Wednesday, August 06, 2008

தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி! செல்வமே! சிவபெருமானே!



பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னைப்
பற்றுமாறு அடியனேற்கருளிப்
பூசனை உகந்தென் சிந்தையுள் புகுந்து
பூங்கழல் காட்டியப் பொருளே!
தேசுடை விளக்கே! செழுஞ்சுடர் மூர்த்தி!
செல்வமே! சிவபெருமானே!
ஈசனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்து அருளுவதினியே!

இந்தப்பாடல் விளக்கத்தின் முதற்பகுதியை அக்டோபரில் பார்த்தோம். அடுத்தப் பகுதியை எழுத இவ்வளவு நாட்கள் ஆகிவிட்டன. மன்னிக்கவும்.

பந்த பாசங்கள் இல்லாதவர் யாருமே இல்லை. வேண்டுதல் வேண்டாமை இலாதான் என்றாலும் அவனும் அடியார்களிடம் அன்பு கொண்டவன் தான்; சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் அந்த அன்பும் பாசம் போல் தோன்றும். அன்பிற்கும் பாசத்திற்கும் வேறுபாடு என்ன? அன்பு நல்லதையே நாடும். நமக்குக் கேடென்றாலும் ஒருவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும்; சொல்லும்; செய்யும். அவருக்கு விருப்பமில்லாதது என்றாலும் அவர் மேல் வைத்த அன்பு அவருக்கு நல்லதையே நாடும் - தாய் கொடுக்கும் கசப்பு மருந்தினைப் போல். பாசம் நல்லதோ கெட்டதோ பார்க்காது; கண்ணை மறைக்கும்; மருத்துவர் மருந்தூசியை போடும் போது குழந்தை அழுவதைப் பார்க்க முடியாமல் தலை திருப்பும் அன்னை தந்தையரைப் போல். மற்றவர் மேல் வைத்த அந்தப் பாசம் நம்மையும் பல நேரங்களில் தவறான பாதையில் திருப்பிவிட்டுவிடும் - திருதராஷ்ட்ரனைப் போல்.

அன்பை எல்லா உயிர்களிடத்தும் காட்ட வேண்டும் என்பார்கள் சான்றோர். ஆனால் அவர்களே பாசம் அறுக்க வேண்டும் என்பார்கள். பாசம் என்ற இதே சொல் மற்ற பொருள்களிலும் வழங்கப்படுகிறது - பாசியையும் பாசம் என்பார்கள் - இரண்டுமே வழுக்கிவிடும்; கயிற்றையும் பாசம் என்பார்கள் - இரண்டுமே ஒருவரைக் கட்டும். அப்படிப்பட்ட பாசத்தை வேருடன் அறுக்க வேண்டும். அது நம் சுய முயற்சியால் முடியுமா என்றால் அறிந்தவர் தெரிந்தவர் எல்லோரும் சொல்லும் விடை இல்லை என்பதே. அவன் அருளாலே தான் அது முடியும் என்கிறார்கள் அவர்கள். அதனைத் தான் அடிகளும் இங்கே பாச வேர் அறுக்கும் பழம்பொருள் தன்னை என்கிறார். அறுக்கும் என்று நிகழ்காலத்தில் கூறியது அவர் அதனை மூன்று காலங்களிலும் செய்பவர் என்ற பொருளில்.

முக்காலங்களிலும் எக்காலங்களிலும் செய்பவர் பழம்பொருளாகத் தானே இருக்க வேண்டும். பழமைக்கும் பழமையானவன்; புதுமைக்கும் புதுமையானவர். அந்தப் பழம்பொருளைப் பற்றினால் பாச வேர் அறுபடும். அந்தப் பழம்பொருளைப் பற்றுவதும் எளிதோ? அது நம் முயற்சியால் மட்டுமே கூடுமோ? இல்லை. அதற்கும் அவன் அருள் வேண்டும். அடிமையான எனக்கு அருள் செய்து என்கிறார் இங்கே. அடியவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லிலும் ஆயிரம் பொருள்.

நாம் எத்தனையோ விதமாகப் பூசிக்கலாம் அவனை. அவன் அருளும் நம் அடக்கமும் இன்றி என்ன தான் பூசித்தாலும் அவன் அதனை ஏற்றுக் கொள்ளவேண்டுமே? நாம் அவனுடைய அடியவர்கள் என்று ஆயிரம் முறை கூறினாலும் என்ன அவன் நம்மை தன் அடியவர் என்று ஏற்றுக்கொள்ளாதவரை? அவன் ஏற்றுக் கொண்டால் அல்லவோ அதில் பொருள் உண்டு?

பழம்பொருளான தன்னைப் பற்றுமாறு அடியவனான எனக்கு அருளி நான் செய்த சிறு பூசைகளையும் பெருமையாக எண்ணி உவப்புடன், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான் என்கிறார். நிர்ஹேதுக கிருபை என்பார்கள் வடமொழியில் - காரணமற்ற அன்பு. அப்படிப்பட்ட அன்பு நாம் செய்யும் சிறு பூசையையும் அன்புடன் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளச் செய்கிறது.

செய்த சிறு பூசையையும் ஏற்றுக் கொண்டு மகிழ்வுடன் என் சிந்தையுள் புகுந்து நின்றான். ஒளி புகுந்தவுடன் இருள் அகன்று காணாமல் போவது போல் சிந்தையுள் அவன் புகுந்தவுடன் மற்ற எண்ணங்கள் எல்லாம் காணாமல் போனது. ஒளி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைவது போல் அவன் சிந்தை புகுந்து சிந்தை முழுவதும் நீக்கமற நிறைந்தான்.

கருணையுடன் இவ்வளவும் செய்தவன் அந்தக் கருணைக்கு அடையாளமாக தன் திருவடித் தாமரைகளையும் நான் பற்றுமாறு அருளினான். திருவடிகளின் பெருமை சொல்லி முடியாது. அதனால் அதனை இன்னொரு நாள் பார்ப்போம். கட்டாயம் அதற்கு வாய்ப்பு கிட்டும்.

ஒளியுடைய விளக்கே என்கிறார். வேறு பொருள்கள் எல்லாம் இருப்பதைக் காட்ட ஒரு விளக்கு வேண்டும். ஆனால் விளக்கு இருப்பதைக்காட்ட அந்த விளக்கே போதுமன்றோ? அப்படிப்பட்டவன் இறைவன்.

செழுஞ்சுடர் மூர்த்தி - சரி. அவன் இருப்பைக் காட்ட அவனே போதும்; அவன் திருவுருவம் எப்படிப்பட்டது என்றால் விளக்கின் திருவுருவம் எப்படி இருக்கும்? சுடர் வடிவாக இருக்கும் தானே?! இறைவன் திருவுருவும் அப்படியே செழுமையான் சுடர் வடிவாக இருக்கிறது.

அடியார்க்கு நிலைத்த செல்வம் தெய்வம் தானே? அதனால் செல்வமே என்கிறார். சிவபெருமானே. தலைவனே. ஈசனே. உன்னைச் சிக்கெனப் பிடித்தேன். இவ்வளவு தூரம் அருள் செய்த பின் என்னை விட்டு எங்கே எழுந்தருளுகிறீர்கள்? உம்மை விடமாட்டேன் என்கிறார்.

8 comments:

குமரன் (Kumaran) said...

இந்த இடுகை 'திருவாசகம் ஒரடொரியோ' பதிவில் 8 ஆகஸ்ட் 2007 அன்று இடப்பட்டது. அப்போது வந்த பின்னூட்டங்கள்:

கீதா சாம்பசிவம் said...
என்ன ஆச்சரியம் குமரன்? இப்போத் தான் சிதம்பர ரகசியத்தில் தட்சிணாமூர்த்தி பத்தி எழுதினதுக்குப் படமே போடமுடியலையேன்னு வருந்திக் கொண்டே உங்க பதிவுக்கு வந்தால், அட, அடா, என்ன ஒரு அழகான படம்? எங்கே இருந்து சுட்டீர்கள்? அருமையான பகிர்வும் கூட. ரொம்பவே நன்றி. இன்னிக்குப் பல விஷயங்கள் தற்செயலாய் நடக்கிறது.

August 10, 2007 7:30 AM
--


குமரன் (Kumaran) said...
எப்பவோ இணையத்துல இருந்து சுட்டது கீதாம்மா. எங்கே இருந்து சுட்டேன்ன்னு நினைவில்லை. நன்றி.

August 10, 2007 8:16 AM
--

ஜீவி said...
குமரன்,
நல்லன செய்கின்றீர்கள்.
விளைவு, நல்லனவையாகவே இருக்கும்.
நன்றி.
ஜீவி

August 10, 2007 8:41 AM
--

குமரன் (Kumaran) said...
தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி ஜீவி ஐயா.

August 10, 2007 2:37 PM
--

kannabiran, RAVI SHANKAR (KRS) said...
அழகான படம், சின் முத்திரையோடு!
அன்பையும் பாசத்தையும் அழகாக வேறுபடுத்திக் காட்டினீங்க குமரன்...

அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் = பாசம்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு = அன்பு

பாடல்களுக்கு ஒலிச்சுட்டிகளும் கொடுக்க முடியுமா குமரன்? இன்னும் நல்லா இருக்குமே!

August 10, 2007 7:55 PM
--

குமரன் (Kumaran) said...
நன்றி இரவிசங்கர். ஒலிச்சுட்டி தரக்கூடாது என்பது எஸ்.கே. கட்டளை. அதனால் தேடிப்பார்க்கவும் இல்லை. :-)

August 10, 2007 8:02 PM
--

வல்லிசிம்ஹன் said...
Dhakshina Murthi picture is very nice Kumaran.
meendum ezhuthukiREn.

August 11, 2007 10:06 PM
--

குமரன் (Kumaran) said...
ஆமாம் வல்லியம்மா. நீங்கள் சொன்னபிறகு இன்னொரு முறை படத்தைப் பார்த்தேன். மிக அழகான படம்.

சனகாதியரை சிறுவர்களாகக் காண்பிப்பார்கள். இங்கே வயது முதிர்ந்த முனிவர்களாகக் காட்டியிருக்கிறார்கள்.

August 11, 2007 10:14 PM
--

மதுரை சொக்கன் said...
இன்றுதான் உங்கள் திருவாசகம் பதிவு படித்தேன்.மிகநல்ல விளக்கங்கள்.சிவனின் எளிமை பற்றி,பாசம் பற்றி எல்லாம் நன்கு விளக்கியிருக்கிறீர்கள்.சிவன் 'ஆசுதோஷிஅல்லவா.'திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்டுக்கும் உருகார்'
வாழ்த்துக்கள்.

September 09, 2007 10:34 AM
--

G.Ragavan said...
முன்னைக்கு முன்னையும் பின்னைக்குப் பின்னையுமான ஒரு அரிவாள். அது அறுப்பது பாசத்தின் வேர். அந்த வேருக்கு நீரூற்றுவது ஆசை. அதனால் விளைவது துன்பம். துன்பத்தையும் அறுக்கலாம். ஆனால் வேர் இருக்க இருக்க...மண்ணோடு இறுக்க இறுக்க துயர் பூத்துக்கொண்டேயிருக்கும். ஆகையால்தான் பாசத்தின் வேரை அறுக்கிறது இந்த அரிவாள்...அதுவும் அறிவால். மெய்யறிவால். அதனால் மெய்யறிவு மூளைக்குப் புகாமல் சிந்தைக்குள் புகுகிறது. நல்ல பாடல். நல்ல விளக்கம்.

September 09, 2007 3:04 PM
--

குமரன் (Kumaran) said...
தங்களின் பாராட்டிற்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மதுரை சொக்கன்.

September 09, 2007 9:47 PM
--

குமரன் (Kumaran) said...
செஞ்சொற் பொற்கொல்லரே. சொல்விளையாட்டு ஆடி ஒரு சிறு விளக்கமே தந்துவிட்டீர். :-) நன்றி இராகவன்.

September 09, 2007 9:48 PM
--

Kiran said...
I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

October 27, 2007 7:48 AM
--

குமரன் (Kumaran) said...
நன்றி கிரண்.

October 28, 2007 9:57 AM

Kavinaya said...

இன்னொன்றும் சொல்லலாம். எதிர்பார்ப்பில்லாதது அன்பு; எதிர்பார்ப்போடு கூடியது பாசம். அருமையாய் இரண்டையும் விளக்கினீர்கள்! எனக்கு மிகப் பிடித்த விளக்கம் "தேசுடை விளக்கே" என்பதற்கு நீங்கள் அளித்ததுதான்.

//வேறு பொருள்கள் எல்லாம் இருப்பதைக் காட்ட ஒரு விளக்கு வேண்டும். ஆனால் விளக்கு இருப்பதைக்காட்ட அந்த விளக்கே போதுமன்றோ? அப்படிப்பட்டவன் இறைவன்.//

அருமை. அருமை.

//நாம் அவனுடைய அடியவர்கள் என்று ஆயிரம் முறை கூறினாலும் என்ன அவன் நம்மை தன் அடியவர் என்று ஏற்றுக்கொள்ளாதவரை? அவன் ஏற்றுக் கொண்டால் அல்லவோ அதில் பொருள் உண்டு?//

இதைப் படிக்கையில் பெருமூச்சும்... பெரும் ஏக்கமும்...

Geetha Sambasivam said...

படம் கண்ணிலேயே நிற்கின்றது குமரன், பதிவு அதை விட அருமை, இப்போ முன் போல் மெயில் அனுப்புவது இல்லை போலிருக்கு, ரொம்ப நாள் ஆச்சேனு வந்தால், நிறையப் பதிவுகள்.

Geetha Sambasivam said...

அட, ஏற்கெனவே இந்தப் பதிவுக்குப் பின்னூட்டம் கொடுத்திருக்கேன் போலிருக்கே??? :)))))

Geetha Sambasivam said...

//சனகாதியரை சிறுவர்களாகக் காண்பிப்பார்கள்.//

ம்ம்ம்ம்ம்??????? இல்லைனு நினைக்கிறேன் குமரன், எனக்குத் தெரிஞ்சு, தட்சிணாமூர்த்தி தான் இளைஞராகவும், சீடர்கள் ஆன சனகாதியர் வயதானவர்களாகவுமே இருப்பார்கள். இளைஞனின் மெளனத்தின் மூலமே வயதான சீடர்கள் பாடம் கற்கின்றார்கள் என நேற்றுக் கூட ஒரு கட்டுரையில் படிச்ச நினைவு! என்னவோ, தப்போ நான் சொல்வது???

குமரன் (Kumaran) said...

கீதாம்மா. சில நேரம் மின்னஞ்சல் அனுப்புகிறேன். சில நேரம் அனுப்புவதில்லை. அனுப்பும் போதெல்லாம் அதைப் பார்த்து இங்கே வந்து படித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். :-)

இது மீள்பதிவுங்கறதால முதல் தடவையே நீங்க போட்ட பின்னூட்டம் இருக்கு. :-)

ஜயவிஜயர்கள் பெறும் சாபம் கதையில் சனகாதியர் சிறு குழந்தைகளாகக் காண்பிக்கப்படுவார்கள். அந்த நினைவில் சொல்லிவிட்டேன் அம்மா. நீங்கள் சொல்வது போல் தென்முகக் கடவுள் இளைஞராகவும் நான்கு சீடர்களும் முதியவர்களாகவும் தான் சொல்லப்பட்டிருக்கிறார்கள். திருத்தியமைக்கு நன்றிகள்.

Siva said...

Dear Kumaran
Excellent Post!! The photo is too good and it is always in the mind. Keep posting.
Best Regards

Siva

குமரன் (Kumaran) said...

நன்றி திரு.சிவா.