Wednesday, May 07, 2008

இணைய எழுத்துகள் எழுதியவருக்குச் சொந்தமா இல்லையா?

இணையத்தில் எழுத வந்த நாள் முதல் இந்த கேள்வி உண்டு. என்னுடைய வலைப்பதிவுகளில் நான் எழுதிய இடுகைகள் அப்படியே ஒரு சொல்லும் மாறாமல் மற்ற இணையத் தளங்களிலும் வலைக்குழுமங்களிலும் இருப்பதை பல முறை கண்டிருக்கிறேன். சில நேரங்களில் என் இடுகையோ என் பதிவோ தொடுப்பாகக் கொடுக்கப் பட்டிருக்கும். சில நேரம் என் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வகையில் இருந்தால் சரி 'கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்துவிட்டார்கள்' என்று மகிழ்ந்திருப்பேன். பல இடங்களில் அப்படி எந்த விதக் குறிப்பும் இல்லாமல் அப்படியே நான் எழுதியது எழுத்துப்பிசகாமல் இருப்பதைக் காணும் போது மெல்லிய சினம் படர்வதைத் தவிர்க்க முடிவதில்லை. ஒருவருடைய எழுத்து பிடித்திருந்தால் அவரிடம் அனுமதி பெற்றே மற்ற இடத்தில் அதனை எடுத்து இடவேண்டும் என்று ஒரு புரிதல் இருக்கிறது. ஆனால் இணையத்தில் அது எல்லா நேரங்களிலும் செய்ய முடிவதில்லை. அதனால் சுட்டியை மட்டும் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. அந்த அளவிற்காவது என் எழுத்துகளை எடுத்து இடும்போது குறிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

இவ்வளவு தூரம் மெனக்கெட்டு ஏன் இதனை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? நாளை யாராவது ஒருவர் அப்படி எந்த வித குறிப்பும் இல்லாமல் என் எழுத்துகள் இருக்கும் வலைப்பக்கத்தைப் பார்த்துவிட்டு அதனைத் திருடித் தான் என் எழுத்து என்று சொல்லிக் கொண்டு என் வலைப்பதிவில் எழுதுகிறேன் என்று சொல்லிவிட்டால்? :-)

ஒரே ஒரு எடுத்துக்காட்டு: http://www.mayyam.com/hub/viewtopic.php?t=10549&postdays=0&postorder=asc&start=0 ('மாயோன் புகழ் பாடும் தொல்காப்பியம்' என்னும் என் இடுகை தலைப்பிலிருந்து எதுவுமே மாறாமல் அப்படியே இருக்கிறது. ஆனால் என் பெயரோ இடுகையோ பதிவோ குறிக்கப்படவில்லை)

நல்ல இடத்துச் சம்பந்தம்

"அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?" ரொம்பப் பேர் கேட்டிருப்போம். இதில் வரும் சம்பந்தம் என்ற சொல் தூய தமிழ்ச் சொல் இல்லை. இன்றைக்குப் பயன்பாட்டில் இந்தச் சொல் இருக்கிறது. இதற்கான இணைச் சொல் தமிழில் தொடர்பு எனப்படும். இந்தச் சொல்லை இனியாவது நிறைய பயன்படுத்த வேண்டும். சம்பந்தம் இருக்கையில் தொடர்பு தேவையா எனக் கேட்கலாம். சரிதான். சம்பந்தம் இருக்கட்டும். தொடர்பு ஏன் இல்லாமல் போக வேண்டும். ஆகையால் தொடர்பைப் பேச்சில் இனிமேல் தொடர்பு படுத்துவோம்.

( திருஞான சம்பந்தர் இருந்தாரல்லவா. தமிழ் பிழைக்கப் பாடிய பிள்ளை அவர். அவர் அறிவோடு தொடர்ந்தவர் என்பதால்தான் அவருக்குத் திருஞான சம்பந்தர் என்று பெயர். திருஞானம் என்றால் மெய்ப் பொருள். மெய்பொருள் என்பது இறையருள். பெயர்ப் பொருள் புரிந்ததா! )

அன்புடன்,
கோ.இராகவன்

Tuesday, May 06, 2008

ஆத்திகம், நாத்திகம்

இந்த இரு சொற்களையும் நாம் எல்லோரும் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகிறோம். எனக்குத் தெரிந்தவரை இவை இரண்டும் வடமொழியடிப்படையில் வந்த சொற்கள். ஆஸ்திகம் - 'உண்டு' என்று சொல்லும் இயல், நாஸ்திகம் - 'இல்லை' என்று சொல்லும் இயல் என்று வடமொழியில் பொருள். அவற்றை முறையே தமிழில் ஆத்திகம் என்றும் நாத்திகம் என்றும் புழங்கிக்கொண்டிருக்கிறோம்.

இல்லை, இவையிரண்டும் தமிழ்ச் சொற்களே. இவையே வடமொழியில் ஆஸ்திகம், நாஸ்திகம் என்று ஆக்கப்பட்டது என்று ஒலி, எழுத்து முதலிய அடிப்படைகளில் இராம.கி. போன்ற தமிழறிஞர்கள் விளக்கினால் இவை தமிழென்று ஏற்றுக் கொண்டு தொடர்ந்து புழங்கலாம்.

அப்படியின்றி இவை இரண்டும் வடமொழிச் சொற்களே; தமிழில் ஆத்திகம், நாத்திகம் என்று வடமொழிச் சொற்களே புழங்குகின்றன என்றால் அவற்றிற்குத் தகுந்த தமிழ்ச் சொற்களைப் புழங்கத் தொடங்கலாம் என்று எண்ணுகிறேன்.

சில இடங்களில் நாத்திகர் என்பதற்கு 'கடவுள் மறுப்பாளர்' என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். ஆஸ்திகர் என்பவர்கள் கடவுள், ஆன்மா (உயிர்?), கர்மா (வினை) இவை 'உண்டு' என்று சொல்பவர்கள். அதற்கு நேரெதிராக இவை எல்லாம் 'இல்லை' என்று சொல்பவர்கள் நாத்திகர்கள். 'கடவுள் மறுப்பாளர்' என்பது 'உண்டு' என்று சொல்லப்பட்ட மூன்றில் ஒன்றை மட்டுமே மறுப்பவர்களைக் கூறுகிறது. மூன்றையும் மறுப்பவர்கள் என்று சொல்லும்படியான சொல்லோ சொற்றொடரோ இருக்கிறதா? இல்லை இந்த 'கடவுள் மறுப்பாளர்' என்ற சொற்றொடரே மூன்றையும் மறுப்பதைக் குறிக்குமா? அதற்கு எதிராக ஆத்திகர் என்பதற்குத் தகுந்த தமிழ்ச்சொல் என்ன?

குறிப்பு: இந்தப் பதிவு ஆத்திகர்களையோ நாத்திகர்களையோ போற்றியோ இகழ்ந்தோ எந்த விதமான உ.கு., வெ.கு., நே.கு., நி.கு. வைத்தோ எழுதப்படவில்லை. ஆத்திகம், நாத்திகம் என்னும் சொற்களை ஆய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம். அதனால் அந்த நோக்கத்திற்கு ஏற்ற மாதிரிப் பின்னூட்டங்களே இடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

Virtual: மெய்நிகர்

இராம.கி. ஐயா அவர்களின் வளவு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருந்த போது இந்த 'மெய்நிகர்' என்ற சொல்லை 'Virtual' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தியிருந்ததைப் பார்த்தேன். இது ஒரு நல்ல பரிந்திரை ஆயிற்றே என்று தோன்றியது. அதனால் இந்த வாரச் சொல்லாக அதனை இங்கே தருகிறேன்.

இந்தத் தமிழ்ச்சொல்லை யாராவது புழங்குகிறார்களா என்று கூகிளில் தேடியபோது நிறைய சுட்டிகள் கிடைத்தன. அவற்றில் இந்தச் சொல் பயன்பட்டிருக்கும் இடங்கள்:

1. மெய்நிகர் கன்சோல் - Virtual Console
2. மெய்நிகர் வட்டு - Virtual Disk
3. மெய்நிகர் முனையம் - Virtual Terminal
4. மெய்நிகர் அகராதி - Virtual Dictionary
5. மெய்நிகர் திரைகள் - Virtual Screens
6. மெய்நிகர் தாள் - Virtual Paper
7. மெய்நிகர் வாழ்க்கை - Virtual Life
8. மெய்நிகர் முகவரி - Virtual Address
9. மெய்நிகர் கணினி - Virtual Computer (இராம.கி. ஐயா கணினி என்று சொல்லாமல் கணி என்றே கம்ப்யூட்டரைக் குறிப்பதையும் அவர் வலைப்பதிவில் கண்டேன். )
10. மெய்நிகர் பல்கலைக்கழகம் - Virtual University

இப்படி நிறைய எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. கூகிளில் பாருங்கள். ஏற்கனவே இந்தச் சொல் புழக்கத்தில் வந்துவிட்டது போலும். இன்னும் நம்மைப் போன்ற தமிழார்வலர் அல்லாதாரும் இந்தச் சொல்லைப் புழங்கத் தொடங்கினால் விரைவில் இதுவும் கணினி என்பதைப் போல் அனைவரும் புரிந்து கொள்ளும் ஒரு சொல்லாக கட்டாயம் மாறும்.

***

இந்த மாதிரி சொல்லைப் பரிந்துரைப்பது எவ்வளவு உதவியாக இருக்கிறது? உங்களால் இந்தச் சொற்களை எழுத்திலோ பேச்சிலோ புழங்க முடிகிறதா? அப்படிச் செய்ய முடிந்தால் தான் இந்த வலைப்பதிவுகளால் பயன். இல்லை இது வீண் வேலையாகவே முடியும்.

இரு வாரங்களுக்கு முன் 'ஒளவியம்' என்றச் சொல்லைப் பார்த்தோம். என்னால் ஒரே ஒரு முறை எழுத்தில் மட்டுமே அதனைப் பயன்படுத்த முடிந்தது. அதற்குக் காரணம் பொறாமை என்ற சொல்லை மிகுதியாகப் பயன்படுத்துவதில்லை என்பது தான். ஆனால் அதற்கு முன் சொல்லப்பட்டச் சொற்களை நன்கு பயன்படுத்த முடிகிறது. உங்கள் நிலை எப்படி?

Saturday, May 03, 2008

ஒளவியம்: பொறாமை

இந்த ஒளவியம் என்ற சொல்லை இதற்கு முன் ஓரிரு முறை கேட்டிருந்தாலும் இதற்கு என்ன பொருள் என்று மனதில் ஏற்றிக் கொள்ளவில்லை போலும். இன்று ஒரு வலைப்பதிவு போடுவதற்காக ஒள என்று தொடங்கும் வார்த்தைகளை கூகுளில் தேடியபோது இந்தச் சொல் அகப்பட்டது. மேலும் தேடிய போது கூகிளாண்டவரால் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில் மூன்றினைத் தான் தர முடிந்தது.

1. ஒளவியம் பேசேல் - ஒளவையாரின் ஆத்திச்சூடியில் வருவது இது. ஓரிடத்தில் இதற்கு 'பொறாமையுடன் கூடிய சொற்களைப் பேசாதீர்கள்' என்று பொருள் சொல்லியிருக்கிறார்கள். இன்னோரிடத்தில் ஒளவியம் என்பதற்குப் 'பொறாமை, தீவினை' என்ற பொருள் தரப்பட்டிருக்கிறது.

2. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு - இதுவும் ஒளவையார் சொன்னதே. கொன்றை வேந்தனில். இங்கும் பொறாமை என்ற பொருளே ஒளவியம் என்ற சொல்லிற்குத் தரப்பட்டுள்ளது.

3. மூன்றாவது சுட்டி சண்முகக் கவசத்தைத் தந்தது.

ஒளவியம் உளர், ஊன் உண்போர்
அசடர், பேய், அரக்கர், புல்லர்,
தெவ்வர்கள் எவரா னாலும்
திடமுடன் எனை மல் கட்டத்
தவ்வியே வருவார் ஆயின்
சராசரம் எலாம் புரக்கும்
கவ்வுடைச் சூர சண்டன்
கைஅயில் காக்க காக்க

பொறாமை உள்ளோர், உயிர்வதை செய்து ஊன் உண்போர், அசடர், பேய், அரக்கர், புல்லர், பகைவர்கள் எவரானாலும் என்னுடன் மல்லாட (சண்டையிட) தாவியே (தவ்வியே) வருவார்கள் ஆயின் உலகத்தில் அசையும் அசையாப் பொருட்கள் யாவும் காக்கும் பெருமையுடைய சூரனை எதிர்த்தவன் கையில் இருக்கும் வேல் காக்கட்டும்.

(தெவ்வர் - பகைவர்.
சராசரம் - சரம் + அசரம். அசையும் பொருட்கள் சரம். அசையாப் பொருட்கள் அசரம்.
புரத்தல் - காத்தல்.
கவ்வு - பெருமை.
அயில் - வேல்)

ஒளவில் தொடங்கும் சொற்கள் மிகக் குறைவாகத் தான் இருக்கின்றன. இந்த 'ஒளவியம்' என்ற சொல் அழகான சொல்லாக இருக்கிறது. நாமும் பொறாமை என்ற சொல்லைப் பல இடங்களில் புழங்குகிறோம். ஓரிரு முறை பொறாமை என்று சொல்லாமல் ஒளவியம் என்றுச் சொல்லத் தொடங்குவோமானால் இந்தச் சொல் மீண்டும் புழக்கத்திற்கு வரும்.

உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதாவது சொல் 'ஒள' என்று தொடங்குகிறதா? உடனே எல்லோருக்கும் நினைவிற்கு வருவது 'ஒளவை'யும் 'ஒளடதமு'ம் தான். வேறு ஏதாவது சொல்?

Friday, May 02, 2008

விஷயம்: விதயம், செய்தி, சங்கதி...

இது ஏறக்குறைய மறுபதிவு போலத் தான். இந்தத் தலைப்பில் பதிவு போடவில்லையே ஒழிய இந்த 'விஷயம்' என்ற சொல்லை பின்னூட்டங்களில் நண்பர்கள் நன்றாக அலசியிருக்கிறார்கள். தருமி ஐயா இந்த 'விஷயம்' என்பதற்கான கருத்துரையாடல்கள் ஒரு தனிப்பதிவாக இருந்தால் அது நன்றாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியதாலும் பின்னூட்டங்களில் பேசப்பட்ட கருத்துகள் தனிப்பதிவாக இருந்தால் அவற்றைத் தேடிப் படிக்கவேண்டிய தேவை இல்லாமல் எளிதாகப் பதிவுகளின் தலைப்புகளை வைத்துப் படிக்க எளிதாகும் என்பதாலும் இங்கு அதனைத் தனிப்பதிவாகப் போடுகிறேன்.

விஷயத்திற்கு 'செய்தி' 'சேதி' என்ற சொற்களை சில இடங்களில் புழங்கலாம்.

'கருத்து' என்ற சொல்லும் சில இடங்களில் பொருத்தமாக வரும்.

'விடயம்' என்று சிலர் புழங்குகிறார்கள். அது வலிய வரவழைத்துக் கொண்ட சொல் போல் தோன்றுகிறது. அது எப்படி 'விஷயம்' என்ற சொல்லுக்கு நேரான சொல் ஆகிறது என்று யாராவது விளக்குவார்களா?

'சங்கதி' என்ற சொல்லையும் சில இடங்களில் பயன்படுத்தலாம்.

'தகவல்' என்றும் சொல்லலாம்.

இவையெல்லாம் நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்துப் போட்டிருக்கிறேன். இவை சரியான சொற்களாகத் தோன்றுகிறதா? எந்த இடங்களில் பயன்படுத்தலாம் என்று எடுத்துக்காட்டுகள் தர முடியுமா? வேறு ஏதேனும் சொற்கள் விஷயம் என்பதற்குப் பதிலாகப் புழங்கலாமா? நண்பர்களே சொல்லுங்கள்.

Thursday, May 01, 2008

உயிரெழுத்துகள் பத்தா? பன்னிரண்டா?

உயிரெழுத்துகள் எத்தனை என்று கேட்டு முன்பு ஒரு பதிவு போட்டிருந்தேன். அந்தப் பதிவில் வந்த பின்னூட்டங்களில் எழுந்த கேள்வி இது. நம்மில் பலர் ஐ, ஒள போன்ற உயிரெழுத்துகள் பயின்று வரும் சொற்களை அய் என்றும் அவ் என்று எழுதுகிறார்கள்.

சில எடுத்துக்காட்டுகள்:

ஐந்து - அய்ந்து
ஐயனார் - அய்யனார்
ஐயப்பன் - அய்யப்பன்
ஐயா - அய்யா
ஐயம் - அய்யம்
ஐ.நா - அய்.நா
வைரம் - வயிரம்
ஒளவையார் - அவ்வையார்
கௌதாரி - கவுதாரி
கௌசிகன் - கவுசிகன்
மௌலி - மவுலி
பௌர்ணமி - பவுர்ணமி
பௌவம் - பவ்வம்
ரௌத்திரம் - ரவுத்திரம்
வௌவால் - வவ்வால்

இப்படியே சொல்லிக் கொண்டே போகலாம்.

ஆனால் சில சொற்களை இப்படி மாற்றி எழுதுவதில்லை.

கைதி - கய்தி
கைம்பெண் - கய்ம்பெண்
கைத்தலம் - கய்த்தலம்
சைதை - சயிதை
தை - தய்
பை - பய்
பைய - பய்ய
பையன் - பய்யன்
மை - மய் (மையம் - மய்யம் என்று எழுதுவதுண்டு)
லைலா - லய்லா
வை - வய்

ஏன் இந்தச் சொற்களை மாற்றி எழுதுவதில்லை? இப்படி சில சொற்களை மாற்றி எழுதியும் சில சொற்களை மாற்றாமல் விடுவதற்கும் ஏதாவது புதிய இலக்கணம் வந்துவிட்டதா? இல்லை சொல்லிலக்கணம் அறியாமல் போனதால் வந்த விளைவா இது? தெரிந்தவர்கள் சொன்னால் அறிந்து கொள்வேன்.

மேலே எடுத்துக்காட்டுகளில் சொன்னபடி எழுதுவது சரி; தற்போது அது நடைமுறைக்கு வந்துவிட்டது என்று சொல்பவர்கள் அப்படியே விரைவில் உயிரெழுத்துகள் பத்து தான்; ஐயும் ஒளவும் தேவையில்லை என்பதனையும் தெளிவாகச் சொல்லிவிட்டால் ஒரு அரசாணையின் மூலம் அதனைச் செயல்படுத்த பரிந்துரையும் செய்யலாம். என்ன சொல்கிறீர்கள்? :-)

டிஸ்கி: தலைப்பைப் பார்த்து சில பேர் உணர்ச்சி வசப்படுவதாகப் பின்னூட்டங்களிலிருந்து தெரிகிறது. அந்தத் தலைப்பு உங்களை இந்தப் பதிவிற்கு அழைத்துவருவதற்காக வைக்கப்பட்டத் தலைப்பேயன்றி வேறில்லை. அனைவருக்கும் 'உயிரெழுத்துகள் 12' என்பதில் எந்த வித ஐயமும் இல்லை என்பது தெரியும்.