Monday, July 08, 2013

தாமோதரனின் தலைவலி

'அப்பா. அந்தி நேரமும் வந்துவிட்டது. கோபியர் செய்ததைப்போல என்று காலையில் நீங்கள் சொன்னீர்களே. அந்தக் கதையைக் கூறுங்கள் அப்பா'.

'கோதை. கதை சொல்கிறேன் என்று சொன்னது நினைவிருக்கிறது. இதோ வந்துவிட்டேன் அம்மா. கொஞ்சம் பொறு'.

'விரைவில் வாருங்கள் அப்பா. கண்ணனுக்காகப் பாவத்தையும் செய்யத் துணிந்த கோபியர்கள் என்ன செய்தார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது'.

'வந்துவிட்டேன் மகளே. கதையைக் கேள்'

***

ஒரு முறை மூவுலகங்களுக்கும் சென்று எல்லோருக்கும் நன்மையை விளைவிக்கும் தேவரிஷி நாரதர் எம்பெருமான் கண்ணனைத் தரிசிக்க துவாரகைக்கு வந்தார். எப்போதும் மகிழ்ச்சி தாண்டவமாடும் துவாரகையில் அன்று எல்லோரும் தங்கள் தங்கள் வேலைகளை அமைதியாகச் செய்து கொண்டிருந்தனர். நாரத மகரிஷியைக் கண்டதும் முகமன் கூறினர் - ஆனால் அதில் வழக்கமாக இருக்கும் குதூகலம் இல்லை. நாரதர் இதனை எல்லாம் கண்ணுற்று ஏன் இப்படி என்று சிந்தித்துக் கொண்டே கண்ணனின் திருமாளிகையை அடைந்தார். அங்கும் எப்போதும் இருப்பது போன்ற கொண்டாட்டங்கள் இல்லை. எல்லோரும் அவரவர் வேலைகளை ஒரு வித முக வாட்டத்துடன் செய்து கொண்டிருக்கின்றனர்.

வாயிற்காவலரிடம் எம்பெருமானைத் தரிசிக்கத் தான் வந்திருப்பதாகவும் அவரது அனுமதி பெற்று வருமாறும் நாரதர் கேட்டுக் கொண்டார். வாயிற்காவலர் 'சுவாமி. இன்று காலையிலிருந்து எம்பெருமானை யாரும் தரிசிக்கவில்லை. நீங்கள் வேண்டுமானால் திருத்தேவியார்களைப் பார்த்துப் பேசுங்கள்' என்றார். இதுவும் நாரதருக்கு வியப்பைக் கொடுத்தது. 'சரி. அப்படியே செய்யலாம்' என்றார். வாயிற்காவலரும் ருக்மிணி பிராட்டியிடமும், சத்யபாமா பிராட்டியிடமும் அனுமதி பெற்று வந்து நாரதரை உள்ளே அழைத்துச் சென்றார்.

திருத்தேவியர் இருவரும் நாரத மகரிஷியை எதிர் கொண்டு அழைத்தனர்.

'வாருங்கள் மகரிஷியே. நல்ல நேரத்தில் வந்தீர்கள். உங்களைப் போன்ற பக்தர்களின் வரவையே இந்த நேரத்தில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'.

'தேவியர்களே. எம்பெருமானுக்கு என்ன ஆயிற்று? ஏன் அவர் யாருக்கும் தரிசனம் தருவதில்லை? வழக்கத்திற்கு மாறாக துவரைப்பதி முழுவதும் மகிழ்ச்சியின்றிக் காணப்படுகிறதே? நீங்களும் வழக்கத்திற்கு மாறாக என்னை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறுகிறீர்களே? என்ன தான் நடக்கிறது?'

'சுவாமி. நம்பெருமாளுக்கு இன்று காலை முதல் கடுமையான தலைவலி. அதனால் தான் எல்லோரும் மகிழ்ச்சியின்றி இருக்கிறோம்'.

'தலைவலி என்றால் ஏதாவது மருந்தைத் தரலாமே. அரண்மனை வைத்தியர்கள் இருப்பார்களே'.

'அவர்கள் பலவகையான மருந்துகளைத் தந்துவிட்டார்கள் சுவாமி. ஆனாலும் கேசவனின் தலைவேதனை குறைந்ததாகவே தெரியவில்லை. அதனால் தான் உங்களைப் போன்ற பக்தர்கள் வரவேண்டும் என்று எதிர்பார்த்தோம்'.

'அரண்மனை வைத்தியர்கள் தந்த மருந்து எதுவும் வேலை செய்யவில்லையா? அப்படியென்றால் சுவாமியிடமே மருந்து என்ன என்று கேட்டிருக்கலாமே'.

'கேட்டோமே. அவர் சொன்ன மருந்தைத் தான் எப்படி பெறுவது என்று அறியாமல் திகைக்கிறோம்'

'அப்படி என்ன மருந்தை அவர் சொன்னார்?'

'அவரிடன் நெருக்கமான அன்பும் பக்தியும் கொண்ட அடியாரின் திருவடித் துகள்களை எடுத்துக்கொண்டு வந்து அவர் தலையில் தடவ வேண்டுமாம். அப்போது தலைவலி தீர்ந்துவிடுமாம்'

'ஆ. விசித்திரமான மருந்து தான். திருத்தேவியரான உங்களைத் தவிர்த்து வேறு யார் எம்பெருமானின் மேல் நெருக்கமான அன்பும் பக்தியும் உடையவர்களாக இருப்பார்கள்? நீங்களே அந்த மருந்தைத் தந்திருக்கலாமே'.

'என்ன சுவாமி இப்படி கேட்டுவிட்டீர்கள்? பெருமானின் மேல் எங்களுக்கு நெருக்கமான அன்பும் பக்தியும் இருக்கலாம். ஆனாலும் எங்களின் காலடித் துகள்கள் எம்பெருமானின் தலையில் படுவதா? அது பெரும்பாவம் அல்லவா? அந்தப் பாவத்தை நாங்கள் செய்ய முடியுமா? அது மட்டுமா? அவரின் தலைவலி அப்படியும் தீரவில்லை என்றால் பாவமும் செய்து பழியும் அல்லவா வந்து சேரும்?'

'நாரதர் தன் மனதிற்குள் - தேவியர் சொல்வது சரி தான். நாமும் இந்தப் பாவத்தைச் செய்ய முடியாது. பாவமும் வரும். தேவியர் சொன்னது போல் நமக்கு எம்பெருமானின் மேல் அன்பும் பக்தியும் இல்லை என்ற பழியும் வரும்.

வெளியே 'அப்போது என்ன தான் வழி?'

'சுவாமி. அதற்காகத் தான் உங்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். நீங்கள் தான் எப்போதும் அவர் திருநாமங்களைப் பாடிக் கொண்டே இருப்பவர். உங்களை விட சிறந்த பக்தரைக் காணமுடியாது. பக்திக்கே இலக்கணம் வகுத்து 'நாரத பக்தி சூத்திரம்' இயற்றியவர். அதனால் நீங்கள் தான் உங்கள் திருப்பாதத் துகள்களைத் தந்தருள வேண்டும்'.

'அம்மா. நீங்கள் சொல்வது சரியில்லை. அடியேனை மட்டும் பாவம் செய்யத் தூண்டுகிறீர்களே.

ம்ம். எம்பெருமான் ஏதோ திட்டத்துடன் தான் இருக்கிறார். எந்த பக்தனுமே தன் காலடித் துகள்களை பகவானின் திருமுடிகளில் படுமாறு தரமாட்டான். அதனால் அவரிடமே ஒரு உபாயம் கேட்கவேண்டியது தான்'

அனைவரும் கண்ணனின் அறைக்குச் செல்கின்றனர்.

***

'மாதவா. கேசவா. மதுசூதனா. தாமோதரா. கண்ணா. மணிவண்ணா, கார்மேகவண்ணா, மாயவா, துவராபதி, இதயக்கமலவாசா, என்னையுடையவனே சரணம் சரணம் சரணம்'

'வா நாரதா. நலமா?'

'சுவாமி. அடியேன் நலமே. தாங்கள் தான் தலைநோவால் அவதிப்படுவதாக திருத்தேவியர் கூறினர். இப்போது எப்படி இருக்குறது சுவாமி?'

'தலைவலி அப்படியே இருக்கிறது நாரதா. மருந்தைத் தேடிச் சென்றவர்கள் எல்லாம் போனவர் போன இடத்திலேயே இருந்துவிடுகிறார்கள் போலிருக்கிறது. யாரும் வரவில்லை. என் தலைவேதனையும் தீரவில்லை'.

'ஐயனே. தங்கள் தலைவலிக்கு வேறு மருந்து இருக்கிறதா? பக்தர்களில் அடிப்பொடி வேண்டுமென்றால் கிடைப்பது அரிதாயிற்றே'

'ஏன் நாரதா? பக்தர்களே இல்லாமல் போய்விட்டார்களா?'

'அப்படி இல்லை பெருமானே. எந்த பக்தரும் தன் காலடி மண் எம்பெருமானின் திருமுடியில் பட தானே அறிந்து தரமாட்டாரே. அதனால் சொன்னேன்'.

'அப்படி இல்லை நாரதா. யாராவது கோகுலத்திற்குச் சென்று பார்த்தார்களா? அங்கே கட்டாயம் பக்தர்களின் பாத தூளி கிடைக்கும்'.

'அப்படியா? அங்கே அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்து மக்கள் தானே இருக்கிறார்கள்? அங்கே பக்தியில் சிறந்தவர் உண்டா?'

'ஏன் நாரதா நீயே சென்று கண்டு வரலாமே'.

'அப்படியே செய்கிறேன் சுவாமி. அடியேனுக்கு விடை கொடுங்கள்'.

நாராயண நாமத்தை பாராயணம் செய்தபடி நாரதர் கோகுலத்திற்குச் செல்கிறார்.

***
***
2007ல் எழுதியதன் மறுபதிவு...

3 comments:

குமரன் (Kumaran) said...

Comments from original post:

20 comments:

G.Ragavan said...
குமரன்...கோதையின் கதையின் பாதையில் கண்ணன் வேய்ங்குழல் ஓதையைக் கீதையாய்க் கொண்டாடும் கோபியர் அன்பின் காதையைச் சொல்லப் புகுந்தீரோ! ம்ம்ம்....ஆண்டவன் மீது அன்பு இருந்தால் கண்ணைக் கூடப் பிடுங்கிக் கொடுப்பான். காலால் உதைப்பான். கல்லால்..வில்லால்...சொல்லால்...அடிப்பார். இங்கே கோபியர் செயலை நான் அறிவேன். ஆயினும் அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.
March 09, 2007 6:57 AM
இலவசக்கொத்தனார் said...
அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன்.//

நானும்!
March 09, 2007 7:59 AM
SK said...
தெரிந்த கதையைத் திறம்படச் சொல்லும் அழகில் மயங்கி நிற்கிறேன்!

எனக்குத் தெரிந்து, மன்னார்குடி ராஜகோபாலஸ்வாமி பட்டர் ஒருவர், இப்படித்தான்!

புறப்பாட்டுக்காக ஸ்வாமியை அலங்கரித்து, இறுகக் கட்டி, புறப்பாடு முடிந்ததும், கட்டுகளை அவிழ்க்கும் போது, " ராஜகோபால, ரொம்ப இறுக்கிக் கட்டி விட்டேனா? வலிக்கறதாப்பா?" எனக் கண்ணீர் மல்கக் கேட்டு, விக்ரஹத்தைத் [திருவுருவச்சிலையை] தடவிக் கொடுத்து, கால் அமுக்கி, பிடித்து விடுவார்!

அன்பின் வழியது உயிர்நிலை!
March 09, 2007 8:44 AM
வல்லிசிம்ஹன் said...
இங்கே கோபியர் செயலை நான் அறிவேன். ஆயினும் அடுத்த பாகத்திற்குக் காத்திருக்கிறேன். //
அதேதான்.
சொல்ல வந்தவர் அதையும் சொல்லிக் கதையைப் பூர்த்தி செய்யட்டும்.
நன்றி குமரன்.
March 09, 2007 9:27 AM
குமரன் (Kumaran) said...
கோதையின் கதையில் கோபியர் கதையைச் சொல்லாமல் எப்படி திருப்பாவை முகவுரை நிறைவடையும் இராகவன்? அதனால் தான் கோபியர் கதையில் நுழைந்தேன்.

உண்மை இராகவன். அன்பு மட்டும் இருப்பவர்கள் கண்ணையும் பிடுங்கிக் கொடுப்பார்கள்; காலாலும் உதைப்பார்கள்; கல்லால் அடிப்பார்கள்; வில்லால் அடிப்பார்கள்; பித்தா என்றும் கள்வா என்றும் சிறுபெயர் அழைப்பார்கள். சீதையை இராவணன் சிறையெடுக்கிறான் என்று இராமகாதையைக் கேட்கும் போது இவர்கள் படையெடுத்துக் கொண்டுக் கிளம்புவார்கள். அன்போடு இறைவன் பரமன் என்ற அறிவும் சேரும் போது தானே அவன் உயர்ந்தவன்; நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் வந்து சில மனத்தடைகள் வருகின்றன.

கோதையின் கதையும் கோபியர் கதையும் இந்தப் பதிவில் எழுதப்படும் எல்லாமுமே அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்திருக்கும் இராகவன். ஆனாலும் அடியேன் மனக்கண்களால் காண்பதை இங்கே எழுதிக் கொண்டு வருகிறேன். அவ்வளவே.

காத்திருத்தலுக்கு நன்றி.
March 09, 2007 3:49 PM

குமரன் (Kumaran) said...

குமரன் (Kumaran) said...
உங்களுக்கும் நன்றி கொத்ஸ்.
March 09, 2007 3:50 PM
குமரன் (Kumaran) said...
தங்கள் பாராட்டிற்கு நன்றி எஸ்.கே.

திருவுருவச்சிலை என்று அர்ச்சாவதாரத்தைத் தான் நினைப்பதில்லையே பரம பாகவதர்கள். விட்டுச்சித்தன் முதல் பலரும் உண்டல்லவா அப்படி. மன்னார்குடி பட்டர் சுவாமிகளைப் பற்றி அடியேன் அறியச் சொன்னதற்கு நன்றி எஸ்.கே.

அடியேன்.
March 09, 2007 3:52 PM
குமரன் (Kumaran) said...
விரைவில் கதையின் அடுத்தப் பகுதியை இடுகிறேன் வல்லி அம்மா. நன்றி.
March 09, 2007 3:52 PM
வடுவூர் குமார் said...
உங்கள் எழுத்தை படிக்கும் போது,நானும் அருகே இருந்து கேட்பது போன்ற உணர்வு.
March 09, 2007 7:15 PM
SK said...
அது யாருங்க விட்டுச்சித்தன்?
எனத்தை விட்டாரு அவர்?
March 09, 2007 8:27 PM
NJAANAVETTIYAAN said...
சுவையாய் உள்ளது. தொடருங்கள், குமரன்.
March 09, 2007 8:35 PM
குமரன் (Kumaran) said...
மிக்க நன்றி வடுவூர் குமார். பலரும் இதை கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
March 09, 2007 9:14 PM
குமரன் (Kumaran) said...
//அது யாருங்க விட்டுச்சித்தன்?
எனத்தை விட்டாரு அவர்?
//

எழுத்துப்பிழையோ? சில இடங்களில் விட்டுச்சித்தன் என்ற பாடத்தையும் படித்திருக்கிறேன் எஸ்.கே.

பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியைச்* சார்ங்கமெனும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுச்சித்தன் விருமபியசொல்*
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோநாராயணா வென்று*
பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருத் தேத்துவர் பல்லாண்டே.

படி எடுத்தவர்களும் ஒற்று மிகுமாறு விட்டுவிட்டார்கள்.

//
எனத்தை விட்டாரு அவர்?//

என்னத்தை விட்டிருப்பார் என்று தான் நானும் சிந்திக்கிறேன். நீங்கள் விட்டிருக்கும் எ.பி.யைக் கண்டவுடன் ஏனத்தை விட்டாரோ என்று தோன்றுகிறது. :-)
March 09, 2007 9:21 PM

குமரன் (Kumaran) said...

மங்கை said...
//'அப்படியா? அங்கே அறிவொன்றும் இல்லாத ஆயர் குலத்து மக்கள் தானே இருக்கிறார்கள்? அங்கே பக்தியில் சிறந்தவர் உண்டா?'/

புரியவில்லையே..ஆயர் குலத்து மக்களுக்கு இப்படி ஒரு பெயரா..

அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்
March 09, 2007 9:48 PM
குமரன் (Kumaran) said...
நன்றி ஞானவெட்டியான் ஐயா.
March 10, 2007 9:04 AM
குமரன் (Kumaran) said...
நல்ல கேள்வி கேட்டீர்கள் மங்கை.

'அறிவொன்றும் இல்லாத ஆய்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்

என்று திருப்பாவையில் கோதை சொன்ன வரிகளில் இருந்து எடுத்துச் சொன்னேன். அப்படி எழுதும் போதே 'இப்படி எழுதலாமா?' என்ற தயக்கம் ஒரு நொடி வந்தது. பின்னர் கோதை சொன்னதைத் தானே எழுதுகிறோம் என்று எழுதிவிட்டேன்.

இங்கே அறிவென்பது நான் நினைப்பது போன்ற சாதாரண அறிவு இல்லை - இங்கே கோதை குறித்தது 'எல்லாவற்றையும் அறிந்தோம்' என்ற அறிவும் அதனால் ஏற்பட்ட செருக்கும் இல்லாத ஆய்குலம் என்பது. அதனால் தானே அவர்களால் அளவற்ற அன்பு செலுத்த முடிந்தது. ஐயனும் அங்கே பிறவி எடுத்தான்.
March 10, 2007 9:20 AM
கோவி.கண்ணன் said...
எனக்கும் தெரிந்த பழைய கதை .. குமரனின் நடையில் துலக்கப் பட்டு பொழிவாக உள்ளது!

பாராட்டுக்கள் !
March 10, 2007 9:33 AM
குமரன் (Kumaran) said...
இந்தக் கதை பலருக்கும் தெரிந்ததா? வியப்பாகத் தான் இருக்கிறது.

கோவி.கண்ணன் அண்ணா. சிலேடையில் எழுதுவதை நன்கு கற்று கொண்டுவிட்டீர்கள். கதை பொலிவாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே சொற்பொழிவாகவும் இருக்கிறது என்று சொல்லிவிட்டீர்கள். :-)
March 10, 2007 10:01 AM
மதுரையம்பதி said...
குமரன், மிக அழகாக வருகிறது இந்த பதிவுத் தொடர். நன்றி....வாழ்த்துக்கள்.
March 12, 2007 4:54 AM
குமரன் (Kumaran) said...
நன்றி மௌலி ஐயா.
March 12, 2007 6:30 AM