்பித் தரவில்லை என்று நினைக்கின்றேன். லண்டனில் வாழும் பத்மநாபஐயரைத் தொடர்பு கொண்டால்கிடைக்கலாம். முயற்ச்சிக்கவும். நானும் முயற்சிக்கின்றேன்.
நன்றி!

மலைநாடான் said...

குமரன்!
யோகனின் கட்டுரையை உங்கள் பதிவினூடாகத்தந்தமைக்கு நன்றி். தமிழ்மணத்திற்கு நான் புதியவன். அதனால் உங்கள் ஒரு பதிவும், ராகவனின் ஒரு பதிவும், மட்டுமே வாசித்துள்ளேன். உங்களிருவரினதும் அழகான தமிழால் மிகவும் கவரப்பட்டுள்ளேன்.கிடைக்கும் நேரத்தில் மற்றைய பதிவுகளையும் வாசிக்க முயற்சிக்கின்றேன். உங்கள் தமிழை ரசிப்பதற்குக் காரணமாய தமிழ்மணத்தை என்ன சொல்லிப்பாராட்டுவது.
மீண்டும் சந்திப்போம்.

நாமக்கல் சிபி said...

//எனக்கு அழைப்பும் வைய்யுங்கள். கட்டாயம் வருவேன்.நல்ல கல்யாணக் கச்சேரி கேட்டுப் பல வருடமாச்சு!!!//

கட்டாயம் அழைப்பு வைப்பேன் யோகன் அவர்களே! அறுபதாம் கல்யாணத்திற்கு. சமீபத்தில்தான் ஐந்தாவது மணநாள் கண்டேன்.


காண்க

எனக்குக் கூட இது போன்ற விஸேஷங்களில் நாதஸ்வர வாசிப்பை அருகேயே அமர்ந்து ரசிப்பது மிகவும் பிடிக்கும். (ராகம், தாளம் போன்ற விஷயங்கள் எனக்கு தெரியாதபோதும் அந்த இசையில் மனதை மயக்கும் ஓர் சங்கதி இருக்கிறது) தவிர வாசிப்போருக்கும் ரசிப்பவர்கள் அருகிலே அமர்ந்திருப்பது ஓர் மகிழ்ச்சியைக் கொடுக்கும் அல்லவா.

(இதன் நகல்:
http://commentsofshibi.blogspot.com/2006/02/blog-post.html)

johan-paris said...

அன்பு மலைநாடானுக்கு!
பாராட்டுப் பின்னூட்டுக்கு நன்றி!
இது விடயமாகப் பேசவிரும்பின் தாராளமாகப் பேசலாம்.தங்கள் தளத்திலுள்ள விபரத்தின் படி; என்
இரசனை உங்களுடன் மிக ஒத்ததாக உள்ளது.தாங்கள் தற்போது எங்கே வாழ்கிறீர்கள். மகாகவி கவிதைக்கு; லண்டன் பத்மநாத ஐயரை தொடர்பு கொள்வது எப்படி? என்று தெரியவில்லை. எனினும் முயர்ச்சிப்பேன்.
யோகன்
பாரிஸ்

குமரன் (Kumaran) said...

மலை நாடான் அவர்களே. தொடர்ந்து எனது, இராகவனது பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். இன்னும் நிறைய பேர் அழகு தமிழில் வலைப்பதிக்கிறார்கள். தமிழ்மணத்தைத் தொடர்ந்து பாருங்கள். இன்னும் நிறைய பதிவுகளைப் பார்ப்பீர்கள். தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

johan -paris said...

அன்புடன் கானா பிரபாவுக்கு!
தங்கள்,பின்னூட்டத்திற்கும்; கட்டுரையை "முற்றத்து மல்லிகை"யில் ஒலியேற்றியதற்கும் நன்றி! உங்களைப் போல் நம் கலைகளை நேசிக்கும்;பலர் இக்கட்டுரையை வாசித்து மகிழ்ந்து,பின்னூட்டியுள்ளார்கள்.
இதை இணையத் தளத்தில் ,உலாவ வைத்த,அன்பர் குமரனுக்கு ,நான் மிக்க கடமைப்பாடுடையவன்.
நன்றி
யோகன்
பாரிஸ்

K.S.Balachandran said...

அன்பு யோகன்,
உங்கள் கட்டுரையை வாசித்ததோடு மட்டுமல்லாமல், கனடாமுருகதாஸ் சென்னையில் நடத்திய "நாதஸ்வர இசை விழா" பற்றிய தங்கள் குறிப்பின் தொடர்ச்சியாக பிபிசியில் இருந்த ஒலிக்கோர்வையில் சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் தலைவர் நடராஜன் ஆற்றிய உரையில் எங்கள் லயஞான குபேர பூபதி தவில் தட்சணாமூர்த்தி பற்றி குறிப்பிட்டவேளையில் நடுநிசி கடந்த நேரத்திலும் கரகோசம் எழுப்பி கண்ணீர் சிந்தினேன்.

மிகவும் பயனுள்ள அருமையான கட்டுரை. உங்களை விட நான் 12 வயது மூத்தவன். பொதுவாகவே எங்கள் கலையை, கலைஞர்களை நேசிப்பதில் உங்கள் உணர்வில் சங்கமித்துக் கொள்கிறேன்.

இசை இன்பம் வலைத்தளத்தில் குறிப்பிட்டது போலவே என் சம்பந்தி (கத்தோலிக்க கிறிஸ்தவர்) என் மகனின் திருமணத்தின்போது சென்ற ஆண்டு நாதஸ்வரக் கச்சேரி இருக்கவேண்டுமென்று மனதார விரும்பிக்கேட்டுக் கொள்ள் நான் ஒழுங்கு செய்தேன். மிகச் சிறப்பாக நடந்தது.
நாதஸ்வரக் கலை மதங்களின் எல்லையை தற்போது கடந்து விட்டது.

நான் இங்கு நடித்து, திரைக்கதை எழுதிய "உயிரே உயிரே" என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் என் மகனுக்கு சொல்வதாக - இணுவில் வீரமணி ஐயா, தவில்மேதை தட்சணாமூர்த்தி பற்றி சிறப்பாக குறிப்பிட்டு ஆனந்தமடைந்தேன்.

உங்கள் ஆர்வம் பலருக்கு உற்சாகமளிக்கட்டும். வாழ்த்துகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//நடுநிசி கடந்த நேரத்திலும் கரகோசம் எழுப்பி கண்ணீர் சிந்தினேன்.//

அண்ணா!
இப்படியான நிலை எனக்குப் பலதடவை ஏற்பட்டுள்ளது.பலவகையான மனவுளைச்சலிலும் அமைதியைத் தருவது இந்த இசை; தங்களைப் போன்றோர் தரும் நகைச்சுவை எனில் மிகையில்லை.

//மிகவும் பயனுள்ள அருமையான கட்டுரை. உங்களை விட நான் 12 வயது மூத்தவன். பொதுவாகவே எங்கள் கலையை, கலைஞர்களை நேசிப்பதில் உங்கள் உணர்வில் சங்கமித்துக் கொள்கிறேன்.//

என்னிலும் 50 வருடங்கள் மூத்த என் மாமனாருடன் ஒன்றாக இருந்து; வானொலியில் கச்சேரி ரசித்துள்ளேன்.அதனால் 12 வயது அதிகமான உங்கள் ரசனையுடன் என் ரசனை ஒத்துப் போவதில் ஆச்சரியமில்லை.
பல வேலைப் பழுவுள்ளும்; நேரமொதுக்கி வாசித்து உற்சாக வார்த்தைகள் அள்ளித் தந்த உங்களுக்கு
என் மிக்க நன்றி!!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது இலங்கையில் இருக்கிறம்";சஞ்சிகை ஆசிரியர் குழு அங்கத்தவர் இளையதம்பி தயானந்தா அவர்களிடம் இருந்து வந்த மின்னஞ்சலில் இப்பதிவு பற்றியது.

//பாரிஸ் யோகனுக்கு அன்பு வணக்கங்கள், இன்று தவில் தட்சணாமூர்த்தி பற்றி ஆக்கம் ஒன்றை எழுத வலையில் தேடியபோது உங்கள் 'உனையே நீ அறிவாய்' இல் எழுதப்பட்ட உங்கள் 'ஈழத்தில் இசை வளர்ச்சியில் நாதஸ்வர தவில் கலைஞர்களின் பங்கு' பார்க்கக் கிடைத்தது நன்றாய் இருந்தது.
அன்புடன்,
இளையதம்பி தயானந்தா
பாராட்டு மகிழ்வைத் தந்தது. நன்றி!

//