Saturday, February 25, 2006

153: சிவராத்திரி


இன்று சிவராத்திரி என்று நண்பர் இராகவன் இரண்டு நாட்களுக்கு முன்னால் சொன்னார். அப்போது தான் நண்பர் யோகநடராஜன் மின்னஞ்சலில் அனுப்பியிருந்த தஞ்சைப் பெருவுடையார் திருவுருவப் படங்களைப் பார்த்திருந்தேன். இராகவன் சிவராத்திரியை நினைவுறுத்தியதும் பெருவுடையாரின் திருவுருவப் படங்களைப் போட்டு ஒரு சிறப்புப் பதிவு போடலாம் என்று தோன்றியது.

பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான் மறையும்
மாவேறு சோதியும் வானவரும் தானறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

தாமரை மலரில் வாழும் தலைவனாம் பிரம்மனும், புரந்தரனான இந்திரனும், அழகு மிகுந்து பிரம்மனின் நாவில் ஏறி வாழும் செல்வியாம் கலைமகளும், நாரணனான மாயவனும், நான்மறைகளும், பெருமை மிகுந்த சோதி ரூபனான சூரியனும், மற்றைய வானவர்களும், இவர்கள் எல்லாரும் அறியாத சோதி மிகுந்த சிறந்த திருவடிகளுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

நானார் என் உள்ளமார் ஞானங்கள் ஆர் என்னை யார் அறிவார்
வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல் மதிமயங்கி
ஊனார் உடை தலையில் உண்பலி தேர் அம்பலவன்
தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ!

வானவர் தலைவனான இறைவன் அவனது பேரருள் காரணமாய் மதிமயங்கி என்னை தன் அடிமையாகக் கொண்டிலனேல் நான் என்ன விதமாய் இருந்திருப்பேன்? என் உள்ளம் என்ன விதமாய் இருந்திருக்கும்? என் அறிவு என்ன விதமாய் இருந்திருக்கும்? என்னைப் பற்றி அறிந்தவர்கள் யார் இருக்கப் போகிறார்கள்? உண்பதற்காக பிரம்ம தேவனது உடைந்த மண்டை ஓட்டில் பிச்சை ஏற்கின்ற திருச்சிற்றம்பலத்தவனின் தேன் நிறைந்த திருவடித் தாமரைகளையே சென்று புகழ்வாய் கோத்தும்பீ!

கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப் பொன்னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ!

இறைவன் கண்களில் இரத்தம் கசிவதைக் கண்டு கண்ணப்பர் தன் இரு கண்களையும் பிடுங்கி அப்பினார். அப்படிப்பட்ட அன்பு என்னிடம் இல்லை என்பதை கண்ட பின்னும் என் தந்தையாகிய இறைவன், என்னை விடத் தாழ்ந்தவர்கள் இல்லையெனும் படி இருக்கும் என்னையும் தன் அடிமையாகக் கொண்டு அருளி, சிறந்த பணிகளைக் கொடுத்து என்னை அருகில் அழைத்துக் கொண்ட வானளவு கருணை கொண்ட தங்க பொடி போல் உடலெல்லாம் திருநீறு அணிந்த இறைவனுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனை
பேயெனதுள்ளப் பிழை பொறுக்கும் பெருமையனை
சீயேதும் இல்லாத செய்பணிகள் கொண்டருளும்
தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ!

நாய் போன்ற இழிந்த என்னை தன் திருவடிகளைப் பாடவைத்த தலைவனை, பேய் போன்ற எனது உள்ளப் பிழைகளை நான் நினைத்த தீய எண்ணங்களாகிய தவறுகளை பொறுக்கும் பெரும் குணம் உடையவனை, 'சீ' என்று இகழாது என் சிறு சிறு பணிகளையும் உவப்புடன் கொண்டு அருளும் தாயைப் போன்ற ஈசனின் புகழ்களையே சென்றூதாய் கோத்தும்பீ!

37 comments:

Samudra said...

இது வரை நான் பார்க்காத படங்கள்!

முதல் பாதியில் உள்ள மனிதர்களை Photospot பயன்படுத்தி நீக்கிவிட்டால் இன்னும் அருமை. :-)

செல்வன் said...

சிவராத்திரி என்று சொல்லி பதிவு மட்டும் போட்டால் போதுமா?உண்ணாவிரதம்,தூக்க முழிப்பு எல்லாம் கிடையாதா?:-)))

தஞ்சை பெருவுடையார் லிங்கம் இத்துணை பெரியதா?மிக அற்புதமாக இருக்கிறது.சரி..கோயில் கர்பகிரகத்தை புகைப்படம் எடுக்க அனுமதி கிடைக்காதே,எப்படி இந்த புகைப்படம் வந்தது?

ஞானவெட்டியான் said...

அன்பு குமரன்,
நன்று! நன்று!!

G.Ragavan said...

சிவராத்திரியும் வந்தது...குமரனின் திருப்பதிப்பும் வந்தது. அதுவும் திருவாசகம் கொண்டு. நல்ல வரிகள். நல்ல விளக்கங்கள். குமரனுக்கா சொல்லித்தர வேண்டும்.

இன்று காலை இரண்டு சிவாலயங்களுக்குச் சென்று வந்தாகி விட்டது. ஒன்று குகைக்குள் இருக்கும் சிவன் கோயில். பெங்களூரு காவிபுரத்தில் இருக்கிறது. மற்றொன்று தோண்டியெடுக்கப் பட்ட சிவன்கோயில். மல்லேஷ்வரத்தில் இருக்கிறது. விளையாட்டு மைதானமாக இருந்த இடத்தில் ஏதோ இடறி விழ...பார்த்தால் கோயில் கோபுரம். பிறகு தோண்டி எடுத்திருந்திருக்கிறார்கள். நந்தியின் வாயிலிருந்து எப்பொழுதும் நீர் சிவலிங்கத்தின் மேல் ஒழுகிக் கொண்டிருக்கும் வகையில் அமைந்த கோயில். அந்த மைதானத்தில் அக்குறிப்பிட்ட இடத்தில் மட்டும் சகதியாக இருக்கும். நானே பார்த்திருக்கிறேன்.

இத்தனைக்கும் சரியாக அந்த இடத்தைத் தவிர மற்ற இடங்களில் வீடுகள். அந்த இடம்...அரசாங்கம் விளையாட்டிற்கு என்று ஒதுக்கி வைத்திருந்த இடம். எப்படியோ தப்பித்திருக்கிறது. இன்று வெளி வந்து கோயிலாகி இருக்கிறது.

இரண்டு கோயில்களிலும் பிடிக்காமல் போன விஷயம்..அதன் பழமையான அழகை மறைத்து சிமிண்டுகளும் வண்ணப் பூச்சுகளும்...ம்ம்ம்ம்...எதனுடைய கையிலோ பூமாலை என்பார்கள்.

Merkondar said...

நான் தஞ்சை செல்லாமல் பிறயாக்கை பெரியோனை காண வைத்த குமரன் நீவிர் வாழ்க இன்று அவனது இரவு. ஏதாவது வேலை இருந்தாலோ அல்லது பிச்சனைகள் இருந்தாலோ சொல்லுவார்கள 'இன்று சிவ ராத்திரி' தான் என.

இராமநாதன் said...

என்ன செல்வன், இப்படிக் கேட்டுட்டீங்க.. நந்தி மட்டும் குறுக்க இல்லேன்னா, கோயிலுக்குள்ளேயே போக வேண்டாம். மெயின் ரோட்டிலிருந்தே பார்த்துடலாம். அவ்ளோஓஓ பெரிசு!

குமரன்,
சிவராத்திரியும் அதுவுமா நம்ம சிவனைப் பார்க்க கொடுத்திருக்கீங்க. ரொம்ப நன்றி.

Ram.K said...

திருவாசகப் பாடலை இளையராஜா இசையில் பாடுவதுபோல பாடியபடியே இப்பதிவைப் படித்தேன்.

நன்றாக இருக்கிறது.

சதயம் said...

படங்கள் அருமை!

பாடல்களும்...விளக்கமும் அருமை!...அருமை!

குமரன் (Kumaran) said...

சமுத்ரா. எனக்கு போட்டோ ஸ்பாட் பயன்படுத்தத் தெரியாது. அந்த மனிதர்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே. அவர்கள் இருப்பதால் தானே தஞ்சை பெருவுடையார் இவ்வளவு பெரிய திருவுருவம் உடையவர் என்று தெரிகிறது. :-)

இலவசக்கொத்தனார் said...

அருமையான படங்கள்.நன்றி குமரன்.

கோத்தும்பீ! -இப்படின்னா என்ன?

குமரன் (Kumaran) said...

செல்வன். உண்ணாவிரதம் இருக்கவில்லை. ஆனால் தூக்க முழுப்பு இருந்தது. இந்தப் பதிவு போடப்பட்ட நேரத்தைப் பாருங்கள். ஏறக்குறைய நள்ளிரவு. சன் தொலைக்காட்சியில் ஒரு பாடாவதி படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். :-) தூங்குவதற்கு 2 மணி ஆகிவிட்டது. :-)

ஆமாம். தஞ்சை பெருவுடையார் திருவுருவம் அவ்வளவு பெரியது தான். பெரிய பெரிய புத்தர் சிலைகளை இலங்கையிலும் மற்ற நாடுகளிலும் பார்த்துவிட்டு அருண்மொழி (இராஜ இராஜ சோழன்) அது போல் சிவபெருமானுக்கு மிகப் பெரிய லிங்கத் திருமேனி அமைத்து கோவில் கட்டவேண்டும் என்று விரும்பியதாகக் கல்கி பொன்னியின் செல்வனில் எழுதியிருக்கிறார். அது உண்மையா என்று தெரியாது. ஆனால் பொருத்தமாக இருக்கிறது.

நீங்கள் சொல்வது சரிதான். சாதாரணமாக கருவறையில் இருக்கும் மூலவரை புகைப்படம் பிடிக்க அனுமதியளிக்க மாட்டார்கள் தான். ஆனால் தஞ்சையில் அந்த விதி சற்றுத் தளர்த்தப் பட்டிருக்கும் போல் இருக்கிறது. இந்தப் படங்கள் தவிர பெருவுடையாரின் வேறு படங்களையும் பார்த்திருக்கிறேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி ஞானவெட்டியான் ஐயா.

குமரன் (Kumaran) said...

நன்றி இராகவன். சிவாலயங்களுக்கு மட்டும் தான் சென்று வந்தீர்களா? என்னை நினைத்துக் கொண்டீர்களா? ;-) மல்லேஸ்வரத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கோவிலும் இருக்கிறதல்லவா? சென்றீர்களா? உறவினர்கள் சிலர் மல்லேஸ்வரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நீங்கள் சொல்லும் விளையாட்டு மைதானக் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லையா? எடுத்திருந்தால் உங்கள் பதிவில் போடுங்கள். எதனுடைய கையிலோ பட்ட பூமாலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். :-)

குமரன் (Kumaran) said...

நன்றி என்னார் ஐயா. நீங்கள் சொல்வது போல் நானும் நிறைய முறை சொன்னது உண்டு. எப்போதாவது இன்றைக்கு வைகுண்ட ஏகாதசி தான் என்று கூட சொன்னதுண்டு. :-)

குமரன் (Kumaran) said...

என்ன இராமநாதன். ஐந்து ஆறு பதிவுகளா ஆளே காணாமப் போயிருந்தீங்க. உங்க ஊர்க்காரரோட புகைப்படத்தைப் போட்டவுடனே வந்துட்டீங்களா? :-)

நான் ஒரே ஒரு முறை தான் தஞ்சைக்கு வந்திருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் நந்தி தேவர் திருவுருவம் அவ்வளவு பெரியதாக இல்லாவிட்டால் தெருவில் இருந்த படியே இறைவரை தரிசிக்கலாம். பெருவுடையாருக்கு ஏற்ற பெரிய நந்தி வேண்டும் என்று பிற்காலத்தில் அந்த பெரிய நந்தி நிறுவப்பட்டது என்று படித்திருக்கிறேன். உண்மையா?

குமரன் (Kumaran) said...

ஆமாம் இராமபிரசாத் அண்ணா. இளையராஜா இசையில் வந்த பாடலின் வரிகள் தான் இவை. அவற்றை நேற்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதனால் சிவராத்திரிக்கு என்ன எழுதுவது என்று உட்கார்ந்தபோது இந்த பாடல்வரிகள் நினைவிற்கு வந்தன. பாராட்டுக்கு நன்றி.

குமரன் (Kumaran) said...

நன்றி சதயம்.

குமரன் (Kumaran) said...

நன்றி இலவசக் கொத்தனார். கோ என்றால் அரசன். தும்பி என்றால் உங்களுக்குத் தெரிந்திருக்கும், தும்பிப் பூச்சி - வண்டினத்தைச் சேர்ந்தது. கோத்தும்பிக்கு ஆங்கிலத்தில் என்று மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். நான் பட்டுப்பூச்சி என்று எண்ணுகிறேன். வேறு தும்பியினமாக இருக்கக் கூடும்.

மறை பொருள்: உலக விஷயங்களில் ஈடுபட்டு சிவனை வணங்காத மானிடரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேனுண்ணாமல்
நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தோறும் எப்போதும்
அனைந்தெலும்பும் உள்நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ!

பூவினில் உள்ள தினையளவு தேனை தேடித் தேடி உண்ணாமல் (உலகவிஷயங்களில் கிடைக்கும் சிறு சிறு இன்பங்களில் ஈடுபடாமல்) நினைக்கும் போதெல்லாம், காணும் போதெல்லாம், பேசும் போதெல்லாம், உடலில் உள்ள எலும்புகளும் உருகும்படி பேரின்பத் தேன் மழையைப் பொழுயும் குனிப்பினை (ஆடலினை, கூத்தினை) உடையவனை சென்றூதாய் கோத்தும்பீ!

இலவசக்கொத்தனார் said...

நன்றி அய்யா. கோத்தும்பியை முன்னிறுத்தியது, வித்தியாசமான ஒரு கற்பனை.

//கோத்தும்பிக்கு ஆங்கிலத்தில் என்று மொழி பெயர்ப்புச் செய்திருக்கிறார்கள். //

ஆங்கில வார்த்தை விடுபட்டுவிட்டது போலிருக்கே.

தும்பி என்றால் தெரியும். கோத்தும்பி என்றும் இப்படி ஒரு பாடலில் வந்தவுடன் வேறென்னவோ என்று நினைத்தேன். விளக்கத்திற்கு நன்றி.

மதுமிதா said...

ஓம் நமச்சிவாயா
சிவாய நம ஓம்

நன்றி குமரன்

காஞ்சி பிலிம்ஸ் said...

காட்டுமிராண்டிகளே வாழ்க உங்கள் சிவராத்திரி.

Child sacrificed in Uttar Pradesh village

Sunday, 26 February , 2006, 21:16

Ghaziabad: An eight-year-old boy was sacrificed allegedly by a woman and her two sons on the directive of a tantric in a village in Bulandshar district of Uttar Pradesh.


The body of Akash, with his throat slit and blood oozing, had been found in a field in Badha village, police said adding that his eyes were gouged out and his ears and nose chopped-off.

The child, who was the son of a labourer, had been "ritually sacrificed" on the instructions of a tantric allegedly by the mother and two sons in order to get rich, they said.

The woman and her two sons were arrested and a hunt has been launched for the tantric and his accomplice.

District magistrate Bulandshahr Neena Sharma has ordered an inquiry into the incident.

Enraged villagers on Sunday blocked the road and demanded that the three suspects be handed over to them for lynching. They demanded Rs 10 lakh as compensation to the family.

http://www.samachar.com/showurl.htm?rurl=http://headlines.sify.com/news/fullstory.php?id=14149542&headline=Child~sacrificed~in~UP~village

Karthik Jayanth said...

சிவராத்திரி அன்று சிவ தரிசனம்(படங்கள்) அருமை

ஓம் நமச்சிவாயா
சிவாய நம ஓம்

குமரன் (Kumaran) said...

ஆமாம் இலவசக் கொத்தனார். விட்டுப் போய்விட்டது. விடுபட்டது King Bee.

குமரன் (Kumaran) said...

நன்றி மதுமிதா அக்கா.

குமரன் (Kumaran) said...

காஞ்சி பிலிம்ஸ் என்ற பெயரில் அனாமத்துப் பின்னூட்டம் போட்டிருப்பவரே! நீங்கள் தந்துள்ள செய்தியில் உள்ள காட்டுமிராண்டித்தனத்திற்கும் சிவராத்திரிக்கும் என்ன சம்பந்தம்? ஒன்றும் புரியவில்லை. ஏன் எங்களைக் காட்டுமிராண்டிகள் என்கிறீர்கள்? அப்படி சொல்பவரும் ஏன் அனாமத்தாய் வந்து பின்னூட்டம் போடுகிறீர்கள்?

அன்பே சிவம் என்று இருப்பவர்கள் நாங்கள். எங்களுக்கும் இந்த காட்டுமிராண்டித் தனத்திற்கும் சம்பந்தம் இல்லை. முதலில் அதைப் புரிந்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் கருத்துக்களைக் கூற தைரியமாக உங்கள் உண்மைத் தோற்றத்துடன் வாருங்கள். அனாமத்தாய் வரவேண்டாம்.

முதலில் இதனை மட்டுறுத்தலில் நீக்கிவிடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் ஆபாசக் கருத்து எதுவும் இல்லாததால் அனுமதித்தேன்.

குமரன் (Kumaran) said...

நன்றி கார்த்திக். சிவ நாமத்தை பல முறை சொல்லுங்கள்.

சிவமுருகன் said...

குருவின் சந்நிதியில் சிவராத்திரி அனுஷ்டித்து வந்த எனக்கு சிவ தரிசனம் குமரனால்.

நன்றி குமரன்

johan -paris said...

Intha padathuku ivalavu mavusu ,irukumena nan ninikkavillai,ithai enaku oru unkal pol nanapar chennil irunthu anuppinar.onkalukup pidikkumee ena anuppineen. athi neengaloo thiruvasakath theekalanthu ellorukkum parimarivideerkal;
NAM PERRA INPAM ERUKA IVVAIYAGAM.
Mika elimaiyana vilakkangal.
Ungal pani thodaradum.
Johan-nanri

சிங். செயகுமார். said...

கால தாமதத்திற்கு வருந்துகிறேன். உண்ட கட்டி வாங்குற பழக்கம் உள்ள நமக்கு சிவராத்திரிக்கு தவறாம போய்டுவோம்.படங்களை பார்த்ததும் தஞ்சை ஞாபகங்கள் மனதில் ! நண்பரே குமரன்

G.Ragavan said...

// நன்றி இராகவன். சிவாலயங்களுக்கு மட்டும் தான் சென்று வந்தீர்களா? என்னை நினைத்துக் கொண்டீர்களா? ;-) //

குமரனை நினையாத நாளுண்டா...பொழுதுண்டா....நினையாதுண்டால் கதியுண்டா விதியுண்டா....

// மல்லேஸ்வரத்தில் ஹரே கிருஷ்ணா இயக்கத்தின் கோவிலும் இருக்கிறதல்லவா? சென்றீர்களா? //

இல்லை சென்றதில்லை. கேள்விப்பட்டதில்லை. அங்கே ஒரு நரசிம்மசுவாமி கோயில் இருக்கிறது. அங்கு சென்று வந்தேன்.

// உறவினர்கள் சிலர் மல்லேஸ்வரத்தில் இருக்கிறார்கள். அவர்கள் நீங்கள் சொல்லும் விளையாட்டு மைதானக் கோவிலுக்குச் சென்றிருக்கிறார்களா என்று கேட்க வேண்டும். //

நிச்சயம் சென்றிருப்பார்கள். கேட்டுப் பாருங்கள்.

// புகைப்படங்கள் எதுவும் எடுக்கவில்லையா? எடுத்திருந்தால் உங்கள் பதிவில் போடுங்கள். எதனுடைய கையிலோ பட்ட பூமாலை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். :-) //

இல்லை எடுக்கவில்லை. கூட்டத்தில் அதுவேறா! பெங்களூரு வாங்க. அப்ப காட்டுறேன்.

குமரன் (Kumaran) said...

குரு சந்நிதியில் சிவராத்திரி அனுஷ்டித்தீர்களா? எங்கு சிவகுமரன்?

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி ஜோகன் (யோக நடராஜன்)

குமரன் (Kumaran) said...

நானும் அப்படித் தான் செயகுமார். மதுரையில் எங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலுக்கு மதுரையில் இருந்த வரை தினமும் இரவு சென்றுவிடுவேன். வரும்போது மடப்பள்ளியில் இருந்து உண்டக் கட்டி எனக்காக ஒன்று எடுத்துவைத்துக் கொடுப்பார்கள். வீட்டில் கிண்டல் பண்ணுவார்கள். உண்டக் கட்டிப் பிரசாதம் மட்டும் கிடைக்காவிட்டால் நான் கோவிலுக்கே செல்லமாட்டேன் என்று. :-)

குமரன் (Kumaran) said...

பெங்களூரு வர அழைப்பு விடுத்தமைக்கு நன்றி இராகவன். நான் அங்கு வருவதற்குள் நீங்கள் எங்காவது புறப்பட்டுப் போய்விடுவீர்கள் என்று நினைக்கிறேன். :-)

rnateshan. said...

fantastic!!!thanks go to sri kumaran!

தி. ரா. ச.(T.R.C.) said...

நன்றி குமரன் சிவதரிசனம் தந்ததற்கு. நான் சிவராத்ரியன்று மயிலையில் உள்ள புராதன 7 சிவன் கோயில்களுக்கு(கபாலி,வாலீ,மல்லி,வெள்ளி.காரணி,விருபாக்ஷி&வட்டி ஈஸ்வரன்கள்)சென்று வந்தேன்.ஜிரா நான் பெங்களூர் வந்த போது எனக்குமட்டும் காண்பிக்கவேயில்லையே இது ஞாயமா அன்பன் தி. ரா. ச

குமரன் (Kumaran) said...

நன்றி நடேசன் சார்.

தி.ரா.ச. புராதன 7 சிவன் கோவில்களுக்குச் சென்று தரிசித்தீர்களா? மிக்க மகிழ்ச்சி. எனக்காகவும் வேண்டிக் கொண்டீர்களா?