Tuesday, March 27, 2007

திவ்ய பிரபந்த பாசுர இராமாயணம்


இராமாயணக் கதை பல இந்திய மொழிகளில் பாடப்பட்டிருக்கிறது. ஆதி காவியம் என்ற வால்மீகி இராமாயணம், அதற்கு முன்னர் இருந்த பல இராமாயணங்கள், தமிழில் கம்பரின் இராமாவதாரம், இந்தியில் துளசிதாசரின் இராமசரிதமானஸ் என்று பல மொழிகளிலும் பிரபலமான இராமாயணங்கள் இருக்கின்றன. சங்க காலத்திலும் இராமாயணக் காவியங்கள் இருந்துள்ளதாக பலத் தனிப்பாடல்கள் மூலம் எடுத்துக் காட்டும் கட்டுரை ஒன்றை மதுரை திட்டத்தின் வலைப்பக்கத்தில் படித்திருக்கிறேன்.

ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்னும் நாலாயிர திவ்ய பிரபந்தத்திலிருந்து பாசுர வரிகளைக் கொண்டு வியாக்கியான சக்ரவர்த்தி என்று பெயர் பெற்ற பெரியவாச்சான் பிள்ளை என்ற வைணவ ஆசார்யர் தொகுத்த இராமாயணம் ஒன்று இருக்கிறது. அது பாசுரப்படி இராமாயணம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இராமாயணத்தைப் பாடினால் ஆழ்வார்களின் பாசுரங்களைப் படித்த பயனும் இராமாயணம் பாடிய பயனும் ஒருங்கே கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த இனிய இராமாயணத்தை இங்கே இராமநவமி புண்ணிய தினமான இன்று இடுவதற்கு எம்பெருமானின் திருவருள் அமைந்தது என் பாக்கியம்.

***

திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழ
நலம் அந்தம் இல்லதோர் நாட்டில்
அந்தம் இல் பேரின்பத்து அடியரோடு
ஏழுலகம் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியான
அணியார் பொழில் சூழ் அரங்க நகர் அப்பன்
அலை நீர்க் கடலுள் அழுந்தும் நாவாய் போல்
ஆவார் யார் துணையென்று துளங்கும்
நல்ல அமரர் துயர் தீர
வல்லரக்கர் இலங்கை பாழ்படுக்க எண்ணி
மண்ணுலகத்தோர் உய்ய
அயோத்தி என்னும் அணி நகரத்து
வெங்கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்
கௌசலை தன் குல மதலையாய்
தயரதன் தன் மகனாய்த் தோன்றி
குணம் திகழ் கொண்டலாய்
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காக்க நடந்து
வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி
வல்லரக்கர் உயிருண்டு கல்லைப் பெண்ணாக்கி
காரார் திண் சிலை இறுத்து
மைதிலியை மணம் புணர்ந்து
இருபத்தொருகால் அரசு களைகட்ட
மழு வாளி வெவ்வரி நற்சிலை வாங்கி வென்றி கொண்டு
அவன் தவத்தை முற்றும் செற்று
அம்பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி
அரியணை மேல் மன்னன் ஆவான் நிற்க
கொங்கை வன் கூனி சொற்கொண்ட
கொடிய கைகேயி வரம் வேண்ட
அக்கடிய சொற்கேட்டு
மலக்கிய மாமனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இந்நிலத்தை வேண்டாது
ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கு ஒழிந்து
மைவாய களிறொழிந்து மாவொழிந்து தேரொழிந்து
கலன் அணியாதே காமர் எழில் விழல் உடுத்து
அங்கங்கள் அழகு மாறி
மானமரு மென்னோக்கி வைதேவி இன் துணையா
இளங்கோவும் வாளும் வில்லும் கொண்டு பின் செல்ல
கலையும் கரியும் பரிமாவும்
திரியும் கானம் கடந்து போய்
பத்தியுடை குகன் கடத்தக் கங்கை தன்னைக் கடந்து
வனம் போய் புக்குக் காயொடு நீடு கனியுண்டு
வியன் கான மரத்தின் நீழல்
கல்லணை மேல் கண் துயின்று
சித்திரகூடத்திருப்ப தயரதன் தான்
நின் மகன் மேல் பழி விளைத்திட்டு
என்னையும் நீள்வானில் போக்க
என் பெற்றாய் கைகேசீ
நானும் வானகமே மிக விரும்பிப் போகின்றேன்
என்று வான் ஏற
தேனமரும் பொழில் சாரல் சித்திரகூடத்து
ஆனை புரவி தேரொடு காலாள்
அணி கொண்ட சேனை சுமந்திரன்
வசிட்டருடன் பரதநம்பி பணிய
தம்பிக்கு மரவடியை வான் பணயம் வைத்துக் குவலய
துங்கக் கரியும் பரியும் இராச்சியமும்
எங்கும் பரதற்கு அருளி விடை கொடுத்து
திருவுடைய திசைக்கருமம் திருத்தப் போய்
தண்டகாரணியம் புகுந்து
மறை முனிவர்க்கு
அஞ்சேல்மின் என்று விடை கொடுத்து
வெங்கண் விறல் விராதனுக வில் குனித்து
வண்டமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
புலர்ந்து எழுந்த காமத்தால் சீதைக்கு நேராவள்
என்னப் பொன்னிறம் கொண்ட
சுடு சினத்த சூர்ப்பனகாவை
கொடி மூக்கும் காதிரண்டும்
கூரார்ந்த வாளால் ஈரா விடுத்து
கரனொடு தூடணன் தன்னுயிரை வாங்க
அவள் கதறித் தலையில் அங்கை வைத்து
மலை இலங்கை ஓடிப் புக
கொடுமையில் கடுவிசை அரக்கன்
அலை மலி வேற் கண்ணாளை அகல்விப்பான்
ஓர் உருவாய் மானை அமைத்துச் சிற்றெயிற்று
முற்றல் மூங்கில் மூன்று தண்டத்தனாய் வஞ்சித்து
இலைக் குரம்பில் தனி இருப்பில்
கனி வாய்த் திருவினைப் பிரித்து
நீள் கடல் சூழ் இலங்கையில்
அரக்கர் குடிக்கு நஞ்சாகக் கொடு போய்
வம்புலாங் கடிகாவில் சிறையாய் வைக்க
அயோத்தியர் கோன் மாயமான் மாயச் செற்று
அலைமலி வேற்கண்ணாளை அகன்று தளர்வெய்தி
சடாயுவை வைகுந்தத்து ஏற்றி
கங்குலும் பகலும் கண் துயிலின்றி
கானகம் படி உலாவி உலாவி
கணை ஒன்றினால் கவந்தனை மடித்து
சவரி தந்த கனி உவந்து
வனம் மருவு கவியரசன் தன்னோடு காதல் கொண்டு
மரா மரம் ஏழு எய்து
உருத்து எழு வாலி மார்பில்
ஒரு கணை உருவ ஓட்டி
கருத்துடைத் தம்பிக்கு
இன்பக் கதிர் முடி அரசளித்து
வானரக் கோனுடன் இருந்து வைதேகி தனைத் தேட
விடுத்த திசைக் கருமம் திருத்து
திறல் விளங்கு மாருதியும்
மாயோன் தூது உரைத்தல் செப்ப
சீர் ஆரும் அநுமன் மாக்கடலைக் கடந்தேறி
மும்மதிள் நீள் இலங்கை புக்குக் கடிகாவில்
வாராரு முலை மடவாள் வைதேகி தனைக் கண்டு
நின் அடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியம் போதின் இருத்தல்
மல்லிகை மாமலை கொண்டு அங்கார்த்ததும்
கலக்கிய மா மனத்தளாய் கைகேயி வரம் வேண்ட
மலக்கிய மா மனத்தனனாய் மன்னவனும் மறாதொழிய
குலக்குமரா காடுறையப் போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னோடு அங்கு ஏகியதும்
கங்கை தன்னில்
கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திரக் கூடத்திருப்ப பரத நம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலை தீண்ட மூவுலகும் திரிந்து ஓடி
வித்தகனே ராமா ஓ நின்னபயம் என்ன
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்னொத்த மான் ஒன்று புகுந்து இனிது விளையாட
நின்னன்பின் வழி நின்று சிலை பிடித்து எம்பிரான் ஏக
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈது அவன் கை மோதிரமே என்று
அடையாளம் தெரிந்து உரைக்க
மலர்குழலாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அனுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சி மேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன் மாக்கடிகாவை இறுத்து
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர் கோன் சினம் அழித்து மீண்டு அன்பினால்
அயோத்தியர் கோன் தளிர் புரையும் அடியிணை பணிய
கான எண்கும் குரங்கும் முசுவும்
படையாக் கொடியோன் இலங்கை புகல் உற்று
அலையார் கடற்கரை வீற்று இருந்து
செல்வ விபீடணற்கு நல்லானாய்
விரிநீர் இலங்கை அருளி
சரண் புக்க குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து
கொல்லை விலங்கு பணி செய்ய
மலையால் அணை கட்டி மறுகரை ஏறி
இலங்கை பொடி பொடியாக
சிலை மலி வெஞ்சரங்கள் செல உய்த்து
கும்பனொடு நிகும்பனும் பட
இந்திரசித்து அழியக் கும்பகர்ணன் பட
அரக்கர் ஆவி மாள அரக்கர்
கூத்தர் போலக் குழமணி தூரம் ஆட
இலங்கை மன்னன் முடி ஒருபதும்
தோள் இருபதும் போய் உதிர
சிலை வளைத்துச் சரமழை பொழிந்து
மணி முடி பணி தர அடியிணை வணங்க
கோலத் திருமாமகளோடு
செல்வ வீடணன் வானரக் கோனுடன்
இலகுமணி நெடுந்தேரேறி
சீர் அணிந்த குகனோடு கூடி
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோத்தி எய்தி
நன்னீராடி
பொங்கிளவாடை அரையில் சாத்தி
திருச்செய்ய முடியும் ஆரமும் குழையும்
முதலா மேதகு பல்கலன் அணிந்து
சூட்டு நன்மாலைகள் அணிந்து
பரதனும் தம்பி சத்துருக்கனனும்
இலக்குமணனும் இரவு நன்பகலும் ஆட்செய்ய
வடிவிணை இல்லாச் சங்கு தங்கு முன்கை நங்கை
மலர்க்குழலாள் சீதையும் தானும்
கோப்புடைய சீரிய சிங்காதனத்திருந்து ஏழுலகும்
தனிக்கோல் செல்ல வாழ்வித்து அருளினார்

- பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் -

***

எம்பெருமான் திருவுளம் இருந்தால் இந்தப் பாசுரப்படி இராமாயணத்துக்கு விளக்கத்தை வருங்காலத்தில் எழுதுகிறேன். ஏதேனும் சொற்களுக்கு ஆங்காங்கே பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள்.

Saturday, March 24, 2007

தனித்துவமானவன்...உங்களைப் போலவே!

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு


என்னங்க திருக்குறள் சொல்லித் தொடங்கறேனேன்னு பாக்கறீங்களா? இந்த மாதிரி திருக்குறளுக்கும் மத்த இலக்கியங்களுக்கும் பொருள் சொல்லி சொல்லித் தானே ஒரு இமேஜ் (??!!) இந்த வலைப்பதிவு மன்றத்துல எனக்கு (அடியேனுக்கு?!! - ஆமாம் எழுதுறப்ப மட்டும் பணிவு வந்துடும்) வந்திருக்கு. அதுக்கு வேட்டு வைக்கணும்ன்னே ரெண்டு மருத்துவர்கள் பேசி வைத்துக் கொண்டு சதி செய்கிறார்களோ என்ற ஐயம் இருந்தது. ஏன்னா மருத்துவர்கள் கொஞ்சம் மனோதத்துவமும் படிச்சிருப்பாங்கன்னு சொல்லுவாங்க. இவங்க ரெண்டு பேரும் வலைப்பதிவுகளைத் தாண்டியும் நம்மளைப் படிச்சிட்டாங்களோன்னு தோணிச்சு. நல்ல வேளையா சந்தோஷ் தம்பியும் நம்மளை விநோதமான ஆளுன்னு தெரிஞ்சி வச்சிக்கிட்ட மாதிரி கூப்பிட்டாரு. அப்பாடா. ஊரு உலகம் எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கு நம்மளைப்பத்தின்னு ஒரு ஆறுதல்!






அன்புடையார் எலும்பையும் மற்றவர்களுக்குக் கொடுப்பார்களாம். அது போல தங்களை உரித்து தங்கள் எலும்பையும் எல்லாருக்கும் காட்டுகிறார்கள் நம் மக்கள். வலைப்பதிவுகள் எல்லாம் எலும்புக்கூடுகளாய் தொங்குவதைப் பார்த்து எனக்குக் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. பயந்தது போல் என் தோலையும் உரிக்க மூவர் சதி செய்துவிட்டார்கள். அவர்களைத் திட்டிக் கொண்டே நீங்கள் இதனைப் படித்துவிடுங்கள். அன்பு உள்ளவர்களை எப்படி திட்டுறதுன்னா கேக்கறீங்க? நான் திட்டுவேனுங்க. ஏன்னா நான் Weird Fellow!!!

இதுவரை எழுதுன எந்த இடுகைக்கும் வீட்டுல ஐடியா கேட்டதில்லை. இந்த இடுகைக்குக் கேக்க வச்சிட்டாய்ங்க. நானும் வழிஞ்சுக்கிட்டே கேட்டேனே. ஆகா இது தான் சான்ஸுன்னு அவங்களும் ரெண்டு மூணு சொன்னாங்க. அவங்க சொன்னதை மொதோ சொல்லிடறேன்.





1. கோவிலுக்குப் போனா எல்லாரும் என்ன செய்வாங்க? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேந்து நின்னு சாமி கும்பிடுவாங்க தானே. தங்கமணி சொல்றாங்க நான் கோவிலுக்குப் போனா அவங்க இருக்கிறதையே மறந்துடறேனாம்.

ஒரு தடவை அவங்களோட சாமி கும்பிட்டு இந்தப் பக்கம் வந்ததும் அவங்களையும் கோவிலுக்கு எங்களோட வந்த மத்தவங்களையும் உக்கார வச்சுட்டு இன்னொரு தடவை போயி சாமி கும்பிட்டுட்டு வருவேன். திருப்பதியில மட்டும் அதை செய்ய முடியறதில்லை. அதனால சாமி பக்கத்துல போறப்போ காணாமப் போயிடுவேன். எல்லாரும் தீர்த்தம் வாங்கிட்டு காத்துக்கிட்டு இருப்பாங்க. நான் சாமி பாத்துட்டு மெதுவா வருவேன். மொதோ தடவை அவங்க குடும்பம், எங்க குடும்பம் எல்லாரும் சேர்ந்து போயிருந்தப்ப நான் வெளிய வர்றதுக்கு ரொம்ப நேரம் ஆச்சு. தங்கமணி அலட்டிக்காம நின்னாங்களாம். அவங்க அம்மா அப்பா தான் மாப்பிள்ளை கூட்டத்துல தொலைஞ்சிட்டாருன்னு பதறிப் போயிட்டாங்களாம். நான் வெளியே வந்த பிறகு வழிஞ்சேன்.

2. பணியிடத்துல என்னை வந்து பாத்தா எல்லாரோடயும் நல்லா பேசுவேன்; பழகுவேன். ஆனா ஏதாவது வார இறுதி கூடலுக்குப் (பார்ட்டி) போனா பெரியவங்களுக்கு வணக்கம் சொல்லிட்டு சின்னப் பசங்களோட விளையாடிக்கிட்டு இருப்பேன். பெரியவங்களோட பேசறதுக்கு என்ன தான் உங்களுக்குப் பயமோ; தயக்கமோன்னு வீட்டுல கேப்பாங்க. கூச்ச சுபாவம்ன்னு இல்லை. ஆனால் நிறைய பேரோட பழகுறதில்லை. நண்பர்களும் அவர்களா மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசியோ விசாரித்தால் தான் பதில் சொல்வேன். நானாக விசாரிப்பதில்லை. அதனால் நண்பர்கள் அதிகமாக இல்லை. வலைப்பதிவு நண்பர்கள் கூட அவர்களாக என் தொலைபேசி எண்களைப் பெற்று அழைத்துப் பேசியவர்கள் தான்; வருடக் கணக்கில் வலைப்பதிவுகளில் தெரிந்திருந்தாலும் பேசியதில்லை. கூச்சம் என்றில்லை; வேலை பாக்குற இடத்துல கூச்சப்படலையே. யாரைப்பத்தியும் உங்களுக்குக் கவலையில்லை என்பார்கள் வீட்டில் - அதுவும் இல்லை. பின்ன? ஏன்னு தெரியலைங்க. அம்புட்டுத் தான்.



3. முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு வேற சொன்னாங்க. பொண்ணுகிட்ட சாப்பிடறப்ப ஒன்னும் படிக்கக்கூடாது; எழுதக்கூடாதுன்னு சொல்லிக்கிட்டே இந்தப் பக்கம் நான் படிச்சுக்கிட்டே சாப்புடுவேன். மழையில நனையக்கூடாதுன்னு மொதொ நாள் சொல்லிட்டு மறு நாள் வா மழையில நனையலாம்ன்னு பொண்ணைக் கூட்டிக்கிட்டுப் போவேன். கறி சாப்புட்டுக்கிட்டே சக்தி விகடன் படிப்பேன். இப்படி நெறைய சொல்லலாம். எது எது எதிர்மறைன்னு மக்கள் நினைக்கிறாங்களோ அதெல்லாம் ஒரே நேரத்துல செய்யறேன் (நல்ல வேளையா இன்னும் பாத்ரூமுல போய் சாப்புடலை - விட்டா அதையும் செய்வீங்கன்றாங்க இங்க).

4. பெரியவங்க கிட்ட ஆசிர்வாதம் வாங்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். கல்யாணம் ஆன புதுசுல வயசானவங்க யாரைப் பாத்தாலும் எங்க வீட்டம்மாவுக்கு கடுப்பாகும் - ஐயோ ரெண்டு பேரும் சேர்ந்து காலுல விழலாம்ன்னு சொல்வானேன்னு. அதே நேரத்துல வயசுல எவ்வளவு பெரியவரா இருந்தாலும் எதாவது பிடிக்கலைன்னா சண்டை போடுவேன். +2 படிக்கும் போது அம்மாவைப் பெத்த பாட்டிக்கிட்ட சண்டை (ஒரு ரெண்டு மணி நேரம் போட்டோம் - எனக்குச் சளைக்காம அவங்களும் கத்துனாங்க) போட்டது இன்னும் நல்லா நினைவிருக்கு. 5 - 7 மணி வரை சண்டை போட்டுட்டு 7.30 மணிக்கு அவங்க சாப்பாடு போட உக்காந்து சாப்பிட்டேன். இன்னும் எனக்கு இந்தக் கேள்வி இருக்கு - அவங்க weirdஆ நான் weirdஆ?

5. பத்தாவது படிக்கிறப்ப அம்மா இறந்து போனாங்க. இந்த பகவத் கீதை எல்லாம் படிச்சு ரொம்ப கெட்டுப் போயிருந்தேன் அப்ப. ஒரு சொட்டுக் கண்ணீர் விடலை. அழுதவங்களைத் தேத்திக்கிட்டு இருந்தேன். காரியத்துக்கு மத்தவங்க எல்லாம் தயாராகிகிட்டு இருக்கிறப்ப தம்பியும் நானும் ஒருத்தனை ஒருத்தன் சீண்டி விளையாடிக்கிட்டு இருந்தோம். அதுக்கப்புறம் பல முறை கண்ணீர் விட்டிருக்கேன். இப்ப குழந்தைங்க பிறக்குறப்ப குழந்தைங்க செய்றதைப் பாத்துட்டு மாமியார் என் மனைவிகிட்ட நீ இப்படி தான் செஞ்சன்னு சொல்றப்ப நான் என்ன செஞ்சேன்னு சொல்ல அம்மா இல்லையேன்னு கண்ணீர் வரும். மாமியாருக்குத் தெரியாம முகத்தை திருப்பிக்கிட்டு வந்துடுவேன்.

சரி. ஈகோ டிரிப்புக்கு அஞ்சு விஷயம் போதும். அடுத்து அஞ்சு பேரைக் கூப்புடணுமே. இதோ அந்தப் பட்டியல்.

1. யோகன் ஐயா
2. மலைநாடான்
3. வெற்றி
4. இரவிசங்கர் கண்ணபிரான்
5. இளவஞ்சி (தலைப்புக்கு நன்றி தீவட்டித் தடியா)






Saturday, March 10, 2007

Sprituality in the Work Place

சின்மயா மிஷனின் 'பணியிடத்தில் ஆன்மிகம்' என்ற தலைப்பில் இருக்கும் இந்த அறிவுப்பேழையை நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அந்த அறிவுப்பேழையில் இருக்கும் செய்திகள் நம் எல்லோருக்கும் பயனளிக்கும் என்பதால் அதனை இங்கே இட விரும்பினேன். இந்த அறிவுப்பேழையை அனைவரும் பார்த்துப் பயன்பெறுங்கள்.

Thursday, January 04, 2007

எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை?

நின்றால்
உட்காரச் சொல்கிறது,
உட்கார்ந்தால்
வயிறு மடிந்து
சாயச் சொல்கிறது,
சாய்ந்து கொள்ள நினைக்கையில்
காணாமல் போகிறது உன் தோள்.

நின்றும், உட்கார்ந்தும், சாய்ந்தும்
சரிப்படாத தருணங்களை
நடக்கத் தேர்ந்தெடுக்கிறேன்.
எடுத்துவைத்தது எட்டடியாகக் கூட இருக்காது,
நெற்றியில் வியர்வை,
ஒற்றி எடுக்க, எங்கே உன் உதடுகள்?

யாரோடோ பேச நினைக்கையில்
உள்ளுக்குள்
காலால் உதைத்து தன்னோடு
பேச அழைக்கிறது குழந்தை,
தடவிக் கொடுக்க எங்கே உன் கைகள்?

எப்படிக் கழியும் விநாடிகள்,
வேதனையில் இதயம் வெறுமை சுமக்க,
'உர்'ருனு உட்காராதே என
அறிவுரை கூறுபவையா உன் வார்த்தைகள்?

சாப்பிடும் சோறு,
பேசும் பேச்சு,
சிரிக்கும் சிரிப்பு
எல்லாம் குழந்தைக்காக என
கரு சுமந்து...

நாளை
உன்னோடு வண்டியில்
முன்நின்று சிரித்து வர,
உன் இனிசியல் போட்டுக் கொள்ள,
உனக்கு பிள்ளை பெற்றுத் தருவேன்

கேட்டால் கிடைக்கும் தான்
உன் முத்தம்,
உன் அரவணைப்பு,
உன் ஆறுதல்.
பச்சப்புள்ள கேட்டா
பாலூட்டுகிறோம்?

கரு சுமந்து
குழந்தைத் தவம் இருக்கும் பெண்களைச்
சுமக்க
எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை?

- வெண்ணிலா

('நீரிலலையும் முகம்' என்ற தொகுப்பிலிருந்து என்ற குறிப்புடன் 2002 ஆண்டு 'தினம் ஒரு கவிதை' யாஹூ குழுமத்தில் வந்த கவிதை. அப்போது முதல் குழந்தை உண்டான நேரம். சேமித்து வைத்திருந்தேன். இன்று தற்செயலாக வேறு ஏதோ தேடப்போக இது கிடைத்தது. படித்த போது இன்னும் சுட்டது. )

Tuesday, December 19, 2006

சொல்லின் செல்வன் அனுமன்



அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்

ஐம்பூதங்களில் ஒன்றான காற்றின் மகன் அனுமன். ஐம்பூதங்களில் ஒன்றான நீரைத் (கடலைத்) தாவி, ஐந்தில் ஒன்றான விண்ணகமே வழியாக நல்லவர்களான இராம இலக்குவருக்காகச் சென்று, ஐந்தில் ஒன்றான பூமி பெற்ற பெண்ணான சீதையை கண்டு, அயலவர் ஊரான இராவணன் ஊரில் ஐந்தில் ஒன்றான நெருப்பை வைத்தான். அவன் நம்மை காப்பான்.

இன்று (20-Dec-2006) அனுமன் பிறந்த நாள்.

Wednesday, December 06, 2006

தமிழ்மணத்தில் இருந்து விடைபெறுகிறேன்

அன்பு நண்பர்களே,

கடந்த சில மாதங்களாக மனதில் ஓடிக் கொண்டிருந்த இந்த எண்ணத்தை நிறைவேற்றும் காலம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன். அதனை அறிவித்துவிட்டு இதோ தமிழ்மணத்தில் இருந்து விலகிக்கொள்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுகளைப் பற்றி இரண்டு மூன்று வருடங்களாக அறிந்திருந்தாலும் 2005 வருடம் தான் தமிழ்மணத்தைப் பற்றியும் பிளாக்கரைப் பற்றியும் நண்பர் சிவபுராணம் சிவா சொன்னார். அந்த அறிமுகத்தால் தமிழ்ப்பதிவுகள் எழுத வந்து தமிழ்மணத்தால் பல நன்மைகள் பெற்றேன். தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகளைச் சொல்லி முடியாது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதனைப் பற்றி பலமுறை சொல்லியிருக்கிறேன்.

தமிழ்மணத்தின் பழைய நிர்வாகமும் புதிய நிர்வாகமும் உவப்பு வெறுப்பின்றி நடுநிலைமையோடு இந்த வலைதிரட்டும் பணியைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தத் தமிழ்ப்பணியைச் செவ்வனே செய்து தமிழை வளர்த்து வரவேண்டும் என்று வாழ்த்துகளுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அண்மைக்காலமாகத் தமிழ் வலைப்பதிவுலகில் கருத்து மோதல்களில் தொடங்கி அவை தனிமனிதத் தாக்குதல்களாகவும் நக்கல், நகைச்சுவை என்ற பெயரில் எழுதப்படும் தரம் குறைந்த எழுத்துகளாகவும் பரிணாமம் பெற்று வருகிறது. வலையுலகச் சூழல் மிகவும் நச்சூட்டப் பெற்று வருகிறது. இந்தச் சூழலில் இருந்து விடுபட பதிவுகளில் எழுதுவதையே நிறுத்திவிடலாமா என்று சிந்தித்ததில் அதனை விட சிறந்தது இந்த சூழல் எங்கு அதிகம் தென்படுகிறதோ அங்கிருந்து விடுபடுவதே என்று தோன்றியது. அதனால் நான் விரும்பிப்படிக்கும் வலைப்பூக்களைச் சேமித்து வைத்துக் கொள்ளத் தொடங்கினேன். நிறைய பதிவுகளைச் சேர்த்து வைத்தாகிவிட்டது. இன்னும் சில நாட்களில் எல்லாமும் சேர்ந்துவிடும் என்ற சூழலில் நேற்று தனி மனிதத் தாக்குதல் என் வட்டத்திற்குள்ளேயே வந்து இந்த முடிவை இப்போதே செயல்படுத்து என்று பிடித்துத் தள்ளிவிட்டது.

என் வலைப்பூக்களில் இருவகை இருக்கிறது. கூட்டு வலைப்பூக்கள், தனி வலைப்பூக்கள். தனி வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் தமிழ்மணப்பட்டையை எடுத்துவிட முடிவு செய்திருக்கிறேன். கூட்டு வலைப்பூக்களைப் பற்றி அந்த வலைப்பூ அன்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதன்படி செய்ய முடிவு செய்திருக்கிறேன். அதனால் சில கூட்டு வலைப்பூக்கள் தமிழ்மணத்தில் இருக்கும். அதன் மூலம் எனது சில பதிவுகளும் தமிழ்மணத்தில் தெரியலாம்.

தமிழ்மணப்பட்டையை நீக்குவது மட்டும் போதாது. நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று சில நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள். விரைவில் நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன். (இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் - எப்படி தமிழ்மணத்தில் இணைத்துக் கொள்வது என்ற வழிமுறைகள் சொல்லியிருப்பதைப் போன்று, எப்படி தமிழ்மணத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பதைப் பற்றியும் சொன்னால் இனி மேல் அதனைப் பயன்படுத்த நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த வேண்டுகோளை நிர்வாகத்திற்கும் தெரியப்படுத்துகிறேன்).

தமிழ்மணத்தைத் தவிர வேறு எந்த வலைத்திரட்டியிலும் என் பதிவுகளைச் சேர்த்ததில்லை. தேன்கூடு தொடங்கப்பட்ட போது என் வலைப்பூக்களில் சில அங்கே இருப்பதைப் பார்த்தேன். மேல் விவரங்கள் சில அப்போது கொடுத்தேன். ஆனால் அதன்பிறகு தொடங்கப்பட்ட எந்த வலைப்பூவும் தேன்கூட்டில் நான் இணைக்கவில்லை. தமிழ்மணத்தில் மட்டுமே இணைத்தேன். இனிமேலும் நானாக எந்த வலைத்திரட்டியிலும் என் வலைப்பூக்களை இணைக்கப்போவதில்லை. தானாக ஏதாவது வலைத்திரட்டி திரட்டிக் கொண்டால் திரட்டிக் கொள்ளட்டும்.

தமிழ்மணத்தால் பெற்ற நன்மைகள் பலவற்றில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது நண்பர்களும் அவர்களின் வலைப்பூக்களும். தமிழ்மணத்தில் இருந்து விலகும் போது, பெற்ற நன்மைகளை மிகவும் நன்றியோடு நினைத்துப் பார்த்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன்.

என் பதிவுகளை தொடர்ந்து படிக்கும் நண்பர்கள் அப்படியே தொடர்ந்து படித்து ஊக்குவிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

Saturday, December 02, 2006

திருமகளும் நம்மையுடையவள்!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

ஸ்ரீ ஸ்வாமினி - திருமகள் நம்மையுடையவள்!

இந்தப் பதிவு கொஞ்சம் வைணவ தத்துவங்களில் செல்லும். அதனால் கொஞ்சம் பொறுமையாகப் படிக்கும் படி நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தத்துவங்கள் என்பதால் எல்லோருக்கும் புரியும் படி சொல்வது எளிதாக இருக்காது என்று எண்ணுகிறேன். முடிந்த வரை எளிதாகத் தர முயல்கிறேன். அடியேன் சிறிய ஞானத்தன்.

முதலாளியின் மனைவியும் முதலாளி என்று ஏற்றுக் கொள்வது சில நேரங்களில் ஏற்புடையது. பல நேரங்களில் ஏற்றுக் கொள்ள முடியாதது. நாம் ஒரு வீட்டில் வேலைக்காரராக இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் எல்லோருமே நமக்கு முதலாளிகளாக இருக்கலாம். ஆனால் அலுவலகத்தில் மேலாண்மையாளராக இருக்கும் ஒருவரது மனைவியும் நம்மிடம் மேலாண்மையாளரைப் போல் நடந்து கொண்டால் நாம் ஏற்றுக் கொள்வோமா? சில மேலாளர்களின் மனைவியர் அப்படித் தான் எண்ணிக் கொள்கின்றனர் என்பது வேறு. ஆனால் நம் கண்ணோட்டத்தில் அது அபத்தமாகத் தோன்றும் இல்லையா? அதைவிடக் கொடுமை சில நேரங்களில் சில மேலாளர்களின் மனைவியர் தங்கள் கணவர்களின் கீழ் வேலை செய்பவர்களின் மனைவியர் தங்களுக்கு அடிமைகள் என்பது போல் நடந்து கொள்வது தான். :-) பலருக்கும் அந்த அனுபவம் இருக்கும் என்று எண்ணுகிறேன். நான் மேலாளர் ஆவதற்கு முன்னாலேயே என் வீட்டம்மாவிடம் அப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்லிவிட்டேன். என் நல்வினைப்பயன் என் வீட்டம்மாவும் அந்த மாதிரி எண்ணிக் கொள்பவர் இல்லை. அதனால் என் குழுவில் வேலை செய்பவர்கள் எல்லாம் வீட்டிலும் அலுவலகத்திலும் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.

சரி. இதெல்லாம் ஏன் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? இதோ சொல்லிவிட்டேன். வடமொழியில் ஸ்வம் என்றால் சொத்து. ஸ்வாமி என்றால் சொத்தை உடையவன். ஸ்வாமினி என்றால் சொத்தை உடையவள். உயிருள்ளது, உயிரற்றது என்று இந்த உலகிலும் பேரண்டங்களிலும் இருக்கும் எல்லாமே ஸ்வம் என்பதற்குள் அடக்கம். அந்த சொத்துக்களை உடையவன் ஸ்வாமி. அந்த ஸ்வாமி யார் என்ற கேள்விக்கு வடமொழி வேதங்களும் தமிழ் வேதங்களும் மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகின்றன. எளிமையாக கோதை நாச்சியார் 'நம்மையுடையவன் நாராயணன்' என்றும் 'நாராயணனே நமக்கே பறை தருவான்' என்றும் சொல்லிவிடுகிறார். அதனால் பெருமாள் தான் நம்மைப் பெறும் ஆள்; அவரே எல்லாரையும் விட பெரும் ஆள் என்று மிகத் தெளிவாகச் சொல்லிவிடுகிறார்கள். யார் நம் ஸ்வாமி; நம்மையுடையவர் என்பது ஐயத்திற்கு இடமின்றி தெளிவாகிவிடுகிறது.

சரி. இப்போது சொல்லுங்கள். நம்மையுடையவன் நாராயணன். சரி. அவனது துணைவி - என்றும் அவனை விட்டு நீங்க மாட்டேன் என்று அவனது மார்பில் நிலையாக அமர்ந்தவள் - அவள் நம்மையுடையவளா இல்லையா? மேலாளரின் மனைவியும் நமக்கு மேலாளரா இல்லையா?

அவனைச் சேர்ந்தவர் எல்லாருமே நம்மையுடையவர்கள். 'அவன் அடியார் அடியார் அடியார் அடியார் அடியார் தமக்கு அடியேன்' என்று ஆழ்வார்கள் சொல்லும் போது அவனின் துணைவி நம்மையுடையவளாய் இருப்பதில் என்ன தடை? அப்படித்தானே தோன்றுகிறது. உண்மை தான். ஸ்வாமியின் தர்மபத்னி நமக்கு ஸ்வாமினி.

திருமகள் திருமாலின் துணைவி என்ற முறையில் மட்டுமே நம்மையுடையவளா? எப்படி நாராயணன் அவனின் தனியுரிமையால் நம்மையுடையவனோ அப்படியே பெரிய பிராட்டியாரும் (திருமகளைப் பெரிய பிராட்டி என்பர்) தனது தனியுரிமையாலேயே நம்மையுடையவளா? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில் 'ஆமாம்' என்பதே. இருவருமே நம்மையுடையவர்கள். இருவரும் இணைபிரியாதவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் இணையானவர்கள். இருவரும் ஒருவருக்கொருவர் ஏற்றவர்கள் - திருமாலுக்கு ஏற்ற துணைவி திருமகள்; திருமகளுக்கு ஏற்ற துணைவன் திருமால். இருவரும் சேர்ந்தே நம்மையுடையவர்கள். திருமகளின்றித் திருமால் என்றுமே இல்லை. அதனால் அவனால் நம்மை அவனுக்கு மட்டுமே உரிமையானவராகக் கொள்ள முடியாது. இருவருக்கும் சொத்து நாம். இப்படி தன் தனியுரிமையாலும் நம்மை உடையவளாக இருப்பவள் மகாலக்ஷ்மி என்பதைச் சொல்லவே தனியாக ஸ்ரீ ஸ்வாமினி என்று சொல்லியிருக்கிறார்கள்.

அப்படி இருவருமே பரம்பொருள்; இருவருமே நம்மையுடையவர்கள் என்றால் இன்னொரு கேள்வி எழுகிறது. பரம்பொருள் ஒன்றே என்பது தான் வேதங்கள் சொல்வது. அதுவே அறிவிற்கும் ஏற்றது. பரம்பொருள் இருவராக இருப்பது சாத்தியமில்லை. 'ஏகம் சத். விப்ரா பஹுதா வதந்தி - உண்மை ஒன்றே. அறிஞர்கள் அதனைப் பலவாறாகப் (புகழ்ந்து) பேசுகிறார்கள்' என்றும் 'ஏகம் அத்விதீயம் - ஒன்று;(தனக்கு இணையாக) இரண்டாவது இல்லாதது' என்றும் வடமொழி வேதங்களும் 'தானோர் தனிவித்து' என்றும் 'ஒருவனே தேவன்' என்று தமிழ்மறைகளும் பேசுவதற்கு ஏற்ப இல்லையே இருவரும் பரம்பொருள் என்பது? இந்தக் கேள்விக்கு ஆசாரியர்கள் சொல்லும் பதில்: எப்படி மலரும் மணமும், சுடரும் ஒளியும் இணைபிரியாமல் இருக்கிறதோ அது போலவே இறைவனும் இறைவியும் இணைபிரியாமல் இருப்பதால் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் இருப்பு என்பதே இல்லை; அதனால் இருவரும் ஒரே தத்துவமே. அதனால் ஒன்றே தேவன் என்பதற்கு இருவரும் பரம்பொருள் என்பது ஏற்புடையதே.

பிரணவம், திருமந்திரம், துவயமந்திரம் இவையும் இந்தப் பொருளையே சொல்கின்றன என்று இரவிசங்கரின் பதிவில் பின்னூட்டமாகச் சொல்லியிருந்தேன். அவற்றையும் விரித்தால் மிக விரிவாக இந்தப் பதிவு அமைந்துவிடும். அவற்றைப் பற்றி வேறோரிடத்தில் பேசலாம்.