Thursday, June 12, 2008

கேள்விகள் வரவேற்கப்படுகின்றன!!!


இதை யாரு தொடங்கினாங்கன்னு தெரியலை. சிறில் பதிவுல தான் முதல்ல பார்த்தேன். சரி நானும் முயற்சி செய்யலாமே என்று முயல்கிறேன். எவ்வளவு நாள் தான் மறுபதிவாகவே போட்டுக் கொண்டிருப்பது?

உங்களுக்கு அடியேனிடம்/என்னிடம் (யாருக்கு எது பிடிக்குதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்) ஏதாவது கேள்விகள் கேட்கும் எண்ணம் இருந்தால் அவற்றை பின்னூட்டத்திலோ மின்னஞ்சலிலோ தாருங்கள். முடிந்த வரை சுவையாகப் பதில் சொல்கிறேன். (எல்லாம் ஒரு முயற்சி தான். சுவையாக எழுதுறது தான் நமக்குச் சுட்டுப் போட்டாலும் வராதுல்ல).

எத்தனை பேர் கவனித்தீர்களோ தெரியவில்லை. என் பெயரில் இருக்கும் பதிவுகள் குறைந்து கொண்டு வருகின்றன. 'படித்ததில் பிடித்தது', 'கேட்டதில் பிடித்தது', 'சொல் ஒரு சொல்', 'சின்ன சின்ன கதைகள்', 'விவேக சிந்தாமணி' போன்ற பதிவுகளில் இருந்த இடுகைகளை எல்லாம் கூடலுக்கு மாற்றிவிட்டு அவற்றை எல்லாம் அழித்துவிட்டேன். இன்னும் சில பதிவுகளும் இங்கே வந்துவிடும். 'எத்தனை இடத்துக்குத் தான் போவது? ஒரே இடத்தில் எழுது' என்று என்னை விரட்டும் நண்பர்கள் மகிழ்வார்கள் என்று நினைக்கிறேன். :-)

எம்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க...


என்பொடு கொம்பொ(டு) ஆமை இவை மார்பிலங்க
எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்களவை தாம்
அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல
அடியாரவர்க்கு மிகவே!

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பிலங்க - எலும்பு, கொம்பு, ஆமை ஓடு இவை போன்றவை மார்பில் இலங்கி நிற்க

எருதேறி ஏழையுடனே - அறவுருவாகிய எருதின் மேல் ஏறி அன்னையுடன்

பொன்பொதி மத்தமாலை புனல் சூடி வந்து - பொன்னால் ஆகிய குளிர்ச்சி பொருந்திய மாலையையும் புனலாகிய கங்கையையும் தலையில் சூடி வந்து

என் உளமே புகுந்த அதனால் - என் உள்ளமே புகுந்த அதனால்

ஒன்பதொடு - கிருத்திகையை முதல் விண்மீனாய்க் கொண்டால் ஒன்பதாவது விண்மீனாய் வரும் பூரமும்

ஒன்றொடு - முதல் விண்மீனான கிருத்திகையும்

ஏழு - ஏழாவது விண்மீனான ஆயிலியமும்

பதினெட்டொடு - பதினெட்டாவது விண்மீனான பூராடமும்

ஆறும் - அதிலிருந்து ஆறாவது விண்மீனான பூரட்டாதியும்

உடனாய நாள்களவை தாம் - இவை போல் உள்ள பயணத்திற்கு ஆகாத நாட்கள் எல்லாமும்

அன்பொடு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியாரவர்க்கு மிகவே - ஈசனின் அடியார்களுக்கு அன்பொடு அவை நல்லவையாக இருக்கும்; மிக நல்லவையாக இருக்கும்.

***

முதல் பாடலில் நவகோள்கள் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொன்னார். இந்தப் பாடலில் பயணத்திற்கு ஆகாத விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) என்று தள்ளப்பட்ட நாட்களும் அடியார்களுக்கு மிக நல்லவை என்று சொல்கிறார்.

சிவபெருமான் எலும்பு மாலை, கொம்பு, ஆமை ஓடு போன்றவை அணிந்திருக்கும் காரணத்தை மற்றோரிடத்தில் காணலாம்.

ஏழையென்றது பெண் என்னும் பொருளில். இங்கு அது உமையன்னையைக் குறித்தது. ஏழைப்பங்காளன் என்று வள்ளல் தன்மையை உடையவரைக் குறிப்பது இன்று வழக்கில் உள்ளது. அது 'ஏழைப்பங்காளன்' என்னும் சொற்றொடரின் பொருள் உணராததால் வந்த வினை. ஏழைப்பங்காளன் என்று குறிப்பிடப் படும் முழுத் தகுதியும் சிவபெருமானுக்கே உண்டு. மற்றோருக்கு இல்லை. ஏழையை (பெண்ணை) தன் உடலில் ஒரு பங்காக உடையவன் என்று இதற்குப் பொருள். அப்படி மனைவிக்கு தன் உடலில் பாதியைத் தந்தவர் அண்ணலையன்றி வேறு யார்?

சோதிட நூல்களில் 27 விண்மீன்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. வார நாட்கள் ஏழும் கோள்களின் பெயர்களில் அமைந்தது போல ஒவ்வொரு மாதமும் இந்த 27 விண்மீன்களின் சுழற்சியில் வருமாறு அமைத்திருக்கின்றனர் நம் முன்னோர். நல்ல செயல் செய்யவோ எங்காவது பயணம் கிளம்பும் போதோ வார நாளைப் பார்த்தபின் அந்த நாளில் அமைந்த விண்மீனையும் பார்த்திருக்கிறார்கள். அந்த 27 விண்மீன்களில் 12 விண்மீன்களை பயணம் தொடங்க தகுதியில்லாத நாட்களாகத் தள்ளி வைத்துள்ளனர் - பூரம், பூரட்டாதி, பூராடம், மகம், கேட்டை, பரணி, கிருத்திகை, சுவாதி, ஆயிலியம், விசாகம், ஆதிரை, சித்திரை என்பவையே அவை. அவற்றில் சிலவற்றை இந்தப் பாடலில் சம்பந்தர் குறித்து அவையெல்லாமும் கூட அடியார்க்கு மிக நல்லவையே என்கிறார்.

சோதிட நூல்களில் அசுவினியில் தொடங்கி விண்மீன்களைச் சொன்னாலும் கிருத்திகையை முதல் விண்மீனாய் சொல்லும் மரபும் இருந்திருக்கிறது. மேஷம் முதல் ராசியானதால் அது அசுவினியில் தொடங்குவதால் அசுவினியை முதலாகக் கூறும் வழக்கமும் வந்தது. ஆனால் சம்பந்தரோ இங்கு கிருத்திகையை முதலாகக் கூறும் மரபைப் பாராட்டி அந்த விண்மீன்களை எண்களாகச் சொல்லியிருக்கிறார்.

Wednesday, June 11, 2008

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா!



உலகில் நான்குவிதமான பக்தர்கள் இருப்பதாக கண்ணன் கீதையில் சொல்லியிருக்கிறார் - ஆர்த்தி, அர்த்தார்த்தி, ஜிக்ஞாஸு, ஞானி என்று அவர்களைப் பற்றி சொல்வார். ஆர்த்தி என்பவர்கள் தங்கள் குறைகளைக் கூறி துன்பங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று வணங்குபவர்கள். அர்த்தார்த்தி என்பவர்கள் பொருளை விரும்பி வேண்டி வணங்குபவர்கள். ஜிக்ஞாஸு என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி வணங்குபவர்கள். ஞானி என்பவர்கள் உண்மை நிலையை உணர்ந்து உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்டு உண்மை நிலையில் உருவமான இறைவனை வணங்குபவர்கள். தற்போது நம் கண்களுக்குத் தெரியும் பக்தர்களில் முதலில் சொல்லியிருக்கும் இரண்டுவிதமான பக்தர்களையே அதிகம் காண்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும் போது 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா' என்ற பாடலைக் கேட்கும் போது வித்தியாசமாக இல்லை?

மூதறிஞர் இராஜாஜி எழுதி இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். இந்தப் பாடலைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு இட்டிருக்கிறேன். அதனையும் பாருங்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல். என் தம்பியும் நானும் என் திருமணத்திற்கு முன்பு அடிக்கடி இந்தப் பாடலைச் சேர்ந்து இசைத்திருக்கிறோம். இப்போதும் என் தம்பியிடம் இந்தப் பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டு ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.

அதிருஷ்டம் = நல்லூழ்?

நண்பர் 1: 'நீங்க நல்ல அதிர்ஷ்டக்காரருங்க. பல இலக்கியங்கள் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கே'.

நண்பர் 2: 'நீங்களும் என்ன குறைவு? உங்களுக்குத் தெரிஞ்ச அளவு எனக்கு இலக்கியங்கள் தெரியாதே'

'ஹ. எப்பவும் இப்படியே சொல்லிக்கிட்டு இருங்க.

உங்களை ஒன்று கேட்கணும்ன்னு நினைச்சேன். அதிர்ஷ்டத்தை எப்படி தமிழ்ல சொல்றது?'

'நான் வழக்கமா நல்வினைப்பயன்னு எழுதுறேன்'

'நல்வினைப்பயனா? ஓரளவு பொருந்தி வருது. ஆனால் அதுவும் முழுக்கப் பொருந்துற மாதிரி தோணலையே'

'நாம் செய்த நல்லது, தீயது இவற்றின் படி தானே பயன்களும் ஏற்படுகின்றன. அதிருஷ்டம் என்பது நாம் செய்த நல்வினைகளின் பயன் தானே. அப்ப நல்வினைப்பயன் என்று சொன்னால் தவறில்லையே'

'இல்லை நண்பரே. இதனைவிட நல்ல சொல் இருக்கும். தேடிப்பார்க்க வேண்டும்'

***

சில நாட்கள் கழித்து...

'நண்பரே. அன்று அதிர்ஷ்டத்தைப் பற்றி கேட்டீர்களே. நல்லூழ் என்ற சொல் பொருந்துமா?'

'நல்லூழ்... ம்ம்ம். கொஞ்சம் நெருங்கி வருகிறது. ஆனால் ஊழ் என்றால் என்ன என்று தெரியுமா?'

'ஊழ் என்றால் ஊழ்வினை தானே'

'அப்படி நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் ஊழ் என்றால் நியதி என்றும் 'முன்பே கட்டப்பட்ட ஒரு ஒழுங்கு' என்றும் பொருள் உண்டு'

'ஆமாம் ஆமாம். மரத்தடியிலும் வளவிலும் படித்திருக்கிறேன்'

'அப்படி பார்க்கும் போது நல்வினைப்பயன் என்று அதிர்ஷ்டத்தைச் சொல்வதா நல்லூழ் என்று சொல்வதா என்பது கேள்வியே'

'ம்ம்ம். நான் வளவுல போய் கேட்டுப் பாக்குறேன். அவரும் நம்ம வீட்டுக்கு அடிக்கடி வர்றாராம். அதனால் நான் கேக்காமலேயே அவர் நாம பேசறத வச்சே தெளிவா சொல்லிடுவாரு. நம்ம வள்ளுவரும் ஊழ் பத்தி ஒரு அதிகாரமே சொல்லியிருக்காராமே. நீங்களும் உங்க நண்பர்கிட்ட கேட்டு அந்த அதிகாரத்தைப் பத்தி எழுதுங்களேன். அப்படியே கபாலியை நான் கேட்டதாவும் சொல்லிடுங்க'

Tuesday, June 10, 2008

ஜிரா கோரா இராகவன் வழங்கும் 'செரு'

கவுண்டமணி அன்று பள்ளிக்கூடத்திற்கு ஆய்வாளராக வந்திருக்கிறார். தலைமை ஆசிரியர் உசிலைமணி அவரை வரவேற்று ஒவ்வொரு வகுப்பாக அழைத்துச் செல்கையில் செந்தில் தமிழ்ப்பாடம் எடுக்கும் வகுப்பிற்குள் நுழைகிறார்கள்.

"ஆய்வாளர் ஐயா! இவர்தான் தமிழாசிரியர் கொண்டல்நாதர். இவர் தமிழ்ப் பாடம் எடுத்தார்னா நூத்துக்கு நூறுதான். இதுவரைக்கும் ஒருத்தர் கூட பெயில் ஆனதில்லை. ஹிஹ்ஹிஹ்ஹி"

கவுண்டர் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். "ஓ! தமிழ் ஆசிரியர்! (செந்திலோடு கை குலுக்குகிறார்.) கொண்டல்! பேரே நல்ல தமிழ்ப் பேர். ஒங்களப் பத்தி தலைமை ஆசிரியர் ரொம்ப நல்லபடி சொல்லீருக்காரு. அதுனால......ஒங்கள நான் பாராட்டுறேன்."

செந்தில் முகமெல்லாம் புன்னகையுடன். "நன்றி ஐயா! நான் உ.வே.சா கிட்ட தமிழ் படிச்சவன். அதுனாலதான் இப்பிடி. என்னோட பெருமைய நானே சொல்லக் கூடாது. இருந்தாலும்....."

கவுண்டர் இன்னும் வியக்கிறார். "உ.வே.சா? You mean தமிழ்த் தாத்தா? நீங்க ரொம்பப் பெரியவர். சரி.இன்னைக்கு என்ன பாடம்? எதுவும் கேள்வி கேக்கலாமா?"

"நீங்க கேளுங்க ஐயா. பசங்க நல்லா பதில் சொல்வாங்க. இன்னைக்குக் காளமேகப் பாடல்தான் பாடம்." பெருமையோடு சொல்கிறார்.

"ஓ! காளமேகம்!" கவுண்டமணி ஒரு மாணவரை எழுப்பி, "தம்பி! இன்னைக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டு ஒனக்குத் தெரியுமா? எங்க ஒரு வரி சொல்லு."

"செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்-னு தொடங்குற பாடல் ஐயா."

"செருப்பு? என்ன செய்யுள் இது?" செந்திலை நோக்கி. "ஐயா, தமிழ்க் கடலே. இந்த வரி சரிதானா? என்ன பொருள்னு சொல்லுங்களேன். பையன் எதோ செருப்பு பருப்புன்னு சொல்றானே?"

செந்தில் மிகப் பெருமையுடன். "சொல்றேன் ஐயா. சொல்றேன். செருப்புக்கு வீரரைன்னா கல்யாண வீட்டுல செருப்பு திருடுற வீரன் ஒழக்கு மாதிரி இருந்தாலும்னு பொருள்."

வியப்படைகிறார் கவுண்டர். "என்ன கொடுமை சரவணன் இது? காளமேகப் புலவர் காலத்துலயே கல்யாண வீட்டுல செருப்பு திருடீருக்காங்களா? சேச்சே! நம்ப முடியலையே. நீங்க உ.வே.சா கிட்டயெல்லாம் படிச்சிருக்கீங்க. சரியாத்தான் சொல்வீங்க.." தலையை ஆட்டி அலுத்துக் கொள்கிறார்.

"இல்லை ஐயா. அந்தப் பாட்டுக்குப் பொருள் வேற." பாடலைச் சொன்ன மாணவன் படக்கென்று சொல்கிறான்.

கவுண்டமணி பொங்கி எழுகிறார். "என்னது பொருள் வேறயா? இவர யாருன்னு நெனச்ச? தமிழ்ப் பெரியதாத்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை கிட்ட பாடம் படிச்ச தமிழ்த்தாத்தா உ.வே.சா கிட்ட பாடம் படிச்சவரு. பாரதியார் பாரதிதானோட விவாதம் செஞ்சு தமிழ் இலக்கணத்துக்கெல்லாம் சிக்கெடுத்தவரு. ஆத்திச்சூடி எழுதும் போது...கால நீட்டி உக்கார்ரதால ஔவையாருக்கு விழுந்த சுளுக்கத் தமிழ்ப் பாட்டுப் பாடியே சரி செஞ்சவரு. நீ எட்டாப்பு படிக்கிற சின்னப் பையன். ஒனக்கென்ன தெரியும். எங்க? தெரிஞ்சதச் சொல்லு பாக்கலாம்?"

"அதாவதுங்க..செருன்னா போர்க்களம். செருப்புக்கு அப்படீன்னா செருவுக்குள்ள புகுகின்றன்னு பொருள். செருப்புக்கு வீரரைன்னு சொன்னா போர்க்களத்துக்குள்ள புகுகின்ற வீரன்னு பொருள். அப்படிப்பட்ட வீரனைச் சென்று உழக்கும் வேலன். அதாவது முருகப் பெருமானோட போருக்குப் போகிற வீரர்களை வெல்லும் முருகன் அப்படீன்னு பொருள். அதுவுமில்லாம முழுப்பாட்டையும் சொல்றேன் கேளுங்க.

செருப்புக்கு வீரரைச் சென்றுழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல
மருப்புக்குத் தண்டேன் பொழிந்த
திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டே விளக்குமாறே

காளமேகத்திடம் செருப்பு என்று தொடங்கி விளக்குமாறு என்று முடிக்குமாறு முருகனைப் பற்றிப் பாடச் சொன்ன பொழுது பாடிய பாடல்."

யோசிக்கிறார் கவுண்டமணி. "சரி. ஆனா விளக்குமாறுன்னு வருதே? அதுக்கு என்ன பொருள்?"

"அதாவது திருத்தாமரை மேல் வீற்றிருக்கும் வண்டை விளக்குமாறு கேட்கிறார்."

"வண்டு கிட்ட விளக்குமாறு ஏன் கேக்குறாரு? கடைல கிடைல வாங்குறது."

"விளக்குமாறுன்னா விளக்கிச் சொல்லுமாறு கேட்பது. இதுதாங்க இந்தப் பாட்டுக்கு உண்மையான பொருள்"

செந்தில் சிரித்துக்கொண்டே, "பாத்தீங்களா ஐயா. பையன் எப்படி பதில் சொன்னான்னு. அவன் வாயால வரனும்னுதான் நான் வேணுக்குன்னே தப்பாச் சொன்னேன். ஹி ஹி ஹி."

கவுண்டமணிக்குப் புரிந்து போகிறது. கிண்டலோடு "ஓ அப்படீங்களா ஐயா? நீங்க சொன்னா சரிதாங்க ஐயா. நீங்க எப்பேர்ப்பட்டவர். நல்லவர். வல்லவர். தமிழ் மொழியையே செம்புத் தண்ணீல கல்ல்ல்லக்கிக் குடிச்சவர். இப்பப் பாருங்க. இந்தப் பையன நான் எப்படி மாட்டுறேன்னு." அந்த மாணவனைப் பார்த்து, "தம்பி. இந்தப் பாட்டுக்கு நல்லா விளக்கம் சொல்லீட்ட. அது சரீன்னு ஒங்க தமிழ் ஆசிரியரே ஒத்துக்கிட்டாரு. அதுவுமில்லாம இவரு பாடம் எடுத்தா வகுப்புல (ஒவ்வொரு மாணவனாகக் காட்டி) நீதான் பாரதியாரு. அவந்தான் பாரதிதாசன். இந்தப் பையந்தான் இளங்கோவடிகள். அந்தப் பொண்ணுதான் கோதை ஆண்டாள். இந்தப் பொண்ணுதான் சௌந்தரா கைலாசம். ஆகையால இன்னொரு கேள்வி. செருன்னா போர்க்களம்னு சொன்ன. சரி. இந்தச் செரு வர்ர வேறொரு செய்யுள் சொல்லு பாக்கலாம்."

"சொல்றேன் ஐயா. முருகனைப் பத்திச் சொல்லும் போது செருவில் ஒருவன்னு நக்கீரர் சொல்லீருக்காரு ஐயா."

"ஓ! நக்கீரர். அதாவது திருவிளையாடல் படத்துல நடிகர் திலகம் கூட நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றமேன்னு சண்டை போட்டவரு." செந்திலை நோக்கி, "தமிழ் ஐயா, இந்த வரியைப் பத்தி நீங்க என்ன சொல்றீங்க?"

செந்தில் லேசாகக் கனைத்துக் கொண்டு, "ஐயா, இந்தப் பாட்டில் பிழை இருக்கிறது."

கவுண்டர் வியப்பது போல நடித்து ஒரு கையைத் தூக்கிக் கொண்டு சொல்கிறார். "ஓ! பரமசிவம் பாட்டுல பிழை இருக்குன்னு சொன்ன நக்கீரர் பாட்டுலயே நீங்க பிழை கண்டு பிடிச்சிருக்கீங்க. நீங்க ரொம்பப் பெரியவராத்தான் இருக்கனும். உ.வே.சா கிட்ட படிச்சிருக்கீங்களே. அப்ப ஒங்களுக்கு கி.வா.ஜா, வாரியார் எல்லாரையும்...."

"ஓ! நல்லாத் தெரியுமே? வாரியாருக்கு வெண்பா எழுதக் கத்துக்குடுத்ததே நாந்தான். கி.வா.ஜாவுக்குச் சிலேடையா பேசச் சொல்லிக் குடுத்ததே நாந்தான். அது மட்டுமில்ல.....கவிமணி, தமிழ்த்தாய் வாழ்த்து எழுதுன மனோண்மணீயம் சுந்தரம் பிள்ளை, உவமைக் கவிஞர் சுரதா....ஏன் இப்ப இருக்குற அப்துல்ரகுமான் வரைக்கும் என் கிட்ட படிச்சவங்கதான். இன்னொன்னு சொல்றேன். மெல்லிசை மன்னர் கிட்டப் பேசி தமிழ்த் தாய் வாழ்த்துப் பாட டி.எம்.சௌந்தரராஜனுக்கும் பி.சுசீலாவுக்கும் வாய்ப்பு வாங்கிக் குடுத்ததே நாந்தான்."

செந்திலின் தோளில் கை வைக்கிறார் கவுண்டமணி. "ஆமாமா! நீங்க கத்துக்குடுத்துதான் அவங்க ரொம்ப முன்னேறிட்டாங்க. ஆனா பாருங்க. நீங்க மட்டும் ஆசிரியராவே இன்னமும் இருக்கீங்க. சரி...அதென்னவோ பிழைன்னு சொன்னீங்களே. அது என்ன?"

"செருவில் ஒருவ அப்படீன்னு பையன் சொன்னான். அது தப்பு. செருகு வில் உருவன்னு வந்திருக்கனும். நக்கீரர் ஓலைல எழுதும் போது தப்பா எழுதீட்டாரு."

"ஓ! நக்கீரர் கோழி கிறுக்குறாப்புல கிறுக்கி தப்பா எழுதீட்டாருன்னு சொல்றீங்க. சரி. இருக்கட்டும்." மாணவனை நோக்கி, "தம்பி,இந்த வரிக்கு நீ விளக்கம் சொல்லு."

"செருவில் ஒருவ அப்படீன்னா போர்க்களத்தில் தனியாக நிற்பவன்னு பொருள். அதாவது இறைவனை எதிர்த்து யாரும் போரிட முடியாதுங்குறதுதான் உட்பொருள். தமிழ் ஐயா சொல்றது போல செருகிய வில் உருவறது கிடையாது."

செந்திலின் கழுத்தில் இருக்கும் துண்டைப் பிடித்து இழுக்கிறார். "ஐயா. தமிழ் ஆசிரியரே. உ.வே.சா இருந்தது எப்ப? நீங்க பொறந்தது எப்ப? எங்கிட்டயே காது குத்துறீங்களே. செருன்னு ஒரு சொல். அதுக்குப் பொருள் தெரியலை. ஒங்களப் பத்தித் தலைமை ஆசிரியர் ரொம்ம்ம்ம்பப் புகழ்றாரு. அதெப்படி ஒங்க வகுப்புல மட்டும் எல்லாரும் நல்ல மதிப்பெண் வாங்குறாங்க?"

மாணவன் குட்டை உடைக்கிறான். "ஐயா. இவரு எப்பவும் ஒழுங்காவே பாடம் சொல்லித்தர மாட்டாரு. பாதி நேரம் வகுப்புல தூக்கம்தான். இன்னைக்கு நீங்க இருக்கிறதால தூங்காம இருக்காரு. இவரு சொல்லித்தர மாட்டாருன்னு தெரிஞ்சதால நாங்களே படிச்சிக்கிறோம். அதனாலதான் எல்லாருக்கும் நல்ல மதிப்பெண் கிடைக்குது."

"அப்படிச் சொல்லுடா தம்பி." செந்திலைப் பார்த்து, "இனிமே இந்த வகுப்புல நீதான் மாணவன். (மேசையைக் காட்டி) இனிமே இங்க நிக்கக் கூடாது. (மாணவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தைக் காட்டி) அங்கதான் உக்காரனும். புரிஞ்சதா?"

போலியான பணிவோடு, "புரிஞ்சது ஐயா."

"ரொம்ப நல்லது. எங்க செருன்னா என்னன்னு சொல்லு பாக்கலாம்."

"செருன்னா போர்க்களம் ஐயா."

கிண்டல் சிரிப்போடு. "இது..இது...இது நல்ல பிள்ளைக்கு அடையாளம். இப்பிடிப் பொருள் சொல்றத விட்டுட்டு செருப்புக்கு அலையக் கூடாது.புரிஞ்சதா?"

"புரிஞ்சது ஐயா."

"நல்லது." மாணவர்களை நோக்கி, "எங்க ஒவ்வொருத்தரும் வேறெந்த நூல்ல செருவைப் பத்திப் படிச்சிருக்கீங்கன்னு சொல்லுங்க பார்க்கலாம்."

அன்புடன்,
கோ.இராகவன்

Monday, June 09, 2008

தீண்டாய் மெய் தீண்டாய்...

கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே

(கன்றும் உண்ண முடியாது கலத்திலும் தங்கியிருக்காது
நல்ல தீம்பாலானது நிலத்தில் வீழ்ந்தது போல
எனக்கும் பயனில்லாது என் தலைவனுக்கும் உதவாது
பசலை நோய் தீர்ந்திடுமோ
என்னுடைய தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கவின் மிகு அழகே!)

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து என்னைத் தீண்டியதே
என் நரம்போடு வீணை மீட்டியதே
மனம் அவன்தானா இவன் என்று திடுக்கிட்டதே

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ



விழியோடும் தீண்டல் உண்டு விரலோடும் தீண்டல் உண்டு
இரண்டோடும் பேதம் உள்ளது
விழித்தீண்டல் உயிர் கிள்ளும் விரல் தீண்டல் உள்ளம் கிள்ளும்
அதுதானே நீ சொல்வது

நதியோரப் பூவின்மேலே ஜதிபாடும் சாரல் போலே
என்னில் இன்பதுன்பம் செய்குவதோ
ஒரு கன்னம் தந்தேன் முன்னே மறு கன்னம் தந்தாய் பெண்ணே
யேசுநாதர் காற்று வந்து வீசியதோ

உறவின் உயிரே உயிரே என்னைப்பெண்ணாய்ச் செய்க
அழகே அழகே உன் ஆசை வெல்க

(தீண்டாய்)

கடலோடு முத்தம் தந்தும் கலையாத வானம் போல
உடலோடு ஒட்டிக்கொள்ளவோ
உடலோடு அங்கும் இங்கும் உறைகின்ற ஜீவன் போல
உன்னோடு கட்டிக்கொள்ளவோ

உனைத் தேடி மண்ணில் வந்தேன் எனைத்தேடி நீயும் வந்தாய்
உன்னை நானும் என்னை நீயும் கண்டுகொண்டோம்

பல பேர்கள் காதல் செய்து பழங்காதல் தீரும்போது
பூமி வாழப் புதிய காதல் கொண்டுவந்தோம்

பனியோ பனியின் துளியோ உன் இதழ்மேல் என்ன
பனியோ தேனோ நீ சுவைத்தால் என்ன

(தீண்டாய்)

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

பொழுதுகளை குறிப்பிட்டுச் சொல்ல இன்னும் பேச்சு வழக்கிலும், எழுத்து நடையிலும் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக ஆங்கிலத்தில் 'குட்மார்னிங் சார்', 'குட் ஈவினிங் சார்' என படித்த தமிழர்களிடையே (மத்தியில்) வணங்க (WISH) பயன்படுத்தும் சொற்கள் மிகுந்து வழக்கில் இருக்கிறது .

புலம்பெயரும் போது தமிழர் மட்டுமல்ல பிற இந்திய மொழிக்காரர்களும் தத்தம் அடையாளத்தை கட்டிக் காக்கவும் சிலர் அதைவிட முதன்மையாக நாம் பேசுவது வெளிநாட்டுக்காரர்களுக்கு புரியக் கூடாது என்ற சூழ்நிலையில் அவரவர் மொழிகளை தூய்மையாகப் (சுத்தம்) பேச ஆரம்பிக்கின்றனர். இதுதான் புலம்பெயர்ந்த தமிழர்கள் முடிந்த அளவில் செந்தமிழில் பேசுவதற்கு காரணம். வெளிநாட்டில் தமிழருக்கிடையே அழைக்கும் போது அங்கு வாழும் தமிழர்கள் இயல்பாகவே 'வணக்கம்' , 'காலை வணக்கம்' என்று புழக்கத்திற்கு வந்து ஹலோவுக்கு விடை செல்லிவிட்டார்கள்

இத்தகைய பயிற்சி தமிழகத்து தமிழர்களுக்கு குறைவாக இருப்பதாலும் பலுக்குவதில் அதிக ஈடுபாடு, அக்கறை காட்டாததால் திரித்தும், தமிழகம் வணிக (வியாபார) காரணங்கள் மற்றும் அலுவல் தொடர்புடன் மற்ற மாநிலங்களுடன் இருப்பதால் மற்ற மாநில மொழிகளின் சொற்கள் தமிழகத்தில் பேச்சு வழக்கில் மிகுந்து இருக்கிறது.

எந்த ஒரு மொழியும் அது வேற்று மொழிச் சொற்களைக் ஏற்றுக் கொள்ளும் நிலை எவ்வாறு என்று ஆராய்ந்தால் அந்த மொழியில் புதிய பெயர் சொல்லையோ, வினைச்சொல்லையோ பொருள் மாறாமல் சொல்ல
சொற்களோ, கலைச் சொற்கள் அமைக்க வேர் சொற்கள் முற்றிலும் இல்லை என்ற ஒரு தீர்மான நிலையில் இயல்பாகவே அது பிற மொழிச் சொற்களை ஏற்றுக் கொள்கிறது. இது உலக மொழிகள் அனைத்திற்கும் பொருந்தும். நாம் இருப்பதை மறந்து கடினமான எழுத்துக்கள் அமைந்த சொற்களை ஏற்றுக் கொண்டு தமிழின் தொன்மை மற்றும் மென்மையை மறந்துவிட்டோம்.

பொழுதுகளைப் பற்றி சொல்லும் போது காலை வேளைகளை குறிப்பிட அதிகாலை (உதயம்), காலை என்றும் பகல் வேளைகளை குறிப்பிட மதியம் (மத்ய + சமயம் = மதியம் ?) என்ற சொல்கிறோம். அதையே முற்பகல், நடுப்பகல், பிற்பகல் என்று கால வேறுபாடுகளைக் குறித்து முறையாகக் குறிப்பிட்டால் மொழிக்கும் பொருளுக்கும் அழகு.

அதுபோல் மாலை நேரத்தை குறிக்க 'அந்தி வரும் நேரம்' என்றும் அந்தி என்றும் பாடல் ஆசிரியர்களைத் தவிர மற்றவர்கள் மிகுந்து பயன்படுத்துவதில்லை. சாயும் + காலம் = சாயங்காலம் (அஸ்தமனம்) எனவும் எளிதாக பிற்பகலின் பகுதியாக இருப்பதால் மாலை வேளை என்று குறிக்கலாம்.

இரவு பொழுதின் பல்வேறு வேளைகளைக் குறிக்க முன்னிரவு, நடு இரவு, பின்னிரவு என மூன்று கால அளவுகளில் குறியிடலாம். வெறும் இரவு என்றால் இரவு பொழுது முழுவதும் என்று பொருள் படுகிறது, அவ்வாறு சொல்ல வேண்டிய இடத்தில் மட்டும் இரவு என்பது சரி. ராத்திரி (ராத்ரி) என்று சொல்வதைவிட இரவு என்று சொல்வதால் இரவின் கருமைக்கு குறைபாடு இல்லை. இரவு என்பது தனித்தமிழ்ச் சொல். பொதுவாக முன் ராத்திரி, பின் ராத்திரி என சொல்வதில்லை, அங்கெல்லாம் சரியாகவே முன்னிரவு, பின்னிரவு என குறிப்பிடுகிறோம். நடு இரவு-க்கு பதில் நடு ராத்திரி என்று சொல்கிறோம் அப்படிச் சொல்வதும் தற்போது குறைவாகவே வழக்கில் இருந்து வருகிறது.

கடந்த மாதம் நான் சென்னை சென்றிருந்த போது பி.எஸ்.என்.எலின் செல்பேசி குறித்த தமிழக விளம்பரத்தில் 'ஒரு வருட வேலிடிட்டியுடன்' என்று தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து தமிழெழுத்துகளில் விளம்பரப் படுத்தி இருந்தார்கள். அதாவது அந்த குறிப்பிட்ட சலுகை உடைய தொடர்பு திட்டத்தை (wireless plan) ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்க அவ்வாறு எழுதி இருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். எளிமையாக 'ஓர் ஆண்டு பயனுடன் அல்லது ஓர் ஆண்டு பயன்படுத்த' என்றும் குறிக்க முடியும் என்ற போதிலும் அரசாங்க அமைப்பே இத்தகைய கலப்புக்கு துணை போவது வியப்பாகவும், வருத்தமாகவும் இருந்தது.

உதயம், மதியம்,அஸ்தமம், இராத்திரி என்று சொல்வது பற்றியும் காலை, பகல், மாலை, இரவு என்பது பற்றியம் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.