Monday, November 27, 2006

அனைத்துலகிற்கும் தாயே!!

நம் நண்பர் இரவிசங்கர் கண்ணபிரான் திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிக்குப் பொருள் சொல்லிக் கொண்டு வருகிறார். அண்மையில் அவர் இட்ட பதிவில் அடியேன் சில பின்னூட்டங்களை இட்டேன். அப்போது தோன்றிய கருத்துகளை அப்படியே எழுத்தில் இட முயன்றதால் முற்றுப்புள்ளியே இல்லாமல் சில கருத்துகளைச் சொல்லியிருந்தேன். அவற்றை இன்னும் எளிமையாகச் சொன்னால் நன்றாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் அறிவுறுத்தியதால் அங்கே சொன்னதை இன்னும் எளிமையாகவும் விளக்கமாகவும் சொல்ல அடியேன் முயல்கிறேன்.

மாத: ஸமஸ்த ஜகதாம்: எல்லா உலகங்களுக்கும் தாயே!

அம்மா அப்பா இருவரும் கண்கண்ட தெய்வங்கள் என்பது நம் ஆன்றோர் வாக்கு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறாள் ஒளவைப்பிராட்டி. அம்மா அப்பாவை தெய்வமாக நினைப்பவர்கள் அதே நேரத்தில் தெய்வ தம்பதியரான திரு மாலையும் பார்வதி பரமேஸ்வரரையும் அம்மையப்பராக நினைப்பதும் உண்டு. அப்படி நமக்கு என்றும் நிலைத்த அன்னையாக இருக்கும் திருமகள் நமக்கு மட்டுமே அன்னையன்று; உலக மக்கள் எல்லாருக்கும் அன்னை என்பது இந்த சொற்றொடரைச் சொல்லும் போது தோன்றுகிறது.

அப்படி உலக மக்கள் எல்லோருக்கும் அன்னையான அவள் அடியேனுக்கும் அன்னை என்பதால் உலக மக்கள், மாக்கள் என எல்லாருமே எல்லாமுமே அடியேனின் உடன் பிறந்தவர்கள் என்பதும் இந்தச் சொற்றொடரைச் சொல்லும் போது தோன்றுகிறது.

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று மூத்தோர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அல்லது (கெட்டது) செய்தலே மிக இயற்கையாக அடியேனுக்கு அமைந்திருக்கிறது. அன்னையின் கருணை நல்லது செய்து அவள் மனம் மகிழும் படி செய்யும் பெரியோர்களுக்கு அமைவதும் அவள் அவர்களை அரவணைப்பதும் எளிதாக நடக்கும். அல்லதே செய்து பொழுதைக் கழிக்கும் நீசனான எனக்கு அன்னையின் அருள் அமையுமா என்ற ஐயத்தையும் உலக மக்கள் எல்லோருக்கும் அவள் அன்னை என்ற சொற்றொடர் நீக்குகின்றது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்று சொல்வார்கள். பசுங்கன்றின் அழுக்குகளை பசு தன் நாக்காலேயே நக்கி சுத்தம் செய்யும். அது போல் எல்லா உலகங்களுக்கும் அன்னையான திருமகள் அடியேனின் அழுக்குகளைக் கண்டு என்னைத் தள்ளாமல் அவள் அருளால் அந்த அழுக்குகளை நீக்கி என்னையும் அரவணைப்பாள் என்ற ஆறுதலும் இந்த சொற்றொடரால் கிடைக்கிறது.

ஜகத் என்ற வடமொழிச் சொல்லுக்குப் போவதும் வருவதுமாக இருப்பது என்று பொருள். ஸமஸ்த ஜகதாம் மாத: என்றதால் போவதும் வருவதுமாக இருக்கும் அசையும் பொருட்கள் அசையாப் பொருட்கள் எல்லாவற்றிற்கும் அன்னை என்பது புரிகிறது. அதே நேரத்தில் ஒரு பொருள் அசைவது, அசையாதது (உயிருள்ளது உயிரில்லாதது, அறிவுள்ளது அறிவில்லாதது போன்ற எதிர்மறைகளும் இதில் அடங்கும்) என்ற பிரிவினைகள் இன்றி எல்லாப் பொருட்களுக்கும் அன்னை திருமகள்; அவற்றிடையே உயர்வு தாழ்வு இல்லை என்ற தெளிவு பிறக்கிறது.

ஜகத் என்னும் சொல் போவதும் வருவதுமாக இருக்கும் நிலையா உலகைக் குறிக்கும் சொல். நேற்றிருந்தார் இன்றில்லை என்னும் பெருமை உடையது இந்த உலகம். இப்படி உலகம் நிலையில்லாதது என்ற அறிவை நினைவுறுத்துகிறது ஜகத் என்னும் சொல். ஆனால் அதே நேரத்தில் அன்னையைப் பற்றிச் சொல்வது இந்த நிலையில்லா உலகில் நிலைத்த சொந்தமாய் இருப்பவள் அன்னையே என்ற தெளிவைத் தருகிறது.

ஸமஸ்த ஜகதாம் என்று எல்லா உலகங்களையும் சொன்னதால் ஈரேழு பதினான்கு உலகங்களும் (மேல் உலகங்களான தெய்வீக உலகங்களும், கீழ் உலகங்களான பாதாள உலகங்களும்) சொல்லப்பட்டன. அதனால் அது சிறந்தது; இது சிறப்பில்லாதது என்ற எந்த வேறுபாடுகளும் இன்றி திருமகள் எல்லா உலகங்களுக்கும் தாய் என்பது சொல்லப்பட்டது.

சொல்லின் செல்வனாம் அனுமன் அன்னை சீதையை அசோக வனத்தில் கண்டபின் சேதியை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இராமபிரானிடம் வந்து சேதியைச் சொல்லும் போது எடுத்தவுடன் 'கண்டேன்' என்று தொடங்கியதைப் போல் இங்கே தாய் என்ற பொருள் தரும் 'மாத:' என்ற சொல்லில் தொடங்கி சொல்வதால் திருமகள் அடியேனின் நிலைத்த அன்னை என்ற பொருளைச் சுட்டிக் காட்டுகின்றது இந்தச் சொற்றொடர்.

***



அன்னை சீதையைத் தேடி எட்டு திசைகளிலும் சென்ற வானரர்கள் எல்லாம் திரும்பிவிட்டார்கள். தென் திசைக்குச் சென்ற வானரர்களில் சிலர் மட்டுமே இன்னும் வரவில்லை. திரும்பிய வானரர்கள் யாருமே அன்னையைக் காணவில்லை. பறவைகள் அரசரும் சக்ரவர்த்தி தசரதரின் நண்பருமான ஜடாயு சொன்ன குறிப்புகளின் படியும் சுக்ரீவனும் அவன் நண்பர்களும் கண்ட குறிப்புகளின் படியும் அன்னையை எடுத்துச் சென்றவன் அவளைத் தென் திசை நோக்கியே எடுத்துச் சென்றான் என்பதால் தென் திசைக்குச் சென்று இன்னும் திரும்பாத வானரர்கள் நல்ல செய்தியைக் கொண்டு வருவார்கள் என்று இராமபிரான் ஆவலுடன் வானத்தையும் தென் திசையையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறான்.

திடீரென்று எங்கே பார்த்தாலும் ஒரே பரபரப்பு. தென் திசைக்குச் சென்ற வானரர்கள் திரும்பிவிட்டனர். அவர்களுக்குத் தலைமை ஏற்றுச் சென்ற ஜாம்பவானும் அனுமனும் வருகிறார்கள். அவர்கள் முகத்தில் மகிழ்ச்சிக் குறி தெரிகிறது. ஏற்கனவே பொங்கிப் பிரவாகம் கொண்டு புயல் சின்னங்களை மனத்தில் கொண்டு இருந்த இராகவனும் அந்த மகிழ்ச்சிக் குறியைக் கண்டு மகிழ்ந்து உவகையும் ஆவலும் பிடித்துத் தள்ள திரும்பி வரும் வானரரை எதிர் கொண்டு அழைக்க முந்துகிறான். அந்த நேரத்தில் நாமாக இருந்தால் நாம் எவ்வளவு கஷ்டப்பட்டு கடலைக் கடந்து இலங்கினியைக் கொன்று குறுவுருவம் தரித்து இலங்கையில் புகுந்து என்ன என்னவெல்லாம் செய்து பின்னர் அன்னையைக் கண்டோம் என்று நம்மைப் பற்றியே நாம் பட்ட கஷ்டங்களைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்போம். ஆனால் அனுமன் சொல்லின் செல்வன் அல்லவா? அவனுக்குத் தெரியாதா எதனை எப்போது சொல்லவேண்டும் என்று. அதனால் ஐயனை அந்த நிலையில் கண்டதும் அவன் வாயிலிருந்து வந்த முதல் சொற்றொடர் 'கண்டேன் கற்பினுக்கணியை' என்பதே.

ஜானகியைக் கண்டீர்களா என்று எல்லா வானரர்களையும் கேட்டுக் கேட்டு இல்லை என்ற சொல்லையே கேட்டறிந்த ஐயன் 'கண்டேன்' என்ற சொல்லைக் கேட்ட போது எவ்வளவு மகிழ்ந்திருப்பான்? இது வரை மலை போல் வளர்ந்து வந்த துயரங்கள் எல்லாம் ஒரே நொடியில் தகர்ந்து போயிருக்குமே! அப்படி நடக்க வேண்டும் என்பது தான் அனுமனின் ஆவலும். ஒரே சொல்லில் ஐயனின் துயரெல்லாம் தீர்த்துவிட்டான். சீதையைக் கண்டேன் என்று சொன்னாலும் சரியாக இருந்திருக்காது. சீதையை என்ற சொல்லைக் கேட்டவுடன் 'ஐயோ சீதைக்கு என்ன ஆயிற்று?' என்று ஐயன் கலங்க வாய்ப்புண்டு. அதனால் முதலில் கண்டேன் என்று சொன்னான் அனுமன். (அதே போல் மாத: என்று முதலில் சொல்லியிருக்கிறார்கள். அப்புறம் தான் ஸமஸ்த ஜகதாம் என்று சொன்னார்கள்).

அடுத்த கேள்வியாக 'சீதை நலமா?' என்பதற்கும் சுருக்கமாக 'கற்பினுக்கணியை' என்ற சொல்லால் சொல்கிறான் செஞ்சொற்பொற்கொல்லன் அனுமன். அன்னை நலமே என்பதும் அவள் கற்பினுக்கு எந்த இடையூறும் இல்லை என்பதையும் இந்தச் சொல் மிகத் தெளிவாக சொல்லிவிடுகிறது.

அதன் பின்னரே நடந்த எல்லாவற்றையும் ஆற அமர இருந்து பேசித் தெரிந்து கொள்கிறார்கள் அனைவரும்.

***

அடுத்த இரு பின்னூட்டங்களிலும் சொன்னவற்றை அடுத்தப் பதிவுகளில் சொல்கிறேன்.

20 comments:

ஞானவெட்டியான் said...

அன்பு குமரா,
"தமிழ்மணத்தில்" - "இறைமணம்" கமழச் செய்வது நம் பொருப்பே!

"தமிழ்மணம் பஜனைமடமாகிவிட்டது என இடுகைகள் வந்தாலும் கவலையில்லை!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

குமரன்!
பதிவில் அன்னையின் கருணை அப்படியே பரிமளிக்கிறது!

அனைவருக்கும்
அனைத்து உலகங்களிலும் (தேவ,அசுர, பாதாள, கந்தர்வ...)
அனைத்து நாடுகளிலும்
அனைத்து மொழிகளிலும்
அனைத்து பிரிவு/குலம்/உட்பிரிவு...
(எதுவாயி்னும்)
எல்லாருக்கும் அவளே அன்னை!
அனைவரும் அவள் குழந்தைகள்!
அப்படியானால் நாம் அனைவருமே ஒருவருக்கு ஒருவர் சொந்தங்கள் தான்!

அப்படியிருக்க ஏன் வேற்றுமை!
வேற்றுமையிலும், அன்னையின் முன் ஒற்றுமை தானே!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//மாத: ஸமஸ்த//
எல்லா நேரத்திலும், எல்லாப் பிறவியிலும் அவள் தானே அன்னை!

பிறவிக்குப் பிறவி நம்மைப் பெற்றெடுக்கும் அன்னை கூட மாறலாம்!

ஆனால் எல்லாப் பிறவியிலும் உடன் வருபவர் யார்? வந்து ஞானப்பால் ஊட்டி வழி காட்டுவது யார்? தீயன திருத்தி நல்லன் விருத்தி செய்வது யார்?

"என் அன்னையவள் நீ இருக்க இன்னொருவரிடம் கெஞ்சிடுதல் முறையோ அம்மா? மண்ணளுக்கும் தாயே...." என்ற பாடல் தான் காதில் ஒலிக்கிறது!

ஒவ்வொரு ஜனனத்திலும் நம்மைப் பரிந்தெடுப்பதால் தானோ அவள் ஜனனி என்று அழைக்கப்படுகிறாள்?

Anonymous said...

ஆகா!, ஆகா....அருமை....மேன்மேலும் எழுதுங்கள் குமரரே...

VSK said...

மிக நல்ல பதிவு, குமரன்.

சில கருத்துகள்.

எட்டுத் திக்கிலும் தேடச் சென்றவர்களிடம் ஒரு அடையாளமும் தராமல், அனுமனிடம் மட்டும் கணையாழி கொடுத்தனுப்பியது ஏன்?

எல்லாம் அறிந்த இராமனது தெய்வத்தன்மையைக் காட்டும் செயலா இது?

இரண்டாவதாக, மதுவனத்தை அழித்து தென்திசை சென்ற வானரங்கள் கும்மாளம் அடித்துக் கொண்டிருப்பதாக ததிமுகன் வந்து முறையிடும் போதே, நல்ல செய்தியுடன் தான் வருகிறார்கள் என இராமனுக்குத் தெரிந்து விட்டது என்றுதான் படித்திருக்கிறேன்.
சரிதானே!

நாமக்கல் சிபி said...

அருமையான விளக்கம் குமரன்...

நல்லா புரியுது. அதுவும் சொல்லின் செல்வர் விளக்கம் மிக அருமை!!!

//அம்மா அப்பா இருவரும் கண்கண்ட தெய்வங்கள் என்பது நம் ஆன்றோர் வாக்கு. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறாள் ஒளவைப்பிராட்டி. அம்மா அப்பாவை தெய்வமாக நினைப்பவர்கள் அதே நேரத்தில் தெய்வ தம்பதியரான திரு மாலையும் பார்வதி பரமேஸ்வரரையும் அம்மையப்பராக நினைப்பதும் உண்டு.//
இது உண்மையிலும் உண்மை!!!

அதை போல் தாய் தந்தையரை மதியாதவர்கள் மறுமையில் அடையும் துன்பங்களும் சொல்லி மாளாது!!!

இலவசக்கொத்தனார் said...

நல்ல விளக்கங்கள் குமரன்.

சிவமுருகன் said...

அண்ணா,

அருமையான பதிவு.

அடுத்த பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

100 வேதங்களை கற்ற இராவணனை அசர செய்தவனல்லவா அந்த சூரிய சிஷ்யன் அனுமன்?

எதை சொல்ல வேண்டும், அதை எப்படி சொல்ல வேண்டும் என்ற வித்தையை நாரதரிடமிருந்து கற்றவனும் அந்த அனுமன்.

"வானரத்தை பிடிக்க பிரம்மாஸ்த்திரம்" என்ற சொற்றொடர் துளசிதாசரின் சங்கீத இராமயணத்தில் ஒரு பெரிய சொற்றொடர். அதை சொற்பொழிவில் பயன்படுத்தும் சமயம் அதை கேட்க்கும் அவையோர் சற்றே நகைப்பர்.

இதையும் தம் சௌராஷ்ட்ரா ராமாயணுவில் தா.டா. சுப்ரமண்யம் அவர்கள் அருமையாக சொல்லி இருப்பார். விரைவில் பதிவில் இடுகிறேன்.

Anonymous said...

அன்புக் குமரா!
"பால் நினைந்தூட்டும் தாயிலும் சால".....பெற்ற தாயோ;உலக மாதாவோ.....போற்றப்பட வேண்டியவர்கள்.
மிக அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.
எவர் தாய் இப்போ வாழ்தாலும் போற்றுங்கள்!!!எனக்கு அக் கொடுப்பனவு இல்லை.
கண்டேன்.....!!!!; அருமையான விளக்கம்;
யோகன் பாரிஸ்

குமரன் (Kumaran) said...

தங்கள் கட்டளைப்படியே ஞானவெட்டியான் ஐயா.

குமரன் (Kumaran) said...

உண்மை இரவிசங்கர். அனைத்துமே அனைவருமே நம் அன்னையின் குழந்தைகள் தான். நம் சொந்தங்கள் தான்.

ஜகத் ஜனனி அவள்.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி பெயர் சொல்ல விரும்பாத நண்பரே. உங்கள் பெயரை இட்டே பின்னூட்டம் எழுதியிருக்கலாமே. அடுத்த முறை அப்படி செய்யுங்கள்.

குமரன் (Kumaran) said...

நன்றி எஸ்.கே.

ஏற்கனவே தெரிந்திருந்த குறிப்புகளின் படி தென் திசைக்குச் சென்ற அனுமனிடம் கணையாழி கொடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.

மதுவனத்தில் வானரங்கள் அட்டகாசம் செய்ததைப் பற்றி படித்திருக்கிறேன். ஆனால் ததிமுகன் வந்து ஐயனிடம் முறையிட்டதைப் படித்ததில்லை. அதனால் நீங்கள் சொல்வதை சரியா இல்லையா என்று அடியேனால் சொல்ல முடியவில்லை.

குமரன் (Kumaran) said...

மிக்க நன்றி பாலாஜி. கொஞ்சம் மெனக்கிட்டுப் படிக்க வேண்டியிருந்ததா இல்லை எளிதாக இயற்கையான நடையாக இருந்ததா? இங்கேயோ தனி மடலிலோ சொல்லுங்கள்.

தாய் தந்தையரை மதிக்காதவர்கள் மறுமை வரை காத்திருக்கத் தேவையில்லை. பிற்பகலே எல்லாம் விளைகிறது இப்போதெல்லாம்.

குமரன் (Kumaran) said...

நன்றி கொத்ஸ்.

குமரன் (Kumaran) said...

நன்றி சிவமுருகன்.

100 வேதங்கள் கற்றவனா இலங்கை வேந்தன்? அவை என்ன என்ன என்று சொல்லுங்கள்.

வானரத்தைப் பிடிக்கப் பிரம்மாஸ்திரம் என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டது போலவே இருக்கிறது. அது துளசிதாசரின் இராமசரித மானஸில் வருகிறதா? (சங்கீத இராமாயணம் வேறு யாரோ இயற்றியது என்று நினைக்கிறேன்).

விரைவில் சௌராஷ்ட்ர இராமாயணத்தைப் பற்றிய பதிவினை இடுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.

சிவமுருகன் said...

அண்ணா,
100 வேதங்களை கற்றவன் என்று சிவ புராணம் சொல்கிறது. என்ன என்ன என்று தெரியவில்லை.

//அது துளசிதாசரின் இராமசரித மானஸில் வருகிறதா? (சங்கீத இராமாயணம் வேறு யாரோ இயற்றியது என்று நினைக்கிறேன்). //

ஆம் இராம சரித மானஸ் தான். சங்கீத ராமாயணம் பல மொழிகளில் பலர் இயற்றியுள்ளனர்.

//விரைவில் சௌராஷ்ட்ர இராமாயணத்தைப் பற்றிய பதிவினை இடுங்கள். படிக்கக் காத்திருக்கிறேன்.//

புதிய வலைபூவில் விரைவில் பதிக்கிறேன்.

தி. ரா. ச.(T.R.C.) said...

azhnthu manathil nirkum pathivu.arumaiyana vilakkam.sorry for thanklish problem with laptop,

குமரன் (Kumaran) said...

நல்ல கருத்தைச் சொன்னீர்கள் யோகன் ஐயா. அடியேனுக்கும் அந்தக் கொடுப்பினை இல்லை.

குமரன் (Kumaran) said...

எல்லாம் பெரியவர்களின் ஆசிகள் தி.ரா.ச. அடியேன் சிறிய ஞானத்தன். தானே தன்னைப் பாடிக் கொண்டான் என்றாற்போல் அன்னை தானே தன்னைப் பேசிக் கொண்டாள்.