Monday, August 18, 2008

*நட்சத்திரம்* - இராமனா கிருஷ்ணனா யார் கருணை வேண்டும்?



நீரில் மூழ்கும் போது நீச்சல் தெரியாதவன் எப்படித் தவிப்பானோ அப்படிப்பட்ட தவிப்பு இருந்தால் இறையை உடனே உணரலாம் என்று அறிந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள். குறைவற்ற அன்பு மட்டுமே துணையாகக் கொண்டு நீரில் மூழ்கி மூச்சுத் திணறும் ஒரு மீனவ பக்தனுக்காக அன்னை காட்சி கொடுப்பதை மிக நன்றாக 'ஆதிபராசக்தி' திரைப்படத்தில் காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட தவிப்பு கொள்வதை 'ஆர்த்தி' என்று சொல்வது வழக்கம். இனி மேலும் தாங்காது; நாட்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன; ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிகிறது; உன் கருணைக்காக வேண்டி நிற்கிறேன்; வருவாய் வருவாய் வருவாய் என்று ஏங்கி அழைக்கும் ஆர்த்திப் பிரபந்தமாக இருக்கும் நாயகி சுவாமிகளின் பாடல்கள் பலவற்றில் ஒன்றை இங்கே தருகிறேன்.

இந்தப் பாடலை டி.எம்.எஸ். பாடி இங்கே கேட்கலாம். இந்த இடுகையில் சௌராஷ்ட்ரப் பாடலின் வரிகளையும் அதனைத் தொடர்ந்து அடியேன் செய்த தமிழாக்கத்தையும் தருகிறேன். ஒரே மெட்டில் இரண்டு மொழிப் பாடல்களையும் பாடலாம் என்று நினைக்கிறேன். யாரேனும் அதே மெட்டில் தமிழ்ப்பாடலைப் பாடித் தந்தால் அதனை இங்கே சேர்த்துவிடுகிறேன்.


ராமா க்ருப ஸாரே ராக் ஸோட் ரே ஸ்ரீ
ராமா க்ருப ஸாரே (ராமா)

இராமா கருணை செய்வாய் சினம் விடடா ஸ்ரீ
இராமா கருணை செய்வாய் (இராமா)

ராமா க்ருப ஸாரே ப்ரேம ஹோர் அவிகிநு
தே தொர் பதாலுநு தூஸ் மொக் கதி ஸ்ரீ (ராமா)

இராமா கருணை செய் அன்புடன் வந்திங்கு
தா உன் பாதங்கள் நீயே கதி எனக்கு ஸ்ரீ (இராமா)

திந்நூ ஜேடரேஸி தேவு கோ
திந்நூ ஜேடரேஸி
திந்நூ கோ ஜேடரேஸ் மொந்நு தொவி மொர
மொந்நும் அவி மொந்நு துவெ மொதி காரி ஸ்ரீ (ராமா)

நாட்கள் போகின்றன தேவா வீணே
நாட்கள் போகின்றன
நாட்கள் வீணாகின்றன மனம் வைத்து எனது
மனத்தில் வந்து மனம் வெண் முத்தாய் செய் ஸ்ரீ (இராமா)

காய் கரு மீ யேடு ஏ கர்முனுக்
காய் கரு மீ யேடு
காய் கரு மீ யேடு மாய் பாப் மொக் கோநுரே
ஸாய் தூத் லொநி சொரே ரெங்க ஸாயி க்ருப ஸாரே (ராமா)

என்ன செய்வேன் நான் இங்கே இந்த வினைகளை
என்ன செய்வேன் நான் இங்கே
என்ன செய்வேன் நான் இங்கே அன்னை தந்தை எனக்காரடா
ஆடைப் பால் வெண்ணெய் தின்ற ரெங்கசாயி கருணை செய்வாய் (இராமா)


கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா க்ருஷ்ணா செனம்
கெடோ செர்சிலேரே க்ருஷ்ணா
கெடோ செர்சிலே நமம் படன கர்யாஸ்தெங்கோ
வடபத்ரஸாயி ஹொய் அவெ நடனகோபாலா (ராமா)

கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா விரைவாய்
கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா
கரை சேர்த்துக் கொள் நாமம் பாடிக் கொண்டிருப்பவர்களை
வடபத்ரசாயி ஆகி வந்த நடனகோபாலா (இராமா)



ஆழ்வார்கள் கண்ணன் செய்ததை இராமன் செய்ததென்றும் நரசிம்மனைப் பாடும் போது நடுவில் இராமனையும் கண்ணனையும் பாடியும் அவதாரங்களில் முன் பின்னாக நிகழ்ச்சிகளைக் கொண்டு சென்று உருகுவார்கள். ஆழத் தொடங்கி உருகிவிட்டால் இப்படித் தான் நிகழும் போலிருக்கிறது. பத்தொன்பதான் நூற்றாண்டின் சௌராஷ்ட்ர ஆழ்வாருக்கும் அப்படியே நடக்கிறது.

சினத்தை விடடா இராமா என்று கெஞ்சித் தொடங்கியவர் உன் பாதங்களே கதி என்று சரணம் அடைந்து, 'உன் அருளாலே உன் தாள் வணங்கி' என்று அருளாளர்கள் சொன்னது போல் நீயே மனம் வைத்து என் மனத்தில் வந்திருந்து என் மனத்தைத் தூய்மை செய் என்று பாடுகிறார். நடுவில் கரும வினைகளைப் பற்றி நொந்து கொண்டு என் தாயும் தந்தையுமான ரங்கசாயி நீயே கருணை செய் என்று இராமனிடமிருந்து அந்த இராமன் வணங்கிய அரங்கனிடம் தாவிவிடுகிறார்.

திருவரங்கனைப் பாடியவுடன் கண்ணனின் உருவாக நிற்கும் அழகிய மணவாளன் திருவுருவம் நினைவில் ஆடியது போலும். அதனால் திருவரங்கனைப் பாடும் போதே வெண்ணெய் களவு செய்து உண்ட வாயனையும் பாடிவிடுகிறார். அப்போது தானே இறுதியில் கரை சேர்த்துக் கொள்ளடா கிருஷ்ணா கிருஷ்ணா என்று உருகி அழைக்க முடியும்.

இராமனாய், அரங்கனாய், கண்ணனாய் வந்தவனே தன் குருவான வடபத்ரஸாயி ஜீயராகவும் வந்தார் என்று குருவின் கருணையே தலையாயது என்று நிறைவு செய்தார். நாயகி சுவாமிகளுக்கு வடபத்ரார்யராக வந்து அருள் செய்த நடனகோபாலா! நீயே எங்களுக்கும் கருணை செய்ய வேண்டும்!

*நட்சத்திரம்* - வெண்மதி வெண்மதியே நில்லு...

'மாம்ஸ். இந்தப் பாட்டைக் கேட்டியா?'

'எந்தப் பாட்டு ராம்ஸ்?'

'அதான். வெண்மதி வெண்மதியே நில்லு. நீ வானமா மேகத்துக்கா சொல்லு. வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்'

'அருமையாப் பாடறே. நானும் இந்தப் பாட்டு கேட்டுருக்கேன். நல்ல பாட்டு தான்'.

'என்ன நல்ல பாட்டுன்னு சொல்லி நிறுத்திக்கிட்டே. அருமையான பாட்டு இது'

'சரி. அருமையான பாட்டு தான். ஒத்துக்கறேன். ஏன் அருமையான பாட்டுன்னு சொல்றியா?'

'பாட்டோட அர்த்தத்தைப் பாரு. அந்த வரிகளோட அர்த்தம் தெரிஞ்சா இது எவ்வளவு அருமையான பாட்டுன்னு ஒத்துக்குவே'

'அப்டியா. சரி. வரிகளோட பொருளைச் சொல்லு. கேட்டுக்கறேன்'.

'ஒரு காதலன் காதலிக்கிட்ட சொல்ற மாதிரி இந்தப் பாட்டு வருது மாம்ஸ். அந்தப் பொண்ணை ரெண்டு பேரு காதலிக்கிறாங்க. இவனுக்கு அவ யாரைக் காதலிக்கிறான்னு தெரியல. அதான் அந்தப் பொண்ணை வெண்மதின்னு சொல்லி நீ வானத்துக்கா மேகத்துக்கா சொல்லுன்னு கேக்கறான். தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் சொல்றான்'.

'சரி. அப்புறம்'.

'நீ அவனைத் தான் காதலிக்கப் போற; என்னை இல்லைன்னா பரவாயில்லை. அத நான் பொறுத்துக்குவேன் அப்படின்னு சொல்றான்'.

'அப்படியா சொல்றான். எனக்கு அப்படி தோணலையே.'

'பின்ன வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால் மேகத்துக்கு இல்லை ஒரு நஷ்டம் அப்படின்னா என்ன அர்த்தம்?'

'எனக்குத் தெரிஞ்ச மாதிரி பொருள் சொல்றேன் ராம்ஸ். கோவிச்சுக்கக் கூடாது'.

'கோவிச்சுக்க மாட்டேன். சொல்லு மாம்ஸ்.'

'தன்னை மேகம்ன்னும் அடுத்தவனை வானம்ன்னும் பொண்ணை நிலவுன்னும் சொல்றது தான். இந்தப் பாட்டை எழுதுன கவிஞர் ஒரு உட்பொருள் வச்சிருக்கார். நாம இங்க இருந்து பார்த்தா வானத்துல இருக்கிற வெண்மதியை மேகம் மூடுற மாதிரி தெரியுது இல்லையா?'

'ஆமாம்.'

'ஆனா உண்மையிலேயே மேகம் நம்ம பூமிக்கு மேல இருக்கிற காற்று மண்டலத்துல இருக்கு. மதி ரொம்ப தூரத்துல இருக்கு. வானம் என்கிறதோ இல்லவே இல்லை. அது அகண்ட வெட்ட வெளி. அதனால நிலா வானத்தைத் தான் பிடிக்கும்ன்னு சொன்னாலும் மேகத்துக்கு ஒரு நஷ்டமும் இல்லை. ஏன்னா வானம் தான் உண்மையிலேயே இல்லையே. இல்லாத ஒரு பொருளை பிடிச்சாலும் அதை அடைய முடியாது இல்லியா. அது போல நீ அவனை விரும்பினாலும் எனக்குத் தான் சொந்தம்ன்னு சொல்றான்.'

'பரவாயில்லையே. இந்த அர்த்தம் நல்லாத் தான் இருக்கு'.

'அப்டியா. இதுக்கும் மேல ஒரு பொருளும் கவிஞர் வச்சிருக்கார்'

'என்ன பொருள் அது?'

'அந்தக் காதலனுக்கும் தெரியாத ஒரு பொருளை மறைமுகமா கவிஞர் இந்தப் பாட்டுல வச்சிருக்கார். வானம் உண்மையில் வெட்டவெளிதான். அதனால் வானத்துக்கு வெண்மதி சொந்தமாக முடியாது. ஆனால் மேகமும் பூமியைச் சுற்றியுருக்கும் காற்று மண்டலத்தை விட்டு வெளியே இருக்க முடியாது. அதனாலும் நிலவை அடைய முடியாது. அதனால் அந்தப் பெண் இந்தக் காதலனுக்கும் கிடைக்க மாட்டாள் என்பதைத் தான் உட்பொருளா வச்சிருக்கார் கவிஞர்.'

'ஐயோ. மாம்ஸ். ஓவரா அர்த்தம் சொல்றியே. ரொம்ப எளிமையா இருக்கிற இந்தப் பாட்டுக்கு அர்த்தம் சொல்ல ஒன்கிட்ட வந்தேனே. என்னைச் சொல்லணும்'.

'ஏன் ராம்ஸ்? இந்தப் பொருளுக்கு என்ன குறை?'

'என்ன குறை? ஒரு குறையும் இல்லை. அந்தப் பாட்டைப் பாடுன கவிஞரே இந்த அர்த்தத்தை யோசிச்சிருப்பாரோ இல்லையோ. நீ என்னடான்னா வெளிப்படையாத் தெரியுற அர்த்தத்தை விட்டுட்டு ஏதேதோ சொல்லிக்கிட்டுப் போற?'

'ராம்ஸ். நீ தமிழ்மணம் பாக்குறதில்லைன்னு நெனைக்கிறேன். அதுல குமரன்னு ஒருத்தர் பாட்டுக்கெல்லாம் பொருள் சொல்லிக்கிட்டு இருக்கார். அவர் எழுதுறதைப் படிச்சு படிச்சுத்தான் இந்த மாதிரி எல்லாம் தோண ஆரம்பிச்சிருச்சு.'

'ஐயோ. நல்லவேளை சொன்ன. நான் ஜன்மத்துக்கும் அவர் எழுதுறதப் படிக்க மாட்டேனே. பைத்தியம் புடிச்சிரும்'

*நட்சத்திரம்* - இந்த வார முன்னோட்டம்: எதிர்பார்ப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன!

போன வாட்டி தமிழ்மண நாட்காட்டியா (விண்மீனா) இருந்தப்ப பல்சுவையா இடுகைகள் இட்டதா நினைவு. இந்தவாட்டியும் அப்படியே எழுதலாம்ன்னு ஆசை இருந்தாலும் போன தடவை மாதிரி தமிழ்மணமே கதின்னு இந்த வாரமும் இருந்தா கட்டாயம் மணமுறிவும் வேலை இழப்பும் நடக்கும்ங்கறதால கொஞ்சம் அடக்கித் தான் வாசிக்கணும்ன்னு நினைக்கிறேன். இந்த வாரம் தமிழ்மண நாட்காட்டி வாய்ப்பு கிடைக்கப் போகும் தகவல் போன வாரம் செவ்வாய் அன்னைக்குத் தான் தெரிஞ்சது. அதனால நிறைய ஆயத்தமும் செய்ய முடியலை. மேலோட்டமா ஒரு திட்டம் இருக்கு. அந்தத் திட்டத்தை இங்கே தர்றேன். அது படியே, அந்த வரிசையிலேயே இடுகைகள் வரும்ன்னு சொல்ல முடியாது.

1. 'கேட்டதில் பிடித்தது' தலைப்புல ஒரு திரைப்படப் பாட்டு.
2. பரிபாடலின் அறிமுகமா அந்த சங்க இலக்கியத் தொகுப்பில இருந்து சில பாடல் வரிகள்
3. சங்க இலக்கியத்தில் அகலிகைக் கதை
4. சௌராஷ்ட்ரப் பாடல் ஒன்று
5. கண்ணன் என்னும் கருநிறக் கடவுள்
6. பழந்தமிழ் ஆய்வு ஒன்று - இன்னும் இதுக்கு ஆராய்ச்சியைத் தொடங்கலை - அதனால தலைப்பு என்னன்னு இப்ப சொல்றதா இல்லை. :-)
7. சங்க இலக்கியத்தில் இராவணன்
8. மதுரையைப் பற்றி ஒரு இடுகை
9. சங்க இலக்கியத்தை உரையுடன் படிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
10. அபிராமி அந்தாதி நிறைவு - இரவிசங்கரின் சிறப்பு இடுகை

இந்தப் பட்டியலைப் பத்தி இரவிசங்கர்கிட்ட சொல்லாம இந்த வாரம் சங்க இலக்கிய வாரம்ன்னு மட்டும் சொன்னதுக்கு அவருடைய எதிர்பார்ப்புகள்ன்னு ஒரு பட்டியல் கொடுத்தாரு. அந்த பட்டியல் இதோ:

1. இயல் + இசை + நாடகம் = ஆய்ச்சியர் குரவை
2. சங்கப் புலவர்கள் - சிறு அறிமுகம்
3. சங்க இலக்கியத்தில் வெளிநாடுகளைப் பற்றிய குறிப்புகள்
4. சங்க இலக்கியத்தில் இருந்து சிறுகதைகள்
5. சங்க இலக்கியத்தில் காதலர் திருவிழா

இதுல ஒவ்வொன்னும் எழுத எனக்கு குறைஞ்சது ஒரு வாரமாவது ஆகும். அதனால இந்த வாரம் இந்தத் தலைப்புகள் கிடையாது. வருங்காலத்துல பார்க்கலாம். இந்தப் பட்டியலைப் பார்த்தா இரவிசங்கரோட வருங்கால இடுகைகளோட முன்னோட்டம் போலவும் இருக்கு.

இந்த வாரம் என்ன இடுகைகள் வரும்ன்னு உங்க எதிர்பார்ப்புகளையும் சொல்லுங்க. எல்லாத்தையும் நிறைவேத்த முடியாட்டியும் எதாவது சுளுவா இருந்தா அதனை இந்த வாரப் பட்டியல்ல சேர்த்துக்கறேன். :-)

Sunday, August 17, 2008

*நட்சத்திரம்* - இராம.கி. ஐயா, டோண்டு ஐயா, துளசியக்கா, சிந்தாநதி வரிசையில் நானா?


உண்மையாவா? சும்மா விளையாடாதீங்க. உண்மையே தானா? அட போங்க நீங்க வேற. இன்னும் எம்புட்டு பேரு காத்திருக்காங்க. ஏற்கனவே நான் ஒரு தடவை இந்த விளையாட்டை விளையாடியாச்சு. காத்திருக்கிறவங்கள்ல ஒருத்தரைக் கூப்புட்டு ஆடவிடுங்க. என்ன சொல்றீங்க? நான் விளையாடுனதை நீங்க பாக்கலையா? அதனால நான் இன்னொருக்கா ஆடுனா உங்களுக்கு ஒப்புதல் தானா? சரியா போச்சு போங்க. இப்படி சொன்னா வந்த வாய்ப்பை விடுவேனா? விடறதுக்கு நான் என்ன மடையனா?

உங்களுக்கு ஒப்புதல்னா எனக்கும் ஒப்புதல் தானுங்க. என்னங்க இது நீங்களும் இதையே சொல்றீங்க? நான் சொன்னதையே நீங்களும் திருப்பி சொன்னா எப்படி? அட நிறுத்துங்க. நாம இதையே திருப்பித் திருப்பி சொல்லிக்கிட்டு இருந்தா முடிவே இருக்காது. கடைசியா என் முறை இப்ப. கேட்டுக்கோங்க. உங்களுக்கு ஒப்புதல்னா எனக்கும் ஒப்புதல் தான். இந்த வாரம் தமிழ்மணம் விண்மீனா நான் இருந்துக்கிறேங்க.

***

ஆமாங்க ஐயா. அவிங்ககிட்ட இப்படி ஒத்துக்கிட்டு தாங்க இப்ப இந்த விளையாட்டை ஆட வந்திருக்கேன். முந்தி ஒருக்கா 2006 ஜனவரில ஆடறப்ப நீங்க தந்த ஆதரவை இந்த வாரத்துலையும் தரணும்ன்னு வேண்டிக்கிறேங்க. இதுக்கு முன்னாடி இந்த ஆட்டத்தை ரெண்டு தடவை ஆடுன பெரிய மனுசங்க இருக்காங்கன்னு தெரியும். அதான் அவிங்க யாருன்னு பாத்து அந்தப் பட்டியலைத் தலைப்புல போட்டிருக்கேங்க. இவிங்க நாலு பேரு ரெண்டாவது ஆட்டம் படம் பாத்திருக்காங்கன்னு தெரியும். அஞ்சாவதா எனக்கு இந்த வாய்ப்பு வந்திருக்குன்னு நினைக்கிறேன். நான் அஞ்சாவதா ஆறாவதா ஏழாவதா எட்டாவதான்னு நீங்க தான் சொல்லணும். என்ன சொல்றீங்க? நான் கல்லூரி எல்லாம் படிச்சி முடிச்சுட்டு தான் இங்கன குப்பை கொட்டிக்கிட்டு இருக்கேன்னு நினைச்சீங்களா. அட ஆமாங்க. அது உண்மை தான். நல்ல படிப்பு எல்லாம் படிச்சு முடிச்சாச்சு. இப்ப எதுக்கு இந்த ஐயம் உங்களுக்கு? ஓ. அஞ்சாப்பு, ஆறாப்பு, ஏழாப்புன்னு எல்லாம் சொன்னேனா? சரியான ஆளுங்க நீங்க. நான் எப்ப அஞ்சாப்பு, ஆறாப்புன்னு சொன்னேன்? இந்த வாய்ப்பு கிடைச்சவங்கள்ல நான் அஞ்சாவதா ஆறாவது ஆளான்னு கேட்டேங்க. ஏங்க இப்படி குழப்புறீங்க?

இப்படி எல்லாம் குழப்புறதுக்குன்னே எனக்கு நண்பர்கள் சில பேரு இருக்காங்க. அவிங்ககிட்ட சொல்லிவிட்டிருவேன். அவிங்க உங்களை எல்லாம் நல்லா கொழப்பி விட்டிருவாங்க. அப்புறம் கீழ்ப்பாக்கம், குணசீலம்ன்னு அலைய வேண்டியதா போயிரும். என்ன நீங்க அதுக்கும் தயாரா? அப்படி போடுங்க அருவாளை. அப்ப உங்களை விடறதா இல்லை.

போனவாட்டி கேட்ட மாதிரியே இந்த வாட்டியும் தமிழ்மணத்துக்காரங்க அறிமுகம் வேணும்ன்னு கேட்டாங்க. அவங்க கேட்டாங்களேன்னு நானும் கிறுக்கோ கிறுக்குன்னு கிறுக்கித் தள்ளி ஒரு அறிமுகத்தை அனுப்பியிருக்கேன். போனவாட்டி கிறுக்குப் பயலாட்டம் என்னாத்தைக் கிறுக்கியிருக்கேன்னு நிறைய பேருக்குப் புரியலைன்னு சொன்னதுனால ஒரு நண்பர்கிட்ட விளக்கத்தைச் சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவரும் விளக்கோ விளக்குன்னு விளக்கித் தள்ளிப்புட்டாரு. தனியா இல்லை. மயிலாருன்னு ஒரு கூட்டாளியோட சேந்துக்கிட்டு. இந்த வாட்டி எங்க வூட்டுல இன்னொரு ஆளு கூடியிருக்காருன்னு நானும் கூடுதலா ஒரு நாலு வரி எழுதிச் சேத்திருக்கேன். அந்த இராகவப் பெருந்தகைக்கிட்டேயே அதுக்கும் விளக்கம் சொல்லுங்கன்னு கேட்டுக்கிறேன். மயிலாரைக் காணோம் அதனால விளக்கம் சொல்லமுடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காரு. நீங்க கொஞ்சம் சொல்லுங்க. நீங்க சொன்னா அவரு கேட்டுக்கிருவாரு.

நான்மாடக் கூடலாம்
மதுரையம்பதியினில்
நாயகனின் திருவருளினால்
நானன்று தோன்றினேன்
நலமுடைக் குமரனெனும்
நல்லபெயர் தனை அருளினான்!

அகவையோ மூவாறுப்
பதினெட்டு; அழகுடைய
அகமுடையாள் மனைமாட்சியாம்!
மகிழ்ச்சியுறத் தேசு பெறும்
மகளுடையேன் மனைமுழுதும்
மன்னன் மகள் அவளாட்சியாம்!

விளையாட்டுத் தோழனாய்
வீட்டிலே அக்கைக்கு
விளைந்தானே மைந்தனவனே!
தளை நீக்கி அடியாரைத்
தான் தாங்கிக் காப்பாற்றும்
சிவகுமரன் சேந்தனவனே!

வாழ்வதுவோ அமேரிக்க
மினசோட்டா மாகாணம்;
வாழ்க தமிழ்! வாழ்க தமிழே!
வாழ்வுபெற நானும் வந்தேன்
தமிழ்மணத்தின் விண்மீனாய்
வாழ்த்திடுவீர்! வாழ்த்துவீரே!


இப்ப போயிட்டு வர்றேங்க. கொஞ்ச நேரத்துக்கப்புறமா பாக்கலாம்.

Saturday, August 09, 2008

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் க.ர.ச. (K.R.S)


வந்தாய் என் மனம் புகுந்தாய் மன்னி நின்றாய் இரவிசங்கரா!

எங்குமுளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கில்லையோ என்று இரணியன் தூண் புடைப்ப அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய சிங்கப்பிரானைப் போல் தோன்றிய இரவிசங்கரா இங்கும் இனி இரணியர்கள் இல்லாமல் போகும்படி செய்வாய்!



சிங்கப்பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தா? இல்லையே?! அது போல் எங்கள் கண்ணபிரான் இரவிசங்கரின் பெருமையும் ஆராயும் நிலையில் இல்லை. நல்லோரும் அல்லோரும் உள்ளோரும் இல்லோரும் வல்லோரும் வறியவரும் எல்லோரும் அறிவாரே எங்கள் அண்ணலின் பெருமையை!

எம்பெருமான் ஈசன் எழிலார் திருவேங்கடவன் திருவருளால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவாய் இரவிசங்கரா! இன்று போல் என்றும் வாழ்க!


இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் இரவிசங்கர்!

Friday, August 08, 2008

டி.எம்.எஸ் பாராட்டு விழா படங்கள்

மதுரையில் அண்மையில் முதல்வர் தலைமையில் திரு. டி.எம். சௌந்தரராஜன் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவின் படங்கள் சில நண்பர்கள் மூலமாகக் கிடைத்தன. அவற்றை இங்கே பதிகிறேன்.


















Thursday, August 07, 2008

மறுபதிவுகள் நிறைவடைந்தன

என்னுடைய மற்ற பதிவுகளிலிருந்து கூடல் பதிவிற்கு இடுகைகளை நகர்த்துவது நிறைவு பெற்றுவிட்டது. இனி மிஞ்சி இருக்கும் பதிவுகளை வகைப்படுத்தித் தந்திருக்கிறேன். அவற்றில் தொடர்ந்து சுழற்சி முறையில் எழுதி வர விருப்பம்.

தனிப்பதிவுகள்:

1. அபிராமி அந்தாதி - நான் தொடங்கிய முதல் பதிவு இது. இன்னும் ஒன்றிரண்டு இடுகைகளுடன் நிறைவு பெற்றுவிடும்.
2. Maithreem Bhajatha - எனது ஆங்கிலப் பதிவு. அவ்வளவாக இங்கே எழுதியதில்லை. இனிமேலும் அப்படியே தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
3. avO amrethenu avO - இது ஆங்கில எழுத்தில் எழுதப்படும் சௌராஷ்ட்ர பதிவு. இதில் இனி மேல் தொடர்ந்து எழுத எண்ணம்.
4. விஷ்ணு சித்தன் - பெரியாழ்வாரின் திவ்ய பிரபந்த பாசுரங்களை இனி மேல் இங்கே தொடர்ந்து படிக்கலாம்.
5. பாட்டுக்கொரு புலவன் பாரதி - பாரதியாரின் பாடல்களை இங்கே தொடர்ந்து படிக்கலாம்.
6. ஐயன் வள்ளுவனின் இன்பத்துப்பால் - காமத்துப்பால் குறட்பாக்களின் பொருளுரையை இங்கே படிக்கலாம்.
7. கோதை தமிழ் - கோதைத் தமிழ் ஐயைந்துஐந்தினை இங்கே படிக்கலாம்.
8. கூடல் - எனது பதிவுகளின் தலைவாசல்.

குழுப்பதிவுகள்:

1. கற்பூர நாயகியே கனகவல்லி: அன்னையின் திருவருளைப் போற்றும் பாடல்கள்.
2. நமசிவாய வாழ்க - அத்தனின் திருவருளைப் போற்றும் பாடல்கள்.
3. இந்தியக்கனவு 2020 - இந்தத் தன்னார்வக் குழுவினைப் பற்றிய இடுகைகள்
4. முருகனருள் - பிள்ளையின் திருவருளைப் போற்றும் பாடல்கள்
5. ஸ்தோத்ரமாலா - வடமொழிப்பனுவல்களின் பொருளுரைகள்.
6. கண்ணன் பாட்டு - கண்ணனின் திருவருளைப் போற்றும் பாடல்கள்
7. மதுரை மாநகரம் - கூடல் மாநகரப் பிள்ளைகளின் குழுப்பதிவு.
8. மதுரையின் ஜோதி - நடனகோபால நாயகி சுவாமிகளின் பாடல்களுக்குப் பொருளுரைகள்